தேவனுடைய ஊழியர் உலகத்தினின்று யாதொரு கனத்தையும் அல்லது மதிப்பையும் பெறுகிறதில்லை. ஸ்தேவான் கிறிஸ்துவை, சிலுவையிலறையுண்டவராகிய அவரையே பிரசங்கித்ததினிமித்தம் கல்லெரியுண்டான். புற ஜாதிகளுக்கு தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாயிருந்ததி னிமித்தம் பவுல் சிறையிலடைக்கப்பட்டு,அடியுண்டு. கல்லெறியுண்டு முடிவில் மரணாக்கினையடைந்தான். “தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமத்தமும்” யோவான் அப்போஸ்தலன் பத்மு தீவுக்கு அகற்றப்பட்டான். தேவ வல்லமையின் பலத்தில் சார்ந்துள்ள மானிட மன உறுதியைப் இத் திருஷ்டாந்தங்கள், தேவனுடைய வாக்குத்தத்தம், அவருடைய நிலையான பிரசன்னம், ஆதரிக்கும் கிருபை முதலியவற்றைக் குறித்து உலகத்திற்கு ஓர் சாட்சியாயிருக்கின்றன. LST 203.2
தேவனுடைய சத்துருக்களுக்கு பிற் காலத்தில் மகிமையான அழியாமை யுண்டென்கிற நம்பிக்கை கிஞ்சித்தேனும் கிடையாது. பெரிய படை தளகர்த்தன் ஜாதிகளை ஜெயிக்கிறான், பாதி உலகத்திலுள்ள சேனைகளை அசைக்கிறான்; ஆனால் அவன் ஏமாற்றமடைந்தும் தேசத்தினின் றகற்றப்பட்டும் சாகிறான். அகில முழுதும் ஆராய்ந்து பார்க்கும் வன்மையுடைய தத்துவஞானி, எங்கும் தேவ வல்லமையின் வெளிப்படுத்தல்களைத் தேடிப் பார்த்து அவைகளில் இருக்கிற ஒற்றுமையைக் குறித்து களிப்புற்ற போதிலும் அவனும் அவைகளை எல்லாம் உண்டாக்கின கரத்தை இந்த அத்யற்புதஅதிசயங்களில் அவன் காணத் தவறிவிடுகிறான். “கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.” சங். 49:20. ஆனால் விசுவாசமுள்ள தேவனுடைய வீரர்களோ எந்தப் பூலோக ஐசுவரியங்களைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதோர் சுதந்திரத்திற்கு சுதந்திரவாளிகளாயிருக்கிறார்கள். அது ஆன்மாவின் வாஞ்சைகளைத் திருப்தி செய்யக் கூடியதோர் சுதந்தரம்.உலகத்தால் அவர்கள் அறியப் படாமலும் ஏற்றுக்கொள்ளப் படாமலுமிருக்கலாம்; ஆனால் மேலே இருக்கும் புத்தகங்களில் அவர்கள் பரம வாசிகளாகப் பதியப்பட்டிருக்கிறார்கள், உயர்ந்த மகத்துவமும் நித்திய கன மகிமையும் அவர்களுடையதாகும்.---G.W. 18. LST 203.3