(மூலநூல் : The Great Controversy பக்கம் : 49—60)
போ ப்புமார்க்க வல்லமை அமைக்கப்படும்போது நிகழ உள்ள மருளவிழுகையைப்பற்றி பவுல் அப்போஸ்தலன் தெசலோனிக் கேயருக்கு எழுதின இரண்டாம் நிரூபத்தில்: “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லா வற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” (2 தெச. 2:3,4) என்றும், இது நிகழ்வதற்கு முன் கிறிஸ்துவின் நாள் வராது என்றும், முன்னறிவித்தார். அதற்கும் மேலாக, “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது” (2 தெச. 2:7) என்றும் அக்காலத்திலிருந்த சகோதரரை எச்சரிக்கிறார். அந்த ஆரம்ப நாட்களிலேயே, போப்புமார்க்கம் அமைவதற்கான பாதையாக, தவறுகள் சபைக்குள் நுழைவதை அவர் கண்டார். (1) GCTam 39.1
அக்கிரமத்தின்இரகசியமும், அதனுடைய வஞ்சகமும் தேவதூஷணமும் நிறைந்த வேலையை ஆரம்பத்தில் திருட்டளவாகவும் மௌனமாகவும்செய்து, பின்னர் பெலமடைந்தது. மனிதர்களின் உள்ளத்தை தன் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்த பின்னர், அதன் வஞ்சகமும் தூஷணமுமான வேலையில் முன்னேறிச்சென்றது. கிட்டத்தட்ட ஒருவரும் உணரமுடியாத விதத்தில் அஞ்ஞான மார்க்கம் கிறிஸ்தவ சபைக்குள் நுழைந்தது. சபை அஞ்ஞான மார்க்கத்தினால் உண்டான பயங்கரமான உபத்திரவத்தை அனுபவித்தபோது, சமரசத்தின் ஆவியும் உலகத்துடன் இசைந்திருத்தலின் ஆவியும் சில காலத்திற்குக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. ஆனால் உபத்திரவம் நின்ற 39 போது, கிறிஸ்துவிடமும் அவரது அப்போஸ்தலர்களிடமும் இருந்த தாழ்மையும் எளிமையும் புறம்பாக ஒதுக்கப்படவே, கிறிஸ்தவ சமயம் நியாய ஸ்தலங்களிலும் அரசர்களின் அரண்மனைகளிலும் நுழைந்தது. தேவன் இருக்கவேண்டிய இடத்தில், மனிதக் கோட்பாடுகளையும் சடங்காச் சாரங்களையும் தேவனுக்குப் பதிலாக வைத்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த, கான்ஸ்டண்டைன் பேரரசனின் பெயரளவிலான மதமாற்றம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவரவே, போலியான நீதியின் வஸ்திரத்தை அணிந்துகொண்டு உலகம் சபைக்குள் நுழைந்தது. அப்பொழுது கறைகளின் செயல்கள் வேகமாக முன்னேறின. மறைந்தழிந்து விட்டதுபோல் தோற்றமளித்த அஞ்ஞானமார்க்கம் வெற்றி வீரனாக மாறியது. அதன் ஆவி சபையைக் கட்டுப்படுத்தியது; அதன் கோட்பாடுகள், சமயச் சடங்குகள், மூட நம்பிக்கைகள் கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று சொல்லிக்கொண்டவர்களின் விசுவாசத்தில் இணைக்கப்பட்டன. (2) GCTam 39.2
கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் அஞ்ஞான மார்க்கத்திற்கும் இடையில் உண்டான இந்தச் சமரசம், எதிர்க்கிறவனும், தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்துகிறவனுமான-“பாவமனிதன்” என்று தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டவனுடைய வளர்ச்சிக்கான அமைப்பு-தவறான சமய அமைப்பு, சாத்தானுடைய வல்லமையின் பெரும் படைப்பாகும். சிங்காசனத்தில் அமர்ந்து, உலகை தனது விருப்பப்படி ஆட்சிசெய்யும்படி, அவன் செய்த முயற்சியின் நினைவுச்சின்னமாக அது உள்ளது. (3) GCTam 40.1
ஒரு தடவை கிறிஸ்துவுடன் சமரசம் செய்துகொள்ள சாத்தான் முயன்றான். சோதனைக்களமாயிருந்த வனாந்தரத்தில், அவன் தேவ குமாரனிடம் வந்து, உலக இராஜ்யங்களனைத்தையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காட்டி, அந்தகாரப் பிரபுவாகிய அவனது மேலாண்மையை அவர் அங்கீகரித்தால், அவைகளையெல்லாம் அவரது கரத்தில் கொடுத்துவிடுவதாகக் கூறினான். இல்லாததை உள்ளதுபோல் பாவித்துப்பேசிய சோதனைக்காரனைக் கிறிஸ்து கடிந்துகொண்டு, அவனை விலகிச்செல்லும்படி நிர்ப்பந்தித்தார்; ஆனால் அதேவிதமான சோதனைகளுடன் அவன் மனிதர்களைச் சந்தித்து வெற்றி அடைகிறான். உலகப்பிரகாரமான ஆதாயங்களையும் கௌரவங்களையும் அடைந்துகொள்ளுவதற்காக, பெரிய மனிதர்களின் உதவியையும் ஆதரவையும் தேடிச்செல்ல சபை நடத்தப்பட்டு, இவ்விதமாக அது கிறிஸ்துவை நிராகரித்து, சாத்தானின் பிரதிநிதியான ரோமப் பேராயரின் உறவைப்பெற இணங்கும்படிக்கு ஈர்க்கப்பட்டது. (4) GCTam 40.2
உலகெங்கும் உள்ள கிறிஸ்துவின் சபைகளின் தலைவர் போப்பு என்பதும், இவருக்கு உலகெங்குமுள்ள பேராயர்கள் போதகர்கள்மீது மேலாண்மைமிக்க வல்லமை உள்ளது என்பதும், ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் தலையாய கொள்கைகளில் ஒன்றாகும். இதற்கும் அதிகமாக, போப் தேவத்துவத்தின் பட்டத்தை எடுத்துக்கொண்டார்! போப் கர்த்தராகிய தேவன் என்று அவர் தனக்குப் பெயர் இட்டுக்கொண்டு, தவறா வரமுடையவர் என்றும் கூறிக்கொண்டு, மனிதர்கள் அவரைத் தொழவேண்டும் என்றும் உரிமையுடன்கோருகிறார்! இவ்விதமாகச் சோதனைக்களமான வனாந்தரத்தில் சாத்தான் பாராட்டின அதே உரிமையை, ரோமன் கத்தோலிக்கச் சபையின் மூலமாக வற்புறுத்துகிறான்! ஏராளமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் போப்பை வணங்க இணங்குகின்றனர்! (5) GCTam 40.3
ஆனால் கிறிஸ்து கொடிய எதிரியைப் பார்த்து: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” (லூக்கா 4:8) என்று சொன்னதுபோல, தேவனுக்குப் பயந்து, அவரை வணங்குபவர்கள், பரலோகத்திற் கெதிரான துணிவான இந்த ஏற்பாட்டினை எதிர்க்கின்றனர். சபைக்குத் தலைவராக இருக்கும்படி, தேவன் எந்த ஒரு மனிதனையும் ஏற்படுத்தி யிருப்பதாக, அவரது வார்த்தையில் குறிப்பிடவில்லை. போப்பரசனின் மேலாண்மை என்னும் கோட்பாடு வேதவசனப் போதனைகளுக்கு நேர் எதிரானது. பறித்துக்கொள்வதாலேயே அன்றி, போப்புவிற்குக் கிறிஸ்துவுடைய சபையின்மீது எந்தவித அதிகாரமும் இல்லை. (6) GCTam 41.1
புரொட்டஸ்டண்டுகள் மதவிரோதிகள் என்றும், வேண்டுமென்றே அவர்கள் சபையைவிட்டுப் பிரிந்துபோகிறவர்கள் என்றும், மதத்திற்கு எதிரான கொள்கையுடையவர்கள் என்றும் அவர்கள்மேல் குற்றச்சாட்டுவதில் ரோமன் கத்தோலிக்கர்கள் பிடிவாதமாகவே இருந்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையில் அவர்களுக்குத்தான் பொருந்தும். “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்டதை” (யூதா 3)- கிறிஸ்துவின் கொடியைக் கீழேபோட்டுவிட்டவர்கள்—அவர்கள்தான்! (7) GCTam 41.2
தன்னுடைய வஞ்சனையை அறியவும், தன்னுடைய வல்லமைக்கெதிராக நிற்கவும், பரிசுத்த வேதவாக்கியங்கள் மனிதர்களுக்கு உதவும் என்பதை சாத்தான் நன்றாக அறிந்திருந்தான். உலக மீட்பருங்கூட வேதவாக்கியங்களின் மூலமாகத்தான் அவனது தாக்குதலை முறியடித்தார்! “என்று எழுதியிருக்கிறதே” என்னும் நித்திய சத்தியமாகிய கேடயத்தை ஒவ்வொரு தாக்குதலின்போதும் காட்டினார். எதிராளியின் ஒவ்வொரு கருத்தையும் வேதவாக்கியத்தின் ஞானத்தினாலும் வல்லமையினாலும் அவர் எதிர்த்தார். மனிதர்களை இழுத்துச் செல்லவும், போப்பு மார்க்கத்தின் அதிகாரத்தை அமைக்கவும், வேதவாக்கியங்களைப்பற்றிய அறியாமையில் மக்களை வைக்கவும் சாத்தான் விரும்புகிறான். வேதாகமம் தேவனை உயர்த்தி, மனிதர்களை அவர்களது உண்மையான நிலையில் வைக்கும். எனவே, அவைகளின் பரிசுத்தமான சத்தியங்கள் மறைக்கப்பட்டு, அமிழ்த்தப் பட்டாகவேண்டும் என்பதான இந்தத் தர்க்கவியல், ரோமன் கத்தோலிக்க சபையால் கையாளப்பட்டது. வேதாகமம் பரவுவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தடைசெய்யப்பட்டது. வேதாகமத்தை வாசிப்பதிலிருந்தும், அவைகளை வைத்திருப்பதிலிருந்தும், மக்கள் தடைசெய்யப்பட்டனர். கொள்கையற்ற பாதிரிமார்களும் உபதேசிகளும், அதன் போதனைகளை அவர்களது நோக்கங்களுக்கு ஏற்றபடி விளக்கினர். இவ்வாறாக, போப்பு, சபை-அரசு ஆகியவைகளின் அதிகாரத்தை பெற்று, கிட்டத்தட்ட எல்லோராலும் தேவனின் பிரதிநிதி (பதிலாளி) என்று ஒப்புக்கொள்ளப்பட்டார் (தவறான விதத்தில்)! (8) GCTam 41.3
தவறுகளைக் கண்டுபிடிக்கும் கருவியான (வேதாகமம்) நீக்கப் பட்டுவிடவே, சாத்தான் அவனது விருப்பப்படி செயல்பட்டான். “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான் (மாற்றும்)” என்று தானியேல் 7:25-ல் சொல்லப்பட்டபடி, தீர்க்கதரிசனம் இதை முன்னறிவித்திருந்தது. இந்த முயற்சி தாமதமாகச் செய்யப்படவில்லை. பிற மதத்திலிருந்து மதம்மாறிவருபவர்களின் உருவ வழிபாட்டிற்குத் துணையாக நிற்கவும், அவர்களைப் பெயரளவில் கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளச்செய்யவும்வேண்டி, கிறிஸ்தவ ஆராதனையில் சிலைகளைப் போற்றுகின்ற-துதிபாடுகின்ற, முறைகள் மெல்லமெல்ல அறிமுகப்படுத்தப்பட்டன. கடைசியாக, ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானத்தின்மூலம், உருவ வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சமய விரோதமான செயலை நிலைப்படுத்த, ரோமன் கத்தோலிக்க சபை, தேவப்பிரமாணத்திலுள்ள உருவ வழிபாடு செய்யக்கூடாது என்கிற இரண்டாம் கற்பனையை நீக்கிவிட்டு, பத்தாவது கற்பனையை இரண்டாகப் பிரித்து, பத்துக் கற்பனைகள் என்ற எண்ணிக்கையைக் காக்க முனைந்தது! (9) GCTam 42.1
அஞ்ஞான மார்க்கத்திற்குச் சலுகை வழங்கும் ஆவி பரலோக வல்லமையை மேலும் அவமதித்து, தேவன் ஆசீர்வதித்துப் பரிசுத்தப்படுத்திய ஓய்வுநாளை (ஆதியாகமம் 2:2,3) மாற்றியமைத்து, சூரியவணக்கத்திற்குரிய நாளாக-பண்டிகை நாளாக அஞ்ஞானிகள் அனுசரித்துவந்த-ஞாயிற்றுக் கிழமையை உயர்த்தியது. இவ்வாறாகச் சாத்தான் நான்காவது பிரமாணத் திலும் மோசக்கருத்துடன் குறுக்கிட்டான். இந்த மாறுதல் ஆரம்பத்தில் வெளிப்படையாகச் செயல்படவில்லை. முதலாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில், மெய்யான ஓய்வுநாள் கிறிஸ்தவர்கள் அனைவராலும் அனுசரிக்கப் பட்டிருந்தது. அவர்கள் தேவனை மேன்மைப்படுத்துவதில் அதிக வாஞ்சை உள்ளவர்களாயிருந்து, தேவப்பிரமாணம் மாறாதது என்று நம்பி, பிரமாணங்களின் பரிசுத்தத்தை வைராக்கியமாகக் காத்துவந்தனர்; ஆனால், சாத்தான் அவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற, மிகவும் தந்திரமாக அவனது ஏவலர்களின் மூலமாகச் செயலாற்றினான். மக்களுடைய கவனத்தை ஞாயிற்றுக் கிழமைக்கு ஈர்ப்பதற்காக, அந்தநாளை கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளின் மேன்மையைப் போற்றும் பண்டிகைநாளாக ஆக்கினான்! சமயச் சடங்குகள் அந்த நாளில் நடத்தப்பட்டன; என்றாலும் அந்தநாள் ஒரு பொழுதுபோக்கு நாளாகவேக் கருதப்பட்டது, ஓய்வுநாள் இன்றும் பரிசுத்த நாளாகவே அனுசரிக்கப்பட்டுவருகிறது. (10) GCTam 42.2
சாத்தான் அவனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழியை ஆயத்தம்செய்யும்படி, கிறிஸ்துவின் மனித அவதாரத்திற்குமுன், ஓய்வுநாளை மிகவும் கடினமான நாளாகவும், அதைக் கடைப்பிடிப்பதை மிகவும் பாரமானதாகவும் மாற்றும்படி யூதர்களை நடத்தினான். இப்பொழுதோ, அதை இப்படிக் கருதும்படியாக அவர்களை நடத்தின தவறான வெளிச்சத்தை அனுகூலமாக எடுத்துக்கொண்டு, ஓய்வுநாள் அனுசரிப்பு ஒரு யூத சமுதாய ஏற்பாடு என்று, அதன்மீது அவமதிப்பை உண்டுபண்ணுகிறான். கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையை ஒரு மகிழ்ச்சிமிக்க பண்டிகை நாளாகத் தொடர்ந்து அனுசரித்தபோது, யூதமார்க்கத்தின்மீதுள்ள அவர்களுடைய வெறுப்பைக் காட்டும்படிக்கு, ஓய்வுநாளை உபவாசநாளாகவும், துக்கமும் வருத்தமும் நிறைந்த நாளாகவும், அனுசரிக்கும்படி அவர்களை நடத்தினான். (11) GCTam 43.1
நான்காம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், கான்ஸ்டண்டைன் பேரரசன் ரோம் நாடெங்கிலும் ஞாயிற்றுக்கிழமையை ஒரு பண்டிகைநாள் என்று கட்டளை பிறப்பித்தான். அவனுடைய அஞ்ஞானக் குடிமக்கள் சூரியனின் நாளை வணக்கத்திற்குரிய நாளாக்கினர். கிறிஸ்தவர்களால் அது மேன்மைப்படுத்தப்பட்டது. ஒன்றையொன்று எதிர்க்கின்ற அஞ்ஞானமார்க்கம் கிறிஸ்தவமார்க்கம் ஆகிய இரண்டின் விருப்பங்களையும் ஒருமைப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது பேரரசனின் குறிக்கோளாயிருந்தது. ஒரேநாள் அஞ்ஞான மார்க்கத்தினராலும் கிறிஸ்தவர்களாலும் ஆசரிக்கப்பட்டால், அது பெயரளவிலான கிறிஸ்தவமார்க்கத்தை, அஞ்ஞான மார்க்கத்தினர் ஏற்றுக்கொள்ள வழி வகுக்கும். அதனால் சபையின் வல்லமையும் மகிமையும் உயரும் என்ற ஆசையாலும், ஆதிக்க வெறியினாலும், சபையின் பேராயர்கள் இதைச் செய்யும்படியாக பேரரசனை வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக்கிழமை ஓரளவிற்குப் பரிசுத்தமானது என்று கருதும்படி, கிறிஸ்தவர்கள் மெதுவாக நடத்தப்பட்டபோதிலும், அவர்கள் இன்னும் நான்காவது கற்பனைக்குக் கீழ்ப்படிந்து, உண்மையான ஓய்வுநாள் கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கடைப்பிடித்திருந்தனர். (12) GCTam 43.2
பிரதான வஞ்சகன் அவனது செயலை இத்துடன் முடிக்கவில்லை. கிறிஸ்தவ உலகத்தை அவனது கொடியின்கீழ் கொண்டுவரவும், அவனது பிரதிநிதிகளாயிருந்து, கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதான பிஷப் (போப்) மூலமாக அவனது வல்லமையைச் செயல்படுத்தவும், தீர்மானித்திருந்தான். அரைகுறையாக மனந்திரும்பின அஞ்ஞானிகள் மூலமாகவும், பேராசைமிக்க பாதிரிமார்களின் மூலமாகவும் உலக ஆசையுடைய சபை பிஷப்புகள் மூலமாகவும் அவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினான். சபையின் மேலான - மதிக்கப்படும் பொறுப்புகளிலிருந்தவர்கள் உலகெங்கிலும் இருந்து அழைக்கப்பட்டு பெரும் ஆலோசனைக்கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆலோசனைக்கூட்டத்திலும், தேவன் ஏற்படுத்தின ஓய்வுநாளானது கீழாகத் தாழ்த்தப்பட்டு, அதற்குச் சமமாக ஞாயிற்றுக்கிழமை மேலாக உயர்த்தப்பட்டது! இவ்வாறாக, அஞ்ஞானத் திருவிழா தெய்வீக ஏற்பாடு என்று மேன்மைப்படுத்தப்பட்ட அதேநேரத்தில், வேதாகம ஓய்வுநாள் யூதர்களின் ஞாபகச்சின்னம் என்று சொல்லப்பட்டு, அதை ஆசரிப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது! (13) GCTam 44.1
“தேவன் என்னப்படுவது எதுவோ, அவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவன்” (2 தெசலோனிக்கேயர் 2:4) என்று கூறப்பட்டபடியே பெரும் மாயக்காரன் தன்னை உயர்த்துவதில் வெற்றியடைந்தான். மனித இனம் முழுவதற்கும் உண்மையும் ஜீவனுமுள்ள தேவனைத் தவறின்றிச் சுட்டிக்காட்டுகின்ற, ஒரே தெய்வீகப் பிரமாணத்தை மாற்ற அவன் துணிந்தான். நான்காம் பிரமாணத்தில், வானத்தையும் பூமியையும் உண்டுபண்ணின சிருஷ்டிகராக தேவன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். அதன்மூலமாக, பொய்யான தேவர்கள் அனைவரிலிருந்தும் அவர் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கிறார். சிருஷ்டிப்பின் நினைவுச் சின்னமாக-ஏழாவதுநாள்— மனிதனின் ஒரு ஓய்வுநாளாக இருக்கும்படி பரிசுத்தப்படுத்தப்பட்டது. ஜீவனுள்ள தேவனை, ஜீவனுக்கு ஆதாரமானவராகவும், பயபக்திக்கும் தொழுகைக்கும் இலக்கானவராகவும், மனிதர்களின் மனதில் எப்பொழுதும் வைத்திருக்கும்படி, அது வடிவமைக்கப்பட்டது.... மனிதர்களை தேவனிடமுள்ள பிணைப்பிலிருந்தும், அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதிலிருந்தும் பிரிக்க சாத்தான் முயலுகிறான்; எனவேதான், தேவனைச் சிருஷ்டிகர் என்று சுட்டிக்காட்டுகின்ற, சிறப்பான அந்தக் கற்பனைக்கெதிராகச் செயல்படும் முயற்சியில் ஈடுபடுகிறான். (14) GCTam 44.2
ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ந்த கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அந்நாளைக் கிறிஸ்தவ சபையின் ஓய்வுநாளாக ஆக்கியது என்று புரொட்டஸ் டாண்டுகள் கூறுகின்றனர்; ஆனால், அதற்கான வேதாகம ஆதாரம் இல்லை. கிறிஸ்துவினாலோ அல்லது அவரது சீடர்களாலோ அந்த நாளுக்கு அப்படிப்பட்ட மேன்மை அளிக்கப்படவில்லை. “அக்கிரமத்தின் இரகசியம்” என்பதில்-ஞாயிறு ஆசரிப்பின் ஆரம்பம் ஒரு பொய்க் கிறிஸ்தவ ஏற்பாடு என்கிற பொருள் அடங்கியுள்ளது. இந்த வேலை பவுலின் நாட்களிலேயே ஆரம்பமாகி இருந்தது. போப்பு மார்க்கத்தின் இந்தப் பிள்ளையைக் கர்த்தர் எப்போது எங்கே சுவீகாரம் செய்தார்? வேதவாக்கியங்கள் அனுமதிக்காத இந்த மாற்றத்திற்கு ஏற்ற-பொருத்தமான காரணமாக எதனைக் காட்டமுடியும்? (15) GCTam 44.3
ஆறாம் நூற்றாண்டில் போப்பு மார்க்கம் உறுதியான வகையில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ரோம் நகரம் அதன் வல்லமையின் இருப்பிடமாகவும், ரோம் நகரப் பேராயர் சபை முழுவதற்கும் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டார். அஞ்ஞான மார்க்கம் போப்புமார்க்கத்திற்கு இடம்கொடுத்திருந்தது. “வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது”- வெளி. 3:2. இப்பொழுது தானியேலின் தீர்க்கதரிசனத்திலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்திலும் உள்ள 1260 வருட போப்புமார்க்கத்தினரின் ஒடுக்குதல் ஆரம்பமானது (தானி. 7:25; வெளி. 13:5-7). கிறிஸ்தவர்கள் போப்பு மார்க்கத்தின் சடங்குகளையும் தொழுகை முறைகளையும் ஒப்புக்கொண்டு, அதன் மேன்மைக்குப் பணியவேண்டும்; அல்லது அவர்களுடைய வாழ்நாளை நிலவறையில் கழிக்கவேண்டும்; அல்லது சித்திரவதை செய்யும் கருவியால் சாகவேண்டும்; அல்லது உயிருடன் எரிக்கப்படவேண்டும்; அல்லது கொலைஞரின் கோடாலியால் தலை வெட்டப்படவேண்டும். இப்படிப்பட்ட மரணங்களிலொன்றை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். “பெற்றோராலும் சகோதரராலும் சொந்த ஜனங்களாலும் சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்” (லூக்கா 21:16,17) என்ற இயேசுவின் வார்த்தைகள் இப்போது நிறைவேறின. முன்னெப்போதும் இருந்ததைவிடவும், மிக மூர்க்கமான உபத்திரவம் விசுவாசிகளுக்கு உண்டானது. உலகம் ஒரு பெரிய போர்க்களமாயிற்று. நூற்றுக்கணக்கான வருடங்கள் கிறிஸ்துவின் சபை தனிமையிலும், இருளிலும் தஞ்சஞ்கொண்டிருந்தது. தீர்க்கதரிசி இதைக்குறித்து: “ஸ்திரீயானவள் வனாந்தரத்துக்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்து இருநூற்று அறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது” (வெளி. 12:6) என்று கூறுகிறார். (16) GCTam 45.1
ரோமன் கத்தோலிக்கச் சபை ஆட்சிபீடம் ஏறியது, இருண்ட காலத்தின் ஆரம்பத்தைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது! அவனது வல்லமை அதிகரித்தபோது, இருள் அதிகரித்தது. விசுவாசம், மெய்யான அஸ்திவார மாயிருக்கும் கிறிஸ்துவிடமிருந்து (ரோமின் மேல்) போப்புவிற்கு மாற்றப்பட்டது. பாவ மன்னிப்பிற்கும்-நித்திய மீட்பிற்கும், தேவகுமாரனின்மீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, மக்கள் போப்புவையும் அவரால் அதிகாரம்பெற்ற குருமார்களையும் நோக்கினார்கள். உலகிலுள்ள அவர்களது மத்தியஸ்தர்- போப்பு என்றும், ஒருவரும் அவர் மூலமாக அல்லாமல் தேவனை அணுக முடியாதென்றும், கடவுளுக்குப் பதிலாக நிற்கும் போப்புவிற்குத் தவறாமல் கீழ்ப்படியவேண்டுமென்றும் மக்கள் கற்பிக்கப்பட்டனர்; இந்தக் கட்டளையைவிட்டுவிலகி-அதை மீறுபவர்கள், சரீர-ஆத்தும தண்டனைகளை அனுபவிப்பதற்கு அதுவே போதுமான காரணமாயிருந்தது. இவ்வாறாக, மக்களின் இதயங்கள் தேவனிடமிருந்து, தவறக்கூடிய- தவறிக்கொண்டிருக்கின்ற-கொடுமையான மனிதர்களிடத்திற்கு மட்டுமல்ல, அதையும் கடந்து, இவர்கள்மூலமாகச் செயலாற்றும் அந்தகாரப் பிரபுவினிடத்திற்கும் திருப்பப்பட்டது. பாவம்-பக்தி என்ற ஆடைக்குள் மறைந்துகொண்டது. வேதவாக்கியங்கள் நசுக்கப்படும்போது, மனிதன் தன்னையே மேலானவனாகக் கருத ஆரம்பிக்கிறான். அப்போது நாம் ஏமாற்றுதல்களையும், வஞ்சகங்களையும், கீழ்த்தரமாக்கும் அக்கிரமங் களையும்தான் காணவேண்டியதிருக்கும். மனிதச் சட்டங்களினாலான சடங்காச்சாரங்களின் உயர்வால், தேவப்பிரமாணங்களை ஒதுக்கிவைக்கும் ஊழல்கள் வெளித்தோன்றின. (17) GCTam 46.1
கிறிஸ்துவின் சபைக்கு அந்த நாட்கள் அபாயகரமானவையாக இருந்தன. விசுவாசத்துடன் பரிசுத்த தரத்தைக் காத்திருந்தவர்கள் உண்மையில் மிகச் சிலராகமட்டுமே இருந்தனர். சத்தியம் சாட்சியற்ற நிலையில் விடப்படாமலிருந்தாலுங்கூட, சில சமயங்களில் தவறுகளும் மூடநம்பிக்கை களும் அதை முற்றிலுமாக மேற்கொண்டுவிடும் என்பதுபோல் காணப்பட்டு, உண்மையான மதம் தடைசெய்யப்பட்டு, பூமியிலிருந்து நீக்கப்பட்டுவிடக்கூடும் என்பதுபோலும் காணப்பட்டது. சுவிசேஷம் பார்வையிலிருந்து மறைந்தது. ஆனால் மதவடிவங்கள் பெருகின. மக்கள் மிகக் கடுமையான சமயச் சடங்குகளின் கட்டுப்பாடுகளினால் பாரப்படுத்தப்பட்டனர். (18) GCTam 46.2
அவர்கள் போப்புவை மட்டும் அவர்களது மத்தியஸ்தராகக் கருதாமல், பாவப்பரிகாரத்திற்கு அவர்களுடைய சொந்தக் கிரியைகளை நம்பும்படியும் கற்பிக்கப்பட்டனர். நீண்ட புண்ணியஸ்தலப் பயணங்கள், பாவப்பரிகாரச் செயல்கள், புனிதச் சின்னங்களை வணங்குதல், சபைக்கான கட்டிடங்களைக் கட்டுதல், புண்ணிய ஸ்தலங்களை அமைத்தல், பலிபீடங்கள் கட்டுதல், பெரும் தொகையைச் சபைக்குக் கொடுத்தல், போன்ற மற்றும் அநேக செயல்களினால், தேவ கோபத்திற்குப் பரிகாரம் உண்டுபண்ணி, தேவனைச் சமாதானப்படுத்தி, அவரிடமிருந்து அனுகூலங்களைப் பெறலாம் என்றும் போதிக்கப்பட்டனர். இது, அற்பமான காரியங்களுக்காகக் கோபமடைகின்றதும், மனிதனின் பரிகாரச் செயல்களினாலும் பரிசுகளினாலும் சாந்தம் அடைகின்றதுமான குணமுடையவராக தேவனைக் காட்டியது. (19) GCTam 46.3
இவைமட்டுமன்றி, ரோமன் கத்தோலிக்க மதத்தலைவர்களுக் கிடையில் துர்க்குணங்களும் தீய பழக்கங்களும் இருந்து, அதன் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பதுபோல் காணப்பட்டது. எட்டாம் நூற்றாண்டின் முடிவில், அப்போதைய பிஷப்புகளிடம் இருந்த ஆவிக்குரிய வல்லமை, முதலாம் நூற்றாண்டில் இருந்த பிஷப்புகளிடமுமிருந்தது என்று அவர்கள் உரிமைகொண்டாடினர். இந்தக் கூற்றின் உரிமையை நிலைநாட்ட, அதன் வல்லமையின் அடையாளத்தைக் காட்ட, ஏதாவது செய்தாகவேண்டியதிருந்தது. இந்தக்கருத்தைப் பொய்யின் பிதாவானவன் தயாராகக் கொண்டுவந்தான். பழங்கால எழுத்துக்கள், சந்நியாசிகளால் பொய்க்கையெழுத்தால் எழுதப்பட்டன. போப்பின் உலகளாவிய மேலாண்மை பழங்காலத்திலிருந்தே உள்ளது என்பதை ஸ்தாபிக்கும்படி இதுவரை கேள்விப்படாத ஆலோசனைக் கூட்டங்களின் கட்டளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சத்தியத்தை நிராகரித்த சபைகள் இந்த ஏமாற்றும் செயல்களை பேராசையுடன் ஏற்றுக்கொண்டன. (20) GCTam 47.1
குப்பையும் தவறுமான கோட்பாடுகள் ஊழியத்தைத் தடுத்ததினால், மெய்யான அஸ்திவாரத்தின்மேல் கட்டிடம் எழுப்பின சில விசுவாசிகள் கலக்கமும் இடைஞ்சலும் அடைந்தனர். “சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது. மண்மேடு மிச்சமா யிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது” (நெகேமியா 4:10) என்று நெகேமியாவின் நாளில் எருசலேமின் சுவரை எடுத்துக்கட்டினவர்கள் சொன்னதுபோல, சிலர் சொல்லுவதற்குத் தயாராக இருந்தனர். உபத்திரவத்திற்கெதிரான தொடர்ச்சியான போராட்டம், ஏமாற்றுதல், அக்கிரமம் ஆகியவைகளினாலும் அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுக்கச் சாத்தான் செய்த ஒவ்வொருவிதமான இடையூறுகளினாலும் சிலர் களைப்படைந்தனர். விசுவாசத்துடன் கட்டின சில கட்டிடப் பணியாளர்கள், இதயம் சோர்ந்து, தங்களுடைய சொத்துக்களையும் உயிரையும் பாதுகாப்பதற்காக மெய்யான அஸ்திவாரத்தைவிட்டு விலகிச் சென்றனர். அவர்களது எதிரிகளினால் உண்டான எதிர்ப்பைக் கண்டு கலங்காத மற்றவர்கள், “அவர்களுக்குப் பயப்படாதிருங்கள், நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து....” என்றபடி... வேலைசெய்யச் சென்றார்கள். “கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் கட்டினார்கள்” (நெகேமியா 4:14, 18; எபே. 6:17). (21) GCTam 47.2
சத்தியத்திற்கெதிரான வெறுப்பும் எதிர்ப்புமிக்க அதே ஆவி, தேவனுடைய எதிரிகளை ஒவ்வொரு காலத்திலும் தூண்டிக்கொண்டிருந்தது. அதைப்போலவே, தேவனுடைய ஊழியக்காரர்களிடம் அதே ஜாக்கிரதையும் நேர்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. “நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்” (மாற்கு 13:37) என்று கிறிஸ்து அவரது முதல் சீடர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் காலத்தின் முடிவிலுள்ள நமக்குங்கூட பொருந்தக்கூடியதே! (22) GCTam 48.1
இருள், காரிருள் ஆவதைப்போல் தோன்றினது. உருவ வழிபாடு மிகவும் அதிகமாகி, சாதாரணமாகிவிட்டது! சிலைகளுக்கு முன் மெழுகுவர்த்திகள் எரிக்கப்பட்டு, அவைகளை நோக்கி ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. மிகக் கீழ்த்தரமான மூடநம்பிக்கைகள்மிக்க சம்பிரதாயங்கள் நிலவிவந்தன. பகுத்தறிவே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணுமளவிற்கு மனிதர் களின் மனங்கள் மூட நம்பிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. உலகப்பிரகாரமான மகிழ்ச்சியை நாடி, உணர்ச்சிகளின்படி நடந்த ஊழல் மிக்க குருமார்களையும் பேராயர்களையும் வழிநடத்துதலுக்காக நோக்கிப் பார்த்த மக்கள் அறியாமையிலும் தீய குணங்களிலும் மூழ்கி இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கமுடியும். (23) GCTam 48.2
ரோமன் கத்தோலிக்க சபை பரிபூரணமானது என்று பதினோராம் நூற்றாண்டில் ஏழாம் கிரகோரி என்ற போப்பின் நிர்வாக அமைப்பு பறைசாற்றிய செயல் அகந்தையின் அடுத்த படிக்கட்டாக இருந்தது. வேத வாக்கியங்களின்படி சபை ஒருபோதும் தவறியதில்லை; அது ஒருபோதும் தவறவும்செய்யாது என்பது அவரால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பு களில் ஒன்றாகும்; ஆனால், வேதவாக்கியச் சான்றுகள் இதற்கு இசைவாக இருக்கவில்லை. அகந்தைமிக்க அந்தப் போப்பானவர் அடுத்து, “பேரரசர் களையும் நீக்கும் வல்லமை தனக்கு உண்டென்றும், அவரால் கொடுக்கப் பட்ட தண்டனையை எவராலும் மாற்றி எழுத இயலாது என்றும், ஆனால், அவைகளைத் திரும்பவும் மாற்றும் முன்னுரிமை அவர் ஒருவருக்கு மட்டும் உ உண்டு” என்றும் அறிவித்தார்.(24) GCTam 48.3
நான்காம் ஹென்றி எனும் ஜெர்மானியப் பேரரசனை அவர் நடத்தியவிதம் தவறா வரம் பெற்றவர் என்று தன்னைப்பற்றிக்கூறும் போப்புவின் கொடுங்கோன்மையான சுபாவத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. போப்புவின் அதிகாரத்தை மதிக்காமலிருக்க உத்தேசித்ததற்காக, அந்தப் பேரரசன் சபையிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு, சிங்காசனத்திலிருந்தும் நீக்கப்பட்டான். போப்புவின் உத்திரவினால் அவனுக்கெதிராகக் கலகம் செய்யும்படித் தூண்டிவிடப்பட்ட அவனது சொந்த இளவரசர்களால் அவன் கைவிடப்பட்டு, அவர்களால் உண்டான பயமுறுத்தல்களினால் திகைப் படைந்தவனாக, போப்புவுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். போப்புவின்முன் தன்னைத் தாழ்த்து வதற்காக, அவன் அவனுடைய மனைவியுடனும் விசுவாசமிக்க வேலைக்காரன் ஒருவனுடனும் அந்த குளிர்காலத்தின் மத்தியில் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றான். மெய்க்காப்பாளர்கள் எவருமின்றி, போப் கிரகோரி தங்கியிருந்த கோட்டைக்கு அவன் நடத்திச்செல்லப்பட்டு, அங்கு திறந்தவெளியில், தலைப்பாகையும் காலணியும் இல்லாது, மோசமான உடையில், கடும் குளிரில், போப்புவைக் காணும்படிச் செல்லும் அனுமதிக்காகக் காத்து நின்றான். மூன்று நாட்கள் அவன் உபவாசித்துப் பாவஅறிக்கை செய்யும்வரை போப்பு அவனுக்கு மன்னிப்புக் கொடுக்க இரங்கவில்லை; அதற்குப்பின்னரும், காத்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவனது பதவியின் அடையாளத்தையும், அரச உரிமையையும் திரும்பப் பெற்றான். அரசர்களின் பெருமையைக் கீழ்ப்படுத்துவது தனது கடமை என்று போப் கிரகோரி தனது வெற்றியைக் குறித்துப் பெருமையடித்துக்கொண்டார். (25) GCTam 48.4
“உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” (மத்தேயு 20:27) என்று தன் சீடர்களுக்குப் போதித்து, சமாதானத்தையும் மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக இதயக் கதவைத் தட்டுபவராகத் தன்னைக்காட்டும் எளிமையும் சாதுவுமான கிறிஸ்துவிற்கும், தன்னைப்பற்றி இறுமாப்புமிக்க போப்புவிற்கும் இடையிலுள்ள ஒப்புவமை எவ்வளவு வினோதமாக உள்ளது! (26) GCTam 49.1
அதற்கடுத்த நூற்றாண்டுகள் ரோமன் கத்தோலிக்க மார்க்கம் முன்வைத்த, தொடர்ச்சியான—அதிகமான தவறுகளுக்குச் சாட்சி பகர்ந்தன. போப்புமார்க்கம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பே, அஞ்ஞான தத்துவ சாஸ்திர போதனைகள் சபைக்குள் கொண்டுவரப்பட்டு செல்வாக்கைப் பெற்றிருந்தது. மதம்மாறிவிட்டதாகச் சொல்லிக் கொண்ட அநேகர், அவர்களுடைய அஞ்ஞான மார்க்கக் கோட்பாடு களையே தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்து, அதையே ஆராய்ந்து கொண்டிருந்ததோடல்லாமல், அஞ்ஞானிகளிடத்தில் கிறிஸ்தவ செல்வாக்கு விரிவடைய, அது ஆதாரமாயிருக்கும் என மற்றவர்களிடமும் அதை வற்புறுத்தினர். இவ்விதமாகக் கிறிஸ்தவ விசவாசத்திற்குள் ஆபத்தான தவறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இயற்கையில் மனிதன் அழியகூடியவனல்ல, மரணத்தில் அவனுக்கு நினைக்கும் ஆற்றல் உண்டு என்பது இவைகளில் மிக முக்கியமான தாகும். மரித்த பரிசுத்தவான்களை நோக்கி, உதவிகேட்டு மன்றாடு தல், கன்னிமரியாளைப் போற்றுதல் ஆகிய ரோமன் கத்தோலிக்க சபையின் ஏற்பாட்டிற்கு இந்தக் கோட்பாடுதான் அஸ்திவாரமிட்டது. இதிலிருந்துதான் போப்புமார்க்கத்தின் ஆரம்பகாலத்தில் ஏற்படுத்தப் பட்ட, பாவமன்னிப்புப் பெறாதவர்கள் கடைசியாக நித்திய காலமாக வாதிக்கப்படுவார்கள் என்ற மதப்புரட்டும் துளிர்த்தது. (27) GCTam 49.2
அதன்பின், எளிதில் நம்பக்கூடிய மூடநம்பிக்கையுள்ள ஏராள மானவர்களைப் பயப்படுத்த-உத்தரிக்கிறஸ்தலம் என்னும் மற்றொரு அஞ்ஞான மார்க்கக் கோட்பாட்டைத் தழுவிய கண்டுபிடிப்பை அறிமுகப் படுத்துகின்ற பாதை ஆயத்தம் செய்யப்பட்டது. இதனால், நித்திய ஆக்கினைக்குட்படுத்தப்படாத பாவிகளின் ஆத்துமாக்கள்-தங்களுடைய சொற்ப பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுகின்ற ஒரு இடமுண்டென்றும், அங்கிருந்து அசுத்தங்கள் நீக்கப்பட்டுத் தூய்மை அடைந்தபின், அவர்கள் பரலோகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற மதவிரோத நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. (28) GCTam 50.1
ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர் களிடமிருந்த கெட்டபழக்கங்களுக்காக, அவர்களைப் பயப்படுத்தி, அதனால் லாபமடைய வழிவகுக்கும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. பாவ மன்னிப்புப் பெறுதல் என்னும் கோட்பாடு இதற்குத் துணையாக்கப்பட்டது. போப்புவின் ஆளுகையின் இடத்தை விரிவாக்கவும், அவருடைய விரோதிகளைத் தண்டிக்கவும், அவரது ஆவிக்குரிய மேலாண்மையை மறுப்பவர்களைப் பூமியிலிருந்து அழிக்கவும் அவருடன் சேருகிறவர்களுக்கு, அவர்களுடைய கடந்தகால- நிகழ்கால- எதிர்காலப் பாவங்களுக்கான வேதனையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாவமன்னிப்பும் விடுதலையும் வாக்குத்தத்தம்செய்யப்பட்டது. அத்துடன் சபைக்குப் பணம் கொடுத்தால், அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர் களுக்கு விடுதலை கிடைக்குமென்றும், போதிக்கப்பட்டனர்; இப்படிப்பட்ட வழிகளினால், தலைசாய்க்க இடமில்லை என்று சொன்னவரில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டவர்கள், தங்களது மிக மேலான ஆடம்பரத்திலும் தீய பழக்கங்களிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக தங்களுடைய கருவூலங்களை நிரப்பினார்கள்! (29) GCTam 50.2
வேதவாக்கியத்திற்கு இசைவான கர்த்தருடைய திருவிருந்துக் கட்டளைக்குப் பதிலாக, விக்கிரக ஆராதனையான திருப்பலிப் பூசையை ஏற்படுத்தினார்கள். போப்பு மார்க்கக் குருமார்கள் தங்களுடைய போலியான அறிவற்ற ஆராதனை நாடகத்தினால், திராட்சைரசத்தையும் உண்மையாகக் கிறிஸ்துவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றுவதாகச் சொல்லிக்கொண்டனர்; -Cardinal Wiseman, The Real Presence of the Body and Blood of Our Lord Jesus Christ in the Blessed Eucharist, Proved From Scripture, lecture 8, sec. 3, par. 26 .இவ்விதமாக, எல்லாவற்றையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரைச் சிருஷ்டிக்கும் வல்லமை தங்களிடம் உள்ளதாகக் கற்பனைசெய்து, தூஷணமான துணிகரத்தையும் உரிமைபாராட்டினார்கள். பரலோகத்தை நிந்திக்கும் இந்த பயங்கரமான மதவிரோதச் செயலின்மீது, சகல கிறிஸ்தவர்களும் மரணதண்டனையின் அடிப்படையில் விசுவாசம் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தப் பட்டனர். இதனை மறுத்த ஏராளமானவர்கள் இரும்புக் கம்பங்களில் கட்டப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டனர். (30) GCTam 50.3
பதிமூன்றாம் நூற்றாண்டில், போப்புவை ஆதரிக்கும் தீவிரவாதி கள் இயக்கம் அமைக்கப்பட்டு, விசுவாசக் குறைவைப்பற்றி நடத்தின விசாரணை, மிகவும் பயங்கரமானதாயிருந்தது. போப்பு மார்க்கத்தின் தலைவர்களுடன் அந்தகாரப் பிரபு செயலாற்றினான். சாத்தானும் அவனது தூதர்களும் நடத்திய இரகசிய ஆலோசனைக்கூட்டங்களின் மூலமாக, தீய மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்தினார்கள். மனிதக் கண்களுக்கு மிகவும் பயங்கரமாகத் தோன்றக்கூடிய, சகிக்கமுடியாத அக்கிரமம் மிகுந்த இந்தத் தீர்மானங்களை, கண்களுக்குப் புலப்படாமல் அவர்கள் நடுவில் நின்ற தேவதூதன் மனித செயல்களின் வரலாற்றில் பதிவுசெய்தான். மகா பெரிய பாபிலோன், பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்தது. இந்த மருளவிழுந்த வல்லமையின்மீது, பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும்படி, இரத்த சாட்சிகளாக இறந்துபோன இலட்சக்கணக்கானவர்கள் தேவனை நோக்கி மரணச் சமயத்தில் கதறினர்.(31) GCTam 51.1
போப்புமார்க்கம் உலகின் எதேச்சாதிகாரியானது. ரோமப்போப்புவிற்கு அரசர்களும் பேரரசர்களும் அடிபணிந்தனர். மனிதர்களின் விதி நிகழ்காலத் திற்கும் நித்தியகாலத்திற்கும் அவரது ஆதீனத்திற்குள் இருப்பதுபோல் காணப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக, ரோமன் கத்தோலிக்க சபைக்கோட்பாடுகள் விரிவாகவும் தவறாமலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் சமயச் சடங்குகள் பக்திவிநயத்துடன் செய்யப்பட்டு, அதன் குருமார்கள் சிறப்பிக்கப்பட்டு, தாராளமான சேவைகளினால் தாங்கப்பட்டனர். இதுபோன்ற பெரிய மதிப்பையும் பெரும் உருவத்தையும் வல்லமையையும் ரோமன் கத்தோலிக்கச் சபை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. (32) GCTam 51.2
“போப்புமார்க்கத்தின் நண்பகலாக இருந்த காலங்கள் உலகின் நடு இரவாக இருந்தது!” -J. A. Wylie, The History of Protestantism, b. 1, ch. 4. வேதவாக்கியங்கள் மக்களுக்கு மட்டுமின்றி, குருமார்களுக்கும் தெரியாததாக இருந்தது. போப்புமார்க்கத் தலைவர்கள், அவர்களது பாவங்களை வெளிக்காட்டக்கூடிய ஒளியை, பழங்காலத்தில் பரிசேயர்கள் வெறுத்ததுபோல வெறுத்தனர். நீதியின் தரத்தை அறிவிக்கின்ற தேவப் பிரமாணம் நீக்கப்பட்டுவிடவே, அவர்கள் எல்லையில்லாத வல்லமை உள்ளவர்களாகி, எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி, தீய பழக்கங்களில் ஈடுபட்டனர். ஏமாற்றுதல், வெறுப்பு, கீழ்த்தரமான செயல்கள் ஆகியவை நிலவி இருந்தன. செல்வத்தையும் பதவியையும் பெற்றுக்கொள்வதற்காக, குற்றம் செய்யவும் மனிதர்கள் பின்வாங்கவில்லை. போப்புமார்கள், குருமார்கள் ஆகியோரின் அரண்மனைகளில் மிக மோசமான குடிப்பழக்கம், விபசாரம் ஆகிய காட்சிகள் நிறைந்திருந்தன. சபையில் சிறப்புக்குரியவர்கள் என்று எண்ணப்பட்டு ஆளுகை செய்துவந்த சில பேராயர்களின் படுமோசமான குற்றங்களை, மதச்சார்பற்ற அதிபதிகள் வெளிக்காட்டி, இவர்களை சகிக்கமுடியாத இராட்சதர்கள் என்று அறிவிக்கமுயன்றனர். ஐரோப்பா ஐரோப்பா நூற்றுக்கணக்கான வருடங்களாக கல்வியிலும் கலையிலும் நாகரிகத்திலும் முன்னேற்றமில்லாத நாடாக இருந்தது. கிறிஸ்தவ சமூகத்தில் இருந்த சன்மார்க்கம், அறிவியல் ஆகியவைகளை பக்கவாதம் என்கின்ற பெரும்நோய் தாக்கியது.(33) GCTam 51.3
போப்புமார்க்க ஆட்சியின் வல்லமையின் கீழ், “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக் குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது” (ஓசியா 4:6,1,2) என்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. வேத வசனங்களை நீக்கியதினால் அந்த நிலை ஏற்பட்டது! (34) GCTam 52.1