Go to full page →

அத்தியாயம் 29 - ஒரு திடமான பீடம் GCt 83

ஸ்தாபிக்கப்பட்ட விசுவாசத்தை எவ்விதத்திலும் தகர்ப்பதற்கு இடங்கொடாமல், தங்கள் நிலையில் உறுதியாக இருந்த ஒரு கூட்டத்தை நான் கண்டேன். தேவனும் அவர்களை ஆதரவுடன் பார்த்தார். ஒன்று, இரண்டு, மூன்று - என மூன்று படிகள் எனக்கு காட்டப்பட்டன. அவைகள் மூன்று தூதர்களின் அறிவிப்புகளாகும். இத்தூதுகளில் யாதேனும் ஒரு கல்லை ஒருவன் புரட்டினாலும் அவனுக்கு ஐயோ! இச்செய்திகளில் சத்தியங்களை நன்கு புரிந்துக்கொள்வது மிக முக்கியம். ஆத்துமாக்களின் முடிவு, இச்சத்தியத்தை எவ்விதமாக எடுத்துக் கொள்கிறோமோ, அதனை பொருத்து தான் உள்ளது. இச்செய்திகளின் வாயிலாக நான் கிழே கொண்டு வரப்பட்டபொழுது, தேவ பிள்ளைகள் அநேக பாடுகளனுபவித்து இத்தகைய அனுபவங்களை பெற்றிருந்தார்கள் என்பதை கண்டேன். படிப்படியாக தேவன் அவர்களை உயர்த்தி, இப்பொழுது உறுதியான அசைக்கமுடியாத ஒரு தளத்தில் அவர்களை நிறுத்தியிருந்தார். அநேக மனிதர்கள் இந்த உறுதியான தளத்தை நெருங்கி, அதன் அஸ்திபாரத்தை சோதித்தார்கள். சிலர் மகிழ்வுடன் அதன் மீது ஏறிக்கொண்டார்கள். பிறரோ, அஸ்திபாரத்தில் குற்றங்களை கண்டறிய முனைந்தார்கள். அஸ்திபாரத்தில் உள்ள குறைகளை நிவிர்த்தி செய்தால் நலமாக இருக்கும் என்றும், ஜனங்கள் அதிகமாக மகிழ்வார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். தளத்தில் நின்றவர்களில் சிலரும் கீழே இறங்கிவிட்டார்கள். ஆகிலும், இந்த அஸ்திபாரம் தேவனால் போடப்பட்டது என்பதை விசுவாசித்த அநேகர், தளத்தின் மீது உறுதியாக நின்றுவிட்டார்கள். இப்படி உறுதியாக இருந்த அனைவரும் தேவனின் கிரியைகளின் மகத்துவத்தை எண்ணி, பரலோகத்திற்கு நேராக தங்கள் கண்களை ஏறெடுத்து, உரத்த சத்தத்தோடு தேவனை துதித்தார்கள். இக்காட்சி, தளத்திலிருந்து இறங்கிய சிலரை மீண்டும் மேலே ஏறி வரச்செய்தது. GCt 83.1

கிறிஸ்துவின் முதல் வருகையின் அறிவிப்பின் காட்சிக்கு நான் தள்ளப்பட்டேன். எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் இயேசுவின் வருகைக்கான வழியை ஆயத்தம் செய்ய யோவான் அனுப்பப்பட்டான். யோவானின் சாட்சியை மறுத்தவர்கள் எவரும் இயேசுவின் போதனைகளால் பயன்பெறவில்லை. அவருடைய வருகையைக்குறித்த அறிவிப்பை ஏற்காதவர்களுக்கு, அவர்தான் மேசியா என்பதையும் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது. யோவானின் பிரசங்கங்களை ஏற்காமல் இருப்பவர்களை கொண்டு, சாத்தான், இயேசுவையும் ஏற்காமல் அவரை சிலுவையிலறைந்து கொலை செய்ய வழிநடத்தினான். இப்படி செய்தபடியால், பெந்தெகோஸ்தே நாளில் ஆசிர்வாதத்தை பெற இயலாமல் போனதோடு, பரலோகக் கூடாரத்திற்கு செல்லும் வழியையும் அறிந்துக்கொள்ள கூடாமல் போனது. தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாக கிழிந்தது யூதர்களின் பலி முறைகள் இனிமேல் ஏற்கப்படமாட்டாது என்பதை உறுதிபடுத்தியது. மகத்தான பலி கொடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டும் ஆயிற்று. பெந்தெகோஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியானவர் இறங்கி, சீடர்களின் இருதயங்களை பூலோக ஆசரிப்புக் கூடாரங்களிலிருந்து எழுப்பி, பரலோகக் கூடாரத்திற்கு நேராக திருப்பிவிட்டார். இதனிமித்தமாக, யூதர்கள் ஏமாற்றம் அடைந்து, முழுமையான இருளில் தள்ளப்பட்டார்கள். இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்து அவர்கள் பெற்றிருந்த ஒளியை தொலைத்தபோதும், தங்களுடைய பயனற்ற பலிமுறைகளையும், காணிக்கைகளையும் விடாதிருந்தார்கள். பரிசுத்த ஸ்தலத்தில் இயேசு செய்த ஊழியத்தினால் அவர்களுக்கு எவ்வித பயனுமில்லாமல் போயிற்று. பூலோகக் கூடாரத்தை பரலோகக் கூடாரம் மேற்கொண்டபோதிலும், பரலோகக் கூடாரத்துக்கு செல்லும் வழியை அறியாதிருந்தார்கள். GCt 83.2

யூதர்கள் இயேசுவை மறுதலித்து, அவரை சிலுவையிலறைய எடுத்துக்கொண்ட கொடூர வழிமுறைகளை அநேகர் கலக்கத்தோடு பார்க்கிறார்கள். இயேசுவின் அவமானங்களை சரித்திரத்தில் படிக்கும் போது, அவரை நேசிப்பதாக நினைத்து, நாங்கள் பேதுருவைப் போல இயேசுவை மறுதலிக்கவே மாட்டோம் என்றும், யூதர்களைப் போல் அவரை சிலுவையில் அறையவும் மாட்டோம் என்றும் கூறிக்கொள்கிறார்கள். இந்த விளம்பரத்தை கவனிக்கும் தேவன், அவர்களுடைய அன்பை சோதித்தறிந்தார். GCt 84.1

பரலோகமே வாஞ்சையோடு கவனித்துக்கொண்டிருந்தது. இத்தூது ஏற்றுக்கொள்ளப்படுமா? ஆனால், இயேசுவை நேசிப்பதாக கூறி வரும் அநேகர், பரலோகச் செய்தியை மகிழ்வுடன் ஏற்பதற்கு பதிலாக, கோபப்பட்டு, இயேசுவின் வருகைச் செய்தியை ஏளனம் செய்து, அதனை மாயை என்று அறிவிக்கிறார்கள். இயேசுவின் வருகையை விரும்பிய நபர்களோடு ஐக்கியப்படுவதற்கு பதிலாக, அவர்களை வெறுத்து, சபைகளிலிருந்து ஒதுக்கினார்கள். முதலாம் தூதனின் அறிவிப்பை ஏற்காதவர்களால் இரண்டாம் தூதனின் செய்தியால் பயனடைய இயலவில்லை. நள்ளிரவு கூக்குரலினாலும் அவர்களுக்கு எவ்வித பயனுமில்லை. முதல் இரண்டு தூதுகளையும் மறுத்ததினால், மூன்றாம் தூதனின் தூதிலும் அவர்களுக்கு ஒளி கிட்டவில்லை. எனவே, மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு செல்லும் வழியை அவர்கள் அறியவில்லை. அநேக பெயரளவு சபைகள், யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தது போலவே இச்சத்தியங்களையும் அறைந்துவிட்டபடியால், பரலோகத்தில் நடைபெறும் சம்பவங்களையோ, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்லும் வழியையோ அறியாதிருக்கிறார்கள். பயனற்ற பலிகளை செலுத்தும் யூதர்களைப் போலவே, பயனற்ற வேண்டுதல்களை இவர்கள் செய்துவருகிறார்கள். இப்படிப்பட்டவர்களை சாத்தான் தன்வசப்படுத்தி, அவர்களைக் கொண்டு தனது பெலத்தையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்து வருகிறான். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வஞ்சித்து வருகிறான். ஒரு சில சூழ்ச்சிகளை கண்டு பயப்படும் இவர்கள், வேறுஏதாவது ஒன்றுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளலாம் என்கிற நம்பிக்கையினால் சிலரை வஞ்சித்தான். ஒளியின் தூதனாக வந்து, தனது செல்வாக்கை பூமியில் சாத்தான் படரவிட்டான். பொய்யான சீர்த்திருத்தங்கள் எழும்புவதை நான் கண்டேன். சபைகளில் தேவன் வல்லமையாக கிரியை செய்கிறார் என்று சொல்லி, வேறு ஆவியினால் சபைகளை நடத்துவதை நான் கண்டேன். இந்த வளர்ச்சி அழிந்துப் போகும். ஆனால், சபையையும் இக்கட்டான நிலைக்கு அது தள்ளி விடும். GCt 84.2

பெயரளவிலுள்ள அட்வெண்டிஸ்ட் சபையிலும் தேவனுக்கு உண்மையான பிள்ளைகள் இருந்ததை நான் கண்டேன். வாதைகள் ஊற்றப்படுவதற்கு முன்பாக, விழுந்துப்போன சபைகளிலிருந்து வெளியேறும்படி ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் எச்சரிப்பு கொடுக்கப்படும். அவர்களில் அநேகர் மகிழ்ச்சியுடன் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதனை சாத்தான் அறிவான். எனவே, இத்தகைய மாறுதல் ஏற்படுமுன், இச்சபைகளிலேயே தேவன் இருக்கிறார் என்று நம்பத்தக்க எழுப்புதல்களை அவன் உண்டுப்பண்ணுவான். இப்படிச் செய்வதன் மூலம், நேர்மையானவர்கள் ஏமாந்துப் போவார்கள். ஆகிலும் சத்திய ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறபடியால், நேர்மையானவர்கள் யாவரும் வீழ்ந்த சபைகளை விட்டு வெளியேறி மீதமான சபையாரோடு நிற்பார்கள். GCt 85.1

பார்க்க : மத்தேயு 3 : 1-17
அப்போஸ்தலர் 2 : 1-47
II கொரிந்தியர் 11 : 14
II தெசலோனிக்கேயர் 2 : 9-12
வெளிப்படுத்தல் 14 : 6-12