“கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது. செப்பனியா 1:14. அறி வித்ததும் அணிவகுத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கும்படி, சுவி சேஷ பாதரட்சைகளை அணிந்துகொள்வோம்.” 19T; 48 TamChS 107.3
சபை விசுவாசிகளே, எஜமானின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து செயலில் இறங்க, நீங்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் பணி செய்ய வேண்டியது அவசியமெனக் காண்கிறோமோ, அங்கே இயேசுவை நோக்கிப் பார்த்தவாறே அந்தப்பணியைச் செய்யவேண்டும். ஒவ்வொரு சபை விசுவாசியும் துடிப்புமிக்க நற்செய்தியாளராக விளங்கினால், சகல தேசங்களுக்கும் சகல ஜனங்களுக்கும் ஜாதிகளுக்கும் பாஷைக்காரருக்கும் சுவிசேஷம் வேகமாக அறிவிக்கப்பட்டிருக்கும். 29T, 32 TamChS 108.1
பூமியின் வரலாறு முடிவை நெருங்கிவருகிறது. நமக்கு முன் மிகப்பெரிய ஒரு பணி இருக்கிறது; பாவ உலகத்திற்கு இறுதி எச்சரிப்பின் செய்தியைக் கொடுக்கவேண்டிய இறுதிப்பணி அது. வயலில் ஏர் உழுதுகொண்டும், திராட்சத்தோட்டத்தில் வேலை செய்துகொண்டும், வேறு பல பணிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருப்பவர்கள் உண்டு; இந்த உலகத்திற்குதம் செய்தியை அறிவிக்க ஆண்டவர் அவர்களை அனுப்புவார். 37T, 270 TamChS 108.2
பூமியின் நீளம்-அகலம் முழுவதும் எச்சரிப்பின் ஒலி எழுப்புங்கள். ஆண்டவருடைய நாள் சமீபம் என்றும், அது வேகமாக வருகிறது என்றும் மக்களிடம் சொல்லுங்கள். யாரையும் எச்சரிக்காமல் விடக்கூடாது. பாவத்தில் தவிக்கும் ஏழை ஆத்துமாக்கள் வசிக்கிற இடத்தில் நாம் இருக்கலாம். காட்டுமிராண்டிகள் மத்தியில் நாம் இருக்கலாம். மற்றவர்களைவிட நாம் எவ்வளவுக்கு அதிகம் சத்தியத்தைப் பெற்றிருக்கிறோமோ,அவ்வளவுக்கு அதை அவர்களுக்கு அறிவிக்க கடனாளிகளாக இருக்கிறோம். 46T, 22 TamChS 108.3
என் சகோதர சகோதரிகளே, சுயத்தைச் சேவிப்பதற்கு உங்களுடைய நேரத்தையும் பெலத்தையும் செலவிடுவதற்கு இது நேரமல்ல. பரலோகப் பொக்கிஷத்தைப் பெறாதவர்களாக கடைசி நாளில் இருந்துவிடக்கூடாது. சிலுவையின் வெற்றிகளை முன்னெடுத்துச் செல்ல முயலுங்கள்; ஆத்துமாக்களுக்கு வெளிச்சம் வீச முயலுங்கள்; உங்கள் சகமனிதர்களின் இரட்சிப்புக்காகப் பிரயாசப்படுங்கள்; அப்போது அக்கினிபோன்ற சோதனையிலும் உங்கள் முயற்சிக்கு வெற்றிகிடைக்கும். 59T, 56 TamChS 108.4
கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமுமாக இந்தச் செய்தியை உடனடியாக நாம் அறிவித்தாக வேண்டும். மனிதர்கள் முக்கியத் தீர்மானங்களை எடுத்தாகவேண்டிய நாள் வருகிறது. எனவே, ஞானமுள்ளவர்களாக சரியான பக்கத்தில் நிற்க அவர்கள் தீர்மானிப்பதற்கு, சத்தியத்தை அறிந்து கொள்கிற வாய்ப்பை அவர்களுக்குக் கிடைக்கச்செய்வது நம் கடமையாகும். தவணையின் காலம் முடியும் தருவாயில் இருப்பதால், தம்முடைய மக்கள் ஊக்கத்தோடும் ஞானத்தோடும் செயல்படுவதற்கு தேவன் அழைக்கிறார். 19T, 126,127 TamChS 108.5
காலத்தை வீணாக்க இனியும் நேரமில்லை. முடிவு சமீபித்து விட்டது. சத்தியத்தை அறிவிப்பதற்காக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும்போது, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் சீக்கிரம் ஆபத்துகளை வைப்பார்கள்; தேவதூதை அறிவிப்பவர்களின் பாதையில் சகல தடைகளையும் வைப்பார்கள். அதனால் இப்போது அவர்கள் செய்யக்கூடியதை அப்போது செய்யமுடியாமல் போய்விடும். எனவே, செய்ய வேண்டிய பிரகாரம் இப்போது ஊழியத்தைச் செய்யவேண்டும். முடிந்த அளவுக்கு கடுமையாகப் போராடி முன்னேறவேண்டும். பாதாளத்திலிருந்து பயங்கரமான வேகத்தோடு அந்தகார வல்லமைகள் செயல்படுவதையும், இரை வேட்டையாடுகிற ஓநாயைப்போல இப்போது நித்திரையிலிருப் போரைப் பட்சிக்க சாத்தான் தீவிரமாகச் செயல்படுவதையும் தேவன் எனக்கு தந்த வெளிச்சத்தால் அறிந்திருக்கிறேன். இப்போது நாம் எச்சரிப்புகளைக் கொடுக்கலாம்; இப்போது நாம் ஊழியம் செய்யலாம்; ஆனால் நாம் நினைக்க முடியாத அளவுக்கு ஊழியம் கடினமாகப்போகிற நாள் சீக்கிரம் வருகிறது. வெளிச்சத்தின் பாதையில் நாம் நடந்து, நம் தலைவரான இயேசுவை நோக்கிப் பார்த்து ஊழியம் செய்து, வெற்றிபெறுவதற்கு பொறுமையாகவும் விடாமுயற்சியோடும் முன்னேறிச்செல்ல தேவன் உதவுவாராக. 26T, 22 TamChS 109.1
காலந்தாழ்த்துவதில் ஆபத்து உள்ளது. நீங்கள் கண்டுபிடித்திருக்கவேண்டிய ஆத்துமா, வசனங்களை நீங்கள் அறிவித்திருக்க வேண்டிய ஆத்தமா, எட்டாத தூரத்திற்குச் சென்று விடுகிறது. அந்த ஆத்துமாவுக்கு சாத்தான் வலைவிரிப்பான்; தேவனுடைய பிரதான எதிரியின் திட்டங்களை நாளைக்கே அந்த ஆத்துமா செயல்படுத்தலாம். ஏன் ஒரு நாள் தாமதம்? ஊழியம் செய்ய உடனே ஏன் செல்லக் கூடாது? 36T, 443 TamChS 109.2
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிறிஸ்துவின் சீடர்களுக்கு விழிப்புணர்வும் உண்மையும் தேவைப்படுகிறது. ஆனால், நித்திய வாழ்வின் விளிம்பில் இப்போது நாம் நின்றிருந்தாலும், சத்தியத் தையும் மிகப்பெரிய வெளிச்சத்தையும் பெற்றிருப்பதாலும், மிக முக்கியப் பணியைச் செய்வதாலும், இருமடங்கு கருத்தோடு பிரயாசப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தன் திறமையை முடிந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும். என் சகோதரரே, இப்போது நீங்கள் பின்வாங்கினால், உங்கள் இரட்சிப்புக்கே ஆபத்தை வருவிக்கிறீர்கள். தேவன் உங்களுக்கு நியமித்துள்ள பணியைச் செய்யத் தவறினால், தேவன் உங்களிடம் கணக்குக் கேட்பார். 15T, 460,461 TamChS 109.3