(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 79—96)
சீ ர்திருத்தத்திற்கு முன்னான காலத்தில் வேதாகமத்தின் ஒரு சில பகுதிகள்மட்டுமே உபயோகத்தில் இருந்தன் ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகள் முற்றிலுமாக அழிந்துவிட அனுமதிக்கவில்லை. அதன் சத்தியங்கள் என்றைக்கும் மறைத்துவைக்கப்பட முடியாததாக இருந்தது. அவருடைய ஊழியக்காரர்களை விடுவிக்கும்படியாகச் சிறைக் கதவுகளின் தாழ்ப்பாள்களைத் திறந்ததுபோல, பூட்டப்பட்டிருக்கும் அவரது வார்த்தைகளை எளிதில் கட்டவிழ்த்துவிட அவரால் முடியும். மறைத்துவைக்கப்பட்டிருக்கும் கருவூலங்களைத் தேடுவதுபோல் சத்தியத்தைத் தேடும்படி, ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் இருந்த மக்களை தேவஆவியானவர் நெருக்கினார். வேதவாக்கியங்களுக்கு தெய்வாதீனமாக நடத்தப்பட்ட அவர்கள், அதன் பரிசுத்தமான பக்கங்களை, மிகுந்த வாஞ்சையுடன் வாசித்தனர். தங்களுக்கு என்ன நேரிட்டாலும், ஒளியை ஏற்றுக்கொள்ள அவர்கள் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர். எல்லாவற்றையும் தெளிவாகக் காணாவிட்டாலும், நெடுங்காலமாகப் புதைத்துவைக்கப்பட்டிருந்த அநேக சத்தியங்களை உணர்ந்துகொள்ளும்படி, அவர்கள் தகுதிப்படுத்தப்பட்டனர். தவறுகள், மூடநம்பிக்கைகள் ஆகிய சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, அவைகளால் அடிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களுக்கு, விடுதலையை அறிவிக்க, பரலோகத்தால் அனுப்பப்பட்ட தூதர்களாக அவர்கள் முன்சென்றனர். (1) GCTam 75.1
வால்டென்னியர்களைத் தவிர, மற்றவர்களுக்கிடையில் கற்றோரால் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடியவகையில், தேவனுடைய வார்த்தை நீண்ட காலமாகப் பூட்டிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் பல நாடுகளிலும் உள்ள மக்கள் அவர்களது தாய்மொழியில் அறிந்து கொள்ளுவதற்கேற்ப, வேத வாக்கியங்கள் மொழிபெயர்க்கப்படும் காலம் வந்தது. உலகமும் அதன் நள்ளிரவைக் கடந்திருந்தது. இருளான மணிநேரங்கள் பெலவீனமடைந்து, அநேக நாடுகளில் அருணோதயத்தின் அடையாளம் தோன்றியது. (2) GCTam 75.2
பதினான்காம் நூற்றாண்டில், சீர்திருத்தத்தின் விடிவெள்ளி இங்கிலாந்தில் உதித்தது. இங்கிலாந்திற்காக மட்டுமல்லாமல், கிறிஸ்தவ உலகம் முழுவதற்குமான சீர்திருத்தத்தின் விடிவெள்ளியாக ஜான் விக்ளிஃப் திகழ்ந்தார். அவரால் சொல்லும்படி அனுமதிக்கப்பட்ட, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கெதிரான அறைகூவல், ஒருபோதும் மௌனப்படுத்தப்படக் கூடாததாக இருந்தது. அந்த எதிர்ப்பு தனிப்பட்டவர்களுக்கும், சபைகளுக்கும் நாடுகளுக்கும் விடுதலையைக் கொண்டுவருகிற போராட்டத்தைத் துவக்கியது. (3) GCTam 76.1
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்றறிந்த விக்ளிஃப், தாராளமான கல்வியையும் பெற்றார். பக்தியைப் போலவே, அவரிடமிருந்த சிறந்த தாலந்துகளுக்காகவும் ஆழ்ந்த அறிவிற்காகவும் கல்லூரியில் எடுத்துக்காட்டானவராக இருந்தார். அறிவின்மீதிருந்த தாகத்தின் காரணமாக, கல்வியின் ஒவ்வொரு துறையிலும் அவர் அறிமுகமாக விழைந்தார். சமயத் தத்துவங்களிலும், சபைச் சட்டங்களிலும், சமூகச் சட்டங்களிலும், குறிப்பாக அவரது நாட்டிலிருந்த கலைகளிலும் அவர் கற்பிக்கப்பட்டிருந்தார். இந்த ஆரம்பகாலப் பயிற்சியின் மதிப்பை, பின்நாட்களில் அவர் ஆற்றிய பணியில் வெளிப்படையாகக் காணமுடிந்தது. அவரது நாட்களில் நிலவியிருந்த யூகங்களை அடிப்படையாகக்கொண்ட தத்துவங்களைப்பற்றிய முழுமையான அவரது அறிவு, அதன் தவறுகளை எடுத்துக்காட்ட அவரைத் தகுதிப்படுத்தியது தேசியச்சட்டம் சமயச்சட்டம் ஆகியவைகளில் அவருக்கிருந்த கல்விப் பயிற்சியினால், தேசியச்சுதந்திரம், சமயச்சுதந்திரம் ஆகிய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தார். தேவனுடைய வார்த்தையிலிருந்துபெற்ற ஆயுதத்தைப் பயன்படுத்த அறிந்திருந்த அதேசமயம், பள்ளிகளிலிருந்து அறிவுக்கூர்மையையும் பெற்று, பள்ளியிலிருந்த மனிதர்களின் தந்திரங்களையும் அறிந்துகொண்டார். அறிவின் மேன்மையால் அவரிடமுண்டாயிருந்த வல்லமையும், அவரது அறிவின் விசாலமும் பரிபூரணமும், அவரது நண்பர்கள் மற்றும் விரோதிகள் இடையே அவருக்கு மதிப்பை உண்டாக்கியது. அவரைச் சார்ந்தவர்கள், நாட்டின் அறிவுமிக்கவர்களுக்கிடையில் அவர் முன்னணியில் நிற்பதை திருப்தியுடன் கண்டனர். சீர்திருத்தத்தை ஆதரித்தவர்களின் அறியாமையையோ பெலவீனத்தையோ வெளிக்கொணர்ந்து, அவைகளை சீர்திருத்தத்திற்கெதிராக நிறுத்துவதற்கு எதிரிகள் தடுக்கப்பட்டனர். (4) GCTam 76.2
விக்ளிஃப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோதே, வேதாகம ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வேதாகமம் பழங்கால மொழியில்மட்டுமே இருந்த அந்தக் காலத்தில், கற்றறிந்த மேதைகள் சத்திய ஊற்றின் பாதையைக் காண தகுதியடைந்திருந்தனர், கல்லாதவர்களுக்கு அது மூடிவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக, ஒரு சீர்திருத்தவாதியாகப் பணியாற்ற விக்ளிஃபிற்கு ஏற்கனவே பாதை ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. கற்றறிந்த மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து, அதில் வெளிப்படுத்தப்பட்டிருந்த அவரது இலவச கிருபை என்னும் மாபெரும் சத்தியத்தை, கண்டறிந்திருந்தனர். இந்த சத்தியத்தைப்பற்றிய அறிவை தங்களுடைய போதனைகளினால் பரப்பி, மற்றவர்களையும் ஜீவவார்த்தைகளுக்குத் திரும்பும்படி அவர்கள் வழிநடத்தினார்கள். (5) GCTam 77.1
வேதவசனங்களின் திசையை நோக்கி விக்ளிஃபின் கவனம் சென்ற போது, பள்ளிக் கல்வியில் தேர்ந்தவராவதற்கு எவ்விதமான முழு முயற்சி யுடையவராக இருக்கவேண்டியதிருந்ததோ, அதே முழு முயற்சியுடன் அவைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சமயக் கல்விகளோ சபையின் போதனைகளோ திருப்திப்படுத்தமுடியாத ஒரு மாபெரும் தேவை அதற்குமேல் இருப்பதை அவர் உணர்ந்தார். இதற்கு முன்பு அவர் எவைகளை தாகத்துடன் தேடி அலைந்தாரோ, அவைகளை தேவனுடைய வார்த்தைகளில் கண்டார். இங்கு மீட்பின் திட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும், மனிதனின் ஒரே பரிந்துபேசுபவராக கிறிஸ்து ஏற்படுத்தப்பட்டிருப்பதையும், அவர் கண்டார். அவர் தன்னை கிறிஸ்துவின் ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுத்து, தான் கண்டறிந்த சத்தியத்தை அறிவிக்கத் தீர்மானித்தார். (6) GCTam 77.2
பிற்காலத்தில் தோன்றின சீர்திருத்தவாதிகளைப்போல, அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், அது அவரை எங்கு நடத்திச் செல்லுமென்பதை அவர் முன்னறியாமலிருந்தார். தன்னை ரோமிற்கு எதிராக துணிவுடன் நிறுத்தவில்லை ஆனால் சத்தியத்தின்மீதிருந்த பக்தி அவரைத் தவறுக்கு எதிராகக் கொண்டுவந்தது. போப்புமார்க்கத்தின் தவறுகளை எந்த அளவிற்குத் தெளிவாக அறிந்திருந்தாரோ, அந்த அளவிற்கு மிகுந்த ஆர்வத்துடன் வேதாகமப் போதனைகளை வெளிப்படுத்தினார். மனிதச் சடங்காச் சாரங்களுக்காக, ரோம சபை, வேத வாக்கியங்களைக் கைவிட்டுவிட்டதை அவர் கண்டார். வேத வாக்கியங்களைத் தடைசெய்ததற்காக, அச்சமின்றி குருமார்களின்மீது குற்றம்சாட்டி, வேதாகமம் மீண்டும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும், சபையில் அதன் அதிகாரம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார். அவர் ஒரு ஆர்வமிக்க ஆசிரியராகவும் நாவன்மைமிக்க பேச்சாளராகவும் மட்டுமிருக்கவில்லை, அவருடைய அன்றாட வாழ்க்கையும் அவர் பிரசங்கித்த சத்தியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. வேதவாக்கியங்களைப்பற்றிய அவரது அறிவு, வழக்காடும் திறன், தூய்மையான வாழ்க்கை, வளைந்து கொடுக்காத தைரியம், கண்ணியம் ஆகியவை அவர்மீது பொதுவான மதிப்பையும் நம்பிக்கையையும் அவருக்கு சம்பாதித்துத் தந்தது. ரோமசபையில் நிலவியிருந்த அக்கிரமங்களைக் கண்டு, அவர்களது பழைய விசுவாசத்தின்மீது அதிருப்திகொண்டிருந்த அநேகமக்கள், விக்ளிஃபின் மூலமாகக் காட்சிக்குக் கொண்டுவரப்பட்ட சத்தியத்தை, மறைக்கமுடியாத பெரு மகிழ்ச்சியுடன் புகழ்ந்தனர். ஆனால் இந்தச் சீர்திருத்தவாதியின் செல்வாக்கு தங்களது செல்வாக்கைவிட உயர்ந்துவருவதை உணர்ந்த போப்புமார்க்கத் தலைவர்கள் சினத்தால் நிறைந்தனர்.(7) GCTam 77.3
விக்ளிஃப் தவறுகளை மிகச் சரியாகக் கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்து, ரோம அதிகாரத்தினால் அனுமதிக்கப்பட்ட அநேக தவறுகளை அச்சமின்றி அடித்துக்கூறினார். அவர் அரசரின் போதகராக இருந்த சமயத்தில், ஆங்கிலேய மன்னர்களும் காணிக்கை செலுத்தவேண்டும் என்று போப்பு பாராட்டிய உரிமைக்கு எதிராக தைரியத்துடன் நின்று, மதச்சார்பற்ற அதிபதிகளின்மீது அதிகாரமிருப்பதாக எண்ணும் போப்புமார்க்கத்தின் உத்தேசம், பகுத்தறிவிற்கும் வேதாகம வெளிப்படுத்துதலுக்கும் எதிரானது என்றார். போப்புவின் கோரிக்கை மிகுந்த கோபத்தை எழுப்பினபோது, விக்ளிஃபின் போதனைகள், நாட்டிலிருந்த பெரியவர்களின் மனங்களில் செல்வாக்கை உண்டாக்கியது. போப்புவிற்கு காணிக்கை (கப்பம்) செலுத்த மறுத்த அரசனும் மேன்மக்களும், உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்த போப்புவின்உரிமையை மறுப்பதில் ஒன்றுபட்டனர். இவ்வாறாக இங்கிலாந்தில் போப்புமார்க்கத்தின் மேலாண்மையின்மீது பலத்த அடி விழுந்தது. (8) GCTam 78.1
அந்த சீர்திருத்தவாதி, தீமைக்கு எதிராக மிகுந்த தீர்மானத்துடன் நடத்திய மற்றொரு நீண்ட போராட்டம், ரோமன் கத்தோலிக்க குருமார்களின் அமைப்புகளுக்கெதிரானதாகும். இங்கிலாந்து நாட்டின் விரிவடையும் செல்வச்செழிப்பை நாசம் செய்யும் தொற்றுநோயாக இந்தக் குருமார்களின் கூட்டம் பெருகியது. தொழில், கல்வி, சன்மார்க்க நெறி ஆகிய அனைத்தும் அதனை வாடச்செய்யும் ஆதீனத்தை உணர்ந்தது. சந்நியாசிகளின் சோம்பேறித்தனமான பிச்சையெடுக்கும் வாழ்க்கை நீதியின் கடினமான விரையமாக இருந்ததோடல்லாமல் பயனுள்ள வேலையின் மீது பழியையும் கொண்டுவந்தது. இளைஞர்கள் சன்மார்க்க நெறியற்றவர்களாகவும், ஊழல்மிக்கவர்களாகவும் ஆனார்கள். இந்தப் பக்கிரிகளின் செல்வாக்கினால், மடங்களில் தங்கி, தனித்திருக்கும் வாழ்க்கையை மேற்கொள்ள அநேகர் ஈர்க்கப்பட்டனர். இச்செயல்கள் பெற்றோரின் அனுமதியின்றி நடந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தெரியாமலேகூட நடந்தது. ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க சபை குருமார்களில் ஒருவர், பெற்றோர்மீது பிள்ளைகள் காட்டவேண்டிய அன்பிற்கும் கடமைக்கும் மேலாக, சந்நியாசி மடத்தின் உரிமையைப் பெரிதுபடுத்தி: “உன் தந்தை அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் உன் வாசற்படிக்குமுன் படுத்துக்கிடந்தாலும், உன் தாய் உன்னைச் சுமந்த உடலையும் உனக்குப் பாலுாட்டின முலைகளையும் காட்டினாலும், நீ அவர்களைக் காலால் மிதித்துத் தள்ளிவிட்டு கிறிஸ்துவை நோக்கி நேராகச் செல்லுவாயாக” என்று அறிவித்தார். “ஓநாயை போன்ற இரத்தவெறியும் கிறிஸ்தவனையும் மனிதனையும் விடக் கொடுமையையும் கொண்டது” என்று பிற்காலத்தில் லுத்தர் அழைத்ததுபோல, தனித்தன்மையற்ற இந்த அரக்கச் செயலினால் பெற்றோருக்கு எதிராக அவர்களுடைய பிள்ளைகளின் இதயங்கள் திருடிச்செல்லப்பட்டன. (Barnas Sears, The Life of Luther, pages 70, 69). பழங்காலப் பரிசேயர்கள், அவர்களுடைய பாரம்பரியங்களினால், கற்பனைகளை வலிமையற்றதாக்கினதுபோல, போப்புமார்க்கத் தலைவர்களும் செயல்பட்டனர். இவ்விதமாக, இல்லங்கள் பாழாக்கப்பட்டு, பெற்றோர் தங்களது மகன்கள், மகள்கள் ஆகியோரின்மீது கொண்டிருந்த சமூக உரிமைகளையும் இழந்தவர்களானார்கள். (9) GCTam 78.2
பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்கூட, துறவிகளின் தவறான வெளிக்காட்டலின்மூலமாக, அவர்களது நிலையைப் பின்பற்றும்படி இழுக்கப்பட்டனர். இந்தத் தொற்றுநோயினால் தங்களது சொந்த வாழ்க்கைகளை அழித்து, தங்களின் பெற்றோருக்குத் துயரத்தை உண்டுபண்ணின இந்த செய்கையை எண்ணி, பின்னர் அவர்கள் மனம் வருந்தினார்கள். ஆனால் ஒருமுறை இந்தக் கண்ணியில் அகப்பட்டபின், அவர்களது சுதந்திரத்தை மீண்டும் அவர்களால் அடைந்துகொள்ள முடியாமலிருந்தது. இந்தத் துறவிகளின் செல்வாக்கைக் கண்டஞ்சிய பெற்றோர்களில் அநேகர் தங்கள் மகன்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப மறுத்தனர். பெரிய கல்வி மையங்களில் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்தது. பள்ளிகள் சோர்வடைந்து, அறியாமை நிலவியது. (10) GCTam 79.1
பாவ அறிக்கையைக் கேட்டு, மன்னிப்பருளும் அதிகாரத்தை, போப்பானவர் குருமார்களுக்கும் அறிவித்திருந்தார். அது பெரும் தீமைக்கு ஆதாரமாக அமைந்தது. தங்களது ஆதாயங்களின்மீது நாட்டம்கொண்ட குருமார்கள், சகலவிதமான குற்றவாளிகளுக்கும் மன்னிப்பை அருள் ஆயத்தமானதால், அதன் விளைவாக மிக மோசமான தீய பழக்கங்கள் விரைவாக அதிகரித்தன. ஏழைகளுக்கு உதவியிருக்கக்கூடிய தர்மங்களைக் குருமார்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று அச்சுறுத்தி, அப்படித் தர மறுத்தவர்களை பக்தியற்றவர்கள் என்று புறக்கணித்து, குருமார்கள் இந்த தர்மங்களை அடைந்துகொண்டதினால், நோயாளிகளும் ஏழைகளும் துன்பங் களை அனுபவிக்கும்படி விட்டுவிடப்பட்டனர். ஏழ்மையை வாழ்க்கையாகக் கொண்டோம் என்று அறிவித்த குருமார்களின் செல்வம், தொடர்ந்து அதிகரித்தது. அவர்களது மாடமாளிகைகளும் ஆடம்பரமான உணவுகளும் நாட்டில் வறுமை பெருக்கத்தை வெளிப்படையாகக் காண்பித்தது. குருமார்கள் அவர்களது நேரத்தை ஆடம்பரங்களிலும் இன்பங்களிலும் செலவழித்தபோது, அவர்களுக்குப்பதிலாக, ஆச்சரியமான கதைகளையும் கட்டுக்கதைகளையும் வேடிக்கை விநோதங்களையும் சொல்லக்கூடிய அறிவற்றவர்களை அவர்களின் போலியாக வெளியே அனுப்பினர். அப்படியிருந்தும், மூடபக்திமிக்க திரளானவர்களை தங்கள் பிடியில்வைத்து, போப்புவின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கவேண்டியது மதச்சார்புள்ள கடமை என்றும், பரிசுத்தவான்களைப் போற்றுவதும், குருமார்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பதும் பரலோகத்தில் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ளப் போதுமானது என்றும் நம்பும்படிச் செய்திருந்தனர். (11) GCTam 79.2
இந்தத் தனித்த சந்நியாச வாழ்க்கையில், ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர கற்றவர்களும் பக்திமிக்கவர்களும் வீணாக முயன்றனர். ஆனால் விக்ளிஃப், மிகுந்த உள்ளுணர்வுடன் இந்தத் தீமையின் வேரை வெட்டி, இந்த முறையே தவறானது இது கைவிடப்பட வேண்டும் என்று அறிவித்தார். விவாதங்களும் விசாரணைகளும் துயில்விட்டு எழுந்தன. குருமார்கள் நாடெங்கும் திரிந்து, போப்புவினால் உண்டாகும் பாவமன்னிப்பை விற்றுக்கொண்டிருந்த போது, பாவமன்னிப்பை பணத்தினால் வாங்க இயலுமா என்பதைப்பற்றி, அநேகர் சந்தேகப்படத்தொடங்கி, ரோமாபுரியிலுள்ள பேராயரிடமிருந்து பாவமன்னிப்பைப் பெறுவதைவிட, பாவமன்னிப்பை தேவனிடம் தேடமுடியாதா? என்றும் கேள்வி கேட்டனர். ஒருபோதும் திருப்தி யடையாத குருமார்களின் பேராசையையும் பிடுங்கித்தின்னும் ஆசையையும் கண்டு திடுக்கிட்டவர்கள் சிலரல்ல. “சந்நியாசிகளும், குருமார்களும் எங்களை புற்றுநோயைப்போல அரித்துத் தின்னுகின்றனர் தேவன் எங்களை விடுவிக்கவேண்டும் அல்லது அழிந்துபோவோம்” என்று அவர்கள் சொன்னார்கள்.-D'Aubigne, b. 17, ch. 7. தங்களுடைய பேராசையை மறைப்பதற்காக, இயேசுவும் அவரது சீடர்களும் மக்களின் உதாரத்துவத்தினால் தாங்கப்பட்டனரென்றும், பிச்சையெடுக்கும் அவர்கள் இயேசுவின் அடிச்சுவடு களைப் பின்பற்றுவதாகவும் உரிமை பாராட்டிக்கொண்டனர். இந்த உரிமைபாராட்டுதல் அவர்களது நோக்கத்தையே காயப்படுத்தியது. ஏனெனில், வேதாகமத்தை வாசிக்கும்படி அநேகரை இது நடத்தியது— மற்றெல்லாவற்றையும் விட, ரோம் கொஞ்சமும் விரும்பாத விளைவை அது உண்டுபண்ணியது. ரோமன் கத்தோலிக்க நிர்வாகம் மூடிமறைக்க வேண்டும் என்று விரும்பிய சத்தியத்தின் ஆதாரத்திற்கு மனிதர்களின் மனம் நடத்தப்பட்டது. (12) GCTam 80.1
விக்ளிஃப் குருமார்களுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை எழுதி வெளியிடத் தொடங்கினார். ஆனாலும், அவர்களுடன் வாக்குவாதம் செய்கின்ற மாதிரி எழுதாமல், மனிதர்களின் எண்ணங்களை வேதாகமத்தின் போதனைகளுக்கும், அதன் ஆசிரியரிடத்திற்கும் அழைக்கும்படி எழுதினார். மன்னிக்கும் அல்லது சபைக்குப் புறம்பாக்கும் வல்லமை ஒரு சாதாரண குருவிடம் உள்ளதைவிட போப்புவிடம் அதிகம் இல்லை எந்த ஒரு மனிதனும், முதலில் தேவ கோபாக்கினையை தன்மேல் சுமத்திக்கொண்டாலொழிய மெய்யாகவே சபைக்குப் புறம்பாக்கப்பட முடியாது என்று அவர் அறிவித்தார். லட்சக்கணக்கான ஆத்துமாக்களும் சரீரங்களும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த, போப் நிறுத்தியிருந்த ஆவிக்குரியதும் உலகப்பிரகாரமானதுமான ஆளுகையை தூக்கி எறிய, பலமிக்க வேறு எவ்வழியையும் அவரால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. (13) GCTam 81.1
ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பிற்கெதிராக, ஆங்கிலஅரசின் உரிமையைப் பாதுகாக்கும்படி, விக்ளிஃப் மறுபடியும் அழைக்கப்பட்டார். அவர் ராஜரீகத் தூதுவராக நியமிக்கப்பட்டதால், போப்புவின் ஆணையாளர்களுடன் இரண்டு வருடங்களை நெதர்லாந்து என்னுமிடத்தில் கழித்தார். அங்கு அவர் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த சபை நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளும்படி கொண்டுவரப்பட்டு, அதனால் திரைக்குப் பின்னாலுள்ள காட்சிகளைக் கண்டார். இங்கிலாந்து நாட்டில் இருந்தபோது அறிந்துகொள்ளமுடியாதபடி மறைந்திருந்த வைகளைப்பற்றிய அறிவை அடைந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இப்போது கிடைத்தது. அவரது பிற்கால ஊழியத்திற்குத் தேவையான அநேக விஷயங்களை அதிகமாக அறிந்துகொண்டார். போப்புவின் மன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட போப்புவின் பிரதிநிதிகளிலிருந்து, அந்த சமயத் தலைவரின் சுபாவத்தையும், குறிக்கோளையும் அவர் அறிந்துகொண்டார். பிறர் பொருளின்மீது ஆசை, பொறாமை, வஞ்சகம் இவைதான் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் கடவுள்களாக உள்ளன என்று செல்லி, அவருடைய பழைய போதனைகளை, இங்கிலாந்திற்குத் திரும்பிவந்தபின், மீண்டும் வெளிப்படையாக, அதிக ஆர்வத்துடன் கூறினார். (14) GCTam 81.2
“நம் நாட்டிலுள்ள ஏழை மனிதர்களின் சம்பாத்தியங்களையும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மார்க்குகளையும் (அந்த நாட்டு நாணயம்), அரசரின் பணத்தையும், நற்கருணைக்காவும் ஆவிக்குரிய பொருள்களுக்காகவும் வசூலிப்பது, சுயநலத்துக்காக செய்யப்படும் சபிக்கப்பட்ட மதப்புரட்டாகும். இந்த மதப்புரட்டை கிறிஸ்தவ மார்க்கம் முழுவதும் உறுதிப்படுத்தும்படி செய்கின்றனர். நமது நாட்டிற்குள் தங்கத்தாலான ஒரு மலை இருந்தாலும், அதிலிருந்து அந்த அகந்தைமிக்க குருமார்களின் வசூலிப்போர் தவிர இதுவரை வேறு ஒரு மனிதனும் கொஞ்சஞ்கூட எடுக்காமலிருந்தாலும், காலப்போக்கில் அந்த மலையையே கரைத்துச் சென்றுவிடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பணத்தையும் நம் நாட்டிலிருந்து எடுத்து, அதைத் திரும்பத்தராமல், புனிதப் பொருட்களின் விற்பனை என்பதன் பெயரால், தேவனின் சாபத்தைக் கொண்டுவருகின்றனர்” என்று துண்டுப் பிரசுரங்கள் ஒன்றில் போப்புவைப்பற்றியும் அவருக்காக வசூலிப்பவர்களைப்பற்றியும் அவர் எழுதிவெளியிட்டார்.— John Lewis, History of the Life and Sufferings of J. Wiclif, page 37. (15) GCTam 82.1
விக்ளிஃப் இங்கிலாந்திற்குத் திரும்பினதும், லூட்டர்வொர்த் என்ற இடத்திலிருந்த மடாலயத்தின் தலைவராக அரசரால் நியமிக்கப்பட்டார். அவரது வெளிப்படையான பேச்சின் காரணமாக, அரசருடைய மகிழ்ச்சி குறையவில்லை என்பதன் நிச்சயமாக அது இருந்தது. விக்ளிஃப்டன் செல்வாக்கு நீதிமன்றத்தை வடிவமைப்பதிலும் நாட்டின் நம்பிக்கையை உருவாக்குவதிலும் உணரப்பட்டது. (16) GCTam 82.2
போப்புமார்க்கத்தின் இடிமுழக்கங்கள் அவருக்கெதிராக உண்டாயின. இங்கிலாந்திலிருந்த பல்கலைக்கழகத்திற்கும் அரசனுக்கும் குருமார்களுக்கும் மூன்று கட்டளைகள் அனுப்பப்பட்டன. அவையனைத்தும் மதப்புரட்டின் ஆசிரியரான விக்ளிஃபை உடனடியாக வாய்மூடச்செய்யும் தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற கட்டளைகளாக இருந்தன. (17) GCTam 82.3
இந்தக் கட்டளை வந்து சேருவதற்கு முன்னதாகவே, பேராயர்கள் அவர்களது வைராக்கியத்தின் காரணமாக, விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று விக்ளிஃபிற்கு கட்டளையிட்டிருந்தனர். ஆனால் அந்த விசாரணை மன்றத்திற்கு அந்த நாட்டிலிருந்த மிக அதிகமான அதிகாரமுடைய இரு இளவரசர்கள் அவருடன் வந்தனர். அத்துடன் மக்கள் கூட்டமும் அந்தக் கட்டிடத்தைச்சூழ்ந்து, விரைந்து உள்ளே வந்தது. அந்த நிலைமை நீதிபதிகளைப் பயத்திற்குள்ளாக்கியதால், விசாரணையை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அவரை அவரது பாதையில் சமாதானத்துடன் செல்ல அவர்கள் அனுமதித்தனர். இந்தப் பாதிரியார்கள் சீர்திருத்தக்காரருக்கு எதிராக, அவர்களது ஆதீனத்திற்குள் கொண்டுவர வகைதேடியிருந்த, மூன்றாம் எட்வர்டு அரசர் வயதான காலத்தில் இறந்துவிடவே, விக்ளிஃபை முன்னதாக பாதுகாத்திருந்தவர் அரச பதவிக்கு வந்தார்.(18) GCTam 82.4
ஆனால் மதப்புரட்டரான விக்ளிஃபை கைதுசெய்து, சிறையில் அடைக்கவேண்டும் என்ற ஒரு கண்டிப்பான ஒரு கட்டளை இங்கிலாந்து முழுவதற்கும் வந்தது. இந்த நடவடிக்கைகள் அவரைச் சுட்டெரிப்பதை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் பழிவாங்கும் செயலுக்கு விக்ளிஃப் விரைவில் நிச்சயமாக இரையாவார் என்பதுபோல் தோன்றியது. ஆனால், “நீ பயப்படாதே நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்” (ஆதி. 15:1) என்று பழங்காலத்தில் இருந்த ஒருவருக்கு அறிவித்தவர், அவரது ஊழியக்காரனைக் காக்க தமது கரத்தை நீட்டினார். சீர்திருத்தவாதிக்கு மரணம் வராமல், அவரது அழிவை அறிவித்த போப்புவிற்கு மரணம் உண்டானது! பதினோறாம் கிரகோரி என்ற போப்பு இறந்துபோகவே, விக்ளிஃபை விசாரணை செய்வதற்கென்று வந்திருந்த ரோம சபையின் நிர்வாகிகள் பிரிந்து சென்றனர். (19) GCTam 83.1
சீர்திருத்தம் மேலும் வளரும் வாய்ப்பினைக் கொண்டுவருவதற் கேதுவாக தெய்வீக நடத்துதல் நிகழ்ச்சிகளுக்குமேல் கடந்துசென்றது. கிரகோரியின் மரணத்திற்குப்பின், ஒன்றையொன்று எதிர்க்கின்ற இரண்டு போப்புகளின் தேர்தல் நிகழ்ந்தது! தவறாமையுடையது என்று சொல்லிக்கொண்டே இரு எதிரெதிரான அதிகாரங்கள் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்தவர் கீழ்ப்படியவேண்டும் என்று உரிமைபாராட்டின. ஒவ்வொன்றும் அதன் விரோதியின்மீது மிகப் பயங்கரமான சாபத்தைக்கூறி, தன்னை ஆதரிப்பவருக்கு பரலோகத்தில் பலன்கள் கிடைக்கும் என்று அறிவித்து, விசுவாசமுள்ளவர்கள் அடுத்தவரின்மீது போர்தொடுக்கத் தனக்குத் துணைசெய்யவேண்டுமென்றும் கோரினது. இந்த நிகழ்ச்சி, போப்புமார்க்கத்தைப் பலவீனப்படுத்தியது. போட்டி அணிகள் அடுத்த அணியைத் தாக்க அதனால் முடிந்த அனைத்தையும் செய்தன. இதனால் விக்ளிஃபிற்கு கொஞ்சகாலம் ஓய்வு கிடைத்தது. சாபங்களும் எதிர் குற்றச்சாட்டுகளும் ஒரு போப்பிடமிருந்து அடுத்த போப்புவின்மேல் பறந்துகொண்டிருந்தன. குற்றங்களும் ஊழல்களும் சபைக்குள் பெருமழைபோல் சொரிந்தன. அதேசமயத்தில், லுட்டன்பர்க் என்னுமிடத்தில் தனது சபையில் ஒதுங்கியிருந்த சீர்திருத்தவாதி, ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக்கொண்டிருக்கும் போப்புகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு, சமாதானப்பிரபுவான இயேசுவை மக்கள் நோக்கிப்பார்க்கும்படி கருத்தாய் பாடுபட்டுக்கொண்டிருந்தார். (20) GCTam 83.2
கருத்துவேற்றுமையினால் உண்டான இந்தப்பிளவு, அதன் போராட்டங் களினாலும் ஊழல்களினாலும் போப்புமார்க்கம் உண்மையில் எப்படிப்பட்டது என்பதைக் காண மக்களைத் தகுதிப் படுத்தி, சீர்திருத்தத்திற்கான பாதையை ஆயத்தம்செய்தது. “போப்புகளின் மதசம்பந்தமாக கருத்துவேறுபாடு” என்ற துண்டுப் பிரசுரத்தின்மூலம், ஒருவரையொருவர் அந்திக்கிறிஸ்து என்று தாக்கி சண்டையிடும் இந்த இருவரும், உண்மையைச் சொல்லுகிறார்களா என்று ஆலோசனை செய்யும்படி, மக்களை அழைத்தார் விக்ளிஃப் இதற்கும்மேலாக, “சாத்தான் ஒரு குருவின்மூலம் ஆட்சி செய்யாமல், இரு குருமார்களின்மூலமாக ஆட்சிசெய்கிறான் என்பதை எளிதில் கண்டு, கிறிஸ்துவின் பெயரால், மக்கள் அவர்கள் இருவரையும் மேற்கொள்ளலாம்” என்றார்.—R. Vaughan, Life and Opinions of John de Wycliffe, vol. 2, p. 6. (21) GCTam 84.1
அவரது எஜமானர் ஏழைகளுக்குப் போதித்ததுபோலவே, விக்ளி பும் போதித்தார். தமது சபையாகிய லுட்டன்பர்கில் இருந்த தாழ்மையான இல்லங்களில் மட்டும் சத்தியத்தின் ஒளியைப் பரப்புவதில் திருப்தி அடையாமல், அது இங்கிலாந்தின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். சத்தியத்தை நேசித்து, அதைப் பரப்புவதைவிட மேலானது வேறொன்றும் இல்லையென எண்ணி, தங்களை அர்ப்பணித்திருந்த எளிமையான மனிதர்களை, அதை நிறைவேற்றும்படி, ஒரு போதகர்களின் குழுவாகத் திரட்டினார். அந்த மனிதர்கள் பெருநகரங்களின் சந்தைவெளிகளிலும், தெருக்களிலும், நாட்டுப்புறச்சந்துகளிலும் எங்கும் போதித்துச் சென்றனர். அவர்கள் முதியோரையும் நோயாளிகளையும் ஏழைகளையும் தேடிச்சென்று, தேவகிருபையின் மகிழ்ச்சிமிக்க செய்திகளை அவர்களுக்குத் திறந்து காட்டினார்கள். (22) GCTam 84.2
ஆக்ஸ்போர்டு சமயத்துறையின் பேராசிரியராயிருந்த விக்ளிப் பல்கலைக்கழக அரங்கங்களில் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங் கித்தார். அவரது போதனையின்கீழிருந்த மாணவர்களுக்கு அவர் மிகுந்த விசுவாசத்துடன் சத்தியத்தை முன்வைத்ததினால், அவர் “சுவிசேஷ வல்லுனர்” என்னும் பட்டத்தைப் பெற்றார். எனினும் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மெழிபெயர்த்ததுதான் அவரது வாழ்க்கையில் அவர்செய்த மாபெரும் ஊழியமாக இருந்தது. “சத்தியமும் வேதவாக்கியங்களின் பொருளும்” என்ற அவரது நூலில், தேவனுடைய ஆச்சரியமான செயல்களை, இங்கிலாந்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழியில் அறிந்து கொள்ளும்படி, வேதாகமத்தை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும் என்ற தனது நோக்கத்தை அவர் வெளிக்காட்டினார். (23) GCTam 84.3
ஆனால் திடீரென்று அவரது பணிகள் தடைபட்டன. அவருக்கு அறுபது வயதுகூட ஆகாமலிருந்தபோதிலும், ஓய்வற்ற உழைப்பு, வாசிப்பு, அவரது எதிரிகளிடமிருந்து உண்டான தாக்குதல் ஆகியவைகளின் விளைவு அவர்மேல் காணப்பட்டு, அவரது பலத்தைப் பாதித்து, அவரைக் காலத்திற்கு முன்பாகவே முதியவராக்கியது. அவர் ஒரு அபாயகரமான நோயினால் பீடிக்கப்பட்டார். இச்செய்தி பாதிரிமார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக அவர் செய்த தீமைகளுக்காக, அவர் மனம் கசந்து மனந்திரும்புவாரென இப்பொழுது அவர்கள் எண்ணினர். அவரது பாவ அறிக்கையைக் கேட்பதற்காக, அவரது வீட்டைநோக்கி விரைந்தனர். இறந்துவிடுவார் என்று நினைக்கக்கூடிய விதத்திலிருந்த அந்த மனிதரிடத்திற்கு, நான்கு வகைப்பட்ட சமய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், நான்கு அரசு அதிகாரிகளுடன் சென்றனர். “உமது உதட்டின்மேல் மரணம் இருக்கிறது உமது தவறுகளால் தொடப்பட்டவராக, எங்களைக் காயப்படுத்தும்படி நீர் பேசின அனைத்தையும் விட்டு பின்வாங்குவதாக எங்கள்முன் அறிக்கையிடும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த சீர்திருத்தவாதி அமைதியாக அவைகளைக் கேட்டு, தமது உதவியாளரிடம் தன்னைப் படுக்கையில் உட்காரவைக்கச்சொல்லி, படுக்கையில் உட்கார்ந்து, அவர் சொன்னவைகள் தவறு என்று அறிக்கைசெய்வதை எதிர்நோக்கி நின்றிருந்தவர்களை உற்றுநோக்கி, அடிக்கடி அவர்களை நடுங்கவைத்திருந்த அவரது பலத்த சத்தத்தில், மிக உறுதியாக: “நான் சாகமாட்டேன் நான் உயிர்வாழ்ந்து, பாதிரிமார்களின் தீயசெயல்களை அறிவிப்பேன்” என்றார்.-D’Aubigne, b. 17, ch. 7. அந்த பிரதிநிதிகள் ஆச்சரியமும் கலவரமுமடைந்து அவரது அறையை விட்டு வெளியேறினர்! (24) GCTam 85.1
விக்ளிஃபின் வார்த்தைகள் நிறைவேறின. ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக சக்திவாய்ந்ததாக இருந்த ஆயுதத்தை வேதாகமத்தை, விடுதலை வழங்கவும், ஒளியடையச் செய்யவும், சுவிசேஷத்தை அறிவிக்கவும், பரலோகம் ஏற்படுத்தியிருந்த வேதாகமத்தை, அவரது நாட்டு மக்களிடம் கொடுப்பதற்காக அவர் வாழ்ந்தார். இப்பணியை நிறைவேற்றுவதில் உண்டான பெருந்தடைகள் மேற்கொள்ளப்படவேண்டியதிருந்தது. விக்ளிஃப் மிகுந்த பலவீனமாயிருந்து, இன்னும் சில வருடங்கள்தான் உழைப்பதற்கு எஞ்சி உள்ளன என்பதையும் அவர் சந்திக்கவேண்டிய எதிர்ப்பையும் அறிந்திருந்தார் ஆனாலும் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள வாக்குத் தத்தத்தினால், தைரியப்படுத்தப்பட்ட அவர் எதற்கும் அஞ்சாதவராக முன்சென்றார். அவரது முழுச்சக்தியையுடைய புத்திசாலித்தனத்துடனும் திரண்ட அனுபவத்துடனும் மிகமிக மேலான ஊழியத்திற்காக, விசேஷமான தெய்வீகப் பாதுகாப்பினால், அவர் காக்கப்பட்டும் ஆயத்தப்படுத்தப்பட்டும் இருந்தார். கிறிஸ்தவம் முழுவதும் குழப்பத்தில் நிறைந்திருந்தபோது, வெளியிலெழுந்த புயலைக் கவனிக்காமல் லுட்டன்பர்கில் இருந்த தம்முடைய அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது பணியில் அவர் ஈடுபட்டார். (25) GCTam 85.2
இறுதியாக, இதுவரை மொழிபெயர்க்கப்பட்டிராத ஆங்கில வேதாக மத்தின் முதல் மொழிபெயர்ப்புப்பணி நிறைவடைந்தது. இங்கிலாந்து நாட்டிற்கு தேவனுடைய வார்த்தைகள் திறக்கப்பட்டன. அந்த சீர்திருத்தவாதி இப்போது சிறைக்கும் சுட்டெரிக்கப்படும் மரணத்திற்கும் அஞ்சவில்லை. ஒருபோதும் அணைக்க இயலாத ஒளியை அவர் இங்கிலாந்து நாட்டு மக்களின் கரங்களில் வைத்தார். அறியாமை, தீய பழக்கங்கள் என்னும் விலங்குகளை உடைக்கவும், தனது நாட்டுக்கு விடுதலையையும் உயர்வையும் கொண்டுவரவும், போர்க்களங்களில் உண்டாகும் சிறப்பான வெற்றிகளினால் ஒருபோதும் அடையமுடியாத ஒரு வெற்றியை அடையும் படியும், வேதாகமத்தைத் தனது நாட்டுமக்களிடம் கொடுத்தார். (26) GCTam 86.1
அதுவரை அச்சுக்கலை அறியப்படாததாக இருந்ததினால், மெதுவான களைப்பூட்டும் வேலையினால் மட்டுமே வேதாகமப் பிரதிகளை அதிகரிக்க முடிந்தது. அந்த நூலைப் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் மிகப்பெரிதாக இருந்ததினால், அநேகர் அதை நகல் எடுப்பதில் ஈடுபட்டனர். ஆனால் நகல் எடுப்பவர்கள் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் அதன் தேவையைச் சந்திக்கமுடிந்தது. சில செல்வந்தர் கள் முழு வேதாகமத்தையும் விரும்பினர் மற்றவர்கள் ஒரு பகுதியை மட்டும் வாங்கினார்கள் அநேக சமயங்களில் ஒரு வேதாகமத்தை வாங்கப் பல குடும்பத்தினர் ஒன்றுபட்டனர். இவ்வாறு, விக்ளிஃபின் வேதாகமம் விரைவாக மக்களின் வீடுகளுக்கு வழியைக் கண்டுபிடித்துச் சென்றது. (27) GCTam 86.2
காரணங்களை அறியும்படி மக்களுக்குக்கொடுக்கப்பட்ட வேண்டுகோள், போப்புமார்க்கத்தின் கட்டாயமான கோட்பாடுகளுக்குப் பணிந்திருந்த மந்த நிலையிலிருந்து அவர்களை துடித்தெழச் செய்தது. கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசத்தினால் உண்டாகும் இரட்சிப்பு, வேதவாக்கியங்களின் பூரணமான தவறாமை என்ற தனித்த புரொட்டஸ்டண்டு கோட்பாடுகளை விக்ளிஃப் கற்றுக்கொடுத்தார். அவர் வெளியே அனுப்பின பிரசங்கிகள், வேதாகமத்தை விக்ளிஃப் எழுதியவைகளுடன் சேர்த்துப் பரப்பினர். அதன் வெற்றியினால், இங்கிலாந்து மக்களில் ஏறத்தாழப் பாதிப்பேரால் புதிய விசுவாசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (28) GCTam 86.3
வேதாகமங்களின் தோற்றம் ரோமன் கத்தோலிக்க சபை அதிகாரிகளுக்குத் திகிலைக் கொண்டுவந்தது. இப்பொழுது அவர்கள் விக்ளிஃபைவிட அதிக வல்லமையுள்ள ஒரு ஏதுகரத்தைச் சந்திக்க நேரிட்டது. அந்த ஏதுகரத்திற்கு முன்பாக, அவர்களது ஆயுதங்கள் பயனற்றவைகளாக இருந்தன. இக்காலத்தில் வேதாகமத்தைத் தடைசெய்யும்சட்டம் இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கவில்லை ஏனெனில், மக்களின் மொழியில் அதுவரை அது வெளியிடப்பட்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட சட்டங்கள் பின்னர் இயற்றப் பட்டு, கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இடைப்பட்ட அக்காலத்தில் குருமார்களின் முயற்சியினாலும் தடுக்கமுடியாதபடி, தேவனுடைய வார்த்தை களைப் பரப்பும் வாய்ப்பு ஏற்பட்டது. (29) GCTam 86.4
சீர்திருத்தவாதியின் சத்தத்தை மௌனமடையச்செய்வதற்கு போப்பு மார்க்கத் தலைவர்கள் மறுபடியும் திட்டம் தீட்டினர். தொடர்ச்சியாக மூன்று தடவைகள் விக்ளிஃப் விசாரணைக்காக பயனற்ற விதத்தில் அழைக்கப்பட்டார். முதலாவது கூடின பேராயர்களின் குழுவானது விக்ளிஃப் எழுதின அனைத்தும் மதப்புரட்டானவை என்று அறிவித்தது. இரண்டாம் ரிச்சர்டு என்ற இளம் அரசனை அவர்கள் தங்கள் பக்கத்திற்கு வென்றிருந்ததினால், குற்றம் எனக் கருதப்பட்ட கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களைச் சிறைக்கனுப்பவேண்டுமென்ற அரசகட்டளையை வெளியிடச் செய்தனர். (30) விக்ளிஃப், சினாடு என்ற பேராயர்களின் விசாரணைக் குழுவிலிருந்த தமது காரியத்தை, மக்கள் சபையில் மேல்விசாரணை செய்யும்படியாக மனு செய்தார். அவர் தேசிய சபையின் முன்நின்று, ரோம சபைத் தலைவரின்மீது அச்சமின்றிக் குற்றம்சாட்டி, சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தகாத நடவடிக்கைகளில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்று கோரினார். போப்பு மார்க்கத்தின் பதவி ஆசையையும், ஊழல்களையும் பிறர் உணர்ந்துகொள்ளும்வண்ணம் வல்லமையுடன் சித்தரித்துக்காட்டினார். அவரது எதிரிகள் குழப்பத்தில ஆழ்த்தப்பட்டனர். விக்ளிஃபின் நண்பர்களும் ஆதரவாளர்களும் பணியும்படி வற்புறுத்தப்பட்டனர். வயதுமுதிர்ந்த சீர்திருத்தவாதியானவர் அவரது வயதான காலத்தில், நண்பர்களற்றவராகத் தனித்துவிடப் பட்டால், அரசும் சமயமும் கலந்த அதிகாரத்திற்குமுன் பணிந்துவிடுவார் என்று இரகசியமாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்குப்பதிலாக, போப்புமார்க்கத்தினர் தோற்றுப்போனதை அவர்களே கண்டனர். மனதைக் கலங்கச்செய்யும் விக்ளிஃபின் வேண்டுகோள்களினால் எழுச்சி அடைந்த மக்கள்சபை, உபத்திரவப்படுத்தும் சட்டத்தை ரத்துசெய்ததி னால் சீர்திருத்தவாதி மறுபடியும் விடுதலைசெய்யப்பட்டார். (31) GCTam 87.1
மூன்றாவது தடவையாக, அந்த நாட்டின் மிக மேலான சமய நிர்வாகிகளின் மன்றத்திற்கு, விசாரணைக்காக அவர் கொண்டு வரப்பட்டார். “இங்கு மதப்புரட்சிக்கு எந்தவிதமான ஆதரவும் காட்டப்படமாட்டாது கடைசியாக இங்கு ரோமன் கத்தோலிக்க சபை வெற்றி அடைவதினால், சீர்திருத்தவாதியின் ஊழியம் நிறுத்தப்படும்” என்று போப்புவின் அதிகாரிகள் எண்ணினர். அவர்களது நோக்கம் நிறைவேறினால், விக்ளிஃப் தமது கருத்துக்கள் தவறானவை என்று அறிவிக்கவோ அல்லது தீக்கிரையாவதற்காக நீதிமன்றத்தைவிட்டுச் செல்லும்படிக்கோ வற்புறுத்தப்படுவார். (32) GCTam 87.2
ஆனால் விக்ளிஃப் பின்வாங்கவில்லை. வேஷமிடவும் மறுத்து விட்டார். அவர் அவரது போதனைகளை அச்சமின்றிக்காத்து, அவரை உபத்திரவப்படுத்துபவர்களின் குற்றச்சாட்டுகளைப் பின்வாங்கச் செய்தார். அவர் தன்னை மறந்து, தன் நிலையை மறந்து, சந்தர்ப்பத்தை மறந்து, அவரது பேச்சைக்கேட்டிருந்தவர்களை தெய்வீக மன்றத்திற்கு வரும்படி அழைத்து, சத்தியம் என்னும் தராசினால் அவர்களது தந்திரங்களையும் ஏமாற்றுகளையும் நிறுத்துக் காட்டினார். ஆலோசனை அறையில், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை உணரப்பட்டது. தேவனிடமிருந்து உண்டான கவரும் சக்தி கேட்டோரின்மீது இருந்தது. அந்த இடத்தைவிட்டு நகரவும் சக்தியற்றவர்கள்போல் உணர்ந்தனர். தேவனுடைய அம்பராத் துணியி லிருக்கிற அம்புகளைப்போல, சீர்திருத்தவாதியின் சொற்கள் அவர்களது இதயங்களைத் துளைத்தன. அவருக்கெதிராக அவர்கள் கொண்டுவந்த மதவிரோதக் குற்றச்சாட்டுகளை திருப்திப்படுத்தும் வல்லமையுடன் அவர்கள் மீதே அவர் திருப்பிவிட்டெறிந்தார். அவர்கள் தங்கள் தவறுகளைப் பரப்பத் துணிகரம்கொண்டது ஏன்? என்றார். ஆதாயத்திற்காகவும் தேவகிருபையை வியாபாரமாக்கவும் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்றார். (33) GCTam 88.1
இறுதியாக, “நீங்கள் யாருடன் போர் செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். “கல்லறையின் ஓரத்தில் நிற்கும் வயதான ஒரு மனிதனுடனோ? அல்ல! சத்தியத்துடன் போர் செய்கிறீர்கள்! நீங்கள், உங்களைவிட பலம் பொருந்தியதும் உங்களை மேற்கொள்ளக் கூடியதுமான சத்தியத்துடன் போர்செய்கிறீர்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அரங்கத்தைவிட்டு வெளி யேறினார்.—Wylie, b. 2, ch. 13. அவரது எதிரிகளில் ஒருவனாலும் அவரைத் தடுக்கமுடியவில்லை! (34) GCTam 88.2
விக்ளிஃபின் ஊழியம் கிட்டத்தட்ட முடிவடைந்து, இவ்வளவு காலமாக உயர்த்திப்பிடித்திருந்த சத்தியத்தின் கொடி விரைவில் அவரது கரத்திலிருந்து விழுந்துவிடப்போவதுபோல் இருந்தது. ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை, சுவிசேஷத்திற்குச் சாட்சிபகர வேண்டியதாயிருந்தது. அந்த நாட்டில், தவறுகளின் பலமான கோட்டையிலிருந்தே சத்தியம் பறைசாற்றப்படவேண்டியதாக இருந்தது. அடிக்கடி பரிசுத்தவான்களின் இரத்தத்தைச் சிந்தியிருந்த ரோம்நகருக்கு, போப்புவின் விசாரணைக்காக விக்ளிஃப் அழைக்கப்பட்டார். தம்மை பயமுறுத்தியிருந்த ஆபத்தை அறியாத குருடராக இல்லாமலிருந்தாலுங்கூட, அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி பக்கவாதம் உண்டாகாதிருந்திருந்தால், அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்திருக்கக்கூடும். ரோம் நகரில் நேரடியாகப் பேசமுடியாமல் இருந்தாலும், கடிதத்தின்மூலமாக அவரால் பேசமுடியும். அதைச் செய்ய அவர் தீர்மானித்தார்.(35) GCTam 88.3
அந்த சீர்திருத்தவாதி அவரது மடாலய அலுவலகத்திலிருந்து ஒரு கடிதத்தை எழுதினார். மரியாதையான விதத்திலும், கிறிஸ்தவ ஆவியுடனும் எழுதப்பட்ட அந்தக் கடிதம் அகந்தையும், ஆடம்பரமுமிக்க போப்புவை தெளிவாகக் கடிந்துகொள்ளுவதாக இருந்தது. “நான் சத்தியமும் தெளிவுமுள்ளதென்று நம்பியிருக்கும் எனது விசுவாசத்தை, ஒவ்வொரு மனிதனும், குறிப்பாக ரோம் நகரப் பேராயர் (போப்பு) அவர்களும் மிக மனமுவந்து உறுதிப்படுத்தவோ அல்லது அதில் தவறிருந்தால், அதை அவர் திருத்தவோ செய்யலாம் என்று விவரித்து, அவ்வாறு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னார். முதலாவதாக, “கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷம் தேவனுடைய பிரமாணத்தின் சரீரமாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன். ரோமப் பேராயர் பூமியில் கிறிஸ்துவின் பதிலாளியாக இருப்பதனால், எல்லா மனிதர்களையும்விட அவர் சுவிசேஷத்தின் சட்டங் களுக்குக் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும் என்று அவரை நான் பொறுப்பாளராக்குகிறேன். ஏனெனில், கிறிஸ்துவின் சீடர்களுக்குள் காணப்பட வேண்டிய பெருந்தன்மை, உலகப் பிராகாரமான மதிப்புகளோடும் மேன்மை களோடும் இசைந்ததாக இராமல், கிறிஸ்துவின் வாழ்க்கையையும் அவர் நடந்த விதத்தையும் மிகச் சரியாகப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது. இங்கு கிறிஸ்து நடத்திய அவரது பரதேசப் பிரயாணத்தின்போது, சகலவிதமான உலகப்பிராகாரமான ஆளுகையையும் மதிப்புகளையும் தூரமாக விட்டுவிட்டு, மிக ஏழையான மனிதனாக அவர் இருந்தார்.” (36) GCTam 89.1
“போப்புவையோ அல்லது மற்ற பரிசுத்தவான்களையோ பின்பற் றாமல், இப்படிப்பட்ட காரியத்தில் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவையே விசுவாசமுள்ள எந்த மனிதனும் பின்பற்றியாக வேண்டும். பேதுருவும் செபதேயுவின் குமாரரும் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை விரும்பிப் பின்பற்று வதற்குப் பதிலாக, உலக மேன்மையை விரும்பி, குற்றம்செய்தார்கள். அப்படிப்பட்ட குற்றங்களில் அவர்களைப் பின்பற்றக்கூடாது.” (37) GCTam 89.2
“போப்பு உலகப்பிரகாரமான சகலவிதமான ஆளுகையையும் மதச்சார்பற்ற வல்லமையிடம் விட்டுவிட்டு, அவரது குருமார்களுக்குப் போதிக்கும்படியாக வல்லமையுடன் செயல்படச் செல்லவேண்டும். ஏனெனில், கிறிஸ்து அப்படித்தான் செய்தார். குறிப்பாக அவர்களது அப்போஸ்தலர்கள் மூலமாக அப்படிச் செய்தார்.” (38) GCTam 89.3
“இக்காரியங்கள் எதிலாவது நான் தவறு செய்திருந்தால், அதைத் திருத்த எனது மரணம் அவசியமானால், எனது மரணத்தினால் நான் அதை மிகவும் தாழ்மையுடன் திருத்திக் கொள்ளுவேன். என்னால் நான் விரும்பும்வண்ணம் சரீரப் பிராகாரமாகச் செயல்பட முடிந்திருந்தால், நேரடியாகவே ரோம்நகருக்கு வந்து, ரோம் நகரப் பேராயரின் முன்பு தோன்றியிருந்திருப்பேன் ஆனால் அதற்கு நேர் எதிரான விதத்தில் கர்த்தர் என்னைச் சந்தித்து, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, தேவனுக்குக் கீழ்ப்படியும்படி கற்பித்திருக்கிறார்” என்றார்.(39) GCTam 90.1
முடிவில் அவர், “ஆறாம் அர்பன் என்ற போப் அவர்கள் தொடங் கினதுபோல, போப்பும் அவரது குருமார்களும் கர்த்தராக இருக்கிற இயேசு கிறிஸ்துவையும் அவரது நடத்தையையும் பின்பற்றி, மற்றவர்களும் அவரது மாதிரியைப் பின்பற்றி நடக்கும்படி பயனுள்ள வகையில் போதிக்கலாம்” என்று கூறினார்.—John Foxe, Acts and Monuments, vol. 3, pp. 49, 50. (40) GCTam 90.2
இவ்வாறாக, போப்புவிற்கும், அவரது கர்தினால்களுக்கும் மட்டுமின்றி, கிறிஸ்தவ சமுதாயம் முழுவதற்கும், கிறிஸ்துவின் தாழ்மையையும் எளிமை யையும் காட்டினார். அவரது பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொண் டிருக்கிறவர்களுக்கும் அவர்களது எஜமானருக்கும் இடையே இருந்த வேற்றுமையையும் அவர் எடுத்துக்காட்டினார். (41) GCTam 90.3
அவரது நேர்மைக்கு விலையாக அவரது உயிர் இருக்குமென்று விக்ளிஃப் முழுமையாக எதிர்நோக்கினார். அவரது அழிவை நிறைவேற்றுவதில் அரசனும் போப்புவும் பேராயர்களும் ஒற்றுமைப்பட்டிருந்தனர். சில மாதங்களுக்குள் அவருக்கு மரணதண்டனை விதிப்பது நிச்சயம் என்பதுபோல் காணப்பட்டது ஆனாலும் அவரது தைரியம் அசையாததாக இருந்தது இரத்தசாட்சி என்னும் தொலைவில் உள்ள கிரீடத்தைத் தேடுவதாக நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? அகங்காரமான குருமார்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் இரத்தசாட்சியென்னும் பதவி உங்களை பற்றாமல் விடாது. என்ன? “நான் உயிருடனிருந்தும் மௌனமாய் இருக்க வேண்டுமா? ... ஒருபோதும் முடியாது! அடி விழட்டும் அதன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.—D’Aubigne, b. 17, ch. 8. (42) GCTam 90.4
ஆனால், தெய்வீகப் பாதுகாப்பு அவரது ஊழியக்காரனை தொடர்ந்து கேடயத்தால் மறைத்தது. சத்தியத்திற்காகத் தனது வாழ்க்கை முழுவதிலும், அன்றாட வாழ்க்கையிலுள்ள ஆபத்துக்களுக்கு இடையிலும் தைரியமாக நின்றிருந்த மனிதன், வெறுப்புமிக்க அவரது எதிரிகளிடம் இரையாக விழக்கூடாது. தன்னை மறைத்துக்கொள்ள விக்ளிஃப் ஒருபோதும் முயலவில்லை. ஆனால், கர்த்தர் அவரைப் பாதுகாவலராக இருந்தார். அவரது எதிரிகள் அவர்களது இரையைப்பற்றி நிச்சயித்திருந்தபோதிலும், அவர்களுக்கு எட்டாதவகையில் தேவனுடைய கரம் அவரை விலக்கியது. லுட்டன்பர்க் சபையில் ஆராதனை நடத்திக்கொண்டிருந்தபோது, அப்பம் பிட்கும் வேளையில், பக்கவாதத்தினால் அவர் தாக்கப்பட்டு, விழுந்து, சற்று நேரத்தில் உயிர்விட்டார். (43) GCTam 90.5
விக்ளிஃபிற்கு அவரது பணியை தேவன் ஏற்படுத்தியிருந்தார். சத்தியவார்த்தையை அவரது வாயில்வைத்து, இந்த வார்த்தை அவர் மூலமாக மக்களுக்குக் கிடைப்பதற்காக, தேவன் அவரைச் சுற்றிக் காவல் வைத்திருந்தார். சீர்திருத்தம் என்ற பெரும்பணியின் அஸ்திவாரம் இடப்படும் வரை அவரது உயிர் காக்கப்பட்டு, அவரது ஊழியமும் நீட்டிக்கப்பட்டது. (44) GCTam 91.1
இருண்ட காலத்தின் இருளிலிருந்து விக்ளிஃப் வந்தார். அவரது சீர்திருத்தத்தின் முறையை, அவருக்கு முன்னிருந்தவர்களின் சீர்திருத்தப் பணியிலிருந்து உருவகப்படுத்தும்படியாக, அவருக்குமுன் ஒருவரும் இருக்கவில்லை. சிறப்பான ஊழியத்தைச் செய்யும்படி எழுந்த யோவான் ஸ்நானனைப்போல எழுந்த அவர், ஒரு புதிய காலத்தின் முன்னோடியாக இருந்தார். அப்படியிருந்தும், அவர் படைத்த சத்தியத்தின் முறையில் அவருக்கு முன்னதாக வந்தவர்களால் மேற்கொள்ளமுடியாததும், நூறு வருடங்களுக்குப் பின்வந்தவர்களால் அடையமுடியாததுமான, ஒற்றுமையும் முழுமையுமிருந்தது. அவருக்குப்பின் வந்தவர்களால் திருத்தியமைக்கத் தேவையில்லாதபடி, மிக அகலமாகவும் ஆழமாகவும் போடப்பட்ட அஸ்திவாரத்தின் மேல்பக்க வடிவ அமைப்பும் பலமும், உண்மையும் உறுதியுமிக்கதாக இருந்தது. (45) GCTam 91.2
மனசாட்சிக்கும், புத்திக்கும், ரோமன் கத்தோலிக்க வண்டியுடன் இதுவரை கட்டிவைக்கப்பட்டு இருந்த நாடுகளுக்கும் விடுதலையைத் தரும்படி, விக்ளிஃப் ஆரம்பித்து வைத்த மாபெரும் இயக்கம், வேதாகமத்தை அதன் ஊற்றாகக்கொண்டிருந்தது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து, யுகங்கள் நெடுகிலும் ஜீவதண்ணீராக ஓடிய ஆசீர்வாதம் என்னும் நீரோட்டத்தின் ஆதாரம் இங்குதான் இருந்தது. பரிசுத்த வேத வாக்கியங்களை தேவசித்தத்தின் வெளிக்காட்டுதல் எனவும்இ விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் போதுமான சட்டம் எனவும் மிகத்தெளிவான விசுவாசத்துடன் விக்ளிஃப் ஏற்றுக்கொண்டார். ரோமன் கத்தோலிக்க சபை தெய்வீகமானது என்றும், தவறாமையுடையது என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஸ்தாபிக்கப்பட்ட அதன் போதனை களையும், சம்பிரதாயங்களையும் கேள்விக்கிடமின்றி, ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கற்பிக்கப்பட்டிருந்தார் ஆனால் தேவனுடைய பரிசுத்த வார்த்தைகளைக் கவனிப்பதற்காக, இவைகளனைத்தையும்விட்டு அவர் திரும்பினார். இந்த அதிகாரத்தை மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார் சபை போப்புவின் மூலமாகப் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, தேவனுடைய வார்த்தையின் மூலமாகப் பேசட்டும். தேவனின் சத்தம் மட்டும்தான் உண்மையான ஒரே அதிகாரம் உடையது என்று அவர் அறிவித்தார். வேதாகமம் தேவனுடைய பூரணமான சித்தத்தின் வெளிக்காட்டுதல் என்று போதித்ததோடல்லாமல் பரிசுத்த ஆவியானவர் மட்டும்தான் அதற்கு விளக்கம் கொடுப்பவர் ஒவ்வொரு மனிதனும் தனது கடமையைத் தானாகவே அறிந்துகொள்ள, வேதாகமத்தின் போதனைகளைக் கற்கவேண்டும் என்றும் போதித்தார். இவ்வாறாக, அவர் மனிதரின் மனங்களை போப்புவிடமிருந்தும், ரோமன் கத்தோலிக்க சபையிடமிருந்தும், தேவனுடைய வார்த்தைகளுக்குத் திருப்பினார். (46) GCTam 91.3
மாபெரும் சீர்திருத்தவாதிகளில் ஒருவராக விக்ளிஃப் இருந்தார். புத்திசாலித்தனத்தின் விசாலத்திலும், சிந்தனையின் தெளிவிலும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதிலுள்ள உறுதியிலும், அதைப் பாதுகாப்பதற்கான தைரியத்திலும், அவருக்குப் பின்வந்த சிலருக்குச் அவர் சமமாகக் கருதப்பட்டார். வாழ்க்கையில் தூய்மையைக் கற்பதிலும், உழைப்பதிலும், களைப்படையாத விழிப்புணர்வு, குற்றமற்ற கண்ணியம், ஊழியத்தில் கிறிஸ்துவைப்போன்ற அன்பு, விசுவாசத்தன்மை ஆகியவைகளே சீர்திருத்த வாதிகளில் முதன்மையானவராயிருந்த அவரது பண்பாக இருந்தது. அறிவில் இருளும் சன்மார்க்க ஊழலும் நிரம்பி இருந்த காலத்தில் தோன்றினார் விக்ளிஃப் (47) GCTam 92.1
கற்பிக்கும், மாற்றத்தை உண்டுபண்ணும் பரிசுத்த வேதவாக்கியங் களுக்குச் சாட்சியாக விக்ளிஃபின் குணலட்சணம் இருந்தது. அவர் எப்படிப்பட்டவரோ, வேதாகமம்தான் அவரை அப்படிப்பட்டவராக்கியது! வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சி, எல்லாத் திறமைகளுக்கும் புத்துணர்வையும் வலிமையையும் கொடுக்கிறது. அது மனதை விரிவடையச்செய்து, உணரும் தன்மையைக் கூர்மையாக்கி, நிதானிக்கும் தன்மையைக் கனியச்செய்கிறது. வேதாகம ஆராய்ச்சி, சிந்தனையையும் உணர்ச்சிகளையும் ஊக்கத்தையும் வேறுவகை ஆராய்ச்சியால் இயலாத அளவிற்கு மேன்மைப்படுத்துகிறது. காரியங்களில் உறுதி, பொறுமை, தைரியம், துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மனோபலம் ஆகியவைகளுடன் பண்பைத் தூய்மைப்படுத்தி, ஆத்துமாவைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஆர்வமும் பக்தியும் மிக்க வேத ஆராய்ச்சி, அப்படிச்செய்யும் மாணவனின் மனதை, எல்லையின்றி விரிவான தாயிருப்பவரின் மனதுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளச் செய்து, மனிதத் தத்துவங்களின் சிறந்த பயிற்சியின் விளைவாக உண்டாவதைவிட மிக மேலான பலத்தையும் செயலாற்றும் புத்திக்கூர்மையையும் உடைய மனிதர்களை உலகத்திற்குத் தரும். “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங்கீதம் 119:130) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். (48) GCTam 92.2
விக்ளிஃபினால் போதிக்கப்பட்ட கருத்துக்கள் சிலகாலம் தொடர்ந்து பரவியது. விக்ளிஃபியர்கள் என்றும் லோலார்ட்ஸ் என்றும் அறியப்பட்டிருந்த அவரது பின்னடியார்கள், இங்கிலாந்து எங்கும் சென்றதோடல்லாமல், சுவிசேஷத்தின் அறிவைச் சுமந்துசென்று, மற்ற நாடுகளிலும் பரப்பினார்கள் இப்பொழுது அவர்களது தலைவர் அகன்றுபோய்விடவே, இதற்கு முன்பிருந்ததைவிட மிகுந்த வைராக்கியத்துடன் அந்தப் பிரசங்கிகள் உழைத்தார்கள். திரளானவர்கள் அவர்களுடைய போதனைகளைக் கேட்கக் கூடினார்கள். மனமாற்றமடைந்த சிலரில் மேன்மக்களும் அரசனின் மனைவியுங்கூட இருந்தனர். அநேக இடங்களில் மக்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்கவிதத்தில் சீர்திருத்தம் உண்டாகி, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் அடையாளமான சிலைகள் ஆலயங்களில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால், வேதாகமத்தைத் தங்களின் வழிகாட்டியாகத் துணிவுடன் ஏற்றுக்கொண்டவர்களின் மீது, விரைவில் உபத்திரவம் என்ற இரக்கமற்ற புயல் வீசியது. தங்களுடைய அரச அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் ஆதரவு தேவை என வாஞ்சித்த இங்கிலாந்தின் வரலாற்றில், முதல் தடவையாக, சுவிசேஷத்தின் சீடர்களுக்கெதிராக மரணதண்டனை கட்டளையிடப்பட்டது. இரத்தசாட்சிகளின் மரணம் அடுத்தடுத்து தொடர்ந்தது. சத்தியத்தின் பரிந்துரையாளர்களாயிருந்து, சித்திரவதை செய்யப்பட்டவர்கள் தங்கள் அழுகையை, சேனைகளின் கர்த்தரின் செவிகளில் மட்டும்தான் சொல்ல முடிந்தது. சபையின் எதிரிகளென்றும் ராஜதுரோகிகளென்றும் கடைசிவரை வேட்டையாடப்பட்ட அவர்கள், ஏழைகளின் வீடுகளையும் மறைவிடங்களாகிய குகைகளையும் அடிக்கடி அடைக்கலமாகத் தெரிந்துகொண்டு, அந்த இரகசியமான இடங்களில் இருந்து தொடர்ந்து பிரசங்கித்தனர். (49) GCTam 93.1
உபத்திவம் மிக மூர்க்கமாக எழுந்தபோதிலும், சமய விசுவாசத்திலிருந்த ஊழல்களுக்கெதிராக, அமைதியான, பக்திசிரத்தைகொண்ட, பொறுமையான மறுப்பு நூற்றுக்கணக்கான வருடங்களாகச் சொல்லப்பட்டன. ஆரம்ப காலத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சத்தியம்பற்றிய குறைவான அறிவுமட்டுமே இருந்தது ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை நேசித்து, அதற்குக் கீழ்ப்படியக் கற்றிருந்தனர். அதற்காக அவர்கள் பொறுமையுடன் பாடுகளை அனுபவித்திருந்தனர். அப்போஸ்தலர்களின் நாட்களிலிருந்த அநேக சீடர்களைப்போல, கிறிஸ்துவின் காரியத்திற்காக அநேகர் தங்களுடைய உலகப்பிரகாரமான உடைமைகளைத் தியாகம்செய்தனர். தங்களுடைய வீடுகளில் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், விரட்டியடிக்கப்பட்ட இந்த சகோதரர்களுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளில் புகலிடம் தந்ததால், அவர்களுங்கூட சேர்ந்து விரட்டியடிக்கப்பட்டனர். அந்த நிலைமையை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். தங்களை உபத்திரவப்படுத்தின அவர்களின் கோபாவேசத்தால், பயமடைந்த ஆயிரக்கணக்கானவர்கள், தங்களுடைய விசுவாசத்தைத் தியாகம்செய்து, சுதந்திரத்தைவாங்கி, பாவச்செயல்களுக்காக வருந்தும் உடையை அணிந்து, அவர்களது பழைய விசுவாசத்தை மறுத்து, சிறைச்சாலைகளை விட்டு வெளியேறினார்கள் என்பது உண்மை. அந்த எண்ணிக்கை குறைவாக இருக்கவில்லை. மேன்மக்களும், தாழ்மையும் எளிமையுமுள்ள கீழ்மக்களுமாக சத்தியத்திற்குச் சாட்சியாக அச்சமின்றி, லோலார்டு கோபுரம் எனும் நிலவறைகளில் நின்றவர்கள், சித்திரவதை, மற்றும் நெருப்பின் ஜுவாலைக்கும் நடுவில் நின்று, அவரது பாடுகளுக்கு, உடன் சகோதரர்களாக எண்ணப்பட்டதற்காக மகிழ்ந்தனர். (50) GCTam 93.2
விக்ளிஃபின் வாழ்நாளில் போப்பு மார்க்கத்தினர் அவர்களது எண்ணத்தை செயல்படுத்துவதில் தோல்விகண்டனர். அவரது உடல் அமைதியாகக் கல்லறையில் வைக்கப்பட்டபோதும், அவர்களது வெறுப்பு திருப்தியடைவதாக இருக்கவில்லை. அவர் மரணமடைந்து, நாற்பது வருடங் களுக்குப்பின்னர், கான்ஸ்டன்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்ட கட்டளைப்படி, அவரது எலும்புகள் அனைத்தும் கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, பொதுமக்கள் முன் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் அருகிலிருந்த நீரோடையில் கலக்கப்பட்டது. “அவரது சாம்பல் அடுப்பிலிருந்து பாத்திரத்திற்கும், பாத்திரத்திலிருந்து சிற்றோடைக்கும், சிற்றோடையிலிருந்து ஆற்றுக்கும், ஆற்றிலிருந்து கடலுக்கும், கடலிலிருந்து பெருங்கடல்கள் அனைத்திற்குமாகக் கரைந்து, இவ்வாறாக, விக்ளிஃபின் சாம்பல், அவரது கொள்கையின் அடையாளச் சின்னமாக உலகம் எங்கும் பரவி உள்ளது” என்று பழங்கால எழுத்தாளர் ஒருவர் எழுதினார்.--T. Fuller, Church History of Britain, b. 4, sec. 2, par. 54. அவரது விரோதிகள் அவர்களது தீயசெயல்களின் விளைவுகள் எப்படிப்பட்ட அடையாளமாக மாறும் என்பதை உணராதிருந்தனர்! (51) GCTam 94.1
விக்ளிஃபின் எழுத்துக்களினால்தான், பொஹிமியாவைச் சேர்ந்தவரான ஜான் ஹஸ் என்பவர் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலுள்ள அநேக தவறுகளைவிட்டு விலகி, சீர்திருத்த ஊழியத்தில் நுழையும்படியாயிற்று. இப்படியாக, மிக அகலமாகப் பிரிந்திருந்த இந்த இரு நாடுகளிலும் சத்தியத்தின் விதைகள் விதைக்கப்பட்டது. பொஹிமியாவிலிருந்து ஊழியம் மற்ற நாடுகளுக்கும் பரவியது. அதிக நாட்களாக மறக்கப்பட்டிருந்த தேவனுடைய வார்த்தைகளை நோக்கி, மனிதர்களின் உள்ளங்கள் திருப்பப்பட்டன. மாபெரும் சீர்திருத்தத்திற்கான வழியை தெய்வீகக்கரம் ஆயத்தம்செய்துகொண்டிருந்தது. (52) GCTam 95.1