Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தெய்வீகக் குணத்தைநோக்கி முன்னேறுதல்!, ஆகஸ்டு 7

    “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்.” - மத்தேயு 5:48.Mar 437.1

    நமது மீட்பர், மானிடரின் தன்மைப்பற்றி நன்றாகப் புரிந்திருந்தார்; எனவே, பரலோகத்திலுள்ள, “என் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்” என்று ஒவ்வொரு மனிதரிடத்திலும் கூறுகிறார். தேவன் தமது செல்வாக்கின் எல்லையிலே பூரணராக இருப்பது போன்று, மனிதனும் தனக்குரிய செல்வாக்கின் எல்லையிலே பூரணமாக இருக்கவேண்டும். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” யோவான்1:12 கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் இந்த எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள். அவர்களைப்பற்றி மேற் கூறப்பட்ட முழுமையான நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் கூறப்பட்டன. மிகச் சிறந்த-மிக உயர்ந்த குணத்திற்குச் சற்றும் குறையாத அளவு, குணத்தில் மாத்திரமே நாம் மனநிறைவோடிருக்கவேண்டுமென்று இந்த வார்த்தைகள் அறிவிக்கின்றன; அதாவது, நமது குணம் தெய்வீகக் குணத்தைப்போன்று அமைய வேண்டும். அத்தகைய குணத்தை உடையவர்களாக நாம் இருக்கும்பொழுது, நமது வாழ்க்கை, நமது விசுவாசம், நமது மார்க்கத்தின் தூய்மை ஆகியவை மற்றவர்களுக்கு அறிவுறுத்துகின்ற முன்மாதிரியாக இருக்கும்.Mar 437.2

    பாவத்தை மேற்கொள்ளத்தக்கதாக, தங்களிடத்தில் எந்த விதமான தீர்மானமான முயற்சியுமின்றி இருப்பவர்களும், தங்களது குணங்களிலே ஒரு மாயவித்தையைப் போன்று, திடீர் மாற்றத்தைக் காணவேண்டுமென்று காத்திருப்பவர்களும் ஏமாற்றமடைவார்கள். இயேசுவை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, பயப்படவும் நமக்குக் காரணமில்லை; சந்தேகப்படவும் காரணமில்லை. அவரிடத்தில் வருகின்ற அனைவரையும் இறுதிவரை இரட்சிக்க வல்லவராக இருக்கிறார். நமது பழைய குணம் மீண்டும் மேலாதிக்கம் பெற்றுவிடுமோ என்றும், நாம் மீண்டும் அவனது கைதிகளாகிவிடாதபடி, சத்துரு தனது உபாய தந்திரத்தால் சில கண்ணிகளை வைத்து விடுவானோவென்றும் நாம் தொடர்ந்து பயத்தில் இருக்கலாம். நமது சொந்த இரட்சிப்பிற்காக பயத்தோடும் நடுக்கத்தோடும் நாமும் பாடுபட வேண்டும். தேவன் தமது செல்வாக்கின் எல்லைக்குள் எப்படி பரிசுத்தமாக இருக்கிறாரோ அதைப்போன்று நமது எல்லைக்கு உட்பட்ட வல்லமையோடு, நம்முடைய செல்வாக்கிற்கடியில், பரிசுத்தமாக இருக்க வேண்டும். தெய்வீக குணத்தின் நயத்தையும் நேர்த்தியையும் அன்பையும் சத்தியத்தையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். மெழுகானது முத்திரையின் பதிவை எடுத்துக்கொள்ளுகிறதுபோல, ஆன்மாவானது தேவனுடைய ஆவியானவரின் பதிவை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவின் சாயலை விடாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.Mar 437.3

    ஆவிக்குரிய இனிய தன்மையிலே நாம் ஒவ்வொரு நாளும் வளர வேண்டும். தெய்வீக மாதிரிப்படிவத்தைப் பார்த்து, பின்பற்றும் நமது முயற்சிகளில் நாம் அடிக்கடி தவறலாம். நமது குறைபாடுகளுக்காகவும் தவறுகளுக்காகவும் இயேசுவின் பாதத்தில் விழுந்து அடிக்கடி அழுது மன்றாடிக்கொண்டிருக்க வேண்டியதிருக்கலாம். நாம் அதைரியப்படத் தேவையில்லை; நாம் அதிக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்; முற்றிலுமாக விசுவாசிக்க வேண்டும். நமது ஆண்டவரின் சாயலிற்கேற்றபடி வளரத்தக்கதாக, திடமான உறுதியோடு மீண்டும் முயற்சிசெய்ய வேண்டும். நம்முடைய சொந்த வல்லமையில் நாம் நம்பிக்கைகொள்ளத் தயங்கும்பொழுது, நமது மீட்பரின் வல்லமையை நாம் உறுதியாக நம்புவோம். நமது தேவனும் நமது நல்வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறவருமாகிய அவருக்குத் துதிகளைச் செலுத்துவோம்.⋆Mar 438.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 438.2

    “கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்.” - சங்கீதம் 29:11.Mar 438.3