Go to full page →

அத்தியாயம் 2 - மனிதனின் வீழ்ச்சி GCt 3

பரிசுத்த தூதர்கள் ஓயாமல் தோட்டத்திற்கு வருவதும் போவதுமாக இருந்ததை நான் கண்டேன். அவர்கள், ஆதாமுக்கும், ஏவாளுக்கும், அவர்களது பொறுப்புகளை குறித்து அறிவுரைகள் கூறி வந்தார்கள். சாத்தானின் எழுச்சியை பற்றியும், வீழ்ச்சியை பற்றியும் சொல்லித் தந்தார்கள். தூதர்கள் சாத்தானைக் குறித்து எச்சரித்து விட்டு, தங்கள் பொறுப்புகளை சுமக்கும் நேரங்களில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமலிருப்பதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள். தேவ கட்டளைகளுக்கு கொடுக்கக் கூடிய முழுமையான கவனமும் கீழ்ப்படிதலுமே பத்திரமாக இருப்பதின் வழிமுறைகள் என்பதை தூதர்கள் தெளிவு படுத்தினார்கள். கீழ்ப்படிவதில் கவனமாக இருந்தால், வீழ்ந்துப்போன எதிரிக்கு அவர்கள் மீது அதிகாரமில்லாமல் போகும். GCt 3.1

ஏவாளின் கீழ்ப்டியாமையை தூண்டுவதின் மூலம், சாத்தான் தனது வேலையை துவங்கினான். அவள் தன் கணவனை விட்டு தனித்து உலா வந்தது முதல் குற்றம். இரண்டாவதாக, விலக்கின விருட்சத்தின் அருகாமையில் நடந்துக் கொண்டிருந்தாள். அடுத்தபடியாக, சோதிப்பவனின் சத்தத்திற்கு செவிசாய்த்தாள். இறுதியாக, தேவன் உரைத்த, “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்ற எச்சரிப்பை சந்தேகித்தாள். ஒரு வேளை, தேவன் சொல்வதுபோல் ஒன்றும் நடவாது என்று நினைத்தாள். அவள் கீழ்படியாமையுனுள் பிரவேசித்தாள். தனது கரத்தை நீட்டி, விலக்கப்பட்ட கனியை பறித்து, புசித்தாள். அது கண்களுக்கு இன்பமாயும், வாய்க்கு நல்லதுமாய் இருந்தது. தேவன் இவ்வளவு நன்மையான காரியத்தை தங்களுக்கு விலக்கி வைத்தாரே என தேவன் மீது எரிச்சலடைந்தாள். புசித்த கனியை கணவனிடம் கொடுத்து, அவனையும் சோதித்தாள். சர்ப்பம் கூறிய யாவையும், அவனிடம் பகிர்ந்து, சர்ப்பம் பேசியதை மிகுந்த ஆச்சரியத்தோடு கூறினாள். GCt 3.2

ஆதாமின் முகக்குறியில் ஏற்பட்ட வருத்தத்தை நான் கண்டேன். அவன் பயத்தோடும், திகைப்போடும் இருந்தான். அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு போராட்டம். இந்நிலையை உருவாக்கிய எதிராளி யார் என்பதை உணர்ந்த அவன், தன் மனைவி மரித்துப்போவாள் என்பதையும் அறிந்தான். அவர்கள் இருவரும் பிரியவேண்டிய சூழ்நிலையை கண்டான். ஏவாளின் மீது அவன் வைத்திருந்த அன்பு பெரிது. முற்றிலும் சோர்ந்து போனவனாக அவளது வேதனையான முடிவை தான் பகிர்ந்து கொள்ள முன் வந்தான். அக்கனியை அவன் வாங்கி, துரிதமாக புசித்தான். சாத்தான் பேரானந்தம் அடைந்தான். பரலோகத்திலே சர்ச்சையை உருவாக்கி, பலரை தன் வசப்படுத்திக் கொண்டான். வீழ்ந்த அவன், இப்பொழுது, பிறரையும் வீழ்த்த ஆரம்பித்தான். அந்தப்படியே, ஸ்திரியை வஞ்சித்ததின் மூலமாக புருஷனையும் வஞ்சித்துக் கொண்டான். ஆதாமும், ஏவாளோடு, தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், வீழ்ந்துப் போனான். GCt 3.3

மனிதனின் வீழ்ச்சி பரலோகமெங்கும் பரவியது. அனைத்து கின்னரங்களும் அமைதியாகின. தேவ தூதர்கள், துக்கத்தினால், தங்கள் சிரசின் மீதிருந்த கிரீடங்களை இறக்கி வைத்தார்கள். பரலோகம் முழுவதும் சமாதானமற்ற நிலை ஏற்பட்டது. குற்றம் புரிந்த மணமக்களை என்ன செய்வது என்று தீர்மானிக்கும்படி பரலோகக் குழு கூட்டப்பட்டது. ஜீவவிருட்சத்தின் கனியையும் ஈர்க்கப்பட்டு, புசித்து விடுவார்களோ என்று தூதர்கள் அனைவரும் கலங்கினார்கள். ஆனால் தேவன் ஜீவ விருட்சத்தை காக்கும்படி சிறப்பு தூதர்களை நியமித்தார். அஃதோடு மீறியவர்களை, தோட்டத்தை விட்டு துரத்தினார். ஜீவ விருட்சத்தை காத்த தூதர்களின் கரங்களில் சுடரொளி பட்டயங்கள் இருந்தன. GCt 4.1

சாத்தான் இம்முறை வென்றான், பிறரை விழச்செய்தானே! பரத்திலிருந்து அவன் தள்ளப்பட்டான். பரமானந்தம் அனுபவிக்குமிடத் திலிருந்து மனிதர்கள் வெளியேற்றப்பட்டனர். GCt 4.2

பார்க்க : ஆதியாகமம் 3