Go to full page →

வரப்போகிற நிகழ்வுகள் TamChS 205

பாத்திரவான்களாக எண்ணப்பட தகுதியற்றவர்களென நம் மக்கள் கருதப்படுகிறார்கள்; ஆனால், மாற்றம் வரப்போகிறது. கற்பனையைக் கைக்கொள்கிறவர்களை முக்கியப்படுத்தியே ஆக வேண்டிய நிகழ்வுகளை நோக்கி கிறிஸ்தவ உலகம் சென்றுகொண்டிருக்கிறது. தேவனுடைய சத்தியத்தின் இடத்தை மனிதர்களுடைய தவறான கொள்கைகளும் கருத்துகளும் தொடர்ந்து பிடித்துவருகின்றன. தேவன்மேல் மெய்ப்பற்றுடன் இருந்திருக்க வேண்டியவர்களின் மனச்சாட்சிகளைச் சிறைப்படுத்தும் இயக்கங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சட்டத்தை இயக்கும் அதிகாரம் படைத்தவர்கள் தேவமக்களுக்க எதிராக இருப்பார்கள். ஒவ்வோர் ஆத்துமாவும் சோதிக்கப்படும். 25T, 546 TamChS 205.1

தேவனுடைய பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரான சட்டங்களை மனிதர்கள் உயர்த்தி, வலுக்கட்டாயமாகத் திணிப்பார்கள். தங்களுடைய கட்டளைகளைப் புகுத்தவேண்டுமென்கிற வைராக் கியத்தால், “கர்த்தர் சொல்லுகிறதாவது” என்கிற தெளிவான கட்டளையை விட்டு விலகுவார்கள்.பொய்யான ஓய்வுநாளை உயர்த்துவதால், யெகோவாவின் குணத்தைப் பிரதிபலிக்கிற அவருடைய பிரமாணத்தை அவமதிக்குமாறு மனிதர்களைக் கட்டாயப்படுத்து வார்கள். தேவனுடைய ஊழியர்கள் தவறு செய்திருக்கமாட்டார்கள். ஆனால், சாத்தானால் தூண்டப்பட்டு, பொறாமையாலும் மதத் தீவிர வாதத்தாலும் நிறைந்தவர்களால் நிந்தையும் உபத்திரவமும் அடைவார்கள். 19T, 229 TamChS 205.2

சில சபைகள் தாங்கள் பரலோகத்திற்கு உரியவர்களென்று சொல்லிக்கொள்வார்கள்; ஆட்டுக்குட்டியின் குணத்தைப் பெற்றிருப்பதாகவும் சொல்லிக்கொள்வார்கள்; ஆனால், அவர்களுக்கு வலுசர்ப்பத்தின் இருதயம் இருக்கும்; சாத்தானால் இயக்கப்படுவார்கள்; கடும்கோபத்தில் இருப்பார்கள். இதை தங்களுடைய செயல்களால் காட்டுவார்கள். ஏழாம் நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதால் தேவமக்கள் உபத்திரவத்தை அனுபவிக்கப்போகிற காலம் வருகிறது. ஆனால் தேவ மக்கள் அவருக்காக உறுதியாக நிற்க வேண்டும்.அவர்களுக்காக கர்த்தர் செயல்பட்டு, தாம் தேவர்களுக்கெல்லாம் தேவன் என்பதைக் காட்டுவார். 29T, 229,230 TamChS 206.1

சாத்தான் மனித இதயங்களைத் தூண்டிவிட்டு, இயேசுவின் பின்னடியார்களை சகல வித கோபத்தோடும் நிந்தையோடும் கொடூரத்தோடும் தாக்குவான். இதுவும் கூட வெளிப்படையான விதத்தில் நிறைவேறும். ஏனென்றால் சுபாவ இருதயம் தேவ பிரமாணத்திற்கு எதிரானதாக இருக்கிறது; அது தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது. அப்போஸ்தலர்களுடைய நாட்களில் இருந்ததைவிட இன்று உலகமானது எந்த விதத்திலும் கிறிஸ்துவின் நியதிகளுக்கு இசைந்ததாக இல்லை. “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தும்படி தூண்டின அதே பகை, சீடர்களை உபத்திரவப்படுத்தத் தூண்டின அதே பகை, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளில் இன்றும் கிரியை செய்கிறது. இருண்ட காலங்களில் ஆண்களையும் பெண்களையும் சிறையில் தள்ளி, நாடு கடத்தி, மரணதண்டனை கொடுத்தார்கள்; தூய பர்திமலேயு நாள் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தினார்கள். ஸ்மித் ஃபீல்டில் நெருப்பு வைத்தார்கள். புதுப்பிக்கப்படாத இருதயங்களில் அதே ஆவியானது வன்மத்தோடு இன்றும் செயல்பட்டுவருகிறது. நன்மைக்கும் தீமைக்கும் ஒரு போராட்டம் நடந்துவருகிறது என்பதற்கு சத்திய வரலாறு என்றும் ஓர் ஆதாரமாக இருக்கிறது. எதிர்ப்புக்கும் இழப்புக்கும் உபத்திரவத்திற்கும் மத்தியிலும் அப் பகுதிகளுக்கு சுவிசேஷத்தைக் கொண்டுசென்று, அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1AA, 84,85 TamChS 206.2

மீதமான திருச்சபை மிகுந்த உபத்திரவத்தையும் சோதனையையும் சந்திக்கும். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் விசுவாசத்தையும் காத்துக்கொள்கிறவர்கள், வலுசர்ப்பத்தின் கோபத்திற்கும் அதன் சேனைகளின் கோபத்திற்கும் ஆளாவார்கள். உலகத்தார் தன்னுடைய குடிமக்களென சாத்தான் எண்ணுகிறான். தேவ துரோக சபைகளைதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.ஆனால் ஒரு சிறு கூட்டத்தார் அவனுடைய மேலாதிக்கத்தை எதிர்த்து வருகிறார்கள். அவர்களை பூமியிலிருந்து வேறோடு அழிக்கமுடிந்தால், அவனுடைய வெற்றி முழுமையடையும். இஸ்ரவேலை அழிக்கும் படி அஞ்ஞான தேசங்களைத் தூண்டினதுபோல, தேவமக்களை அழிக்கும்படி பூமியின் துன்மார்க்கவல்லமைகளை சீக்கிரத்திலேயே அவன் தூண்டிவிடுவான். தேவனுடைய பிரமாணத்தை மீறுமாறும், மனிதர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறும் அனைவரையும் கட்டாயப்படுத்துவான். தேவனுக்கும் தங்கள் கடமைக்கும் உண்மையாக இருப்பவர்கள் ‘பெற்றோராலும், சகோதரராலும், பந்து ஜனங்களாலும், சிநேகிதராலும்’ காட்டிக்கொடுக்கப் படுவார்கள். 29T, 231 TamChS 207.1

ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் பரீட்சை வருவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. பொய்யான ஓய்வுநாளை கைக்கொள்ளும் படி நம்மை வற்புறுத்துவார்கள். தேவனுடைய கற்பனைகளுக்கும் மனிதரின் கட்டளைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவும். கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தாரின் கோரிக்கைகளுக்கு இணங்கி, உலகப் பழக்கவழக்கங்களுக்குப் பலர் ஒத்துப்போவார்கள். பரியாசத்திற்கும் நிந்தைக்கும் கடுஞ்சொல்லுக்கும் சிறையிருப்புக்கும் மரணத்திற்கும் தங்களைக் கீழ்ப்படுத்தப்பயந்து, வேறு வல்லமைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். அச்சமயத்தில், பொன்னானது களிம்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும். நம்மை ஆச்சரியப்படச் செய்த பிரகாசமான நட்சத்திரங்கள் பல அந்நாளில் இருண்டு போகும். ஆசரிப்புக்கூடார ஆபரணங்களைத் தரித்திருக்கிற அநேகர் கிறிஸ்துவின் நீதி என்னும் வஸ்திரத்தைத் தரித்திராமால், தங்கள் சுயநிர்வாணத்தில் வெட்கிப்போவார்கள். 3PK, 188 TamChS 207.2

மனித சட்டங்கள் அவமதித்த தேவபிரமாணத்தைப் பாதுகாப்பதற்கு சிறைவாசம், சொத்திழப்பு, உயிரிழப்பு போன்றவற்றை வருவித்துக்கொள்கிற ஒரு தொடர் போராட்டம் நமக்கு இருக்கிறது. 15T, 712 TamChS 207.3

கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறுவதின் அர்த்தத்தை சத்தியத்தின் பாதுகாவலர்கள் தங்களுடைய அனுபவத்தால் அறிந்து கொள்கிற காலம் விரைந்து வருகிறது. தான் செயல்படுவதற்கு இன்னும் சிறிதுகாலமே இருப்பதை கொடுமையான வன்முறையாளன் காண்கிறான். மனிதன் மேலுள்ள பிடியை அவன் சீக்கிரம் இழப்பான். அவனுடைய வல்லமை அவனிடமிருந்து பிடுங்கப்படும். எனவே, சகல அநீதியின் வஞ்சகத்தோடும் அழிந்துபோகிறவர்கள் மத்தியில் அவன் செயல்படுகிறான். மூடநம்பிக்கையும் பொய்யும் சத்தியத்தையும் நீதியையும் சமத்துவத்தையும் கீழேபோட்டு மிதிக்கின்றன. சத்தியத்திற்கு எதிரான ஒவ்வொரு வல்லமையும் பெலப்பட்டு வருகிறது. 2SW, Oct. 31, 1905 TamChS 208.1

சமாதானமும் செழிப்பும் காணப்பட்ட ஒரு காலத்தில் திருச் சபை செய்யத்தவறிய பணியை, அதைரியமும் அச்சுறுத்தலும் கடும் நெருக்கடியும் நிலவுகிற காலத்தில் செய்தாகவேண்டும். உலகத்திற்கு ஒத்துப்போனதால் சொல்லமலிருந்த எச்சரிப்புகளை சத்தியத்தின் எதிரிகளுடைய கடுமையான எதிர்ப்புகளின் மத்தியில் கொடுத்தாகவேண்டும். மேம்போக்கும் பழமை வாதமும் நிறைந்த மக்கள் ஊழியத்தின் வளர்ச்சியை தங்கள் செல்வாக்கால் முன்பு தொடர்ந்து தடுத்துவந்தார்கள். அவர்கள் இப்போது விசுவாசத்தைப் புறக்கணிப்பார்கள்; வெகுகாலமாக எந்த வெளிப்படையான எதிரிகள் மேல் அனுதாபம் வைத்திருந்தார்களோ, அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். இந்தத் தேவதுரோகிகள் பிறகு தங்கள் கொடிய பகையை வெளிப்படுத்தி, முன்னாள் சகோதரரை ஒடுக்கவும் அவதூறு சொல்லவும் அவர்களுக்கு எதிராக கோபத்தைத் தூண்டிவிடவும் தங்களுடைய பெலத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்வார் கள். அந்த நாள் சீக்கிரம் வரும். திருச்சபையின் அங்கத்தினர்கள் தனித்தனியாகச் சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுவார்கள். சத்தியத்திற்காக வலுக்கட்டாயமாகச் சாட்சி சொல்ல வேண்டிய சூழ்நிலைகளில் அவர்கள் வைக்கப்படுவார்கள். யாருடைய துணையும் இல்லாமல், தனியாக நீதிமன்றங்களுக்கும் ஆலோசனை சங்கங்களுக்கும் முன் பேசும்படி அநேகர் அழைக்கப்படுவார்கள். இந்த நெருக்கடி நேரத்தில் அவர்களுக்கு உதவியிருக்கக்கூடிய அனுபவத்தை அவர்கள் முன்பே பெற்றிருக்கவேண்டும்; ஆனால், இதில் அவர்கள் முன்பு அலட்சியமாக இருந்துவிட்டார்கள். தாங்கள் வீணாக்கின சந்தர்ப்பங்களையும் புறக்கணித்த சிலாக்கியங்களையும் எண்ணி ஆத்தும் பாரமடைவார்கள். 15T, 463 TamChS 208.2

வாசலில் நின்ற மொர்தெகாயாக ஓய்வுநாள் ஆசரிப்போரை இன்றைய புரொட்டஸ்டன்ட் மக்கள் பார்க்கிறார்கள். அவனுடைய குணமும் நடத்தையும் தேவ பிரமாணத்தின்மேல் காட்டவேண்டிய பயபக்தியை வெளிப்படுத்தின; கர்த்தருக்குப் பயப்படுகிற பயமில்லாமல், அவருடைய ஓய்வுநாளைக் காலின்கீழ் போட்டு மிதிப்பவர்களை அவை தொடர்ந்து கண்டிக்கின்றன. தங்கள் வரவேற்பின்றி நுழைகிற இந்தமக்களை எப்படியாவது ஒதுக்க நினைக்கிறார்கள். 25T, 450 TamChS 209.1

பிரபலமான வழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் மனச்சாட்சியினிமித்தம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிறிய எளிய கூட்டத்தாருக்கு எதிராக சாத்தான் கோபத்தைத் தூண்டுவான். தேவ மக்களுக்கு எதிராக ஆலோசனை பண்ணுவதற்காக அக்கிரமக்காரர்களோடும் தீயவர்களோடும் பெரும் பதவியில் இருப்பவர்களும் மதிப்புமிக்கவர்களும் கைகோர்ப்பார்கள். அவமானத்தை நிறைப்பதற்கு செல்வந்தர்களும் ஞானிகளும் கல்விமான்களும் சேர்ந்துகொள்வார்கள். உபத்திரவப்படுத்துகிற ஆட்சியாளர்களும், ஊழியர்களும், திருச்சபை அங்கத்தினர்களும் அவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவார்கள். அவர்களுடைய விசுவாசத்தை அழிக்கும்படி பேசுவார்கள்; எழுதுவார்கள்; மிரட்டுவார்கள், கேலிசெய்வார்கள். தவறாகத் திரித்துக்காட்டியும், கோபமாகப் பேசியும், மக்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவார்கள். வேதாகம ஓய்வுநாளுக்கு எதிராக’ என்று வேதாகமம் சொல்கிறது’ என்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லாத நிலையில், அவற்றிற்குப் பதிலாக ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்ற நாடுவார்கள். மக்களுடைய பாராட்டையும் ஆதரவையும் விரும்புகிற சட்டமன்ற உறுப்பினர்கள், ஞாயிறு ஆசரிப்பு சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கைக்கு இணங்குவார்கள். இந்த யுத்தக்களத்தில்தான் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான இறுதி மாபெரும் போராட்டம் வருகிறது. 35T, 450,451 TamChS 209.2