Go to full page →

உண்மைத்தன்மை TamChS 297

நம்மைப் போல பரிசுத்தமும் மேன்மையுமான செய்தியைப் பெற்று, அதை அறிவிக்கும்படி அழைக்கப்பட்ட நபர்களுடைய வாழ்க்கையில் பாசாங்கே காணப்படக்கூடாது. செவந்த்-டே அட்வென்டிஸ்டுகளை உலகமானது பார்த்துக்கொண்டிருக்கிறது; ஏனென்றால், அவர்களுடைய விசுவாச அறிக்கையையும் உயர்ந்த தரத்தையும் பற்றி இவர்களுக்கு ஓரளவுக்குத் தெரியும். அவர்கள் தங்களுடைய அறிக்கையின்படி வாழாததைக் காணும்போது, உலகம் அவர்களைப் பரிகாசமாகப் பார்க்கும். 19T, 23 TamChS 297.1

மிகச்சிறந்த வரங்களையும், பெரிய திறமையையும், உயர்ந்த தகுதிகளையும் மனிதர்கள் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு குறை, ஒரு இரகசியப்பாவம் காணப்பட்டால் கூட, பூச்சரித்த மரப்பலகையால் கப்பலுக்கு நேரிடும் கதிதான் நேரிடும். அதாவது, முற்றிலும் நாசமும் பேரழிவும் ஏற்பட்டுவிடும். 24T, 90 TamChS 297.2

பரலோகத்தின் சூழலை பவுல் தன்னுடனே சுமந்துசென்றார். கிறிஸ்துவோடு அவருக்கிருந்த ஐக்கியத்தை அவரோடு சேர்ந்த அனைவரும் உணர்ந்தார்கள். அவர் அறிவித்த செய்தியை அவர் வாழ்க்கைதானே எடுத்துக்காட்டியதால், அவருடைய பிரசங்கத்திற்கு அது மிகுந்த வல்லமையைக் கொடுத்தது. இங்குதான் சத்தியத்தின் ஆற்றலைக் காணலாம். பரிசுத்தமான வாழ்க்கையின் செல்வாக்கானது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு ஆதரவாக மறைமுகமாகவும், மனதிற்குள்ளாகவும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிற பிரசங்கமாக இருக்கிறது. பதில் சொல்ல முடியாத அளவுக்கு வாக்குவாதம் செய்தாலும்கூட அது எதிர்ப்பைத்தான் தூண்டும்; ஆனால், பக்தியான வாழ்க்கையின் முன்மாதிரியானது எதிர்த்துப்பேச கொஞ்சங் கூட வாய்ப்பில்லாத ஆற்றலாக உள்ளது. 3GW, 59 TamChS 297.3

மெய் குணமானது வெளியே வடிவமைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்படுவதில்லை. அது உள்ளேயிருந்து வெளியே வருகிறது. மற்றவர்களை நீதியின் பாதையில் நடத்த விரும்பினால், நீதியின் நியதிகள் நம் இருதயங்களில் குடிகொள்ளவேண்டும். நம் விசுவாச அறிக்கையில், மார்க்கக்கொள்கைகளை நாம் வலியுறுத்தலாம்; ஆனால், நடைமுறை வாழ்க்கையில் காணப்படுகிற பக்திதான் சத்திய வார்த்தைக்கு ஆதாரமாயிருக்கும். ஒழுக்கமான வாழ்க்கை, பரிசுத்தமான பேச்சு, தடுமாற்றமற்ற நேர்மை, தொய்ந்து போகாத தயாள மனநிலை, பக்திக்கேதுவான முன்மாதிரி போன்றவை தாம் இவ்வுலகத்திற்கு வெளிச்சத்தைக் கொண்டுசெல்கிற ஊடகங்கள். 1DA. 307 TamChS 297.4

ஜெபங்கள், அறிவுரை கூறுதல், உரையாற்றுதல் போன்ற மலிவான கனிகள்தாம் அதிகம் காணப்படுகின்றன; ஆனால் எளியோர் மேலும், தகப்பனற்றோர் மேலும், விதவைகள் மேலும் அக்கறை காட்டுதல் போன்ற நற்கிரியைகளில் வெளிப்படுபவையே மெய்யான கனிகள்; அவை இயல்பிலேயே நல்ல மரத்தில் விளைகின்றன. 227T, 24 TamChS 298.1