Go to full page →

அத்தியாயம் 9 - கிறிஸ்துவின் சிலுவை மரணம் GCt 23

சிலுவையிலறையப்படுவதற்காக தேவ குமாரன் மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரட்சகரை அவர்கள் நடத்திச் சென்றார்கள். வாரினால் அடிக்கப்பட்டதினால் பல வேதனைகளையும் பாடுகளையும் சகித்திருந்த இயேசு, மிகவும் பெலவீனமாகியிருந்தார். அச்சமயத்தில், அவரை விரைவிலேயே அறைய இருந்த சிலுவையை, அவர் மீது சுமத்தினார்கள். அப்பாரத்தினிமித்தமாக அவர் மூன்று முறை மயங்கிவிழுந்தார். ஆகையால், அவரை பின்பற்றினவனும் நம்பினவனுமாகிய ஒருவனை பிடித்து, சிலுவையை அவன் மீது சுமத்தி, மரண ஸ்தலம் வரை கொண்டு போனார்கள். தேவதூதர்கள் புடைசூழ்ந்து இருந்தார்கள். அவருடைய சீடர்கள் வேதனையோடும், கண்ணீரோடும் கல்வாரியின் அருகே வந்தார்கள். பண்டிகைக்காக, இயேசு, எருசலேமுக்கு வந்த நாளை நினைவுக்கூர்ந்தார்கள். அன்று, திரளான ஜனங்கள் இயேசு வருவதை அறிந்து, தங்கள் வஸ்திரங்களை சாலையில் விரித்து, குருந்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, புறப்பட்டு, “ஓசன்னா” என ஆர்ப்பரித்த காட்சிகளை சீடர்கள் நினைவு படுத்தி பார்த்தார்கள். இப்பொழுதோ முற்றிலும் மாறுபட்ட காட்சி!! அவர்களுடைய எதிர்பார்ப்புகள் வீணாகிப்போயிற்று. இப்பொழுது, அவர்கள் இயேசுவை குதூகலமாக பின்பற்றி வரவில்லை. மாறாக, வேதனையும் பயமும் நிறைந்த இதயங்களோடும், பாடுகளை அனுபவித்து, அவமானங்களைச் சுமந்து, இன்னும் சற்று நேரத்தில் மரிக்கவிருந்த இயேசுவை பின்பற்றி வந்திருந்தார்கள். GCt 23.4

இயேசுவின் தாயும் அங்கிருந்தார். பாசமான தாய் மாத்திரமே உணரக்கூடிய வேதனை அவளுடைய இருதயத்தை உருவக்குத்தியிருந்தது. சீடர்களின் எண்ணங்களோடு சேர்ந்து, தானும் இயேசு ஏதாவது அற்புதம் செய்து தப்பிவிடமாட்டாரா என ஏங்கினாள். சிலுவை மரணபரியந்தமும் தனது குமாரன் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டார் என்பதை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் சகல அயத்தங்களும் செய்யப்பட்டு, இயேசுவை சிலுவையில் கிடத்தினார்கள். சுத்தியல்களும் ஆணிகளும் கொண்டுவரப்பட்டன சீடர்களின் இதயங்கள் ஒடிந்து போயின. அவருடைய கரங்களை விரித்து ஆணிகளை கடாவும் முன்னே, இக்காட்சியை இயேசுவின் தாய் பார்க்கலாகது என்பதினால், சீடர்கள் அத்தாயை இடமாற்றினார்கள். சிலுவையில் அடித்தார்கள். இயேசு முறுமுறுக்கவில்லை. ஆனால் வலியால் முனக ஆரம்பித்தார். அவர் வாடிய முகத்தின் நெற்றியில் வியர்வை துளிகள் துளிர்த்தன. தேவகுமாரன் அனுபவித்துக் கொண்டிருந்த வேதனையால் மகிழ்ந்திருந்த சாத்தான், அவருடைய மரணத்தின் மூலமாக தனக்கு கிடைக்கவிருக்கும் தோல்வியை கண்டு பயந்தான். GCt 24.1

இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு, சிலுவையை உயர்த்தி, பூமியில் ஆயத்தப்படுத்தப்படிருந்த குழியில் அதனை மிக வேகமாக இறங்கினார்கள். இச்செயலால் இயேசுவின் மாமிசம் பல இடங்களில் கிழிக்கப்பட்டு, வேதனையின் உச்சத்திற்கு அவர் சென்றார். அவருடைய மரணத்தை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அவருடனே இரண்டு கள்ளர்களையும், இரு பக்கங்களில், சிலுவையி லறைந்தார்கள். அக்கள்ளர்கள் தப்பிக்கப் போராடினார்கள். அவர்களை மேற்கொண்டுதான் அவர்களை சிலுவையிலறைந்தார்கள். இயேசுவோ சாந்தமாக தம்மை ஒப்புக்கொடுத்தார். அக்கள்ளர்கள் தங்களை தண்டித்தவர்களின் மீது சாபங்களை உதிர்த்த வேளையில், இயேசு பாரத்தோடு அவர்களுக்காக, “பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார். அவருடைய சரீர வேதனைகளை மட்டும் இயேசு சகித்திருக்கவில்லை இவ்வுலகின் பாவ பாரத்தையும் அவர் தாங்கி கொண்டிருந்தார். GCt 24.2

இயேசு சிலுவையில் தொங்கின வேளையில் ஒருவன் அவரை கடந்து சென்றான். அவன் அவரைப் பார்த்து, “தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவயிலிருந்து இறங்கி வா” என எளனம் செய்தான். “நீர் தேவனுடைய குமாரனானால் . . . ” என்கிற இதே வார்த்தைகளை சாத்தானும் வனாந்தரத்தில் சொல்லியிருந்தான். அங்கு கூடியிருந்த பிரதான ஆசாரியர்களும், வேதபாரகரும் அவரை நோக்கி, “மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை” என்று கூறினார்கள். “நாம் கண்டு விசுவாசிக்கதக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கட்டும்” என பரியாசம் செய்தார்கள். அங்கு குழுமியிருந்த தூதர்கள் மீண்டும் அவரை விடுவிக்க ஆசித்தார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி கிட்டவில்லை. இயேசுவின் வேலையின் நோக்கம் ஏறக்குறைய நிறைவேறியாகி விட்டது. சிலுவையின் மீது வேதனையோடு தொங்கிய சமயத்திலும், இயேசு, தமது தாயை மறந்துவிடவில்லை. இயேசுவின் துயர்க்காட்சிகளிலிருந்து அந்த தாயால் விலகியிருக்க இயலவில்லை. துக்கம் நிறைந்த இதயத்தோடு நின்று கொண்டிருந்த தாயையும், அருகில் நின்று கொண்டிருந்த அன்பான சீடனாகிய யோவானையும் கண்டு, “ஸ்திரியே, அதோ, உன் மகன்” என்றும், “அதோ, உன் தாய்” என்றும் கூறினார். அவ்வேளையிலிருந்தே, யோவான் இயேசுவின் தாயை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். GCt 25.1

வேதனையில் தவித்த இயேசு தாகமாயிருந்தார் அவ்வேளையிலும், அவருடைய நிந்தைகளை பெருகப்பண்ணும் விதமாக, அவருக்கு கசப்புக்கலந்த காடியை குடிக்கக்கொடுத்தார்கள். தூதர்கள் இவையெல்லாம் கண்ட பின்பு, மனம் நொறுங்கி, இதற்குமேல் பார்க்க இயலாமல் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டார்கள். இக்கோரக்காட்சியைக் காண கதிரவனே மறுத்துவிட்டது. அக்கொலைபாதகர்களின் இதயங்கள் திகிலடைந்து போகும் வண்ணமாக, இயேசு உரத்த சத்ததில் “முடிந்தது” என்று சொல்லி ஜீவனை விட்டார். அச்சமயத்திலே, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாக கிழிந்தது, பூமி அதிர்ந்தது, பாறைகள் பிளந்தன, பூமியை அந்தகாரம் சூழ்ந்தது. இயேசு மரித்தபோது, சீடர்களின் நம்பிக்கையும் துடைத்தெடுக்கப் படுவதைப் போல இருந்தது. இயேசுவை பின்பற்றிய அநேகர் அக்கோர காட்சியைக் கண்டு, வருத்தம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். GCt 25.2

மீட்பின் திட்டத்தின் அஸ்திபாரம் மிகவும் அழுத்தமாக இடப்பட்டிருந்ததை உணர்ந்த சாத்தான், இம்முறை குதூகலிக்கவில்லை. மாறாக, இயேசுவின் மரணத்தின் மூலமாக தனது மரணமும் அழிவும் உறுதியானதை அவன் உணர்ந்தான். தான் முழுமையாக சுதந்தரித்துக்காள்ள முடியும் என்று எண்ணிய சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் இயேசுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் கவனித்தான். உடனே, அவனுடைய தூதர்களோடு ஆலோசனை பண்ணினான். தேவகுமாரனை எதிர்த்து எதையும் சாதிக்காத நிலையில், இன்னமும் அதிக வலிமையோடும், யுக்திகளோடும், அவருடைய பிள்ளைகளிடத்தில் கவனத்தை திருப்ப முடிவு செய்தார்கள். இயேசுவினால் சுதந்திரிக்கப்பட்ட இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்க, தடைகளை எழுப்ப தீர்மானித்தார்கள். இப்படி செய்வதன் மூலம், தொடர்ந்து தேவனுடைய அரசாங்கத்துக்கு விரோதமாக செயல்பட முடியும். அதேசமயம், இயேசுவிடமிருந்து அநேகரை தன் வசப்படுத்தியதாகவும் திருப்தி கொள்ளமுடியும். இறுதியில், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களின் பாவங்கள் மீண்டும் சாத்தான் மீது சுமத்தப்படும். ஆகிலும், மீட்பை பெற விருப்பமில்லதவர்களின் பாவங்களை அவர்களே சுமந்தாக வேண்டும் என்பதில் சற்று களிகூர்ந்தான். GCt 25.3

இயேசுவின் வாழ்க்கை உலக கம்பீரியமற்று, மிதமிஞ்சிய காட்சிகளற்று இருந்தது. உலக கௌரவத்தையே எதிர்பார்த்திருந்த தலைவர்களுக்கு நரதிரான குணத்தை இயேசுவின் தாழ்மையான வாழ்க்கை எடுத்துக்காட்டியது. அவருடைய கட்டுப்பாடான, பரிசுத்தமான ஜீவியம் அவர்களுடைய பாவங்களை சுட்டிக் காட்டுகிறதாக அமைந்தது. எனவே, அவருடைய தாழ்மையும், சுத்தத்தையும் அவர்கள் நிந்தித்தார்கள். ஆகிலும், இப்பூமியில் அவரை இகழ்ந்த அனைவரும், பிதாவின் மகாமகிமையோடும், பரலோகத்தின் பிரகாசத்தோடும் இயேசு வெளிப்படும் காட்சியை ஒரு நாள் நிச்சயமாக காண்பார்கள். அவருடைய இரத்தப்பழியை தங்கள் மேலும் தங்களுடைய பிள்ளைகள் மேலும் ஏற்றுக் கொண்ட கூட்டத்தினர் யாவரும், அவரை மகிமையின் ராஜாவாக காண்பார்கள். பரலோகமே கண்டு அதிசயித்த முகத்தை தாக்கி சேதப்படுத்திய யாவரும் மீண்டும் நண்பகல் சூரியனைப் போல பிரகாசிக்கும் அதே முகத்தைக் கண்டு, நிற்க இயலாமல் ஓடி மறைத்துக்கொள்வார்கள். இயேசு, சிலுவை மரணத்தின் சின்னங்களை ஏந்திய கரங்களை நீட்டுவார், அச்சின்னங்களை அவர் நித்தியமாக சுமப்பார். ஒவ்வொரு ஆணியின் தழும்பும், மானிடனின் ஒப்பற்ற மீட்பைக் குறித்தும், அதனை கிரயத்துக்கக் கொண்ட விலையைக் குறித்தும் பேசும். அவருடைய விலாவில் ஈட்டியை பாய்த்த மனிதர்கள் அத்தழும்பைக் கண்டு வியாகுலப் படுவார்கள். அவருடைய தலையின் மேல் வைக்கப்பட்டிருந்த “இவன் யூதருடைய ராஜா” என்ற பலகையைக் கண்டு எரிச்சலடைந்த நபர்கள் அவரை, ராஜாவின் மகிமையோடு காண்பார்கள். “நீ யூதரின் ராஜாவானால் உன்னை இரட்சித்துக்கொள்” என்று ஏளனம் செய்த மனிதர்கள் அவரை ராஜா கம்பீரத்திலும், அதிகாரத்திலும் காண்பார்கள். அச்சமயத்திலே யாதொரு சாட்சியத்தையும் எதிர்பாராமல், அவருடைய மகிமையினால் ஈர்க்கப்பட்டு. ‘கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று அங்கீகரிக்க தூண்டப்படுவர். GCt 26.1

ஜீவனை விடும் நேரத்தில் இயேசு உரக்கச் சொன்ன ‘முடிந்தது’ என்கிற சத்தமும், பூமியை சூழ்ந்த அந்தகாரமும், பிளந்து நின்ற பாறைகளும், பூமியின் அதிர்வும், அவருடைய கொலைகாரர்களை நடுங்க வைத்தது. இவைகளை கண்டு வியந்த சிடர்களின் நம்பிக்கை முற்றிலும் தகர்க்கப்பட்டிருந்தது. யூதர்கள் அவர்களையும் கொலை செய்ய தேடுவார்கள் என எண்ணி பயந்தார்கள். தேவ குமாரனுக்குவிரோதமாக எழும்பிய வெறுப்பு விரைவில் தீரக்கூடியதாக இல்லை என்று நினைத்தார்கள். இந்த ஏமாற்றத்தை குறித்து பல மணி நேரங்கள் தனித்து துக்கித்தார்கள். லௌகீக ராஜாவாக ஆட்சி செய்வார் என எதிர்பார்த்த அவர்கள், இயேசுவின் மரணத்தோடு அவர்களின் நம்பிக்கையும் செத்துப் பேனாதை கண்டார்கள். இயேசுவின் தாயாரின் விசுவாசமும் தடுமாறித்தான் பேனது. GCt 26.2

இயேசுவைக் குறித்த நம்பிக்கை தகர்க்கப்பட்டிருந்த போதிலும் அவரை சீடர்கள் நேசித்தார்கள். எனவே, அவருடைய சரீரத்தை கௌரவிக்க விரும்பினார்கள். ஆனால், அதை எப்படி பெற்றுக்கொள்வது என்று அறியாதிருந்தார்கள். அரிமத்தியாவிலிருந்து வந்த இயேசுவின் சீடனாகிய யோசேப்பு என்பவன், பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கினான். யூதர்களின் கோபம் மிகுதியாக இருந்ததினால், இயேசுவின் சரீரத்தை கனப்படுத்த அனுமதியாமல் போவார்களோ என்ற பயந்ததினால் வெளிப்படையாகச் சொல்லாமல் ஒளிந்துச் சென்றான். பிலாத்து அவனுடைய விண்ணப்பத்தை ஏற்று, இயேசுவின் சரீரத்தை அவனிடம் கொடுத்தார். சீடர்கள் இயேசுவின் சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்கியபோது, அவர்களுடைய துயரம் மீண்டும் எழும்பிற்று. அவர்கள் அவருடைய சரீரத்தை மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, யோசேப்புக்கு சொந்தமான, புதிய கல்லறையிலே வைத்தார்கள். இயேசு ஜீவனோடு இருந்த நாட்களிலே அவருடனே நெருக்கமாக இருந்த ஸ்திரீகள் இன்னமும் அவரை நெருங்கியே வந்தார்கள். அவருடைய சரீரம் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு, அதன் நுழைவு வாயில் ஒரு பெரிய கல்லால் அடைக்கப்பட்ட பிறகே அந்த ஸ்திரீகள் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள். எதிரிகள் இயேசுவின் சரீரத்தை திருடிவிடக்கூடாதே என்று பயந்தார்கள். ஆனால், அப்படி பயந்திருக்க அவசியம் இல்லை என்று நான் கண்டேன். ஏனெனில், இயேசு இளைப்பாறிய இடத்தை வாஞ்சையோடு தூதர்கள் காத்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன். மகிமையின் ராஜாவை சிறையிருப்பிலிருந்து விடுவிப்பதற்கான கட்டளைக்காக ஏங்கிக்கொண்டே அக்கல்லறையை காத்துக் கொண்டிருந்தார்கள். GCt 27.1

கொலைகாரர்களும் இயேசு உயிருடன் எழுந்து தப்பிவிடுவார் என பயந்து, அவருடைய கல்லறையை காக்க காவற்காரரை போடும்படி பிலாத்துவை வேண்டிக் கொண்டார்கள். பிலாத்துவும், மூன்றாம் நாள் வரை கல்லறையை காப்பதற்கு ஆயுதம் ஏந்திய சேவகர்களை நியமித்தான். அந்தப்படியே, கல்லறையின் வாசலை மூடி, சீடர்கள் அச்சரீரத்தை திருடிவிட்டு, இயேசு உயிரோடு எழுந்துவிட்டார் என்று சொல்லிவிடாதபடி ஜாக்கிரதையாக காவற்காக்குமாறு உத்தரவிட்டான். GCt 27.2

பார்க்க : மத்தேயு 21:1-11; 27:32-66
மாற்கு 15 : 21-47
லூக்கா 23 : 26-56
யோவான் : 19 : 17-42
வெளி 19 : 11-16