Go to full page →

அத்தியாயம் 25 - வருகையின் இயக்கம் விளக்கப்படுகிறது GCt 69

கட்டுகளால் கட்டப்பட்டிருந்த அநேக கூட்டங்களை நான் கண்டேன். இக்கூட்டத்தில் அநேகர் இருளில் இருந்தார்கள். அவர்கள் கண்கள் உலகத்தை நோக்கியிருந்தது. இயேசுவிற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமே இல்லாதது போல் இருந்தது. இக்கூட்டங்களில் சிதறிக்கிடந்த சில தனிநபர்களை நான் கண்டேன். அவர்களுடைய முகக்குறி பிரகாசமாகவும், அவர்களுடைய கண்கள் பரத்திற்கு நேராகவும் இருந்தது. சூரிய ஒளியைப் போல பிரகாசமான ஒளி, இயேசுவிடமிருந்து அவர்களுக்கு வந்தது. ஒளிக்கதிரைக் கொண்ட ஒவ்வொரு நபரோடும் ஒரு தேவதூதன் நிற்பதையும், இருளில் இருப்பவர்களை தீய தூதர்கள் சூழ்ந்திருப்பதையும் நான் கானும்படி ஒரு தூதன் கட்டளையிட்டான். ஒரு தூதன் எழுந்து, “தேவனுக்கு பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என்று அறிக்கை செய்ததை நான் கேட்டேன். GCt 69.2

இக்கூட்டத்தின் மீது மகிமையின் ஒளி தங்கி, அதனை பெற்றக்கொள்கிற யாவருக்கும் விளக்கத்தை கொடுத்தது. இருளில் இருந்த சிலர் இவ்வெளிச்சத்தைப் பெற்று மகிழ்ந்தார்கள்; மற்றவர்கள் இதனை மறுத்து, இஃது அவர்களை வழி தவறிச்செல்ல துண்டும் சக்தி என்று கருதினார்கள். பரலோக ஒளி அவர்களை கடந்துச் சென்றதும் இருள் சூழ்ந்துக்கொண்டது. இயேசுவிடமிருந்து ஒளியை பெற்றவர்கள், மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் முகங்கள் பரிசுத்த சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. இயேசுவையே நோக்கியிருந்த அவர்கள், தேவதூதர்களோடு இணைந்து, “தேவனுக்கு பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என்று கூறினார்கள். இவ்விதமாக அவர்கள் கூறியபோது, இருளில் இருந்தவர்கள் அவர்களை இடித்ததை நான் பார்த்தேன். பரிசுத்த ஒளியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட அநேகர், அவர்களை கட்டியிருந்த கட்டுகளை களைந்துவிட்டு, அக்கூட்டத்திலிருந்து விலகி, தனித்து நின்றார்கள். இவ்விதமாக கட்டுகளை தறித்துக்கொண்டு ஒரு கூட்டம் வெளியேற, இருளில் இருந்த கூட்டத்தினரின் மரியாதையை பெற்றவர்கள், அக்கூட்டத்தின் நடுவே கடந்துச் சென்று. “தேவன் நம்மோடிருக்கிறார். நாம் ஒளியில் நிற்கிறோம்; நம்மிடத்தில் சத்தியம் உண்டு” என்று கூறிக்கொண்டே தளர்ந்த கட்டுகளை இறுக்கிவைத்தார்கள். இம்மனிதர்கள் யார் என நான் வினவியதற்கு, அவர்கள் ஊழியக்காரர்கள் என்றும், தலைவர்கள் என்றும் பதில் வந்தது. மேலும், இந்த ஊழியக்காரர்கள் பரலோக வெளிச்சத்தை மறுத்தது மாத்திரமல்லாமல், பிறர் அதை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்கள். அதே வேளையில், ஒளியை ஏற்றுக்கொண்டவர்கள், இயேசு வந்து தங்களை அவரிடம் சேர்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையில் மேல்நோக்கி காத்திருந்தார்கள். இவர்கள் மீது ஒரு மேகம் கடந்து போனது. அப்பொழுது ஒளியை ஏற்றுக் கொண்டவர்களின் முகம் வாடியதை நான் பார்த்தேன். இம்மேகம் அவர்கள் கண்ட ஏமாற்றத்தை குறிக்கிறது என்று எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரட்சகரை அவர்கள் எதிர்பார்த்திருந்த சமயம் கடந்து போய்விட்டதால் சோர்ந்துப்போனார்கள். சற்று நேரத்திற்கு முன் நான் கண்ட ஊழியக்காரர்களும் தலைவர்களும் இந்த சோர்வைக் கண்டு நகைத்தார்கள். ஒளியை மறுதலித்திருந்தவர்கள் மகிழ்ந்த வேளையில், சாத்தானும் அவனுடைய தூதர்களும் அவர்களுடன் சேர்ந்து நகைத்தார்கள். GCt 69.3

வேறொரு தூதனின் சத்தம் எழுந்து, “பாபிலோன் மகாநகரம் விழுந்தது! விழுந்தது” என்று அறிவித்தான். மறுபடியுமாக ஒரு வெளிச்சம் சோர்ந்துப்போனவர்களின் மீது விழுந்தது. இயேசுவின் வருகையின் மீது மீண்டும் நம்பிக்கை துளிர்த்து, அவர்கள் கண்கள் இயேசுவின் மீது பதிந்தது. பின்பு அநேக தேவதூதர்கள் இரண்டாம் தூதனை சூழ்ந்துகொண்டு, “இதோ, மாணவாளன் வருகிறார். அவரை சந்திக்க புறப்பட்டுப் போங்கள்” என்று உற்சாகமாக பாடினார்கள். இத்தூதர்களின் இனிமையான சத்தம் அனைத்து இடங்களுக்கும் சென்றடைந்தது. ஒளியை ஏற்றுக் கொண்டவர்களின் மீது ஒரு பிரகாசமான ஒளி மீண்டும் ஒளிர்ந்தது. பிரகாசமான முகங்களோடு அவர்களும் தேவதூதர்களோடு இணைந்து, “இதோ, மணவாளன் வருகிறார்” என்று பாடினார்கள். ஒருங்கிணைந்து இவர்கள் பாடிய பாடல், ஒளியை ஏற்றக்கொள்ளாதவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது - இவர்களை அவர்கள், கோபத்தோடு நிந்தித்தார்கள். ஆகிலும், தேவதூதர்கள் தங்கள் சிறகுகளாலே துன்புறுத்தப்பட்டவர்களை மறைத்துக்கொண்டார்கள். சாத்தானும் அவனுடைய தூதர்களும் எப்படியாவது இக்கூட்டத்தை பிடித்து, பரலோகத்திலிருந்து வந்த ஒளியை மறுதலிக்கவைக்கவேண்டும் என்று எண்ணினார்கள். GCt 70.1

நிந்திக்கப் பட்டவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறவும், அசுத்தமானவர்களை தொடாமல் இருக்கவும் வேண்டும்மென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; திரளானவர்கள், தங்களை கட்டியிருந்த கட்டுகளை தறித்து, இருளில் இருந்தவர்களை விட்டு வெளியேறி, ஏற்கனவே விடுதலையாகியிருந்தவர்களோடு சேர்ந்துக்கொண்டு பாடினார்கள். இருளில் இருந்தவர்களில் சிலர் ஏறெடுத்த ஊக்கமான ஜெபங்கள் எனது செவிகளில் விழுந்தன. ஊழியர்களும், தலைவர்களும் எவ்வளவுதான் கட்டுகளை இறுக்கினாலும், இத்தகைய ஜெபங்கள் கேட்டுக்கொண்டேதான் இருந்தன. பின்பு, இவ்விதமாக ஜெபிப்பவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, விடுதலை பெற்று, தேவனில் களிகூர்ந்திருந்த கூட்டத்தினரை பார்த்து உதவி கேட்பதை நான் கண்டேன். அதற்கு அவர்கள் அளித்த பதில் என்னவென்றால், இருளான கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வரவேண்டும் என்பதே. சில நபர்கள் கடுமையாகப் GCt 70.2

போராடி, கட்டுகளை தகர்த்து வெளியேறினார்கள். தங்கள் கட்டுகளை இறுகப்பண்ணவேண்டும் என்ற முயற்சிகளை எதிர்த்து, போராடி வெற்றி கண்டார்கள். பூமிக்கு மேலாக உயர்த்தப்பட்ட ஒரு தளத்தில் நின்றுகொண்டிருந்த ஒளியின் பிள்ளைகளோடு புதியவர்களும் இணைந்துக்கொண்டார்கள். அவர்கள், மேல் நோக்கியிருந்து துதி பாடல்களைப் பாடினார்கள். தேவ மகிமை அவர்கள் மீது தங்கியது. ஒற்றுமையாக இருந்த அவர்களை பரலோகத்தின் ஒளி மறைத்துக்கொண்டது. இவ்வொளியைப் பெற்றிருந்த யாவரும் ஆர்வத்தோடு மேல்நோக்கி பார்த்தார்கள். இயேசுவும் அவர்களை இனிமையான ஆதரவுடன் பார்த்தார். இயேசுவின் வருகையை எதிர்பார்த்தார்கள். மேல் நோக்கியிருந்த அவர்கள், ஒரு முறை கூட உலகத்தை பார்க்கவில்லை. மீண்டும் ஒரு மேகம் அவர்களை கடந்துச் சென்றதை நான் கண்டேன். நான் விளக்கம் கேட்டபோது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளில் மீண்டும் ஏமாற்றமே கிட்டும். என்று, என்னுடன் இருந்த தூதன் விளக்கமளித்தான். தேவனுடைய பிள்ளைகள், இன்னமும் அதிகமான சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. மனிதர்களால் உண்டாக்கப்பட்டிருக்கும் சம்பிரதாயங்களை விட்டுவிட்டு, முழுமையாக தேவனிடத்திலும், அவருடைய வார்த்தையினிடத்திலும் அவர்கள் திரும்ப வேண்டும். அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு, சோதிக்கப்பட வேண்டும்; இத்தகைய சோதனைகளை சகிக்கிறவன் நித்திய வெற்றியை பெறுவான். GCt 71.1

காத்திருக்கும் கூட்டத்தின் விருப்பம்போல இயேசு உலகத்திற்கு வரவில்லை. அவர்களுடைய தீர்க்கதரிசன விளக்கங்கள் சரியாக இருந்தது என்று நான் கண்டேன். தீர்க்கதரிசன காலம் 1844ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆசாரிப்புக் கூடாரத்தைப் பற்றிய விளக்கமும், அதன் சுத்திகரிப்பை பற்றிய விளக்கமும் தான் சரியாக புரிந்துக் கொள்ளப்படாத பகுதியாக இருந்தது. இயேசு மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் சுத்திகரிப்பதற்காக நுழைந்தார். காத்துக் கொண்டிருந்தவர்களை நான் மீண்டும் கவனித்தேன். மிகுந்த வருத்தத்துடன் இருந்த அவர்கள், தங்களுடைய விசுவாசத்தின் அடிப்படையிலே, அவர்கள் கற்றிருந்த தீர்க்கதரிசன விளக்கங்களை மீண்டும் கவனித்தார்கள். யாதொரு பிழையையும் காணாத அவர்கள், சமயம் நிறைவேறிற்றே, இரட்சகர் எங்கே? என வருந்தினார்கள். GCt 71.2

சீடர்கள் கல்லறைக்கு வந்து இயேசுவை காணாமல் தவித்த காட்சி எனக்கு காட்டப்பட்டது. மரியாள், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை.” என்றாள். கர்த்தர் உயிர்த்தெழுந்ததை தேவ தூதன் சீடர்களிடம் கூறினான். GCt 71.3

ஏமாற்றத்துடன் இருந்தவர்களை தேவன் நோக்கினார். தூதர்களை அனுப்பி, இந்த உலகம் ஆசாரிப்புக் கூடாரம் இல்லையென்றும் அவர் பரலோகக் கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைவது அவசியமென்றும் புரியவைக்க வேண்டுமென விரும்பினார். பரலோகக் கூடாரத்தை சுத்திகரித்தப்பின், இஸ்ரவேலுக்காக பரிந்து பேசி, தனது பிதாவின் ராஜ்ஜியத்தை பெற்றுக்கொண்டு, பூமிக்கு மறுபடியும் வந்து, அதன் பின்தான் இருக்கும் இடத்தில் இவர்களும் இருக்கும்படியாக அவர்களை அழைத்துப் போவார் என்கிற விளக்கத்தை தமது பிள்ளைகளுக்குத் தர இயேசு விரும்பினார். 1844ஆம் ஆண்டு பெரும் ஏமாற்றத்தை அடைந்த விசுவாசிகளுக்கு ஒத்தாற்போல் சீடர்களும் ஏமாந்துப் போனார்கள். அதன் பின், கிறஸ்து ஜெயமாக எருசலேமிற்குள் நுழைந்ததை நான் கண்டேன். மகிழ்ந்த சீடர்கள், இயேசு அன்றே மன்னராக முடிசூடுவார் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களுடைய அரசனை பெரிய நம்பிக்கையோடு தொடர்ந்தார்கள். எனவே, குருத்தோலைகளை விரித்து, மேல் வஸ்திரங்களை பரப்பி, அவருக்கு முன்பாகவும் பின்பாகவும், “ஓசண்ணா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர். பரலோகத்திலே சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தத்தோடே புகழ்ந்தார்கள். இந்த உற்சாகம் பரிசேயரை மிகவும் பாதித்தது. இயேசு, தமது சீடர்களை கண்டிக்கவேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இயேசுவோ, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்றார். சகரியா 9 : 9ல் குறிக்கப்பட்டிருக்கும் தீர்க்கத்தரிசனம் நிறைவேற வேண்டும். ஆகிலும், சீடர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்ததை நான் கண்டேன். சில நாட்களில் அவர்கள், கல்வாரியில் இயேசுவை கண்டு, அக்கொடூரச் சிலுவையில் அவர் இரத்தஞ்சிந்தியதை கண்டார்கள். அவருடைய பாடுகளையும் மரணத்தையும் கண்ட அவர்கள், அவரை கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் துக்கத்தால் நிறைந்திருந்தது. இயேசுவுடன் தங்களது நம்பிக்கையும் மடிந்துப்போனது. ஆனால், அவர் உயிர்த்தெழுந்து அவர்களுக்கு காட்சியளித்தபோது, மீண்டும் நம்பிக்கை துளிர்ந்தது. இரட்சகரை மீண்டும் கண்டுப்பிடித்தார்கள். GCt 71.4

சீடர்களின் ஏமாற்றமும், 1844ஆம் ஆண்டு காணப்பட்ட ஏமாற்றமும் ஒன்றல்ல என்று நான் கண்டேன். முதலாம், இரண்டாம் தூதர்களின் தூதுகளினால் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது. சரியான சமயத்தில் அருளப்பட்டு, தேவன் நியமித்திருந்த கிரியையை சரியாக செய்து முடித்தது. GCt 72.1

பார்க்க : தானியேல் 8 : 14, மத்தேயு 21 : 4 - 16
மாற்கு 16 : 6 - 7, லூக்கா 19 : 35 - 40
யோவான் 14 : 1-3; 20:13 II கொரிந்தியர் 6 : 17
வெளிப்படுத்தல் 10 : 8-11; 14 : 7-8