21 - “பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது”
இந்த வாழ்வில் தானே மனிதர்கள் தங்கள் நித்திய வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள் என்று ஐசுவரியவான் - லாசரு குறித்த உவமை யில் இயேசு காட்டுகிறார். தவணையின் காலத்தில், ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் தேவகிருபை அருளப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் சிற்றின்பங்களில் மூழ்கி வாய்ப்புகளை வீணடித்தால், நித்திய வாழ்வு கிடைக்காதபடி செய்கிறார்கள். தவணையின் காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு தவணையின் காலம் கொடுக்கப்படாது. தங்களுடைய சொந்த தீர்மானத்தால் தங்களுக்கும் தங்களுடைய தேவனுக்கும் இடையே ஒரு பெரும்பிளப்பை உண்டாக்குகிறார்கள்.COLTam 257.1
தேவனைச் சார்ந்து வாழ்த்தீர்மானிக்காத ஐசுவரியவான்களுக் கும், தேவனைச் சார்ந்து வாழத்தீர்மானிக்கிற ஏழைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை இந்த உவமை காட்டுகிறது. ஐசு வரியவான்கள் தரித்திரராகவும், தரித்திரர் ஐசுவரியவான்களாகவும் மாறுகிற காலம் வருகிறதென கிறிஸ்து காட்டுகிறார். இவ்வுலகப் பொருட்களைப் பெற்றிராத ஏழைகளாக இருந்தாலும், தேவனை நம்பி, உபத்திரவத்தில் பொறுமையோடு இருக்கிறவர்கள், இவ்வுல கத்தில் தங்கள் வாழ்க்கையை தேவனிடம் அர்ப்பணியாமலும் இவ்வுலகின் மிகப்பெரிய பதவிகளிலும் இருப்பவர்களைவிட மேலான நிலைக்கு உயர்த்தப்படுவார்கள்.COLTam 257.2
‘ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம் பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான் . லாசரு என்னும் பேர் கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்” என்று இயேசு சொன்னார்.COLTam 258.1
அநீதியுள்ள நியாயாதிபதியின் வகுப்பைச் சார்ந்தவனல்ல இந்த ஐசுவரியவான். அந்த நியாயாதிபதிதான் மனிதனையும் தேவனையும் மதியாதவன் என்று வெளிப்டையாகவே கூறினான். இவன் தன்னை ஆபிரகாமின் குமாரனென்று சொன்னான். தரித்திரனை வன்முறையாக நடத்தவில்லை அல்லது பார்க்க சகிக்கவில்லை என்று அவனை விரட்டவில்லை. மனிதர்களில் அருவருப்பாகவும், தரித்திரனாகவும் இருந்தாலும், தான் வாசல்களுக்குள் நுழையும் போது தன்னைப் பார்த்து அந்தத் தரித்திரன் ஆறுதலைடயக்கூடு மானால், அவன் அங்கேயே இருந்துவிட்டுப்போகட்டும் என்று விரும்புகிறவனாக ஐசுவரியவான் இருந்தான். ஆனால் உபத்திரவத் திலிருந்த தன் சகோதரனுடைய நிலையைப் பார்த்தும், சுயநலத்தோடு அலட்சியமாக இருந்தான்.COLTam 258.2
வியாதியஸ்தர்களுக்குச் சிகிச்சையளிக்க அங்கே மருத்துவ மனைகள் இல்லை. ஆண்டவர் நம்பிக்கையோடு தம் செல்வங்களை அருளியிருந்த அந்த ஐசுவரியவானிடம், உபத்திரவத்திலும் தேவையிலும் இருந்தோரைப் பற்றிச் சொல்லப்பட்டது; இவன் அவர்கள் மேல் பரிவுகாட்டி, உதவியிருக்கவேண்டும். ஐசுவரிய வானும் லாசருவும் அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள். லாசரு அதிக தேவையில் இருந்தான்; அவனுக்கு நண்பர்கள் இல்லை, வீடில்லை, பணமில்லை, உணவில்லை. ஆனால் அந்த செல்வந்த பிரபுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்தது; ஆனால்லாசரு அதே நிலையிலேயே வாழ்வதற்கு அவன் அனுமதித்தான். தன் சக மனிதனுடைய பாடுகளைத் தனிக்கிற வசதி படைத்திருந்த ஐசு வரியவான், தனக்காகவே வாழ்ந்தான்; இன்றும் பெரும்பாலானோர் அப்படியே இருக்கிறார்கள்.COLTam 258.3
பசியோடும், நிர்வாணத்தோடும், வீடில்லாமலும் இருக்கிற அநேகர் இன்று நம்மைச் சுற்றிலும் உள்ளனர். தேவையிலும் உபத் திரவத்திலும் உள்ள இவர்களுக்கு நம்முடைய வசதிகளால் நாம் உதவாவிட்டால், அது குற்றமாகும்; ஒருநாளில் நாம் பயத்தோடு கணக்குக் கொடுக்க வேண்டும். அனைத்து வகையான இச்சையும் விக்கிரகாராதனைக்கு ஏதுவான பாவம்தான். சுயநலசிற்றின்பங்கள் அனைத்துமே தேவனுடைய பார்வையில் குற்றங்கள் தாம்.COLTam 258.4
தேவன் அந்த ஐசுவரியவானை தம்முடைய செல்வங்களுக்கு உக்கிராணக்காரனாக வைத்திருந்தார். அந்த்தரித்திரனைப் போன்ற வர்களை நியாயமாக நடத்துவதே அவனுடைய கடமை . “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்புகூருவாயாக” (உபா 6:5) என்றும், ” உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்றும் தேவன் கட்டளை கொடுத்திருந்தார். லேவி 19:18. அந்த ஐசுவரியவான் ஒரு யூதன்; தேவனுடைய கட்ட ளையை நன்கு அறிந்தவன். ஆனால் தேவன் தன்னிடம் ஒப்படைத் திருந்த வசதிகளுக்கும் திறமைகளுக்கும் தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறந்தான். தேவன் அவனை பரிபூரணமாக ஆசீர்வதித்திருந்தார். அவற்றை தன்னுடைய சிருஷ்டிகரின் மகிமைக்காக அல்லாமல் தன்னுடைய மகிமைக்காக சுயநலத்துடன் பயன்படுத்தினான். அவன் எவ்வளவு ஏராளமாகப் பெற்றிருந்தானோ, அவ்வளவுக்கு மனுகுலத்தின் மேன்மைக்காக தன் ஈவுகளைப் பயன்படுத்த கடமைப்பட்டிருந்தான். தேவன் கட்டளையிட் டிருந்தும் தேவனுக்குத் தான் கடமைப்பட்டிருந்ததை அந்த ஐசு வரியவான் எண்ணவில்லை. கடன் கொடுத்தான், கடனுக்கு வட்டி வாங்கினான். ஆனால் தேவன் அவனுக்கு கடனாகக் கொடுத்திருந்த வற்றிற்கு அவன் வட்டி செலுத்தவில்லை. அறிவும் தாலந்துகளும் பெற்றிருந்தான்; அவற்றை மேம்படுத்தவில்லை. தேவனுக்குக் கணக்கொடுக்கவேண்டியதை மறந்து, சிற்றின்பங்களுக்காக தன் ஆற்றல்களை எல்லாம் செலவிட்டான். தனக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியவற்றை சுற்றிலும் வைத்திருந்தான்; அதற்காகவே களியாட்டங்களில் ஈடுபட்டான்; தன் நண்பர்கள் தன்னைப் புகழ வும் முகஸ்துதி செய்யவும் விரும்பினான். தன்னுடைய நண்பர்களோடு காலங்கழிப்பதிலேயே மூழ்கியிருந்ததால், தேவனுடைய இரக்கத்தின் ஊழியத்தில் அவரோடு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்புணர்வை முற்றிலுமாக இழந்துவிட்டான். தேவவார்த்தை யைப் புரிந்துகொண்டு, அதன் போதனைகளின்படி நடக்க அவ னுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது; ஆனால் சிற்றின்பப் பிரியர்களான தன்னுடைய நண்பர்களுடனே எப்போதும் இருந்ததால், நித்திய தேவனை மறந்தான்.COLTam 259.1
இந்த இருவருடைய நிலையிலும் மாற்றம் ஏற்படுகிற ஒரு சம் யம் வந்தது. அந்தத் தரித்திரன் ஒவ்வொரு நாளும் உபத்திரவத்தை அனுபவித்து வந்தான்; ஆனாலும் பொறுமையாக, அமைதியாக அதைச் சகித்துக்கொண்டான். காலப்போக்கில் அவன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்காக அழுது துக்கப்படுவதற்கு ஒருவரும் இல்லை; ஆனால் உபத்திரவத்தை பொறுமையோடே சகித்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்ந்திருந்தான்; விசுவாசச் சோதனையில் நிலைத்து நின்றிருந்தான், அவன் மரித்த போது தூதர்கள் அவனை ஆபிரகாமின் மடிக்குக் கொண்டு சென்றதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.COLTam 260.1
கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, உபத்திரவத்தைச் சகிக்கிறவர்களுக்கு லாசரு அடையாளமாக இருக்கிறான். எக்காளச் சத்தம் தொனிக்கும் போது, கல்லறையிலுள்ளவர்கள் கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து, தங்களுக்குரிய பலனைப் பெறுவார்கள். ஏனென்றால், தேவன் மேல் அவர்கள் வைத்த விசுவாசம் ஏட்டளவில் அல்லாமல், நிஜவாழ்க்கையில் காணப்பட்டது.COLTam 260.2
‘ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசரு வையும் கண்டான். அப்பொழுது அவன் : தகப்பனாகிய ஆபிர காமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீ ரில் தோய்த்து, என் நாவைக்குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே” என்று கூப்பிட்டான். லூக்கா 16:22-24.COLTam 260.3
மக்கள் மத்தியில் நிலவிவந்த கருத்தின் அடிப்படையில் மக் களிடம் அந்த உவமையைக் கூறுகிறார். மரணத்திற்கும் உயிர்த்தெழு தலிற்கும் இடைப்பட்ட காலத்தில், நிகழ்வதை மனிதர்கள் அறிவார்கள் என்கிற கொள்கையை நம்பின சிலரும் கிறிஸ்துவின் போதனை யைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய எண்ணங்களை கிறிஸ்து அறிந்திருந்தார்; அந்த முன் அபிப்பிராய கருத்துகள் மூலம் முக்கியமான சத்தியங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்து கிற வகையில் அந்த உவமையை உருவாக்கினார். தேவனோடு தங்களுடைய உறவு எப்படியிருக்கிறது என்பதை அவர்கள் காணும்படிக்கு, முகம் பார்க்கிற கண்ணாடியைப் போல அந்த உவமையை முன்வைத்தார். ஒரு மனிதனுடைய முக்கியத்துவம் அவ னுடைய சொத்துக்களில் இல்லை, அவன் பெற்றிருப்பதெல்லாம் தேவன் அவனுக்கு கடனாகக் கொடுத்தவைதாம் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்பினார். அவர்களுடைய முன் அபிப் பிராய கருத்துகளைப் பயன்படுத்தி அதைச் சொன்னார். இந்த ஈவுகளை தவறாக ஒருவன் பயன்படுத்தினால், தேவனை நேசித்து, அவரை நம்புகிற மிகவும் தரித்திரமான, பாடுள்ளவனான ஒரு வனை விடவும் கீழான நிலையில் வைத்திடும்.COLTam 260.4
மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் ஆத்து இரட்சிப்பைப் பெற முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகிறார். ஆபிரகாம் ஐசுவரியவானைப் பார்த்து,“மகனே, நீ பூமியிலே உயி ரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசரு வும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக் கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப் படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக் கும் உங்களுக்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது” என்று ஆபிரகாம் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், இரண்டாம் தவணையின் காலத்திற்கு வாய்ப்பே இல்லை யென கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். நித்தியத்திற்கு ஆயத்தப்படும் படி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரே வாழ்க்கை இதுதான்.COLTam 261.1
தான் ஆபிரகாமின் குமாரன் என்கிற கருத்தில் அந்த ஐசுவரிய வான் உறுதியாக இருந்தான்; தான் இக்கட்டில் இருந்த சமயத்தில் உதவிக்காக அவரை நோக்கிக் கூப்பிட்டதாகப் பார்க்கிறோம். “தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கும் என்று வேண்டி னான். இவ்வாறு, தேவனுக்கு மேலாக ஆபிரகாமை அவன் கருதிய தையும், ஆபிரகாமோடான உறவு இரட்சிப்பைப் பெற்றுத்தருமென நம்பினதையும் காட்டினான். சிலுவையில் தொங்கியகள்ளன் கிறிஸ்துவிடம் வேண்டினான். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ் யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் ” என்று விண்ணப்பம் செய்தான். லூக்கா 23:42. உடனடியாக அவனிடம், மெய்யாகவே இன்று நான் (நிந்தையோடும் வேதனையோடும் நான் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிற நான்) உனக்குச் சொல்லு கிறன், என்னுடனேகூட நீ பரதீசிலிருப்பாய் என்று பதிலளித்தார். ஆனால் அந்த ஐசுவரியவானோ ஆபிரகாமிடத்தில் வேண்டினான்; அவனுடைய வேண்டுதல் கேட்கப்படவில்லை. “இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் (அருளுகிற), அதிபதியாகவும் இரட்சகராகவும் ” கிறிஸ்துவை மட்டுமே உயர்த்த வேண்டும். அப்5:31.’‘அவராலேயன்றி வேறொருவராலும் இரட் சிப்பு இல்லை .’ அப் 4:12.COLTam 261.2
அந்த ஐசுவரியவான் சிற்றின்பத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்திருந்தான்; நித்திய வாழ்விற்கு தான் ஆயத்தப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டபோது காலம் பிந்தியிருந்தது. நித்தியத் தைச் சுதந்தரிப்பதற்கு எதையும் செய்யவில்லை; தன் மூடத்தனத்தை உணர்ந்தான்; தன் சகோதரர்களைப்பற்றிச் சிந்தித்தான்; அவர்களும் இவனைப்போலவேசிற்றின்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவன், “தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதர ருண்டு அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை (லாசருவை) என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று வேண்டுகிறான். ஆபிர காம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித் தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்பு வார்கள் என்றான். அதற்கு அவன் : அவர்கள் மோசேக்கும் தீர்க்க தரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்பமாட்டார்கள்” என்று சொன்னான்.COLTam 262.1
தன் சகோதரர்களுக்கு கூடுதல் ஆதாரம் கொடுக்கும்படி வேண்டினான். அவ்வாறு ஆதாரங்களைக் கொடுத்தாலும் கூட அவர்களை மனந்திரும்பச் செய்யமுடியாதெனச்சொல்லப்பட்டது. அவன் வேண்டிக்கொண்டது, தேவனுடைய நேர்மையில் சந்தேகம் எழுப்புவது போல இருந்தது. நீர் மட்டும் என்னை கடுமையாக எச் சரித்திருந்தால், இந்த இடத்திற்கு நான் வந்திருக்க மாட்டேன் என்று அந்த ஐசுவரியவான் சொன்னதுபோல இருந்தது. இதற்கு ஆபிரகாம், “உன்னுடைய சகோதரர்களுக்கு போதுமான எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிச்சம் கிடைத்தும், அதைக் காண அவர்கள் விரும்பவில்லை ; சத்தியம் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டும், அதைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை” என்று சொன் னதாக வாசிக்கிறோம்.COLTam 262.2
‘அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடா விட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்ப மாட்டார்கள்.” இந்த வார்த்தைகள் உண்மை என்பதை யூத தேச வரலாறு நிரூபித்தது. பெத்தானியா ஊரில், லாசரு மரித்து நான்கு நாட்களுக்கு பிறகு அவனை உயிரோடு எழுப்பினதுதான் கிறிஸ்து செய்த கடைசியான, பிரமிப்பூட்டுகிற அற்புதமாக இருந்தது. இரட்சகரின் தெய்வீகதன்மைக்கு ஓர் அற்புதமான ஆதாரமாக யூதர்களுக்கு முன் இது நிகழ்த்தப்பட்டது; ஆனால் அவர்கள் அதைப் புறக் கணித்தார்கள். லாசரு உயிருடன் எழுந்து, அவர்கள் முன் சாட்சியிட் டான். ஆனால் எல்லா ஆதாரங்களையும் பெற்றும் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தினார்கள். அவரைக் கொல்லவும் வகை தேடினார்கள். யோவான் 12:9-11.COLTam 263.1
மனிதர்களின் இரட்சிப்புக்காக தேவன் நியமித்த ஏதுகரங் களாக நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் தேவன் கொடுத்திருந்தார். இந்த ஆதாரங்களுக்கு அவர்கள் செவிகொடுக் கட்டுமென கிறிஸ்து சொன்னார். தேவ வார்த்தையில் தேவன் பேசி யிருப்பவற்றை அவர்கள் கேட்காவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவர் உயிர்த்தெழுந்து சாட்சி சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.COLTam 263.2
மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுக்கிறவர்கள், தேவன் கொடுத்திருக்கும் வெளிச்சத்தைவிட அதிகமான வெளிச் சத்தைக் கேட்கமாட்டார்கள். ஆனால் மனிதர்கள் அந்த வெளிச்சத் தைப் புறக்கணித்து, தங்களுக்கு அருளப்பட்ட வாய்ப்புகளை மதிக் கத்தவறும் போது, மரித்தோரிலிருந்து ஒருவர் எழும்பிவந்து செய்தி சொன்னாலும் அவர்கள் செவிகொடுக்க மாட்டார்கள். அவர்களில் நம்பிக்கையை உண்டாக்க அந்த ஆதாரம் கூட போதுமானதாக இருக்காது ; நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் புறக் கணிக்கிறவர்கள், முழுவெளிச்சத்தையும் புறக்கணிக்கிற அள வுக்கு இருதயத்தைக் கடினமாக்கி விடுகிறார்கள்.COLTam 263.3
ஆபிரகாமிற்கும் பூமியில் ஐசுவரியவனாக இருந்தவனுக்கும் இடையேயான உரையாடல் ஓர் உருவகம்தான். ஒவ்வொரு மனித னும் தன்னிடம் எதிர்பார்க்கப்படுகிற கடமைகளைச் செய்யும்படி அவனுக்குப் போதிய வெளிச்சம் வழங்கப்படுகிறது என்கிற பாடத்தை இதிலிருந்து கற்கவேண்டும். ஒருவன் எந்த அளவுக்கு வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும் பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவனுக்கு பொறுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய பணியைச் செய்வதற்கு போதுமான வெளிச்சத்தையும் கிருபையையும் தேவன் வழங்கு கிறார். ஒரு சிறியவெளிச்சம் அவனுடைய கடமை என்னவென்பதை வெளிப்படுத்தும் போது, அதைச் செய்யத் தவறினால், பெரிய வெளிச்சம் கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக உண்மையாக இருக்க மாட்டான்; கொடுக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை மேம்படுத் தாமல் அலட்சியம் காட்டுவான்.”கொஞ்சத்திலே உண்மையுள்ள வன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக் கிறான். லூக்கா 16:10. மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் மூலம் வெளிச்சத்தைப் பெற மறுத்து, பிரமாண்டமான அற்புதத்தைக் கேட்கிறவர்கள், அது கொடுக்கப்பட்டாலும் நம்பமாட்டார்கள்.COLTam 264.1
லாசரு - ஐசுவரியவான் உவமையில், அந்த இருவகுப்பினரையும் பரலோகம் எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. அநியாயத்தால் ஐசுவரியங்களைச் சேர்க்காதவர், ஐசுவரிய வானாக இருப்பதில் தவறில்லை. ஐசுவரியவான் தன்னுடைய ஐசு வரியங்களினிமித்தம் ஆக்கினைக்குட்படுவதில்லை. மாறாக, அவனை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வங்களை அவன் சுய நலமாகச் செலவழித்தால் அது ஆக்கினைக்கேதுவானது. நன்மை செய்யும்படி அந்த ஐசுவரியங்களைச் செலவழித்து, தேவனுடைய சிங்காசனத்தின் அருகே அவற்றைச் சேர்த்துவைத்தால், மிகவும் நல்லது. இவ்வாறு நிலையான ஐசுவரியங்களைத் தேடிப்பெறுவ தற்கு தன்னை அர்ப்பணிக்கிற எவரையும் மரணமானது தரித்திர ராக்க முடியாது. ஆனால் தனக்கென்று ஐசுவரியங்களைச் சேர்க்கிற வன் அவற்றை பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. தான் உண்மையற்ற உக்கிராணக்காரன் என்பதை நிரூபித்திருப்பான். தன்னுடைய வாழ்நாளில் நன்மையானவற்றைப் பெற்றிருந்தான், ஆனால் தேவனுக்குச் செய்யவேண்டிய கடமையை மறந்துவிட் டான். பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்க தவறிவிட்டான்.COLTam 264.2
அநேகசிலாக்கியங்களைப் பெற்றிருந்த அந்த ஐசுவரியவான், தன்னுடைய ஈவுகளைப் மேம்படுத்தியிருக்க வேண்டும்; அப்போது தான் அவனுடைய ஊழியம் தூர இடங்களுக்கும் பரவி, மேம்பட்ட ஆவிக்குரிய அனுகூலங்களை கூடவே கொண்டு சென்றிருக்கும். மீட்பின் நோக்கமானது, பாவத்தை அகற்றுவது மாத்திரமல்ல; வளர்ச்சியைக் குன்றச் செய்கிற அந்த வல்லமை பறித்த ஆவிக்குரிய ஈவுகளை மீண்டும் பெற்றுக்கொடுப்பதாகும். மறுமை உலகத்திற்குள் பணத்தை எடுத்துச் செல்லமுடியாது. அங்கு அது தேவையு மில்லை. ஆனால் கிறிஸ்துவிற்கு ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணு வதற்காகச் செய்யப்படுகிற நற்கிரியைகள் பரலோக மன்றங்களுக் குக் கொண்டு செல்லப்படுகின்றன. கர்த்தருடைய ஈவுகளை தங்களு டய சுயநலத்திற்காக மட்டுமே செலவிட்டு, ஏழ்மையிலிருக் கும் தங்கள் சகமனிதர்களுக்கு உதவவும், உலகத்தில் தேவ ஊழி யத்தை வளர்க்கவும் எதுவுமே செய்யால் இருப்பவர்கள், தங்கள் சிருஷ்டிகரைக்கனவீனப்படுத்துகிறார்கள். பரலோகப் பதிவுகளில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக, தேவனைக் கொள்ளை யடித்தவர்கள் என்று எழுதப்பட்டிருக்கும்.COLTam 265.1
பணத்தால் பெறக்கூடிய அனைத்தும் அந்த ஐசுவரியவானிடம் இருந்தன, ஆனால் தேவனுக்கு முன் தன் கணக்கைச் செம்மையாக் கும் ஐசுவரியங்களை அவன் பெற்றிருக்கவில்லை. தான் பெற்றிருந்த அனைத்தும் தனக்கே சொந்தமானவை போல அவன் வாழ்ந்தான். தேவன் சொல்லியிருந்தபடி செய்யவில்லை; கஷ்டத்தி லிருந்து ஏழைகளின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை. ஆனால் இறுதியில், அவன் மறுக்கமுடியாத ஓர் அழைப்பு தேவனிடமிருந்து வருகிறது. அவன் எதிர்பேசமுடியாத அல்லது மறுக்க முடியாத அதிகாரம் அது. தனக்குச் சொந்தமானவற்றை எல்லாம் விட்டு வெளியேறும்படியும், இனி அவற்றிற்கு அவன் உக்கிராணக் காரன் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. முன்புஐசுவரியவனாக இருந்தவன், இப்போது நம்பிக்கையற்ற தரித்திர நிலைக்குச் செல் கிறான். பரலோகத் தறியில் நெய்யப்பட்ட கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் இனி ஒருபோதும் அவனை மூடாது. ஒரு காலத்தில் இரத் தாம்பரமும் விலையேறப்பெற்ற மெல்லிய வஸ்திரமும் உடுத்தி வந்த வன் இப்போது நிர்வாணியாகிறான். அவனுடைய தவணையின் காலம் முடிந்தது. அவன் இந்த உலகத்திற்கு ஒன்றையும் எடுத்து வரவில்லை; ஒன்றையும் எடுத்துச்செல்வதுமில்லை.COLTam 265.2
கிறிஸ்துவானவர் திரையை விலக்கி, ஆசாரியர்களுக்கும் அதிபதிகளுக்கும் வேதபாரகர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இந்தக் காட்சியைக் காண்பித்தார். இவ்வுலகப் பொருட்களில் ஐசு வரியவான் களாக இருந்து, தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இல்லாதவர்கள் இந்தக்காட்சியைப் பார்க்க வேண்டும். காட்சியைத் தியானிக்க மாட்டீர்களா? மனிதர்களின் பார்வைக்கு விலையேறப் பெற்றவையாகத் தோன்றுபவை, தேவனுடைய பார்வையில் அரு வருப்பாகக் காணப்படுகின்றன. “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத் தைக் கொடுப்பான்?” என்று கிறிஸ்து கேட்கிறார். மாற்கு 8:36,37.COLTam 266.1
யூத தேசத்திற்கான பாடம்COLTam 266.2
ஐசுவரியவான் - லாசரு உவமையை கிறிஸ்து சொன்ன சமயத்தில், அந்த ஐசுவரியவானைப் போன்று பரிதாபமான நிலையில் யூதர்கள் பலர் இருந்தார்கள். தேவன் கொடுத்திருந்த வசதிகளை சிற்றின்பமாக வாழச் செயலவழித்து, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் ‘ என்று சொல்லப்படுகிற நிலைக்கு வந்து விட்டார்கள். தானி 5:27. அந்த ஐசுவரியவான் உலக ரீதியாக, ஆவிக்குரிய ரீதியாக அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தான்; ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில் தேவனோடு ஒத்து ழைக்க மறுத்தான். யூத தேசமும் அப்படித்தான் இருந்தது. பரிசுத்த சத்தியத்தைப் பெற்றிருந்த களஞ்சியங்களாக யூதர்களை தேவன் வைத்திருந்தார். தமது கிருபையின் உக்கிராணக்காரர்களாக அவர்களை நியமித்திருந்தார். உலக - ஆவிக்குரிய ரீதியான அனைத்து அனுகூலங்களையும் அவர்களுக்குக் கொடுத்து, அவற்றை மற்ற வர்களுக்கும் பகிர்ந்தளிக்கும்படி சொன்னார். வாழ்க்கையில் மிக மோசமான நிலைக்குச் சென்றவர்களையும், தங்களுடைய வாசல் களில் நிற்கும் அந்நியர்களையும், தங்கள் மத்தியிலிருந்து தரித்திர ரையும் நடத்தவேண்டிய விதம் குறித்து விசேஷித்த கட்டளையைக் கொடுத்திருந்தார். அவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக எதையும் பெறாமல், தேவையோடு வாழ்கிறவர்களை மனதில் வைத்து, அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் ளுடைய அன்பின், இரக்கத்தின் கிரியைகளுக்கு ஏற்றபடி அவர்களை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப் பண்ணியிருந்தார். ஆனால் அவர்களோ அந்த ஐசுவரியவானைப்போல, இக்கட்டிலிருக்கும்COLTam 266.3
மனுகுலத்தாரின் உலகதேவைகளை அல்லது ஆவிக் குரிய தேவைகளைச் சந்திக்க உதவிகரம் நீட்டவில்லை. பெருமையி னால் நிறைந்து, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, அவருடைய தயவைப்பெற்றவர்களாக தங்களை எண்ணிக்கொண்டார்கள். தேவனை அவர்கள் சேவிக்கவோ ஆராதிக்கவோ இல்லை. தாங்கள் ஆபிரகாமின் புத்திரர் என்றே நம்பி வந்தார்கள். “நாங்கள் ஆபிர காமின் சந்ததியாயிருக்கிறோம்” என்று பெருமையாகச் சொன்னார்கள். யோவான் 8:33. நெருக்கடி வந்தபோதுதான், தேவனை விட்டு முற்றிலும் விலகியிருந்ததும், ஆபிரகாரமை தேவன் போல நம்பி வந்ததும் வெளிப்பட்டது.COLTam 267.1
இருண்டுபோயிருந்த யூத ஜனங்களுடைய இருதயங்களில் வெளிச்சத்தை வீசச்செய்ய கிறிஸ்து ஏங்கினார். அவர்களை நோக்கி: “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால், ஆபிர காமின்கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல் லத் தேடுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே ” என்று சொன்னார். யோவான் 8:39,40.COLTam 267.2
நல்லொழுக்கமானது பாரம்பரியமாக வருகிற ஒன்றல்ல என் பது கிறிஸ்துவுக்குத் தெரியும். ஆவிக்குரிய தொடர்பானது அனைத்து வகையான இயற்கையான தொடர்புகளுக்கும் அப்பாற்பட்ட தென்று போதித்தார். யூதர்கள் தங்களை ஆபிரகாமின் சந்ததியா ரென்று உரிமை கொண்டாடினார்கள்; ஆனால் ஆபிரகாமின் கிரி யைகளைச் செய்யவில்லை; எனவேதாங்கள் உண்மையில் அவனுடைய பிள்ளைகளல்ல என்பதை நிரூபித்தார்கள். தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆபிரகாமைப் போல ஆவிக்குரிய வாழ்வை வாழ்கிறவர்கள் மட்டுமே அவருடைய சந்த்தியாரென எண்ணப்படுவார்கள். மனிதரால் மிகவும் தாழ்வாக மதிக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் அந்தத் தரித்திரன்; ஆனால் ஆபிரகாம் அவனை தன்னுடைய நெருங்கிய உறவினனாக ஏற்றுக்கொள்கிற தகுதியைப் பெற்றிருந்தானெ கிறிஸ்து கண்டார்.COLTam 267.3
வாழ்வின் அனைத்து சுகபோகங்களோடும் அந்த ஐசுவரிய வான் வாழ்ந்து வந்தாலும், தேவனுக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை ஆபிரகாமுக்குக் கொடுக்குமளவிற்கு அறியாமையில் இருந்தான். தான் பெற்றிருந்த மேலான சிலாக்கியங்களுக்கு நன்றியுள்ளவனாக, தேவ ஆவியானவர் தன்னுடைய சிந்தையையும் இருதயத்தையும் மாற்ற அனுமதித்திருந்தால், அவனுடைய நிலையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும். அவன் வாழ்ந்து வந்த அந்தத் தேசத்திற்கும் அப்படியே நிகழ்ந்தருக்கும். தேவனுடைய அழைப்பிற்கு அவர்கள் இணங்கியிருந்தால், அவர்களுடைய எதிர்காலம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருக்கும். மெய்யான ஆவிக்குரிய பகுத்தறிவைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் பெற்றிருந்த வசதிகளை தேவன் மேலும் அதிகரிக்கச் செய்திருப்பார்; ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிச்சத்தையும் ஆசீர்வாத்தையும் கொடுக்க அது போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ தேவனுடைய ஏற்பாட்டை விட்டு வெகு தூரம் விலகியிருந்ததால், அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரண்டிருந்தது. உண்மையும், நீதியுமுள்ள தேவனுடைய உக்கிராணக்காரர்களாக தங்களுடைய ஈவுகளைப் பயன்படுத்தத் தவறினார்கள். நித்திய வாழ்க்கை பற்றி அவர்கள் எண்ணிப்பார்க்கவே இல்லை. அவர்கள் உண்மையற்றவர்களாக வாழ்ந்தது ஒட்டுமொத்த தேசத்திற்கும் அழிவாக அமைந்தது.COLTam 267.4
எருசலேம் நகரம் அழிக்கப்படும் போது, தம்முடைய எச் சரிப்பை யூதர்கள் நினைவுகூருவார்களென நினைத்தார். அப்படியே நடந்தது. எருசலேமுக்கு பேரழிவு நேரிட்டு, மக்கள் பசியாலும் சகலவகையான இக்கட்டுகளாலும் வாதிக்கப்பட்டபோது, கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள்; உவமையின் பொருளைப் புரிந்து கொண்டார்கள். தேவன் தங்களுக்கு அருளியிருந்த வெளிச்சத்தை உலகத்திற்குள் வீச அவர்கள் மறுத்ததால், தாங்களே தங்கள் மேல் பாடுகளை வருவித்துக் கொண்டார்கள்.COLTam 268.1