Go to full page →

அத்தியாயம் 12 - கிறிஸ்துவின் சீடர்கள் GCt 36

சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பற்றி சீடர்கள் வல்லமையாக பிரசங்கித்தார்கள். சுகவீனர்களை சுகப்படுத்தினார்கள். பிறப்பிலிருந்தே சப்பாணியாய் இருந்த ஒருவனை நடக்கச் செய்ததினிமித்தமாக அவனும் சீடர்களுடன் சேர்ந்து, குதித்து, நடந்து தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். இதனை திரளான ஜனங்கள் கண்டார்கள். செய்தி பரவியது; அநேகர் சீடர்களை சூழ ஆரம்பித்தார்கள். கிடைத்த சுகத்தை பெரும் வியப்புடனும், ஆச்சரியத்துடனும் ஏற்று, அநேகர் தேவனைத் துதித்தார்கள். GCt 36.1

இயேசு மரித்தபோது, இனி அற்புதங்கள் ஒன்றும் நிகழாது என்றும், மனிதர்கள் மீண்டும் சம்பிரதாய வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்றும், பிரதான ஆசாரியர்கள் நினைத்தனர். ஆனால், அவர்கள் மத்தியிலேயே சீடர்கள் வியக்கதக்க அற்புதங்களை செய்தார்கள்! இயேசு சிலுவையில் அறையப் பட்டாரே, இவர்களுக்கு இத்தகைய வல்லமை எங்கிருந்து வந்தது என்று குழம்பினார்கள். இயேசு உயிரோடு இருந்த நாட்களில் அவருடைய வல்லமையை சீடர்களுக்கு கொடுத்து வந்தாரென்றும், அவர் மரித்தபின் அவ்வித வல்லமைகள் இல்லாது போகுமென்றும் ஆசாரியர்கள் எண்ணினார்கள். அவர்களுடைய மனக்குழப்பத்தை அறிந்த பேதுரு, அவர்களை நோக்கி, “இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுய சக்தியினாலாவது, எங்கள் சுய பக்தியினாலாவது, இவனை நடக்கப் பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்” என்று கூறினான். சப்பாணியாய் இருந்தவனை பூரணப்படுத்தியது அந்த இயேசுவின் மேல் வைக்கப்பட்ட விசுவாசம்தான் என்று அவர்களுக்கு விளக்கமளித்தான் பேதுரு. GCt 36.2

பிரதான ஆசாரியர்களுக்கும், மூப்பர்களுக்கும் இவ்வார்த்தைகளை கிரகிக்க இயலவில்லை. சீடர்களை பிடித்து சிறை வைத்தார்கள். சீடர்களின் ஒரே செய்தியில், ஆயிரக் கணக்கானோர் இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து, மனந்திரும்பினார்கள். ஜனங்களின் கவனம் தங்கள் வசம் திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் இயேசுவை கொலைச் செய்திருந்தார்கள். ஆனால், இப்பொழுதோ மக்கள், முன்பை காட்டிலும் அதிகமாக இயேசுவின் மீது வாஞ்சையாக இருந்ததைத் கண்டு ஆசாரியர்கள் மிகவும் கலங்கினார்கள். ஏற்கனவே, இயேசுவை கொலை செய்தவர்கள் இவர்கள் தான் என்று சீடர்கள் நேரிடையாக குற்றப்படுத்தியிருந்தார்கள். இத்தகைய குற்றச் சாட்டுகள் எந்த அளவுக்கு வளரும் என்றோ, ஜனங்களின் எண்ணங்கள் எங்ஙனம் மாறும் என்றோ அறியாது மூப்பர்கள் தவித்தார்கள். சீடர்களை எளிதாக கொலைச் செய்திருப்பார்கள்; ஆனாலும், ஜனங்கள் தங்கள் மீது கல்லெறிந்துவிடுவார்கள் என்கிற பயம் இருந்தது. சீடர்களை அவைக்கு வரவழைத்தார்கள். நீதியின் குமாரனின் இரத்தத்திற்காக வெறியோடு கத்திய மனிதர்களே அங்கு இருந்தார்கள். பேதுரு, கோழைத்தனமாக, இயேசுவை மூன்று முறை மறுதலித்ததை நினைவில் கொண்டு, அவனை எளிதாக மடக்கிவிடலாம் என்று எதிர்பார்த்தார்கள். அவனோ மனந்திரும்பியிருந்தான். இயேசுவை மகிமைப்படுத்தும் ஒரு வாய்ப்பு பேதுருவிற்கு கொடுக்கப்பட்டது. ஒருமுறை இயேசுவை மறுதலித்திருந்தான்; ஆனால், இப்பொழுது, அக்கறையை நீக்கி, அவருடைய நாமத்தை கனப்படுத்தினான். கோழைத்தனமான பயங்கள் ஏதும் நெஞ்சில் இல்லாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையில், அஞ்சாமல், இயேசுவின் நாமத்தை உயர்த்தி, அவன் முழுமையாக அங்குநிற்பதற்கு அவரே காரணம் என்று சாட்சியம் அளித்தான். பேதுரு அவர்களை நோக்கி, “வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானார்” என்று மரித்துயிர்த்த இயேசுவைக் குறித்து சாட்சிப் பகிர்ந்தான். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படியாக வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே, அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. GCt 36.3

பேதுருவும், யோவானும் வெளிக்காட்டிய அஞ்சாமையைக் கண்டு, ஜனங்கள் வியந்தார்கள். அவர்கள் இயேசுவுடன் இருந்ததை யாவரும் அறிந்துக்கொண்டார்கள். விசாரணையின் போது, இயேசுவிடம் காணப்பட்ட தைரியம் இவர்களிடமும் பிரதிபலித்ததை யாவரும் கண்டார்கள். தேவகுமாரனை மறுதலித்த பேதுருவை தன் கூர்மையான பார்வையால் கண்டித்த இயேசுவின் நாமத்தை, இன்று, தனது அஞ்சாமையினால், உயர்த்தி வைத்தான் பேதுரு. இதினிமித்தமாக, கர்த்தர் பேதுருவை அங்கீகரித்து, ஆசீர்வதித்தார். இதன் சாட்சியாக, பேதுரு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். GCt 37.1

சீடர்களின் மீது தங்களுக்கு இருந்த வெறுப்பை வெளிக்காட்ட இயலாமல், அவர்களை ஆலோசனை சபையை விட்டகற்றினார்கள். அதன்பின், அவர்களுக்குள் பேசி, “இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம் பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது” என தீர்மானித்தார்கள். இத்தகைய நல்ல ஊழியம் பரவினால், தங்கள் வலிமையை இழந்து, ஜனங்களுக்கு முன்பாக, இயேசுவை கொன்றவர்களாக நிற்க வேண்டும் என்பதை உணர்ந்த ஆசாரியர்கள், இந்த ஊழியம் பரவுவதை விரும்பவில்லை. எனவே, சீடர்களை பயமுறுத்தி, ஒருக்காலும் இயேசுவின் நாமத்தைப்பற்றி பேசக்கூடாது என்றும், அப்படி பேசினால், அவர்கள் மரிக்க நேரிடுமென்று அச்சுறுத்தினார்கள். ஆகிலும், தாங்கள் கேட்டவைகளையும் பார்த்தவைகளையும் பற்றி பேசாமல் இருக்க முடியாதென்று, பேதுரு, துணிவுடன் கூறினான். GCt 37.2

இயேசுவின் வல்லமையினால், தங்களிடம் கொண்டு வரப்பட்ட எல்லா விதமான நோயாளிகளையும், சீடர்கள் அற்புத சுகமளித்தார்கள். அவர்கள் மீது கோபம் கொண்டிருந்த மூப்பர்கள் இவைகளைக் கண்டு, திடுக்கிட்டார்கள். சிலுவை மரணமடைந்து, உயிர்த்தெழுந்து, பரமேறிய இயேசுவின் நிழலின்கீழ் நூற்றுக்கணக்கானோர் அனுதினமும் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். அப்போஸ்தலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சாத்தான் மகிழ்ந்திருந்தான். ஆனால், தேவ தூதர்களை தேவன் அனுப்பி, அவர்களை விடுவித்தார். பிரதான ஆசாரியார்களும் வேதபாரகரும் சொன்னதற்கு எதிராக, தேவாலயத்தில், இயேசுவைப் பற்றி அதிகதிகமாய் பேசினார்கள். ஆலோசனை சபை கூடி, சிறையிலிருந்தவர்களை அழைத்து வரும்படி கட்டளை யிடப்பட்டது. அந்தப்படியே, சிறையிலிருந்த அப்போஸ் தலர்களை அழைத்து வருவதற்காக சிறைக்குச் சென்றனர். அதிகாரிகள் சிறைக் கதவுகளை திறந்துப்பார்த்தபொழுது, அவர்கள் தேடியவர்கள் அங்கில்லாதிருந்தார்கள். அவர்கள் ஆலோசனை அங்கத்தினரிடம் திரும்பி வந்து, “சிறைச்சாலை மிகவும் பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்த பொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம்”, என்று அறிவித்தார்கள். அப்பொழுது ஒருவன் வந்து : “இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம் பண்ணுகிறார்கள்” எனக் கூறினான். உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம் பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தான். அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஆலோசனைக் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி, “நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம் பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டு மென்றிருக்கிறீர்கள்” என்று சொன்னான். GCt 38.1

வேஷதாரர்களாக இருந்த சங்கத்தினர், தேவனைக் காட்டிலும் மனிதரின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள். அவர்கள் இருதயங்கள் கடினப்பட்டிருந்ததால், அப்போஸ்தலர்கள் நிகழ்த்திய பெரிய அற்புதங்கள் அனைத்தும் அவர்களை எரிச்சலடையச் செய்தது. இயேசுவைக் குறித்து சீடர்கள் பேசிவந்தால், அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள்தான் இயேசுவை கொலை செய்தார்கள் என்பது தெளிவாகிவிடும் என்று மூப்பர்கள் கலங்கினார்கள். இயேசுவின் இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கக்கூடாது என்று சூலுரைத்தவர்கள், இப்பொழுது, அப்பழியை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாக இல்லை. GCt 38.2

மனுஷருக்கு கீழ்ப்படிவதைப்பார்க்கிலும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்று அப்போஸ்தலர்கள் தைரியமாக அறிவித்தார்கள். பேதுரு எழுந்து, “நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை, நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளா யிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி” என்றான். அப்பொழுது மூப்பர்கள் மூர்க்கமடைந்து, அப்போஸ்தலர்களைக் கொலை செய்யும்படி யோசனைப் பண்ணினார்கள். இப்படியிருக்கையில், கமாலியேல் என்கிற பேர் கொண்ட நியாயசாஸ்திரியின் உள்ளத்தில் தேவதூதன் கிரியைச் செய்தபடியால், அவன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, “இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” என்றான். அப்போஸ்தலரை கொன்றுப் போடும்படி, தீய தூதர்கள் அன்று, அச்சங்கத்தினரை ஏவி விட்டார்கள். ஆகிலும் கர்த்தர், அவர்களில் ஒருவனையே எழுப்பி, அப்போஸ்தலர்கள் தப்பிக்கொள்ள கிரியை செய்தார். GCt 38.3

அப்போஸ்தலரின் ஊழியங்கள் இன்னும் முடிவடைய வில்லை. மன்னர்களுக்கு முன்பாக வந்து, இயேசுவைக் குறித்து அவர்கள் பார்த்ததையும், அறிந்ததையும் சாட்சியாக அறிவிக்க வேண்டியது இருந்தது. அவர்களை விடுவிக்கும் முன்னே, பிரதான ஆசாரியர்களும், மூப்பரும், அவர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். இயேசுவின் நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப் பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தை விட்டு புறப்பட்டுப் போனார்கள். ஆகிலும், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று, பிரசங்கித்தார்கள். கர்த்தருடைய வார்த்தை வளர்ந்து, பெருகிற்று. பிரதான அசாரியர்களின் உள்ளங்களில் சாத்தான் அசைவாடி, அப்போஸ்தலர்கள் தான் இயேசுவின் சரீரத்தை திருடிச் சென்றார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்வதற்காக ரோமாபுரியின் காவற்காரர்களை விலைக்கு வாங்கச் செய்தான். இப்படிச் செய்வதினால் உண்மையை மறைத்துவிடலாம் என்று எண்ணினான். ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலின் செய்தி பல இடங்களில் துளிர் விட்டு பரவிற்று. அப்போஸ்தலர்கள் தைரியமாக இதனை அறிவித்து, அநேக பிரம்மாண்டமான அற்புதங்களை செய்தார்கள். தேவ குமாரனின் மீது அதிகாரம் கிடைத்தபோது, அவருடைய இரத்தப்பழியை தாங்கள் மீது ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தவர்களை குற்றப்படுத்தி, தைரியமாக பேசினார்கள். GCt 39.1

ஒவ்வொரு தலைமுறையின் வழியாக, கிறிஸ்துவின் சீடர்கள் உறுதியாக தாங்கப்படுவதற்கு ஏதுவாகவும், பரிசுத்தமான சத்தியங்கள் பாதுகாக்கப்படுவதற்காகவும், தேவன் அவருடைய தூதர்களை நியமித்ததை நான் கண்டேன். GCt 39.2

இஸ்ரவேலரின் நம்பிக்கையாக இருக்கவேண்டிய சத்தியங்களை சுமந்த அப்போஸ்தலரிடையில் பரிசுத்த ஆவியானவர் விசேஷமாகத் தங்கினார். இயேசுதான் தமது ஒரே நம்பிக்கை என்றும், அவருடைய உயிர்த்தியாகத்தின் மூலமாக திறக்கப்பட்ட வழிகளில் நடக்கவேண்டுமென்றும், தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்றும் அப்போஸ்தலர்கள் முடிவு செய்தார்கள். யூதர்கள் வெறுத்து, அவரையே கொலைச் செய்ய வைத்த அதே சத்தியத்தை பிரசங்கிக்க, அப்போஸ்தலருக்கு, இயேசு வல்லமை அளித்திருந்ததைக் கண்டு, நான் பிரமித்தேன். சாத்தானின் கிரியைகளை முறியடிக்கக்கூடிய வல்லமை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. துன்மார்க்க கரங்களினால் கொலை செய்யப்பட்ட இயேசுவின் நாமத்தினால், அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்கள். இயேசுவின் மரணத்தின்போதும், உயிர்த்தெழுதலின்போதும் உண்டான ஒளி வட்டங்கள், அவரே இவ்வுலகின் இரட்சகர் என்பதை நித்தியப்படுத்திவிட்டன. GCt 39.3

பார்க்க : அப்போஸ்தலர் 3 : 1-26
அப்போஸ்தலர் 4 : 1-37
அப்போஸ்தலர் 5 : 1-42