(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 120-144)
ரோ மன் கத்தோலிக்க மார்க்கத்தின் இருளிலிருந்து, சபையைத் தூய்மையான விசுவாசம் என்னும் வெளிச்சத்திற்குள் அழைத்தவர்களில் மிக முன்னணியில் நின்றவர் மார்ட்டின் லுத்தர். வைராக்கியம், உறுதி, பக்தி ஆகியவைகளுடன், தேவனைப்பற்றிய பயமேயன்றி வேறு பயம் எதையும் அறியாதவராகவும், பரிசுத்த வேதாகமத்தையன்றி வேறு ஒன்றையும், தமது சமய விசுவாசத்தின் அஸ்திவாரமாக ஏற்றுக்கொள்ளாதவராகவும், அவரது காலத்தில் இருந்தவருள் சிறந்த ஒருவராகவும் லுத்தர் இருந்தார். சபையின் சீர்திருத்தத்திற்காகவும் உலகம் அறிவினால் ஒளியை அடையவேண்டும் என்பதற்காகவும் அந்தப் பெரும்பணியை தேவன் அவர்மூலமாக நிறைவேற்றினார். (1) GCTam 125.1
சுவிசேஷத்தின் முதல் முன்னோடிகளைப் போல், லுத்தரும் ஏழ்மை யான நிலையிலிருந்து உயர்ந்தார். அவர் ஒரு தாழ்மையான விசுவாசக் குடும்பத்தில் பிறந்தார். அவரது இளமைக் காலம் அதில் கழிந்தது. அவரது தந்தை ஒரு சுரங்கத் தொழிலாளியாகப் பணிசெய்து, லுத்தரின் கல்விச் செலவுக்கானவைகளை கொடுத்துவந்தார். அவர் தன்னுடைய மகனை ஒரு வழக்கறிஞராக்க விரும்பியிருந்தார். ஆனால் நூற்றாண்டுகளினூடே மெதுவாக எழுந்துகொண்டிருந்த தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகின்ற பணியில், லுத்தரை ஈடுபடுத்தும் நோக்கம் உடையவராக தேவன் இருந்தார். துன்பங்களும், தனிமையும், கடுமையான ஒழுக்கமும், கடின உழைப்பும் லுத்தரின் முக்கியமான ஊழியத்திற்காக, எல்லையில்லா ஞானம் படைத்தவர் ஏற்படுத்தின பள்ளியின் பாடங்களாக இருந்தன. (2) GCTam 125.2
லுத்தரின் தந்தை மிகுந்த செயலாக்கமுடைய மனோபாவம் உடையவராகவும், கண்ணியம், தீர்மானம், நேர்மை ஆகிய பண்புகளை உடையவராகவும் இருந்தார். விளைவுகள் எதுவாக இருந்தாலும் சரி, கொடுக்கப்பட்ட பணியைச்செய்யும் கடமையில், அவர் உண்மையுள்ளவராக இருந்தார். அவரது மேலான நல்ல உணர்வு, தனிமையாக இருக்க வேண்டும் என்ற மடாலய அமைப்பின்மீது நம்பிக்கை இல்லாததாக இருந்தது. அந்த குருமார்களின் மடத்தில் லுத்தர் அவரது அனுமதி இன்றிச் சேர்ந்தது, அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இந்த நிலைமையிலிருந்து தனது மகனுடன் ஒப்புரவாக அவருக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் அவரது கருத்து மாறாததாகவே இருந்தது. (3) GCTam 126.1
லுத்தரின் பெற்றோர்கள் அவர்களது பிள்ளளைகள் நன்முறையில் கற்றுத்தேறவேண்டும் என்பதில் மிகுந்த அக்கரை செலுத்தினார்கள். தேவனை அறிகிற அறிவிலும், கிறிஸ்தவப் பண்புகளை அடைவதிலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் போதனை செய்துவந்தனர். அவரது மகன் கர்த்தரின் பெயரை தன் நினைவில் வைத்து, அவருடைய சத்தியத்தை முன்னேற்றமடையச் செய்வதில் உதவக்கூடியவனாக இருக்கவேண்டும் என்று அந்தத் தந்தையால் ஏறெடுக்கப்பட்ட ஜெபம், அவரது மகன் கேட்க உயர எழுந்தது. இந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நுண்ணறிவு, சன்மார்க்கநெறி ஆகியவைகளை அவர்களது வாழ்க்கையின் அன்றாடப் பணிகளினூடே அனுபவித்து, முன்னேறும்படியான அனுகூலங்களை வாஞ்சையுடன் அனுமதித்தனர். தெய்வபக்தியும் பயன்படும் தன்மையுமிக்க ஒரு வாழ்க்கைக்கு தங்களுடைய பிள்ளைகளை ஆயத்தப்படுத்தும் அவர்களது விடாமுயற்சியானது மிகுந்த அக்கரை உள்ளதாக இருந்தது. பண்பின் உறுதியின் பலத்தினால், சில சமயங்களில் அவர்கள் கடுமையைக் காட்டியிருந்தனர் ஆனால் அந்த சீர்திருத்தவாதி சில காரியங்களில் அவரது பெற்றோர்கள் தவறி உள்ளனர் என்பதை உணர்ந்தபோதிலும், அவர்களது ஒழுங்கு நடவடிக்கையைப் பழிக்காமல், அதை அங்கீகரித்திருந்தார். (4) GCTam 126.2
மிகவும் சிறியவயதில் பள்ளியில் கடினமாகவும் முரட்டுத்தனமாகவும் நடத்தப்பட்டார் லுத்தர். அவரது பெற்றோரின் வறுமை மிக அதிகமாக இருந்ததினால், அவர் வீட்டிலிருந்து பேரூரில் உள்ள பள்ளிக்குச் சென்றபோது, தனது உணவிற்காக வீடுகள்தோறும் முன்நின்று பாடவேண்டியதாக இருந்தது. அப்படியிருந்தும் அவர் அவ்வப்போது பசியால் வாடினார். அக் காலத்தில் மதத்தில் இருந்த துயரமிக்க மூடநம்பிக்கைகள் அவரைப் பயத்தால் நிரப்பியது. அன்புமிக்க பரலோகத் தந்தை என்பதைவிட, கொடுமைமிக்க, பயங்கரமான, வேண்டுகோளிற்குச் செவிசாய்க்காத நீதிபதியாக தேவனை அவர் கண்டார். இருள்மிக்க எதிர்காலத்தை நடுக்கத்துடன்நோக்கி, துன்பம்மிக்க இதயத்துடன், இரவுவேளைகளில் தரையில் படுத்திருப்பார். அப்படியிருந்தும் அவரது ஆத்துமாவைக் கவர்ந்த, சன்மார்க்கமும் நுண்ணறிவும் நிறைந்த நெறிகளின் தரத்தைக் காப்பதில், மிகவும் அதைரியமூட்டக்கூடிய அநேக சமயங்களில், அவர் தீர்மானம் உடையவராக முன்நோக்கிச் சென்றிருந்தார். (5) GCTam 126.3
அவர் அறிவுத் தாகமுடையவராக இருந்தார். அவரது ஆர்வ மும் நடைமுறையின்மீதுள்ள வாஞ்சைமிக்க மனித சுபாவமும், வெளித் தோற்றமும் மேலெழுந்தபடியாக இருப்பவைகளைவிட, உறுதியும் பயன் உள்ளவைகளையுமே நாடுபவையாக இருந்தன. தனது பதினெட்டாம் வயதில், எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தபோது, அவரது ஆரம்ப காலத்திலிருந்ததைவிட, தற்போதைய நிலைமை அதிக சாதகமாகவும் வசதிகள்மிக்கதாகவும் இருந்தது. அவரது பெற்றோர்கள் தங்களது கடுமையான முயற்சியினால், அவருக்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளையும் செய்யக்கூடிய நிலைமையில் இருந்தார்கள். அவரது அறிவுமிக்க நண்பர்களின் செல்வாக்கானது, அவரது கடந்தகாலப் பயிற்சி யின்போதிருந்த துயரங்களின் விளைவைக் குறைப்பதாக அமைந்தன. மிகச் சிறந்த ஆசிரியர்களின் நூல்களைக் கற்பதிலும், அவர்களது வலிமைமிக்க சிந்தனைகளைத் தனக்குள் சேகரிப்பதிலும், ஞானிகளின் ஞானத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுவதிலும் அவர் ஈடுபட்டார். அவரது கடந்தகால ஆசிரியர்களால் அவர் கடுமையான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும்படி நடத்தப்பட்டிருந்தபோதும், சிறப்பானவராக விளங்கியதன் அனுகூலங்களினால், அவரது மனம் விரைவாக முன்னேறியது. மிகப் பிரமாதமான ஞாபகசக்தி, உயிரோட்டமுள்ள கற்பனைகள், பலமிக்க பகுத்தறியும் திறன், களைப்பற்ற வகையில் அவைகளைச் செயல்படுத்துதல், ஆகியவை அவரது சகமாணவர்களுக்கு மத்தியில் அவரை முன்னணியில், முதல்வராக இருக்கச்செய்தது. அறிவின்பாலமைந்த ஒழுக்கம், அவரது புரிந்துகொள்ளும் திறனைக் கனியச்செய்து, எண்ணத்தைச் செயலாக்கமும் தெளிவாக உணர்ந்துகொள்ளக்கூடியதாகவும் செய்து, வாழ்க்கையின் எதிர்காலப் போராட்டங்களுக்கு அவரை ஆயத்தம் செய்தது. (6) GCTam 127.1
கர்த்தருக்குப் பயப்படுதல் அவரது இதயத்தில் இருந்து, காரியங்களைச் செயல்படுத்துவதில் உறுதியுள்ளவராகவும், தேவனுக்கு முன்பாக மிகுந்த தாழ்மையுள்ளவராகவும் இருக்க வழிகோலியது. தெய்வீக உதவியில் சார்ந்திருக்கும் உணர்வினை உடையவராயிருக்க அவர் தவறவில்லை. அவரது இதயம் தேவ நடத்துதலுக்காகவும் தாங்குதலுக்காகவும் தொடர்ந்து விண்ணப்பங்களை ஏறெடுப்பதாக இருந்தது. நன்றாக ஜெபம் செய்வது மேலான கல்வியின் அரைப்பகுதி (பாதிப் பகுதிக்கும் அதிகமான கல்வி) என்று அடிக்கடி அவர் கூறுவதுண்டு.--D’Aubigne, b. 2, ch. 2. (7) GCTam 127.2
பல்கலைக்கழக நூலகத்திலிருந்த புத்தகங்களை ஒருநாள் லுத்தர் சோதித்துக்கொண்டிருந்தபோது, அவர் இதற்குமுன்னர் ஒருபோதும் கண்டிராத ஒரு லத்தீன் வேதாகமத்தைக் கண்டார். அப்படி ஒரு புத்தகம் இருக்கிறது என்பதைப்பற்றிய அறிவே இல்லாதவராக அவர் இருந்தார். சுவிசேஷங்களின் பகுதிகளும், நிருபங்களின் பகுதிகளும், பொது ஆராதனை வேளைகளில் மக்களுக்கு வாசிக்கப்படுவதை கேட்டிருந்த அவர், அவைகள்தான் முழு வேதாகமம் என எண்ணியிருந்தார். இப்பொழுது முதல் தடவையாக, தேவனுடைய வார்த்தைகள் முழுவதையும் அவர் கண்டார். திகிலும் வியப்பும் கலந்தவராக, அவர் அதன் பரிசுத்த பக்கங்களைத் திருப்பினார். விரைந்த நாடியுடனும் துடிக்கும் இதயத்துடனும் ஜீவ வார்த்தைகளை அவருக்கென்று வாசித்து, “ஓ! தேவன்! இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எனக்குச் சொந்தமாகக் கொடுத்தால்” என்று அதன் பக்கங்களை வாசிப்பதை நிறுத்தி, அவ்வப்போது கூறினார்.-Ibid., b. 2, ch. 2. அவருக்கருகில், பரலோகத்தின் தூதர்கள் இருக்க, புரிந்துகொள்ளுவதற்கென்று தேவ சிங்காசனத்திலிருந்து புறப்பட்ட ஒளி, அவர் அறிந்து கொள்ளுவதற்காக தேவ சத்தியங்களின் பொக்கிஷங்களை வெளிக்காட்டின. தேவனுக்கு எதிராகச் செயல்பட அவர் எப்போதும் பயந்திருந்தார். ஆனால் இப்பொழுதோ தான் ஒரு பாவி என்கிற உணர்வு இதற்குமுன் ஒருபோதும் இல்லாதவிதமாக ஆழமாக அவரைப் பற்றிக்கொண்டது. (8) GCTam 128.1
பாவத்திலிருந்து விடுதலையையும், தேவனுடைய சமாதானத்தையும் அடைய வேண்டும் என்ற அக்கரையுள்ள வாஞ்சை அவரை மடாலய வாழ்க்கையை மேற்கொள்ள வழிநடத்தினது. இங்கு மிகக் கீழ்த்தரமான பணிகளைச் செய்யவும், தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கவும் அவர் நடத்தப்பட்டார். மரியாதையையும் பாராட்டுதலையும் மிக வாஞ்சையுடன் விரும்புகின்ற வயதில், அப்போது அவர் இருந்திருந்தார். இந்தக் கீழ்த்தரமான வேலை அவரது இயல்பான உணர்வுகளை சிறுமைப்படுத்துவதாக இருந்தது. ஆனால் தமது பாவங்களுக்கு இவை அவசியம் என்று நம்பி, அந்த இழிவை அவர் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். (9) GCTam 128.2
அவரது பணிகளுக்கிடையில், அவருக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு விநாடியையும் வேத ஆராய்ச்சிக்காகச் செலவிட்டார். நித்திரை நேரத்தை குறைத்தும், உணவருந்துவதற்காகச் செலவுசெய்த நேரத்தையுங்கூட குறைத்து, வேதத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். மற்றெல்லாவற்றையும்விட, தேவனுடைய வார்த்தைகளை ஆராய்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். அந்த மடாலயச் சுவரின்மீது ஒரு வேதாகமம் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதைக்கண்டு, அவர் அடிக்கடி அந்த இடத்திற்குச் செல்லுவார். அவரது பாவத்தைப்பற்றிய உணர்வு ஆழமானபோது தனது சொந்தக் கிரியைகளினால் பாவமன்னிப்பையும் சமாதானத்தையும் அடைவதற்கு வகைதேடினார். மடாலய வாழ்க்கை, எவைகளிலிருந்து விடுதலையைக் கொண்டுவரவில்லையோ, அந்தத் தீய தன்மையைக் கீழடக்கும் முயற்சியில், உபவாசமிருந்து, உறங்காமலிருந்து, தன்னைத்தானே சவுக்கினால் அடித்து, கடினமான வாழ்க்கையை நடத்தினார். தேவனுக்குமுன்பாக அங்கீகரிக்கப்பட்டவராக நிற்கத் தகுதியடையும்படியான இதயத் தூய்மையை அடைந்துகொள்ளுவதற்கான எந்தத் தியாகத்தையும் செய்வதிலிருந்து, அவர் பின்வாங்கவில்லை. எனது நியமத்திலிருந்த ஒழுங்குகளை என்னால் வெளியில் சொல்ல முடிவதைவிட, அதிகக் கடுமையாக நான் பின்பற்றினேன். நான் உண்மையிலேயே ஒருபக்தியுள்ள சன்னியாசியாக இருந்தேன் என்று அவர் பின்னான காலத்தில் கூறினார். கிரியைகளினால், ஒரு சன்னியாசியால் பரலோகத்தை அடைய முடியுமானால், நிச்சயமாக நான் அதற்குத் தகுதி உடையவனாக இருக்கிறேன். நான் இன்னும் சில நாட்கள் அந்தக் கோட்பாட்டில் தேர்ந்திருந்தால், சாகும்வரை அவைகளைத் தொடர்ந்திருப்பேன்.--Ibid., b. 2, ch. 3. வேதனைமிக்க இந்தக் கிரமங்களின் விளைவாக, அவர் பலவீனமடைந்து அடிக்கடி மயக்கமடைந்து, அவைகளின் விளைவுகளிலிருந்து வாழ்க்கை முழுவதிலும் விடுதலை அடையமுடியாதவராக இருந்தார். இந்த முயற்சிகள் அனைத்தினாலும் அவரது ஆத்தும பாரத்திலிருந்து அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. கடைசியாக, அவர் நம்பிக்கை இழப்பின் ஓரத்திற்கே விரட்டப்பட்டார்.(10) GCTam 128.3
எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல் லுத்தருக்குத் தோன்றின சமயத்தில், தேவன் அவருக்கு நண்பனாகவும் உதவிக்காரனாகவும் இருக்கும்படி ஒருவரை எழுப்பினார். ஸ்டாபிட்ஸ் என்னும் அந்த பக்திமிக்கவர் தேவனுடைய வார்த்தைக்கு லுத்தரின் மனதைத் திறந்து, தன்னைத்தான் பார்ப்பதை விட்டுவிட்டு, தேவப்பிரமாணங்களுக்கு விரோதமாகச் செய்யப் பட்ட பாவங்களுக்காக நிகழவுள்ள நித்தியத் தண்டனையைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதையும்விட்டுவிட்டு, அவரதுபாவங்களை மன்னிக்கின்ற இயேசுவைப் பார்க்கும்படி நடத்தினார். “உங்களுடைய பாவங்களுக்காக உங்களை நீங்கள் வதைத்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மீட்பரின் கரத்தில் உங்களை வைத்துவிடுங்கள்” என்றார். “அவரது வாழ்க்கை யிலுள்ள நீதியையும், அவரது மரணம் கொண்டுவருகிற மீட்பையும், அவரையும் நம்புங்கள். தேவகுமாரன் சொல்லுவதைக் கவனியுங்கள். தெய்வீக இரட்சிப்பின் நிச்சயம் உங்களுக்குக் கிடைப்பதற்காகவே அவர் மனிதனானார். முதலில் உங்களை நேசித்த அவரை நேசியுங்கள்” என்று அந்த இரக்கத்தின் தூதுவன் பேசினார்.—Ibid., b. 2, ch. 4. இந்த வார்த்தைகள் லுத்தரின் மனதில் ஆழமாகப் பதிந்தன. நெடுநாட்களாகப் போற்றப்பட்டிருந்த பாவங்களுக்கெதிரான போராட்டங்களைத் தாண்டி, சத்தியத்தைப் பற்றிக்கொள்ள அவரால் முடிந்தது. அதனால் இதுவரைத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த அவரது ஆத்துமாவிற்குச் சமாதானம் வந்தது. (11) GCTam 129.1
லுத்தர் குருவாக அபிஷேகம்செய்யப்பட்ட பின்னர், மடாலயத்தின் தனிமையான அறையிலிருந்த அவர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராயிருக்கும்படி அழைக்கப்பட்டார். இங்கு அவர் வேதாகமத்தை அதன் மூலமொழியில் படிப்பதில் தன்னை ஈடுபடுத்தினார். அவர் வேதாகமப் புத்தகத்தைத் திறந்து, சங்கீதங்கள், சுவிசேஷங்கள், நிருபங்கள் ஆகியவைகளிலிருந்து, அவைகளைக் கேட்பதில் மகிழ்ச்சியுடையவர்களாக இருந்த மக்களுக்குச் சொற்பொழிவாற்றினார். அவரது நண்பரும் மேலதிகாரியுமாயிருந்த ஸ்டாபிட்ஸ் அவரைப் பிரசங்க பீடத்திலேறி, வேத வாக்கியங்களைப் பிரசங்கிக்கும்படி வற்புறுத்தினார். கிறிஸ்துவிற்குப்பதிலாக நின்று, வேத வாக்கியங்களைப் போதிப்பதற்கு தனக்குத் தகுதி இல்லை என்று உணர்ந்தவராக லுத்தர் தயங்கினார். மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அவரது நண்பர்களின் அழைப்பிற்கு இணங்கினார். வேத வாக்கியங்களில் அவர் ஏற்கனவே வல்லவராக இருந்தார். அத்துடன் தேவ கிருபையும் அவர்மீது தங்கி இருந்தது. அவரது வாக்கு வன்மையானது கேட்டவர்களை கவர்ந்துகொண்டது. மிகத் தெளிவாகவும் வல்லமையுடனும் அவர் முன்வைத்த சத்தியங்கள், கேட்பவர்களின் புரிந்துகொள்ளுதலைத் திருப்திப்படுத்தி, கேட்போரின் இதயங்களைத் தொட்டது. (12) GCTam 130.1
லுத்தர் இன்னமும் ரோமன் கத்தோலிக்க சபையின் உண்மையான மகனாகவே இருந்து, அதைத்தவிர வேறுவிதமாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்ற எண்ணமுடையவராக இருந்தார். ரோம் நகரைச் சந்திக்கும்படி தெய்வீக ஏற்பாடு அவரை நடத்தினது. செல்லும் பாதையிலிருந்த மடாலயங்களில் தங்கி, கால்நடையாகவே ரோம் நகரை நோக்கிச் சென்றார். இத்தாலியிலிருந்த ஒரு மடத்தில் காணப்பட்ட செல்வங்களையும், பெரும் கட்டிடங்களையும், சுகபோகங்களையும் கண்டு வியந்தார். அரச குமாரர்களுக்கிணையான மிகுந்த வருமானங்களை அனுபவிப்பவர்களாயிருந்த குருமார்கள், ரசிக்கும்படியான கட்டிடங்களில் வாழ்ந்து, மிக உயர்ந்த விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து, சிறப்பான உணவுவகைகளை விருந்தாக உண்டுகளித்தனர். இவர்களைப்பற்றித் தவறாகச் சொல்லப்பட்டிருந்த வைகளைப்பற்றிய வேதனையுடன், லுத்தர் தனது சுயமறுப்பம் கடினமும் உள்ள வாழ்க்கையை இவர்களது வாழ்க்கையுைடன் ஒப்பிட்டுப்பார்த்தார். அவரது மனம் களைப்படையத் தொடங்கியிருந்தது! (13) GCTam 130.2
கடைசியாக, ஏழு மலைகளையுடைய அந்த நகரத்தை அவர் நோக்கினார். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவராக, தரையின்மீது சாஷ்டாங்கமாக விழுந்து: “பரிசுத்த ரோம் நகரமே! நான் உனக்கு வணக்கம் செலுத்துகிறேன்” என்றார்.-Ibid., b. 2, ch. 6. அவர் அந்த நகரத்திற்குள் நுழைந்து, ஆலயங்களைச் சந்தித்து, குருமார்களாலும் சந்நியாசிகளாலும் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட ஆச்சரியமான கதைகளைக் கவனித்து, தேவையான எல்லாச் சடங்குகளையும் செய்தார். தனக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் உண்டுபண்ணக்கூடிய காட்சிகளை, நோக்கிய இடங்களிலெல்லாம் கண்டார். குருமார்களின் பிரிவுகள் அனைத்திலும் அக்கிரமம் நிறைந்திருப்பதை அவர் கண்டார். குருமார்கள் திருப்பலி பூசை செய்துகொண்டிருந்தபொழுதிலுங்கூட, பேசின தரக்குறைவான கேலிப்பேச்சுகளையும், வீண்பேச்சுகளையும் அவர் செவியுற்றார். குருமார்களோடும், நகர மக்களோடும் கலந்தபோது, சமயக் கருத்து வேறுபாடும் மிதமிஞ்சிய உணவுப் பழக்கங்களும், தீயபழக்கங்களும், நிலவி வந்ததைக் கண்டார். ரோம் நகரில் செய்யப்படும் அக்கிரமங்களும் பாவங்களும் நம்பமுடியாதவை நம்புவதற்கு அவைகளை நேரில் காணவும், கேட்கவும் வேண்டும்! நரகம் என்று ஒன்று இருந்தால், அதன்மேல்தான் ரோம் நகரம் கட்டப்பட்டு உள்ளது. சகல பாவங்களும் புறப்பட்டுவரும் பாதாளமாக அது இருக்கிறது என்று சொல்லப்படுவது வழக்குச்சொல்லாக இருந்தது.-Ibid., b. 2, ch. 6. (14) GCTam 131.1
நமது இரட்சகர் ரோமர்களின் விசாரணைக்குப் பின்னர் விசாரணை மண்டபத்தைவிட்டுக் கீழிறங்கிவந்த படிக்கட்டுகள், அற்பதமான விதத்தில் எருசலேமிலிருந்து ரோம்நகருக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், அந்தப் பிலாத்துவின் படிக்கட்டுகளின்மீது முழங்கால்களால் ஏறிச்செல்லுகின்ற அனைவருக்கும் பாவமன்னிப்பு உண்டாகும் என்றும், ஒரு புது வாக்குத்தத்தம் சமீபத்தில் போப்புவினால் வெளியிடப்பட்ட ஒரு கட்டளையாக இருந்தது. லுத்தர்அந்தப் படிக்கட்டுகளின்மீது ஒருநாள் மிகுந்த பக்தியுடன் ஏறிக்கொண்டிருந்தபொழுதில்“விசுவாசத்தினால்நீதிமான்பிழைப்பான்” (ரோமர் 1:17) என்று இடிமுழக்கம் போன்ற ஒரு சத்தம் அவரிடம் சொல்லுவதுபோல் தோன்றியது. அவர் குதித்து எழுந்துநின்று, வெட்கத்துடனும் கலவரத்துடனும் அந்த இடத்தைவிட்டு விரைவாகச் சென்றார். அந்த வார்த்தையானது அதின் வல்லமையை, அவரது ஆத்துமாவிலிருந்து ஒருபோதும் இழக்கவே இல்லை. அந்தநேரத்தில் இருந்து, மீட்பிற்காக மனிதர்கள் செய்யும் கிரியைகள்மீது நம்பிக்கை வைத்தல் என்ற தவறை அதற்கு முன் ஒருபோதும் இல்லாதவிதத்தில் மிகத் தெளிவாகவும், இயேசுவின் மேன்மைகளின்மீதான தொடர்ச்சியான விசுவாசத்தின் அவசியத்தையும் அவர் கண்டார். போப்பு மார்க்கத்தின் வஞ்சகத் தோற்றங்களுக்கு ஒருபோதும் மூடாமலிருக்கும்படி, அவரது கண்கள் திறக்கப்பட்டன. அவர் தனது முகத்தை ரோம் நகரின் மீதிருந்து திருப்பினபோது, அவதுடைய இதயமும் திரும்பினது. அந்த நேரத்திலிருந்து, அந்தப் பிளவு, போப்புமார்க்க சபையிலிருந்து அவரது சகலவிதமான உறவுகளையும் பிரிக்கும்வரை, மிகவும் அகலமாக விரிவடையத் தொடங்கியது. (15) GCTam 131.2
ரோம் நகரிலிருந்து அவர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியதும், தெய்வீக அறிஞர் (டாக்டர் ஆஃப் டிவைனிட்டி) என்னும் பட்டம் பெற்றார். தாம் மிகவும் நேசித்த வேதவாக்கியங்களை அறிந்து கொள்ள, இதற்குமுன் இல்லாத அளவில் ஈடுபட சுதந்திரம் பெற்றார். வழக்குச்செற்களையும் போப்புமார்களின் கோட்பாடுகளையும் போதிப்பதை விட்டுவிட்டு, தேவனுடைய வார்த்தைகளைக் கவனமாகவும் நேர்மை யாகவும் பிரசங்கிக்க அவர் ஒரு பக்திவினயமான வாக்குறுதியை எடுத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் அவர் ஒரு சன்னியாசியாகவோ பேராசிரியராகவோ இராமல், வேதாகமத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்னோடியாக ஆனார். சத்தியத்தின்மீது பசிதாகமுடையதாயிருந்த தேவனுடைய மந்தையை போஷிக்கும் ஒரு மேய்ப்பனாக அவர் அழைக்கப் பட்டிருந்தார். “வேதவாக்கியங்களின் ஆதாரத்தின்மீது இல்லாத, எந்தக் கோட்பாடுகளையும் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று அவர் உறுதியாக அறிவித்தார். இந்த வார்த்தைகள் போப்பு மார்க்கத்தின் மேலாதிக்கம் என்னும் அஸ்திவாரத்தின்மீது பலத்த அடியாக விழுந்தது. அவரது வார்த்தைகள் சீர்திருத்தத்தின் உயிராற்றல்மிக்க கொள்கைகளாக அமைந்தன. (16) GCTam 132.1
தேவனுடைய வார்த்தைகளுக்குமேலாக மனிதக் கோட்பாடுகளை உயர்த்துவதால், ஏற்படவிருக்கும் அபாயத்தை லுத்தர் கண்டார். வேதப் பள்ளியில் பயின்ற மனிதர்களின் உத்தேசமான நேர்மையற்ற கோட்பாடு களை அவர் அச்சமின்றித் தாக்கி, மக்களை இதுவரை கட்டுப்பாடு செய்திருந்த தத்துவங்களையும், ஆதீனங்களையும் எதிர்த்தார். இப்படிப்பட்ட கல்விகள் பயனற்றவை என்பதோடன்றி அபாயகரமானவை என்றும் அவைகளை மறுத்து, அவரது பேச்சுக்களைக் கேட்பவர்களின் மனங்களை நூதனமான தத்துவ சாஸ்திரிகளிடமிருந்தும், வேதவிற்பன்னர்களிடமிருந்தும் விலக்கி, தீர்க்கதரிசிகளாலும், அப்போஸ்தலர்களாலும் முன்னதாகவே வைக்கப்பட்டுள்ள நித்தியகாலச் சத்தியங்களுக்குத் திருப்பினார். (17) GCTam 132.2
அவரது வார்த்தைகளின்மீது சார்ந்திருந்த ஆர்வமிக்க கூட்டத்தினருக்கு, அவர் கொடுத்த தூதானது, மிகவும் விலைமதிப்பு உள்ளதாக இருந்தது. அவர்களது செவிகளில் இதுவரை இப்படிப்பட்ட போதனைகள் விழுந்ததே இல்லை. மீட்பரின் அன்பைப்பற்றிய மகிழ்ச்சி மிக்க செய்திகள், பாவ நிவாரணமான அவரது இரத்தத்தினால் உண்டாகும் பாவமன்னிப்பு, சமாதானம் ஆகியவைபற்றிய வாக்குறுதிகள் அவர்களது இதயங்களை மகிழச்செய்து, அழிவற்றதான நம்பிக்கைகளை அவர்களுக்குள் தூண்டினது. பூமியின் கடைசிப் பகுதிகளுக்கும் சென்று, காலத்தின் முடிவுவரை தன் ஒளியினை அதிகரிக்கச்செய்யும் ஒளிர்கின்ற கதிர்களையுடைய விளக்கானது விட்டன்பர்கில் ஏற்றப்பட்டது. (18) GCTam 133.1
ஆனால், ஒளிக்கும் இருளுக்கும் இசைவு இருக்க இயலாது. சத்தியத்திற்கும் தவறுக்கும் இடையில் அமர்த்தமுடியாத ஒரு போராட்டம் உண்டு. ஒன்றை உயர்த்தி அதைப் பாதுகாப்பது மற்றொன்றைத் தாழ்த்தி தூக்கி எறிவதாக இருக்கும். “நான் சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்” (மத். 10:34) என்று நமது இரட்சகர் தாமே கூறினார். தேவன் நடத்துவதில்லை. ஆனால் என்னை முன்னேறிச் செல்லும்படித் தள்ளுகிறார். எனது சொந்தச் செயல்களுக்கு நான் எஜமானன் அல்ல. என்னால் மகிழ்ச்சியுடன் ஓய்ந்திருக்கமுடியும் ஆனால் நான் கொந்தளிப்புகளுக்கும் புரட்சிகளுக்கும் நடுவில் வீசியெறியப்பட்டிருக்கிறேன் என்று சீர்திருத்தம் ஆரம்பமான சில காலத்திற்குப் பின் லுத்தர் சொன்னார்.--Ibid., b. 5, ch. 2. இப்பொழுது அந்த எதிர்ப்புக்குள் இறங்கும்படி அவர் நெருக்கப்பட்டார். (19) GCTam 133.2
ரோமன் கத்தோலிக்க சபை தேவ கிருபையை வியாபார மாக்கியிருந்தது! அவளது பலிபீடங்களுக்கருகில் பணமாற்றம் செய்பவர் களின் மேஜைகள் வைக்கப்பட்டு, வாங்குகிறவர்கள் விற்கிறவர்கள் ஆகியோரின் சத்தம் காற்றில் எதிரொலித்தது. ரோம் நகரில் பரிசுத்த பேதுருவின் ஆலயம் கட்டப்படுவதற்காக நிதி தேவை என்னும் வேண்டு கோளின்படி, போப்புவின் அதிகாரிகளால்,பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்கப் பட்டன. தேவனை ஆராதிப்பதற்கு குற்றங்களின் விலையினால் ஒரு ஆலயம் கட்டப்படவேண்டியதாக இருந்தது! அக்கிரமத்தின் கூலியினால், மூலைக்கல் வைக்கப்பட்டது! ரோமன் கத்தோலிக்க சபையின் பேராசையை நிறைவேற்றுவதற்காகக் கையாளப்பட்ட அதே உபாயமானது, அதன் வல்லமை அதன் பெரிய தன்மை ஆகியவற்றின்மீதான மரணஅடியை எழுப்பினது. போப்புவின் சிங்காசனத்தை அதிரச்செய்து, அவரது மூன்றடுக்குக் கிரீடத்தை போப்புவின் தலையில் இருந்து விழச்செய்யும் போப்புமார்க்கத்திற்கு எதிரான தீர்மானமான வெற்றியை எழுப்பும்படியாக இருந்தது.(20) GCTam 133.3
ஜெர்மனியில் பாவமன்னிப்புச்சீட்டை விற்கும்படி அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட டெட்செல் என்பவன், சமுதாயத்திற்கெதிரான மிகக் கீழ்த்தரமான குற்றங்களுக்காகவும், தேவப்பிரமாணங்களுக்கு எதிரான பாவச் செயல்களுக்காகவும் தண்டிக்கப்பட்டவனாக இருந்தான் ஆனால் அவன் அந்தத் தண்டனையிலிருந்து, விடுவிக்கப்பட்டு, போப்புவின் கூலிப்படை யாளியாக இருந்து, பழிநாணாத அவரது திட்டங்களை நிறைவேற்றும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தான். மிகக் கேவலமான வெட்கங்கெட்ட தன்மையை உடைய அவன், அறியாமையும் நம்பமுடியாமையும் மூட நம்பிக்கையுமிக்க மக்களை ஏமாற்றுவதற்காக மெருகூட்டப்பட்ட பொய் களைத் திரும்பத் திரும்பச் சொன்னான். அவர்கள் தேவனுடைய வார்த்தை களை உடையவர்களாக இருந்திருந்தால், இவ்வாறாக ஏமாற்றப்பட்டிருக்க மாட்டார்கள். போப்புமார்க்கத்தின் வல்லமையையும் அதன் பேராசைமிக்க தலைவர்களின் செல்வத்தை அதிகப்படுத்தவும், அவர்களைப் போப்பு மார்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவுமே, வேதாகமம் அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. (See John C. L. Gieseler, A Compendium of Ecclesiastical History, per. 4, sec. 1, par. 5.) (21) GCTam 134.1
டெட்செல் ஒரு ஊருக்குள் நுழைந்ததும், அவனுக்கு முன்பாக அறிவிப்பாளனாகச் செல்லுகின்ற மனிதன் “தேவனுடையதும், பரிசுத்த தந்தையுடையதுமான கிருபை உங்கள் வாசலருகில் உள்ளது” என்று அறிவிப்பான்.-D'Aubigne, b. 3, ch. 1 தேவதூஷணமாகத் தன்னைத் தேவன் என்பதுபோல் காண்பிக்குமந்த மனிதனை பசப்புக்காரனை, மக்கள் பரலோகத்தில் இருந்து தேவனே இறங்கி வந்திருக்கிறார் என்பதாக எண்ணி வரவேற்றனர். அந்த இழிவான வியாபாரம் ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டது. டெட்செல் பிரசங்கபீடத்திலேறி, “பாவமன்னிப்புச் சீட்டு தேவனுடைய மிக விலையுயர்ந்த ஈவு” என்று சொல்லி, சீட்டுகளை உயர்த்திக் காண்பித்து: “பவமன்னிப்புச் சான்றிதழின் வலிமை என்னவெனில், அதை வாங்குபவர் எதிர்காலத்தில் செய்யவிரும்பும் சகல பாவங்களுங்கூட அவருக்கு மன்னிக்கப்படும்!? பாவத்திற்கான மனந்திரும்புதலுங்கூடத் தேவையில்லை” என்றான்!!—Ibid., b. 3, ch. 1. இதைவிட மோசடியாக, “பாவமன்னிப்புச் சீட்டு உயிருள்ளவர்களின் பாவங்களை மட்டுமல்ல இறந்தவர்களின் பாவங்களையும் மன்னிக்கவல்லதாக உள்ளது என்று உறுதிகூறி, பணம்காணிக்கைப்பெட்டியின் அடியில் விழுந்ததும், எந்த ஆத்துமாவிற்காக அது செலுத்தப்பட்டதோ, அது உத்தரிக்கு மிடத்திலிருந்து விடுதலையடைந்து, பரலோகத்தை நோக்கிச் செல்லும்” என்றான். (See K. R. Hagenbach, History of the Reformation, vol. 1, p. 96.) (22) GCTam 134.2
அற்புதங்களைச் செய்கின்ற வல்லமையை அப்போஸ்தலர்களிடம் இருந்து விலைகொடுத்து வாங்குவதற்கு, மாயக்காரன் சீமோன் முன்வந்தபோது, பேதுரு அவனை நோக்கி: “தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால், உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது” (அப்போஸ்தலர் 8:20) என்று சாபமாகச் சொன்னான். ஆனால் ஆர்வமிக்க ஆயிரக்கணக் கானவர்களால், டெட்செல்லின் இந்தப் பேரமானது ஏற்றுக்கொள்ளப் பட்டது. பொன்னும் வெள்ளியும் அவரது கருவூல அறைகளில் நிரம்பிவழிந்தன. இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான மனம் திரும்புதல், விசுவாசம், பாவத்தை மேற்கொள்ளும் கருத்தான முயற்சிகளைவிட, பணத்தால் அதைப் பெற்றுக்கொள்வது மிகவும் எளிதாகத் தோன்றினது!? (23) GCTam 135.1
ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்த கல்வியும் பக்தியுமிக்க மனிதர்கள், பாவமன்னிப்புச்சீட்டுப் போதனையை எதிர்த்தனர். பகுத்தறிவிற்கும் வெளிப்படுத்தப்பட்டவைகளுக்கும் எதிரான இந்தப் போலிவேடத்தில் ஏராளமானவர்கள் விசுவாசம் இல்லாதவர்களாக இருந்தனர். அக்கிரமமான இந்த வியாபாரத்திற்கெதிராக, எந்த ஒரு குருவானவரும் தனது கரத்தை உயர்த்தவில்லை. ஆனால் இதன் காரணமாக, மனிதர்களின் எண்ணங்களில் தொந்தரவும் அசௌகரியமும் உண்டாகி, “ஏதாவது ஒரு கருவியின் மூலமாக ஆண்டவர் அவரது சபையைத் தூய்மைப்படுத்திச் செயலாற்றமாட்டாரா?” என தாகத்துடன் ஏங்கித்தவித்தனர். (24) GCTam 135.2
லுத்தர் நேர்மைமிக்க ஒரு போப்புமார்க்கவாதியாக இருந்த போதிலும், பாவமன்னிப்புச்சீட்டை விற்பனைசெய்கின்ற வெறியர்களின் உள்நோக்கத்தை அறிந்து, மிகுந்த திகிலடைந்தார். அவரது கூட்டத்திலிருந்த அநேகர் இந்தப் பாவமன்னிப்புச் சீட்டுக்களை விலைக்கு வாங்கியிருந்தனர். அவர்கள் பாவ அறிக்கைசெய்து, பாவத்திலிருந்து தூய்மையடையும்படி அவர்களது போதகரிடம் வந்தனர். பாவத்திற்காக மனம்வருந்தி சீர்திருந்த விரும்பாமல், பாவமன்னிப்புச் சீட்டு தங்களிடம் உண்டு என்பதினாலேயே வந்தனர். அவர்கள் தங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி, வாழ்க்கையில் சீர்திருத்தத்தை உண்டாக்காமற்போனால், அவர்கள் தங்கள் பாவங்களில் சாவார்கள் என்று எச்சரித்து, அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கொடுக்க மறுத்துவிட்டார். அவர்களது பாவ அறிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் அந்தச் சான்றிதழ்களை மறுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுடனும், பெரும் குழப்பத்துடனும் டெட்செல்லை அணுகினார்கள். அவர்களில் சிலர் அவர்கள் கொடுத்த பணத்தை அவர்களுக்குத் திருப்பித் தரும்படி துணிவுடன் டெட்செல்லை வற்புறுத்தினார்கள். அந்தப் பரதேசியானவர் மிகுந்த கோபாவேசம் நிறைந்தவரானார். அவருடைய மிகவும் பரிசுத்தமான பாவமன்னிப்புச் சீட்டை, எதிர்க்கத் துணிகின்ற வேதப்புரட்டர்களை எரிப்பதற்காகப் பொதுச் சதுக்கங்களில் தீ மூட்டும்படியான கட்டளையைப் போப்புவிடமிருந்து பெற்றுள்ளதாகக்கூறி, மிகப் பயங்கரமான சாப் வார்த்தைகளைக் கூறினான்.-D'Aubigne, b.3, ch.4 (25) GCTam 135.3
இப்போது சத்தியத்தின் வீரனாக லுத்தர் அவரது பணியில் தைரியத்துடன் நுழைந்தார். மிகுந்த அக்கரையும் பக்திவிநயமுமான அவரது எச்சரிப்பின் சத்தம், பிரசங்கபீடத்திலிருந்து கேட்கப்பட்டது. பாவத்தின் குற்றமிக்க தன்மையை அவர் விளக்கி, மனிதனது கிரியைகளினால், பாவத்தினாலுண்டாகும் குற்ற உணர்வினைக் குறைக்கவோ அல்லது அதன் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ முடியாது என்பதை மக்கள்முன் வைத்தார். பாவத்திற்காக தேவனிடம் மனம் வருந்துவதாலும், கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலுமே மனிதன் இரட்சிக்கப்படமுடியும் என்றார். கிறிஸ்துவின் கிருபையை விலைகொடுத்து வாங்கஇயலாது. அது தேவனுடைய இலவசமான ஈவு என்றும் அவர் கூறினார். மேலும், பாவமன்னிப்புச் சீட்டுகளை விலைக்கு வாங்காமல், சிலுவையிலறையப்பட்ட மீட்பரை விசுவாசத்துடன் பார்க்கும்படி, அவர் ஆலோசனை கூறினார். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி தான் மிகவும் தாழ்மையுடன் இருந்ததையும், பாவப் பரிகாரச் செயல்களைச் செய்ததையும்கூறி, தன்னைத் தான் நோக்குவதை விட்டுவிட்டு, கிறிஸ்துவின்மீது வைத்த நம்பிக்கையினால் மட்டுமே தனக்குச் சமாதானமும், சந்தோஷமும் உண்டானது என்றும், தன் பேச்சைக் கேட்டவர்களுக்குக் கூறினார். (26) GCTam 136.1
டெட்செல் இந்த பக்தியற்ற போலித்தனமான வியாபாரத்தைத் தொடரவே, லுத்தர் தீச்செயல்களுக்கெதிராக மிகவும் பயன்தரக்கூடிய எதிர்ப்பைத் தெரிவிக்கத் தீர்மானித்தார். விரைவில் அதற்கு ஒரு வாய்ப்பு உண்டானது. விட்டன்பர்க் கோட்டையிலிருந்த ஆலயத்தில் அநேக சமயச் சின்னங்கள் இருந்தன. குறிப்பட்ட பரிசுத்தநாட்களில் அவை மக்களுக்குக் காட்டப்பட்டு, அந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று பாவ அறிக்கை செய்பவர்களுக்கு பூரணமான பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவித்திருந்தனர். அதன்படியே அந்த இடங்களுக்கு, அந்த நாட்களில் ஏராளமானவர்கள் கூடினார்கள். அந்தப் பண்டிகை நாட்களில் ஒன்றான சகல பரிசுத்தவான்களின் தினமானது சமீபித்திருந்தது. அதற்கு முந்தினநாள் ஆலயத்தைநோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்களுக்கிடையில் லுத்தரும் சென்று, பாவமன்னிப்புச்சீட்டின் விற்பனைக்கு எதிரான தொண்ணூற்றைந்து நியாயங்கள் (தவறுகளைத் தவிர்க்கின்ற ஆலோசனைகள்) எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஆலயக்கதவின்மீது ஒட்டினார். இந்தத் தத்துவங்கள் மறுத்துப்பேசப்பட வேண்டியவை என்பவர்களுக்கு எதிராக, மறுநாள் பல்கலைக்கழகத்தில் தற்காத்துப்பேசும் தனது விருப்பத்தையும் அறிவித்திருந்தார். (27) GCTam 136.2
அவரது நியாயங்கள் எல்லோரையும் கவர்ந்தது. அவைகள் வாசிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு, ஒவ்வொரு திசையிலும் எடுத்துச்சொல்லப்பட்டன. பல்கலைக்கழகத்திலும் நகரம் முழுவதிலும் இதைப்பற்றிய எழுப்புதல் பெருமளவில் உயர்ந்தது. பாவமன்னிப்பை அருளும் வல்லமையும், அதற்கான தண்டனைப் பணத்தை வாங்குவதும் ஆகிய செயல்கள் ஒருபோதும் போப்புவிற்கோ அல்லது வேறு மனிதருக்கோ கொடுக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கப்படவேண்டிய இந்தக் கோட்பாடுகள் எடுத்துக்காட்டின. இது ஒரு ஏளனத் திட்டமாக, மக்களின் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி, பணத்தைச் சுரண்டும் உபாயமாக, இந்தப் பொய்யான— போலியானவைகளில் நம்பிக்கைவைக்கும் எல்லா ஆத்துமாக்களையும் அழிக்கும்படியாக, சாத்தானால் உண்டுபண்ணப்பட்ட கருவியாக இருந்தது. கிறிஸ்துவின் சுவிசேஷம்தான் சபையின் மிக அதிக நம்பிக்கைக்குரிய பொக்கிஷம் அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய கிருபை, மனமாற்றத்துடனும் விசுவாசத்துடனும் அதைத் தேடும் அனைவருக்கும் இலவசமாக அருளப்படுகிறது என்பது தெளிவாக காட்டப்பட்டது. (28) GCTam 137.1
லுத்தரின் சவாலை ஏற்றுக்கொள்ள ஒருவருக்கும் துணிவு வரவில்லை. அவர் தொடங்கிவைத்த சீர்திருத்தக் கேள்வியானது, சில நாட்களில் ஜெர்மனி எங்கும் பரவின. ரோமன் கத்தோலிக்க சபையில் நிலவியிருந்த பயங்கரமான அக்கிரமங்களைக்கண்டு, அவைகளுக்காகப் புலம்பி, அவைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பது எப்படி என்று அறியாமல் இருந்த அநேக பக்தியுள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் இவைகளை மகிழ்ச்சியுடன் வாசித்து, தேவனின் சத்தத்தை அறிந்துகொண்டனர். ரோமன் கத்தோலிக்க சபையில் அதிகரித்துவரும் ஊழல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, தேவன் தமது கரத்தை நீட்டியிருக்கிறார் என்பதை அவர்கள் கண்டனர். தனது முடிவுகளுக்கு எதிராக எந்தவிதமான மேல்விசாரணையும் செய்ய இயலாது என்று கூறும் இந்த அக்கிரமமான சபையின் வல்லமையைத் தடுத்து நிறுத்த ஒரு தடையை உண்டாக்கவேண்டும் என்று எண்ணியிருந்த இளவரசர்களும் நீதிபதிகளும் இதில் இரகசியமாக மகிழ்ச்சி அடைந்தனர். (29) GCTam 137.2
ஆனால் பாவத்தை நேசிக்கும் மூடநம்பிக்கைமிக்க ஏராளமானவர்கள், அவர்களது பயத்தை சாந்திசெய்திருந்த ஏற்பாடுகள் அடித்துச் செல்லப் படுவதைக் கண்டு கலங்கினர். குற்றங்களை அனுமதிக்கின்ற தங்களது தந்திரங்களுக்கு இடையூறு உண்டாவதை அறிந்த தந்திரமான சபைப் பிரச்சாரங்கள் அவர்களது ஆதாயங்களுக்கு ஆபத்து உண்டாகி இருப்பதைக் கண்டு, அவர்களது போலியான தன்மைகளை நிலைநிறுத்த ஒன்றுதிரண்டனர். சீர்திருத்தவாதி மிகக் கசப்பான விரோதிகளைச் சந்திக்கவேண்டியதாயிற்று. அவர் உணர்ச்சியினால் உந்தப்பட்டு அவசரப்பட்டுச் செயலாற்றுகிறார் என்று சிலர் குற்றம் சாட்டினர். மற்றவர்கள், அவர் தேவனால் நடத்தப்படாமல், அகந்தையினாலும், உயர்வை அடையவேண்டும் என்ற எண்ணத்தினாலும், யூகங்களின் அடிப்படையினாலும், செயல்படுகிறார் என்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். பெருமையின் தோற்றம் இதில் உள்ளது. இது சச்சரவைத் தூண்டிவிடுகிறது என்னும் குற்றச்சாட்டுகள் இல்லாமல், ஒரு புதிய யோசனையை முன்கொண்டுசெல்ல இயலாதென்பது யாருக்குத் தெரியாது? கிறிஸ்துவும் இரத்தசாட்சிகளும் ஏன் கொலைசெய்யப்பட்டனர்? அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்த ஞானத்தை ஏற்றுக்கொள்ளாத பெருமையானவர்கள் போல் தோன்றியதாலும், நிலவியிருந்த பழைய கருத்துக்களுக்கு இசையாமல், புதிய சத்தியங்களை அவர்கள் முன்கொண்டுவந்ததாலுமே. (30) GCTam 138.1
“நான் செய்வது, மனித யோசனைகளினாலல்ல, தேவனுடைய ஆலோசனையினால் மட்டுமே பலன் தரும். அந்தவேலை தேவனுடையதாக இருந்தால், யாரால் அதைத் தடைசெய்ய இயலும்? அப்படி இல்லாவிட்டால் யாரால் அதை முன்கொண்டு செல்ல இயலும்? எனது யோசனைகள் அல்ல் அவர்களது யோசனைகளல்ல் எங்களுடைய யோசனைகளும் அல்ல் பரலோகத்திலிருக்கிற பிதாவே உமது சித்தத்தின்படியே ஆகட்டும்” என்றார்.--Ibid., b. 3, ch. 6. (31) GCTam 138.2
லுத்தருடைய பணி தேவஆவியினால் ஏவப்பட்டுச் செய்யப்பட்ட போதிலும், பயங்கரமான எதிர்ப்புகள் இல்லாமல் அவைகளை அவரால் முன்கொண்டுசெல்ல இயலவில்லை. அவரது எதிரிகளின் நிந்தனைகள், அவரது நோக்கங்களைத் திரித்துக்கூறுதல், அவரது பண்பு, நோக்கம் ஆகியவைகளின் மீதான அவர்களது நீதியற்ற தீய பிரச்சாரங்கள், ஆகியவை திகிலூட்டும் பெருவெள்ளத்தைப்போல் வந்தன. அவைகளின் விளைவு இல்லாமலும் இல்லை. சபையிலும் பள்ளிகளிலும் இருந்த தலைவர்கள் ஆகியோர் சீர்திருத்த முயற்சிகளில் அவருடன் ஒருமித்து மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள் என அவர் நம்பியிருந்தார். மேலான நிலைமையில் இருந்தவர்களின் தைரியம் ஊட்டும் வார்த்தைகள், அவரை மகிழ்ச்சியினாலும் நம்பிக்கையினாலும் உற்சாகப்படுத்தின. சபையில் ஒரு நல்ல எதிர்காலம் உதயமாவதை அவர் முன்னதாகவே கண்டிருந்தார். ஆனால் தைரியப்படுத்துதல் நிந்தனையாகவும், பழியாகவும் மாறின. சபையிலும் நாட்டிலுமிருந்த அநேக மேன்மக்கள் இந்தத் தத்துவங்களில் இருந்த சத்தியங்களைப்பற்றி உணர்த்தப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொண்டால், பெரும் மாறுதல்கள் உண்டாகும் என்பதை அவர்கள் விரைவில் கண்டனர். மக்களை விழிப்படையவும் சீர்திருத்தமடையவும் செய்தல் என்பது, மெய்யாகவே ரோமன் கத்தோலிக்க சபையின் அதிகாரத்தைக் கீழே விழச்செய்வதாக அமைந்து, அதன் பொக்கிஷங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பண ஓடைகளை வற்றச்செய்து, இவ்விதமாக போப்புமார்க்கத் தலைவர்களின் வீணான சுகபோகங்களையும், ஆடம்பரங்களையும் குறைந்துபோகச் செய்யும். அதற்கும் மேலாக, மக்களைத் தங்களின் இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவை மட்டும் நோக்கிப் பார்க்கும்படி சிந்தித்துச் செயல்படும் பொறுப்பு உள்ளவர்களாக ஆக்கினால், அது போப்புவின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, காலப்போக்கில் தங்களது அதிகாரத்தையும் அழித்துவிடும் என்று கண்டனர். இந்தக் காரணத்திற்காக, அவர்கள் தேவனால் அருளப்பட்ட அறிவை ஏற்க மறுத்து, அவர்களுக்கு ஒளியைக் கொடுக்கும்படி தேவன் அனுப்பின அந்த மனிதனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டனர். அவர்களது இந்த எதிர்ப்பினால், கிறிஸ்துவையும் அவரது சத்தியத்தையும் எதிர்த்தனர். (32) GCTam 138.3
பூமியின் மாபெரும் வல்லமையை எதிர்த்து, ஒரே ஒரு மனிதனாக, தான்மட்டும் நிற்பதை லுத்தர் கண்டபோது, நடுங்கினார். “சபையின் அதிகாரத்தை எதிர்த்துநிற்கும்படி நான் உண்மையிலேயே தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேனா?” என்று சில சமயங்களில் சந்தேகங்கொண்டார். “உலகம் முழுவதையும் பூமியின் அரசர்களையும் நடுங்கவைக்கும் போப்புவின் அரச மேன்மையை எதிர்க்க நான் யாராக இருந்தேன்” என்றும் அவர் எழுதுகிறார். இந்த இரண்டு வருடங்களில் அவர் எந்த அளவிற்கு மனமுடைந்து, மனச்சோர்வுக்குள் மூழ்கினார் என்பதை ஒருவரும் அறியார்கள். ஆனால் முற்றிலும் உடைந்துபோக அவர் விட்டுவிடப் படவில்லை. மனித ஆதரவுகள் தோல்வியடைந்தபோது, அவர் தேவனை நோக்கினார். சர்வவல்லமையுள்ள அவரது கரத்தில் பூரணமான பாதுகாப்புடன் சார்ந்துகொள்ளமுடியும் என்பதை கற்றுக்கொண்டார்.(33) GCTam 139.1
சீர்திருத்தத்திலிருந்த ஒரு நண்பருக்கு “நமது நுண்ணறிவின் பலத்தினாலும், கல்வி அறிவினாலும் வேதவாக்கியங்களின் பொருள்களை நம்மால் அறிந்துகொள்வது இயலாது. எனவே, ஜெபத்துடன் ஆரம்பிப்பதுதான் உங்களுடைய முதல் வேலையாக இருக்கட்டும். அவருடைய வார்த்தைகளின் பொருளைச் சரியாக அறிந்துகொள்ள அவரது இரக்கத்தினால் உங்கள்மீது கடாட்சம் வைக்கும்படி, அவரை நோக்கிக் கெஞ்சி மன்றாடுங்கள். அந்த வார்த்தையின் ஆசிரியராயிருக்கும் அவரைத் தவிர, அவரது வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லுவோர் வேறு யாரும் இல்லை. “அவர்கள் அனைவரும் தேவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று அவர் சொல்லியுள்ளபடி, உங்களது கல்வியின்மீதும் நுண்ணறிவின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்காமல், உங்கள் நம்பிக்கையை தேவனின்மீதும் அவரது ஆவியின் நடத்துதலின்மீதும் வையுங்கள். இந்தக் கரியத்தைச் சோதித்துக் காட்டியுள்ள ஒருவரை (இயேசுவை) நம்புங்கள்” என்று லுத்தர் எழுதினார்.-Ibid., b. 3, ch. 7. இக்காலத்திற்குரிய பக்திவிநயமான சத்தியங்களை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி தேவனால் அழைக்கப்பட்டு இருப்பவர்களுக்கான முக்கியமான பாடம் இதில் உள்ளது. சாத்தானால் உண்டாக்கப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளை நம்பும் மனிதர்களின் எதிர்ப்பை இந்த சத்தியங்கள் கலங்கச் செய்யும். தீயசக்திகளின் வல்லமைகளுக்கெதிரான போராட்டத்தில் மனித நுண்ணறிவின் பலத்தைவிட, மேலான ஏதோ ஒன்று தேவையாக உள்ளது. (34) GCTam 139.2
சம்பிரதாயங்கள் சடங்காச்சாரங்கள் அல்லது போப்புவின் அதிகாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவைகளைப் பின்பற்றவேண்டும் என்று எதிரிகள் வேண்டுகோள் விடுத்தபோது, லுத்தர் “வேதாகமம்! வேதாகமம் மட்டுமே” என்று அவர்களைச் சந்தித்தார். இங்கு அவர்களால் பதில்சொல்லமுடியாத வாதங்கள் உண்டாயின. எனவே, யூதர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின்மீது தாகம்கொண்டதுபோல, சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடிமையானவர்கள், அவரது இரத்தத்தின்மீது தாகம் கொண்டனர். “இவன் ஒரு மதப்புரட்டன்! இவனை ஒரு மணிநேரத்திற்குக்கூட உயிருடன் விட்டுவைப்பது பாவம்!” என்று ரோமன் கத்தோலிக்க வெறியர்கள் அலறினார்கள். உடனே அவனைக் கம்பத்தில் கட்டிவைத்து எரிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் லுத்தர் இவர்களது கோபாவேசத்திற்கு இரையாகவில்லை. அவரால் செய்யப்படவேண்டிய வேலை ஒன்று இருந்தது. எனவே அவரைப் பாதுகாக்கும்படி பரலோக தேவதூதர்கள் அனுப்பப்பட்டனர். அப்படியிருந்தும் விலைமதிப்புமிக்க ஒளியை லுத்தரிடமிருந்து பெற்றுக்கெண்டவர்கள், சாத்தானின் கோபத் திற்கு இலக்காக்கப்பட்டு, சத்தியத்திற்காக சித்திரவதைகளையும் மரணத்தையும் பயமின்றி அனுபவித்தனர். (35) GCTam 140.1
லுத்தரின் போதனைகள், ஜெர்மனி முழுவதிலுமிருந்த சிந்தனையாளர்களின் மனங்களை கவர்ந்தன. அவரது சொற்பொழிவு களினாலும் எழுத்துக்களினாலும் உண்டான ஒளிக்கதிர்கள், ஆயிரக் கணக்கானவர்கள் விழித்தெழுவும், ஒளியேற்றம் பெறவும் உதவி செய்தன. அதுவரை சபையைப் பற்றிக்கொண்டிருந்த, செத்துப்போன சம்பிரதாயங்களின் இடத்தை உயிருள்ள விசுவாசம் எடுத்துக் கொண்டது. ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்த மூடநம்பிக்கை களை மக்கள் நாள்தோறும் இழக்கத்தொடங்கினர். தப்பபிப்பிராயங் கள் என்ற வேலி விழுந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு கோட்பாட்டை யும் உரிமையையும் சோதிக்க லுத்தர் பயன்படுத்திய தேவனுடைய வார்த்தைகள், மனிதர்களின் இதயத்தை உருவக்குத்தும் இருபுற மும் கருக்கான பட்டயத்தைப்போலிருந்தது. ஆவிக்குரிய முன்னேற் றத்திற்கான வாஞ்சை எங்கும் எழும்பியது. காலங்கள் நெடுகிலும் அறியப்படாமலிருந்த நீதியின்மேலுள்ள பசியும் தாகமும் எங்கும் உண்டானது. இதுவரை மனிதச் சடங்குகளையும் பாவப்பரிகாரச் செயல்களையும் பூமியிலுள்ள மத்தியஸ்தர்களையும் பார்க்கும்படி திருப்பிவிடப்பட்டிருந்த கண்கள், இப்பொழுது பாவத்திற்கான மனவருத்தத்துடன் கிறிஸ்துவை, சிலுவையிலறையப்பட்ட அவரையே விசுவாசத்துடன் பார்க்கத் திரும்பின.(36) GCTam 141.1
எங்கும் பரவிய இந்த ஆர்வம் போப்பு அதிகாரத்தின் பயத்தை, மேலும் அதிகரிக்கச் செய்தது. மதப்புரட்டு என்னும் குற்றச்சாட்டுக்கு எதிரான பதில் அளிக்க ரோம் நகரில் தோன்றும்படியான அழைப்பை லுத்தர் பெற்றார். இந்தக் கட்டளை லுத்தரின் நண்பர்களைப் பயத்தால் நிரப்பியது. இயேசுவின் இரத்தசாட்சிகளின் இரத்தத்தை ஏற்கனவே குடித்திருந்த அந்த நகரத்தில், அவரைப் பயமுறுத்தும் அபாயங்களை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தனர். அவர் ரோம் நகருக்குச் செல்லவேண்டும் என்பதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்து, அவர் தமது விசாரணையை ஜெர்மனியிலேயே பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். (37) GCTam 141.2
முடிவாக, இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்து, இந்தக் காரியம் பற்றி விசாரிக்க போப்புவின் பிரதிநிதி நியமிக்கப்பட்டார். போப்புவினால் அவரது அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையில், லுத்தர் ஒரு மதப்புரட்டர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று இருந்தது. எனவே லுத்தரைத் தடைசெய்து, அவரை விரைவாகக் கீழ்ப்படியச்செய்யும்படி, போப்புவின் பிரதிநிதிக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. லுத்தர் விட்டுக் கொடுக்காதவராக நின்றால், போப்புவின் பிரதிநிதியால் அவரைக் கைதுசெய்ய முடியாமலாகிவிட்டால், அவரை ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் தடைசெய்யவும், அவரைத் தீர்த்துக்கட்டவும், சபிக்கவும், அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் சமூகத்திலிருந்து நீக்கவும் அந்தப் பிரதிநிதிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.—Ibid., b. 2, ch. 4. மேலும் கொள்ளைநோயைப்போல் பரவிவரும் மதப்புரட்டை வேருடன் களைய ரோமன் கத்தோலிக்க சபையால் பழிவாங்கப்படும்படி லுத்தரை அதனிடம் ஒப்படைக்கும் காரியத்தில் அலட்சியம் காட்டக்கூடிய பேரரசனையும், அவனைச் சார்ந்தவர்களையும் மட்டுமன்றி, சபையிலும் நாட்டிலும் மேலானவர்களாக உள்ள அனைவரையும் சமூகநீக்கம் செய்ய வேண்டும் என்றும் போப்புவின் பிரதிநிதிக்கு போப்பு கட்டளை கொடுத்திருந்தார். (38) GCTam 141.3
போப்புமார்க்கத்தின் உண்மையான ஆவி இங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. போப்புமார்க்கத்தின் இந்த ஆவணத்தில் கிறிஸ்தவக் கொள்கையின் ஒரு சாயலும், பொதுவான ஒரு நீதியுங் கூடக் காணப்படவில்லை. லுத்தர் ரோம் நகரிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார். அவரது நிலையைக்குறித்து விளக்கவோ அல்லது அதன் சார்பாகப் பேசவோ அவருக்கு வாய்ப்பு உண்டாகவில்லை. அப்படி இருந்தும் அவரது வழக்கு விசாரிக்கப்படுமுன், அவரை மதப்புரட்டர் என்று அறிவித்து, அதே நாளில் அவர் கடிந்துகொள்ளப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, நியாயம்தீர்க்கப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டார். இவைகளனைத்தையும் தன்னைத்தான் பரிசுத்த பிதா என்று சபை யிலும் நாட்டிலும் பிரகடனப்படுத்தியவரும், மேலும் பாவம் செய்ய முடியாதவர் என்கிற அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் எடுத்துக் கொண்டவருமான அந்த ஒருவர்—போப்பு என்பவர் செய்தார்.(39) GCTam 142.1
உண்மையான ஒருநண்பனின் அனுதாபமும் ஆலோசனையும் லுத்தருக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டிருந்த அந்தச் சமயத்தில், தேவனது பாதுகாப்பு மெலாங்தன் என்பவரை விட்டன்பர்க் நகருக்கு அனுப்பியது. குறைந்த வயதும் அடக்கமும் சுயத்தில் நம்பிக்கை வைக்காத ஆழ்ந்து நிதானிக்கும் தன்மை, விசாலமான அறிவு, வெல்லும் பேச்சுத்திறன் ஆகியவைகளுடன், மெலாங்கதனின் தூய்மையும், நேர்மைமிக்க பண்பும் எல்லோரையும் ஈர்த்துக்கொள்ளுவதாகவும், வரவேற்கப்படுவதாகவும், மதிக்கப் படுவதாகவும் இருந்தது. அவரது திறமையின் சாதுரியம் அவரது சாதுவான இயல்பைவிட மேலானதாக இருக்கவில்லை. விரைவில் அவர் சுவிசேஷத்தின் ஆர்வமிக்க சீடராகி, லுத்தரின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நண்பராகி, உயர்ந்த ஆதரவாளராகவுமானார். அவரது சாதுவான தன்மை, ஜாக்கிரதை, சரியான நடத்தை ஆகியவை லுத்தரின் தைரியத்திற்கும் சக்திக்கும் துணையாக அமைந்தது. ஊழியத்தில் அவர்களிடத்தில் உண்டான ஒற்றுமை, சீர்திருத்தப்பணியின் பெலனை அதிகரிக்கச்செய்து, லுத்தருக்கு தைரியத்தையூட்டும் பெரும் ஆதாரமாகவும் அமைந்தது.(40) GCTam 142.2
ஆக்ஸ்பர்க் என்ற இடம் விசாரணை நடத்தப்படும் இடமாக ஏற்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு லுத்தர் நடந்தே சென்றார். மிகப்பெரும் அச்சம் அவரை வரவேற்றது. அவர் கைது செய்யப்பட்டு, வழியிலேயே கொலைசெய்யப்படுவார் என்னும் பயமுறுத்தல்கள் பகிரங்கமாக உண்டாயின. எனவே இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அவரது நண்பர்கள் கெஞ்சினார்கள். விட்டன்பர்கை விட்டுச் சிலகாலம் வெளியே சென்று, அவரை மகிழ்ச்சியுடன் பாதுகாக்கக்கூடியவர்களிடம் அடைக்கலம் காணும்படியுங்கூட, அவர்கள் கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் தேவன் அவரை நிற்கும்படி ஏற்படுத்தின நிலையைவிட்டு நகரமாட்டேன் என்று அவர் கூறினார். அவருக்கு எதிராக வீசிக்கொண்டிருக்கிற புயலைக் கவனிக்காது, சத்தியத்தை விசுவாசத்துடன் காப்பதை அவர் தொடரவேண்டும். “நான் எரேமியாவைப்போல் சண்டையும் எதிர்ப்புகளும் உள்ள ஒரு மனிதனாக இருக்கிறேன். ஆனால் அவர்கள் தங்களுடைய அச்சுறுத்தல்களை எந்த அளவிற்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு எனது மகிழ்ச்சியைப் பெருகச் செய்கிறார்கள் ... அவர்கள் எனது கௌரவத்தையும் நற்பெயரையும் ஏற்கனவே நாசமாக்கி விட்டார்கள். என்னிடம் மீதமாக இருப்பது மோசமான இந்த உடல் மட்டும்தான். அதையும் எடுத்துக்கொள்ளட்டும். அப்பொழுது எனது வாழ்க்கையின் காலத்தை சிலமணிநேரங்கள் குறைப்பார்கள். ஆனால் எனது ஆத்துமாவைப் பொறுத்தமட்டில், அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. உலகத்திற்குக் கிறிஸ்துவின் வார்த்தையைக் கொடுக்க விரும்புகிறவர்கள், மரணத்தை ஒவ்வொரு மணி நேரத்திலும் எதிர்பார்க்கவேண்டும்” என்பது அவரது பேச்சாக இருந்தது.-Ibid., b. 4, ch. 4. (41) GCTam 143.1
லுத்தர் ஆக்ஸ்பர்கிற்கு வந்துவிட்டார் என்ற செய்தி போப்புவின் பிரதிநிதிக்கு மிகுந்த திருப்தியைக் கொண்டுவந்தது. உலகத்தின் கவனம் முழுவதையும் எழுப்பிவிடுகின்ற சங்கடத்தை உண்டுபண்ணுகின்ற மதப்புரட்டன் இப்பொழுது ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் வல்லமையில் இருப்பதுபோல் காணப்பட்டது. லுத்தரைத் தப்பிச்செல்ல விட்டுவிடக்கூடாது என போப்புவின் பிரதிநிதி எண்ணினார். சீர்திருத்தவாதி பாதுகாப்பு நடத்துதல் கடிதம் இல்லாது இருந்தார். அவரது நண்பர்கள் அந்தக்கடிதம் இல்லாமல் போப்புவின் பிரதிநிதிகளின் முன் லுத்தர் தோன்றவேண்டாமென்றதுடன், அந்தக் கடிதத்தைப் பேரரசனிடமிருந்து பெறும் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர். லுத்தரை எதிர்க்கும் குழுவின் தலைவராகிய போப்புவின் பிரதிநிதியோ முடிந்தால் லுத்தரைப் பின்வாங்கச் செய்யவும், முடியாவிட்டால், ஹஸ்ஸும் ஜெரோமும் அடைந்த பங்கை அடையும்படி, அவரை ரோமுக்கு அனுப்பிவைக்கும் நோக்க முடையவராகவும் இருந்தார். எனவே போப்புவின் பாதுகாப்பு நடத்துதல் கடிதம் இல்லாமல், தன்னுடைய இரக்கத்தை நம்பி தன் முன் லுத்தர் தோன்றும்படித் தனது ஏவலாளர்கள் மூலமாக சூழ்ச்சிசெய்தார். சீர்திருத்தவாதி இதைச் செய்யப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். பேரரசனால் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு, பாதுகாப்பு நடத்துதல் கடிதத்தைப் பெரும்வரை அந்தத் தூதரின் முன்பாக லுத்தர் செல்லவே இல்லை. (42) GCTam 143.2
மிகுந்த சாதுவான தன்மையைக் காட்டி, அதனால் லுத்தரைத் தங்கள்பால் வென்றுகொள்ளும் கொள்கையை உடையவர்களாக அவர்கள் இருந்தனர். அந்தப் பிரதிநிதி லுத்தருடன் நேர்முக சந்திப்பு நடத்தினபோது, மிகுந்த நட்புத்தன்மையை வெளிக்காட்டினார். ஆனால் அதே சமயம், ஒவ்வொரு விஷயத்திலும் எந்தவொரு கேள்வியும் கேட்காமல், சபையின் அதிகாரத்திற்குத் தவறாமல் கீழ்ப்படியவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார். அவர் சம்பந்தப்படவேண்டியிருந்த மனிதர்களின் சுபாவத்தைப்பற்றி அவர் சரியான அனுமானம் செய்யாமல் இருந்தார். அதற்கு மறுமொழியாக லுத்தர், சபையின்மீது தான் கொண்டிருந்த மதிப்பு, சத்தியத்தின்மீதுள்ள தனது வாஞ்சை, தான் போதித்திருந்த வைகளுக்கெதிரான மறுப்புகளுக்கு பதில் கூறத் தயாராக இருக்கும் தனது ஆயத்தம், தனது கோட்பாடுகளை குறிப்பிட்ட சில பல்கலைக் கழகங்களின் முடிவுக்கு விடுகின்ற கீழ்ப்படிதல் ஆகியவைகளை உணர்த்தினார். ஆனால் அதே சமயம் தனது தவறுகளைத் தெரிவிக்காமலேயே, தான் பின்வாங்கவேண்டுமென்ற கர்தினாலின் நிபந்தனைக்கு மறுப்பும் தெரிவித்தார். (43) GCTam 144.1
மறுத்துச்சொல்! மறுத்துச்சொல்! என்ற ஒன்று மட்டும்தான் பிரதிநிதி யின் பதிலாக இருந்தது. தனது கருத்துகள் வேதவாக்கியங்களால் தாங்கப் பட்டுள்ளதை அந்தச் சீர்திருத்தக்காரர் காட்டி, தன்னால் சத்தியத்தை மறுதலிக்க முடியாதென அறிவித்தார். லுத்தரின் வாதங்களுக்குப் பதில்சொல்ல முடியாத அவர், நிந்தனைகள், கிண்டல்கள், முகஸ்துதிகள்செய்து, முற்பிதாக்களின் பாரம்பரியங்களிலிருந்து எடுத்துக்கூறி, சீர்திருத்தவாதி பேசுவதற்கு அனுமதிக்காதிருந்தார். இந்த மாநாடு இப்படி நடந்தால் பலனிருக்காது என்பதைக் கண்ட லுத்தர் கடைசியில், எழுத்துவடிவில் தனது பதிலை சமர்ப்பிக்க விருப்பமற்ற அனுமதியைப் பெற்றார். (44) GCTam 144.2
இப்படிச் செய்வதைப்பற்றி அவர் தனது நண்பர் ஒருவருக்கு “இதில் ஒடுக்கப்பட்டவருக்கு இரண்டு விதமான நன்மை இருக்கிறது. முதலாவது, எழுதப்பட்டவைகள் மற்றவர்களின் நியாயத்தீர்ப்புக்கும் கொடுக்கப்படலாம். இரண்டாவது, மேலாதிக்கமுள்ள மனசாட்சியற்ற தனது எதிரி, தன் பேச்சுத் திறமையினால் தன்னை மேற்கொண்டு விடுவான் என்கிற பயத்தையும் தவிர்க்கலாம்” என்று எழுதினார். --Martyn, vol. 1, pp. 271-272. GCTam 144.3
அடுத்த நேர்முகச் சந்திப்பில், வேத வாக்கியங்களால் தாங்கப்பட்ட, மேற்கோள் நிறைந்த, தனது மிகத்தெளிவான, சுருக்கமான வலிமை நிறைந்த கண்ணோட்டத்தை வெளிக்காட்டினார். இந்தத் தாள்களை அவர் சத்தமாக வாசித்தபின், அந்தக் கர்தினாலிடம் கொடுக்கவே, இவை எப்படியிருந்தாலும், வீணான வார்த்தைகளடங்கிய சம்பந்தமற்ற மேற்கோள்களின் திரட்சி என்ற குற்றச்சாட்டுடன், அவர் அவைகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டார். இப்பொழுது லுத்தர் முழுமையாகத் தூண்டப்பட்டவராக, அகந்தைமிக்க ஒரு குருவானவரை சபையின் பாரம்பரியங்கள், போதனைகள் என்ற அவரது யூகங்களின் அடிப்படையிலேயே மேற்கொண்டார். (46) GCTam 145.1
லுத்தரின் விளக்கங்களுக்கு பதில்சொல்லமுடியாத நிலை இருப்பதைக் கண்ட அந்த குருவானவர், தன் சுயக்கட்டுப்பாட்டை இழந்து, கோபத்துடன், நீ சொன்னவைகளை மறுதலிக்கவேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய வழக்கை விசாரித்து அறியக்கூடிய ரோம் நகரிலுள்ள குழுவினிடத்திற்கு, உன்னை நான் அனுப்புவேன் என்று கத்தினார். மேலும், நான் உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும், எந்த நேரத்திலாவது உனக்கு ஆதரவு காட்டுபவர்களையும் சபையில் இருந்தும் விலக்குவேன் என்றார்.-—D’Aubigne, b. 4, ch. 8 (47) GCTam 145.2
சீர்திருத்தவாதி, தன்னிடமிருந்து பின்வாங்குதலை எதிர்பார்க்க வேண்டாம் என்று தெளிவாக அறிவித்துவிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவ்விடத்தைவிட்டுப் பிரிந்துசென்றார். கர்தினாலின் நோக்கம் இப்படிப்பட்டதாக இல்லை. பலாத்காரத்தினால் லுத்தரைப் பணியச்செய்துவிடலாமென்று என்று தனக்குள் எண்ணிக்கொண்டிருந்தார். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தோல்வியைச் சந்திக்கும்படி தனித்துவிடப்பட்ட அவர், தனது திட்டங்களின் தோல்வியினால் மனக்குறைவுடன் ஒவ்வொருவரையும் நோக்கினார். (48) GCTam 145.3
இந்தச் சந்தர்ப்பத்தில் லுத்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் நல்ல பலனைத்தரத் தவறவில்லை. அங்கு கூடியிருந்த மன்றத்தினருக்கு அந்த இருமனிதர்களையும் ஒப்பிட்டுப்பார்க்கின்ற வாய்ப்பு கிட்டியிருந்தது. அவர்கள் வெளிக்காட்டியிருந்த ஆவியின் தன்மைகளைத் தங்களுக்குள் நிதானிக்கவும், அவர்களது நிலைமைகளில் இருந்த வலிமையையும், சத்தியத்தின் தன்மையையும் ஒப்பிடவும் முடிந்தது. இந்த வேற்றுமைகள் எவ்வளவு தெளிவானவைகள்! சாதாரணமாக தாழ்மைமிக்க உறுதியுள்ளவராக சத்தியத்தைத் தனது சார்பில் கொண்டவராக-அந்த சீர்திருத்தவாதி தேவனுடைய பலத்தில் நின்றிருந்தார். தன்னைத்தான் முக்கியப்படுத்தினவராக, காரணமற்றவராக, வேத வாக்கியங்களை ஆதாரமாகக்கொண்டு ஒரு வார்த்தையும் சொல்ல முடியாதவராக, போப்புவின் பிரதிநிதியாக இருந்தும் மிகுந்த ஆங்காரத்துடனும் பின்வாங்கு அல்லது தண்டனை அடைவதற்கு ரோம் நகருக்குச்செல் என்று சொல்லுபவராகவே இருந்தார். (49) GCTam 145.4
பாதுகாப்பு நடத்துதல் கடிதம் இல்லாதவராக லுத்தர் இருந்திருந்தால், ரோமர்கள் அவரைக் கைதுசெய்து, சிறையில் வைக்கத் திட்டமிட்டிருந்தனர். அவர் தங்கி இருப்பதை நீட்டிப்பதினால் எந்தவிதமான பயனும் இல்லை என்றும், அவர் தாமதம் இன்றி விட்டன்பர்கிற்குத் திரும்பிச்செல்ல வேண்டும் என்றும், லுத்தரின் நண்பர்கள் அவரை அவசரப்படுத்தினார்கள். அந்த நோக்கத்தை இரகசியமாக வைப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனிருப்பது அவசியம் என்றும் அவர்கள் கருதினார்கள். அதன்படி நீதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிகாட்டியுடன், பொழுது விடியுமுன் அவர் ஒரு குதிரையிலேறி, ஆக்ஸ்பர்க் நகரைக் கடந்து சென்றார். பலவிதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கினவராக, அவர் அந்த நகரின் இருண்ட அமைதியான தெருக்களை இரகசியமாகக் கடந்துசென்றார். விழிப்பும் கொடுமையுமிக்க அவரது எதிரிகள் அவரை அழிக்கத் திட்டமிட்டிருந்தனர். அவருக்காக விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளிலிருந்து அவர் தப்புவாரா? அந்த நேரமானது கவலையும் ஆர்வமுமிக்க ஜெபம் நிறைந்த விநாடிகளாக இருந்தன. நகரச் சுவரின் ஒரு சிறு வாசலை அவர் அடைந்தார். அந்த வாசல் அவருக்குத் திறக்கப்படவே, அவர் எவ்விதமான இடையூறுமின்றித் தன் வழிகாட்டியுடன் அதைக் கடந்துசென்றார். பாதுகாப்பாக வெளியேறியதும் தங்கள் ஓட்டத்தை விரைவுபடுத்தினார்கள் அந்த யாத்ரீகர்கள். லுத்தர் சென்றுவிட்டார் என்பதைப் போப்புவின் பிரதிநிதி அறிவதற்குமுன், அவரைத் துன்புறுத்துபவர்களுக்கு எட்டாத தூரத்திற்கு, லுத்தரும் அவரைச் சார்ந்தவர்களும் சென்றுவிட்டனர். சாத்தானும் அவனது ஏவலாளர்களும் தோற்கடிக்கப்பட்டனர்! வேட்டைக்காரனின் கண்ணியிலிருந்து ஒரு பறவை தப்பிச் செல்லுவதுபோல், தங்கள் வல்லமைக்குள் இருப்பதாக அவர்கள் எண்ணியிருந்த அந்த மனிதன் சென்றுவிட்டான்! (50) GCTam 146.1
லுத்தர் தப்பிச்சென்றுவிட்டார் என்ற செய்தியை அறிந்த போப்புவின் பிரதிநிதி, வியப்பினாலும் கோபத்தினாலும் திகைத்துப்போனார். சபைக்குத் தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்த மனிதனுடைய காரியத்தில், அவர் காட்டிய ஞானத்திற்காகவும் உறுதிக்காகவும் அவருக்குப் பெரும் சிறப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது நம்பிக்கை வீணாயிற்று. பின்னர் சாக்சோனியரைத் தேர்ந்தெடுத்த ஃப்ரட்ரிக் என்பவருக்கு தனது கோபத்தை வெளிக்காட்டி எழுதிய கடிதத்தில், லுத்தரை மிகுந்த கசப்புடன் மறுத்து, அவரை ரோம் நகருக்கு அனுப்பவேண்டும் அல்லது சாக்சோனியிலிருந்து புறம்பாக்கவேண்டுமென்று கோரி எழுதியிருந்தார். (51) GCTam 146.2
லுத்தர் தற்காப்பிற்காக, தனது தவறுகளை, போப்புவோ அல்லது அவரது பிரதிநிதிகளோ வேதவாக்கியங்களிலிருந்து தனக்கு எடுத்துக் காட்டும்படியாகவும், அப்படிக் காட்டினால், அவைகளைப் பக்திவிநயத்துடன் தான் ஒப்புக்கொண்டு தனது கொள்கைகளை மறுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். இவ்வளவு பரிசுத்தமான ஒரு காரியத்திற்காக பாடனுபவிக்கத் தகுதியுடையவன் என்று தான் கருதப்பட்டதற்காக தேவனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.(52) GCTam 147.1
அந்தத் தேர்தல் அதிகாரிக்கு சீர்திருத்தக்கோட்பாடுகள் பற்றி மிகக்குறைவான அறிவுமட்டுமே இருந்தபோதிலும், லுத்தரின் பேச்சில் இருந்த நேர்மை வலிமை தெளிவு ஆகியவைகளினால் அவர் உணர்த்தப்பட்டு, சீர்திருத்தவாதி தவறில் இருக்கிறார் என்பது மெய்ப்பிக்கப்படும்வரை தான் (ஃப்ரட்ரிக்) அவரது பாதுகாப்பாளராக இருக்கத் தீர்மானித்தார். போப்புவின் பிரதிநிதியின் வேண்டுகோளுக்கு அவர்: “டாக்டர் மார்டின் லுத்தர் அவர்கள் ஆக்ஸ்பர்க் நகரில் உங்கள்முன் தோன்றினதால், நீங்கள் திருப்தியடைந்திருக்கவேண்டும். அவரது தவறுகளைப்பற்றி அவருக்கு உணர்த்தாமல், அவரைப் பின்வாங்கச் செய்யும்படி நீங்கள் முயல்வீர்கள் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மார்டின் லுத்தர் அவர்களின் கோட்பாடு பக்தியற்றது அல்லது கிறிஸ்தவ சமயத்திற்கு எதிரானது அல்லது மதப்புரட்டானது என்று நமது துரைத்தனத்திலுள்ள கற்றவர்கள் எவருமே தெரிவிக்கவில்லை. எனவே அவரை ரோம் நகருக்கு அனுப்புவதையோ அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றுவதையோ நாங்கள் முற்றிலும் மறுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்” என்று பதிலளித்தார். D’Aubigne, b. 4, ch. 10 (53) GCTam 147.2
சமுதாயத்தில் சன்மார்க்கக் கட்டுப்பாடு பொதுவாக சீரழிந்து வருவதை அந்தத் தேர்தல் அதிகாரி கண்டார். ஒரு பெரும் சீர்திருத்தப்பணி அவசியமாக இருந்தது. மனிதன் தேவன் எதிர்பார்க்கிறவைகளையும், ஒளியடைந்த மனசாட்சியையும் அங்கிகரித்து கீழ்ப்படியத் தொடங்கினால், குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டிய சிக்கலான தேவைகள் இருக்காது. இந்த நோக்கத்தை அடைவதற்காக லுத்தர் உழைப்பதையும், சபையில் அவரது செல்வாக்கு அதிகரித்துவருவதையும், உணரப்படுவதையும் கண்டு, அவர் இரகசியமாக மகிழ்ந்தார். (54) GCTam 147.3
லுத்தர் பல்கலைக்கழகத்தில் ஒரு மிக மேலான வெற்றிகரமான பேராசிரியராக இருப்பதையும் அவர் கண்டார். சீர்திருத்தவாதி தனது கோட்பாடுகளை கோட்டை ஆலயத்தின் கதவுகளில் ஆணியடித்து, ஒரு வருடம் தான் ஆகிறது அப்படியிருந்தும் சகல பரிசுத்தவான்களின் நாள் எனப்படும் திருவிழாவிற்காக ஆலயத்திற்கு வரும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. ரோமசபை, ஆராதனைக்கு செல்பவர்களையும், காணிக்கைகளையும் இழந்தது. ஆனால் அந்த இடம் விட்டன்பர்க் நகருக்கு வந்த வேறு ஒரு வகுப்பினரால் நிரப்பப்பட்டது. அவர்கள் புண்ணிய பொருட்களை நேசிக்கிறதற்காக வந்த யாத்ரீகர்கள் அல்ல் கல்விச்சாலையில் கற்பதற்கு வந்த மாணவர்கள். லுத்தரின் எழுத்துக்கள் வேதவாக்கியங்களில் புது ஆர்வம் என்னும் நெருப்பை எங்கும் கொளுத்தினது. ஜெர்மனியின் எல்லாப் பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, மற்ற நாடுகளிலிருந்தும் பல்கலைக்கழகத்திற்கு திரளாக மாணவர்கள் திரண்டனர். முதன் முதலாக விட்டன்பர்க் நகரைக் கண்ட இளைஞர்கள், மிகத்தூரமான நாடுகளுக்குள் ஒளி நுழையவேண்டுமென்று, கடந்த காலத்தில் இருந்த சீயோன் மலையைப்போல, விட்டன்பர்கிலிருந்து சத்தியத்தின் ஒளியை எங்கும் பரவச்செய்த தேவனை தங்கள் கரங்களை வானத்துக்கு நேராக உயர்த்தி ஸ்தோத்தரித்தனர். Ibid., b. 4, ch. 10. (55) GCTam 147.4
ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் தவறுகளிலிருந்து லுத்தர் இன்னும் பகுதியளவுதான் மாறியிருந்தார். ஆனால் போப்பு மார்க்கத்தின் கட்டளைகளையும் ஆட்சியமைப்புகளையும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களுடன் ஒப்பிட்டபோது, ஆச்சரியமடைந்தார். ... “போப்புவின் கட்டளைகளை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் போப்புதான் அந்திக் கிறிஸ்துவா? அல்லது அவனது சீடனா என்பதை நான் அறியேன்; கிறிஸ்து அந்த அளவிற்கு அவர்களால் திரித்துக்கூறப்பட்டும் சிலுவையிலறையப்பட்டு மிருக்கிறார்” என்று கூறினார்.-Ibid., b. 5, ch. 1. அப்படியிருந்தும் அந்தக் காலத்தில், லுத்தர் ரோமசபையின் ஆதரவாளராகவே இருந்து, அதன் ஐக்கியத்திலிருந்து பிரிவதைப்பற்றிய எண்ணங்கூட இல்லாதிருந்தார்! (56) GCTam 148.1
சீர்திருத்தவாதியின் எழுத்துக்களும் கோட்பாடுகளும் கிறிஸ்தவ உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த ஊழியம் சுவிட்சர்லாந்திற்கும் ஹாலந்திற்கும் பரவியது. அவரது எழுத்துக் களின் பிரதிகள் பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் சென்றன. இங்கிலாந்தில் அவரது போதனைகள் ஜீவ வார்த்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. பெல்ஜியத்திற்கும், இத்தாலிக்குங்கூட சத்தியம் பரவியது. மரணத்திற்கு ஒப்பான மயக்கத்திலிருந்த ஆயிரக்கணக் கானவர்கள், விசுவாச வாழ்க்கையின் நம்பிக்கை என்னும் மகிழ்ச்சிக்கு விழித்தெழுந்தனர். (57) GCTam 148.2
லுத்தரின்தாக்குதலினால், ரோமசபை திக்குமுக்காடவே, மூடபக்தியுள்ள அவரது எதிரிகளில் சிலரும் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களிலிருந்த அறிஞர்களும் கலகம் செய்யும் இந்த சந்நியாசியைக் கொலைசெய்தாலும் பாவம் இல்லை என்று அறிவித்தனர். ஒருநாள் ஒரு அந்நியன் தன் உடைக்குள் கைத்துப்பாக்கியை மறைத்துவைத்துக்கொண்டு, லுத்தரிடம் சென்று, அவர் ஏன் இவ்விதம் தனியாகப் பிரிந்து சென்றார் என்று கேட்டான். “நான் தேவனின் கரங்களில் இருக்கிறேன். அவர் எனது துணைவராகவும் கேடயமாகவும் இருக்கிறார். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று லுத்தர் பதில் சொன்னார்.-Ibid., b. 6, ch. 2. இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த அந்நியன் முகம் வெளிரிப்போய், பரலோகத்தின் தூதர்களுடைய சமுகத்திலிருந்து ஓடிப்போவது போல் ஓடிப்போனான். (58) GCTam 148.3
லுத்தரை அழிக்கும் தீர்மானமானமுடையதாக ரோம் இருந்தது. ஆனால் தேவன் அவரது பாதுகாப்பாக இருந்தார். பள்ளிமடங்களிலும், குடிசைகளிலும், மேலானவர்களின் கோட்டைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசர்களின் அரண்மனைகளிலும், எங்கும் அவரது கோட்பாடுகள் கேட்கப்பட்டன. அவரது முயற்சியைத் தாங்க, பெரிய மனிதர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி இருந்தனர். -Ibid., b. 6, ch. 2. (59) GCTam 149.1
இந்தச் சமயத்தில் தான் நிலை நிறுத்தவும் போதிக்கவும் வகைதேடிக்கொண்டிருந்த, விசுவாசத்தினால் உண்டாகும் நீதி என்னும் பெரிய சத்தியத்தை ஹஸ்ஸின் எழுத்துக்களிலிருந்தும் கண்டு, அதைப் பொஹிமிய சீர்திருத்தவாதி பற்றிக்கொண்டிருந்ததையும் அறிந்தார். “நாம் எல்லாரும் பவுலும், அகஸ்டினும் நானும் நம்மை அறியாமலேயே ஹஸ்ஸைப் பின்பற்றுகிறவர்களாக இருந்திருக்கிறோம். தேவன் அதை உலகெங்கும் அறியச்செய்வார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சத்தியம் உலகத்திற்குப் பிரசங்கிக்கப்பட்டு அது பிரகாசித்து ஒளிர்ந்தது” என்று அவர் தொடர்ந்து கூறினார்.—Wylie, b. 6. ch. 1. (60) GCTam 149.2
“கிறிஸ்துவின் பதிலாளி என்ற அழைக்கப்படுபவர், எந்த ஒரு பேரரசனாலும் போட்டியிடமுடியாத அளவிற்கு அரக்கத்தன்மையை வெளிக்காட்டுவதுபேய்த்தனமானது.இதுதான், ஏழ்மையும் தாழ்மையுமாயிருந்த இயேசுவையோ அல்லது பரிசுத்த பேதுருவையோ பிரதிபலிக்கும் விதமா? போப்பு உலகத்தின் கர்த்தர் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் யாருடைய பதிலாளி என்று தன்னைச் சொல்லுகிறாரோ அவர்(கிறிஸ்து): ‘என்னுடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல’ என்று கூறினார். அவரது பதிலாளிகளின் ஆளுகை அவர்களுக்கு மேலானவருடைய ஆளுகையைவிடப் பெரிதாக இருக்குமா?” என்று கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் சார்பாக லுத்தர் ஜெர்மனியிலிருந்த மேலானவர்களுக்கும், பேரரசனுக்கும் எழுதினபோது போப்புவைக் குறிப்பிட்டு எழுதினார்.--D'Aubigne, b. 6, ch. 3. (61) GCTam 149.3
பல்கலைக்கழகங்களைப்பற்றி: “வேதவாக்கியங்களை விளக்குவதற்கு மிகவிழிப்பான கவனம் செலுத்தி, அவைகளை நமது இளைஞர்களின் இதயங்களில் எழுதாவிட்டால், பல்கலைக்கழகங்கள் நரகத்திற்கு நடத்தும் வாசலாக அமையும் என்று நான் மிகவும் பயப்படுகிறேன். வாழ்க்கையின் நியதியாக வேதவாக்கியங்கள் கருதப்படாத இடங்களில், ஒருவரும் தங்கள் பிள்ளைகளை அமர்த்தக்கூடாது என்று நான் உபதேசிக்கிறேன். தேவனுடைய வார்த்தைகளை விழிப்புடன் போதிக்காத ஒவ்வொரு அமைப்பும் கறைகள் நிறைந்ததாகிவிடும்” என்று எழுதினார்.—Ibid., b. 6, ch. 3. (62) GCTam 150.1
இந்த வேண்டுகோள் மிக விரைவாக ஜெர்மனி எங்கிலும்பரவி, மக்கள்மீது வல்லமைமிக்க செல்வாக்கை ஏற்படுத்தியது. நாடுமுழுவதும் கலக்கப்பட்டு, சீர்திருத்தத்தின் தரத்தை சூழ்ந்துகொள்ளும்படி, திரளானவர்கள் எழுப்பப்பட்டனர். லுத்தரின் எதிரிகள் பழிவாங்கும் ஆசையால் எரிந்து, அவருக்கெதிராக முடிவான நடவடிக்கை எடுக்கும்படி போப்புவை வற்புறுத் தினர். அவரது கோட்பாடுகள் உடனடியாக அழிக்கப்படவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சீர்திருத்தவாதியும் அவரைச் சேர்ந்தவர்களும் தங்களது கோட்பாடுகளை மறுதலிப்பதற்கு அறுபது நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டனர். அதற்குப் பின்னரும் மறுதலிக்காவிட்டால், அவர்கள் யாவரும் சமூகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. (63) GCTam 150.2
அது சீர்திருத்தத்திற்கெதிராக உண்டான பயங்கரமான நெருக்கடியாக இருந்தது. ஏனெனில், ரோமன் கத்தோலிக்க சபையால் சமூகநீக்கம்செய்யப்படுதல் என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக, வல்லமைமிக்க அரசர்களுக்குங்கூட திகிலூட்டுவதாக இருந்தது. அது வல்லமைமிக்க பேரரசுகளையுங்கூட பயத்திலும் பாழ்க்கடிப்பிலும் நிரப்பியிருந்தது. அதின் பழி யார்மீது விழுந்ததோ, அவர்கள் எல்லோராலும் பயத்துடனும் திகிலுடனும் நோக்கப்பட்டனர். அவர்கள் தங்களது உறவினர்களின் தொடர்பிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட விரோதிகளாக நடத்தப்பட்டு அழிக்கப்படும்படியாக வேட்டை யாடப்பட்டிருந்தனர். லுத்தர் தம்மீது வீச இருந்த புயலைப்பற்றி அறியாதவராக இருக்கவில்லை. ஆனால் அவர், கிறிஸ்துவை தன்னைத் தாங்குபவராகவும் கேடயமாகவும்கொண்டு உறுதியுடன் நின்றிருந்தார். ஒரு இரத்தசாட்சியின் விசுவாசத்துடனும் தைரியத்துடனும் “என்ன நிகழ உள்ளது என்பதை நான் அறியேன் அதை அறிந்துகொள்ள நான் கவலைப்படவுமில்லை அந்த அடி எங்கு என்மீது விழுந்தாலும் சரி, நான் பயப்படவில்லை. பிதாவின் சித்தமில்லாமல், ஒரு இலையுங்கூட உதிர்வதில்லை என்றால், எந்த அளவிற்கு பிதாவானவர் நம்மைக் கவனிக்கிறார்! நமக்காக மாம்சமான வார்த்தை தானே மரித்திருக்க, அந்த வார்த்தைக்காக உயிர்விடுதல் சாதாரண காரியம். அவருடன் நாம் மரிப்போமெனில், அவருடன் நாம் பிழைப்போம். நமக்கு முன்பாக அவர் கடந்து சென்றவைகளின் ஊடாக நாமும் கடந்துசென்றால், அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே நாமுமிருந்து, அவருடன் என்றென்றும் வாழ்வோம்” என்று குறிப்பிட்டார்.-Ibid., 3d London ed., Walther, 1840, b. 6, ch. 9. (64) GCTam 150.3
போப்புவின் கட்டளை லுத்தரை அடைந்தபோது, அவர்: “நான் இதை பக்தியற்றதாகவும் தவறானதாகவும் கருதி, நிந்தித்துத் தடுக்கிறேன். இதனால் இங்கு கிறிஸ்துவே குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டிருக்கிறார். மிகச் சிறந்த காரணத்திற்காக பாடுகளைச் சகிக்கும் நிலைமை எனக்கு உண்டா யிருப்பதை நான் மகிமையாக எண்ணுகிறேன். ஏனெனில் போப்புவே அந்திக்கிறிஸ்து என்றும், அவரது சிங்காசனம் சாத்தானுடையதென்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்றார். --D'Aubigne, b. 6, ch. 9. (65) GCTam 151.1
அப்படியிருந்தும் ரோமன் கத்தோலிக்க சபையின் கட்டளைக்குப் பலன் இல்லாமல் போகவில்லை. சிறை, சித்திரவதை, பட்டயம் ஆகியவை பணிவை வற்புறுத்தின. பலவீனமும் மூடநம்பிக்கையும் மிக்கவர்கள், போப்புவின் கட்டளைக்குமுன் நடுங்கி, பொதுவாக லுத்தரின்மீது அனுதாபம்கொண்டபோதிலும், இந்தச் சீர்திருத்தக் காரியத்திற்காக உயிரை அபாயத்திற் குள்ளாக்குவதைவிட, உயிர் மிகவும் அருமையானது என எண்ணினர். ஒவ்வொரு காரியமும் சீர்திருத்தவாதியின் பணியானது முடிவிற்கு வந்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தந்தது. (66) GCTam 151.2
ஆனால் லுத்தர் இன்னும் பயமற்றவராகவே இருந்தார். ரோமன் கத்தோலிக்க நிர்வாகம் அவர்மீது குற்றச்சாட்டுகளை வீசியது. அவர் அழிந்துபோவார் அல்லது கீழ்ப்படியும்படி பலாத்காரம் செய்யப்படுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இன்றி உலகம் அவரை நோக்கியது. ஆனால் அவர் பயங்கரமான வல்லமையுடன் தண்டனையை அதன்மீதே திரும்பவீசி, அதைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துசெல்லும் தனது தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்தார். மாணவர்கள், அறிஞர்கள், சகலவிதமான அந்தஸ்திலும் இருந்த மக்கள் முன், லுத்தர் போப்புவின் ஆணையை, அதன் சட்டதிட்டங்களோடும், போப்புவின் வல்லமையைத் தாங்கும் சில எழுத்துக்களோடும் சேர்த்து எரித்தார். “சிலரது மனதிலுள்ள சத்தியத்தின் நோக்கத்தைக் காயப்படுத்தி, ஆத்துமாக்களை அழிக்க, எனது எதிரிகளால் எனது புத்தகங்களை எரிக்கமுடிந்தது. அதற்குப் பதிலாக, நான் அவர்களது புத்தகங்களை எரிக்கிறேன். அபாயகரமான ஒரு போராட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நான் போப்புடன் விளையாடிக் கொண்டிருந்தேன் இப்போது பகிரங்கமான போரில் ஈடுபடுகிறேன். இந்த ஊழியத்தை நான் தேவனின் பெயரால் தொடங்கினேன். அது அவரது பலத்தினால், நான் இல்லாமலேயே முடிவடையும்” என்று கூறினார். Ibid., b. 6, ch. 10. (67) GCTam 151.3
அவரது நோக்கத்தின் பலவீனங்களைக் காரணம்காட்டி, அவரை அசைத்து நிந்தித்த அவரது எதிரிகளை நோக்கி: “தேவையான இந்த ஊழியத்தைச் செய்யும்படி தேவன் என்னை தேர்ந்தெடுத்து அழைக்கவில்லை என்பது யாருக்குத் தெரியும்? என்னை நிந்திப்பதன்மூலமாக, யாரை நிந்திக்கிறோம் என்று பயப்பட வேண்டாமா? உளறுபவர்கள் தேவனைத்தான் நிந்திக்கிறோம் எனப் பயப்படவேண்டாமா? நான் தனித்திருக்கிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியல்ல! எகிப்தைவிட்டு மோசே தனியாக போனபோது, ஆகாப் அரசன் ஆட்சிசெய்த காலத்தில் எலியா தனியாக இருந்தபோது, எருசலேமில் ஏசாயா தனியாக இருந்தபோது, பாபிலோனில் எசேக்கியேல் தனியாக இருந்தபோது, யேகோவா எப்படி அவர்களோடு இருந்தாரோ அப்படியே என்னுடனும் இருக்கிறார். ஓ! ரோம நிர்வாகமே! இதைக்கேள்! தேவன் ஒரு பிரதான ஆசாரியரையோ அல்லது உயர்ந்த மனிதனையோ தீர்க்கதரிசியாகத் தேர்ந்தெடுக்கவில்லை. மிகக்கீழான நிலைமையிலும் நிந்திக்கப்பட்டவர்களாகவும் இருந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். ஒரு தடவை, மேய்ப்பனாக இருந்த ஆமோசைக்கூட தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசர் களையும், இளவரசர்களையும், கோழைகளான ஆசாரியர்களையும், ஞானவான்களையும் கண்டிக்கும்படி தங்களுடைய உயிர்களுக்கு ஆபத்தான நிலையில் பரிசுத்தவான்கள் வற்புறுத்தப்பட்டனர். நானும் ஒரு தீர்க்கதரிசி என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒடுக்குபவர்களின் அணியில் எண்ணிக்கையில் அதிகமானவர்களும், உயர் ஜாதியினர், செல்வம், பரிகசிக்கும் எழுத்துக்களும் இருக்கும்போது, நான் தனியாக இருப்பதினால் அவர்கள் குறிப்பாக பயப்படவேண்டும் என்று சொல்லுகிறேன். ஆம்! நான் தனியாக இருக்கிறேன். ஆனால் எனது பக்கத்தில் தேவனுடைய வார்த்தை இருப்பதினால், நான் அமைதியாக இருக்கிறேன். இத்தனை பெருமையான அவர்களது எண்ணிக்கையில், வல்லமைகளிலும் மிகப்பெரிய இந்த வல்லமை, அவர்களுடன் இல்லை” என்றார்.-Ibid., b. 6, ch. 10. (68) GCTam 152.1
அப்படியிருந்தும் தனக்குள் ஒரு இறுதிப் போராட்டத்தை நடத்தாமல், ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து பிரியவேண்டும் என்ற இறுதியான முடிவை லுத்தரால் எடுக்கமுடியவில்லை. அந்தச் சமயத்தில் அவர் “சிறு வயதில் மனதில் பதியவைக்கப்பட்ட ஒழுக்கங்களை, ஒரு பக்கமாக விட்டுவிடுதல் எவ்வளவு கஷ்டமானது என்பதை நான் நாள்தோறும் உணருகிறேன். வேத வாக்கியங்கள் என் பக்கத்தில் இருந்தபோதிலும், போப்புவிற்கு எதிராகத் தனியாக நின்று, அவரை அந்திக்கிறிஸ்து என்று காட்டி, அதை நியாயப்படுத்துவது ஓ! அது எனக்கு எவ்வளவு வேதனையைத் தந்தது! எனது இதயத்தின் துன்பங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தது! ‘நீ ஒருவன் மட்டும்தான் ஞானியா? மற்ற எல்லோரும் தவறானவர்களா? நீ தவறுள்ளவனாயிருந்து உன் தவறில் பங்கெடுத்த ஏராளமான ஆத்துமாக்கள் நித்திய ஆக்கினையை அடைந்தால், அது எப்படி இருக்கும்’ என்று போப்புமார்க்கத்தினரின் உதடுகளில் இருந்து அடிக்கடி உண்டான இந்தக் கேள்விகளை, மிகுந்த கசப்புடன் எனக்கு நானே எத்தனை தடவைகள் கேட்டிருந்திருப்பேன்! இந்தச் சந்தேகங்களுக்கெதிராக, கிறிஸ்து அவரது தவறாத வார்த்தைகளினால் என்னைப் பலப்படுத்தும்வரையில், நான் இவ்விதமாக என்னுடனும், சாத்தானுடனும் பேராடினேன்” என்று குறிப்பிட்டார். —Martyn, Vol.1, pages 372, 373.(69) GCTam 152.2
லுத்தர் தனது கோட்பாடுகளை மறுத்துக்கூறாவிட்டால், அவர் சபையிலிருந்து நீக்கப்படுவார் என்று போப்பு அறிவித்த இந்தப் பயமுறுத்தல், இப்பொழுது நிறைவேறியது. அவர் பரலோகத்தால் சபிக்கப்பட்டவர் என்றும், அவரது கோட்பாடுகளைப் பெறுபவர்கள் அனைவருக்கும் இதுவேதான் கதி என்றும், அவரை மறுத்து ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து அவரை இறுதியாகப் பிரிப்பதாக அறிவிக்கும் புதுக்கட்டளை தோன்றியது மாபெரும் போட்டி முழுமை அடைந்தது! (70) GCTam 153.1
தங்களுடைய காலத்திற்குப் பொருத்தமான சத்தியத்தை அறிவிக்க, தேவன் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கும் பங்கு எதிர்ப்புதான்! அந்தக் காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்கால சத்தியம் லுத்தரின் காலத்தில் இருந்தது. சபைக்கான ஒரு நிகழ்கால சத்தியம், இன்று உள்ளது. தமது சித்தத்தின் ஆலோசனைப்படி அனைத்தையும் செய்கிறவர், மனிதர்களை மாறுபட்ட சூழ்நிலைகளில் வைத்து, அவர்கள் வாழும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற தனித்தன்மை வாய்ந்த கடமைகளையும் அவர்கள்மீது வைப்பதில் பிரியமுடையவராக இருக்கிறார். தங்களுக்குக் கிடைக்கும் ஒளியை விலைமதிப்புள்ளதாகப் போற்றுபவர்களுக்குமுன், சத்தியத்தைப்பற்றிய விசாலமான காட்சி திறக்கப்படும். லுத்தரை எதிர்த்த போப்பு மார்க்கவாதிகளின் காலத்தில் இருந்ததைப்போலவே, பெரும் பான்மையினரால் சத்தியம் இன்றும் விரும்பப்படாமல் இருக்கிறது. முன்காலத்தில், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல், மனிதர்களுடைய தத்துவங்களையும் பாரம்பரியங்களையும் மட்டுமே ஏற்றுக்கொண்ட குணம் இன்றும் இருக்கிறது. கடந்தகாலத்தில் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை முன்வைத்தபோது, அப்போது இருந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் இப்போது உள்ளவர்கள் அதை விருப்போடு ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று நிகழ்கால சத்தியத்தை முன்வைப்பவர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இந்த உலகம் அதன் வரலாற்றின் முடிவை நெருங்கும்போது, சத்தியத்திற்கும் தவறுகளுக்கும், கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையில் நிகழும் மாபெரும் போராட்டத்தின் உக்கிரம் அதிகரிக்கவேண்டியதாக உள்ளது. (71) GCTam 153.2
“நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும், நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள். அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்” (யோவான் 15: 19,20) என்று இயேசு அவரது சீடர்களுக்குச் சொன்னார். “எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாகப் பேசம்போது உங்களுக்கு ஐயேர் அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” (லூக்கா 6:26) என்று நமது கர்த்தர் தெளிவாகக் கூறினார். உலகத்தின் ஆவி, முன்காலத்தில் இருந்ததைவிட, இன்று கிறிஸ்துவின் ஆவியுடன் அதிகமாக இசைந்திருக்கவில்லை. எனவே, தேவனுடைய சத்தியத்தை அதன் தூய்மையுடன் பிரசங்கிப்பவர்கள், முன்பு இருந்ததைவிட அதிகமான ஆதரவை இன்று பெறமாட்டார்கள். சத்தியத்திற்கு விரோதமான எதிர்ப்பின் உருவம் மாறலாம் அந்தப் பகைமை வெளிப்படையாகத் தோன்றாமலிருக்கலாம் ஏனெனில் அது மிகவும் தந்திரமானதாக உள்ளது. ஆனால் அந்த எதிர்ப்பு இன்றும் உள்ளது. காலத்தின் முடிவுவரைக்கும் அது வெளிக்காட்டப்படும். (72) GCTam 154.1