Go to full page →

11 - புதியவைகளும் பழையவைகளும் COLTam 122

கிறிஸ்து மக்களுக்குப் போதித்த அதே வேளையில், எதிர்காலப் பணிக்காக தமது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார். அவர் சொன்ன போதனைகளில் அவர்களுக்கும் பாடங்கள் இருந்தன . வலையைக் குறித்த உவமையைக் கூறிவிட்டு, “இவைகளையெல்லாம் அறிந்து கொண்டீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார். மக்களும், ‘ஆம், ஆண்டவரே” என்றார்கள்; பிறகு, சத்தியங்களைப் பெற்றுக்கொண்ட அவர்களுடைய கடமை குறித்து வேறொரு உவமையை அவர்களிடம் கூறினார். “இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத் துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேத பாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜ மானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்.” மத்தேயு 13:52. COLTam 122.1

அந்த வீட்டெஜமான் பொக்கிஷத்தைச் சேர்த்து, குவிக்க வில்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி அவற்றை வெளியே எடுத்தான். பொக்கிஷத்தைப் பயன்படுத்துவதால் அது பெருகுகிறது. பழையவைகளும் புதியவைகளுமான விலையேறப் பெற்றவைகளை அந்த வீட்டு எஜமான் பெற்றிருந்தான். அது போல, தமது சீடர்களிடம் ஒப்புவிக்கப்பட்ட சத்தியத்தை அவர்கள் உலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென கிறிஸ்து போதிக்கிறார். சத்தியத்தின் அறிவைப் பகிரும்போது, அது பெருகும். COLTam 122.2

சுவிசேஷச் செய்தியை இதயத்திற்குள் ஏற்றுக்கொள்கிற அனைவரும் அதனை அறிவிக்க ஏங்குவார்கள். பரலோ கத்திலிருந்து பிறந்தகிறிஸ்துவின் அன்பு வெளிப்பட்டாக வேண்டும். கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள், பரிசுத்த ஆவியான வருடைய படிப்படியான வழி நடத்துதல்களை ஒன்றுவிடாமல் சொல்லி, தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அதாவது, தேவனைப்பற்றியும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், வேதவாக்கியங்களை ஆராய்ந்ததால் உண்டான விளைவுகள் பற்றியும், தாங்கள் ஜெபித்தது - ஆத்தும் வியாகுலமடைந்தது - உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கிறிஸ்து சொன்னது பற்றியும் சொல்வார்கள். இவற்றை இரகசியமாக வைத்திருப்பது இயற்கைக்கு முரணானது; கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்டவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். கிறிஸ்துவின் சத்தியத்தை எந்த அளவுக்கு அவர்கள் அறிந்து கொள்ள ஆண்டவர் அருளியுள்ளாரோ, அந்த ஆசீர்வாதத்தை அந்த அளவுக்கு பிறரும் பெறவேண்டுமென்கிற வாஞ்சை இருக்கும். தேவகிருபையின் ஐசுவரியங்களை பிறருக்கு அறிவிக்கும் போது, கிறிஸ்துவின் கிருபை அதிகமதிகமாக அவர்களுக்கு அருளப்படும். சிறு பிள்ளையைப்போல தூய்மையான, முற்றிலும் கீழ்ப்படிகிற இதயத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் பரிசுத்தத்திற்காக ஏங்கும்; உலகிற்கு அறிவிக்கும்படிக்கு பொக்கிஷங்களான கிருபையும் சாத்திய மும் அதிகமதிகமாக அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும். COLTam 123.1

சத்தியத்தின் மிகப்பெரிய பண்டசாலை தேவவார்த்தையாகும். அது, எழுதப்பட்ட வார்த்தை, இயற்கையின் புத்தகம், மனித வாழ்வில் தேவன் இடைப்படுகிற அனுபவம் பற்றிய புத்தகம். கிறிஸ்துவின் ஊழியர்கள் எடுக்க வேண்டிய பொக்கிஷங்கள் அதில் உள்ளன. சாத்தியத்தைத் ஆராய்வதில் அவர்கள் தேவனைச் சார்ந்திருக்கவேண்டும்; புத்திசாலிகளான மனிதர்களை அல்ல. ஏனெனில், பிரசித்திப்பெற்றவர்களான அவர்களுடை ஞானம் தேவனுடைய பார்வையில் பைத்தியமாக இருக்கிறது. தேவன் தாம் நியமித்த ஊடகங்கள் மூலம் தேடுகிற ஒவ்வொருவருக்கும் தம்மைப்பற்றி அறிவைக் கொடுப்பார். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர் அவருடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி நடந்தால், இயற்கை உலகில் அவரால் புரிந்து, போற்ற முடியாத அறிவியலே இருக்காது. மற்றவர்களுக்கு சத்தியத்தைப் பகிர்ந்தளிப்பதற்கே அல்லாமல் வேறு எதற்காகவும் அவர் அறிவாளியாக்கப்படுவதில்லை. இயற்கை அறிவியலானது அறிவின் பண்டகசாலை ; கிறிஸ்துவின் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் அதிலிருந்து பாடங்களைக் கற்கலாம். COLTam 123.2

இயற்கையின் அழகைத் தியானிக்கும் போது, நிலத்தைப் பண்படுத்துவதிலும், மரங்களின் வளர்ச்சியிலும், வான் - கடல் - ஆகாயத்தின் அதிசயங்களிலும் உள்ள பாடங்களைப் படிக்கும் போது, சத்தியம் குறித்த புதிய புரிதல் உண்டாகும். மனிதர்களை தேவன் அணுகுவதில் சம்பந்தப்பட்ட மறை பொருள்களும், மனித வாழ்வில் காணப்படுகிற அவருடைய ஞானம் மற்றும் நியாயத்தீர்ப்பின் ஆழங்களும் பொக்கிஷங்கள் நிறைந்த பண்டசா லையாக காணப்படுகிறது. COLTam 124.1

ஆனால் எழுதப்பட்ட வார்த்தையில் தான் தேவனைக் குறித்த அறிவானது விழுந்து போன மனிதனுக்கு தெளிவாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களின் பண்டகசாலையாக உள்ளது . COLTam 124.2

தேவவார்த்தை என்றால், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் வேதவாக்கியங்கள் உள்ளடங்கியது. ஒன்றில்லாமல் மற்றொன்று முழுமையாகாது. புதிய ஏற்பாட்டின் சாத்தியங்கள் போன்றே பழைய ஏற்பாட்டின் சத்தியங்களும் முக்கியமானவை என்று கிறிஸ்து கூறினார். கிறிஸ்து இன்று இருப்பதுபோல, உலகத்தின் ஆரம்பத்திலும் மனிதனின் மீட்பராக இருந்தார். அவர் தமது தெய்வீகத்தோடு மனிதத் தன்மையையும் தரித்து, நம் உலகிற்கு வருவதற்கு முன்னர், ஆதாம், சேத், ஏனோக்கு, மெத் தூசலா மற்றும் நோவா ஆகியோர் சுவிசேஷச் செய்தியை அறி வித்தார்கள். கானானில் ஆபிரகாமும், சோதோமில் லோத்துவும் அச்செய்தியைச் சொன்னார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் உண்மையுள்ள தூதுவர்கள் வரப்போகிறவரைக் குறித்து அறிவித்தார்கள். யூத நிர்வாகத்தின் சடங்காச்சாரங்களை கிறிஸ்துதாமே ஏற்படுத்தினார். அவர்களுடைய பலிமுறைகளின் அமைப்பின் அடிப்படை அவர்தாம்; அவர்களுடைய சகல ஆராதனைகள் சுட்டிக்காட்டிய மாபெரு நிழல் அவர்தாம். பலி மிருகங்கள் அடிக்கப்பட்டபோது, இரத்தம் சிந்தப்பட்டது; அது தேவ ஆட்டுக்குட்டியின் பலியைச் சுட்டிக்காட்டியது. அடையாள மாகக் கொடுக்கப்பட்ட பலிகள் அனைத்தும் அவரில் நிறை வேறின. COLTam 124.3

முற்பிதாக்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட, பலமுறை ஆராதனைகள் அடையாளமாகக் காட்டின, நியாயப்பிரமாணம் சுட்டிக் காட்டின, தீர்க்கதரிசிகளால் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்து தாமே பழைய ஏற்பாட்டின் ஐசுவரியமாக இருக்கிறார். கிறிஸ்துவின் வாழ்க்கையும் மரணமும் உயிர்த்தெழுதலும், கிறிஸ்தைவப் பற்றி பரிசுத்த ஆவியானவர் கொடுத்துள்ள வெளிப்பாடுகளும் புதிய ஏற்பாட்டின் புதிய ஏற்பாட்டின் பொக்கிஷமாக இருக்கிறது. பிதாவினுடைய மகிமையின் பிரகாசமான நமது இரட்சகரே, பழைய, புதிய ஏற்பாடாகத் திகழ்கிறார். COLTam 125.1

கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், பரிந்து பேசுதல் குறித்து தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவற்றிலிருந்து எடுத்து, அப்போஸ் தலர்கள் சாட்சியறிவிக்க வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் நிந்தையையும், அவருடைய தூய்மை மற்றும் பரிசுத்தத்தையும், அவருடைய ஈடு இணையற்ற அன்பையும் முக்கியக் கருத்தாகப் போதிக்க வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் வாழ்க்கையில் வெளிப்பட்டவற்றை மட்டும் சொல்லாமல், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவற்றையும், பலிமுறைகள் அடை யாளமாகச் சுட்டிக்காட்டினவற்றையும் சொல்லி, சுவிசேஷத்தைப் பூரணமாகப் பிரசங்கிக்கவேண்டியிருந்தது. COLTam 125.2

கிறிஸ்து போதித்தபோது பழைய ஏற்பாட்டிலிருந்து சத்தியங்களைச் சுட்டிக்காட்டினார்; அவற்றைக் கொடுத்தவரும் அவர்தாம்; முற்பிதாக்கள் மற்றும் தீர்க்கதி சிரிகள் மூலம் அவற்றைப் பேசியிருந்தவரும் அவர்தாம்; ஆனால் இப்பொழுது புதிய வெளிச்சத்தில் காண்பித்தார். அவற்றின் அர்த்தம் எவ்வளவு வித்தியாசமாக மிளிர்ந்தன! அவர் கொடுத்த விளக்கத்தால் வெளிச்சவெள்ளமும், ஆவிக்குரிய சூழலும் உண்டாயின. தேவ வார்த்தையானது தொடர்ந்து சீடர்களுக்கு வெளுப்படும்படி, பரிசுத்த ஆவியானவர்கள் அவர்களுக்கு வெளிச்சமூட்டூவாரென வாக்குரைத்தார். அப்போது, சத்தியத்தை அதன் புதிய வெளிச்சத்தில் அவர்கள் அறிவிக்க முடியும். COLTam 125.3

மீட்பு குறித்த முதல் வாக்குத்தத்தம் ஏதேனில் கொடுக்கப் பட்டதிலிருந்தே, கிறிஸ்துவின் வாழ்க்கை, அவரது குணம், அவரது மத்தியஸ்த ஊழியம் பற்றி மனிதர்கள் ஆராயத்துவங்கினார்கள். யார் சிந்தைகளிலெல்லாம் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடிந்ததோ, அவர்களுக்கு இந்தச் செய்திகள் புதுப்பொலிவுடன் உணர்த்தப்பட்டன. மீட்பு குறித்த சத்தியங்கள் படிக்க படிக்க பெரிதாகி, நீண்டு செல்லும் தன்மையுடையவை. அவை பழை யவை; ஆனால் என்றும் புதியவை; சத்தியத்தைத் தேடுகிறவருக்கு மகத்தான மகிமையையும் வல்லமையையும் அவை வெளிப் படுத்திக் கொண்டே இருக்கும். COLTam 125.4

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சாத்தியம் குறித்த ஒரு புதிய வெளிப்பாடு, அதாவது அந்தத் தலைமுறையினருக்கு தேவன் கொடுக்கவிரும்புகிற செய்தி கிடைக்கிறது. பழைய சாத்தியங்கள் அனைத்தும் இன்றியமையாதவை ; அவற்றைச் சாராமல் புதிய சத்தியம் இல்லை; மாறாக, அவற்றின் அதிகப்பட்ச விளக்கமாக இருக்கும். பழைய சாத்தியங்களைப் புரிந்து கொண்டால் தான், புதியதைப் புரிந்துகொள்ள முடியும். தம்முடைய உயிர்த்தெழு தல் குறித்த சத்தியத்தை தமது சீடர்களுக்குச் சொல்ல கிறிஸ்து விரும்பினார் ; மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் லூக்கா 24:27. சத்தியம்பற்றி புதிய வெளிப்பாடு கிடைக்கும்படி வீசப்படுகிற வெளிச்சமே, பழையவற்றை மகிமைப்படுத்துகிறது. புதியதைப் புறக்கணிக்கிறவன் அல்லது அலட்சியப் படுத்து கிறவன் உண்மையில் பழையதைப் பெற்றிராதவன். அவனுக்கு அதன் அர்த்தம் புரியாமல், சிறிதும் பிரயோஜனமற்ற தாக மாறும். COLTam 126.1

பழைய ஏற்பாட்டு சத்தியங்களை தாங்கள் நம்புவதாகச் சொல்லி, அவற்றைப் போதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் புதியதைப் புறக்கணிக்கிறார்கள். கிறிஸ்து போத்தித்தவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், கோத்திரப் பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் சொன்னவற்றை அவர்கள் நம்புவதில்லை. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே... என்று கிறிஸ்து சொன்னார். யோவான் 5:46. ஆகவே, பழைய ஏற்பாடு குறித்து அவர்கள் போதிக்கும் போதும் மெய்யான வல்லமையே காணப்படாது. COLTam 126.2

சுவிசேஷத்தை விசுவாசிப்பதாக, போதிப்பதாகச் சொல்கிற அநேகர் இதே தவறைச் செய்கிறார்கள். “என்னைக் குறித்துச் ச ாட்சிகொடுக்கிற வைகளும் அவைகளே” என்று கிறிஸ்து சொல்லியிருக்கிற பழைய ஏற்பாட்டின் வேதவாக்கியங்களை ஓரங்கட்டுகிறார்கள். யோவான் 5:39. பழையதைப் புறக்கணிப் பது புதியதைப் புறக்கணிப்பதற்கு சமம்; பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றின் இரு அங்கங்களாக அவை இருக்கின்றன. சுவிசே ஷமில்லாமல் தேவப்பிரமாணத்தையும், தேவப்பிர மாணம் இல்லாமல் சுவிசேஷத்தையும் சரியாக யாரும் போதிக்க முடியாது. பிரமாணத்தில் சுவிசேஷம் உள்ளடங்கியுள்ளது ; சுவிசேஷத்தில் பிரமாணம் வெளிப்படுத்தப்படுகிறது. பிரமாணம் வேராக இருக்கிறது; அதில் பூக்கிறவாசமுள்ள மலராகவும், காய்க்கிற கனியாகவும் சுவிசேஷம் இருக்கிறது. COLTam 126.3

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் மேலும், புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் மேலும் வெளிச்சத்தை வீசுகிறது. அவை ஒவ்வொன்றும் கிறிஸ்துவுக்குள் தேவமகிமையின் வெளிப்பாடாக இருக்கின்றன. ஆர்வத்தோடு தேடுகிறவர்களுக்கு ஆழமான புதிய கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்து கிற சாத்தியங்களை இரண்டும் வழங்குகின்றன. COLTam 127.1

கிறிஸ்துவிலும், கிறிஸ்துவினாலும் வெளிப்படுகிற சாத்தியத்திற்கு அளவே இல்லை. வேதாகமகமத்தை ஆராய்கிற மாணவ னுக்கு அது ஒரு ஊற்றைப்போல இருக்கும்; அதன் ஆழங்களை உற்று நோக்கும்போது அது மேலும் ஆழமாக, அகலமாகச் செல்லும். நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக தமது குமாரனைக் கொடுத்த தேவ அன்பின் இரகசியத்தை, இந்த வாழ்வில் நாம் விளங்கிக்கொள்ள முடியாது. இவ்வுலகில் நமது மீட்பருடைய பணியானது இப்போதும், எப்போதும் நம் கற்பனையின் விளம்புவரைச் சென்று நாம் தியானிக்க வேண்டிய கருத்தாக இருக்கும். தன்னுடைய மனத்திறன் ஒவ்வொன்றையும் கசக்கி பிழிந்து, இந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள மனிதன் முயலலாம்; ஆனால் அது மனதைகளைத்து, இளைக்கச் செய்யும். கருத்தோடு தேடுகிறவர், தனக்கு முன் எல்லையும் கரையும் இல்லாத ஒரு கடலே விரிந்திருப்பதைக் காண்பார். COLTam 127.2

இயேசுவில் காணப்படுகின்ற சத்தியத்தை அனுபவிக்கலாம்; ஆனால் விளக்கவே முடியாது. அதின் உயரமும், அகலமும், ஆழமும் நம் அறிவுக்கு எட்டாதது. நம்மால் இயன்றவைர நம் கற்பனையைப் பறக்கவிட்டாலும், விவரிக்க முடியாத அன்பின், வானமளவிற்கு உயர்ந்திருந்தும், எல்லா மனிதரிலும் தேவசாய லைப் பதிக்கும் படி பூமிக்கு இறங்கி வந்த அந்த அன்பின் தோற்றத்தை மங்களாகவே காண்போம். COLTam 127.3

ஆனாலும், தேவனுடைய மனதுருக்கம் குறித்து நாம் விளங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு அனைவரும் காணமுடியும். நொறுங்குண்ட தாழ்மையான ஆத்துமாவிற்கு அது வெளிப்படும். நமக்காக தேவன் ஏறெடுத்த பலியை எவ்வளவுக்குப் போற்றுகிறோமோ அந்த அளவுக்குத்தான் அவருடைய மன துருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். மனத்தாழ்மையோடு தேவவார்த்தையை நாம் ஆராயும் போது, மீட்பில் உள்ளடங்கிய பிரமாண்டமான கருத்தானது நமக்கு வெளிப்படும். அதைப் பார்க்கும்போது, அது மேலும் மேலும் பிரகாசமடையும்; அதைப் புரிந்துகொள்ள வாஞ்சிக்கும் போது, அதன் ஆழமும் அகலமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். COLTam 128.1

நமது ஜீவன் கிறிஸ்துவின் ஜீவனோடு கட்டப்படவேண்டும்; வானத்திலிருந்து இறங்கிவந்த ஜீவ அப்பமாகிய அவரிடம் நாம் பங்கெடுத்து, எப்போதும் அவரிடமிருந்து பெறவேண்டும்; பரி பூரணமான பொக்கிஷங்களைக் கொடுத்த பிறகும் புதிதாக ஊறுகிற அந்த ஊற்றிலிருந்து நாம் பெறவேண்டும். ஆண்ட வரை எப்போதும் நமக்கு முன்பாக வைத்து, நம்முடைய இதயங் களில் அவருக்கு ஸ்தோத்திரமும் நன்றியும் ஏறெடுத்தால், நமது ஆவிக்குரிய வாழ்க்கை எப்போதும் மறுமலர்ச்சியுடன் காணப் படும். ஒரு நண்பனிடம் பேசுவது போல தேவனிடம் பேசுகிற அனுபவமாக நம் ஜெபங்கள் மாறும். தம்முடைய மறைபொருட்கள் குறித்து தனிப்பட்ட விதத்தில் நமக்குச் சொல்லுவார். இயேசு வின் பிரசன்னமானது ஓர் இனிய, சந்தோஷமான உணர்வை நம்மில் உண்டாக்கும். ஏனோக்கிடம் பேசினது போல நம்மிடம் பேசும்படி அவர் நெருங்கி வரும் போது, நமது இதயங்கள் நமக்குள் கொழுந்துவிட்டு எரியும். இது உண்மையில் ஒருகிறிஸ்தவனுடைய அனுபவமாகும்போது, அவனுடைய வாழ்க்கையில் தெளிவும், பணிவும், சாந்தமும் மனத் தாழ்மையும் காணப்படும்; எனவே அவன் இயேசுவோடு இருந்து, அவரிடம் கற்றுக்கொண்டவன் என்பதை அவன் பழகுகிற அனைவருக்கும் அது எடுத்துக்காட்டும். COLTam 128.2

கிறிஸ்துவின் மார்க்கத்தை உடையவர்களில் அது உயிருள்ள அனைத்தையும் ஊடுருவிச்செல்கிற ஒரு நியதியாகவும், ஜீவனுள்ள, செயல்படுகிற ஆவிக்குரிய ஆற்றலாகவும் வெளிப் படும். என்றும் மாறாத இளமையின் மகிழ்ச்சியும், வல்லமையும், மலர்ச்சியும் அவர்களில் காணப்படும். தேவவார்த்தையைப் பெற்றுக்கொள்கிற இதயமானது நீராவியாகிவிடும் ஒரு குளம் போன்றோ, தன் பொக்கிஷத்தை இழக்கிற வெடிப்புள்ள தொட் டியைப் போன்றோ இருக்காது. மலையில் எப்போதும் ஊறுகிற ஊற்றிலிருந்து ஓடுகிற சிற்றோடைபோல இருக்கும். குளிர்ந்த, பளிங்கு போன்ற அதன் தண்ணீர், ஒவ்வொரு பாறையாகத் துள்ளிக்குதித்து,களைத்தும் தாகத்தோடும் பாரத்தோடும் இருப்பவர்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். COLTam 128.3

சத்தியத்தைப் போதிக்கிற ஒவ்வொருவரையும் இந்த அனுபவம்தான், கிறிஸ்துவின் பிரதிநிதியாக மாற்றுகிறதகுதிகளைக் கொடுக்கிறது. கிறிஸ்துவினுடைய போதனையின் ஆவிதான் அவருடைய பேச்சுக்களுக்கும் ஜெபங்களுக்கும் தெளிவையும் ஆற்றலையும் கொடுக்கும். கிறிஸ்துவைக்குறித்த அவருடைய ச ாட்சி குறையுள்ளதாக, ஜீவனற்றதாக இருக்காது. அந்த போதகர் ஏற்கனவே பிரசங்கித்தத்தையே திரும்பத்திரும்ப பிச ங்கிக்கமாட்டார். பரிசுத்த ஆவியானவர் தொடரந்து பிரகாசி க்கச்செய்யும்படி அவருடைய மனது திறந்தே இருக்கும். COLTam 129.1

“என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணு கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு .... ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான் .. ஆவியே உயிர்ப்பிக்கிறது ..... நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” என்று கிறிஸ்து சொன்னார். யோவான் 6:54 - 63. COLTam 129.2

நாம் கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து, அவர் இரத்தத்தைப் பானம் பண்ணும்போது, நித்திய ஜீவனுக்கேதுவான தன்மை நமது ஊழியத்திலே காணப்படும். பழைய கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லமாட்டோம். பேசியதையே பேசி, சலிப்பூட்டுகிற பிரசங்கம் காணப்படாது. பழைய சாத்தியங்களைப் போதித்தாலும், புதிய வெளிச்சத்தில் அவை புலப்படும். அனைவரும் பகுத்தறியும் படி சத்தியம் குறித்த ஒரு புதிய பார்வையும், தெளிவும் கிடைக்கும். அப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்கிற சிலாக்கியத்தைப் பெற்றவர்கள், பரிசுத்த ஆவியானவருடைய செல்வாக்கிற்கு தங்களை அர்ப்பணித்தால், ஒரு புதிய வாழ்வின் விறுவிறுப்பான ஆற்றலை உணர்வார்கள். தேவ அன்பின் அக்கினி அவர்களுக்குள் மூட்டப்படும். சத்தியத்தின் மகத்துவத்தையும் அழகையும் பகுத்தறியும்படி அவர்களுடைய அறிவுத்திறன் கூரிய மனத் திறன்கள் உயிரூட்டப்படும். COLTam 129.3

சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும் போதிக்கிற ஒவ்வொரு வரும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்பதற்கு உண்மையுள்ள ட்டெஜமான் அடையாளமாக இருக்கிறான். தேவவார்த்தையை அவன் பொக்கிஷமாகக் கருதும்போது, புதிய சத்தியத்தை புதிய அழகோடு எடுதுக்காட்டிக் கொண்டே இருப்பார். போதிப்பவர் ஜெபத்தின் மூலம் தேவனோடு ச ார்ந்திருக்கும் போது, தேவ ஆவியானவர் அவன் மீது இறங்குவார்; பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு, மற்றவர்களுடைய இருதயங்களில் தேவன் கிரியை செய்வார். இனிய நம்பிக்கை யாலும் தைரியத்தாலும் வேத உருவகங்களாலும் சிந்தையையும் இருதயத்தையும் ஆவியானவர் நிரப்புகிறார். அவருடைய வழிகாட்டலின் கீழ் இவை அனைத்தையும் வாலிபர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். COLTam 130.1

பரலோக சமாதானம், சந்தோஷம் ஆகிய ஊற்றுகள் ஆவியானவரின் அருள்மொழியால் போதிப்பவரின் ஆத்துமா விலிருந்து திறந்துவிடப்படும் போது, அது தாக்கத்தை உண்டாக் குகிற ஒரு பெரும் நதியாக மாறி, அவரிடம் செல்கிற அனைவ ரையும் ஆசீர்வதிக்கும். வேதாகமம்களைப்பூட்டுகிற புத்தக மாக மாணவருக்கு மாறாது. ஞானமாகப் போதிக்கிறவரின் மூலம் வார்த்தையானது அதிகமதிகமாக விரும்பப்படுகிற புத்தகமாகிறது. அது ஜீவ அப்பமாக மாறி, பழையதாக மாறாமல் இருக்கும். அதின் புதுமையும், அழகும் சிறுவர்களையும், வாலிபர்களையும் கவர்ந்து இழுக்கும். அது பூமிக்கு எப் போதும் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் கொடுத்து, ஆனாலும் சற்றும் குறைந்து போகாத சூரிய வெளிச்சம் போலிருக்கும். COLTam 130.2

தேவவார்த்தைதான் அவருடைய பரிசுத்தமான, கற்றுக் கொடுக்கிற ஆவியாக இருக்கிறது. புதிதும் விலையேறப்பெற்றதுமான ஒரு வெளிச்சம், அதன் ஒவ்வொரு பக்ங்களிலிருந்தும் பிரகாசிக்கிறது. சத்தியம் அங்கு வெளிப்படுத்தப்படுகிறது; தேவனுடைய சத்தம் ஆத்துமாவில் பேசும்போது சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளும் வரிகளும் பளிச்செனக் கிடைக்கின்றன. COLTam 130.3

வாலிபர்களிடம் பேசவும், தேவவார்த்தையின் சௌந்தர் யங்களையும் பொக்கிஷங்களையும் அவர்களைக் கண்டு கொள்ள வைப்பதிலும் பரிசுத்த ஆவியானவர் பிரியப்படுகிறார். மாபெரும் ஆசிரியர் சொன்னவாக்குத்தத்தங்கள் அவர்களுடைய புலன்களைச் சிறைப்படுத்தி, தேவனுடைய ஆவிக்குரிய வல்லமையால் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும். அவர்களுடைய சிந்தை வளமடையும்; அதாவது, தெய்வீக விஷயங்களில் பரிச்சயப்படும்; அது சே பாதனைகளுக்கு எதிராக தடுப்பு வேலியாக விளங்கும். COLTam 131.1

சத்திய வசனங்கள் மேலும் மேலும் முக்கியத்துவம் பெறும்; நாம் கற்பனை செய்திராத அளவுக்கு அர்த்தம் நிறைந்ததாக விளங் கும். வார்த்தையின் அழகும் ஐசுவரியங்களும் மனதிலும் குணத்திலும் மாற்ற்றத்திற்கேதுவான செல்வாக்கை உண்டாக்கும். ஆவியானவர் கிரியை செய்வதின் அடையாளமாக, பரலாக அன்பின் ஒளி இருதயத்தில் வீசும். COLTam 131.2

இந்த ஆராய்ச்சியானது, வேதாகமத்தைப் போற்றச்செய்யும். ஆராய்கிறவர் எந்தப் பக்கம் திருப்பினாலும், முடிவில்லா ஞானமும் தேவ அன்பும் வெளிப்படுவதைக் காண்பார். COLTam 131.3

யூத நிர்வாக முறையின் முக்கியத்துவத்தை இன்னும் முழுமை யாகப் புரிந்து கொள்ள முடியவில்லை . யூதர்களின் சடங்குகளிலும், அடையாளங்களிலும் அகன்ற, ஆழமான சத்தியங்கள் நிழலாகக் கொடுக்கப்பட்டிருந்தன. அதன் மறைபொருட்களைத் திறந்து காட்டுகிற சாவி சுவிசேஷம்தான். மீட்பின் திட்டம் குறித்து அறிவதால், அதிலுள்ள சத்தியங்களை விளங்கிக் கொள்ளலாம். இந்த அற்புதசத்தியங்களை விளங்கிக்கொள்வது எல்லாவற்றிற்கும் மேலாக நமக்குக் கிடைத்திருக்கிற சிலாக்கியம். தேவனுடைய ஆழங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நொறுங்குண்ட இதயத்தோடு ஆராய்கிறவர்களுக் கும், தேவன் மட்டுமே கொடுக்க கூடிய அதிக நீளமும், அகலமும், ஆழமும், உயரமுமான அறிவை வேண்டி ஜெபிக்கிறவர்களுக்கும், வெளிப்படுத்தப்படுகிற சத்தியங்களைக்காண தேவதூதர்களும் ஆவலாக இருக்கிறார்கள். COLTam 131.4

இந்த உலக வரலாற்றின் முடிவை நாம் நெருங்குகிற வேளை யில், கடைசிக்கால தீர்க்கதரிசனங்கள் குறித்து விசேஷமாக ஆராயவேண்டும் ... புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய சாத்தியங்கள் நிறைந்துள்ளன. வெளிப்படுத்தல் புத்தகத்தை ஆராயாமல், ஏதாவது காரணம் சொல்லி சந்தோஷமாகத் தப்பிப்பதற்கு, அநேகருடைய சிந்தைகளை சாத்தான் குருடாக்கியிருக் கிறான். ஆனால், கடைசி நாட்களில் சம்பவிக்கப்போவதை தம்முடைய தாசனாகிய யோவான்மூலம் கிறிஸ்து அங்கே சொல்லியிருக்கிறார்; . இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் என்று சொல்கிறார். வெளி. 1:3. COLTam 131.5

‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பின வராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று கிறிஸ்து கூறினார். யோவான் 17:3. இந்த அறிவு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை நாம் ஏன் உணர்வதில்லை? இந்த மகிமையான சத்தியங்கள் ஏன் நமது இதயங்களில் கொழுந்துவிட்டு எரியவில்லை ? நமது உதடுகளை நடுங்கச் செய்யவில்லை ? நம்மை முற்றிலுமாக ஆக்கிரமிக்கவில்லை? COLTam 132.1

நமது இரட்சிப்பிற்கு அவசியமான ஒவ்வொரு சத்தியத்தையும் தேவன் நமக்குக் கொடுத்துள்ளார்; அதாவது, தமது வார்த்தையில் கொடுத்துள்ளார். இந்த ஜீவ ஊற்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தண்ணீர் இறைத்திருந்தாலும், இன்னும் வற்றாமல் வழங்கிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் கர்த்தரை தங்களுக்கு முன்பாக நிறுத்தி, அவரை நோக்கிப் பார்த்து அவருடைய சாயலாக மாறியிருக்கிறார்கள். கிறிஸ்து தங்களுக்கு எப்படிப் பட்டவர், தாங்கள் அவருக்கு எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லி, அவரது குணத்தைப்பற்றி விவரிக்கும் போது, அவர்களது ஆவி அவர்களுக்குள்ளே கொழுந்து விட்டு எரிகிறது. இவர்கள் ஆராய்ந்தாலும் கூட, மகத்தானதும், பரிசுத்தமானதுமான இந்தக் கருத்துகளை முற்றிலுமாக ஆராய்ந்துவிடவில்லை. இரட்சிப்பின் இரகசியங்களை ஆராய்கிற பணியில் மேலும் ஆயிரக்கணக் கானோர் ஈடுபடலாம். கிறிஸ்துவின் வாழ்வையும் அவரது பணியின் தன்மையையும் தியானிக்கும் போது, சத்தியத்தைக் கண்டு கொள்வதற்கான ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒளிக்கதிர்கள் பளிச்செனப் பிரகாசிக்கும். ஒவ்வொருமுறை புதிதாக ஆராயும் போதும், இன்னமும் வெளிப்படுத்தப்பட்டிராத மிகுந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயம் வெளிப்படும். அதை எவ்வளவு ஆராய்ந்தாலும், புதிய வெளிப்பாடு கிடைக்கும். கிறிஸ்து மனிதனாக வந்ததையும், பாவநிவாரணமாக மரித்ததையும், மத்தியஸ்த ஊழியம் செய் கிறதையும் கருத்தோடு ஆராய்கிறவர், தான் உயிர்வாழுட்டும் ஆராய்ந்தகொண்டே இருப்பார்; வருடங்கள் உருண்டோடிய நிலையில் பரலோகத்தை நோக்கிப் பார்த்து, “தேவபக்திக்குரிய இரகசியம் மகா மேன்மையுள்ளது” என்று ஆச்சரியமடைவார். COLTam 132.2

இவ்வுலகில் நாம் பெற்றுக்கொள்ள சாத்தியமாக இருந்த ஒளியைப் பெற்று, அதன் மூலம் புரிந்திருக்க வேண்டிய விஷயங்களை, நித்திய வாழ்வில் கற்றுக்கொள்வோம். மீட்பின்மையவிஷயங்கள்தாம், நித்திய காலம் முழுவதிலும் மீட்கப்பட் டோரின் இதயங்களையும் சிந்தைகளையும் நாவுகளையும் இயக்கிக்கொண்டிருக்கும். கிறிஸ்து தமது சீடர்களுக்கு வெளிப் படுத்த விரும்பியும், விசுவாசமில்லாமையால் அவர்கள் புரிந்து கொள்ள தவறின சாத்தியங்களை மீட்கப்பட்டவர்கள் புரிந்துகொள் வார்கள். கிறிஸ்துவின் மகிமை மற்றும் பரிபூரணம் குறித்த புதிய கருத்துக்கள் நித்திய காலம் முழுவதிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். உண்மையுள்ள வீட்டெஜமான், நித்தியகாலம் முழு வதிலும் தம்முடைய பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்து, வழங்கிக்கொண்டே இருப்பார். COLTam 133.1