பிள்ளைகளைக் கவனிக்க தன் மனைவியை ஒரு கணவன் வீட்டில் விட்டுவிட்டு ஊழியத்திற்குச் செல்லும்போது, அந்தக் கணவனாகிய தகப்பன் வெளியே செய்வதற்கு இணையான ஊழியத்தை அந்த மனைவியாகிய தாய் வீட்டிலே செய்கிறாள். ஒருவர் வெளியே ஊழியக்களத்தில் இருக்கிறார்; அடுத்தவர் வீட்டில் நற்செய்தி ஊழியராக இருந்து, அந்தக் கணவனாகிய தகப்பனைவிட மிக அதிகமான பாடுகளையும் பாரங்களையும் சுமக்கிறார். அவள் தன் பிள்ளைகளின் சிந்தைகளை வடிவமைக்கிறாள்; அவர்களுடைய குணங்களை மெருகேற்றுகிறாள்; இவ்வுலகில் பயன்மிக்கவர்களாகவும் இனிவரும் அழிவில்லா வாழ்க்கைக்கு தகுதியுடையவர்களாகவும் மாறும்படிக்கு அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறாள். அவளுடைய இந்தப் பணி மிகவும் பரிசுத்தமானதும் முக்கியமானதுமாக இருக்கிறது. வெளி ஊழியக்களத்தில் இருக்கிற கணவன் பிறமனிதர்களுடைய கனத்தைப் பெறலாம்; வீட்டில் வேலைசெய்கிறவர் தன் வேலைக்காக பூலோகில் கனம் ஏதும் பெறாமல் இருக்கலாம். ஆனால் தெய்வீக முன்மாதிரிக்கு ஒப்பாக பிள்ளைகளுடைய குணத்தை மெருகேற்ற முயற்சித்து, தன் குடும்பத்தாரின் மேலான நலன்களுக்காக மனைவி வேலை செய்தால், உலகின் மிகப்பெரிய நற்செய்தி ஊழியர்களில் ஒருத்தி என்று அவளுடைய பெயரை தூதன் பதிவு செய்வான். மனிதன் தன் சிற்றறிவால் பார்க்கிறதுபோல தேவன் பார்ப்பதில்லை. 29T, 594 TamChS 271.1