Go to full page →

அத்தியாயம் 17 - பொய் மனச்சாட்சியின் காலம் GCt 48

விக்கிரக வழிபாடுடைய அந்நியர்கள், கிறிஸ்தவர்களை கொடூரமாக துன்பப்படுத்தி, கொலைச் செய்த நாட்களுக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். குருதி வெள்ளமாக ஓடிற்று. உயர்ந்தவர்கள், கல்விமான்கள், பொது மக்கள் என்ற பாகுபாடில்லாமல் இரக்கமற்ற விதத்தில் கொலைச் செய்யப்பட்டார்கள். தங்களுடைய மதத்தை விட்டுக் கொடுக்காததினால், பல ஐசுவரியவான்கள், தரித்திரராக ஆக்கப்பட்டனர். GCt 48.3

எத்தனை பாடுகளை அனுபவித்தாலும் தங்களது விசுவாசத்தை காத்து, தங்கள் நியமத்தையும் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். தேவப் பிள்ளைகளின் துன்பங்களில் சாத்தான் களிகூர்ந்தான். ஆகிலும், தேவனுடைய பார்வையில் அவருடைய பிள்ளைகள் மிகவும் நேசிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனுபவித்த ஒவ்வொரு பாடும், அவர்களுக்கு பரலோகத்தில் பலனைக் கூட்டிக்கொண்டே இருந்தது. பரிசுத்தவான்களின் பாடுகளில் மகிழ்ந்த சாத்தான் திருப்தியடைய வில்லை. அவர்களுடைய சரீரத்தை மாத்திரமல்லாமல் மனதையும் ஆட்கொள்ள விரும்பினான். அக்கிறிஸ்தவர்கள் சகித்த பாடுகள், அவர்களை சகோதர அன்பில் திளைக்கச்செய்து, தேவனிடத்தில் நெருங்கி வர உதவியது. தேவனுக்கு விரோதமாக அவர்களை திருப்பிவிட்டால், தங்களுடைய மனோபலத்தையும், உறுதியையும் அழித்துவிடலாம் என்று சாத்தான் விரும்பினான். ஆயிரக் கணக்கானோர் கொலைச் செய்யப்பட்டபோதிலும், புதிய விசுவாசிகள் தோன்றி, அவர்களுடைய இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். தனது பிரஜைகள் இயேசுவினிடத்தில் திரும்புகிறார்கள் என்பதை கவனித்த சாத்தான், தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு விரோதமாக இன்னமும் அதிகமாக செயல்படவேண்டும் என்று தீர்மானித்து, கிறிஸ்துவின் திருச்சபையின் மீது தன் கவனத்தை திருப்பினான். கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு பகுதியை மாத்திரம் தழுவிக்கொள்ளும்படி சிலரை ஏவினான். வேத சித்தாந்தங்களை களங்கப்படுத்த வகை தேடினான். அந்தப்படியே, சபையின் தரம் குறைந்து, அநேக விக்கிரகங்களை வழிபடுபவர்கள் சபையில் சேரத்துவங்கியதை நான் கண்டேன். அந்த விக்கிரக வழிபாட்டுக்காரர்கள், கிறிஸ்தவர்களாக மாறிய போதும், தங்களுடைய வழிபாடுகளையும் சபையில் சேர்க்க ஆரம்பித்தார்கள். வணங்குவதற்கு தகுதியான ஒருவராகிய தேவனோடு, பரிசுத்தவான்களின் உருவங்களையும், கிறிஸ்துவின் உருவத்தையும், இயேசுவின் தாயாகிய மரியாளின் உருவத்தையும் சேர்த்து, வழிபட ஆரம்பித்தார்கள். மெய்கிறிஸ்தவர்களில் அநேகரும் அவர்களோடு படிப்படியாக சேர்ந்துக்கொண்டார்கள். கிறிஸ்தவ சமயம் கலங்கப்பட்டு, திருச்சபையும் தனது சுத்தத்தையும் அதிகாரத்தையும் இழந்துப்போனது. ஆகிலும் சிலர், அவர்களோடுச் சேர விரும்பாமல், தங்களுடைய தூய்மையைக் காத்து, தேவனை மட்டுமே சேவித்தார்கள். எவ்விதமான விக்கிரகங்களையும் வணங்க அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. GCt 49.1

அநேகர் வீழ்ந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட சாத்தான், தன்னுடைய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத பிள்ளைகளுக்கு எதிராக, திருச்சபையில் கலகத்தை உண்டுபண்ணினான். இயேசுகிறிஸ்துவின் உண்மையான சபைக்கு எதிராக துன்பங்கள் மீண்டும் எரியத்துவங்கினது. இலட்சக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். GCt 49.2

காரியங்கள் இவ்விதமாக எனக்கு காட்சியளிக்க கப்பட்டது: திரளான விக்கிரக வழிபாட்டுக்காரர்கள் தங்கள் கரங்களில் கறுமை நிறக்கொடிகளை ஏந்திக்கொண்டிருந்தார்கள். அக்கொடிகளில், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு கூட்டத்தினர் சுத்தமான வெள்ளைக்கொடியை ஏந்திக் கொண்டிருந்தார்கள். அக்கொடியில் தேவனுக்கே பரிசுத்தமுண்டாவதாக’ என்று எழுதப்பட்டிருந்தது. அவர்களுடைய முகக்குறி உறுதியாகவும், பரலோக களையாகவும் இருந்ததை நான் கண்டேன். விக்கிரக வழிபடுபவர்கள் இக்கூட்டத்தினரில் அநேகரை இரக்கமற்றுக் கொன்றார்கள். இருப்பினும் வெள்ளைக் கொடியை விடாமல் இறுக பற்றிக்கொண்டு தங்கள் நிலையில் மிக உறுதியாக நின்றார்கள். அநேகர் விழுந்தார்கள். ஆகிலும் மற்றவர்கள் அந்த இடங்களை நிரப்பி வந்தார்கள். GCt 49.3

கிறிஸ்தவர்கள் தங்கள் திட்டங்களுக்கு அடிபணியாததால், வேறொரு திட்டத்தை அவர்கள் வகுத்தார்கள். கறுப்புக் கொடியை சற்றே தாழ்த்தி, கிறிஸ்தவர்களிடம் இறங்கி வந்து, ஆலோசனைகளை கொண்டு வரவேண்டிய விஷயங்களை பேசத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இஃது முற்றிலுமாக மறுக்கப்பட்டது. சில மணி நேரம் சென்ற போது, அக்கிறிஸ்துவ கூட்டம் கலந்தாலோசனை செய்ததை நான் கண்டேன். அதில் சிலர், தங்கள் வெள்ளைக் கொடிகளை இறக்கவும், விக்கிரக வழிபாட்டுக்காரரின் கருத்துக்களை ஏற்கவும், அதினிமித்தமாக, தங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் வேறு சிலரோ, வெள்ளைக் கொடியை இறக்க மறுத்தது மட்டுமில்லாமல், அதனை இறக்குவதை விட, உயிரை மாய்த்துக்கொள்வது சால சிறந்தது எனக் கருதி, அக்கொடியை இறுக பற்றிக்கொண்டார்கள். இப்பொழுது, அநேக கிறிஸ்தவ சகோதரர்கள் தங்கள் கொடிகளை தாழ்த்தி, புறஜாதியாரோடு பினைவதை கண்டேன். அதே சமயத்தில், விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்கள், வெள்ளைக் கொடிகளை உயரப் பிடித்ததையும் நான் கண்டேன். இப்படி விக்கிரகக்காரர்களோடு சேர்ந்துக்கொண்டவர்கள், வெள்ளைக் கொடியை பற்றிக்கொண்டவர்களை அடிக்கடி துன்புறுத்த ஆரம்பித்து, அநேகரை கொலை செய்துப்போட்டார்கள். ஆகிலும், வெள்ளைக் கொடி உயரப் பறந்தது. அதனை தாங்கிப் பிடிக்க புதியவர்கள் எழும்பினார்கள். GCt 50.1

இயேசுவிற்கு விரோதமாக புறஜாதியாரை ஏவி விட்ட யூதர்கள் தப்பித்துக்கொள்ளவில்லை. அன்று, விசாரணை அறையிலே, “அவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என அலறியவர்கள், பிலாத்துவின் விளக்கங்களுக்குக்கூட செவிசாய்க்கவில்லையே. தங்கள் தலைகளில் தாங்களே இழுத்துப் போட்டுக்கொண்ட இச்சாபம் யூத இனத்தை பிடித்து வாட்டியது. புறஜாதியாரும், கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டவர்களும் யூதருக்கு விரோதிகளானார்கள். கிறிஸ்துவின் சிலுவையின் மீது அளவுகடந்த பற்றை வைத்திருந்த கிறிஸ்தவர்கள், யூதருக்கு எவ்வளவு கஷ்டங்கள் வருமோ அந்த அளவுக்கு தேவன் சந்தோஷப்படுவார் என நம்பினார்கள். இந்தப்படியே, அநேக யூதர்கள் கொல்லப்பட்டார்கள்; பல இடங்களுக்கு சிதறியடிக்கப்பட்டார்கள்; பலவிதத்தில் தண்டிக்கவும் பட்டார்கள். GCt 50.2

கிறிஸ்துவின் இரத்தமும், சீடர்களின் இரத்தமும், அவர்கள் மேல் இருந்தது. தேவனின் சாபம் அவர்களை தொடர்ந்தபடியால், யூதர்கள், புறஜாதியாருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏளனமாய் போனார்கள். காயீன் மீது சுமத்தப்பட்ட சாபத்தின் பங்காளிகள் போல, யாவராலும், யூதர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்; மிகவும் வெறுக்கப்பட்டார்கள்; தரம் இழந்துப்போனார்கள். ஆகிலும், தேவன் அவர்களை பாதுகாத்து, உலகின் பல இடங்களுக்கு அவர்களை சிதறியடித்து, அவர்கள் மூலமாக தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும்படியாக சித்தம் கொண்டதை பிரமிப்புடன் நான் கண்டேன். குறிப்பாக, யூதர்கள் தேவனுடைய சாபத்தை சம்பாதித்தவர்கள் என்பதை உலகம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் ஆசித்தார். ஒரு தேசமாக, யூதர்களை தேவன் புறக்கணித்தார். இருப்பினும், அவர்களில் ஒரு சிலர், தங்கள் இதயத் திரைகளை கிழித்து, உண்மையை உணர்வார்கள் என தேவன் அறிந்திருந்தார். சிலர், அவர்களைச் சார்ந்த தீர்க்கதரிசனங்களை உணர்ந்து, இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்; அவர்களுடைய தேசத்தின் பாவத்தை காண்பார்கள். தனிநபர்களாக சில யூதர்கள் மனந்திரும்புவார்கள். ஆனால், ஒரு தேசமாக, தேவனால் நித்தியத்திற்கும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். GCt 50.3