சிறிதளவுகூட தனக்கென்று ஒதுக்கிவைத்துக்கொள்ளாத முழுமையான ஒப்படைத்தலைத் தவிர வேறொன்றையும் தேவன் ஏற்றுக் கொள்ளமாட்டார். அரைமனதும் பாவமும் நிறைந்த கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது. இராஜரீகக் குடும்பத்தினுடைய அங்கத்தினர்களை ஆளுகின்ற, உன்னதமான பரிசுத்த கொள்கைகளைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதால், அங்கே அவர்கள் எந்த சந்தோஷத்தையும் கண்டுகொள்ள முடியாது. உண்மையான கிறிஸ்தவன் தனது ஆத்துமாவின் பலகணிகளைப் பரலோகத்தை நோக்கித் திறந்து வைத்திருப்பான். அவன், கிறிஸ்துவினுடனான ஐக்கியத்தில் ஜீவிக்கின்றான். அவனுடைய சித்தம் கிறிஸ்துவின் சித்தத்தோடு ஏற்புடையதாய் இருக்கின்றது. அவனது உயரிய வாஞ்சையெல்லாம் இன்னும் அதிகமதிகமாய் கிறிஸ்துவைப்போல மாறவேண்டுமென்பதே ஆகும். — RH May 16, 1907. கச 139.3
நாம் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்த முடியாது. மாறாக, ஆவியானவர் நம்மை பயன்படுத்தவேண்டும். தேவன், “தம்முடைய விருப்பத்தையும் செய்கையையும்” (பிலி. 2:13), தம்முடைய மக்களில் உண்டாக்கும்படியாக, பரிசுத்த ஆவியின் மூலமாகக் கிரியை செய்கிறார். ஆனால் அநேகர் இதற்கு ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். அவர்கள் தாங்களாகவே சமாளித்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால்தான் அவர்கள் பரலோக ஈவைப் பெற்றுக்கொள்வதில்லை. தேவனுக்காகத் தாழ்மையோடு காத்திருந்து, அவரது வழிநடத்துதலுக்காகவும் கிருபைக்காகவும் விழித்திருப்பவர்களுக்கு மாத்திரமே பரிசுத்த ஆவி கொடுக்கப்படும். — DA 672 (1898). கச 139.4