Go to full page →

மனந்திரும்புதல் என்பதின் பொருள் என்ன?, ஆகஸ்டு 17 Mar 457

“…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” - 2 கொரிந்தியர் 5:17. Mar 457.1

இரத்தத்தினாலும் மாம்ச சித்தத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ள பழைய குணமானது, தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிக்காது. பழைய வழிகள், மரபுவழித்தொடர்பிலே வந்த மனப்பாங்குகள், பழைய பழக்கங்கள் விட்டுவிடப்பட வேண்டும்; ஏனெனில், கிருபையை நாம் மரபுரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. புதிய நோக்கங்கள், புதிய நாட்டங்கள், புதிய மனப்பாங்குகள் ஆகியவைகளுடன் அமைந்திருப்பதே புதிய பிறப்பு ஆகும். பரிசுத்த ஆவியினால், ஒரு புதிய வாழ்விற்குப் பிறந்தவர்கள், தெய்வீகக் குணத்திற்குப் பங்காளிகளாகிவிட்டார்கள். தங்களது அனைத்துப் பழக்கவழக்கங்களிலும் நடைமுறை அனுபவங்களிலும் கிறிஸ்துவோடு தாங்கள் கொண்டிருக்கும் உறவிற்கான சான்றினை வெளிப்படுத்துவார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களைப்பற்றிக்கூறி, உரிமைபாராட்டுபவர்கள் குணத்திலுள்ள இயல்பான குறைபாடுகள், மனப்பாங்குகள் அனைத்தையும்விடாது வைத்திருக்கும்பொழுது; உலகப் பற்றோடு உழல்பவர்களினின்று அவர்களது நிலை எவ்விதத்தில் மாறுபட்டுக் காணப்படுகிறது? சத்தியமானது குணத்தைப் பரிசுத்தமாக்குகிறது-மேன்மைப் படுத்துகிறது என்பதைச் சரியாக உணர்ந்து மதிப்பீடுசெய்கிறதினால், அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக மாறிவிடவில்லை… Mar 457.2

ஒரு மெய்யான மனந்திரும்புதலானது, தவறுசெய்யத் தூண்டுகின்ற மரபு வழிகளில் வந்த-தன்னால் வளர்த்து உருவாக்கப்பட்ட மனப்பாங்குகளை-மாற்றிவிடுகிறது. தேவனுடைய மார்க்கமானது எண்ணிறந்த நூல்களாலான ஒருவகைத் துணி போன்றது. சாமர்த்தியத்தினாலும், திறமையினாலும் நெய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப் பட்டதாகும். தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஞானம் மாத்திரமே, நெய்யப்பட்ட அந்தத் துணியை முழுமைபெறச் செய்ய முடியும். துணிகள் பலவிதமான ரகங்களில் இருக்கின்றன. முதன் முதலில் அந்தத் துணிக்கு நேர்த்தியான ஒரு தோற்றம் இருக்கலாம்; ஆனால், அவைகள் பரீட்சைக்கு நிற்க முடியாது; அவைகள் வெளிறிப்போகின்றன; வண்ணங்கள் திடமாக நிற்பவை அல்ல. கோடையின் வெப்பத்திற்கடியில் மங்கி, வீணாகிவிடுகின்றது. கரடுமுரடாகக் கையாளப்படுவதை அந்தத் துணியால் தாங்கிக் கொள்ள முடிகிறதில்லை. அநேகருடைய சமய அமைப்புகளிலும் இதைப்போன்ற காரியமே காணப்படுகின்றது. Mar 457.3

குணத்தில் நெடுக்கும் குறுக்குமான (ஏறுமாறான) பெருந்துன்பம் என்னும் சோதனையில் நிற்கமுடியாதபொழுது, எந்த மூலப்பொருளை வைத்துச் செய்யப்பட்டதோ, அது தகுதியற்றது என்று தெரியும். பழைய துணியோடு ஒரு புதிய துணித் துண்டை வைத்து ஒட்டுத்தையல் இடுவதற்காக எடுக்கப்படும் முயற்சி, காரியங்களை முன்னிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருகிறதில்லை; ஏனெனில், அந்தப் பழைய உறுதியற்ற சாதனம் புதியதினின்று கிழிந்துபோய் விடுகிறது. கிழிசலை முன்னிருந்ததைவிட மிகவும் பெரியதாக ஆக்கிவிடுகிறது. ஒட்டுத்தையல் பலன் அளிக்காது; முற்றிலுமாக பழைய உடையத் தூர எறிந்துபோட்டு, முற்றிலும் புதிய ஒன்றை வாங்குவதே பின்பற்றவேண்டிய ஒரே வழியாகும். Mar 458.1

கிறிஸ்துவின் திட்டமே பாதுகாப்பான ஒன்றாகும். “இதோ, சகலத்தையும் புதிதாக்குகிறேன்”; “ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் அவன் புதிய சிருஷ்டியாக இருக்கிறான்” …ஒட்டுத்தையல் மார்க்கமானது, தேவனிடம் மதிப்பைப் பெற்றதாக இருக்காது. அவர் முழு இதயத்தையும் கேட்கிறார். Mar 458.2

இயேசு நமக்காக தமது ஜீவனைக் கொடுத்தார். நமது மிகச் சிறந்த பாசங்களையும், நமது மிகுந்த பரிசுத்தமான நாட்டங்களையும், நமது முழுமையான சேவையையும் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டாமா?⋆ Mar 458.3

வாக்குத்தத்த வசனம்: Mar 458.4

“கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.” - சங்கீதம் 28:8. Mar 458.5