Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 19 - மரணம், விசனத்தில் நித்திய ஜீவனல்ல

    சாத்தான் தனது ஏமாற்று வேலையை ஏதேனில் தொடங்கினான். அவன் ஏவாளிடம், “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று கூறினான். ஆத்துமாவின் அழிவில்லாமையைக் குறித்து, சாத்தான் போதித்த முதல் பாடம் இஃது. அந்நாளிலிருந்து இந்நாள் வரை இப்போதனையை விளக்கிவரும் சாத்தான், தேவப்பிள்ளைகளின் சிறையிருப்பு மாறும் நாள் வரை அதனை தொடர்வான். ஆதாமையும், ஏவாளையும் நான் காண நேரிட்டது. தடைச்செய்யப்பட்ட விருட்சத்தை அவர்கள் புசித்த மாத்திரத்தில், தேவன், ஜீவ விருட்சத்தை சுடரும் பட்டயத்தைக் கொண்டு காத்து, அவர்களை அத்தோட்டத்தை விட்டகற்றினார். அப்படியில்லாதிருந்தால், ஜீவவிருட்சத்தின் கனியையும் புசித்து, அவர்கள் நித்திய பாவிகளாக மாறிவிடுவார்களே! ஒரு தூதன், “சுடர்வீசும் பட்டயத்தை கடந்து, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்த ஆதாமின் குடும்பத்தினர் யாரேனும் உண்டோ?” என்று வினவியதை நான் கேட்டேன். அதற்கு வேறொரு தூதன், “சுடர்வீசும் பட்டயத்தை கடந்து, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்த ஆதாமின் குடும்பத்தினர் யாருமே இல்லை. எனவே நித்திய பாவியாக எவருமே இல்லை” என்று பதிலளித்தான். பாவம் செய்கின்ற ஆத்துமா நித்திய மரணத்தை அடையும்; உயிர்த்தெழுதலின் நம்பிக்கை அங்கு இல்லை. GCt 54.1

    தேவனின் வார்த்தைகளை திசை மாற்றி, அநேகரை வஞ்சித்துப்போட்ட சாத்தானை ஆச்சரியமாக பார்த்தேன். தேவன் கூறிய வார்த்தையில், பாவம் செய்யும் ஆத்துமா அழியும் என்றிருக்க, அப்படி அழிவதில்லை என்றும், அஃது நித்தியமாக விசனத்தில் வாழும் என்றும் சாத்தான் கூறிவந்தான். ஒரு தேவதூதன், “வேதனையாக இருப்பினும் மகிழ்ச்சியாக இருப்பினும், ஜீவன் ஜீவன்தான். ஆனால் மரணத்தில் வேதனையும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை, வெறுப்பும் இல்லை” என்று விளக்கமளித்தான்.GCt 54.2

    “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று ஏதேனில் ஏவாளிடம் கூறிய அதே வார்த்தைகளையும், ஏமாற்றலையும் தொடர்ந்து கையாண்டு வரும்படி தனது தூதர்களுக்கு சாத்தான் கட்டளையிட்டிருந்தான். மக்கள் இதனை ஏற்று, மனிதனுக்கு சாவு இல்லை என்று எண்ணி, பாவிகள் நித்தியமாக வேதனைப்படவேண்டுமென நம்பினார்கள். இப்படி செய்ததின் மூலமாக, சாத்தான், தேவனை ஒரு கொடுங்கோலனாக விவரிக்க துவங்கினான். தேவனை திருப்தி படுத்தாதவர்களை நரகத்தில் தள்ளி விடுவார் என்றும், அவருடைய கோபத்தை அவர்கள் நித்தியமாக உணரவேண்டும் என்றும், சொல்லிமுடியாத வேதனையை அனுபவிக்கவேண்டுமென்றும், அப்பொழுது தேவன், அவர்களின் வேதனையைப் பார்த்து திருப்தி அடைவார் என்றும் தனது பிரதிகளின் மூலமாக கிரியை செய்வதற்கு சாத்தான் தீர்மானித்தான். இந்த யுக்தியில் வெற்றிக் கண்டால், அநேகர், தேவனை நேசிப்பதற்கு பதிலாக அவரை வெறுப்பார்கள் என்பதை சாத்தான் அறிந்திருந்தான். மேலும் அநேகர், கர்த்தருடைய வார்த்தைகளின் எச்சரிப்புகள் நிஜத்தில் நிறைவேறப்போவதில்லை என்று எண்ணுவார்கள்; ஏனெனில், அன்பும் இரக்கமும் கொண்ட தேவனின் குணாதிசயத்திற்கு இஃது முற்றிலும் விரோதமானதல்லவா? இப்படியொரு குழப்பத்தை ஒரு பக்கத்தில் உண்டாக்கிய சாத்தான், வேறொரு மிதமிஞ்சிய சூழ்ச்சியையும் விடுவித்தான். அதில், தேவனின் நீதியையும், எச்சரிப்புகளையும் முற்றிலுமாக மறைத்துவிட்டு, அவர் மிகவும் கிருபை உள்ளவர் என்பதால் எவரும் மடிந்துப் போவதில்லை என்றும், பாவிகளும் பரிசுத்தவான்களும் இறுதியாக இரட்சிக்கப்படுவார்கள் என்றும் விளக்கினான். இவைகளினிமித்தமாக, வேதவசனங்கள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவைகள் அல்ல என்று மனிதர்கள் எண்ணத் தொடங்கினார்கள். வேதாகமம் அநேக நன்மையான காரியங்களை போதிக்கிற போதிலும், நித்திய வேதனையின் கோட்பாடுகளை கொண்டிருப்பதினால், அஃது நேசிக்கப்படவோ, நம்பப்படவோ தகுதியற்றது என்று மனிதர்கள் விவாதித்தார்கள்.GCt 54.3

    இன்னும் ஒரு வகுப்பினரை, தேவன் இல்லை என்கிற வாதத்திற்குள்ளாக சாத்தான் எடுத்துச்சென்றான். தேவனின் குணம் நிலையற்றது என்றும், மக்களை நித்திய வேதனைகளால் வாதிக்கிறார் என்றால் அவர் தேவனே இல்லையென்றும் அவர்கள் விவாதித்தார்கள். தேவனையும் வேதப்புத்தகத்தையும் மறுதலித்து, மரணத்தை நித்திய உறக்கமாக கருதினார்கள்.GCt 55.1

    தைரியமில்லாதவர்களை பாவம் செய்யத் தூண்டிவிட்டு, அவர்கள் பாவம் செய்தபின், பாவத்தின் சம்பளம் மரணம் இல்லை என்றும், பாவத்தின் சம்பளம் நித்திய வேதனை என்றும் நம்பவைத்தான். நித்திய நரகத்தை பெரிதாக்கி, பயந்த சுபாவமுள்ளவர்களை சிந்தனையிழக்கச் செய்தான். அதற்கு பின், சாத்தானோடு நாஸ்திகர்களும் இணைந்து கிறிஸ்தவர்கள் மீது நிந்தனைகளை வீசினார்கள். இவையனைத்தும், தேவ வசனத்தின் மீதும், தேவனின் மீதும் வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையினிமித்தமாக நிகழ்ந்தது என்றும் ஜனங்களை நம்ப வைத்தான்.GCt 55.2

    சாத்தானின் துணிச்சலான இச்செயலால் பரலோகமே கொதித்தது. தேவதூதர்களால் எளிதாக எதிரிகளின் கட்டுகளை தகர்த்தெறிய முடியுமென்றிருக்க, ஏன் இத்தனை இன்னல்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று நான் கேட்டேன். தேவன், பெலவீனமான பாவிக்கும் உதவும் வகையில், தம்முடைய வார்த்தைகளை எழுதி வைக்கும்படி கட்டளையிட்டார். இவ்வார்த்தைகளில் தேவனின் திட்டங்கள் மிகத்தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. மனிதனிடம் தனது வார்த்தைகளை கொடுத்த கர்த்தர், அதனை யாரும் அழித்துவிடாதபடி பாதுகாத்துவந்தார். பிற புஸ்தகங்கள் அழிக்கப்பட்டாலும், பரிசுத்த வேதாகமம் நித்தியமானதாகும். கடைசி நாட்களில், சாத்தானின் கிரியைகள் துரிதப்படுத்தப்படும்பொழுது, கர்த்தரின் வேதப்புஸ்தகம் அனைவரின் கரங்களில் இருக்கும் வகையில், தேவன் அதை பலமடங்காக அதிகரித்தார். இதனிமித்தமாக, தனது சித்தத்தை மனிதனுக்கு வெளிப்படுத்தி, சாத்தானின் சகல சூழ்ச்சிகளுக்கும் தப்பித்துக்கொள்ள அவசியமான வழிமுறைகளையும் வேதத்தின் மூலமாக பரிந்துரைத்தார்.GCt 55.3

    தேவன் வேதாகமத்தை சிறப்பாக பாதுகாத்து வந்ததை நான் கண்டேன். ஆகிலும் கற்றவர்கள், சில இடங்களில் அவர்களுடைய சம்பிரதாய கோட்பாடுகளுக்கு இணங்கி, வார்த்தைகளை மாற்றினார்கள். வேதத்தை தெளிவு படுத்துவதாகக் கூறி, தங்கள் எண்ணங்களை அங்கு புகுத்தார்கள். ஆகிலும், பரிசுத்த வேதாகமம் ஒரு பூரணச்சங்கிலி என்பதையும், அதின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை விளக்கிக் காட்டுகிறது என்றும் நான் கண்டேன். சத்தியத்தை உண்மையாக தேடுகிறவர்கள் பயப்படத் தேவையில்லை, தவறிப்போகவும் அவசியமில்லை. ஏனெனில், தேவ வசனங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், ஒத்தாசையாக பரிசுத்த ஆவியானவரும் நமக்கு அருளப் பட்டிருக்கிறார், அல்லவா?GCt 55.4

    மனிதனின் மனோசக்தியை கட்டுப்படுத்தும் அதிகாரம் தூதர்களுக்கு அருளப்படாததை நான் கண்டேன். தேவன், மரணத்தையும் ஜீவனையும் மனிதனுக்கு முன்பாக வைக்கிறார். தெரிந்தெடுத்தல் மனிதனுடையது. அநேகர் ஜீவனை நாடுகிறார்கள். ஆகிலும், விசாலமான சாலையில் கடந்துச் செல்கிறார்கள்.GCt 56.1

    குற்றம்புரிந்த மனிதனுக்காக தமது ஒரே குமாரனை தந்தருளியதில், தேவனின் இரக்கத்தையும், அன்பையும் நான் கண்டேன். அவர்களுக்கென்று தியாக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், தண்டிக்கப்பட வேண்டும். தேவன் படைத்த பிராணிகள் அவருடைய ராஜ்ஜியத்துக்கு எதிராக எழும்பினது; ஆகிலும் கர்த்தர், அவர்களை நித்தியமாக வேதனையை அனுபவிக்கும்படி அவர்களை நரகத்தில் தள்ளிவிடவில்லை. பாவ நிலையில், அவர்களை பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது. அதே நேரத்தில் அவர்களை, நித்தியமாக நரகத்தில் தள்ளவும் மாட்டார். ஆனால், துன்மார்க்கர்களை இப்பூமியிலிராதபடி அழித்துப்போடுவார். இஃது நிறைவேறும் நாளிலே, பரம சேனைகள் இணைந்து “ஆமென்” என்று சொல்வார்கள்.GCt 56.2

    கிறிஸ்துவின் பெயரை சுமந்தும், தனது வலைகளில் அகப்பட்டுக்கொண்ட மக்களை பார்த்து, சாத்தான் பூரித்துப்போனான். இன்னமும் அதிகமான மாயைகளை உண்டாக்க விரும்பிய சாத்தான், அதிகமாக வலிமையடைந்தான். அவனுடைய பிரதிகளாகிய போப்பாண்டவரையும், ஆசாரியர்களையும் சுய கௌரவத்தினால் ஈர்த்து, இயேசுவின் விசுவாசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்தினான். கிறிஸ்துவின் நம்பிக்கையான சீடர்களின் மீது தனது தூதுவர்களை சாத்தான் ஏவினான். எத்தனை பாடுகள்! எத்தனை துன்பங்கள்!! இவை அனைத்தையும் தேவதூதர்கள் குறித்து வைத்திருக்கிறார்கள். இதை செய்த தூதர்களிடம், சாத்தானும் அவனுடைய தூதர்களும் வந்து, விசுவாசமாக இருந்த யாவரையும் கொலை செய்யப்போவதாகவும், அதன்பின் யாதொரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கப் போவதில்லை என்றும் எச்சரித்தார்கள். அச்சமயத்தில், தேவனின் திருச்சபை தூய்மையாக இருந்ததை நான் கண்டேன். கேடான இதயங்கள் கொண்ட மனிதர்கள் யாரும் திருச்சபைக்குள் வரவில்லை. ஏனெனில், உண்மையான கிறிஸ்தவன், சாத்தான் வகுத்து வைத்திருந்த அனைத்து உபாதைகளுக்கும் அடிபணிந்து, விசுவாசத்தை தளரவிட்டுவிடாமல் நிலைத்து நின்று மடிந்துப்போனதை நான் கண்டேன்.GCt 56.3

    பார்க்க : அதியாகமம் 3 : 1 - 24
    பிரசங்கி 9 : 5 ; 12 : 7
    லூக்கா 21 : 33
    யோவான் 3 : 1
    ஐஐ தீமோத்தேயு 3 : 16
    வெளிப்படுத்தல் 20 : 14-15 ; 21 : 1; 22 : 12 - 19