Go to full page →

தேவன் இயற்கையை நிலைகுலையச் செய்கிறார்!, செப்டம்பர் 29 Mar 543

“ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ‘ஆயிற்று’ என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.” - வெளிப்படுத்தல் 16:17,18. Mar 543.1

ஏழாம் தூதனுடைய கோபகலசம் ஊற்றப்படுவதை நாம் சற்று ஆராயவேண்டியது அவசியம். தீமையின் வல்லமைகள் பெரிய யுத்தஞ்செய்யாமல், தங்களது போராட்டத்தைக் கைவிடாது. Mar 543.2

சீற்றமிகுந்த வானங்களின் நடுவிலே, விவரிக்கமுடியாத மகிமையோடு, ஒரு தெளிவான இடம் காணப்பட்டது. அங்கே இருந்துதான், “ஆயிற்று” (வெளிப்படுத்தல் 16:17) என்கிற தேவ சத்தம் திரளான தண்ணீர்களின் ஓசையைப்போலத் தொனித்தது. Mar 543.3

அந்த சத்தம் வானங்களையும் பூமியையும் அசைக்கின்றது. “மனுஷர்கள் உண்டான நாள் முதற்கொண்டு” உண்டாயிராத (வசனம் 17,18) பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. ஆகாய விரிவு திறக்கப்படுவதைப்போலவும், மூடிக்கொள்வதைப் போலவும் காணப்பட்டது. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து அவருடைய மகிமை பிரகாசித்தது; காற்றில் நாணல் அசைவதைப்போல மலைகள் அசைந்தன; கரடுமுரடான குன்றுகள் எங்கணும் சிதறி விழுந்தன; பெரிய புயல் காற்று வருவதைப்போன்று முழக்கம் கேட்டது; கடல் அதின் சீற்றத்துடன் கொந்தளித்தது; அழிவின் வேலையில் ஈடுபட்டிருக்கிற பிசாசுகளின் குரலைப்போல, சுழல் காற்றின் ஓசை உரத்துத் தொனித்தது; கடலின் அலைகளைப்போன்று, பூமி முழுவதும் பெருமூச்சுவிட்டு பொங்குவதுபோன்று காணப்பட்டது; பூமியின் மேற்புறம் பிளந்தது; அதின் அஸ்திபாரமே இடிந்துவிழுவதுபோல் காணப்பட்டது; மலைத்தொடர்கள் புதைந்துகொண்டிருந்தன; மக்கள் குடியிருந்த தீவுகள் காணப்படாமற்போயின; சோதோமைப்போல துன்மார்க்கத்தால் நிறைந்திருந்த கடல் துறைமுகங்கள் மூர்க்கமான அலைகளால் விழுங்கப்பட்டு விட்டன. “மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது”-வெளி.16:19. “தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து விழுந்தது”-வெளி.16:21. இவை தங்கள் அழிவின் வேலையைச் செய்துகொண்டிருந்தன. உலகின் பெருமையான பட்டணங்கள் தாழ்த்தப்பட்டன. தங்களை மேன்மைப்படுத்தும்படிக்கும், மகிமைப்படுத்தும்படிக்கும் உலகின் பெரிய பெரிய மனிதர்கள் தங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துவைத்த அரண்மனைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக நொறுங்கி அழிந்துபோயின. சிறையின் சுவர்கள் பிளந்தன. அங்கே தங்கள் விசுவாசத்தினிமித்தம் அடைக்கப்பட்டிருந்த தேவனுடைய பிள்ளைகள் விடுவிக்கப்பட்டனர்.⋆ Mar 543.4

குறிப்பு:
⋆ஒரு தாலந்து என்பது, இன்றைய வழக்கத்தில் இருக்கும் நிறை அளவின் கணக்குப்படி 30 கிலோ எடையாகக் கணக்கிடப்படுகிறது. Mar 544.1

வாக்குத்தத்த வசனம்: Mar 544.2

“அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளினிடத்திற்கு கொண்டுபோய் விடுவார்.” - ஏசாயா 49:10. Mar 544.3