Go to full page →

அத்தியாயம் 16 - பவுல் எருசலேம் சென்றார் GCt 46

மனம் திருந்திய பவுல், எருசலேமிற்கு வந்து இயேசுவைப் பற்றி பிரசங்கித்து, அவருடைய கிருபையின் மகத்துவத்தைக் குறித்தும் அறிவித்தான். தனது அற்புத மனந்திரும்புதலைக் குறித்து அவன் அறிவித்தது, ஆசாரியர்களையும், வேதபாரகரையும் கோபமடையச் செய்தது. அவனுடைய ஜீவனை அழிக்க வகை தேடினார்கள். ஆனால், தேவன் பவுலை அங்கிருந்து போய்விடும்படி கூறினார். பவுலோ, “ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிற போது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்கு சம்மதித்து, அவனைக் கொலை செய்தவர்களின் வஸ்திரங்களை காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்கள்”, என்று கூறினான். தன்னுடைய அற்புத மாற்றத்தைக் குறித்த சாட்சியை மறுக்க இயலாமல், எருசலேமில் வாழ்ந்த யூதர்கள், இஃது நிச்சயமாகவே தேவ வல்லமையின் செயல்தான் என்று ஏற்றுக்கொள்வார்கள் என பவுல் எண்ணினான். ஆனால் இயேசுவோ, “நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன்” என்று கூறினார். GCt 46.2

எருசலேமிலிருந்து அகன்றிருந்த நாட்களிலே, பவுல், வெவ்வேறு இடங்களுக்கு அநேக நிரூபங்களை எழுதினார். இந்நிரூபங்கள், பவுலின் அனுபவங்களை விவரித்து, மகா சாட்சியை சுமந்துச் சென்றது. ஆகிலும் சிலர், இந்த நிரூபங்களை அழிக்க முயற்சித்தார்கள். பவுலின் நிருபங்கள் வலிமை நிறைந்தவை என்றும், ஆனால், அவருடைய பிரசன்னமும், பேச்சும் நிந்தனைகள் நிறைந்தவை என்றும் முடிவெடுத்தார்கள். GCt 46.3

பவுலோ, கல்வியில் தேர்ச்சிப் பெற்றவன் என்றும், அவனுடைய ஞானமும் பண்பும் கேட்பவர்களைக் கவர்ந்தது என்றும் நான் கண்டேன். GCt 46.4

கல்விமான்களில் அநேகர், இவனது அறிவில் மயங்கி, இயேசுவை விசுவாசித்தார்கள். திரளான கூட்டத்திற்கு முன்பாகவும், இராஜாக்களுக்கு முன்பாகவும், அவன் பேசியபோதெல்லாம் தனது பேச்சுத்திறமையினால் அனைவரையும் செயலிழக்கச் செய்ததையும் நான் கண்டேன். இஃது வேதபாரகரையும், ஆசாரியர்களையும் வெகுவாக பாதித்தது. தனது ஆழமான விவாதங்களினால் உயர எழும்பி, தன்னை கவனிக்கின்ற யாவரையும் தன்னுடன் உயர்த்தி, கர்த்தரின் கிருபையின் ஐசுவரியத்தைக் காட்டி, கிறிஸ்துவின் அன்பையும் விவரிக்கும் திறமை பவுலுக்கு இருந்தது. அதேசமயத்தில், மிகவும் எளிமையான விதத்தில், சராசரி மனிதனின் கவனத்தையும் ஈர்த்து, அவனையும் இயேசுவின் சீடனாக மாற்றியது. GCt 47.1

மீண்டும் எருசலேமிற்கு செல்லவேண்டும் என்றும். அங்கு தம் நாமத்தினிமித்தம் பாடனுபவிக்கவேண்டும் என்றும் தேவன் பவுலுக்கு வெளிப்படுத்தினார். அநேக ஆண்டுகளாக பாடுகளை சந்தித்து வந்த பவுலைக் கொண்டே இச்சிறப்பான ஊழியத்தைச் செய்ய தேவன் விரும்பினார். பவுலின் கட்டுகள் தேவனின் மகிமையை பிரஸ்தாபப்படுத்த உதவிய கருவிகளாகும். அவனுடைய விசாரனைகளுக்காக பல பட்டணங்களுக்கு இழுத்துச்செல்லப்பட்ட பவுல், தனது அற்புத சாட்சிகளினிமித்தமாக அநேக ராஜாக்களையும், அதிகாரிகளையும், மக்களையும் தேவனிடத்தில் திரும்பச் செய்தான். பவுலின் சாட்சிகள் மூலமாக அக்கப்பல் மாலுமிகளும், பயணிகளும் இயேசுவின் வல்லமையை அறிந்துக் கொண்டார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பிரசங்கித்த பவுல், தனது பேச்சாற்றலினால் அநேக பிரபுக்களையும் கவர்ந்து, இயேசுவே மெய்யான தேவ குமாரன் என்று நம்ப வைத்தான். இவ்விதமாக அநேகர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஒருவன் பவுலிடம், “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறாய்” எனக் கூறினான். எனினும், பிற்காலங்களில் இதனைப் பற்றி ஆலோசிப்போம் என்ற தங்கள் நம்பிக்கையை தள்ளிப்போட்டார்கள். இந்த தாமதத்தை பயன்படுத்தி, சாத்தான் அவர்களுடைய இதயங்களை கடினப்படுத்தி, நித்தியமாக அவர்களை வசூசித்துப் போட்டான். GCt 47.2

சாத்தானின் கிரியைகள் என்னவென்று எனக்கு காட்டப்பட்டது. முதலாவதாக அவன், இயேசுவை தங்களது இரட்சகராக ஏற்காதபடி யூதர்களின் கண்களை மறைத்தான்; அடுத்தப்படியாக, இயேசுவின் வல்லமையான கிரியைகளின் மீது பொறாமை கெண்டதன் மூலமாக, அவருடைய ஜீவனையும் பறித்துப் போடும்படியாக அவர்களை வழி நடத்தினான். அவரின் சீடரைக்கொண்டே அவரை காட்டிக்கொடுத்து, சிலுவையில் அறைந்து, கொன்றுப்போட்டார்கள். இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்த போது, அவருடைய உயிர்த்தெழுதலை மறைக்கும்படியாக பொய்ச் சொல்லி, தங்கள் பாவங்களை அதிகமாக்கிக் கொண்டார்கள். GCt 47.3

இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், தேவனுக்கு விரோதமாக எழும்பி, குற்றமற்ற அவருடைய இரத்தப்பழியையும் தங்கள் கைகளில் ஏந்திக்கொள்ளும்படி சாத்தான் அவர்களை ஏவினான். இயேசுவே தேவ குமாரன் என்பதை காட்ட எவ்வளவு அடையாளங்கள் இருந்தபோதிலும், அவரை ஏற்காமல், உலக இரட்சகராகிய அவரையே கொன்றுப் போட்டார்கள். தேவகுமாரனுக்கு விரோதமாக நிற்பதை தங்களுக்கு கிடைக்கும் ஆறுதல் என்று நம்பினார்கள். எனவே, இயேசுவின் நாமத்தைப்போல் வேறு எதுவும் அவர்கள் செவிகளை சங்கடப்படுத்தவில்லை. அவர் சார்பில் யாதொரு சாட்சியத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஸ்தேவானின் சாட்சியின் போது, பரிசுத்த ஆவியானவர் தேவகுமாரனைப் பற்றி சாட்சியம் அளித்ததற்கு தங்கள் செவிகளை மூடிக்கொண்டார்கள். ஸ்தேவான் தேவமகிமையினால் மூடப்பட்டிருந்த வேளையில், அவனை கல்லெறிந்து கொலைச் செய்தார்கள். இயேசுவின் கொலை பாதகர்களை தன் கைவசத்தில் சாத்தான் வைத்திருந்தான். சாத்தானின் சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்திருந்தபடியால், அவர்களைக் கொண்டு, இயேசுவின் ஆதரவாளர்களை அவன் கொடுமைப்படுத்தி வந்தான். யூதர்களின் முலமாக புறஜாதிகளையும் இயேசுவிற்கு விரோதமாக திருப்பிவிட்டான். ஆகிலும், சீடர்கள் தங்களுடைய ஊழியங்களில் பெலப்படவும், தாங்கள் கண்டவைகளைக் குறித்தும் கேட்டவைகளைக் குறித்தும் சாட்சி பகரவும், அச்சாட்சியை தங்கள் இரத்தத்தின் மூலமாக முத்தரிக்கவும், தேவன் தமது தூதர்களை அவர்களிடத்தில் அனுப்பி வைத்தார். GCt 47.4

தனது பிடியில் யூதர்கள் இருப்பதைக் கண்ட சாத்தான், மகிழ்ந்தான். இன்னமும், அவர்களின் முறைமைப்படி பலியிடவும் மதச்சடங்குகளை பின்பற்றவும் செய்தார்கள். இயேசு சிலுவையில் தொங்கியபொழுது, தேவாலயத்தின் சீலை கிழிந்தது. இதனால், தேவன் ஆசாரியர்களை சந்தித்து, பலிகளை ஏற்றுக்கொள்ள அவசியமில்லாமல் போயிற்று. மேலும், யூதர்களுக்கும், புறஜாதியாருக்குமிடையே இருந்து வந்த பிரிவும் அவ்வேளையிலேயே முற்றுகை பெற்றது. தம்மையே இரட்சிப்பின் பலியாக ஈந்ததின் நிமித்தமாக, இயேசுவின் நாமமே இரட்சிப்பின் நாமம் என்கிற சத்தியம் இருதரத்தாருக்கும் பொருந்தியது. GCt 48.1

இயேசு சிலுவையில் தொங்கியப்பொழுது, அவருடைய விலாவில் ஈட்டியால் ஒரு சேவகன் குத்தினான். அப்பொழுது, குருதியும், தண்ணீரும் தெளிவாக புறப்பட்டு வந்தது. அந்தக் குருதி, தம்மை விசுவாசிக்கிறவர்களின் பாவங்களை சுத்தம் செய்யும், அத்தண்ணீர், விசுவாசிகளுக்கு ஜீவனைக் கொடுக்கும். GCt 48.2

பார்க்க : மத்தேயு 27 : 51
யோவான் 19 : 34
அப்போஸ்தலர் 24 : 1 - 27
அப்போஸ்தலர் 26 : 1 - 32