(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 299—316)
ப ரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மிக மேலானதும், பக்திவிநயமானதும், மகிமையும் உள்ள சத்தியங்களில் ஒன்று, மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தின் பணியைப் பூர்த்திசெய்ய நிகழ உள்ள கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாகும்! மரண இருளின் பள்ளத்தாக்கில் பரதேசிகளாக அலைந்து திரியும் தேவனுடைய மோட்சப்பிரயாணிகளுக்கு துரத்தப்பட்ட தம்முடையவர்களை வீட்டிற்குக் கொண்டுவரும்படியான விலைமதிப்புமிக்க நம்பிக்கையைத் தூண்டும் மகிழ்ச்சிமிக்கசெய்தி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருப்பவருடைய வருகையைக்குறித்த வாக்குத்தத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வருகையைப்பற்றிய கோட்பாடுதான் பரிசுத்த வேதவாக்கியங்களின் திறப்புரையாக உள்ளது. முதலாவது தம்பதிகள் ஏதேனிலிருந்து தங்களது துயரமிக்க அடிச்சுவடுகளை எடுத்துவைத்து, வெளியே சென்ற அந்த நாள் முதல், அழிப்பவனின் வல்லமையைத் தகர்த்து மீண்டும் பரலோகத்தை ஸ்தாபிப்பார் என்று வாக்குத்தத்தம் செய்திருந்த ஒருவரின் வருகைக்காக விசுவாசமிக்கவர்கள் காத்திருந்தனர். பழங்கால பரிசுத்த மனிதர்கள் தங்களது நம்பிக்கையின் நிறைவேறுதலாக, மேசியாவின் மகிமைமிக்க வருகையை எதிர்நோக்கி இருந்தனர். ஏதேனில் வாழ்ந்திருந்தவர்களுக்கு ஏழாவது தலைமுறை யிலிருந்த ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் தேவனுடன் சஞ்சரித்திருந்த அவன், விடுதலை வழங்குபவரின் வருகையை வெகு தூரத்திலிருந்து காணும்படி அனுமதிக்கப்பட்டிருந்தான். “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கு ... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” (யூதா 14,15) என்று முன்னறிவித்தான். முற்பிதாவாகிய யோபு, தனது துன்பத்தின் இரவில், அசையாத நம்பிக்கையுடன்: “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:25—27) என்றும் ஆனந்தமாகக் கூறினான். (1) GCTam 343.1
நீதியின் அரசை ஆரம்பிக்க கிறிஸ்து வருகிறார் என்பது, வேத எழுத்தாளர்களை கம்பீரமான உணர்ச்சிமிக்க வார்த்தைகளைக்கூறச்செய்திருக் கிறது. வானுலக நெருப்பினால் பிரகாசிக்கின்ற வார்த்தைகளினால், கவிஞர்களும் தீர்க்கதரிசிகளும் இந்தப் பொருள்பற்றி விவரித்திருக்கின்றனர். இஸ்ரவேலுடைய அரசரின் வல்லமையையும் மகத்துவத்தையும்பற்றி: “பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவர் தம்முடைய ஜனத்தை நியாயந் தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்'‘ சங்கீதம் 50:2-4. “வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந் தீர்ப்பார்” (சங்கீதம் 96:11-13) என்று சங்கீதக்காரன் பாடினான். (2) GCTam 344.1
ஏசாயா: “மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர் களோடே கூட எழுந்திருப்பார்கள் மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள் உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும் மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.” “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் கர்த்தராகிய தேவன் எல்லா முகங் களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து நீக்கிவிடுவார் கர்த்தரே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன் இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார் இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம் இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்” (ஏசாயா 26:19 25:8,9) என்றார். (3) GCTam 344.2
பரிசுத்த தரிசனத்தில் மெய்மறந்த ஆபகூக் அவரது வருகையைப் பார்த்தார். “தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத் திலிருந்தும் வந்தார் சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக் கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது.... அவர் நின்று பூமியை அளந்தார் அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார் பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது. அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.... உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடை இரதங்களின் மேலும் ஏறிவருகிறபோது,... பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின் ஜலம் பிரவாகித்துக் கடந்து போயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன் உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.... உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்” (ஆபகூக் 3:3,4,6,8,10,11,13) என்று கூறினார். (4) GCTam 344.3
இரட்சகர் தமது சீடர்களைவிட்டுப் பிரியவேண்டிய நேரம் வந்தபோது, மீண்டும்வருவேன் என்கிற நிச்சயத்தினால் துயரடைந்த அவர்களை ஆறுதல்படுத்தினார். “உங்கள் இருதயம் கலங்கா திருப்பதாக் என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு ...ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு... நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:1-3) என்றார். “அன்றியும் மனுஷ குமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்”- மத்தேயு 25:31,32.(5) GCTam 345.1
கிறிஸ்து பரலோகத்திற்கு எழுந்தருளிச்சென்றபின்பு ஒலிவ மலையின்மீது தரித்து நின்ற தேவதூதர்கள் அவர் திரும்பி வருவதைப் பற்றிய வாக்குத்தத்தத்தை சீஷர்களுக்கு மீண்டும் கூறினார்கள். “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்”-அப்போஸ்தலர் 1:11. ஆவியானவரால் ஏவப்பட்ட பவுல் அப்போஸ்தலன்: கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (1தெசலோனிக்கேயர் 4:16) என்று சாட்சி பகர்ந்தார். பத்மு தீவின் தீர்க்கதரிசி, “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்” (வெளிப்படுத்தல் 1:7) என்கிறார். (6) GCTam 345.2
“உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்கதரிசிக ளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித்தீரும்” (அப்போஸ்தலர் 3:21) என்பது அவருடைய வருகையின் மகிமையைச் சார்ந்து இருக்கிறது. அப்பொழுது நீண்டகாலமாகத் தொடர்ந்திருந்த தீமையின் ஆளுகை நீக்கப்பட்டுப்போகும். “அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்”- வெளிப்படுத்தல் 11:5. “கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், ... கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.” “அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்... இருப்பார்'— ஏசா. 40:5 61:11 28:5, (7) GCTam 345.3
அதன்பின் சமாதானமிகுந்த, வெகுகாலம் விரும்பியிருந்த மேசியாவின் இராஜ்யம் வானத்தின் கீழெங்கும் ஏற்படுத்தப்படும். “லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்;” “கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.” “நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்”-ஏசாயா 35:2 51:3 62:4,5. (8) GCTam 346.1
கர்த்தரின் வருகை யுகங்கள் நெடுகிலும் அவரது உண்மையான அடியார்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. ஒலிவ மலையின்மீது இரட்சகர் பிரிந்துசெல்லும்போது கொடுத்த “அவர் மறுபடியும் வருவார்” என்ற வாக்குத்தத்தம், துயரம் அணைத்து விடாமலும், சோதனை மங்கச்செய்யாமலும் இருக்கும்படியாக சீஷர்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கி, அவர்களது இருதயங்களை மகிழ்ச்சியாலும் நம்பிக்கையாலும் நிரப்பினது. பாடுகளுக்கும் உபத்திரவங்களுக்கும் இடையில் “மகா தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மகிமையின் பிரசன்னமாகுதல்” அவர்களது பாக்கியமான நம்பிக்கையாயிருந்தது. கர்த்தருடைய வருகையைக் காண்பதற்கு உயிருடன் இருப்பார்கள் என்று நம்பியிருந்த பிரியமானவர்களை கல்லறைகளில் வைத்ததால் துயரடைந்திருந்த தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர்களது ஆசிரியரான பவுல் இரட்சகரின் வருகையின்போது நிகழ இருக்கும் உயிர்த்தெழுதலை “இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 4:16-18) என்று சுட்டிக்காட்டினார். (9) GCTam 346.2
பத்முவின் பாறைகளில் கைதியாயிருந்த அன்பான சீடன்: “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வாக்குத்தத்தத்தைக் கேட்டார். “கர்த்தராகிய இயேசுவே, வாரும்” (வெளிப்படுத்தல் 22:20) என்று அவன் ஏக்கத்துடன் கூறிய பதில் யுகங்கள் நெடுகிலும் பரலோகப் பயணத்தில் இருக்கிற சபையின் ஜெபக்குரலாக இருக்கிறது. (10) GCTam 347.1
பரிசுத்தவான்களும் இரத்தசாட்சிகளும் சத்தியத்திற்குச் சாட்சிபகர்ந்திருந்த இருட்டறை, கட்டப்பட்டு எரிக்கப்பட்ட கம்பம், கழுமரம் ஆகிய இடங்களில் இருந்து நூற்றாண்டுகளாக அவர்களது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் குறித்த வார்த்தைகள் வருகின்றன. ஒரு கிறிஸ்தவர்: “கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை உடையவர்களாய், அதன் பலனாக அவரது வருகையில் தங்களுடைய உயிர்த்தெழுதலில் நிச்சயத்தைக்கொண்டிருந்த காரணத்தால், அவர்கள் மரணத்திற்கு மேற்பட்டவர்களாக இருந்து, மரணத்தை நிந்தித்தனர்” என்கிறார்.--Daniel T. Taylor,The Reign of Christ on Earth: or,The Voice of the Church in All Ages, page 33. சுதந்திரமடைந்தவர்களாக எழும்புவதற்கு ஏதுவாக அவர்கள் கல்லறைக்குள் செல்ல விருப்பமுள்ளவர்களாக இருந்தனர்.—Ibid., page 54. கர்த்தர் தமது பிதாவின் மகிமையுடன் வானத்தின் மேகங்களின்மீது தமது இராஜ்யத்தைக் கொண்டுவரும் காலத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். வால்டென்னியர்கள் இதே விசுவாசத்தைப் பேணியிருந்தனர்.--Ibid., pages 129-132. மீட்பரின் வருகை சபையின் நம்பிக்கையாக இருக்கிறதென்று விக்ளிப் அதை எதிர்பார்த்தார்.-Ibid., pages 132-134. (11) GCTam 347.2
“நியாயத்தீர்ப்பின் நாள் நிகழ்வதற்கு, முந்நூறு வருடங்களுக்கு மேல் செல்லாது” என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். “இந்தத் துன்மார்க்கமான உலகம் அதற்குமேல் நீடித்திருப்பதை தேவன் அனுமதிக்க மாட்டார் அவரால் அனுமதிக்கவும் முடியாது. அருவருப்பு களின் இராஜ்யம் நிச்சயமாகக் கவிழ்க்கப்படும். அந்தப் பெரியநாள் சமீபித்துக்கொண்டிருக்கிறது” என்று லுத்தர் அறிவித்தார்.-Ibid., pages 158, 134.(12) GCTam 347.3
“வயதான இந்த உலகம் அதன் முடிவிற்கு வெகுதூரத்தில் இல்லை” என்று மெலாங்தன் கூறினார். “சகல நிகழ்ச்சிகளிலும் மிகவும் மங்களகர மானதாக இருக்கும் கிறிஸ்துவின் வருகையின் நாளை, தயக்கமின்றி, ஆர்வத்துடன் கிறிஸ்தவர்கள் வாஞ்சிக்கவேண்டும்” என்று கால்வின் அழைத்து, “அந்த நாளை விசுவாசக் குடும்பம் முழுவதும் பார்வையில் வைக்கவேண்டும். நமது கர்த்தர் அவரது இராஜ்யத்தின் மகிமையைப் பூரணமாக வெளிக்காட்டும் அந்தப் பெரிய நாள் உதயமாகும்வரை, நாம் கிறிஸ்துவின்மீது ஏக்கம்கொண்டவர்களாக இருந்து, அதைத் தியானிக்கவேண்டும்” என்று கூறுகிறார்.--Ibid., pages 158,134. (13) GCTam 347.4
ஸ்காட்லாந்து சீர்திருத்தக்காரரான நாக்ஸ்: “நமது கர்த்தராகிய இயேசு நமது மாமிசத்தைப் பரலோகத்திற்குள் கொண்டுசெல்ல வில்லையா? அவர் திரும்ப வரமாட்டாரா? அவர் வருவார். மிக விரைவில் திரும்பவருவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்” என்று கூறினார். சத்தியத்திற்காகத் தங்கள் உயிரை இழந்த ரிட்லியும், லாட்டிமரும், கர்த்தரின் வருகையை விசுவாசத்துடன் நோக்கி இருந்தனர். “இந்த உலகம், ‘நான் இதை நம்புகிறேன். எனவே சொல்லுகிறேன்’ சந்தேகத்திற்கிடமின்றி அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேவனுடைய ஊழியக்காரரான யோவானுடன் சேர்ந்து, இரட்சகராயிருக்கும் கிறிஸ்துவை நோக்கி: ‘கர்த்தராகிய இயேசுவே வாரும்’ என்று நமது இருதயங்களில் கூறுவோமாக” என்று ரிட்லி எழுதினார். Ibid., pages 151,145. (14) GCTam 348.1
“கர்த்தரின் வருகையைக் குறித்த எண்ணங்கள் எனக்கு மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் இருக்கிறது” என்று பாக்ஸ்டர் கூறினார்.--Richard Baxter, Works, vol. 17, p. 555. “அவரது வருகையை நேசிப்பதும், அந்த நம்பிக்கையை நோக்கி இருப்பதும் பரிசத்தவான்களின் குணமும் விசுவாசத்தின் செய்கையுமாயிருக்கிறது.” “உயிர்த்தெழுதலின்போது அழிக்கப்பட உள்ள கடைசி எதிரி மரணமாக இருக்குமானால், இந்தப் பூரணமும் இறுதியுமான வெற்றியை அடையும் நேரமாகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக விசுவாசிகள் எவ்வளவு ஏங்கியிருந்து ஜெபிக்கவேண்டும்.”—Ibid., vol. 17, p. 500. “சகல விசுவாசி களும் அவர்களது மீட்பின் சாதனையாகவும், ஆத்துமாக்களின் அனைத்து வாஞ்சைகளாகவும் முயற்சிகளாகவும் நம்பி, ஏங்கி, காத்திருக்கவேண்டிய நாள் இதுதான்.” “இந்த நாளை விரைவுபடுத்தும் ஆண்டவரே” என்பதுதான் அப்போஸ்தல சபையின் வனாந்தரத்திலிருந்த சபையின் சீர்திருத்தக் காரர்களின் நம்பிக்கையாக இருந்தது.--Ibid., vol. 17, pp. 182, 183.(15) GCTam 348.2
தீர்க்கதரிசனம் கிறிஸ்துவின் வருகையின் விதத்தைப்பற்றி மட்டும் முன்னுரைப்பதோடல்லாமல், அது எவ்வளவு சமீபமாக இருக்கிறது என்பதை மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அடையாளங்களையும் முன்வைக்கிறது. “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்;... பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்”-லூக்கா 21:25. “அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷ குமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்”-மாற்கு 13:24-26. இரண்டாம் வருகைக்குமுன், நிகழ உள்ள அடையாளங்களில் முதலாவதை, வெளிப்படுத்தின விசேஷ க்காரர்: “பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று” (வெளிப்படுத்தல் 6:12) என்று விவரிக்கிறார்.(16) GCTam 348.3
இந்த அடையாளங்கள் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னரே சாட்சியாகக் காணப்பட்டன. இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக, கி.பி.1755-ல் இதுவரை பதிவாகியுள்ள பூகம்பங்களில் மிகவும் பயங்கரமான பூமி அதிர்ச்சி நிகழ்ந்தது. பொதுவாக “லிஸ்பன் பூமி அதிர்ச்சி” என்று அறியப்பட்டிருந்தபோதிலும், அது ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும், ஆப்பிரிக்கா, அமெரிக்க வரையிலும் பரவியது. கிரீன்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், மடேரிய தீவுகள், நார்வே, சுவீடன், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய இடங்களிலும் ஊடுருவியது. ஏறத்தாழ நாற்பது லட்சம் சதுரமைல் பரப்பளவை அது பாதித்தது. ஐரோப்பாவில் இருந்ததைப் போலவே ஏறத்தாழ ஆப்பிரிக்காவிலும் அதன் அதிர்ச்சி இருந்தது. அல்ஜியர்சின் ஒரு பெரும்பகுதி அழிந்தது. மொரோக்கோ விற்குச் சற்று தொலைவில், எட்டு முதல் பத்தாயிரம் மக்கள் குடியிருந்த ஒரு கிராமம் அப்படியே விழுங்கப்பட்டது. ஒரு இராட்சத அலை ஸ்பெயின், ஆப்பிரிக்கா, ஆகிய நாடுகளின் கடற்கரையில் அடித்து, நகரங்களைச் சூழ்ந்து பெரும் அழிவை உண்டாக்கியது. (17) GCTam 349.1
ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இடங்களில்தான் அதன் கடுமை மிக அதிகமாக வெளிக்காட்டப்பட்டது. காதிஸ் என்னுமிடத்தில் மோதிய அலையின் உயரம் அறுபது அடியாக இருந்ததென்று சொல்லப்பட்டது. போர்ச்சுக்கல்லின் பெரிய மலைகளில் சில “அஸ்திவாரத்திலிருந்தே அசைவது போல பயங்கரமாக, சடிதியாக ஆடின.” அதிசயமான விதத்தில் சில சிகரங்கள் உச்சிமுதல் அடிவரையிலும் இரண்டாகப் பிளவுண்டன. பெரும் பாறைகள், அருகில் இருந்த பள்ளத்தாக்குகளுக்கு வீசி எறியப்பட்டன. இந்த மலைகளில் இருந்து தீக்கதிர்கள் உண்டாயின என்றும் கூறப்பட்டது.- Sir Charles Lyell, Principles of Geology,page 495. (18) GCTam 349.2
லிஸ்பனில் பூமிக்கடியில் ஒரு இடிமுழக்கம் கேட்டது. அதைத் தொடர்ந்து உடனே பயங்கரமான அதிர்ச்சி அந்த நகரின் பெரும் பகுதியை கவிழச்செய்தது. சுமார் ஆறு நிமிடங்களில் ஏறத்தாழ அறுபதினாயிரம்பேர் மாண்டனர். முதலில், கடல்நீர் அதன் வெட்டாந் தரையைக் காட்டும் விதத்தில் கடலுக்குள்ளாகப் பின்நோக்கிச் சென்று, அதன்பின் சாதாரணமாக வீசும் அலைகளின் உயரத்தைவிட, ஐம்பத்தைந்து அடி உயரத்திற்கு எழுந்தது. லிஸ்பனில் உண்டான அழிவின் மிக அசாதாரணமான சூழ்நிலை என்னவெனில் மிகுந்த செலவில், முழுவதும் சலவைக் கற்களி னால் கட்டப்பட்டிருந்த ஒரு புதியமேடை நீரில் அமிழ்ந்துபோயிற்று. அழிவுண்டாகாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்று திரள்கூட்டத்தினர் அங்கு கூடியிருந்தனர். ஆனால் திடீரென்று அந்த மேடை அதன்மீதிருந்த மனிதர்களுடன் நீருக்குள் மூழ்கியது. அங்கிருந்தவர்களில் ஒருவரது உடல்கூட நீர்மட்டத்தில் மிதக்கவில்லை!—Ibid., page 495. (19) GCTam 349.3
“அந்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து ஆலயங்களும், மடங்களும், ஏறத்தாழப் எல்லாப் பெரிய கட்டிடங்களும், மொத்த வீடுகளில் கால்பகுதியும் விழுந்தன. அதற்கு இரண்டு மணிநேரத்திற்குப் பின் பல இடங்களிலும் நெருப்புபற்றி, ஏறத்தாழ மூன்று நாட்கள் மிகுந்த உக்கிரத்துடன் எரிந்தது. அந்த நகரம் முற்றிலும் அழிந்துபோயிற்று. ஆலயங்களிலும் மடங்களிலும் மக்கள் நிறைந்திருந்த ஒரு பரிசுத்த நாளில் அந்தப் பூமி அதிர்ச்சி நிகழ்ந்ததால், அவர்களில் மிகச் சிலரே தப்பினர். —Encyclopedia Americana, art. “Lisbon,” note (ed. 1831). (20) GCTam 350.1
மக்களின் திகில் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒருவரும் அழவில்லை. அது அழுகைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்கள் கட்டுக்கடங்காத திகிலுடனும் மலைப்புடனும் தங்களது முகத்திலும் மார்பிலும் அடித்தவர்களாக ‘உலகத்திற்கு முடிவு வந்துவிட்டது’ என்று கூறிக்கொண்டு, அங்கு மிங்கும் ஓடினர். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை மறந்து, சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சொரூபங்களைச் சுமந்துகொண்டு ஓடினர். துரதிர்ஷ்டவசமாக அநேகர் பாதுகாப்புக்காக ஆலயங்களுக்குள் ஓடினர். ஆனால் நற்கருணை வீணாகக் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது. (ரோமன் கத்தோலிக்க குருமார்கள் ஏறெடுக்கும் அப்பத்திற்குள் கர்த்தர் தமது சரீரத்துடனும் இரத்தத்துடனும் எழுந்தருளி வருகிறார் என்பது கத்தோலிக்கமார்க்கத்தின் பொய்ப் போதகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அப்பத்தையும், துணிக்கைகளையும் அவர்கள் நற்கருணை என்று அழைக் கின்றனர். அவர்களது சில விசேஷமான சமயச்சடங்குகளின் போது, திருப்பலிப் பூசைசெய்யும் பீடத்தின்மீதோ அல்லது உயரமான வேறு இடத்திலோ சூரியனும், சிலுவையும் கலந்த வடிவிலான ஒரு பொன் முலாம் பூசப்பட்ட அழகிய கவர்ச்சிமிக்க கூட்டின் நடுவில், வெளியில் நன்கு தெரியக்கூடிய, பெரிய அளவுள்ள ஒரு அப்பம் வைக்கப்பட்டு, ஆராதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஆராதனையின் நடுவில், குருவானவர் அதனை உயர்த்திப்பிடித்து, மக்களுக்குக் காண்பித்து, அதனாலேயே அவர்களை ஆசீர்வதிப்பார். இச்சடங்கு நற்கருணை ஆராதனை என்னப்படுகிறது). பரிதாபத்திற்குரிய மக்கள் வீணாகவே திருப்பலியின் பீடங்களைப் பற்றிக்கொண்டிருந்தனர். சிலைகளும் குருமார்களும் மக்களுமாக அனைவரும் ஒரு பொதுவான அழிவால் புதையுண்டனர். அந்தநாளின் சாவில் தொண்ணூராயிரம் பேர் மடிந்திருப்பார்கள் என்று எண்ணப்படுகிறது! (21) GCTam 350.2
தீர்க்கதரிசனத்தில் சூரியனும் சந்திரனும் இருளடைவதற்கு அடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்த அடையாளம், இருபத்தைந்து வருடங்களுக்குப்பின்பு நிகழ்ந்தது. ஆச்சரியப்படத்தக்கது என்னவெனில், அது நிறைவேறும் காலம் மிகக்குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இரட்சகர் ஒலிவமலையின் மீதிருந்து, அவரது சீடர்களுடன் நிகழ்த்திய அந்த உரையாடலில், சபைக்குப் போப்புமார்க்கத்தினால் உண்டாக இருக்கிற, அதே சமயம் குறைக்கப்படும் என்றும் அவர் வாக்குத்தத்தம் செய்திருந்த 1260 வருட நீண்டகால உபத்திரவத்தைப் பற்றி விவரித்தபிறகு, அவரது வருகைக்கு முன் நிகழக்கூடிய குறிப்பான சம்பவங்களைக் குறிப்பிட்டு, அதிலுள்ள முதலாவது அடையாளம் காணப்படும் நேரத்தையும் குறிப்பிட்டார். “அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்”-மாற்கு 13:24. 1260 வருடங்கள் கி.பி.1798-ல் முடிவடைந்தன. அதற்கு இருபத்தைந்து வருடங்களுக்குமுன், உபத்திரவம் ஏறத்தாழ முற்றிலுமாக நின்றிருந்தது. கிறிஸ்துவின் வார்த்தையின்படி இந்த இரண்டு காலக்கட்டங்களுக்கு இடையில் சூரியன் இருளடையவேண்டும்! 1780-ம் வருடம் மேமாதம் 19—ம் நாள் இந்தத் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. (22) GCTam 351.1
ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும், ஏறத்தாழ இதுவரை விளக்கம் கொடுக்கப்படாத ஒரு புதிரான காட்சியாக இருண்ட நாளான 1780—ம் வருடம் மே மாதம், 19—ம் நாள் இருக்கிறது. காரணம் காட்டப்படமுடியாத விதத்தில், புதிய இங்கிலாந்தில் கண்ணுக்கெட்டக் கூடிய வானவீதி முழுவதும் இருளடைந்திருந்தது.—R. M. Devens, Our First Century, page 89. (23) GCTam 351.2
மசாசூசெட் என்னும் இடத்தில் வசித்து இதை நேரில் கண்ட ஒருவர் இப்படியாக கூறுகிறார்: (24) GCTam 351.3
“காலையில் சூரியன் உதயம் தெளிவாக இருந்தது. ஆனால் விரைவில் மந்தாரமாக மாறிற்று. மேகங்கள் கீழிறங்கின. பயங்கரமாக கருத்திருந்த அம்மேகங்களிலிருந்து மின்னல்கள் மின்னின. இடி முழங்கிற்று. மழை பெய்தது. ஒன்பது மணியவில் மேகங்கள் மெலிந்து வெண்கல அல்லது செப்பு நிறம்போல தோன்றின. பூமி, பாறைகள், மரங்கள், கட்டிடங்கள், தண்ணீர் மற்றும் மனிதர்கள் அனைத்தும் பூமிக்கு அந்நியமான ஒளியால் மாற்றப்பட்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கனத்த கார்மேகம், அடிவானத்திலிருந்த ஒரு மெல்லிய கோட்டைத் தவிர முழு வானத்தையும் மூடிற்று. கோடை இரவு ஒன்பது மணியளவிலிருக்கும் இருளைப்போன்று வானம் இருளாயிருந்தது....” (25) GCTam 351.4
“பயமும் பதட்டமும் பிரம்மிப்பும் மக்களின் மனதை மெல்ல நிரப்பியது. பெண்கள் கதவருகே நின்று இருள்பரம்பிய நிலப்பரப்பை பார்த்தனர். ஆண்கள் வயல்களிலிருந்து வேலையைவிட்டுத் திரும்பினர். தச்சன் தனது கருவிகளையும் கொல்லன் தனது உலையையும் வியாபாரி தனது கடையையும் விட்டுத் திரும்பினர். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பிள்ளைகள் நடுக்கத்துடன் வீடு நோக்கி விரைந்தனர். பயணிகள் அருகிலிருந்து பண்ணைவீடுகளில் குடியேறினர். ‘என்ன வருகிறது?” என்று ஒவ்வொரு உதடும் இதயமும் கேள்வி எழுப்பிற்று. சூறாவளி ஒன்று நிலத்தை இடிப்பதுபோன்று இருந்தது. அல்லது எல்லாம் முடிவுக்கு வருவதுபோலத் தோன்றியது.” (26) GCTam 352.1
“மெழுகுவர்த்திகள் கொளுத்தப்பட்டன. அடுப்புக்களில் நெருப்பு இலையுதிர் காலத்தின் நிலவற்ற இரவில் எரிவதுபோல வெளிச்சமாக எரிந்தது.... கோழிகள் கூடுகளுக்குத் திரும்பின. மந்தைகள் முன்னனை களுக்குத் திரும்பி கதறின. தவளைகள் ஒலி எழுப்பின. பறவைகள் மாலை பாடல்களைப் பாடின. வௌவால்கள் பறக்கத் துவங்கின. ஆனால் இரவு இன்னும் வந்தாகவில்லை என்று மனிதன் அறிந்திருந்தான்....” (27) GCTam 352.2
“சாலேமிலிருந்த கூடார சபை போதகர் டாக்டர் நத்தானியேல் வைட்டேகர்: ஆராதனை வீட்டில் மத ஆராதனை நடத்தினார். இந்த இருள் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று பிரசங்கத்தில் குறிப்பிட்டார். பல இடங்களில் சபைகள் கூடின. அவசரப் பிரசங்கங்களின் மைய வசனங்கள் வேத வாக்கியங்களின் தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இருள்தான் இது என்று குறிப்பிட்டன.... பதினோரு மணிக்கு சற்றுபின் இருள் அடர்த்தி உச்சத்தில் இருந்தது.”—The Essex Antiquarian, April, 1899, vol. 3, No. 4, pp. 53, 54. “நாட்டின் அதிகப்படியான இடங்களில் இருள் மிகுந்திருந்ததால் விளக்கின் ஒளியில்லாமல் மக்களால் சாப்பிடவோ வேலை செய்யவோ அல்லது கை கடிகாரத்திலிருந்தும் சுவர் கடிகாரத்திலிருந்தும் மணிக்கணக்கைக் காணவோ கூடாதிருந்தது....” (28) GCTam 352.3
“இவ்விருளின் பரப்பளவு விசித்திரமாயிருந்தது. கிழக்கில் பால்மவுதிலிருந்து காணப்பட்டது. மேற்கில் கனக்டிகட்-ன் தூர பகுதிவரையும் அல்பானி வரையும் இருந்தது. தெற்கில் கடல் எல்லைவரை இருந்தது. வடக்கில் அமெரிக்க குடியிருப்புவரை இருந்தது.-William Gordon,History of the Rise, Progress,and Establishment of the Independence of the U.S.A.,vol. 3, p. 57. (29) GCTam 352.4
அந்த நாளின் கடுமையான இருள் மாலைவேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்குமுன் பாதி தெளிந்தது. கனத்த மேகமூட்டத்தினால் மறைக்கப்பட்டிருந்தபோதிலும் சூரியன் காணப்பட்டது. ஆனால் அந்த இடைவேளையைத் தொடர்ந்து மிக அடர்த்தியான இருள் உண்டாயிற்று. அந்நாளின் பகலின் பயங்கரத்தையும் அசாத்தியத்தையும் விட அது சற்றும் குறைந்திருக்கவில்லை. அன்று இரவு முழு நிலவு இருந்திருந்தபோதிலும் செயற்கை ஒளி இல்லாமல் எந்த பொருளையும் காணமுடியவில்லை. தூரத்திலிருந்த வீடுகளிலும் இடங்களிலுமிருந்து பார்த்தபோது, அது ஒருவிதத்தில் எகிப்திய இருளைப்போன்றே இருந்தது. அது இருளின் கருமை என்று கூறப்பட்டது.--Isaiah Thomas, Massachusetts Spy; or,American Oracle of Liberty, vol. 10, No. 472 (May 25,1780). அந்தக் காட்சியைக் கண்ணாரக்கண்ட ஒரு சாட்சி: “அந்த நேரத்தில் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு ஒளிதரும்பொருளும் கடக்கமுடியாத இருளினால் போர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டதா? அல்ல இல்லாமலாகிவிட்டதா? என்பதை நிதானிக்க முடியவில்லை” என்றார். அந்த இரவில் நிலவு முழுநிலவாக எழுந்தபோதிலும், மரணத்தைப் போன்ற நிழலை நீக்க அதற்கு வலிமை இல்லாதிருந்தது.- Letter by Dr. Samuel Tenney,of Exeter,New Hampshire,December,1785 (in Massachusetts Historical Society Collections,1792,1st series,vol. 1, p. 97). ஒன்பது மணியளவில் நிலவு காணப்பட்டபோதும் மரணத்தைப் போன்ற இருளை விலக்குவதற்கு அதனால் இயலவில்லை. நடு இரவிற்குப்பின் இருள் மறைந்தது நிலவு முதலில் தோன்றியபோது இரத்தத்தைப்போன்ற தோற்றத்தில் இருந்தது. (30) GCTam 353.1
விட்டியர் என்ற கவிஞர் அந்த நினைவு நாளைக்குறித்து இவ்வாறு எழுதுகிறார்: (31) GCTam 353.2
“1780-ம் வருடத்தின் மேதினம் அது. வசந்தகாலத்தின் இனிமையின்மேலும், மலர்ச்சியின்மேலும், புத்துயிர் பெற்றிருந்த பூமியின்மேலும், மதிய வானின்மேலும் பயங்கர இருளின் பயம் விழுந்தது. ஆண்கள் ஜெபிக்க, பெண்கள் அழ, இருண்ட வானத்தை சிதறடிக்கும் முடிவை அறிவிக்கும் எக்காள தொனியைக் கேட்க காதுகள் கூர்மையடைந்தன.” (32) GCTam 353.3
வரலாற்றில் 1780-ம் வருடம், மே மாதம் 19—ம் தேதி “இருண்ட நாள்” என்றழைக்கப்படுகிறது. மோசேயின் காலத்திலிருந்து அதற்குச் சமமான அடர்த்தி, விசாலம், கால அளவோடு கூடிய இருட்டான நேரம் ஒருபோதும் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. கவிஞர்கள் சரித்திர எழுத்தாளர்கள் கொடுத் திருக்கும் விளக்கங்கள், அவைகளின் நிறைவேறுதலுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன், “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்” (யோவேல் 2:31) என்று யோவேல் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட வார்த்தைகளின் எதிரொலியே. (33) GCTam 353.4
கிறிஸ்து அவரது மக்களிடம் அவரது வருகையின் அடையாளங்களைக் கவனித்திருக்கும்படி அழைத்து, வரப்போகும் அவர்களது அரசரின் வருகைக்கான அடையாளங்களைக்கண்டு சந்தோஷப்படும்படி கூறி யிருந்தார். “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.” (லூக்கா 21:28). இயேசு வசந்தகாலத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மரங்களைச் சுட்டிக்காட்டி, “அவைகள் துளிர்க் கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்” (லூக்கா 21:30,31) என்றார். (34) GCTam 354.1
ஆனால் சபையில் தாழ்மையின் ஆவியும் பக்தியும் இருந்த இடத்தை, அகந்தையும் சம்பிரதாயமும் பற்றிக்கொண்டபோது, கிறிஸ்துவின்மீதுள்ள அன்பும், அவரது வருகையின்மீதான விசுவாசமும் குளிர்ந்துபோயிற்று. உலகப்பிரகாரமாக இருப்பதிலும் இன்பங்களைத் தேடுவதிலும் மூழ்கி, தேவனுடைய மக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இரட்சகருடைய வருகையின் அடையாளங்களைப்பற்றிய போதனைகளுக்குக் குருடர்களாக இருந்தனர். இரண்டாம் வருகையின் கோட்பாடு அலட்சியப்படுத்தப்பட்டிருந்தது. அது சம்பந்தப்பட்ட வேதவாக்கியங்கள் பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டு, மறக்கப்படும்வரை தவறான விளக்கங்களினால் மறைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அமெரிக்க சபைகளில் இந்தநிலை இருந்தது. சமுதாயத்திலிருந்த சகல வகுப்பினரும் அனுபவித்திருந்த சுதந்திரமும் வசதிகளும், சொத்துக்கள் ஆடம்பரங்களின் மீதிருந்த மோகமும், பணம் சம்பாதிப்பதற்கான வழி வகைகளைக் காணும் நாட்டமும், அனைவருக்கும் எட்டும் தூரத்தில் இருப்பதுபோல் காணப்பட்ட புகழ் வல்லமைகளைத் தேடி விரையும் ஆவலும், தங்களது விருப்பங்களையும் நம்பிக்கையையும் இந்த வாழ்க்கைக்குரிய வைகளில் வைக்கும்படி நடத்தி, வெகு தூரத்திலுள்ள ஒரு நாளுக்கு, இந்த வாழ்க்கையின் பக்திவிநயமான முடிவு நாளை தள்ளி வைத்தது. (35) GCTam 354.2
இரட்சகர் தமது இரண்டாம் வருகையின் அடையாளங்களை தமது அடியார்களுக்குச் சுட்டிக்காட்டியபோது, அவரது வருகைக்குச் சற்றுமுன் இருக்கக்கூடிய பின்னிட்டு விழுதலின் நிலையை முன்னுரைத்தார். உலக தொழில்களின் வேகமும், இன்பமும் தேடுதலும், வாங்குதலும் விற்றலும், நடுதலும், கட்டுதலும், பெண்கொடுத்தலும் பெண் கொள்ளுதலும், தேவனையும் எதிர்கால நித்திய வாழ்க்கையையும் மறுத்தலும் நோவாவின் காலத்தில் இருந்ததைப்போலவே இருக்கும் என்றார். இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கிறிஸ்துவின் எச்சரிப்பு: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” என்பதே லூக்கா 21:34—36. (36) GCTam 354.3
இந்தக்காலக்கட்டத்தில்சபையின் நிலைமையைப்பற்றி வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள இரட்சகரின் வார்த்தைகள்: “நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” வெளிப்படுத்தல் 3:1. தங்களின் கவலையற்ற பாதுகாப்பிலிருந்து விழித்தெழ மறுப்பவர்களுக்கு பக்திவிநயமான இந்த எச்சரிப்பு: “நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்”- வெளிப்படுத்தல் 3:3. (37) GCTam 355.1
தவணையின் காலத்தின் முடிவிலுள்ள பக்திவிநயமான சம்பவங்களுக்கென்று ஆயத்தமாகும்படி, வரவிருக்கும் ஆபத்தை உணரும்படி மனிதர்களை விழிக்கச்செய்வது அவசியமாக இருந்தது. “கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?” “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?”-யோவேல் 2:11 ஆபகூக் 1:13. “எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம்” என்று சொல்லி “அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால்”-ஓசியா 8:2. “அந்நியதேவனை நாடிப் பின்பற்றினார்கள்”-சங்கீதம் 16:4. தங்கள் இருதயங்களில் அக்கிரமத்தை மறைத்துவைத்து, அநீதியின் பாதைகளின்மீது பிரியமாயிருப்பவர்களுக்கு, கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமா யிருக்குமல்லவோ?”-ஆமோஸ் 5:20. “அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போல குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்” (செப்பனியா 1:12) என்பது அப்பொழுது நடைபெறும். “பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்”- ஏசாயா 13:11. “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்” (செப். 1:18,13) என்று தேவனுடைய தீர்க்கதரிசிகள் அறிவிக்கின்றனர்.(38) GCTam 355.2
பயங்கரமான இந்தக் காலத்தைப் பார்த்த எரேமியா தீர்க்கதரிசி திகைத்து, “என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது” (எரேமியா 4:19,20) என்று கூறினார். (39) GCTam 356.1
“அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்”-செப். 1:15,16. “இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது”ஏசாயா 13:9. (40) GCTam 356.2
அந்த மகத்தான நாளைக்குறித்து, தேவனுடைய மக்கள் அவர்களது ஆவிக்குரிய சொரணையற்ற நிலையை விட்டொழிக்கவும், மனந்திரும்புதலுடனும் தாழ்மையுடனும் அவருடைய முகத்தைத் தேடவும், மிகவும் பக்திவிநயமாகவும் உள்ளத்தைத்தொடும் மொழி GCTam 356.3
மொழியிலும் தேவனுடைய வார்த்தையானது அழைக்கிறது. “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.” “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக. கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.’ “ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்”யோவேல் 2:1,15—17,12,13. (41) GCTam 356.4
தேவனுடைய நாளில் நிற்பதற்கு ஒரு ஜனத்தை ஆயத்தம் செய்ய ஒரு பெரும் சீர்திருத்தம்செய்து முடிக்கப்படவேண்டியதாக இருந்தது. தங்களைத் தேவனுடையவர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் மக்களில் அநேகர் நித்தியகாலத்திற்கென்று கட்டுமானம் செய்யாதவர்களாக இருப்பதை தேவன் கண்டார். எனவே அவர் தமது இரக்கத்தினால் அவர்களுடைய மயக்கத்திலிருந்து அவர்களை எழுப்புவதற்காகவும், அவர்கள் கர்த்தருடைய வருகைக்கென்று ஆயத்தமாகும்படி நடத்தவும் ஒரு எச்சரிப்பின் தூதை அனுப்பி இருந்தார். (42) GCTam 357.1
இந்த எச்சரிப்பு வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரத்தில் காட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கே மூன்று வகையான தூதுகள், பரலோகவாசிகளால்அறிவிக்கப்படுவதுபோல்காட்டப்பட்டு, அதைத்தொடர்ந்து, பூமியை அறுவடை செய்ய மனுஷகுமாரன் வருவதாகவும் இருக்கிறது. இந்த எச்சரிப்புகள், சமீபித்துக்கொண்டிருக்கும் நியாயத்தீர்ப்பைப்பற்றி முதலாவது அறிவிக்கிறது. தீர்க்கதரிசி வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்ட தூதன், “பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்று களையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்”- வெளிப்படுத்தல் 14:7. (43) GCTam 357.2
இந்தத் தூது, “நித்திய சுவிசேஷத்தின்” ஒரு பகுதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி தூதர்களிடம் ஒப்படைக்கப்படாமல், மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் இரட்சிப்பிற்கான இந்த மாபெரும் பணியை இயக்கும் வேலையில், தேவதூதர்கள் பொறுப்புள்ளவர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி, பூமியிலுள்ள கிறிஸ்துவின் ஊழியக்காரர்களால் செய்யப்படுகிறது. (44) GCTam 358.1
தேவ ஆவியின் தூண்டுதலுக்கும் அவரது வார்த்தைகளின் போதனைகளுக்கும் கீழ்ப்படிந்த விசுவாசமிக்க மனிதர்கள், இந்த எச்சரிப்பை உலகத்திற்கு அறிவிக்கவேண்டியவர்களாக இருந்தனர். அவர்கள் “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனத்திற்கும்” “பொழுது விடிந்து விடிவெள்ளி இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்திற்கும்” (2 பேதுரு 1:19) செவிசாய்த்திருந்தனர். மறைத்துவைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் அனைத்தையும்விட, தேவனைக் குறித்த அறிவை, “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (நீதி. 3:14) என்று அறிந்து, அதிகமாக தேடிக்கொண்டிருந்தனர். கர்த்தர் அவர்களுக்கு இராஜ்யத்தின் மேன்மையின் காரியங்களை வெளிப்படுத்தினார். “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்”- சங்கீதம் 25:14. (45) GCTam 358.2
சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அதை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சபையின் தலைவர்களை அல்ல. ஜெபத்துடனும் அக்கரையுடனும் வேதவாக்கியங்களை ஆராய்ந்திருந்த விசுவாசமிக்க காவல்காரர்களாக அவர்கள் இருந்திருந்தால், இரவின் நேரத்தை அறிந்திருப்பார்கள். நிகழ இருக்கின்ற சம்பவங்களை தீர்க்கதரிசனங்கள் அவர்களுக்குத் திறந்து காட்டியிருந்திருக்கும். அவர்கள் இந்தப் பதவியில் அமர்த்தப்படவில்லை. அந்தத் தூது வேறொரு வகுப்பினரால் கொடுக்கப்பட்டது. “இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்” (யோவான் 12:35) என்று இயேச கூறினார். தேவன் கொடுத்திருக்கும் ஒளியிலிருந்து விலகிச் செல்லுபவர்கள் அல்லது அவர்கள் அடைந்துகொள்ளும் தூரத்தில் ஒளி இருக்கும்போது, அதைத் தேடாமல் அலட்சியம் செய்பவர்கள் இருளில் விட்டுவிடப்படுகின்றனர். ஆனால் “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” (யோவான் 8:12). தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் என்கிற ஒரே நோக்கத்தோடு, ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள ஒளியை வாஞ்சையுடன் கவனித்திருந்தவர்கள் எவர்களோ அவர்கள் அதிகமான ஒளியைப் பெறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆத்துமாவை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்த பரலோக ஒளியை உடைய ஏதாவதொரு நட்சத்திரம் அனுப்பிவைக்கப்படும். (46) GCTam 358.3
கிறிஸ்துவின் முதலாம் வருகையின் காலத்தில், தேவனுடைய கற்பனைகள் (ஜீவ வார்த்தைகள்) அந்தப் பரிசுத்த நகரத்திலிருந்த எந்த ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்புவிக்கப் பட்டிருந்ததோ, அவர்கள், வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த ஒருவரின் வருகைக்கான காலங்களின் அடையாளங்களை அறிந்து, அதை அறிவித்திருக்கவேண்டும். மீகாவின் தீர்க்கதரிசனம் இயேசு பிறக்கப்போகும் இடத்தைச் சுட்டிக்காட்டி யிருந்தது (மீகா 5:2). அவரது வருகையின் நேரத்தை தானியேல் குறிப்பிட்டிருந்தான். (தானி. 9:25). தேவன் இந்தத் தீர்க்கதரிசனங்களை யூதத் தலைவர்களிடம் ஒப்படைத்திருந்தார். மேசியாவின் வருகை சமீபமாக இருக்கிறது என்பதை அறியாதவர்களாக, அதை மக்களுக்கு அறிவிக்காமல் இருந்ததற்கு அவர்கள் சாக்குபோக்குக்கூறமுடியாதவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறியாமைக்கு, அவர்களது பாவகரமான அலட்சியம்தான் காரணமாக இருந்தது. கொலைசெய்யப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு, யூதர்கள் நினைவுச்சின்னங்களைக் கட்டிக்கொண்டிருந்தனர். அதே நேரம் பூமியிலிருந்த பெரிய மனிதர்களை மதித்ததால் சாத்தானின் வேலைக்காரர்களுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்கள். மனிதர்களுக்கிடையில் தங்களுக்கு முக்கியமான இடமும் வல்லமையும் வேண்டுமென்ற ஆசைமிக்க குழப்பங்களில் மூழ்கி, பரலோக அரசரால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட யோசனை களையும் தெய்வீக மேன்மையைப்பற்றிய பார்வையையும் இழந்திருந்தார்கள். (47) GCTam 359.1
மனிதனின் இரட்சிப்பை நிறைவேற்ற தேவகுமாரன் வருகிற உலக வரலாற்றின் மிகப்பெரிய நிகழ்ச்சியை, அது நடைபெற இருக்கின்ற இடம், நேரம், சூழ்நிலைகள் ஆகிவைகளை இஸ்ரவேலின் தலைவர்கள் மிகுந்த ஆழமும் பக்தியுமிக்க வாஞ்சையுடன் ஆராய்ந்திருக்கவேண்டும். உலக மீட்பரை வரவேற்பவர்களில் முதல் நபர்களாக இருக்கவேண்டும் என்று மக்கள் அனைவரும் விழித்திருந்து காத்திருந்திருக்க வேண்டும். ஆனால் இதோ, நாசரேத்தின் குன்றுகளிலிருந்து, பெத்லகேம் ஊரின் கிழக்கு ஓரத்தைநோக்கி, அதன் இடுக்கமான தெருக்களின் வழியாக, களைப்படைந்த பயணிகள் இருவர் இரவுநேரத்தில் தங்கி இளைப்பாற கிடைக்காத ஒரு இடத்தைத் தேடிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களை ஏற்றுக்கொள்ள எந்தக் கதவும் திறக்கப்படவில்லை. துர்ப்பாக்கியமான ஒரு மாட்டுத்தொழுவத்தில் கடைசியாக தஞ்சம் புகுந்தனர். அங்குதான் உலகத்தின் இரட்சகர் பிறந்திருக்கிறார்! (48) GCTam 359.2
உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவனுடைய மகிமையில் அவரது குமாரன் பெற்றிருந்த மகிமையின் பங்கை பரலோக தூதர்கள் கண்டிருந்தனர். சகல மக்களுக்கும் மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடிய அவரது வருகையை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தவர்களுக்கும், அதைப் பூமியின் குடிகளுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிப்பவர்களுக்கும், அந்த நற்செய்தியை எடுத்துச்செல்லும்படி தேவதூதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மானிடத்தன்மையைத் தம்மீது ஏற்றுக்கொள்ளக்கிறிஸ்து கீழே இறங்கியிருந்தார். அவர் தமது ஆத்துமாவைப் பாவநிவாரண பலியாகச் செலுத்துவதற்கு, முடிவில்லாத ஆபத்தின் பாரத்தை சுமக்கவேண்டியிருந்தது. என்றாலும் அந்தத் தாழ்மையிலும் அவருக்குப் பொருத்தமான தன்மையில், மதிப்புடனும் மகிமையுடனும் உன்னதமானவருடைய குமாரன் மனிதர்களின்முன் தோன்றவேண்டும் என்று தேவதூதர்கள் வாஞ்சித்தனர். பூமியிலுள்ள பெரிய மனிதர்கள் அவரது வருகையை வரவேற்க இஸ்ரவேலின் தலைநகரில் கூடுவார்களா? அவரை எதிர்பார்த்திருக்கும் கூட்டத்தினருக்குமுன் அவர் வெளிப்படும்போது லேகியோன்களான தேவதூதர்கள் உடன் வருவார்களா? (49) GCTam 360.1
இயேசுவை வரவேற்க யாரெல்லாம் ஆயத்தமாக இருக்கின்றனர் என்பதைக் காண, ஒரு தேவதூதன் பூமிக்கு வருகிறான். ஆனால் எதிர்பார்ப்பின் அடையாளம் எதையும் அவனால் காண முடியவில்லை. மேசியாவின் வருகை சமீபமாக இருக்கிறது என்பதை அறிவிக்கும் துதியையோ வெற்றி முழக்கத்தையோ அவனால் கேட்கமுடியவில்லை. காலங்கள் நெடுகிலும் தெய்வீகப் பிரசன்னம் எங்கு வெளிக்காட்டப்பட்டிருந்ததோ, அந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட நகரத்தின்மீதும் ஆலயத்தின்மீதும் மேலாகப்பறந்து வட்டமிடுகிறான். ஆனால் இங்குங்கூட அதே வேற்றுமைதான் காணப்படுகிறது. ஆசாரியர்கள் தங்களுடைய ஆடம்பரத்திலும், அகந்தையிலும், மாசுள்ள பலிகளை ஆலயத்திற்குள் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். பரிசேயர்கள் உரத்த சத்தத்துடன் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்றனர். அல்லது தெருக்களின் முனைகளில் நின்று, பெருமையான தங்கள் ஜெபங்களைக் கூறிக்கொண்டிருக் கின்றனர். பரலோகம் முழுவதையும் மகிழ்ச்சியால் நிரப்பியிருக்கிற “மனிதர்களின் மீட்பர் பூமியில் தோன்றப்போகிறார்” என்ற ஆச்சரியமான உண்மையைப்பற்றி, அரண்மனைகளிலுள்ள அரசர்களும், தத்துவ சாஸ்திரிகளின் மன்றங்களிலும் ரபிமார்களின் பள்ளிகளிலும் உள்ள அனைவரும் எண்ணமற்றவர்களாக இருந்தனர்! (50) GCTam 360.2
கிறிஸ்து எதிர்பார்க்கப்படுகிறார் என்பதற்கான சான்று எதுவும் இருக்கவில்லை. ஜீவாதிபதியை வரவேற்பதற்கான எந்த ஆயத்தமும் இருக்கவில்லை. அந்த பரலோகத் தூதன் இந்த வெட்கமிக்க செய்தியுடன் பரலோகத்தை நோக்கித் திரும்பப்போகும்வேளையில், இரவுநேரத்தில் தங்கள் மந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களின் ஒரு கூட்டம், வானத்தை அண்ணாந்து பார்த்து, மேசியா என்கிற ஒருவர் பூமிக்கு வரவிருப்பதைத் தியானித்து, உலக மீட்பரின்வருகைக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக்கண்டான். பரலோகத்தின் தூதைப் பெற்றுக்கொள்ள இங்கே ஒரு கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது! மாபெரும் மகிழ்ச்சியின் செய்தியை அறிவித்துக்கொண்டு கர்த்தருடைய தூதன் திடீரெனத் தோன்றினான். வானுலக மகிமை அந்தப் பிரதேசம் முழுவதையும் நிரப்பியது. மகிழ்ச்சி மிக்க அந்தச்செய்தியை பரலோகத்திலிருக்கிற ஒரு தூதனால் மட்டும் கொண்டுவரமுடியாது என்பதுபோல், எண்ணிலடங்காத தூதர்களின் கூட்டம் வெளிப்பட்டு, மீட்கப்பட்ட சகல ஜாதிகளும் ஒரு நாளில் பாடக்கூடிய பாடலாகிய “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்கா 2:14) என்ற பாடலைப்பாடி தேவனைத் துதித்தார்கள். (51) GCTam 361.1
ஓ! பெத்லகேமின் இந்தக் கதை எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! நமது நம்பிக்கையின்மை, நமது அகந்தை, நமது சுயநிறைவு ஆகியவைகளை அது எப்படிக் கடிந்துகொள்ளுகிறது! நமது குற்றமுள்ள அலட்சியத்தினால், நாமும் காலங்களின் அடையாளங்களையும் அவர் நம்மைச் சந்திக்கும் நேரத்தையும் அறிந்துகொள்ளத் தவறிவிடாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி, அது நம்மை எவ்விதமாக எச்சரிக்கிறது! (52) GCTam 361.2
இயேசுவின் வருகையை கவனித்திருந்தவர்களை யுதேயாவின் குன்றுகளில்மட்டும், தாழ்மையான மேய்ப்பர்களுக்கிடையில் மட்டும் தேவதூதர்கள் காணவில்லை. அஞ்ஞானிகளின் தேசத்திலும் அவரை எதிர்பார்த்திருந்தவர்கள் இருந்தனர். அவரை எதிர்பார்த்திருந்த அந்த மனிதர்கள், ஞானமும், செல்வமும், மேன்மையுமிக்க கீழ்த்திசையின் தத்துவ சாஸ்திரிகளாக இருந்தனர். இயற்கையின் மாணவர்களாக இருந்த அந்த ஞானிகள், தேவனை அவரது கரத்தின் கிரியைகளில் கண்டிருந்தனர். “யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்” என்று எபிரெய வேதவாக்கியங்களிலிருந்து அறிந்து, “இஸ்ரவேலுக்கு ஆறுதலாகவும், பூமியின் கடைசிபரியந்தம் ஜாதிகளுக்கு ஒளியாகவும் இரட்சிப்பாகவும்” இருக்கக்கூடியவரின் வருகைக்காக ஆர்வமிக்க வாஞ்சையுடன் அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் ஒளியைத்தேடினவர் களாக இருந்ததினால், தேவ சிங்காசனத்திலிருந்து ஒளி அவர்களது கால்களின் பாதைக்கு வெளிச்சம் தந்தது. சத்தியத்தின் பாதுகாவலர்களாகவும், அதற்கு விளக்கம் கொடுப்பவர்களாகவும் இருக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருந்த எருசலேமின் ஆசாரியர்களும் ரபிமார்களும் இருளால் மூடப்பட்டிருந்தபோது, பரலோகம் அனுப்பிய நட்சத்திரம் இந்தப் புறஜாதியார்களாக இருந்த அந்நியர்களை, புதிதாகப் பிறந்திருக்கும் அரசரின் பிறப்பிடத்திற்கு வழிநடத்தினது! (53) GCTam 361.3
“கிறிஸ்துவும்... தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” எபிரெயர் 9:28. இரட்சகருடைய பிறப்பின் தூதைப் போலவே இரண்டாம் வருகையின் தூதும், மதத்தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர்கள் தேவனுடனுள்ள தொடர்பை பாதுகாத்துக்கொள்ளத் தவறி இருந்ததால் பரலோகத்தின் ஒளியை நிராகரித்தனர். அப்போஸ்தலனால் விவரிக்கப்பட்ட கூட்டத்தில் அவர்கள் இருக்கவில்லை. “சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே”-1 தெசலோனிக்கேயர் 5:4,5, (54) GCTam 362.1
சீயோனின் சுவர்களின் மீதிருந்த, காவல்காரர்கள்தான் இரட்சகருடைய வருகையின் செய்தியை முதலாவதாகப் பற்றிக்கொள்பவர்களாகவும், அவருடைய வருகையின் சமீபத்தை அறிவிப்பதில் முதலாவது தங்கள் குரலை உயர்த்துபவர்களாகவும், அவரது வருகைக்கென்று ஆயத்தமாகும்படி மக்களை முதலாவது எச்சரிப்பவர்களாகவும் இருந்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பற்றிக் கனவுகண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தனர். மக்கள் அவர்களது பாவங்களில் நித்திரை செய்துகொண்டிருந்தனர். இயேசு தமது சபையை, செழுமையான இலைகளைக் கொண்டிருந்தும் விலைமதிப்பான கனிகொடாத அத்திமரமாகக் கண்டார். தேவனுடைய சேவைக்கு ஏற்ற உண்மையான தாழ்மையின் ஆவியும், பாவத்திற்கான வருத்தமும் விசுவாசமும் இல்லாமல், மதச்சடங்குகளை பெருமையாகச் செய்துகொண்டு இருந்தனர். ஆவியின் கனியை விடுத்து, பெருமை சம்பிரதாயம் வீண்மகிமை சுயநலம், ஒடுக்குதல் ஆகியவை வெளிக்காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பின்னிட்டு விழுந்துபோன ஒரு சபை காலங்களின் அடையாளங்களுக்கு அதன் கண்களை மூடிக்கொண்டது. தேவன் அவர்களை கைவிடவோ அல்லது விசுவாசிகள் தோல்வியடையவோ விட்டுவிடவில்லை. ஆனால் அவர்கள் தாங்களாகவே அவரைவிட்டு விலகிச்சென்று, அவரது அன்பிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டிருந்தனர். நிபந்தனைகளுக்கு உடன்பட அவர்கள் மறுத்தபோது, அவரது வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு நிறைவேறவில்லை. (55) GCTam 362.2
தேவன் அருளும் ஒளியையும், சலுகைகளையும் வரவேற்று பெருகும்படிச் செய்யாமல், அலட்சியப்படுத்துவதன் நிச்சயமான பலன் அப்படிப்பட்டதாக உள்ளது. சபை அவரது ஆரம்ப தெய்வீகப் பாதுகாப்பைப் பின்பற்றி, ஒளியின் ஒவ்வொரு கீற்றையும் ஏற்றுக்கொண்டு, வெளிப்படுத்தப்படும் ஒவ்வொரு கடமையையும் செய்யாவிட்டால், மதம் என்பது சடங்குகளைக் கடைப்பிடிப்பதாகி, ஜீவாதாரமான தெய்வபக்தி மறைந்து, தடுக்கமுடியாத விதத்தில் சீரழிந்துபோகும். சபையின் வரலாற்றில் இந்த உண்மை திரும்பத்திரும்ப சித்தரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள், சலுகைகள் ஆகியவைகளுக்குத் தக்கதாக தேவன் அவரது மக்களிடமிருந்து விசுவாசத்தின் கிரியைகளையும் கீழ்ப்படிதலையும் எதிர்பார்க்கிறார். கீழ்ப்படிதலானது தியாகத்தையும் சிலுவையையும் உள்ளடக்கி இருக்கிறது. இதனால் தங்களை கிறிஸ்துவின் அடியார்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களில் அநேகர் பரலோகத்திலிருந்து வந்த ஒளியைப் பெற்றுக்கொள்ள மறுத்து, பண்டைய யூதர்களைப்போல, அவர்களைச் சந்திக்கும் காலத்தை அறியாதவர்களாக இருந்தனர். அவர்களது பெருமை, நம்பிக்கை யின்மையினால் கர்த்தர் அவர்களைக் கடந்துசென்று, கொடுக்கப்பட்ட ஒளி அனைத்தையும் கவனித்திருந்த பெத்லகேமின் மேய்ப்பர்கள் கீழ்த்திசை ஞானிகள் போன்றோருக்கு அவரது சத்தியத்தை வெளிப்படுத்தினார். (56) GCTam 363.1