Go to full page →

நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கேற்ற ஓர் படித்தரம்!, மார்ச் 27 Mar 171

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” - எபேசியர் 6:11. Mar 171.1

தேவனுடைய ஊழியத்தில் நடைபெறும் ஒவ்வொரு எழுப்புதலிலும் தீமையின் பிரபு விழிப்படைந்தவனாக, மிகவும் தீவிரத்துடன் செயல்படுகிறான். கிறிஸ்துவிற்கும் அவரது பின்னடியார்களுக்கும் எதிராக இருக்கின்ற ஒரு இறுதிப் போராட்டத்தில், தன்னால் முடிகின்ற அளவிற்கு இப்பொழுது முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். வெகுசீக்கிரத்தில் அவனது கடைசி மாபெரும் வஞ்சகம் வெளிப்படவிருக்கிறது. அந்திக்கிறிஸ்து அவனது அற்புதமான செயல்களை நமக்கு முன்பாக நடத்திக்காட்டுவான். உண்மையும் பொய்யும் ஏறக்குறைய ஒன்றுபோலக் காணப்படுவதால், இரண்டிற்குமுரிய வேறுபாட்டைப் பிரித்துக் கண்டறிவது கடினம்; வேதவாக்கியங்களைக்கொண்டு மாத்திரமே வேறுபாட்டைக் கண்டறிய முடியும். ஒவ்வொரு கூற்றும், ஒவ்வொரு அற்புதமும் அவைகள் கொடுக்கும் சாட்சியின் மூலமாக, பரிசோதிக்கப்பட வேண்டும்... Mar 171.2

தங்களது உள்ளங்களை வேத சத்தியத்தால் உரமூட்டி, வலுப்பட்டுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே அந்த கடைசி மாபெரும் போராட்டதினூடாக நிலைத்து நிற்க முடியும். ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் பின்வரும் ஆராய்ச்சியைச் செய்கின்ற பரிட்சை வந்து சேரும். மனிதனுக்கு கீழ்படிவதைவிட நான் தேவனுக்குக் கீழ்படிவேனா? தீர்மானிக்கவேண்டிய வேளை இப்பொழுதே நெருங்கி வந்துவிட்டது. தேவனுடைய மாற்றமுடியாத — நிலையான வார்த்தை என்னும், கன்மலைமீது நமது பாதங்கள் ஊன்றப்பட்டு இருக்கிறதா? தேவனுடைய கற்பனைகளுக்கும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்திற்கும் பாதுகாப்பாக திடமாக நிற்பதற்கும் நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா?... Mar 171.3

வேதவாக்கியங்களினின்று எது சத்தியம் என்பதைக் கற்றறிந்து, பின்னர் அந்த வெளிச்சத்திலே நடந்து, தனது முன்மாதிரியை மற்றவர்களும் பின்பற்றத்தக்கதாக உற்சாகமூட்டுவதே, பகுத்தறிவுள்ள ஒவ்வொரு நபரும் செய்யவேண்டிய முதலாவதான-தலையாய கடமையாகும். வேதத்தைத் தீவிர முயற்சியோடு ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். வேதவாக்கியங்களை ஒன்றோடொன்றை ஒப்பிட்டு சிந்தனையை மதிப்பீடுசெய்ய வேண்டும். தேவனுக்கு முன்பாக நாம், நமக்காக உத்தரவு சொல்லவேண்டியிருப்பதால், நமக்கான கருத்துகளை நாம் தெய்வீக உதவியோடு அமைக்க வேண்டும்.... Mar 172.1

இயேசு தமது சீடர்களுக்கு, “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆபத்தான கட்டத்திலே, தேவனுடைய ஆவியானவர் நமது ஞாபகத்திற்குக் கொண்டுவரத்தக்கதாக, கிறிஸ்துவின் போதனைகள் முன்னரே நமது மனதில் சேமித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும்... Mar 172.2

சோதனை நேரம் வரும்பொழுது, தேவனுடைய வார்த்தையை தங்களது வாழ்விற்கான சட்டமாக வைத்திருந்தவர்கள் இன்னார் என்பது வெளிப்படும்...உபத்திரவம் கிளரிவிடப்படும்; அப்பொழுது, அரைமனதோடு இருப்பவர்களும் மாயக்காரர்களும் தடுமாறி, விசுவாசத்தை விட்டு விடுவார்கள்; ஆனால், உண்மையான கிறிஸ்தவன் கன்மலையைப்போல் திடமாக நிற்பான். செழிப்பான நாட்களைக் காட்டிலும், அவனது விசுவாசம் வலுவானதாகவும், அவனது நம்பிக்கை பிரகாசமானதாகவும் இருக்கும். Mar 172.3

வாக்குத்தத்த வசனம்: Mar 172.4

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை... நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.” - யோசுவா 1:5. Mar 172.5