Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    38—இறுதி எச்சரிக்கை!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 603—612)

    “இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” (வெளி. 18:1,2,4) என்று கூறினான். (1)GCTam 713.1

    வெளி. 14:8-ல் வரும் இரண்டாம் தூதன் அறிவித்தபடி மகா பாபிலோன் விழும் என்கிற அறிவிப்பு எதிர்காலத்தில் மறுபடியும் கொடுக்கப்படும் என்பதையே வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. அதனோடு சேர்த்து முதல் தூது கொடுக்கப்பட்ட வருடமாகிய கி.பி.1844-குப்பிறகு பாபிலோனைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளுக்குள் மேலும் அக்கிரமங்கள் பெருகிவிட்டன என்பதுவும் சுட்டிக்காட்டப்படுகிறது. உலகத்தில் உள்ள ஆன்மீக உண்மைகள் ஒவ்வொன்றையும் புறக்கணிக்கப் புறக்கணிக்க, அவர்களது மனம் இருளடைகிறது. அவர்களது இருதயம் கடினப்படுகிறது. இறுதியில் அவர்கள் கடினமான அவிசுவாசத்திற்குள் சிக்குண்டுபோகிறார்கள். தேவன் கொடுக்கிற எச்சரிப்பையும் மதிக்காமல் தொடர்ந்து பத்துப் பிரமாணங்களில் ஒன்றைக் காலின்கீழிட்டு மிதிக்கிறவர்கள், இறுதியில் அந்தப் பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களையும் உபத்திரவப்படுத்தத் தொடங்குவார்கள். இப்படியாகக் கிறிஸ்துவின் பிரமாணத்தையும் அவருக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களையும் அருவருப்பதின்மூலம் கிறிஸ்து ஒரு பொருட்டல்ல என்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பிசாசுகளின் பொய்யான மதக் கோட்பாடுகள் சபைகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதுதான். அப்படி ஏற்றுக்கொள்ளப்படும்போது, பாவ இருதயத்தின் மேலிருந்த கட்டுப்பாடுகள் விலகிப்போய்விடுகின்றன. பிறகு மதம் என்கிற போர்வையில் எந்த மோசமான செயலையும் தயங்காது செய்யும் நிலைக்கு மனிதன் போய்விடுகிறான். ஆவிகளின் சக்தியினால் அற்புதங்கள் செய்யலாம் என்கிற ஆசையில், கிறிஸ்தவர்கள் பிசாசுகளோடு தொடர்புகொள்ளுகிறார்கள். இவ்வாறாக சபைகளுக்குள்ளே பிசாசுகளின் செல்வாக்கு நுழைந்துவிடுகிறது! (2)GCTam 713.2

    பாபிலோனைக் குறித்து வெளி. 18:5-ல் உள்ள தீர்க்கதரிசனம் “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்” என்று கூறுகிறது. ஆகவே இந்த பாபிலோனின் பாவப்பாத்திரம் நிரம்பிவிட்டது என்பதும் அதனால் அவளுடைய அழிவு சீக்கிரமே வரக் காத்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் சிலபேர் இன்னமும் அங்கே இருக்கிறார்கள். தேவனின் கடுமையான தீர்ப்புகள் அவள் மேல் வருவதற்குமுன், இந்த விசுவாசப்பிள்ளைகளை வெளியே அழைப்பதற்காகவே தேவன் ஒரு இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த இயக்கமே, வானிலிருந்து பெரும் மகிமையோடு இறங்கிவரும் தேவதூதன் என்று வெளி. 18-ல் உருவகப்படுத்தப்படுகிறது. இந்த தேவதூதன் மகா பலத்த சத்தத்தோடு பாபிலோனின் பாவங்களை அறிவிக்கிறான். அதனோடு சேர்த்து, என் ஜனங்களே! அவளை விட்டு வெளியே வாருங்கள் என்கிற அழைப்பையும் கொடுக்கிறான். இந்த தூதனின் அழைப்பும் வெளி. 14:9-11-ல் கூறப்படும் மூன்றாம் தூதனின் செய்தியும் சேர்ந்து அறிவிக்கப்படும்போது, அதுவே இவ்வுலகில் வாழும் ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் கடைசி எச்சரிப்பாக ஆகிறது! (3)GCTam 714.1

    ஒரு அதி பயங்கரமான இக்கட்டை நோக்கி இவ்வுலகம் போய்க்கொண்டிருக்கிறது. அது என்ன இக்கட்டு? ஒருபக்கம் தேவனின் நியாயப்பிரமாணங்களுக்கு எதிராக யுத்தம்செய்யும்படி உலக சக்திகள் ஒன்றுபட்டு வந்துகொண்டிருக்கின்றன. ஒன்றுபட்டு எளியவர் வலியவர், பணக்காரர்—ஏழை, ஆண்டான்—அடிமை என்கிற வித்தியாசமேதுமின்றி, அனைவரும் சபையின் பாரம்பரியத்திற்குக் கீழ்ப்படிந்து போலியான ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றப்போகின் றன(வெளி. 13:16). இந்த சட்டத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கிற அனைவருக்கும் முதலில் சிறைத்தண்டனை வழங்கப்படும். அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படிய மறுத்தால், அப்போது மரணதண்டனை விதிக்கப்படும் என்கிற நிலை இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபக்கம் தேவன் தாம் நியமித்த ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டும் என்று கடுமையாக எதிர்பார்க்கிறார். இக்கட்டளையை மீறி நடப்போருக்கு தேவனது கோபாக்கினை காத்துநிற்கிறது. இவ்வாறாக உலகத்தால் அனைவரும் இருபுறமும் நெருக்கப்படுவார்கள் என்பதே இவ்வுலகம் எதிர்கொள்ளக் காத்திருக்கும் இக்கட்டு. (4)GCTam 714.2

    தேவன் ஏற்படுத்தின ஓய்வுநாளா, மனிதன் ஏற்படுத்தின ஓய்வுநாளா என்கிற கேள்வி ஒவ்வொரு மனிதனுக்கும் முன்பாகத் தெளிவாக வைக்கப்படுகிறது. தேவன் ஏற்படுத்தின கட்டளையை மீறி மனிதர்கள் ஏற்படுத்தின கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவன்மேல் ஒரு முத்திரை வைக்கப்படுகிறது. இது அவன் தேவனது அதிகாரத்தைவிட, மனிதர்களது அதிகாரத்தையே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதற்கு அடையாளம் ஆகும். இவனுக்குப் பரலோகத்தின் எச்சரிப்பு: “அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்” (வெளி. 14:9,10) என்பதே. (5)GCTam 715.1

    மேற்படி உண்மைகள் ஒவ்வொரு மனிதனுடைய மனதிற்கும் மனச்சாட்சிக்கும் முன்பாகத் தெளிவாக வைக்கப்படும். தெள்ளத்தெளிவாக வைக்கப்பட்ட உண்மைகளை நிராகரிக்கிறவன்மேல் மட்டுமே தேவனுடைய கோபாக்கினை வரவிருக்கிறது. இந்தக் கடைசி காலத்திற்கே உரிய மேற்படி உண்மைகளைத் தெரிந்துகொள்ள இதுவரையும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் அநேகராக இன்னும் இருக்கிறார்கள். நான்காவது பிரமாணத்தின் முக்கியத்துவம் அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கிச் சொல்லப்படவில்லை. மனித இருதயத்தின் நினைவுகளை வாசிக்கிறவராயும் உள்நோக்கங்களை ஆராய்ந்தறிகிறவராயும் இருப்பவர் தேவன். ஆகவே உண்மை எது என்பதை அறிந்துகொள்ள வாஞ்சிக்கிற எவனும், உண்மையை அறியாமல் இருந்து, அதனால் மேற்படிச் சோதனையில் ஏமாந்துபோகும்படி அவர் விடவேமாட்டார். தங்களது அறியாமையினாலேதான் ஜனங்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட போலி ஓய்வுநாள் சட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற நிலைக்கு தேவன் விடமாட்டார். ஒவ்வொருவரும் ஓய்வுநாளைக்குறித்த காரியம் என்ன என்பதை நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பும் வசதியும் கொடுக்கப்பட்ட பின்னரே தங்களுக்கு வேண்டியதைத் தெரிந்துகொள்ளும்படி விடப்படுவர். (6)GCTam 715.2

    நான்காம் பிரமாணத்திற்குச் சவால் விடும்படியாக சட்டம் போடப்பட்டிருப்பதால், இந்த ஓய்வுநாள் பிரமாணமே தேவன்மேல் ஒருவனுக்கு விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதிக்கிற சோதனைப் பிரமாணமாக இருக்கும். இந்தச் சோதனையின் அடிப்டையில்தான், தேவன் பக்கம் நிற்கிறவர்கள் யார், தேவன் பக்கம் நில்லாதவர்கள் யார் என்பது பிரித்தறியப்படும். நான்காம் பிரமாணத்திற்கு விரோதமாகச் சட்டம் இயற்றியிருக்கும் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து ஒருவன் போலியான ஓய்வுநாளைக் கைக்கொள்வானானால், அச்செயலினால் அவன் தேவனுக்கு எதிரியின் பக்கம் நிற்பதாக இருக்கும். அப்படியின்றி, அவன் தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, மெய்யான ஓய்வுநாளைக் கைக்கொள்வானானால், அது தன்னைப் படைத்த தேவன் பக்கம் நிற்பதாக இருக்கும். உலக அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் ஒரு சாரார் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொண்டவர்களாகிறார்கள். மற்றும் ஒரு சாரார் தெய்வீக அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பதால், தேவனின் முத்திரையைப் பெற்றுக்கொண்டவர்களாகிறார்கள். (7)GCTam 716.1

    மூன்றாம் தூதனின் தூதில் உள்ள பயங்கரமான அபாய எச்சரிப்பை ஜனங்களுக்குக் கொடுத்தாலும், இதுவரை அதை நம்பியவர்கள் இல்லை. அபாய எச்சரிப்பைக் கொடுத்தவர்களுக்கு பயங்கரவாதிகள் என்கிற பட்டம் கிடைத்ததுதான் மிச்சம். மதச் சகிப்புத்தன்மை அமெரிக்க நாட்டில் வேரூன்றும். மேலும் தேவனின் பிரமாணங்களைக் கைக்கொள்ளுகிறவர்களை உபத்திரவப்படுத்தும்படி அரசாங்கமும்கிறிஸ்தவமத அமைப்புகளும் ஒன்றுபடும் என்கிற எதிர்பார்ப்புகள் ஆதாரமற்றவை பைத்தியக்காரத்தனமானவை என்று ஒதுக்கப்படுகின்றன. இந்த நாடு இதுவரை இருந்ததுபோல, இனியும் எப்போதுமே மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடாகவே இருக்குமேயன்றி மற்றபடி அல்ல என்றே நம்பப்படுகிறது. மூன்றாம் தூதனின் எச்சரிப்பு இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் ஞாயிறு ஆசரிப்பைச் சட்டரீதியாக அமல்படுத்தும் பேச்சு பரவலாகப் பேசப்பட்டு விவாதிக்கப்படும்போது, இப்படி வரும் என்று நம்பவோ, எதிர்பார்க்கவோ முடியாத அந்தச் சட்டம், நிறைவேறி வந்துகொண்டிருப்பதைக் காணும்போது, இதுவரை ஏற்பட்டிராத பெரிய விளைவுகளை மூன்றாம் தூதனின் தூது ஏற்படுத்தும். (8)GCTam 716.2

    ஒவ்வொரு தலைமுறையிலும் உலகத்திலும் சபையிலும் உள்ள பாவங்களைக் கண்டிக்கும்படி தமது ஊழியக்காரர்களை அனுப்புகிறவராக தேவன் இருக்கிறார். ஆனால் தங்களிடம் மென்மையான வார்த்தைகள் பேசப்படுவதைத்தான் ஜனங்கள் விரும்புகிறார்களேயன்றி, சுத்தமான— உறுத்தலான—உண்மைகளைச் சொல்லிக் கண்டிக்கப்படுவதை விரும்புவது இல்லை. அநேக சமய சீர்திருத்தவாதிகள்கூட தங்களுடைய ஊழியத்தைத் தொடங்கும்போது, தங்களது சபையிலும் தேசத்திலும் காணப்படும் பாவங்களைக்குறித்து நேரடியாகக் கண்டித்துப்பேசுவதை விரும்பியதில்லை. ஒரு நேர்மையான கிறிஸ்தவ வாழ்க்கையைத் தாங்களே வாழ்ந்துகாட்டுவதன்மூலம் மட்டுமே ஜனங்களை வேதாகமம் காட்டும் பரிசுத்தமான பாதைக்குத் திருப்பிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அது அப்படி நடக்கக்கூடிய காரியமல்ல. ஆகவே தேவனின் ஆவி எலியாவின்மேல் வந்திறங்கியதுபோல இவர்கள் மேலும் வந்திறங்கியது. தேவனின் ஆவி எலியாவை அசைத்ததால் அவன் அக்கிரமம் செய்த அரசனையும் முறைதவறி நடக்கும் ஜனங்களையும் கண்டித்து, அவர்களது பாவங்களை உணர்த்திக்காட்டினான். அதைப்போலவே இவர்களும் தங்கள் விருப்பத்தையும் மீறி, வேதாகமத்தின் தெளிவான வசனங்களை எடுத்துப்பேசி, ஜனங்களின் பாவங்களைக் கண்டித்தார்கள். ஆத்துமாக்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் அதிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கான சத்தியத்தையும் மிகுந்த வாஞ்சையோடு எடுத்துரைக்கும்படி ஆவியானவரால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், தேவன் தங்களுக்குக் கொடுத்த வார்த்தைகளை அப்படியே பேசினார்கள். அவ்வாறாக அவர்கள் கொடுத்த எச்சரிப்பை ஜனங்கள் கவனித்துக் கேட்கிறவர்களாக இருந்தார்கள். (9)GCTam 716.3

    இதைப்போலவேதான் மூன்றாம் தூதனின் எச்சரிப்பும் கொடுக்கப்படும். இந்த எச்சரிப்பின் தூது, மகா வல்லமையாகக் கொடுக்கப்படவேண்டிய காலம் ஒன்று சீக்கிரமே வரவிருக்கிறது. அப்போது தம்மை தேவனுடைய ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுக்கும் எளிமையான மனிதர்களை தேவன் எடுத்துப் பயன்படுத்துவார். இந்த எளிமையான ஊழியக்காரர்கள் இந்த வல்லமையான ஊழியத்தைச் செய்வதற்கான தகுதியை எப்படிப் பெறுகிறார்கள்? பரிசுத்த ஆவியானவர் அவர்களை அபிஷேகம் செய்வதாலே இந்தத் தகுதியைப் பெறுகிறார்களேயன்றி, பெரும் கல்விநிலையங்களில் சேர்ந்து தேர்ச்சி பெற்றதால் அல்ல. விசுவாசத்திலும் ஜெபத்திலும் தேர்ச்சிபெற்ற இவ்வூழியர்கள் தெய்வீக உற்சாகத்தோடு சென்று தேவன் தங்களுக்குக் கொடுத்த வார்த்தைகளை அறிவிப்பார்கள். அதன்மூலம் பாபிலோனின் பாவங்கள் வெட்டவெளிச்சமாக்கப்படும். சபையின் பாரம்பரியங்களை அரசின் துணையோடு கட்டாயப்படுத்தித் திணிப்பதால் வரவிருக்கும் பயங்கரமான விளைவுகளையும், ஆவிமார்க்கம் சபைகளில் நுழைந்துவிட்டிருப்பதையும், போப்புவின் செல்வாக்கு இரகசியமாக ஆனால் வேகமாக வளர்ந்துவருவதையும் இவ்வூழியர்கள் எடுத்து விளக்குவார்கள். ஆயிரமாயிரமானவர்கள் இதைக்கேட்டு, காரியம் இப்படித்தான் இருக்கிறதா என்று ஆராய்வார்கள். பரத்திலிருந்து கொடுக்கப்பட்ட சத்தியங்களைப் புறக்கணித்ததால் கிறிஸ்தவ சபைகள் பொய்யான சத்தியங்களை ஏற்றுக்கொண்டு, பாவத்திற்குள் விழுந்துகிடக்கின்றன என்கிற உண்மையையும், மேலும் தாங்கள் இருக்கும் கிறிஸ்தவ சபைகள் பாபிலோனாக மாறிவிட்டிருக்கின்றன என்கிற சாட்சியையும் கேட்டு ஜனங்கள் திகைத்து நிற்பார்கள். இந்த ஜனங்கள் தங்களது போதர்களிடம் சென்று காரியங்கள் இப்படியா இருக்கிறது என்று தீவிரமாக விசாரிப்பார்கள். அந்த போதகர்களோ பலவற்றை எடுத்துக்கூட்டிப்பேசி, மென்மையான வார்த்தைகளைச் சொல்லி, விழித்தெழுந்துவிட்ட அவர்களது மனச்சாட்சியை மீண்டும் தூங்கவைக்க முயலுவார்கள். ஆனால் பலர் மனித ஞானத்தைக்கொண்டு கொடுக்கப்படும் இந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, வேதாகமத்தைக்கொண்டு உங்கள் விளக்கங்களை நிரூபியுங்கள் என்று பிடிவாதமாக நிற்பார்கள். மிகவும் புகழ்பெற்று விளங்கும் அந்தப் போதகர்கள் தாங்கள் இதுவரை செலுத்தியிருந்த அதிகாரம் இப்போது செல்லுபடியாகவில்லை என்று கண்டு, அன்று இயேசுவின்மேல் பரிசேயர்கள் கோபப்பட்டதுபோல் கோப்படுவார்கள். கோபப்பட்டு அவர்கள் கேட்டுவந்திருக்கும் செய்தி சாத்தானிடமிருந்து வந்தது என்று கூறுவார்கள். அதுமட்டுமல்ல. அந்தச் செய்திகளை அறிவிக்கும் ஊழியர்களை உபத்திரவப்படுத்தும்படிக்கு பாவத்தில் திளைக்கும் இதர ஜனக்கூட்டத்தாரை ஏவிவிடுவார்கள். (10)GCTam 717.1

    மனிதன் ஆசரிக்கவேண்டிய ஓய்வுநாள் எது என்கிற விவரம் பெரிதாகும்போது, இதுவரை மறக்கப்பட்டிருந்த ஓய்வுநாள் கட்டளையின்மேல் ஜனங்களுடைய கவனமெல்லாம் திரும்பும். இது சாத்தானை மேலும் நன்கு உசுப்பிவிடும். சாத்தானுடைய ஜனங்கள் இதை எதிர்த்து நிற்பர். அதனையும் மீறி செய்தி வரவும் இது எதிராளியாகிய சாத்தானின் பிள்ளைகளை வெறிகொள்ளச்செய்யும். போதகர்கள் இந்த வெளிச்சத்தைத் தமது சபையின் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளாதபடி தடுப்பதற்காக, மனித வரம்பை மீறிய சக்தியோடு செயல்படுவர். இந்த மகா முக்கியமான கேள்வியைக் குறித்து எந்தவிதமான விவாதமும் நடைபெறாதபடி தடுக்கத் தம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்வர். இப்படித் தடுப்பதற்காகக் கிறிஸ்தவ சபைகள் அரசாங்கச் சட்டத்தின் துணையை நாடும். இந்தச் செயலில் கத்தோலிக்கர்களும் புரொட்டஸ்டாண்டுகளும் மிகுந்த ஒற்றுமையோடு செயல்படுவர். ஞாயிறு ஆசரிப்பை அமுல்படுத்தும் இயக்கம் மேலும் மேலும் அதிக வலிவும் தெளிவும் அடையும். அப்போது நான்காவது கட்டளையின்படி சனிக்கிழமையை ஆசரிப்போருக்கு எதிராகச் சட்டம் திருப்பப்படும். அவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். செல்வாக்கான பதவி, பணம் இன்னபிற வெகுமதிகள் மூலம் ஆசைவார்த்தைகள் காட்டி, ஒரு சிலர் தமது விசுவாசத்தைக் கைவிடுமாறு தூண்டப்படுவர். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் கூறும் ஒரே பதில்: நாங்கள் செய்யும் தவறு என்ன என்பதை தேவனுடைய வார்த்தையில் இருந்து நிரூபியுங்கள். ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதாக இருக்கும். இதேபோன்ற நிலையில் நிறுத்தப்படும்போது, அங்கே அவர்கள் சத்தியம் எது என்பதற்கு பலமான சாட்சி கொடுப்பார்கள். அதைக் கேட்பவர்களில் பலர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, தேவனின் பிரமாணங்கள் அனைத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்கத் தீர்மானிப்பார்கள். இப்படியாக சத்தியத்தையே அறிந்திராத ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியத்திற்குள்ளாக வழிநடத்தப்படுவார்கள். (11)GCTam 718.1

    மனச்சாட்சியின்படி, தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற செயல் பெருங்குற்றமாகக் கருதப்படும். இப்படிக் கருதும்படி அநேகர் சாத்தானால் கண் குருடாக்கப்படுவார்கள். ஆகவே சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் பிள்ளையைப் பெற்றோர்கள் அன்பில்லாமல் கடினமாக நடத்துவார்கள். பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நல்ல வேலைக்காரனை எஜமானும் எஜமானியும் இரக்கமின்றி கொடுமைப்படுத்துவார்கள். பாசம் நேசம் என்பதெல்லாம் இல்லாமல் போய்விடும். பெற்றோர்களால் சிறுபிள்ளைகள்கூட வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்படுவார்கள். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோத்தேயு 3:12) என்று பவுல் சொன்ன வார்த்தைகள் எழுத்துக்கெழுத்து நிறைவேறும். சத்தியத்திற்கு சாட்சிகொடுகிறவர்களாக இருந்து, ஞாயிறு ஓய்வுநாளைக் கனப்படுத்த மறுக்கிறவர்களில் சிலர் சிறையில் தள்ளப்படுவார்கள். சிலர் நாடு கடத்தப்படுவார்கள். சிலர் அடிமைகள் போல் நடத்தப்படுவார்கள். மனித ஞானத்தின்படி பார்க்கும்போது இப்படி எல்லாம் நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் மனிதனிடத்தில் உள்ள பாவத்தின் ஆவியை தேவனின் ஆவியானவர் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதுதான். ஆனால் இந்த தேவனின் ஆவியானவர் பாவமனிதனை விட்டுவிலகிவிடும் காலம் வரும். அப்போது தேவனுடைய பிரமாணங்களை வெறுக்கிற சாத்தானின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் மனிதர்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் நம்பவே முடியாத காரியங்களை மனிதர்கள் செய்வார்கள். ஏனென்றால் மனித இருதயத்தில் தேவனைப்பற்றி அன்போ, பயமோ முற்றிலுமாகவே இல்லையென்றால் அது மகா கொடூரமானதாக ஆகிவிடும்.(12)GCTam 719.1

    மூன்றாம் தூதனின் தூதை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளுபவர்களில் மிகப்பலர், சத்தியத்திற்கு முற்றும் கீழ்ப்படிந்து நடக்கும் பரிசுத்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். உபத்திரவங்கள் என்கிற புயல் வீச ஆரம்பிக்கும்போது அவர்கள் தங்களது நிலையை மாற்றிக்கொண்டு, எதிரியின் தரப்பில் சாய்ந்துவிடுவார்கள். ஏனென்றால் இவர்கள் உலகத்தின் போக்கிலேயே போய், உலகத்தாரிடம் உள்ள அதே ஆவியைத் தாங்களும் பெற்றுக்கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் சோதனைகள் வரும்போது சரியானது எது என்று பார்ப்பதைவிட, எளிதானது எதுவோ அதையே தேர்ந்துகொள்ளப் பழகியிருக்கிறவர்கள். இவர்கள் ஒரு காலத்தில் சத்தியத்தை அறிந்து அதில் திளைத்தவர்கள். அரிய திறமைகளும் அருமையாகப் பேசும் ஆற்றலும் உடையவர்கள். ஆனால் இப்போது தங்கள் சக்திகளையெல்லாம் ஆத்துமாக்களை ஏமாற்றவும், சத்தியத்தைவிட்டு வழிவிலக்கி நடத்தவும் செலவளிப்பார்கள். கொஞ்சம் முன்புதான் சத்தியத்தின் பிள்ளைகளுக்கு விசுவாச சகோதரர்களாக இருந்தவர்கள் இப்போது கடும் ஜென்ம விரோதிகளாக ஆகிவிடுவார்கள். பரிசுத்த ஓய்வுநாளை ஆசரிக்கும் பிள்ளைகள் தமது விசுவாசத்தைக் குறித்து விசாரிக்கப்படுவதற்காக நீதிமன்றங்களில் நிறுத்தப்படும்போது அவர்களுக்கு எதிராகக் குற்றம்சாட்டுவதற்கும் பொய்யான தகவல்களைத் தந்திரமாக உள்ளே நுழைத்து அதிகாரிகளை எதிராகத் தூண்டிவிடுவதற்கும் சாத்தானின் மிகச் சிறந்த கருவிகளாக இருப்பவர்கள் இவர்களே! (13)GCTam 720.1

    இந்த உபத்திரவகாலத்தில் தேவனது பிள்ளைகளின் விசுவாசம் வெகுவாகச் சோதிக்கப்படும். இவர்கள் தேவனையும் அவரது வார்த்தையையும் மட்டுமே நம்பிச்செயல்படுவார்கள். இந்த உலக மக்களை எச்சரிக்கவேண்டிய தங்களது வேலையை நேர்த்தியாய் செய்து முடித்துவிட்டார்கள். இவர்களது இருதயத்தை உலுக்கி, இந்த எச்சரிப்பின் தூதைக் கொடுக்கும்படி உந்தித்தள்ளியது தேவனின் ஆவிதான். தெய்வீக உற்சாகத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக, தெய்வீக உந்துதலினால் உந்தப்பட்டவர்களாக, தமது கடமைகளைச் செய்யும்படி இவர்கள் களத்தில் இறங்கினார்கள். இறங்கி, விளைவுகளைப்பற்றி யோசித்துத் தாமதம் செய்யாமல் தேவன் தங்களுக்குக் கொடுத்த எச்சரிப்பின் வார்த்தைகளை அப்படியே ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். இவர்கள் தங்களது உலக இன்பங்களையோ உலகின் புகழையோ உயிரையோகூடக் காத்துக்கொள்ளவேண்டும் என்று கருதாமல் ஊழியம் செய்த உத்தமர்கள். இருப்பினும் உலகத்தாரின் எதிர்ப்பும் வெறுப்பும் பெரும் புயலாகத் தங்கள்மீது வந்து தாக்கும்போது இவர்களில் சிலர் நிலைகுலைந்து மனம் மருகுகிறவர்களாக ஆகிவிடுவார்கள். அதோடு ஐயோ! நாங்கள் பேசிய வார்த்தைகளின் விளைவு இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் பேசாமலேயே இருந்திருப்போமே என்று மனம் மயங்குகிறவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால், தொல்லைகள் அவர்களை எங்கும் சுற்றிவளைத்திருக்கும். தனக்கு இடங்கொடுக்கும்படி சாத்தான் அவர்களைத் தாக்கும் தாக்கானது பெருந்தாக்குதலாக இருக்கும். தாங்கள் ஏற்றுக்கொண்ட ஊழியத்தை வெற்றிகரமாக முடிப்பது என்பது தங்களால் இயலாத காரியம் என்றும் அப்படி முடிக்காமலே தாங்கள் அடியோடு அழிந்துபோகப்போவது நிச்சயம் என்றுமே அவர்களுக்குத் தோன்றும். ஆரம்பத்தில் அவர்களை ஏவி இயக்கிய உற்சாகம் இப்போது தணிந்துபோயிருக்கும். இருப்பினும் இப்போது அவர்கள் பின்வாங்குவதற்கில்லை. ஆகவே தங்களது பரிதாப நிலையை உணர்ந்தவர்களாக எல்லாம் வல்லவரிடத்தில் ஓடி அடைக்கலம் கேட்பர். அப்போது அவர்கள் தாங்கள் பேசிய வார்த்தைகள் தங்களது வார்த்தைகள் அல்ல என்பதையும், எச்சரிப்புக் கொடுத்துப் பேசும்படி தங்களை ஏவிய அந்த தேவனுடைய வார்த்தைகளே என்பதையும் நினைவுகூருவார்கள். தேவன் சத்தியத்தை அவர்களது இருதயத்தில் வைத்துவிட்டார். அவர்கள் அதை அறிவிக்காமல் எப்படி இருக்கமுடியும்? (14)GCTam 720.2

    இதேபோன்ற சோதனைகளைத்தான் கடந்த காலங்களிலும் தேவனுடைய ஜனங்கள் அனுபவித்தார்கள். விக்லிப், ஹஸ், லுத்தர், திண்டேல், பாக்ஸ்டர், வெஸ்லி ஆகிய அனைவருமே மதக்கோட்பாடுகள் அனைத்தும் வேதாகமத்தைக்கொண்டு சோதித்துப் பார்க்கப்படவேண்டும் என்பதையும், வேதாகமத்திற்கு ஒத்துவராத கோட்பாடுகள் அனைத்தும் தூக்கியெறியப்படவேண்டும் என்பதையும் வற்புறுத்தியவர்கள். இவர்களுக்கு எதிராகப் பல உபத்திரவங்கள் தீராத ஆங்காரத்தோடு வந்து மோதின. ஆனாலும் அவர்கள் சத்தியத்தை அறிவிப்பதிலிருந்து ஓயவில்லை. கிறிஸ்தவ சபையின் வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் அந்தந்தக் காலத்தில் இருந்த தேவனின் பிள்ளைகளுடைய தேவைக்கு ஏற்றபடி, விசேஷமான சில சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்படி வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் ஒவ்வொன்றும் எதிர்ப்பையும் வெறுப்பையும் கடந்துதான் வந்திருக்கிறது. இந்த வெளிச்சத்தைக் கொண்டுவந்தவர்கள் ஒவ்வொருவரும் சோதிக்கப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும் தான் இருக்கின்றனர். இரட்சிப்பின் பாதையில் அபாயமான சூழ்நிலைகள் தோன்றும்போதெல்லாம், தேவன் ஜனங்களுக்கு விசேஷமான சத்திய வெளிச்சத்தைக் கொடுக்கிறார். இந்த சத்தியத்தை அறிவிக்கமாட்டேன் என்று யார் கூறக்கூடும்? அவர் தமது ஊழியர்களுக்குக் கட்டளையிடுகிறார். இந்த உலகத்திற்கு இரக்கத்தின் கடைசி அழைப்பினை கொடுக்கும்படி இப்படி தேவன் கட்டளையிடும் நிலையில், அவர்கள் தங்களது ஆத்துமாவை இழக்கத் தயாராக இருந்தால் ஒழிய அவர்கள் பேசாமல் இருக்க முடியாதே. இந்தத் தூதைச் சொன்னால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று கணக்குப்பார்க்கும் வேலை கிறிஸ்துவின் தூதர்களுக்கும் கிடையாதே. அவர்கள் வேலை, தனது கடமையைச் சரியாகச் செய்துமுடித்தபின் விளைவுகளை தேவனிடம் ஒப்புவித்துவிடவேண்டும் என்பதே. (15)GCTam 721.1

    மூன்றாம் தூதனின் எச்சரிப்புத் தூதை அறிவித்த தேவனின் ஊழியக்காரர்களுக்கு, உலகில் எழும்பும் எதிர்ப்பு வளர்ந்து மேலும் மேலும் கடுமையான எல்லைகளைக் காணும்போது, தேவனுடைய பிள்ளைகள் தாங்கள் செய்ததை எல்லாம் சரியாகத்தான் செய்தோமா என்று சந்தேகப்பட்டுக் குழம்பிப்போகின்றனர். ஏனென்றால் ஒருபுறம் தங்களது வரம்பு மீறிய செய்கையால், வேண்டாத வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டதுபோலத் தோன்றுகிறது. மறுபக்கம் தேவனுடைய வார்த்தையும் சரி, அவர்களுடைய மனச்சாட்சியும்சரி, அவர்கள் செய்தது சரியே என்று உணர்த்துகின்றன. ஆயினும் சோதனைகள் பெருகும்போது அவற்றைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியும் அவர்களுக்குக் கூடவே கொடுக்கப்படுகிறது. எதிரிக்கும் தேவனது பிள்ளைகளுக்கும் உள்ள இந்தப் போட்டி மேலும் மேலும் நெருக்கமாகவும் முனைப்பாகவும் செயல்படும்போது அதற்கு ஏற்றாற்போல அவர்களுடைய விசுவாசமும் தைரியமும் உயர்வடைந்துகொண்டே போகின்றன. முடிவாக அவர்கள் கொடுக்கும் சாட்சி என்னவாக இருக்குமென்றால் இந்த உலகத்தாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தேவனின் பிரமாணங்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு பகுதியை அவசியம் என்றும் மறு பகுதியை அவசியமில்லை என்றும் கூறிக் கண்ணாமூச்சி விளையாடும் வேலை எங்களுக்கு வேண்டாம். நாங்கள் சேவிக்கிற ஆண்டவர் எங்களைத் தப்புவிக்க வல்லவராக இருக்கிறார். ஏனென்றால் கிறிஸ்து ஏற்கனவே இவ்வுலகின் அந்தகார சக்திகளை ஜெயித்தவராக இருக்கிறார். ஏற்கனவே முறியடிக்கப்பட்ட இந்த உலக சக்திகளுக்கு நாங்கள் ஏன் பயப்படவேண்டும்? என்பதுதான். (16)GCTam 722.1

    வெவ்வேறு மாதிரியான உபத்திரவங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது இவ்வுலகத்தின் ஒரு அம்சம். சாத்தான் உயிரோடு இருக்கும்வரை இந்தச் சூழ்நிலை இருந்துகொண்டுதானிருக்கும். அந்தகாரச் சக்திகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்ளாமல், யாருமே தேவனுக்கு ஊழியம் செய்யமுடியாது. இப்படிப்பட்ட ஊழியர்களைக் கெட்டுப்போன தூதர்கள் மோதித் தாக்குகிறார்கள். காரணம், அந்த ஊழியக்காரன் தனது ஊழியத்தின்மூலம் தங்கள் கைகளில் மாட்டிக்கொண்ட மனித ஆத்துமாவைத் திரும்பவும் மீட்டுக்கொண்டு போய்விடுவானோ என்கிற அச்சமே. இந்தத் தாக்குதல் எப்படி வருமென்றால், கெட்டுப்போன மனிதர்கள், பரிசுத்தமான செயல்களின் உதாரணத்தைக் கண்டு, மனதிலே குத்தப்பட்டு அவன்மேல் வெறுப்படைவதால், இவர்கள் கெட்டுப்போன தேவதூதர்களோடு சேர்ந்து அந்த ஊழியக்காரனை தேவனின் பாதையிலிருந்து வழிவிலக்கும்படி பலவிதமான ஆசைகளைக் காட்டி இழுக்கப்பார்க்கிறார்கள். அவன்தானே விரும்பிவராமல், அவனது விருப்பத்திற்கு எதிராகக் கட்டாயப்படுத்தி இழுக்கப்பார்க்கிறார்கள்.(17)GCTam 722.2

    ஆனால், இயேசு பரலோகத்தில் உள்ள ஆசரிப்புக்கூடாரத்தில் மனிதர்களுக்குப் பரிந்துபேசிக்கொண்டிருக்கும்வரை, ஆளுகிறவர்கள் முதல் ஆளப்படுகிறவர்கள்வரை, அனைத்து ஜனங்களையுமே பரிசுத்த ஆவியானவர் கட்டுப்படுத்தி, தீமை மிதமிஞ்சிப் பெருகிவிடாமல் தடுத்துவருகிறார். இதேபோல் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கச் சட்டங்களுங்கூடக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பரிசுத்த ஆவியானவரின் கட்டுக்கு உட்பட்டே இயற்றப்படுகின்றன. இந்த அரசாங்கச் சட்டங்கள் மட்டும் இல்லையென்றால், இந்த உலகத்தின் நிலைமை இப்போது உள்ளதைவிட மிகவும் மோசமானதாக இருக்கும். நமது நாட்டின் ஆட்சிப் பதவியில் உள்ள பலர், சாத்தானின் ஏவலர்களாகவே இருக்கிறார்கள். என்றாலும் தேவனுடைய ஏவலர்களும் இருக்கவே செய்கிறார்கள். எதிரியானவன் தன்னுடைய ஆட்கள் மூலமாக தேவனுடைய வேலையைத் தடைசெய்யத் திட்டங்கள் போடுகிறான். ஆனால் உயர்பதவியில் உள்ளவர்களாயும் தேவனுக்குப் பயந்தவர்களாயும் உள்ள பிள்ளைகள் மூலமாகத் தேவதூதர்கள் செயல்பட்டு, அப்படிப்பட்ட திட்டங்களை முறியடிக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாக இருந்தாலும் தீமையின் வலிமையான ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துகிறார்கள். இப்படியாகச் சத்தியத்திற்கு எதிரானவர்கள் போடும் திட்டங்கள் பலவும் மடங்கடிக்கப்படுகின்றன. காரணம், மூன்றாம் தூதனும் வெளிப்படுத்தல் 18-ன் தூதனும் சேர்ந்து இறுதி எச்சரிப்பைக் கொடுக்கும்போது, அது உயர் பதவியிலுள்ள மேற்படி மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்களிலும் கொஞ்சம் பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, இக்கட்டுக்காலம் வரும்போது, தேவனுடைய ஜனங்களோடு வெளிப்படையாகச் சேர்ந்துகொள்ளுவார்கள். (18)GCTam 723.1

    மூன்றாம் தூதனோடு சேர்ந்து, எச்சரிக்கையின் அழைப்பைக் கொடுக்கும் தூதனின் மகிமையால் இந்த உலகமே பிரகாசமடைந்தது என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஆகவே இத்தூது உலகம் முழுவதும் வல்லமையாகக் கொடுக்கப்படும் என்பதையும் இங்கே காண்கிறோம். கி.பி. 1840-ல் எழும்பிய அட்வெந்து இயக்கம் தேவனின் வல்லமைக்கு ஒரு மகா மேன்மையான எடுத்துக்காட்டாகும். அப்போது முதலாம் தூதனின் தூது, உலகின் எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. 16 —ம் நூற்றாண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட புரொட்டஸ்டாண்டு சீர்திருத்த இயக்கத்திற்கு அடுத்தபடியான மிகப் பெரிய சமய எழுச்சியை இது தோற்றுவித்தது. ஆனால் இறுதி எச்சரிப்புக் கொடுக்கப்படும்போது உண்டாகும் சமய எழுச்சி, இவை எல்லாவற்றையும்விடப் பெரியதாக இருக்கும். (19)GCTam 723.2

    வெளி. 14—ன் மூன்றாம் தூதனும் வெளி 18 -ம் தூதனும் சேர்ந்து செய்யும் ஊழியம் பெந்தெகோஸ்தே நாளில் நடந்த ஊழியத்திற்கு இணையாக இருக்கும். இந்த உலகத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஆரம்பித்தபோது இந்த அற்புத விதையானது ஊறி, முளைவிட உதவும்படி பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் முன்மாரி என்னும் பெருமழையாகப் பொழியப்பட்டது. அதுபோலவே சுவிசேஷம் முடிக்கப்படும் காலத்தில், அறுவடையின் கதிர்கள் முதிர்ச்சியடைய உதவும்படி பின்மாரி என்னும் பெருமழை பொழியப்படும். இதையே “அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்” (ஓசியா 6:3) என்றும், - சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்” (யோவேல் 2:23) என்றும், “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” (அப். 2:17,21) என்றும் வேதாகமம் குறிப்பிடுகிறது. அப்போஸ்தலர்கள் காலத்தில் சுவிசேஷத்தின் உன்னத வேலை ஆரம்பித்தபோது வெளிப்படுத்தப்பட்ட தேவனின் வல்லமையைவிட அவ்வேலை முடியும்போது, வெளிப்படுத்தப்படப்போகிற தேவனின் வல்லமை அதிகமாக இருக்குமேயன்றிக் குறைவாக இருக்கப்போவதில்லை. சுவிசேஷத்தின் தொடக்கத்தில் முன்மாரியின் பொழிதலில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் மறுபடியுமாகச் சுவிசேஷத்தின் முடிவில் பின்மாரியின் பொழிதலில் நிறைவேறும். அப்போது: “ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப். 3:19,20) என்று பேதுரு எதிர்பார்த்துக் கூறிய இளைப்பாறுதலின் காலங்கள் வரும்.(20)GCTam 724.1

    தேவனுடைய ஊழியர்கள், தங்களை தேவனுக்கு ஒப்புவித்துக்கொடுத்த பரிசுத்த ஒப்புவிப்பினால் ஒளிவீசிப் பிரகாசிக்கும் முகங்களை உடையவர்களாக இருப்பார்கள். அப்படியே அவர்கள் எல்லா இடங்களுக்கும் விரைந்துசென்று, பரலோகத்திலிருந்து தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை அறிவிப்பார்கள். இவ்வாறு பூமி முழுவதிலுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது குரல்களை எழுப்பி எச்சரிப்பைக் கொடுப்பார்கள். அற்புதங்கள் நடக்கும். நோயாளிகள் குணமடைவார்கள். தேவஊழியர்கள் போகிற வருகிற இடங்களிளெல்லாம் அடையாளங்களும் அதிசயங்களும் நடக்கும். சாத்தானுங்கூட ஜனங்களை ஏமாற்றுகிறதற்காக வானிலிருந்து அக்கினியை இறக்கிக் காட்டுதல் போன்ற பல அற்புதங்களைச் செய்வான் (வெளி. 13:13). இப்படியாக தேவனுடைய காரியங்கள் சாத்தானுடைய காரியங்கள் ஆகிய இரண்டையுமே ஒப்புநோக்கியபின், பூமியிலே குடியிருக்கிற ஒவ்வொருவரும் தாங்கள் யார்பக்கம் சார்ந்து நிற்பது என்பதைத் தெரிந்துகொள்ளுவார்கள். (21)GCTam 725.1

    மேற்படி, கடைசிகாலத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பது வாதங்கள் செய்வது அல்ல. தேவாவியானவர் மனித இருதயங்களில் ஆழமாக உணர்த்திக் காட்டுவதாலேயே நடக்கும். ஏனென்றால், செய்யப்படவேண்டிய வாதங்கள் அனைத்தும் செய்து முடித்தாயிற்று. விதைக்கவேண்டிய விதைகளெல்லாம் விதைத்தாயிற்று. இப்போது அது வளரவேண்டும். கனிகொடுக்கவேண்டும். தேவ ஊழியர் களால் விநியோகிக்கப்பட்ட அச்சிட்ட தாள்கள் தங்களது வேலையைச் செவ்வனே செய்துமுடித்துவிட்டன. சத்தியத்தின் ஒளிக்கீற்றுகள் எல்லா இடங்களிலும் பரவிவிட்டன. உண்மை எது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. உண்மையை ஏற்றுக்கொண்ட தேவனின் பிள்ளைகளைக் கட்டியிருந்த எதுவுமே இப்போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. மற்ற எதையும்விட இப்போது சத்தியமே அவர்களுக்கு முக்கியம். சத்தியத்திற்கு எதிரான சக்திகள் ஒன்றுதிரண்டு இழுத்தாலும், எல்லாவற்றையும் மீறி, தேவன் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள். ஆனாலும் சத்தியம் எது என்று உணர்த்தப்பட்ட அநேகர், அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதபடியும் அதற்குக் கீழ்ப்படிய முடியாதபடியும், தடுத்துக்கொண்டிருக்கும் பிசாசுகளுக்கு இடம் கொடுத்துவிட்டார்கள். (22)GCTam 725.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents