Go to full page →

தற்புகழ்ச்சிக்கு இடமில்லை!, ஆகஸ்டு 15 Mar 453

“அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என்றேன். - ஏசாயா 6:5. Mar 453.1

வேதாகமத்தின்படி பரிசுத்தமாகுதலை அனுபவிக்கிறவர்கள், தங்களிலே தாழ்மையின் ஆவியை வெளிப்படுத்துவார்கள். மோசேயைப்போல, பரிசுத்தத் தன்மையின் அச்சந்தரும் அந்த இராஜரிகத்தைப்பற்றிய தரிசனத்தைக் கண்டிருந்தவர்கள், அந்த எல்லையற்ற பரம்பொருளின் உன்னதமான நிறைவிற்கும், தூய்மைக்கும் எதிராக இருக்கும் தங்களது சொந்தத் தகுதியற்ற நிலையைக் காண்கிறார்கள். Mar 453.2

தானியேல் தீர்க்கதரிசி, உண்மையான பரிசுத்தமாகுதலிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவரது நீண்ட ஆயுட்காலம் முழுவதையும், தனது எஜமானுக்கான மேன்மையான சேவையினால் நிறைத்திருந்தார். பரலோகத்தினால், “பிரியமான புருஷனாகிய தானியேலே என்று அழைக்கப்பட்டவராக இருந்தார்” —(தானியேல் 10:11); எனினும், பரிசுத்தத்தையும் தூய்மையையும் உரிமைகொண்டாடுவதற்குப் பதிலாக, மேன்மையாக மதிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசி, தமது மக்களின் சார்பிலே தேவனுக்கு முன்பாக கெஞ்சிமன்றாடும்போது, இஸ்ரவேலின் பாவ மனிதர்களில் ஒருவராக, தம்மை அடையாளங்காட்டிக்கொண்டார். “நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உமது மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாக செலுத்துகிறோம்”;”நாங்கள் பாவம் செய்து, துன்மார்க்கமாய் நடந்தோம்”;”இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமான இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டேன்” —தானியேல் 9:18,15,20. Mar 453.3

சூரைக்காற்றினின்று வந்த ஆண்டவரின் குரலை, யோபு கேட்டபொழுது, “நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலிலுமிருந்து மனஸ்தாபப்படுகிறேன்’ (யோபு42:6) என்று குரல் எழுப்பினார். ஆண்டவரின் மகிமையை ஏசாயா கண்டபோது, சேராபீன்கள், “ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூப்பிட்டுச் சொன்னதைக் கேட்டபொழுது, “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன்” என்று கதறினார் (ஏசாயா 6:3,5). பவுலார் மூன்றாம் வானம்வரை எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டு, அதன் பின்னர், தன்னைக்குறித்து: “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான்” என்று கூறுகிறார் (2 கொரி. 12:2-4; எபேசியர் 3:8). யேசுவின் மார்பிலே சாய்ந்திருந்தவனாகிய-அவரது மகிமையைக் கண்டவனாகிய-அன்பின் சீடனாகிய-அப்போஸ்தலனாகிய யோவான், “நான் அவரைக் கண்டபோது, செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்” (வெளிப்படுத்தல் 1:17) என்கிறார். Mar 453.4

கல்வாரிச் சிலுவையின் நிழலிலே நடக்கிறவரிடத்திலே, பாவத்தினின்று விடுதலை பெற்றதற்காக தற்புகழ்ச்சியோடு உரிமைகோருதலும், சுயத்தை உயர்த்துதலும் இருக்க முடியாது. தங்களது பாவத்தினால் ஏற்பட்ட கடுந்துயரே தேவகுமாரனின் இதயத்தை உடைத்தது என்று அவர்கள் உணருவார்கள். இத்தகைய நினைவானது தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் நிலைக்கு வழிநடத்தும். இயேசுவிடம் நெருக்கமாக ஜீவியம் செய்பவர்கள் மானிட இனத்தின், பாவம் நிறைந்த- நலிவடைந்த நிலையை மிகவும் அற்பமாகக் கண்டறிவார்கள். சிலுவையில் அடிக்கப்பட்ட—உயிர்த்தெழுந்த மீட்பரின் புண்ணியங்களில் மாத்திரமே அவர்களது ஒரே நம்பிக்கை இருக்கிறது.⋆ Mar 454.1

வாக்குத்தத்த வசனம்: Mar 454.2

“இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.” - ஏசாயா 59:1. Mar 454.3