Go to full page →

அத்தியாயம் 13 - ஸ்தேவானின் மரணம் GCt 40

எருசலேமில் சீடர்கள் பெருகினார்கள். கர்த்தரின் வார்த்தை வளர்ந்ததினால், அநேக ஆசாரியர்களும் விசுவாசித்து கீழ்ப்படிந்தார்கள். ஸ்தேவான், விசுவாசம் நிறைந்தவனாக, அநேக அற்புதங்களைச் செய்து வந்தான். அநேக ஆசாரியர்கள் தங்கள் வழிகளையும், பலிகளையும் விட்டு, இயேசுவே மெய்யான பலி என ஏற்றுக்கொள்ள துவங்கியிருந்ததால், அநேகர் மூர்க்கமடைந் திருந்தார்கள். பிரதான ஆசாரியர்களையும் மூப்பரையும் கண்டித்து, ஸ்தேவான், வல்லமையாக பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் பேசிய வலிமையை எதிர்கொள்ள முடியாதபடியால், ஒரு ஜனக்கூட்டத்தை திரட்டி, மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக அவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று அறிவிக்க வைத்தார்கள். ஜனங்களை எழுப்பி, ஸ்தேவானை பிடித்து, பொய்ச் சாட்சிகளின் மூலமாக அவன் தேவாலயத்திற்கும் கற்பனைகளுக்கும் விரோதமாக பேசினான் என்று சொல்ல வைத்தார்கள். “ஸ்தேவான், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்று அறிவித்தார்கள். GCt 40.1

ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனுடைய முகத்தில் தேவ மகிமையைக் கண்டார்கள். அவனுடைய முகக்குறி தேவதூதனைப் போல பிரகாசமாய் இருந்ததைக் கண்டார்கள். ஸ்தேவான், விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிறைந்தவனாய் எழுந்து, தீர்க்கதரிசிகளின் காலத்தில் தொடங்கி, இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல், பரமேறுதல் வரை தெளிவாக எடுத்துச் சொன்னான். அப்படியே, தேவன் மனித கரங்களினால் உண்டாக்கப்பட்ட தேவாலயங்களில் இருக்கவில்லையென்றும் கூறினான். ஆசாரியார்களும், மூப்பர்களும் தேவாலயத்தை வழிபட்டு வந்தார்கள். தேவனை எதிர்த்துப் பேசப்படுவதைக் காட்டிலும், தேவாலயத்தை எதிர்த்து பேசப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்கள். ஸ்தேவானோ, ஆவியில் நிறைந்தவனாய், அவர்களை “வணங்காக் கழுத்துள்ளவர்கள்” என்றும் “இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்றும் நிந்தித்தான். பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறவர்களாக அக்கூட்டத்தினர் இருந்தனர். வெளிப்புறமான சடங்குகளை கையாண்டு வந்தார்கள். ஆனால், அவர்கள் இருதயமோ பாழடைந்து, தீமையினால் நிறைந்ததாக இருந்தது. இதனை ஸ்தேவான் வெளிப்படுத்தி, “நீதிபரருடைய” வருகையை முன்னறிவித்தவர்களையும் உங்கள் பிதாக்கள் கொலை செய்தார்கள். இபப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரை கொலைச்செய்த பாதகருமாயிருக்கிறீர்கள்” எனக் கடிந்துக்கொண்டான். GCt 40.2

வெளிப்படையாக வந்த உண்மைகளை சகிக்க முடியாமல், மிகுந்த கோபம்கொண்டு, ஒருமனப்பட்டு, ஸ்தேவான் மீது பாய்ந்தார்கள். பரலோகத்தை ஏறிட்டு பார்த்த ஸ்தேவான் மீது பரலோக ஒளி படர்ந்தது. தேவ தூதர்கள் அவனை சூழ்ந்துக்கொண்டார்கள். பரலோகத்தின் மகிமையை கண்டான். அவன் சத்தமிட்டு, “அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். வேதபாரகர்களும், பிரதான ஆசாரியர்களும் கூக்குரலிட்டு, தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்கு புறம்பே தள்ளி, அவனை கல்லெறிந்தார்கள். அப்பொழுது ஸ்தேவான் முழங்காற்படியிட்டு, “இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்”, என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். GCt 41.1

திருச்சபையில் ஒரு முக்கிய இடத்தை நிரப்புவதற்காக எழுப்பப்பட்ட வல்லமையான தேவ மனிதன்தான் ஸ்தேவான் என்ற நான் கண்டேன். அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டபொழுது, சாத்தான் வெகுவாக மகிழ்ந்தான். சாத்தானின் வெற்றி மீண்டும் குறுகியதாகவே இருந்தது. ஏனெனில், அக்கூட்டத்தில் நின்று அனைத்தையுமே கவனித்துக் கொண்டிருந்த ஒருவனிடம் இயேசு சீக்கிரமாக வெளிப்பட இருந்தார். ஸ்தேவான் மீது கல்லெறிவதில் தனது கையை போடாதிருந்தாலும், அதற்கு ஒப்புதல் அளித்தவன் இவனே. சவுல், திருச்சபையை துன்புறுத்துவதில் அலாதி பிரியம் வைத்திருந்தான். சபையோரை வேட்டையாடி, வீடுகளில் இருந்து அவர்களை பிடித்து, கொலை செய்கிறவர்களிடம் அவர்களை ஒப்படைத்தான். சாத்தான் அவனை சக்திவாய்ந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தான். ஆகிலும், சாத்தானால் பிடிக்கப்பட்டவர்களை அவனிடத்திலிருந்து மீட்க இயேசுவிடம் அதிகாரம் இருக்கிறதே! கல்விமானாக இருந்த சவுலை, திருச்சபைக்கு விரோதமாக, சாத்தான் வலிமையாக உபயோகித்து வந்தான். ஆனால் இயேசுவோ, ஸ்தேவானின் இடத்தை நிரப்பவும், அப்போஸ்தலருக்கு வலிமை சேர்க்கவும், அவருடைய நாமத்தை பிரசங்கிக்கவும், சவுலைத் தெரிந்துக்கொண்டார். யூதர்களால் உயர்வாய் கருதப்பட்டவன் சவுல். அவனுடைய சிரத்தையும், கல்வியும் அவர்களுக்கு பிடித்திருந்தது. அநேக சீடர்களுக்கு அதுவே கலக்கமாயிருந்தது. GCt 41.2

பார்க்க : அப்போஸ்தலர் : 6:1-15
அப்போஸ்தலர் 7:1-60