(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 265—288)
சீ ர்திருத்தம் பதினாறாம் நூற்றாண்டில், திறந்த வேதாகமத்தை மக்கள் அனைவர் முன்பும் வைத்து, ஐரோப்பாவிலுள்ள அனைத்து நாடுகளும் அதனிடம் வந்துசேர வகைதேடியது. சில நாடுகள் அதனைப் பரலோகத்திலிருந்து வந்த ஒரு தூதராகக் கருதி, மகிழ்ச்சியுடன் வரவேற்றன. மற்ற நாடுகளில் அது நுழைவதைத் தடுப்பதில் போப்புமார்க்கம் வெற்றியடைந்து, அதனால் வேதாகமத்தைப் பற்றிய அறிவின் ஒளியும் மேம்படுத்தும் அதன் செல்வாக்கும் கிட்டத்தட்ட முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது. ஒரு நாட்டில், ஒளி அதன் நுழைவைக் கண்டபோதிலும், இருளினால் அதனை அறிந்துகொள்ள இயலவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சத்தியமும் தவறும் ஒன்றையொன்று மேற்கொள்ளப் போராடிக்கொண்டிருந்தன. இறுதியில் தீமை வெற்றியடையவே, பரலோகத்தின் சத்தியம் வெளித்தள்ளப்பட்டது. “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது”-யோவான் 3:19. அந்த நாடு அது தேர்ந்துகொண்ட செயலின் விளைவை அறுவடை செய்யும்படி விட்டுவிடப்பட்டது. அவரது கிருபையின் ஈவை நிந்தித்த மக்களிடமிருந்து தேவ ஆவியின் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. தீமை முதிரும்படி அனுமதிக்கப்பட்டது. ஒளியை மனதார நிராகரித்ததினால் உண்டான பலனை முழு உலகமும் கண்டது. (1) GCTam 301.1
அநேக நூற்றாண்டுகளாக பிரான்ஸில் நடத்தப்பட்ட வேதாகமத் திற்கெதிரான போர், புரட்சியின் காட்சிகளில் முடிவடைந்தது. வேத வசனங்களை ரோம் ஒடுக்கியது, இந்தப் பயங்கரமான கலகத்திற்கு நியாயமான காரணமாகும். போப்புமார்க்கத்தின் கொள்கைகளை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ரோமசபை போதித்துவந்தவைகளை செயல்படுத்தினதால், உலகம் இதுவரை கண்டிராத கண்கூடான காட்சிகளை இந்தப் புரட்சி முன்வைத்தது. (2) GCTam 301.2
ரோமமார்க்கத்தின் மேலாண்மையின் காலத்தில் வேதவாக்கியங்கள் ஒடுக்கப்பட இருந்தது, தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டிருந்தது. பாவமனிதனுடைய ஆளுகையில் நிகழக்கூடிய பயங்கரமான விளைவுகளை, குறிப்பாக பிரான்ஸில் நிகழக்கூடியவைகளை, வெளிப்படுத்தின விசேஷ த்தை எழுதினவர் சுட்டிக்காட்டுகிறார். (3) GCTam 302.1
“ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று” (வெளி. 11:2-11) என்று தேவதூதன் கூறினான். (4) GCTam 302.2
நாற்பத்திரண்டு மாதங்கள்—ஆயிரத்திருறூற்று அறுபது நாட்கள் (1260)— என்று இங்கு குறிக்கப்பட்டுள்ள காலங்கள், ரோமினால் கிறிஸ்துவின் சபை ஒடுக்கப்பட இருந்த அதே காலத்தைக் குறிப்பதாகும். கி.பி.538-ல் துவங்கின 1260 வருட போப்புமார்க்கத்தின் மேலாதிக்கம், கி.பி. 1798-ல் முடிவடையும். அந்தக் காலத்தில், ஒரு பிரெஞ்சு சேனை ரோம் நகரில் நுழைந்து, போப்புவை கைதியாக்கியது. அவர் நாடுகடத்தப்பட்ட இடத்தில் இறந்தார். அதன் பின் விரைவில் ஒரு புதிய போப்பு தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் அதற்குப்பின் ஒருபோதும் அதன் தலைவர்களால் முன்னிருந்த வல்லமையை பெறமுடியவில்லை. (5) GCTam 303.1
1260 வருடங்கள் நெடுகிலும் சபையின் உபத்திரவங்கள் தொடரவில்லை. தேவன் தமது பிள்ளைகள்மேல் கொண்ட கிருபையினால், அந்த பயங்கரமான சோதனைக்காலத்தைக் குறைத்தார். சபைக்கு நிகழ விருந்த பெரிய உபத்திரவத்தைக்குறித்து முன்சொல்லியபோது, “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” (மத்தேயு 24:22) என்று இரட்சகர் கூறியிருந்தார். சீர்திருத்தத்தின் செல்வாக்கினால் உபத்திரவம் 1798-க்கு முன்பாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. (6) GCTam 303.2
அவ்விரண்டு சாட்சிகளைக் குறித்து, “பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.” “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று தீர்க்கதரிசியும் சங்கீதக்காரனும் அறிவித்தார்கள். இந்த இரண்டு சாட்சிகளும் வேதத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளாம். தேவனுடைய கட்டளைகளின் துவக்கத்திற்கும், நித்தியத்திற்கும் இவ்விரண்டு சாட்சிகளும் முக்கியமான சாட்சிகளாம். இரட்சிப்பின் திட்டத்திற்கும் இவ்விரண்டும் சாட்சிகளாம். பழைய ஏற்பாட்டின் நிழலான பலிகளும் தீர்க்கதரிசனங்களும், வரப்போகும் இரட்சகரைச் சுட்டிக்காட்டின. புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களும் நிருபங்களும், நிழலாலும் தீர்க்கதரிசனங்களாலும் சொல்லப்பட்டபடியே மிகச்சரியாக வந்திருந்த இரட்சகரைக்குறித்துச் சொல்லுகின்றன. (7) GCTam 303.3
“இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திரு நூற்றறுபது நாளளவும்” தீர்க்கதரிசனஞ்சொன்ன இந்தக்காலத்தில் தேவனுடைய சாட்சிகள் வெளிப்படையாக அன்றி மறைவாகவே இருந்தனர். போப்புமார்க்கம் சத்தியவசனத்தை மக்களிடமிருந்து மறைக்கப் பார்த்து, அதன் சாட்சிக்கு முரண்பாடான சாட்சிகளை அவர்கள்முன் வைக்கப் பார்த்தது. மதம் மற்றும் உலக அதிகாரங்களால் வேதாகமம் தடை செய்யப்பட்டபோது, அதன் பிரமாணங்கள் திரித்துக்கூறப்பட்டபோது, அதனிடமிருந்து மக்களுடைய மனதை திருப்புவதற்ககேதுவாக, மனிதர்களாலும் பிசாசுகளாலும் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட்டது. அதன் புனிதமான சத்தியங்களை அறிவிக்க துணிந்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, காட்டிக்கொடுக்கப்பட்டு, உபத்திரவப்படுத்தப் பட்டு, நிலவறைகளில் புதைக்கப்பட்டு தங்கள் விசுவாசத்திற்கு இரத்த சாட்சிகளாக்கப்பட்டனர். அல்லது மலைகளின் மறைவிடங்களுக்கும் பூமியின் குகைகளுக்கும் ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அப்போது இந்த உண்மையான சாட்சிகள் இரட்டு உடுத்தியிருந்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். அப்படியிருந்தும் அவர்கள் 1260 வருடங்கள் முழுவதும் சாட்சி பகர்ந்தனர். அந்த காரிருளான காலங்களில், தேவனுடைய வார்த்தைகளை நேசித்த, அவருடைய கனத்தைக்குறித்து வைராக்கியமாயிருந்த விசுவாசமான மனிதர்கள் இருந்தனர். இந்த உண்மையான ஊழியக்காரர்களுக்கு அவரது சத்தியத்தை அந்தக் காலங்கள் முழுவதும் அறிவிக்க ஞானமும், வல்லமையும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது. (8) GCTam 303.4
“ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர் களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக் களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும்.” மனிதன் தனக்கு தீங்கு இல்லாமல் தேவனுடைய வசனத்தை மிதிக்க இயலாது. இந்த பயங்கரமான தண்டனையின் பொருள் வெளிப்படுத்தின புத்தகத்தின் கடைசி அதிகாரங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்தி லிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்” வெளி. 22 :18,19. (9) GCTam 304.1
தேவன் வெளிப்படுத்தியிருக்கிற, அல்லது கட்டளையிட்டிருக்கிற எதையும் எவ்விதத்திலும் மாற்றுவதற்கு எதிராக அவர் கொடுத்திருக்கிற எச்சரிப்புகள் இவைகள். இந்த பவித்திரமான கண்டிப்பு, தங்களுடைய செல்வாக்கினால் தேவனுடைய கட்டளையை அற்பகாரியமாக எண்ணும்படி மற்றவர்களை நடத்தும் அனைவருக்கும் பொருந்தும். தேவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தாலும் கீழ்ப்படியாவிட்டாலும் அது ஒன்றும் பெரிய காரியமல்ல என்று கவனக்குறைவாகச் சொல்லுகிறவர்களை அவைகள் பயந்து நடுங்கச்செய்யவேண்டும். தெய்வீக வெளிப்பாடுகளுக்கு மேலாக தங்கள் கருத்துக்களை உயர்த்துகிறவர்கள், தங்களுடைய வசதிக் கேற்ப அல்லது உலகத்துடன் ஒத்துப்போவதற்காக வேதவார்த்தைகளின் எளிமையான பொருளை மாற்றுகிறவர்கள் தங்கள்மீது பயப்படத்தக்க பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறார்கள். எழுதப்பட்டிருக்கிற வார்த்தை தேவனுடைய கட்டளை, அது ஒவ்வொரு மனுஷனுடைய குணத்தையும் அளந்து, தவறாத அச்சோதனையால் குறையக்காணப்பட்டதாகக் குறிக்கப் படுகிற அனைவரையும் கண்டிக்கும். (10) GCTam 304.2
“அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லிமுடித்திருக்கும்போது” (முடித்தபோது), இந்த இருசாட்சிகளும் இரட்டுடுத்தினவர்களாக தீர்க்கதரிசனம் உரைத்தது கி.பி.1798- ல் முடியவேண்டியதாக இருந்தது. அவைகள் தங்கள் பணியை முடிக்கும் நேரத்தை நெருங்கியபோது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள வல்லமை இவைகளுடன் யுத்தம்செய்ய வேண்டியதாக இருந்தது. ஐரோப்பாவிலிருந்த அநேக நாடுகளில், சபையிலும் நாட்டிலும் ஆட்சிசெய்திருந்த வல்லமைகள் நூற்றாண்டுகளாகப் போப்புமார்க்கத்தின் வழியாக சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இங்கு சாத்தானுடைய வல்லமையின் ஒரு புதிய வெளிப்பாடு காட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. (11) GCTam 305.1
வேதாகமத்தின்மேல் பக்தியாக இருப்பதுபோல் பாவித்து அறியப்படாத மொழியில் அதைப் பூட்டிவைப்பதும், மக்களிடம் இருந்து மறைத்துவைப்பதும் ரோம மார்க்கத்தின் கொள்கையாக இருந்தது. (அவர்களது வேதவாசிப்பும் ஆராதனையும் ஜெபங்களும் நம்நாட்டு மக்கள் அறியாத லத்தீன் அல்லது சீரியமொழிகளில் சமீபகாலம்வரை வழக்கத்தில் இருந்தன என்பதை ரோமன் கத்தோலிக்கர்களே ஒப்புக்கொள்ளுவார்கள்). அதன் ஆளுகையில் சாட்சிகள் இரட்டு உடுத்தினவர்களாக தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் வேறொரு வல்லமை—பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம்—தேவனுடைய வார்த்தைக்கு எதிராக வெளிப்படையாக பகிரங்கமான யுத்தம்செய்ய எழும்பவேண்டியதாக இருந்தது.(12) GCTam 305.2
அந்த சாட்சிகள் கொலைசெய்யப்பட்ட, அவர்களது உடல்கள் கிடந்த “மகா நகரம்”, “எகிப்து என்று ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்.” வேதாகம வரலாற்றில் காணப்படும் சகல நகரங்களிலும், எகிப்து தேசமானது ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்தை மிகத் தைரியத்துடன் மறுத்து, அவரது கட்டளைகளைத் தடுத்தது. எகிப்தின் அரசன் செய்ததுபோல, வேறெந்த அரசனும் ஒருபோதும் பரலோகத்தின் அதிகாரத்திற்கு எதிராக பகிரங்கமாகவும், அக்கிரமமாகவும் கலகம்செய்யத் துணியவில்லை. மோசேயினால் கர்த்தரின் பெயரில் பார்வோனுக்குத் தூது கொடுக்கப்பட்டபோது, பார்வோன்: “நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை” (யாத். 5:2) என்று பெருமையாக பதில் கூறினான். இதுதான் கடவுள் இல்லை என்கிற நாத்திகவாதம். எகிப்து என்று குறிப்பிடப்படும் அந்த நாடு(பிரான்ஸ் நாடு), அதைப்போன்றே ஜீவனுள்ள தேவனின் உரிமைகளை மறுக்கும் குரலை எழுப்பி, அதைப்போன்றே நம்பிக்கையின்மையின் ஆவியையும், கீழ்ப்படியாமையையும் வெளிக்காட்டும். அந்தப் பெரிய நகரம், ஆவிக்குரிய விதத்தில் சோதோமுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தேவப்பிரமாணங்களை மீறும் செயல்களினால், குறிப்பாக விபசாரம் செய்வதினால், அதன் துன்மார்க்கம் வெளிக்காட்டப்பட்டது. வேத வசனத்தில் காணப்படும் தீர்க்கதரிசனக்குறிப்புகளை நிறைவேற்றுவதற்கு, இந்தப் பாவமும் அந்த நாட்டின் குறிப்பான தனித்தன்மையாக இருக்கவேண்டும். (13) GCTam 305.3
தீர்க்கதரிசியின் வார்த்தைகளின்படி, கி.பி.1798-கு சற்றுமுன், சாத்தானால் உண்டாகி, அவனுடைய சுபாவத்தை உடைய ஒரு வல்லமை வேதாகமத்துடன் போரிட எழும்பும். தேவனுடைய இரண்டு சாட்சிகளின் சாட்சியங்களும் மௌனப்படுத்தப்படவேண்டிய அந்த நாட்டில், பார்வோனின் நாத்திகமும், சோதோமின் விபசாரமும் காணப்பட்டிருக்கும். (14) GCTam 306.1
இந்தத் தீர்க்கதரிசனத்தின் மிகச் சரியான, குறிப்பான நிறைவேறுதலை பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் காணலாம். நாகரீகத்தில் பிறந்து கற்றறிந்த ஒரு கூட்டம், ஐரோப்பாவின் நகரங்களில் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றை ஆளும் உரிமையை அனுமானித்துக்கொண்டு, மனிதனின் ஆத்துமா பெற்றுக்கொள்ளுகின்ற மிகவும் பக்திவிநயமான சத்தியத்தை, ஒன்றுபட்ட தனது சத்தத்தை உயர்த்தி, மறுத்து, தெய்வத்தையும் அவரை ஆராதிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஏகமனதாக மறுத்ததை உலகம் முதல் தடவையாக கேள்விப்பட்டது. — Sir Walter Scott, Life of Napoleon, vol. 1, ch. 17. (15) GCTam 306.2
பிரபஞ்சத்தை படைத்தவருக்கெதிராகப் பகிரங்கமாகக் கலகம்செய்ய தன் தரத்தை உயர்த்தின ஒரே நாடு பிரான்ஸ்தான் என்பதற்கான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் உயிருள்ளவையாக உள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயினிலும் இன்னும் மற்ற இடங்களிலும் தேவதூஷணம் சொல்லும் ஏராளமானவர்களும் கடவுள் நம்பிக்கையற்ற ஏராளமானவர்களும் இருந்திருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தனது சட்டமன்றத்தின் தீர்மானத்தினால், கடவுள் இல்லை என்று அறிவித்ததாலும், அதன் தலைநகரிலிருந்த குடிமக்கள் அனைவரும் வேறிடங்களில் இருந்த மிகப்பெரும்பான்மையினரும், ஆண்களைப்போலவே பெண்களும் அவ்வறிவிப்பை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடினதாலும் உலகவரலாற்றில் பிரான்ஸ் மட்டும் ஒரு தனி நாடாக விலகி நிற்கிறது. -Blackwood’s Magazine, November, 1870. (16) GCTam 306.3
சோதோமை குறிப்பிட்டுக்காட்டிய தனித்தன்மையையும் பிரான்ஸ் வெளிக்காட்டினது. சமவெளியில் இருந்த நகரங்களின்மீது (சோதோம், கொமோரா அழிவைக் கொண்டுவந்த சன்மார்க்க நெறிகளின் கீழான தன்மையும் கறைகளும் கொண்ட ஒரு சீர்கேடு புரட்சியின்போது பிரான்ஸில் காணப்பட்டது. தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடியே, பிரான்ஸிலிருந்த நாத்திகத்தையும் விபசாரத்தையும் ஒருமித்து: “மதத்தைப் பாதிக்கும் இந்தச் சட்டங்கள், மனிதர்களால் ஏற்படுத்தப்படக்கூடிய மிகப் பரிசுத்த அமைப்பான திருமண ஐக்கியத்தை சமுதாயத்தை மிகப்பலமாக ஒருங்கிணைக்க வழிநடத்துகிற நிரந்தரத் திருமண ஐக்கியத்தை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்களின் விருப்பத்திற்குத் தக்கபடி எந்த நேரத்திலும் இணையவும் பிரிந்துபோகவும்தக்கதான் சாதாரண சமூக ஒப்பந்தமாக குறைத்துப்போட்ட சட்டங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தது.... குடும்ப வாழ்க்கையின் அழகிய நேர்த்தியான நிரந்தரமானவைகளை அழித்து, தலைமுறை தலைமுறைக்கும் அதைத் தொடரச்செய்யும்படியான திட்டந்தீட்டும் பணியில் பிசாசுகள் ஈடுபட்டால், திருமண உறவைக் கீழான நிலைக்குக் கொண்டுவருவதைவிட அதிகப் பலன் தரும் ஒரு திட்டத்தைக் கண்டுபிடித்திருந்திருக்க முடியாது.... விகடமான பேச்சுக்களுக்காக புகழ்பெற்றிருந்த சோபி அர்னால்ட் என்னும் நடிகை, குடியரசு திருமணத்தை ‘விபசாரத்தின் திவ்ய நற்கருணை’ என்று விவரித்தார்” என்று வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.-Scott, vol.1, ch. 17. (17) GCTam 307.1
“அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார்.'‘ தீர்க்கதரிசனத்தின் இந்தக்குறிப்பும் பிரான்ஸ் நாட்டினால் நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்துவிற்கு எதிரான பகைமையின் ஆவி இவ்வளவு தெளிவாக வேறு எந்ந நாட்டிலும் வெளிக்காட்டப்படவில்லை. கசப்பும் கொடூரமுமிக்க எதிர்ப்பை வேறு எந்ந நாட்டிலும், சத்தியம் சந்திக்கவில்லை. சுவிசேஷத்தை அறிக்கை செய்தவர்களின்மீது பிரான்ஸ் நடத்திய உபத்திரவத்தில், கிறிஸ்து அவரது பின்னடியார்களின் வடிவில் சிலுவையில் அறையப்பட்டார். (18) GCTam 307.2
மீண்டும் மீண்டும் பல நுாற்றாண்டுகளாக பரிசுத்தவான்களின் இரத்தம் சிந்தப்பட்டது. தேவனுடைய வார்த்தைகளுக்காகவும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சிக்காகவும், வால்மென்னியர்கள், விட்மோண்ட் மலையின்மீது அவர்களது உயிர்களைவிட்டபோது, பிரான்ஸ் நாட்டின் அல்பீஜென்சஸ் என்னும் அவர்களது சகோதரர்களால், சத்தியத்திற்காக அதேபோன்ற சாட்சி பகரப்பட்டது. சீர்திருத்தத்தின் நாட்களில் அதன் சீடர்கள் பயங்கரமான சித்திரவதையுடன் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அரசன், மேன்மக்கள், உயர்குலப் பெண்கள், மென்மையான கன்னியர்கள், நாட்டின் பெருமையும் வீரமுமிக்கவர்கள் ஆகியவர்களின் கண்களுக்கு விருந்தாக, இயேசுவின் இரத்தசாட்கிகள் தங்களது வேதனைகளைச் சகித்தனர். மனித இருதயம், மிகவும் பரிசுத்தமானது என்று பற்றிக்கொண்டிருக்கும் உரிமைகளுக்காகப் போராடிய தைரியமிக்க ஹுக்நாட்டுகள் தீவிரமான பல போர்க்களங்களில் தங்களது இரத்தத்தைச் சிந்தி இருந்தனர். புரொட்டஸ்டாண்டுகள் சட்ட விரோதிகளாக எண்ணப்பட்டு, அவர்களது தலைக்கு ஒரு விலை நிச்சயிக்கப்பட்டு, அவர்கள் வனவிலங்குகளைப்போல வேட்டையாடப்பட்டிருந்தனர். (19) GCTam 308.1
வனாந்திரத்திலுள்ள சபை எனப்பட்ட பண்டைய கிறிஸ்தவர்களின் பின்சந்ததியினரில் சிலர், பதினெட்டாம் நூற்றாண்டில் இன்னும் பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள மலைகளில் மறைந்து வாழ்ந்திருந்து, முற்பிதாக்களின் விசுவாசத்தை காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இரவுநேரங்களில் மலைச்சரிவுகளிலோ தரிசுநிலங்களிலோ ஒன்றுசேர முயன்றபோது குதிரைப்படை வீரர்களால் துரத்தப்பட்டனர். அல்லது வாழ்க்கை முழுவதிலும் பாய்மரக் கலங்களில் அடிமைகளாக இருக்கும்படி இழுத்துச்செல்லப் பட்டிருந்தனர். பிரெஞ்சு நாட்டின் மிகத் தூய்மையானவர்களும் மிகவும் பண்பட்டவர்களும் மிகுந்த நுண்ணறிவுள்ளவர்களும், கொள்ளைக்காரருடனும் கொலைகாரருடனும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, பயங்கரமான உபத்திரவத்திற்குள்ளானார்கள். (See Wylie, b. 22, ch. 6.) மற்றவர்கள் ஆயுதமற்றவர்களாக உதவியற்றவர்களாக முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தபோது, கொடூரமாகச் சுடப்பட்டு (ஒருவிதத்தில் இரக்கமாக) நடத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான முதியவர்களும் தற்காப்பில்லாத பெண்களும் சிறுபிள்ளைகளும் அவர்கள் கூடியிருந்த இடத்தில் கொல்லப்பட்டனர். அவர்கள் கூடியிருந்த மலைப்பகுதிகளையும் காடுகளையும் கடக்கும்போது, நான்கு அடிக்கு ஒன்று என்னும் வீதத்தில், புல்வெளிகளில் இறந்தவர்களின உடல்கள் சுருண்டு கிடந்ததையும், மரங்களில் தூக்கப்பட்டவர்களின் உடல்கள் தொங்கிக் கொண்டிருந்ததையும் காண்பது அபூர்வமாயிருக்கவில்லை. பட்டயத்தினாலும் கோடரியினாலும் விறகுக்கட்டைகளினாலும் பாழாக்கப்பட்டுப்போன அவர்களது நாட்டுப்புறம் விசாலமான துயரமிக்க வனாந்திரமாக மாற்றப்பட்டது. இந்த அக்கிரமங்கள் இருண்ட காலங்களில் நிகழ்த்தப்படாமல், விஞ்ஞானம் பயிற்றுவிக்கப்பட்டிருந்த போது, எழுத்துக்கள் பரவியிருந்தபோது, மிகச்சிறந்தவர்களால் நீதிமன்றமும், தெய்வீக அன்பையும் சாந்தகுணத்தையும் ஏற்றுக்கொண்டிருந்த கற்றறிந்த சொல்வன்மைமிக்க மனிதர்களால் தலைநகரமும் நிறைந்திருந்த பிரகாசமான காலத்தில் நிகழ்ந்தது.--Ibid., b. 13, ch. 6. (20) GCTam 308.2
பயங்கரமான நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பேய்த்தனமான செயல்களின் நடுவில், குற்றங்களின் கறுப்புப்பட்டியலில் மிகவும் கறுப்பான தும் சகிக்க முடியாததுமான நிகழ்ச்சி, பரிசுத்த பர்த்தலோமியோவின் படுகொலையாகும். கோழைத்தனமும், கொடுமையுமிக்க இந்த மனித கொலையின் காட்சியை பயம்நிறைந்த நடுக்கத்துடன் உலகம் இன்றும் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கக் குருமார்களாலும் சந்நியாசிகளாலும்ஏவிவிடப்பட்ட பிரான்ஸ்நாட்டின் அரசன், அந்தப்பயங்கரமான வேலைக்குக் கைகொடுத்தான். அரண்மனையிலிருந்த பெரிய மணியிலிருந்து நடு இரவில் உண்டான ஓசை அந்தப் படுகொலையின் குறியாக இருந்தது. தங்களது அரசரின் மேன்மையில் நிச்சயமான நம்பிக்கையுடன் தங்கள் வீடுகளில் அமைதியாக நித்திரை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான புரொட்டஸ்டா:ண்டுகள் ஒரு எச்சரிப்புமின்றி இழுத்துக்கொண்டுவரப்பட்டு, மிகக் கடுமையாகக் கொலைசெய்யப்பட்டனர். (21) GCTam 309.1
ரோமன் கத்தோலிக்க வெறியர்களின் உருவில் சாத்தான் அந்த சேனையை நடத்தினான். கிறிஸ்து எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து தமது மக்களை நடத்திச்சென்றதுபோலவே இரத்தசாட்சிகளைப் பெருக்கும் இந்த பயங்கரமான பணியில், அவனுக்குக் கீழானவர்களின் காணமுடியாத தலைவனாக சாத்தான் இருந்தான். பாரிஸ் நகரில் இந்தக் கொலைபாதகம் ஏழு நாட்கள் தொடர்ந்தது. அதின் முதல்மூன்று நாட்கள் கற்பனைக்கடங்காத பயங்கரமான ஆவேசத்துடன் நிகழ்ந்தது. அவை பாரிஸ் நகருக்குள் மட்டும் அடங்காமல், அரசனின் விசேஷமான கட்டளையினால், புரொட்டஸ்டாண்டுகள் காணப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் பரவியது. வயதும், ஆண்பெண் என்ற பாகுபாடும் மதிக்கப்படவில்லை. குற்றமற்ற பச்சிளங் குழந்தைகளையும் முடிநரைத்த முதியவர்களையும் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. மேலானவர்களும் விசவசாயிகளும், வயதானவர்களும், வாலிபர்களும், தாயும் சேயும் ஒன்றாகச் சேர்த்து வெட்டி வீழ்த்தப்பட்டனர். இந்தச் சங்காரம் பிரான்ஸ் முழுவதிலும் இரண்டு மாதங்கள் தொடர்ந்தது. அந்த நாட்டின் மலர்களாயிருந்த எழுபதினாயிரம்பேர் அழிந்தனர். (22) GCTam 309.2
“இந்தப் படுகொலையின் செய்திகள் ரோமை அடைந்தபோது குருமார்களின் களிப்பிற்கு எல்லையே இருக்கவில்லை. செய்தியைக் கொண்டுவந்த தூதுவனுக்கு லோரைனுடைய கர்தினால் ஆயிரம் காசுகளை பரிசளித்தார். பரிசுத்த ஏஞ்சலோவின் கோட்டையின் பீரங்கிகள் மகிழ்ச்சிமிக்க வீர வணக்கம் செலுத்தின. ஒவ்வொரு கோபுரத்திலிருந்தும் மணிகள் முழங்கின. இரவு முழுவதும் சொக்கப்பானைகள் கொளுத்தப்பட்டன. போப்பு கிரகோரி, தனது கர்தினால்களும் குருமார்களும் புடைசூழ பரிசுத்த லுயிஸ பின் ஆலயத்தை நோக்கி காட்சிதரும் ஒரு பெரும் ஊர்வலத்தை நடத்தினார். அங்கு லோரைன் என்னும் கர்தினால் ‘தெ தீயம்’ (Te Deum) என்கிற மந்திரத்தை ஓதினார். பிரான்ஸில் செத்துக்கொண்டு இருந்தவர்களின் குரல், ரோம் நகரமன்றத்தின் மேன்மைக்கு இசைவாக இருந்தது. மகிமைமிக்க இந்த கொலைபாதகத்தை நினைவூட்டும் ஒர் பதக்கம் அடிக்கப்பட்டது. பரிசுத்த பர்த்தலோமியாவின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம் இன்றும் வாட்டிக்கனில் உள்ளது. சார்லஸ் மன்னனின் கடமை உணர்வுமிக்க நடத்தைக்கான நன்றியைக்காட்டுவதில் ஆர்வமிக்க போப்பு, அவருக்கு ஒரு தங்க ரோஜா மலரை அனுப்பினார். இப்படுகொலை நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, மிகவும் பரிசுத்தமான தந்தை அந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டு கடவுளுக்கும் பரிசுத்த லூயிஸுக்கும் நன்றி சொன்ன—முழுவதும் ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிறைந்திருந்த அந்த நாளைக்குறித்து ஒரு பிரெஞ்சு பாதிரியார் பிரசங்கித்த பிரசங்கத்தை கிரகரி அமைதியாகக் கேட்டார்.” ர்நசெல றூாவைநஇ ஆயள்ளயஉசந ழக ளுவ. டீயசவாழடழஅநற, ch. 14, par: 34.(23) GCTam 310.1
“போப்பு பதிமூன்றாவது கிரகரி ஹுகிநாட்டுகளின் விதியைக்குறித்தச் செய்தியை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் பெற்றார். அவரது மனதின் விருப்பம் நிறைவேறிற்று. ஒன்பதாம் சார்லஸ் அவருக்குப் பிடித்தமான மகன். ரோம் சந்தோஷத்தால் களிகூர்ந்தது. புனித ஏஞ்சலோ கோட்டையின் பீரங்கிகள் மகிழ்ச்சியான வணக்கம் செலுத்தின. எல்லா கோபுரங்களிலிருந்தும் மணிகள் ஒலித்தன. இரவு முழுவதும் தீ எரிந்துகொண்டிருந்தது. கர்தினால்களோடும் குருக்களோடும் போப் கிரகரி புனித லூயிஸ் ஆலயத்திற்கு சிறப்பான வரிசையில் சென்றார். அங்கே லொரைனுடைய கர்தினால் ‘தெ தீயம்’ (Te Deum) ஓதினார். இந்த மகிமையான அழிவை நினைவில் கொள்ளும்படி ஒரு பதக்கம் செய்யப்பட்டது. புனித பர்த்தொலோமியாவின் முக்கிய சம்பவங்களை குறிக்கும்படி ஒரு படம் வரையப்பட்டு இன்றைக்கும் வாட்டிகனில் இருக்கிறது. சார்லஸின் கடமைநிரம்பிய செயலுக்கான நன்றியைக் காட்டும்வகையில் போப்பு அவனுக்கு ஒரு தங்க ரோஜாவை அனுப்பினார். ரோமின் பிரசங்க பீடங்களிலிருந்து திறமைமிக்க பேச்சாளர்கள் சார்லஸ் காத்தரைன் மற்றும் அவர்களுடன் ஒத்துழைத்தவர்களை போப்பு மார்க்க சபையின் புதிய ஸ்தாபகர்கள் என்று கொண்டாடிப் பேசினார்கள்.” (24) GCTam 310.2
பரிசுத்த பர்த்தொலோமியாவின் கொலைபாதகத்தை ஏவின அதே தலைமையான ஆவி, புரட்சியின் காட்சிகளையும் நடத்தினது. இயேசு கிறிஸ்து ஒரு மோசடிக்காரர் என அறிவிக்கப்பட்டார். கிறிஸ்துவைப் பொருள்படும்படி “அந்த மோசமானவனை நசுக்குங்கள்” என்று ஊர்வலம்சென்ற நாத்திகர்கள் குரல் எழுப்பினர். பரலோகத்திற் கெதிரான துணிவான தேவதூஷணமும் அக்கிரமமிக்க கெட்ட செயல்களும் கைகோர்த்துச் சென்றன. மனிதர்களில் மிகவும் கீழானவர்களும், கொடூரமான தீய பழக்கங்களினால் மிகவும் தூரமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த இராட்சத குணமுடையவர்களும் மிகவும் உயர்த்தப்பட்டனர். இவை அனைத்தினாலும் சாத்தானுக்கு மேலான வணக்கம் செலுத்தப்பட்டது. கிறிஸ்து அவரது குணங்களான சத்தியம், தூய்மை, சுயநலமற்ற அன்பு ஆகியவைகளோடு சிலுவையில் அறையப்பட்டார். (25) GCTam 311.1
“பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை ஜெயித்து அவர்களைக் கொன்றுபோடும்” (வெளி. 11:7). புரட்சியின்போது, பிரான்ஸ் நாட்டை ஆண்ட பயங்கரத்தின் ஆட்சி-நாத்திக வல்லமை-வேதாகமத்திற்கு எதிராக உலகம் ஒருபோதும் கண்டிராத ஒரு போரை நடத்தியது! தேசிய மன்றத்தினால் தேவனுடைய வார்த்தை தடைசெய்யப்பட்டது! வேதாகமங்கள் சேகரிக்கப்பட்டு, பொது இடங்களில் மிகுந்த பரிகாசத்துடன் எரிக்கப்பட்டன! தேவப்பிரமாணம் காலின்கீழிட்டு மிதிக்கப்பட்டது! வேதாகம அமைப்புகள் நீக்கம்செய்யப்பட்டன! வாராந்திர ஓய்வுநாள் ஒருபக்கமாக நீக்கிவைக்கப்பட்டு, ஒவ்வொரு பத்தாவது நாளும் வெறியாட்டத்திற்கென்றும் தேவதூஷணத்திற்கென்றும் அதற்குப் பதிலாக அர்ப்பணிக்கப்பட்டது. திருமுழுக்கும் திருவிருந்தும் தடைசெய்யப்பட்டன! இறந்தவர்களை புதைக்குமிடங்களில் ஒட்டப்பட்ட தெளிவாகக் காணக்கூடிய அறிவிப்புகள் மரணம் ஒரு நித்தியமான உறக்கம் என்று அறிவித்தன. (26) GCTam 311.2
தேவனுக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் அல்ல தவறின் ஆரம்பம் என்று சொல்லப்பட்டது. சுதந்திரம், நாடு என்பவை தவிர மற்ற சமயசம்பந்தமான தொழுகைகள் யாவும் தடைசெய்யப்பட்டன. பாரிஸ் நகரின் பேராயர் ஆணவமாக, இகழ்ச்சியான, கேலிக்கூத்தான, இதுவரை தேசிய பிரதிநிதித்துவத்திற்கு கொண்டுவராத முக்கியமான பகுதியை செயலாற்றுவதற்காக முன்கொண்டுவரப்பட்டார். அவர் இதுவரை அநேக வருடங்களாகக் கற்பித்திருந்த மதம், எல்லாவகைகளிலும் குருமார்களின் உபாயமே, அதற்கான அஸ்திவாரம் வரலாற்றிலோ, பரிசுத்த சத்தியத்திலோ இல்லை என்று அந்தக் கூட்டத்தின் முன் அறிக்கை செய்யும்படி ஒரு பெரும் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்டார். தேவ ஆராதனைக்கென்று தன்னைப்பிரதிஷ்டை செய்த கடவுள் இருக்கிறார் என்பதை, பக்திவிநயத்துடனும் மிகத் தெளிவாகவும் இல்லையென்று அறிவித்து, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், சன்மார்க்கம் ஆகியவைகளுக்கு மரியாதை செலுத்த தனது எதிர்காலம் முழுவதையும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். அதன் பின், தனது சமயப்பதவி சம்பந்தமான அலங்காரங்கள் அனைத்தையும் கழற்றி, ஒரு மேஜையின்மீது வைத்துவிட்டு, சகோதரத்தன்மையைக் காட்டும் தழுவலை அந்த மாநாட்டின் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்தக் குருவானவரின் முன்மாதிரியை, அநேக மருளவிழுந்த குருமார்களும் பின்பற்றினர்.-Scott, vol. 1, ch. 17. (27) GCTam 311.3
“அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப் படுத்தினபடியால், அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்” (வெளி. 11:10). கடவுள் இல்லையென்னும் பிரான்ஸ், கடிந்துகொள்ளும் தேவனுடைய இரு சாட்சிகளின் குரலையும் மௌனப் படுத்தியிருந்தது. அதன் தெருக்களில் சத்தியவார்த்தை செத்துக்கிடந்தது. தேவப்பிரமாணம் அவசியப்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளை வெறுத்தவர்கள் வெற்றியடைந்தவர்களாயிருந்தனர். மனிதர்கள் பரலோகத்தின் அரசரை பகிரங்கமாக அவமதித்தனர். கடவுளுக்கு எப்படித் தெரியும், உன்னதமான வரிடம் அறிவு இருக்கிறதா? என்ற பண்டைய பாவிகள் கூறியதுபோல் அவர்களும் குரரெலழுப்பினார்கள்! (28) GCTam 312.1
புதிய ஒழுங்கின் குருமார்களில் ஒருவர் நம்பமுடியாத அளவிற்கு, அதிகமான தேவதூஷணமான துணிச்சலுடன், “தேவனே நீர் இருப்பது உண்மையானால், காயப்பட்ட உமது பெயருக்காக பழிவாங்கும். நான் எதிர்ப்பைச் சவாலாக்குகிறேன். நீர் மௌனமாயிருக்கிறீர். உமது இடிமுழக்கங்களை அனுப்ப உமக்குத் துணிவில்லை. இதற்குப்பின்பும் நீர் இருக்கிறீர் என்பதை யார் நம்புவார்கள்? என்றார்?”—Lacretelle, History, vol. 11, p. 309. “அவருடைய சத்தத்திற்கு நான் கீழ்ப்படிவதற்கு யெகோவா யார்? நான் யேகேவாவை அறியேன்” என்ற பார்வோனின் எதிரொலியாகவே அது ஒலித்தது! (29) GCTam 312.2
“தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்”-சங்கீதம் 14:1. சத்தியத்தைத் திரித்துக் கூறுபவர் களைப்பற்றிக் கர்த்தர்: “அவர்களுடைய மதிகேடு எல்லோருக்கும் வெளிப்படும்” ( 2 தீமோ. 3:9) என்று அறிவிக்கிறார். நித்திய காலமாயிருக்கும் உன்னதமானவரை ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க பிரான்ஸ் மறுத்த கொஞ்ச காலத்தில் ஒரு பெண்ணின் உருவில் அறிவு என்னும் தேவதையை வணங்கும் கீழ்த்தரமான விக்கிரக ஆராதனையைச் செய்ய அது கீழிறங்கினது. அதுவும் அந்த நாட்டின் பிரதிநிதிகளின் மன்றத்தில் மிக உயர்ந்த சமூகச் சட்டநிபுணர்களால் நடந்தது. பைத்தியக்காரத்தனமான இந்தக் காலத்தில் நிகழ்ந்த சடங்குகளில் ஒன்று, அர்த்தமற்ற தன்மையுடன் சொந்த பக்தியின்மைக்குப் போட்டியில்லாத சான்றாக இருக்கிறது. நகர சபை அங்கத்தினர்கள் முன்செல்ல, அதற்குப்பின் ஒரு இசைக்குழு பக்திவிநயத்துடன் சுதந்திர கீதத்தைப் பாடியவாறு அவர்களுக்குப் பின்செல்ல, அவர்களது தொழுகையின் பொருளாக, அறிவுத்தேவதை என்னும் முகத்திரையிட்ட ஒரு பெண் கொண்டுவரப்பட்டாள். மேடைக்குக் கொண்டுவரப்பட்டு, பெரும் சடங்காச்சாரங்களுடன் அவளுக்கிடப்பட்டிருந்த முகத்திரை நீக்கப்பட்டு, (நடன மன்றத்தில் நடனமாடியிருந்த நாட்டியக்காரி என்று பொதுவாகக் கருதப்பட்டிருந்த அந்தப் பெண்) தலைவரின் வலதுபுறத்தில் அமர்த்தப்பட்டாள். அவர்கள் வணங்கிய பகுத்தறிவைக் குறிப்பிட்டுக்காட்டும் மிகப்பொருத்தமான இந்தப் பெண்ணுக்கு பிரான்ஸ் நாட்டின் அந்த தேசிய மாநாடு பொது ஆராதனை செலுத்தியது!? (குறிப்பு: பகுத்தறிவுதான் கடவுள் என்று கூறி, அந்தப் பெண்ணைப் பகுத்தறிவின் தேவதை என்று அடையாளப்படுத்தி, இவ்விதமாக அறிவுதான் கடவுள் என்று கூறி, அவர்கள் அறிவைத் தொழுதனர்). (30) GCTam 313.1
பக்தியற்ற பரிகாசத்திற்குரிய இந்த நடிப்பானது ஒரு வடிவை கொண்டிருந்தது. புரட்சியின் சகல விதமான உயர்வுகளுக்கும் அந்த நாட்டுமக்கள் சமமாக உள்ளனர் எனக்காட்ட, அந்த நாட்டில் அவர்கள் விரும்பிய பொது இடங்களில் அறிவுத்தேவதையின் மாற்றுருவை நிறுவினார்கள்.—Scott, vol. 1, ch. 17. (31) GCTam 313.2
“சட்டமன்ற மதவெறிக்கோட்பாடு அதன் பிடியை இழந்துவிட்டது. அது பகுத்தறிவிற்கு இடம்கொடுத்துவிட்டது. நாம் அதன் ஆலயங்களை விட்டுவிட்டு அவைகளைப் புதிதாக வடிவமைத்து இருக்கிறோம். இன்று அதன் கோதிக்கூரையின் கீழ் (கிழக்கு ஜெர்மனிக் கலாச்சாரக் கூரையின்கீழ்) மிகத் திரள்கூட்டமான மக்களாகக் கூடியிருக்கிறோம். அது முதன்முதலாக சத்தியத்தின் குரலை, திரும்ப எதிரொலிக்கச் செய்யும். அங்கு பிரான்ஸ் நாடு, சுதந்திரம் பகுத்தறிவு ஆகியவைகளின் உண்மையான ஆராதனையை நடத்தும். அங்கு குடியரசின் படைக்குப் புதிய முன்னேற்றத்தை வடிவமைக்கும் புதிய தீர்மானத்தை நாம் செய்வோம். அங்கு நாம் பகுத்தறிவிற்குப் பொருந்தாத அசையமாட்டாத சிலைகளை ஆராதிப்பதை நீக்கிவிட்டு, இந்த அசையும் உருவை சிருஷ்டிப்பின் உன்னத வடிவை தொழுவோம்” என்று பகுத்தறிவு ஆராதனையை அறிமுகம் செய்த பேச்சாளர் கூறினார்.-M. A. Thiers, History of the French Revolution, vol. 2, pp. 370, 371. (32) GCTam 313.3
அந்த மாநாட்டிற்குள் அந்த தேவதை கொண்டுவரப்பட்டபோது, அப்பெண்ணை அப்பேச்சாளர் கரம்பிடித்து, அந்த மன்றத்தை நோக்கித்திரும்பி, “சாகும் தன்மை உள்ளவர்களே, உங்களுடைய பயத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட வல்லமையற்ற ஒரு கடவுளின் இடி முழக்கங்களுக்குமுன் அஞ்சுவதை நிறுத்துங்கள். இனிமேல் பகுத்தறிவைத்தவிர தெய்வத்தை அறிக்கையிடாதீர்கள். அதன் மேன்மையும் தூய்மையுமிக்க உருவை உங்கள் முன் நான் சமர்ப்பிக்கிறேன். விக்கிரகங்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்றால், இதைப்போன்றதன் முன் பலிசெலுத்துங்கள்... அறிவுக்கு இடப்பட்டிருந்த திரையை நீக்கிய, சுதந்தரத்தின் கம்பீரமான பேரவையின்முன் பணிந்துகொள்ளுங்கள்” என்றார்.(33) GCTam 314.1
தலைவரால் தழுவப்பட்டபின், அந்தத் தேவதை(பெண்) அழகிய ஒரு சப்பரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டு, நெருக்கமான கூட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டு, தெய்வ ஸ்தானத்தில் அமர்த்தப்படும்படி, நாட்டர்டேம் தேவாலயத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டாள். அதன்பின், அவள் பீடத்தின்மேல் உயர்த்தப்பட்டு, அங்கு குழுமியிருந்த அனைவருடைய போற்றுதலையும் ஏற்றுக்கொண்டாள்.--Alison, vol. 1, ch. 10. (34) GCTam 314.2
இதற்குப்பின் சற்று காலத்தில் வேதாகமம் பொது இடத்தில் எரிக்கப்பட்டது. பெயர்பெற்ற அருங்காட்சியகத்துக் கூட்டத்தினர், ஒரு கோலின் நுனியில் அரைகுறையாக எரிந்திருந்த பல பத்தகங்களுடன் எரிக்கப்பட்டு மீந்திருந்த பழைய-புதிய ஏற்பாடுகளாகிய திருமறை நூல்களையும், பாடல் புத்தகங்களின் மீதங்களையும் நெருப்பிலிட்ட போது, “மனித இனம் நடைமுறைப்படுத்தும்படி செய்யப்பட்ட சகலவிதமான முட்டாள்தனங்கள்தான் இவைகள்” என்று அந்தத் தலைவர் கூறினார்.-Journal of Paris, 1793, No. 318. Quoted in Buchez-Roux, Collection of Parliamentary History, vol. 30, pp. 200, 201. (35) GCTam 314.3
இந்தப்பணியைப் போப்புமார்க்கமானது ஆரம்பித்தது. அதை நாத்திகம் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. சமூக, அரசியல் சமய நிலைமைகளை உண்டுபண்ணிய ரோம மார்க்கத்தின் கொள்கைகள் பிரான்ஸ் நாட்டை, அதன் அழிவை நோக்கி விரைவுபடுத்தியது. அத்துமீறிய இந்தச்செயல்களுக்கான குற்றச்சாட்டானது, உண்மையில் அரியணையின்மீதும் சபையின்மீதும் சுமத்தப்படவேண்டும் என்று புரட்சியின் கொடுமைகளைப்பற்றி ஒரு எழுத்தாளர் கூறுகிறார். மிகவும் சரியான நியாயத்தீர்ப்பின்படி அவை சபையின்மீது சுமத்தப்பட வேண்டும். போப்புமார்க்கம் அரசர்களின் மனங்களில், “சீர்திருத்தம் கிரீடத்தின் எதிரி நாட்டின் சமாதானத்திற்கும் இசைவிற்கும் சாவைக்கொண்டுவரும் வேற்றுமையின் மூலக்கூறு” என்று விஷமுட்டியது. ரோமின் யுகம்தான் இப்படிப்பட்ட வழிகளில் சிங்காசனத்திலிருந்து புறப்பட்ட கசப்புமிக்க ஒடுக்குதலையும் மிகத்துணிகரமான கொடுமைகளையும் தூண்டிவிட்டது. (36) GCTam 314.4
சுதந்திரத்தின் ஆவி வேதாகமத்துடன் சென்றது. எங்கெல்லாம் சுவிசேஷம் ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அங்கெல்லாம் மக்களின் மனங்கள் விழித்தெழுந்தன. அறியாமை, தீயபழக்கங்கள், மூட நம்பிக்கைகளால் தங்களை அடிமைகளாக வைத்திருந்த விலங்குகளை, அவர்கள் தூக்கியெறியத் தொடங்கினர். மனிதர்களைப்போல் சிந்திக்கவும் செலாற்றவும் தொடங்கினர். அரசர்கள் அதைக்கண்டு, அவர்களது எதேச்சாதிகாரத் தன்மைக்காக நடுங்கினர். (37) GCTam 315.1
பொறாமையின் பயங்கரங்களை எரியச்செய்வதில் ரோமன் கத்தோலிக்க சபை நிதானமாக இருக்கவில்லை. 1525-ம் வருடத்தில் பிரான்ஸ் நாட்டின் அரசப் பிரதிநிதியைப்பார்த்து போப்: “புரொட்டஸ்டாண்டுமார்க்கத்தின் இந்தப் பயித்தியக்காரத்தனம் மதத்தைமட்டும் அழிப்பதோடு, சகல கர்த்தத் துவங்களையும் மேன்மைகளையும் சட்டங்களையும் ஒழுக்கங்களையும் அவைகளின் அருகிலுள்ள பதவிகளையுங்கூட அழித்து விடும்” என்றார். -G. de Felice, History of the Protestants of France, b. 1, ch. 2, par. 8.(38) GCTam 315.2
சில வருடங்களுக்குப்பின் அந்தஸ்துமிக்க ஒரு போப்புமார்க்கவாதி: “உங்களுடைய அரச மேன்மையைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், நாடு அமைதியுடன் உங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கத்தோலிக்க விசுவாசத்தைப் பாதுகாப்பதற்காக ஆண்மையுடன் நின்று, உங்களது ஆயுதங்களினால் அதன் எதிரிகள் அனைவரையும் கீழடக்குங்கள்” என்று அரசனை எச்சரித்தார். “புரொட்டஸ்டாண்டு கோட்பாடு, புதுமைகளையும் தவறுகளையும் தழுவும்படி மக்களை நயப்படுத்தி, அரசனின்மீதுள்ள மக்களின் பக்திமிக்க தன்மையைக் கொள்ளயிைட்டு, சபை நாடு ஆகிய இரண்டையும் பாழ்படுத்தும்” என்று பொதுமக்களுடைய தவறான எண்ணத்தைத் தூண்டிவிடும்படி, ஒர் இறையியல் வல்லுநர் அறிவித்தார்.—D'Aubigne, b. 2, ch. 36. இவ்விதமாக சீர்திருத்தத்திற்கு எதிராக, பிரான்ஸ் நாட்டை அணிவகுத்து நிற்கச்செய்வதில், ரோமன் கத்தோலிக்கசபை வெற்றியடைந்தது. சிங்காசனத்தை நிலைநிறுத்தவும் மேன்மக்களைக் காக்கவும் சட்டத்தை நிலைநிறுத்தவும் பிரான்ஸ் நாடு உபத்திரவம் என்னும் வாளை அதன் உறையிலிருந்து வெளியில் எடுத்தது.-Wylie, b. 13, ch. 4. (39) GCTam 315.3
பயங்கரமான நிலையை—அந்தக் கொள்கையினால் ஏற்படவுள்ள பலன்களை, அந்தநாட்டின் அதிபதிகள் முன்னதாகக் கண்டறியவில்லை. நாட்டின் செழுமைக்கு மூலைக்கல்லாக இருக்கும் நீதி, புலனடக்கம், சத்தியம், தூய்மை, அனுதாபம் ஆகிய கொள்கைகளை வேதாகம போதனைகள் மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் நட்டிருந்திருக்கும். “நீதி ஜனத்தை உயர்த்தும் பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.” “அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.” (நீதி. 14:34, 16:12). தெய்வீகப் பிரமாணங்களுக்கு எவனொருவன் கீழ்ப்படி வானோ, அவன் மிக உண்மையாக நாட்டின் சட்டத்தையும் மதிப்பான். எவனொருவன் தேவனை மதிக்கிறானோ, அவன் நீதியையும் சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் மதிப்பான். ஆனால் மகிழ்ச்சியற்ற பிரான்ஸ் நாடு வேதாகமத்தைத் தடைசெய்து, அதன் சீடர்களை விரட்டியது. தங்களது மன உணர்த்துதலின்படி நடக்கும் தைரியம் பெற்றிருந்த கொள்கையும் நேர்மையு மிக்க மனிதர்கள், தீவிரமான நுண்ணறிவையும், சன்மார்க்க பலத்தையும் கொண்டிருந்த மனிதர்கள், நூற்றாண்டுகளாக சத்தியத்திற்காகப் பாடனுபவித்த விசுவாசிகள் பாய்மரக்கப்பல்களில் கேவலமான அடிமைகளாக உழைத்து, நெருப்பில் அழிந்தனர்; நிலவறைகளில் அழுகிப்போயினர்; ஓடிப்போவதில் ஆயிரமானோர் பாதுகாப்பைக் கண்டனர். சீர்திருத்தத்தின் ஆரம்பத்திற்குப்பின், இந்நிலைமை இருநூற்றைம்பது ஆண்டுகள் தொடர்ந்தது. (40) GCTam 316.1
உபத்திரவப்படுத்துகிறவர்களின் பயித்தியக்காரத்தனமான கோபத் திற்கு ஆளாகி, தங்கள் முன்னிருந்து ஓடிப்போன சுவிசேஷத்தின் சீடர்களைக் காணாத ஒரு தலைமுறையினர்கூட இருக்கவில்லை. பிரான்ஸ் நாட்டில் அப்படி ஓடிப்போனவர்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்த இடங்களைச் செழுமைப்படுத்த அவர்களது நுண்ணறிவு, கலைகள், தொழில்கள் மற்றும் அவர்களை மிகச் சிறந்தவர்களாக்கி இருந்த ஒழுக்கம் ஆகியவைகளையும், தங்களுடன் கொண்டு சென்றிருந்தனர். இந்த ஈவுகளினால், அவர்கள் புகலிடமாகச்சென்ற மற்ற நாடுகளைச் செழிப்படையச் செய்தபோது, அவர்களது சொந்த நாட்டை வெறுமையாக்கினர். அந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் பிரான்சிலேயே இருந்திருந்தால், இந்த முந்நூறு ஆண்டுகளில் அவர்களது கலைத்திறன்கள் அவர்களுடைய உற்பத்தியாளர்களை முன்னேற்ற பயன்படுத்தப்பட்டிருந்தால், அவர்களது உற்பத்தி செய்யும் அறிவின் மேன்மையும் பிரித்தறியும் திறனும் இலக்கியங்களைச் செழுமையடையச் செய்து விஞ்ஞானத்தைப் பயிற்றுவித்திருந்தால், அதன் ஆலோசனை மன்றங்களுக்கு அவர்களது ஞானம் வழிகாட்டியிருந்தால், போர்செய்வதில் அவர்களது தைரியம் வெளிக்காட்டப்பட்டிருந்தால், அவர்களது நேர்மை சட்டங்களை உருவாக்கியிருந்தால், வேதாகமம் தந்த சமயக் கோட்பாடு மக்களின் நுண்ணறிவைப் பலப்படுத்தி மனசாட்சியை ஆளுகைசெய்திருந்தால், எப்படிப்பட்டமகிமை இன்று பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்திருந்திருக்கும்! நாடுகளுக்கு முன்மாதிரியான எப்படிப்பட்ட ஒரு பெரும் செழுமைமிக்க மகிழ்ச்சிமிக்க நாடாக அது இருந்திருக்கும்! (41) GCTam 316.2
ஆனால் சிறப்பான ஒவ்வொரு ஆசிரியரையும், ஒழுக்கத்தின் வீரர்கள் ஒவ்வொருவரையும், சிங்காசனத்தைப் பாதுகாக்க நேர்மையுடன் நின்றிருந்த ஒவ்வொருவரையும், குருட்டுத்தனமான இணங்காத மதவெறி, தனது நாட்டைவிட்டு விரட்டச்செய்தது. அந்த நாட்டைப் புகழும் மகிமையுமிக்கதாகச் செய்திருந்திருக்கக் கூடியவர்களை நோக்கி “கம்பங்களில் கட்டி எரிக்கப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல், இதில் எதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிறீர்கள் என்று கேட்டது. இறுதியில் அந்த நாட்டின் சீரழிவு முழுமை அடைந்தது. அதன்பின் தடைசெய்ய மனசாட்சி இருக்கவில்லை. கட்டிவைத்து எரிப்பதற்கு இழுத்துச்செல்ல மதமும் இருக்கவில்லை. ஒழித்துக்கட்ட தேசபக்தியும் இல்லை.”—Wylie, b. 13, ch. 20. அதன் பலன் கொடுமைகள் நிரம்பின புரட்சியே! (42) GCTam 317.1
ஹுக்நாட் இனத்தவர்கள் ஓடிப்போனவுடன் பிரான்ஸ் நாட்டின்மீது ஒரு சரிவு ஒரு பொதுவான சரிவு உண்டானது. நன்றாக உற்பத்திசெய்து முன்னேறிக்கொண்டிருந்த நகரங்கள் அழிவில் வீழ்ந்தன. வளமிக்க மாவட்டங்கள் அவைகளின் பழைய வனாந்திர நிலையை அடைந்தன. வழக்கமில்லாத முன்னேற்றத்தின் ஒரு காலத்தை நுண்ணறிவின் மந்த நிலையும் சன்மார்க்கவீழ்ச்சியும் பின்தொடர்ந்தன. பாரிஸ் நகரம் ஒரு விசாலமான பிச்சைக்காரர்களின் வீடாயிற்று. புரட்சி வெடித்தபோது, அரசனிடம் பிச்சை கேட்பவர்களாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றுமில்லாதவர்கள் இருந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அழிந்துகொண்டிருந்த அந்த நாட்டில், ரோமசபையைச் சேர்ந்த ஜெசுவைட் (கத்தோலிக்க மார்க்கத்திலுள்ள ஒரு குழுவின் பெயர்) மட்டும் செழுமையடைந்து கொண்டிருந்தனர். சபைகள் பள்ளிகள் சிறைச்சாலைகள் அடிமைக் கப்பல்களை அவர்கள் தங்களது பயங்கரமான கொடுங்கோன்மையுடன் ஆட்சிசெய்து கொண்டிருந்தனர். (43) GCTam 317.2
மதகுருக்கள், அரசன், சட்டசபை அங்கத்தினர்களுடைய திறமைகளைத் திக்குமுக்காடச்செய்து, பிரான்ஸ் நாட்டை அராஜகம் வீழ்ச்சி ஆகியவைகளுக்குள் மூழ்கடித்த அரசியல் சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சுவிசேஷம் கொண்டு வந்திருக்கும். ஆனால் ரோமசபையின் மேலாதிக்கத்தில் இரட்சகரின் ஆசீர்வாதமான பாடங்களையும் இரட்சகரால் கற்பிக்கப்பட்டிருந்த தற்தியாகம், சுயநலமற்ற அன்பு என்னும் ஆசீர்வாதமான பாடங்களையும் மக்கள் இழந்தனர். மற்றவர்களின் நன்மைக்காக சுயநலத்தை மறுத்தல் என்னும் பழக்கத்திலிருந்து அவர்கள் விலகிச் சென்றிருந்தனர். செல்வந்தர்கள் ஏழைகளை ஒடுக்குவது கண்டிக்கப்படாமலிருந்ததோடு ஏழைகளின் வேலைகளுக்கும் கீழான நிலைமைக்கும் உதவியும் கிடைக்காமலிருந்தது. செல்வந்தர்கள் மற்றும் வல்லமைமிக்கவர்களின் சுயநலம் அதிகமதிகமான வெளிப்படையானதாகவும் ஒடுக்கக்ககூடியதாகவும் வளர்ந்தது. பேராசையும், ஊதாரித்தனமும், ஏழைக் கூலிக்காரர்களிடமிருந்து பணத்தை நெருக்கி வசூல்செய்யும் நிலையை நூற்றாண்டுகளாக உண்டுபண்ணியது. செல்வந்தர்கள் ஏழைகளுக்குத் தீங்கிழைத்தனர். ஏழைகள் செல்வந்தர்களை வெறுத்தனர்.(45) GCTam 317.3
அநேக மாநிலங்களில் பண்ணைகள் மேன்மக்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. வேலைசெய்பவர்கள் வாடகை வீடுகளில் இருந்தனர். அவர்கள் நில உடைமையாளர்களின் இரக்கத்தைச் சார்ந்தவர் களாக இருந்து, அவர்களது அளவிற்குமீறிய கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படியும்படி வற்புறுத்தப்பட்டிருந்தனர். சபையையும் நாட்டையும் ஆதரிக்கவேண்டிய சுமை மத்தியதர மக்களின்மீதும் ஏழைகளின்மீதும் விழுந்தது. இவர்கள் அரசாங்க அதிகாரிகளினாலும், குருமார்களாலும் பாரமான விதத்தில் வசூலிக்கப்பட்டனர். மேன்மக்களின் மகிழ்ச்சி மேலான சட்டமாகக் கருதப்பட்டிருந்தது. விவசாயிகளும் பண்ணைக் கூலியாட்களும் பட்டினி கிடந்தாலும், ஒடுக்குபவர்கள் அவர்களை கவனிக்கவில்லை. ஒவ்வொரு காரியத்திற்கும் நில உடைமையாளர்களின் விருப்பங்களை முற்றுமாக ஆலோசிக்கவேண்டியிருந்தது. விவசாயத்தொழிலாளர்களின் வாழ்க்கை தீராத வேலையுள்ளதாகவும், விடுதலைபெறமுடியாத துன்பம் மிகுந்ததாகவும் இருந்தது. எப்போதாவது தைரியமாகக் குறை கூறினால், கீழ்த்தரமான அவமதிப்புடன் நடத்தப்பட்டனர். நீதிமன்றங்கள் கூலிக்காரருக்கு எதிராக மேன்மகன் சொல்லுவதையே எப்போதும் கவனித்தது. நீதிபதிகள் அவப்பெயரை உண்டுபண்ணும் விதத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தனர். முற்றிலும் நேர்மையற்ற அமைப்பால் ஆட்சியாளர்களின் கீழ்த்தரமான சலனபுத்தி சட்டத்தைக் கையில் வைத்திருந்தது. மதச்சார்புடையவர்கள் ஒருபக்கத்திலும் மதச்சார்பற்ற வலிமைமிக்கவர்கள் மறுபக்கத்திலுமாக இருந்து, பொது மக்களைக் கசக்கிப்பிழிந்து வசூலித்த வரிகளில் பாதிகூட அரசின் கருவூலத்திற்கோ சபையின் கருவூலத்திற்கோ செல்லவில்லை. மீதமாக இருந்ததும் ஊதாரித்தனமான மகிழ்ச்சிக்கென்று வீணாக்கப்பட்டது. இவ்விதமாகத் தங்களுக்குக்கீழ் இருந்தவர்களை ஒடுக்கினவர்கள் வரிகொடுப்பதிலிருந்து விலக்கப்பட்டு, சட்டத்தினால் அல்லது பழக்கத்தினால் அரசுப்பணியில் வேலைசெய்யத் தகுதியுடையவர்களாக இருந்தனர். சுமார் ஒன்றரை இலட்சம்பேர், இச்சலுகைகளைப்பெறும் வகுப்பினர்களாக இருந்தனர். அவர்களது சந்தோஷங்களுக்காகப் பல இலட்சக்கணக்கானவர்கள் நம்பிக்கையற்ற படுமோசமான வாழ்க்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். (45) GCTam 318.1
நீதிமன்றம் டாம்பீகத்திலும் வீண்செலவிலும் இயங்கிக் கொண்டிருந்தது. மக்களுக்கும் அதிபதிகளுக்கும் இடையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளின்மீதும் அவை உள்நோக்கமும் சுயநலமும் உடையவை என்னும் சந்தேகம் பற்றிக்கொண்டிருந்தது. புரட்சிக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பதினான்காம் லூயி என்பவன் அரியணையை அடைந்தான். அவன் மோசமான அந்த நேரங்களிலுங்கூட மூடத்தனமான கேலிக்குரிய இன்பங்களில் ஈடுபட்டவன் என்று குறிப்பிடப்பட்டவனாக இருந்தான். மேன்மக்களின் சீர்கெட்ட கொடுமையான ஆட்சியோடு, ஏழ்மையான அறியாமையிலிருந்த மக்களோடு, அந்த நாட்டில் ஒரு பயங்கரமான கலகம் உண்டாக இருக்கிறது என்பதை முன்னதாகக் காண்பதற்கு ஒரு தீர்க்கதரிசியின் கண் தேவையாக இருக்கவில்லை. “நான் உயிரோடிருக்குமளவும் எவ்விதமாகச்செல்லுமோ அவ்விதமாக நடத்த முயலுங்கள் எனது மரணத்திற்குப்பின் அது எப்படி நடக்குமோ அப்படி நடக்கட்டும்” என்பது ஆலோசகர்களின் எச்சரிப்பிற்கு அரசனின் வழக்கமான பதிலாக இருந்தது. சீர்திருத்தம் செய்யப்படவேண்டியது அவசியம் என்று வீணாக வற்புறுத்தப்பட்டிருந்தது. தீங்குகள் நிகழ்வதை அவன் கண்டான். ஆனால் அவைகளைச் சந்திக்கும் தைரியமோ அல்லது வல்லமையோ அவனிடம் இருக்கவில்லை. எனக்குப்பின் ஜலப்பிரளயம்! என்னும் அவனது சோம்பலான சுயநலம் மிக்க பதில் விழுகைக்காகக் காத்திருந்த பிரான்ஸை ப்பற்றிய உண்மையான சித்திரமாக இருந்தது. (46) GCTam 319.1
நாடு பலவீனமடையும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசர்கள், அதிபதிகள் ஆகியோரின் பொறாமையை பயன்படுத்தி, மக்களை அடிமைத்தனத்திற்குள் வைப்பதற்கு ரோம சபை அவர்களை வசீகரித்தது. அதிபதிகளையும் மக்களையும் தனது அடிமைகளாகக் கட்டிவைக்கும் நோக்கத்தில், மனிதர்களைப் பலனுள்ள விதத்தில் வைத்துக்கொள்வதற்கு, அவர்களது ஆத்துமாவின்மீது விலங்குகள் பூட்டப்படவேண்டும் என்ற நெடுந்தூரப்பார்வை கொள்கையோடு, அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து தப்பிவிடாமலிருப்பதற்கு நிச்சயமான வழி, அவர்களைச் சுதந்திரம்பெற தகுதியற்றவர்களாக்குவதுதான் என்பதை அது உணர்ந்திருந்தது. உடலில் உண்டாகக்கூடிய துன்பங்களைவிட, ஆயிரம்மடங்கு அதிபயங்கரமான சன்மார்க்கவீழ்ச்சி இந்தக் கொள்கையின் விளைவாக உண்டாயிற்று. வேதாகமத்தை இழந்து, மதவிரோதம் சுயநலம் ஆகியவைகளின் போதனை களுக்கு விடப்பட்டு, அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தீயபழக்கங்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டு, மக்கள் தங்களைச் சுயமாக ஆளும் தன்மையே அற்றவர்களாக்கப்பட்டிருந்தனர். (47) GCTam 319.2
ஆனால் இந்தச் செயல்களனைத்தும் ரோம சபையின் நோக்கத்திற்கு மாறுபட்டதாக இருந்தது. அதன் பிடிவாதமான கோட்பாடுகளுக்கு இணங்கி, திருப்பலிப்பூசைகளை நடத்துவதற்குப் பதிலாக, அதன் செயல்கள் அவர்களை நாத்திகர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் ஆக்கிற்று. ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை குருமார்களின் கைவேலை என்று அவர்கள் நிந்தித்தனர். குருமார்களை ஒடுக்குதலின் கூட்டாளிகள் என்றே நோக்கினர். அவர்கள் அறிந்திருந்த ஒரே தெய்வம் ரோம் நாட்டுக் கடவுள்தான் அதன் போதனைகள் ஒன்று மட்டும்தான் அவர்கள் மதமாக இருந்தது. அதன் பேராசையும், கொடூரத்தையும் அவர்கள் வேதாகமத்தின் சட்டரீதியான கனியாகக் கருதி, அதில் ஒன்றையும் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. (48) GCTam 320.1
ரோமன் கத்தோலிக்க சபை தேவனுடைய தன்மைகளை தவறான விதத்தில் எடுத்துக்காட்டி, அவருடைய எதிர்பார்ப்புகளைத் திரித்திருந்தது. எனவே மனிதர்கள் இப்பொழுது, வேதாகமத்தையும் அதன் ஆசிரியரையும் நிராகரித்தனர். வேதவாக்கியங்களால் அனுமதிக்கப்பட்டவை என்று போலியாகக்கூறி, அதன் பிடிவாதமான கோட்பாடுகளை குருட்டுத்தனமாக விசுவாசிப்பது அவசியம் என்றது. அதன் எதிர்விளைவாக, வால்டேரும் அவரது சகாக்களும் தேவனுடைய வார்த்தையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து, நாத்தியவாதத்தின் விஷத்தை எங்கும் பரப்பியிருந்தனர். ரோமசபை அதன் இரும்புக் குதிகாலின்கீழ் மக்களை நசுக்கியது. இப்பொழுது திரள்கூட்டமானவர்களும், கீழ்த்தரமானவர்களும் முரடர்களாகி, அதன் கொடுங்கோன்மைக்கு எதிர் நடவடிக்கையாக சகல கட்டுப்பாடு களையும் தூரவீசி எறிந்தனர். அதன் பளபளக்கும் வஞ்சகத்துக்கு இதுவரை செலுத்தியிருந்த தொழுகையினால் கோபமடைந்த அவர்கள், சத்தியத்தையும் அசத்தியத்தையும் ஒன்றாக நிராகரித்து, தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் சுயாதீனத்தைத் தவறாக எடுத்துக்கொண்டு அவர்களது கற்பனையான சுதந்திரத்திற்காக களிகூர்ந்தர். (49) GCTam 320.2
புரட்சியின் ஆரம்பத்தில் மேன்மக்கள், மதகுருமார்கள் ஆகிய இருசாராரையும்விட, இம்மக்களுக்கு பிரதிநிதித்துவம்செய்யும் சலுகை அரசனால் அனுமதிக்கப்பட்டது. இவ்விதமாக அதிகாரத்தை நடுநிலைப்படுத்தும் வலிமை மக்களிடம் இருந்தது. ஆனால் அதை ஞானத்துடனும் சீராகவும் பயன்படுத்த அவர்கள் ஆயத்தமற்றவர்களாக இருந்தனர். நாங்கள் அனுபவித்த தவறுகளை சரிசெய்யும் வாஞ்சைமிக்கவர்களாக சமுதாயத்தைத் திரும்ப நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். தங்களுக்கு இழைக்கப்பட்டிருந்த தவறுகளைப்பற்றிய கசப்பை அதிக காலம்ஞாபகத்தில்வைத்திருந்த அம்மக்கள் தாங்கமுடியாத துயர்நிலையை புரட்சிகரமாகமாற்ற தீர்மானித்து, தங்களது துன்பங்களுக்குக் காரணமானவர்களாக கருதியிருந்தவர்கள்மீது பழிவாங்கும் செயலில் ஈடுபடவும் தீர்மானித்திருந்தனர். கொடுங்கோன்மையின்கீழ் ஒடுக்கப்பட்டவர்கள் கற்றிருந்த பாடங்களை வெளிக்காட்டி, தங்களை ஒடுக்கினவர்களின்மீது ஒடுக்குபவர்களாக மாறினார்கள். (50) GCTam 321.1
மகிழ்ச்சியற்ற பிரான்ஸ் நாடு, அதுவிதைத்திருந்த விதையை இரத்தத்தில் அறுவடை செய்தது. ரோம சபையின் கட்டுப்படுத்தும் வல்லமைக்குக் கீழ்படிந்து இருந்ததினால், அந்த நாட்டில் உண்டான விளைவுகள் மிகப்பயங்கரமானவையாக இருந்தன. சீர்திருத்தத்தின் ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க சபையின் செல்வாக்கின்கீழ், அது எங்கு முதலாவதாக கம்பத்தில் கட்டிவைத்து எரித்ததோ, அதே இடத்தில் புரட்சியானது, அதன் முதல் கில்லட்டின் என்னும் (கழுத்தை வெட்டிக் கொலை செய்யும்)கருவியை அமைத்தது. பதினாறாம் நூற்றாண்டில் புரொட்டஸ்டாண்டு விசுவாசத்திற்காக இரையாக்கப்பட்டவர்கள் எந்த இடத்தில் எரிக்கப்பட்டார்களோ, அதே இடத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் முதல்பலியாட்கள் கில்லட் என்ற கருவியால் வெட்டப்பட்டனர். ஆரோக்கியத்தைக் கொண்டுவந்திருக்கக்கூடிய சுவிசேஷத்தை விரட்டியதன் விளைவாக, பிரான்ஸ் நாடு நாத்திகத்திற்கும் பாழாவதற்குமான பாதையைத் திறந்தது. தேவப் பிரமாணத்தின் கட்டுப்பாடு நீக்கப்பட்டபோது, மனிதவெறிகள் என்னும் அலையின் வல்லமையைத் தடுத்து நிறுத்த மனிதச் சட்டங்களின் வல்லமைகள் போதாது என்று காணப்பட்டது. அந்த நாடு கலகத்திலும் அராஜகத்திலும் அடித்துச்செல்லப்பட்டது. வேதாகமத்திற்கு எதிரான யுத்தம் “பயங்கரத்தின் ஆளுகையின் காலம்” என்று உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சகாப்தத்தைத் துவக்கியது. மனிதர்களின் வீடுகளிலும் இதயங்களிலுமிருந்து சமாதானமும் சந்தோஷ மும் அகற்றப்பட்டது. ஒருவருக்கும் பாதுகாப்பு இருக்க வில்லை. இன்று வெற்றியடைந்தவன் சந்தேகத்திற்கு உள்ளானவனாகி, மறுநாள் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். பலாத்காரமும் ஆசைவெறிகளும் தடுக்கமுடியாத விதத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தன. (51) GCTam 321.2
அரசன், குருமார்கள், மேன்மக்கள் ஆகியோர் உணர்ச்சியால் கொந்தளித்துப் பைத்தியமாகியிருந்த மக்களின் அக்கிரமங்களுக்குக் கீழ்ப்படியும்படி வற்புறுத்தப்பட்டிருந்தனர்.. அரசனின் மரணதண்டனை அவர்களது பழிவாங்கும் தாகத்தை அதிகரித்தது. அரசனுக்கு மரணதண்டனை விதித்தவர்கள் விரைவில் அவனைப் பின்பற்றித் தூக்கு மேடைக்குச் சென்றனர். புரட்சிக்கு எதிரானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவர்மீதும், ஒரு பொதுவான படுகொலை தீர்மானிக்கப்பட்டது. ஒருசமயத்தில் இரண்டு இலட்சம் கைதிகளை கொண்டிருந்தது சிறைச்சாலை. அந்த நாட்டின் நகரங்கள் பயங்கர நிகழ்ச்சிகள் நிறைந்தவையாக இருந்தன. புரட்சிக்காரர்களின் ஒரு கட்சி, மற்றொரு கட்சிக்கு எதிராக இருந்தது. பிரான்ஸ் நாடு ஒருவரையொருவர் எதிர்த்துச் சண்டையிடும் தங்களுடைய வெறிகளினால் அடித்துச்செல்லப்பட்ட மூர்க்கமானவர்களின் பெரும் யுத்தகளமாயிற்று. பாரிஸில் அமளிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. அந்த நகர மக்கள் ஒருவரை ஒருவர் கொலைசெய்வதைத்தவிர, வேறு நோக்கம் எதுவுமற்ற, தாறுமாறான கட்சிகளாகப் பிரிந்திருந்தனர். இந்தத் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், அந்த நாடு நீண்டகாலமாக நாசத்தை உண்டுபண்ணும் விதத்தில், ஐரோப்பாவின் பெரும் வல்லமைகளுடன் யுத்தத்திலிருந்தது. அந்த நாடு ஏறத்தாழ திவாலாகி, சம்பளப்பாக்கிக்காக இராணுவத்தினர் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். பாரிஸ் நகர மக்கள் பட்டினியில் இருந்தனர். வழிப்பறிக்காரர்களால் மாநிலங்கள் பாழாக்கப்பட்டிருந்தன. அராஜகத்தினாலும் தீய செயல்களினாலும் சமூக மக்கள் ஏறத்தாழ ஒன்றும் இல்லாதவர்களாக்கப்பட்டிருந்தனர். (52) GCTam 322.1
ரோமன் கத்தோலிக்க சபை மிகுந்த அக்கரையுடன் போதித்த கொடூரம் சித்திரவதை ஆகியவைகளின் பாடங்களை மக்களனைவரும் நன்கு கற்றுக்கொண்டனர். தேவகோபமாகிய தண்டனையின் நாள் முடிவில் வந்தது. இப்பொழுது நிலவறைகளுக்கும் சிதைகளுக்கும் இழுத்துச்சென்று தள்ளப்பட்டவர்கள் இயேசுவின் சீடர்களல்ல. வெகுகாலத்திற்கு முன்பே அவர்கள் அழிந்துபோயிருந்தனர் அல்லது நாடுகடத்தப்பட்டிருந்தனர். எதையும் விட்டுவைக்காமலிருந்த ரோமசபை, இரத்தம் சிந்தும் செயல்களில் மகிழ்ச்சிகாணும்படி பயிற்சி அளித்தவர்களின் மரண அபாயமிக்க வல்ல மையை உணர்ந்தது. அநேக காலங்களாக பிரான்ஸ் நாட்டின் குருமார்கள் வெளிக்காட்டியிருந்த உபத்திரவத்தின் முன்மாதிரி, நன்கு தெரியும் படியான உக்கிரத்துடன் இப்பொழுது அதன்மீதே திரும்பினது. குருமார்களின் இரத்தம் தூக்குமேடைகளில் சிவப்பாக வழிந்தோடியது. ஒரு சமயத்தில் ஹுக்நாட் மக்களால் நெருக்கமாக இருந்த அடிமைக் கப்பல்களும் சிறைச்சாலைகளும் இப்பொழுது அவர்களை உபத்திரவப்படுத்தியிருந்தவர்களால் நிறைந் திருந்தது. பெஞ்சுகளில் சங்கிலிகளால் கட்டப் பட்டு, துடுப்புகளை ஓயாமல் வலித்து உடைத்திருந்த சாதுவான மதவிரோதிகளாக எண்ணப்பட்டவர்கள்மீது, ரோமசபை மிகத்தாராளமாக இழைத்திருந்த கொடுமைகள் அனைத்தையும் இப்பொழுது அதன்குருமார்கள் அனுபவித்தனர். (53) GCTam 322.2
அதற்குப்பின் அநாகரிகமான நீதிமன்றங்களின் மிக மோசமான மனிதர்களால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான நாட்கள் வந்தன. இந்தச் சமயத்தில் தண்டனை இல்லாமல் ஒருவராலும் தனது அயலானை வாழ்த்த முடியாது அல்லது தனது ஜெபத்தைக் கூறமுடியாது என்னும் நிலைமை உண்டானது. மூலைமுடுக்குகள் எங்கும் ஒற்றர்கள் பதிவிருந்தனர். கழுத்தை வெட்டும் இயந்திரம் ஒவ்வொரு நாள் காலையிலும் கடினமாக வேலைசெய்தது. அடிமைக் கப்பலில் அடிமைகள் நெருக்கமாக வைக்கப்படுவதுபோல, சிறைச்சாலைகள் நெருக்கமாக நிரம்பியிருந்தன. இரத்தம் நுரையுடன் சாக்கடைக்கால்வாய்களில் ஓடியது. விழுகைக்கு ஆளாக்கப்பட்டவர்கள், வண்டிகள் நிறைய பாரிஸ் நகர சாலைகளில் கொண்டுசெல்லப்பட்டனர். தலைமைக்குழுவினால் அனுப்பப்பட்டிருந்த முன் ஆலோசனைக்குழு, தலைநகரிலும் அறியப்பட்டிராத விதத்தில் கொடுமைமிக்க வெறியாட்டங்களை அளவிற்கும் மிஞ்சிய விதத்தில் செய்தது. மரணக்கருவியின் கத்தி, வெட்டும் வேலையைச்செய்ய மெதுவாக மேலும் கீழும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. தட்டையான அடிப்பாகமுள்ள பெரும்படகுகளில் நெருக்கமாக மக்கள் ஏற்றிச்செல்லப்பட்டு (நடுக்கடலில்) அந்தப் படகுகளின் அடிப்பாகத்தில் துளைகள் இடப்பட்டன. லையான் நகரம் ஒரு பாலைவனமாக மாறியது. அர்ராஸ் என்னுமிடத்தில் சிறைக்கைதிகளுக்கு விரைவான மரணம் என்னும் கொடூரமான இரக்கங்கூட மறுக்கப்பட்டிருந்தது. லாயிர் என்னுமிடத்தில் சௌமூரிலிருந்து கடற்கரைவரை, ஒருவரையொருவர் காமலீலை செய்யும்விதமாக ஒன்றாகச்சேர்த்துக் கட்டப்பட்டிருந்த நிர்வாணப் பிரேதங்களின்மீது, பெரும் காக்கைக் கூட்டங்களும் கழுகுக்கூட்டங்களும் விருந்துண்டன. ஆண் பெண் வயதானோர் என்று இரக்கம் காட்டப்படவில்லை. கேடுகெட்ட அரசினால் கொலை செய்யப்பட்டிருந்த வாலிபர்கள், பதினேழு வயதிலிருந்த பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை, நூற்றுக்கணக்கானவர்கள் என்று கணக்கிடப்பட வேண்டியதாக இருந்தது. தாய்மார்களிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஈட்டியிலிருந்து ஈட்டிக்கு மாறிமாறிப் புரட்டிக் குத்திவீசப்பட்டனர். குறைந்தகால பத்து வருட இடைவெளியில், இலட்சக்கணக்கான மனிதர்கள் அழிந்தனர். (54) GCTam 323.1
இவை அனைத்தும் சாத்தான் விரும்பியபடி நடத்தப்பட்டன. இப்படி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் யுகங்கள் நெடுகிலும் செயலாற்றியிருந்தான். ஆரம்பமுதல் இறுதிவரை, மனிதர்களை ஏமாற்றுவதுதான் அவனது கொள்கையாக இருக்கிறது. மனிதர்களின் மீது துன்பத்தையும், துர்ப்பாக்கியத்தையும் கொண்டுவருவது, தேவனுடைய கரத்தின் கிரியைகளை அலங்கோலப்படுத்தித் தீட்டுப்படுத்துவது, தெய்வீக நோக்கங்களாகிய அனுதாபம், அன்பு ஆகியவைகளைக் களங்கப்படுத்தி, இவ்விதமாகப் பரலோகத்தில் துயரம் உண்டாகச்செய்வது, அவனது உறுதியான நோக்கமாக உள்ளது. அதன்பின் தனது வஞ்சகமிக்க தந்திரங்களினால், மனிதர்களின் மனங்களைக் குருடாக்கி, சிருஷ்டிகரின் திட்டங்களின் பலன்தான் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்பதுபோல் தனது குற்றச்சாட்டுகளை தேவனின்மீது திருப்பி வீசுவதற்கு அவர்களை நடத்துகிறான். இதேவிதமாக அவனது கொடூரமான வல்லமையினால் கீழ்த்தரமானவர்களாக மிருகத்தனமாக்கப்பட்டவர்கள், அவர்களது சுதந்திரத்தை அடைந்துகொள்ளும்போது, அத்துமீறிச் செல்லவும் அக்கிரமங்களைச் செய்யவும் அவர்களை வற்புறுத்துகிறான். அதன்பின் கடிவாளம் இடப்படாத இந்த உரிமத்தின் சித்திரம் கொடுங்கோலர்களாலும், ஒடுக்குபவர்களாலும் “இவைகள்தான் சுதந்திரத்தின் பலன்கள்” என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. (55) GCTam 323.2
ஒரு உடையில் மறைத்துவைக்கப்பட்டுள்ள தவறு கண்டுபிடிக்கப் படும்போது, சாத்தான் அதை வேறுவிதமான உடைக்குள் மூடி மறைக்கிறான். திரள்கூட்டமானவர்கள் முதல் தவறை எவ்விதமாகப் பெற்றுக்கொண்டார்களோ, இதையும் அதேவிதமாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர். ரோமன் கத்தோலிக்கமார்க்கம் ஒரு வஞ்சகம் என்பதை மக்கள் கண்டுகொண்டபோது, இந்த ஏதுகரத்தின்மூலமாக தேவப்பிரமாணத்தை மீறும்படி அவர்களை நடத்துமுடியாது என்பதை அவன் கண்டான். எனவே “சகல மதங்களும் ஏமாற்றுபவைகளே,” “வேதாகமமும் ஒரு கட்டுக்கதையே” என்று கருதும்படி அவர்களை வற்புறுத்தினான். தெய்வீகப் பிரமாணங்களை ஒரு பக்கமாக நீக்கிவிடச் செய்வதால், கடிவாளமிடப்படாத அக்கிரமங்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே விட்டுக்கொடுக்கின்றனர். (56) GCTam 324.1
தேவப்பிரமாணத்தால் தடைசெய்யப்பட்டவைகளுக்கு விலகுவதில் தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்னும் பெரும் சத்தியத்தை அறியாமல் இருந்த பெரும் தவறுதான் பிரான்ஸின் குடிமக்களுக்கு இந்தத் துயரங்கள் உண்டாவதற்குக் காரணமாக இருந்தது. “ஆ, என் கற்பனை களைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்”-ஏசாயா 48:28,22 நீதி. 1:33.(57) GCTam 324.2
கடவுள் இல்லை என்பவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத வர்களும், மருள விழுந்தவர்களும், தேவப்பிரமாணத்தின்மீது பகிரங்க மாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தெய்வீகப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதுடன்தான் மனிதனின் நல்ல வாழ்க்கை பிணைத்துக்கட்டப் பட்டிருக்கிறது என்பது அவர்களது செல்வாக்கின் பலன்களால் மெய்ப்பிக்கப் படுகின்றது. தேவனுடைய புத்தகத்தில் இருந்து அந்தப் பாடங்களை வாசிக்காமல் இருப்பவர்கள், நாடுகளின் வரலாறுகளில் அவைகளை வாசித்து அறிந்துகொள்ளும்படியாக அழைக்கப்படுகின்றனர்! (58) GCTam 325.1
மனிதர்களைக் கீழ்ப்படிவதிலிருந்து விலகிச்செல்லும்படி ரோமன் கத்தோலிக்க சபையின் மூலமாக சாத்தான் செயலாற்றியபோது, அவனது ஏதுகரங்கள் மறைத்துவைக்கப்பட்டன. அவனது செயல்களின் பலனாக உண்டான கீழானநிலையும் துன்பங்களும் மீறுதலின் கனிகள் என்று காணப்படாதபடி மூடிமறைக்கப்பட்டன. இதுவரை அவனது வல்லமைக்கு எதிராக தேவ ஆவி செயலாற்றி இருந்தது. அதனால் அவனது நோக்கங்களின் முழுப்பலனையும் அடைவது தடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ந்துபோன விளைவுகளின் காரணத்தையும், துன்பங்களின் மூலகாரணத்தையும் மக்கள் ஆராயவில்லை. ஆனால் புரட்சியின்போது, தேசியக்கவுன்சிலினால் தேவப்பிரமாணம் பகிரங்கமாக புறம்பே நீக்கிவைக்கப்பட்டது. அதைப் பின்தொடர்ந்த பயங்கரத்தின் ஆளுகையில் காரணங்களையும் அதன் விளைவுகளையும் காணமுடிந்தது. (59) GCTam 325.2
பிரான்ஸ் நாடு வேதாகமத்தைப் பொதுமக்களின்முன் பகிரங்கமாகத் தடைசெய்தபோது, துன்மார்க்கரும் அந்தகார ஆவிகளும் தாங்கள் இதுவரை வாஞ்சித்திருந்த நோக்கத்தை அடைந்துவிட்டதற்காக, தேவப்பிரமாணத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையான சுதந்திரமான ஒரு இராஜ்ஜியத்தை அடைந்து விட்டதற்காக வெற்றிச்சிரிப்புச் சிரித்தனர். “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது. பாவி நூறுதரம் பொல்லாப்பைச்செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை”-பிரசங்கி 8:11-13. ஆகையால் நியாயமும் நீதியுமிக்க ஒரு பிரமாணத்தை மீறுவது தவிர்க்கமுடியாத துன்பத்திலும் பாழாக்குதலிலும் முடியும். நியாயத்தீர்ப்பு உடனடியாக நிகழாமல் இருந்தபோதிலும், மனிதர்களின் துன்மார்க்கச் செயல்கள், அவர்களது அழிவிற்கான வேலையைச் செய்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான வருடங்களான மருளவிழுகையும் குற்றங்களும் தேவ கோபமாகிய தண்டனையின் நாளுக்கென்று சேர்த்துவைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அவர்களது அக்கிரமம் நிறைவை அடைந்த போது, தெய்வீக பொறுமையை வருத்தப்படுத்துவது ஒரு பயங்கரமான செயல் என்பதை தேவனை நிந்தித்தவர்கள் மிகவும் தாமதமாக அறிந்துகொண்டனர். சாத்தானின் கொடூரமான வல்லமையின்மீது தடைவிதித்துக் கட்டுப்படுத்தும் தேவனுடைய ஆவி அதிகமாக நீக்கப்படும்போது, மனிதர்களின் துர்ப்பாக்கியமான நிலைமையில் மகிழ்ச்சி உள்ளவன், அவனது சித்தப்படி நடந்துகொள்ள அனுமதிக்கப் பட்டான். எழுதுகோலினால் எழுதப்படமுடியாத அளவிற்குப் பயங்கரமான குற்றங்களினால் அந்த நாடு நிரம்பும்வரை, கலகத்தின் சேவையைத் தேர்ந்துகொண்டிருந்தவர்கள், அதன் பலனை அறுவடை செய்யும்படி விட்டுவிடப்பட்டனர். பாழாக்கப்பட்ட மாநிலங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பயங்கரமான அழுகுரல், மிகமோசமான அழுகுரல்கள் கேட்கப்பட்டது. பூகம்பத்தினால் அசைக்கப்பட்டதுபோல் பிரான்ஸ் அசைக்கப் பட்டது. தேவப்பிரமாணத்திற்கு எதிராக உயர்த்தப்பட்ட பக்தியில்லாத காரத்தினால், மதம், சட்டம், சமுதாய ஒழுங்கு, குடும்பம், நாடு, சபை ஆகிய அனைத்தும் அடித்து வீழ்த்தப்பட்டன. “துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.” “பாவி நூறுதரம் பொல்லாப்பைச்செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். “துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை.” “அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்”-நீதி. 11:5 பிர. 8:13 நீதி. 1:29,31. (60) GCTam 325.3
பாதாளத்திலிருந்து உயர் ஏறுகின்ற தேவதூஷணம் செய்யும் வல்லமையினால் கொலைசெய்யப்பட்ட தேவனுடைய விசுவாசமுள்ள சாட்சிகள், அதிகக்காலம் மௌனமாக இருக்கவேண்டியதில்லை. “மூன்றரை நாளைக்குப் பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள் அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று”-வெளி. 11:11. 1793-60 பிரான்ஸ் நாட்டின் சட்டசபை வேதாகமத்தைத் தடைசெய்து கட்டளை பிறப்பித்தது. மூன்றரை வருடங்களுக்குப்பின் அந்தக் கட்டளையை நீக்கி, வேதாகமத்தை அனுமதிக்கலாம் என்னும் புதிய தீர்மானத்தை அதே சட்டசபை நிறைவேற்றியது. பரிசுத்தமான தேவப்பிரமாணங்களை நிராகரித்திதன் பலனான குற்றங்களின் அளவற்ற தன்மையைக் கண்டு உலகம் திகிலடைந்தது. நீதி நெறிகளுக்கும் சன்மார்க்கத்திற்கும் அஸ்திவாரம்— தேவன்மீதும் அவரது வார்த்தைகளின் மேலும் உள்ள விசுவாசம்தான் என்பதை மனிதர்கள் அங்கீகரித்தனர். “யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய். ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்” (ஏசாயா 37:23 எரேமியா 16:21) என்பது தேவனின் எச்சரிப்பு! (61) GCTam 326.1
இந்த இரண்டு சாட்சிகளைப்பற்றி தீர்க்கதரிசி, “மேலும் இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்” (வெளி. 11:12) என்று அறிவிக்கிறார். பிரான்ஸ் நாடு தேவனுடைய இரண்டு சாட்சிகளுடனும் யுத்தஞ்செய்ததினால், அவைகள் (வேதாகமம்) இதற்குமுன் ஒருபோதும் இராதவிதத்தில் மேன்மைப்படுத்தப்பட்டுள்ளன. 1804-ல் பிரிட்டன் மற்றும் வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதைப் பின்தொடர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தில், இதைப்போன்ற பல அமைப்புகள் அவைகளின் கிளைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. 1816-ல் அமெரிக்க வேதாகமச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் வேதாகமச் சங்கம் ஏற்படுத்தப்பட்டபோது, ஐம்பது மொழிகளில் வேதாகமங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப் பட்டன. அப்போதிலிருந்து அது நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (62) GCTam 327.1
1792-கு முந்திய ஐம்பது வருடங்களில் அயல்நாட்டு மிஷனரி ஊழியர்களின்மீது சொற்பமான கவனம் இருந்தது. புதிய சங்கங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஒருசில சபைகள் மட்டுமே அஞ்ஞான நாடுகளில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்குச் சரியான முயற்சியை மேற்கொண்டிருந்தன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில், ஒரு பெரும்மாறுதல் நிகழ்ந்தது. பகுத்தறிவு வாதத்தின் பலன்களினால் மனிதர்கள் அதிருப்தி யடைந்து, தெய்வீக வெளிப்படுத்தல், பரீட்சார்த்தமான மதம் ஆகியவை களின் அவசியத்தை உணர்ந்தனர். 1793-60 முதல் இங்கிலாந்து மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த, பக்திமிக்க கேரி என்பவர் மிஷனரி ஊழியத்தின் நெருப்பைப் புதிதாக இங்கிலாந்தில் கொளுத்தினார். இருபது வருடங்களுக்குப்பின், அமெரிக்காவிலிருந்த ஒரு மாணவர் குழுவின் வைராக்கியம், அமெரிக்காவின் மிஷன் குழுமம் என்ற ஒன்றினை அமைத்தது. இந்தக் குழுமத்தின் மங்களகரமான செயலாக, அமெரிக்க நாட்டிலிருந்து ஜட்சன் பர்மாவுக்கு மிஷனரியாகச் சென்றார். இந்த நேரத்திலிருந்து அயல்நாட்டு மிஷனரிமார்களின் ஊழியம் சற்றும் எதிர்பாராத அளவை எட்டியது. (63) GCTam 327.2
அச்சசுக் கலையில் உண்டான முன்னேற்றம் வேதாகம விநியோகத்தில் ஒரு தீவிர முன்னேற்றத்தை உண்டுபண்ணியது. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொலைத்தொடர்பு வசதிகளின் அதிகரிப்பு, பண்டைக் காலத்தில் நாட்டுக்கெதிராக நாடு கொண்டிருந்த (தவறான) எண்ணங்கள் தகர்த்தெறியப்பட்டிருப்பது, ரோமன் கத்தோலிக்கப் போப்புவின் அரசியல் அதிகார இழப்பு ஆகியவை தேவனுடைய வார்த்தையின் நுழைவிற்குப் பாதையைத் திறந்திருக்கிறது. கட்டுப்பாடு எதுவுமின்றி சில வருடங்கள் வேதாகமம் ரோம் நகரத் தெருக்களில் விற்கப்பட்டன. இப்பொழுது உலகில் மனிதர்கள் இருக்குமிடங்களுக்கெல்லாம் அது கொண்டுசெல்லப் படுகிறது. (64) GCTam 328.1
கடவுள் இல்லை என்ற வால்ட்டேர் என்பவர் ஒரு சமயம் “பன்னிரண்டு மனிதர்கள் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தனர் என்று மக்கள் திரும்பத்திரும்பக் கூறுவதைக் கேட்பதில் நான் களைப்புற்றிருக்கிறேன். அதைக் கவிழ்க்க ஒரு மனிதன் போதுமானவன் என்பதை நான் மெய்ப்பிப்பேன்” என்று பெருமையுடன் கூறினார். அவர் இறந்து நூறு வருடங்கள் கடந்துவிட்டன. வேதாகமத்திற்கு எதிரான போரில் இலட்சக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் அது அழிக்கப்படுவதற்குப்பதிலாக, வால்ட்டேரின் காலத்தில் எங்கு நூற்றுக்கணக்கானவைகள் மட்டும் இருந்தனவோ, அங்கு இப்பொழுது பத்தாயிரங்கள். ஆம்! இலட்சக்கணக்கான (கோடிக்கணக்கான) தேவனுடைய புத்தகத்தின் பிரதிகள் உள்ளன. கிறிஸ்தவ சபையைப்பற்றி ஒரு ஆரம்பகால சீர்திருத்தக்காரர் “வேதாகமம் ஒரு கொல்லனின் உலைக்களமாக இருந்து, அநேக சம்மட்டிகளை உடைத்துள்ளது” என்றார். “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்”-ஏசா. 54:17. (65) GCTam 328.2
“நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசா. 40:8) “அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்”-சங்கீதம் 111:7,8. மனித அதிகாரத்தின்மீது கட்டப்பட்டுள்ளவைகள் அனைத்தும் கவிழ்க்கப்பட்டுப்போகும். ஆனால் ஒருபோதும் மாறாத கன்மலையின்மீது அஸ்திவாரப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளோ என்றென்றும் நிலைத்து நிற்கும். (66) GCTam 328.3