ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட சோதனை இலகுவானது அல்ல. அவனிடம் கேட்கப்பட்ட தியாகம் சிறியதும் அல்ல. தேசத்தோடும் உற்றார் உறவினரோடும் குடும்பத்தோடும் அவனைக் கட்டுகிற பலமான கட்டுகள் இருந்தன. என்றாலும் அழைப்பிற்குக் கீழ்ப்படியத் தயங்கவில்லை. ‘வாக்குத்தத்த தேசத்தின் மண் செழிப்பானதா? தட்பவெப்பம் ஆரோக்கியமானதா? மனதுக்கு உகந்த சூழலையும் செல்வம் சேர்ப்பதற்கான சந்தர்ப்பங்களையும் கொடுக்குமா?’ என்று அத்தேசத்தைக் குறித்து எந்தக் கேள்வியும் அவனிடம் எழவில்லை. தேவன் பேசியிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரன் கீழ்ப்படிய வேண்டும். அவன் எங்கே இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அதுதான் பூமியிலே அவனுக்கு மிக மகிழ்ச்சியான இடம். TamChS 238.2
அநேகர் இன்றும் ஆபிரகாமைப்போல் சோதிக்கப்படுகிறார்கள். பரலோகத்திலிருந்து நேரடியாக தேவன் அவர்களிடம் பேசுவதில்லை. ஆனால் தமது வார்த்தைகளின் போதனைகளாலும் தம் வழி நடத்துதலின் சம்பவங்களினாலும் அவர்களை அழைக்கிறார். செல்வத்தையும் புகழையும் வாரி வழங்கும் போலத் தெரிகிற தொழிலை விட்டுவிடச்சொல்லலாம்; இன்பமானதும் இலாபமானது மானதொடர்புகளை விட்டுவிடச் சொல்லலாம்; இனத்தாரிடமிருந்து பிரிந்துசெல்லச் சொல்லலாம்; சுயமறுப்பும் இன்னல்களும் தியாகமும் மட்டுமே இருப்பதாகத் தோன்றும் பாதையில் நுழையச்சொல்லலாம். செய்யும்படியான வேலை ஒன்றை தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிறார். அவ்வேலையை நிறைவேற்ற அவசியமான பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சொகுசு வாழ்வு அதைத் தடைசெய்யலாம்; உற்றார் உறவினரின் செல்வாக்கும் அதைத் தடைசெய்யலாம். மனித செல்வாக்கு-உதவிகளை உதறி விட்டு வரும்படி அழைக்கிறார். தம்மை அவர்களுக்கு வெளிப் படுத்தவிரும்புகிறார். அதற்காக, அவர் உதவி தேவைப்படுவதை உணர்ந்து, அவரைமாத்திரம் சார்ந்திருக்க அவர்களை வழி நடத்துகிறார். பிடித்தமான திட்டங்களையும் பரிச்சயமான தோழமைகளையும் தேவனுடைய அழைப்பிற்காக விட்டுவிட ஆயத்தமாக இருப்பவர் யார்? கிறிஸ்துவிற்காக தனது நஷ்டங்களை இலாபமாக எண்ணி, உறுதியோடும் முழுமனதோடும் ஊழியத்தைச் செய்து, புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டு, சென்றிராத இடங்களுக்குச் செல்லக்கூடியவர் யார்? இப்படிச் செய்கிறவர் ஆபிரகாமின் விசுவாசமுடையவர். இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லாத’ ‘மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை ‘ அவர் பெறுவார். 1PP, 126,127 TamChS 238.3