Go to full page →

புதிய எருசலேமிலே...! நமது வீட்டிலே! , டிசம்பர் 14 Mar 695

“நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.” - ஏசாயா 65:18. Mar 695.1

மகிமைப்படுத்தப்பட்ட புதிய பூமியின் மானகரமாகிய புதிய எருசலேம், “கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாய்...” ஏசாயா 62:3 விளங்கும். “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப்போலவும் இருக்கும்” - வெளி. 21:11 “இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் இராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்க்குள்ளே கொண்டுவருவார்கள்”; “நான் எருசலேமில் களிகூர்ந்து, என் ஜனத்தில் மகிழுவேன்”...என்று கர்த்தர் சொல்லுகிறார். Mar 695.2

“தேவனுடைய நகரத்தில் இராக்காலம் இராது.” இளைப்பாறுதலை விரும்புவோரும், தேவைப்படுவோரும் அங்கே இல்லை. தேவனுடைய சித்தத்தின்படிச்செய்து, அவரது நாமத்தைத் துதித்துக்கொண்டிருப்பதில் களைப்பே தோன்றாது. எப்பொழுதும், முடிவில்லாமல் அதிகாலையின் புத்துணர்ச்சியோடு காணப்படுவோம். “விளக்கும், சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்.” மதியான வேளையிலுள்ள சூரியபிரகாசத்தைவிட பன்மடங்கு மேலான பிரகாசம்-நம் சூரியனைப்போல உக்கிரமாகச்சுட்டெரிக்காத-சிறந்த பிரகாசம் காணப்படும். தேவனுடைய மகிமையும் ஆட்டுக்குட்டியானவருடைய மகிமையும், பரிசுத்த நகரத்தை மங்காத வெளிச்சத்தால் நிரப்பும். மாறாத பகற்காலத்தில், சூரியனற்ற மகிமையில் மீட்க்கப்பட்டோர் நடப்பார்கள். Mar 695.3

“அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியான வருமே அதற்கு ஆலயம்.” தேவனுடைய மக்கள், பிதாவோடும், குமாரனோடும், நேரடியாகத் தொடர்புகொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். “இப்போது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்.” இயற்கையிலும், மனிதனோடு உள்ள தேவனின் செயல்பாடுகளிலும், தேவசாயலை கண்ணாடியிலே காண்பதைப்போல, பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம்; ஆனால் அப்பொழுதோ, மங்கவைக்கும் எவ்விதத் திரையும் நம் நடுவில் இராமல், முகமுகமாக நாம் அவரைக் காண்போம். நாம் அவரது சமூகத்தில் நின்று, அவரது முகத்தின் மகிமைப் பிரகாசத்தை நோக்கிப்பார்ப்போம். Mar 695.4

அங்கே அறியப்பட்டிருக்கிறபடியே நாம் அறிந்துகொள்வோம். அங்கே, தேவன் ஆத்துமாவில் நாட்டியுள்ள அன்பு, இரக்கம் ஆகிய குணங்கள், உண்மையான-இனிமையான செயல்திறன் பெறும். பரிசுத்த ஜீவங்களோடுள்ள தூய தொடர்பு, பரிசுத்த தூதர்களோடும் யுகங்கள் நெடுகிலும் வாழ்ந்த உண்மையான மக்களோடும் ஒன்றிணைந்த சமூக வாழ்வு, “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்தோடும்” கட்டப்பட்ட பரிசுத்த ஐக்கியம், ஆகியவைகள் இனி நாம் பெற்றுக்கொள்ளவிருக்கும் அனைத்து அனுபவங்களிலும் சிலவாகும்.⋆ Mar 696.1

வாக்குத்தத்த வசனம்: Mar 696.2

“தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” - 2 பேதுரு 3:9. Mar 696.3