ஏமாற்றமும் தோல்வியுமாகத் தெரிந்த அந்தக் காலக்கட்டங்களில், எலியாவுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் அநேகம் உண்டு. பொதுவாக, நீதியானதிலிருந்து விலகும் நிலை காணப்படும் இக்காலக்கட்டங்களில் தேவதாசருக்குத் தேவையான பாடங்கள் இவை; விலைமதிப்பிட முடியாதவை. எலியா தீர்க்கதரிசியின் நாட்களில் இஸ்ரவேலில் பரவியிருந்த வழி விலகலைப் போன்றுதான் இன்றைய காலத்திலும் உள்ளது. தேவனுக்கு மேலாக மனிதரை உயர்த்துவதிலும், தலைவர்களைப் புகழ்வதிலும், பணத்தைக் கடவுளாக வழிபடுவதிலும், சத்தியத்தின் வெளிப்பாடுகளுக்கு மேலாக அறிவியலின் போதனைகளை உயர்த்துவதிலும் ஏராளமானோர் இன்று பாகாலைப் பின்பற்றுகிறார்கள். அவநம்பிக்கையும் அவிசுவாசமும் அவர்கள் மனதில் தீமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், தேவனுடைய நியமங்களுக்குப் பதிலாக மனிதருடைய கொள்கைகளைப் புகுத்துகிறார்கள். தேவவார்த்தையின் போதனைகளுக்கு மேலாக மனிதரின் பகுத்தறிவைப் போற்றவேண்டிய காலம் வந்துவிட்ட தாகப் பகிரங்கமாகப் போதிக்கிறார்கள். “நீதிக்கு அளவுகோல் தேவனுடைய பிரமாணம்” என்கிறார் தேவன். இவர்களோ, “பிரமாணத்தால் பயன் ஏதும் இல்லை” என்கிறார்கள். சகல ஆண்களும் பெண்களும் தேவனுக்குக்கொடுக்கவேண்டிய இடத்தை மனிதரின் ஏற்பாடுகளுக்குக்கொடுக்கும்படி,அவர்களை வஞ்சகவல்லமையோடு சாத்தான் தூண்டிவருகிறான். மனிதரின் சந்தோஷத்திற்கும் இரட்சிப்பிற்கும் தேவன் நியமித்தவற்றை அவர்கள் மறந்துவிட வேண்டுமென்பதே அவன் ஆசை. சகல சத்தியத்திற்கும் எதிரியான அவன் அதற்கு முயன்று வருகிறான். இத்தகைய வழி விலகல் எங்கும் பரவிவருகிற போதிலும் இது மனித இனம் முழுவதையும் பாதித்துவிடுவதில்லை. உலகத்திலுள்ள அனைவருமே பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல், பாவஞ்செய்து, சத்துருவுடன் சேர்ந்து விடவில்லை. பாகால்முன் முழங்காலிடாத அவனுக்குப்பணியாத அநேகமாயிரம் பேர் உள்ளனர்; கிறிஸ்துவையும் பிரமாணத்தையும் அதிகம் அறிய விரும்புகிறவர்கள் ஏராளமாக உள்ளனர்; “இயேசு சீக்கிரம் வந்து, பாவம் மரணத்தின் ஆளுகையை முறித்துப்போடுவார்” என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறவர்கள் அநேகர் உள்ளனர். இவர்கள் தேவனோடு இருக்கிறவர்கள். ஆனால், தங்களை அறியாமல் பாகாலைத் தொழுவோரும் உண்டு; அவர்களோடு தேவ ஆவியானவர் இன்னும் போராடிவருகிறார். 1 PK, pp. 170, 171 TamChS 80.3