(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 317-342)
வே த வாக்கியங்களின் தெய்வீக அதிகாரத்தை சந்தேகிக்கும்படி நடத்தப்பட்டிருந்த, ஆனாலும் சத்தியத்தை அறியவேண்டுமென்று உண்மையாக விரும்பியிருந்த, நேர்மைமிக்க இருதயத்தைக் கொண்டிருந்த ஒரு விவசாயி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவிக்கும் பணியை முன்னின்று நடத்த தேவனால் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அநேக சீர்திருத்தக்காரர்களைப் போலவே, வில்லியம் மில்லரும் ஆரம்பகால வாழ்க்கையில் வறுமையுடன் போரிட்டதால், உழைப்பு சுயமறுப்பு போன்ற பெரும் பாடங்களைக் கற்றறிந்தார். அவர் தோன்றியிருந்த குடும்பத்தின் அங்கத்தினர்கள், அவரது சுபாவத்தில் மேலோங்கியிருந்த சுதந்திர மனப்பான்மையையும், சுதந்திரத்தை விரும்பும் ஆவியையும், உழைக்கும் திறமையையும், உறுதியான நாட்டுப்பற்றையும் இயல்பாகக் கொண்டவர்களாக இருந்தனர். அவரது தந்தை புரட்சிப் படையில் ஒரு கேப்டனாக இருந்தார். போர்ப்புயல்மிக்க அக்காலத்தில் நிகழ்ந்த போராட்டங்களிலும் பாடுகளிலும் அவர் செய்த தியாகங்களை மில்லரின் ஆரம்பகால வாழ்க்கையை உருவாக்கிய சூழ்நிலைகளில் காணலாம். (1) GCTam 365.1
அவர் நல்ல உடல்வாகு உடைய மனிதராக இருந்தார். சிறு பிராயத்திலேயே அசாதாரணமான நுண்ணறிவுபலத்தை கொண்டிருந்ததற்கு சான்று பகர்ந்தார். பெரியவனாக வளர்ந்தபோது, அது அதிகமாகத் தெரிந்தது. அவரது மனம் செயலாற்றல் மிக்கதாகவும், நன்கு வளர்ச்சி அடைந்ததாகவும் இருந்தது. அதிகமான அறிவுத் தாகமுடையவராகவும் இருந்தார். அவர் கல்லூரிப் படிப்பின் வாய்ப்பை அனுபவிக்காமலிருந்த போதிலும், ஆராய்ச்சியின் மேலிருந்த ஆர்வமும், கவனமாகச் சிந்திக்கும் பழக்கமும், நெருக்கமான விமரிசனமும், சிறப்பாக நிதானித்துப் புரிந்துகொள்ளக்கூடிய பார்வை உடையவராக அவரை மாற்றின. நேர்மை, சிக்கனம், அனுதாபம் ஆகியவைகளினால் பொதுவாக மதிக்கப்பட்டு, பழிப்புக்கிடமற்ற சன்மார்க்கப் பண்பையும், பொறாமையூட்டும் புகழையும் உடையவராக இருந்தார். அவரது ஆராய்ச்சிசெய்யும் பழக்கம் தொடர்ந்துகொண்டிருந்தபோதே, செயலாற்றி, செயல்படுத்தும் திறமைகளினால் இளமையிலேயே ஆற்றல் பெற்றவரானார். பலவிதமான அரசியல் இராணுவப் பதவிகளையும் கௌரவத்துடன் வகித்துவந்ததால் செல்வமும் புகழும் உண்டாகக்கூடிய பாதைகள் அவருக்கு விசாலமாகத் திறக்கப்பட்டதுபோல் காணப்பட்டன. (2) GCTam 365.2
அவரது அன்னை உத்தமமான பக்தி உடையவராயிருந்ததால், அவர் குழந்தைப் பருவத்திலேயே மத சம்பந்தமான உணர்த்துதல் களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தார். அப்படியிருந்தாலும் அவர் தமது வாலிபப்பருவத்தின் ஆரம்பகாலத்தில் இயற்கைச் சமயவாதிகளுக்குள் வீசப்பட்டார். அவர்கள் ஏறத்தாழ நல்ல நகரமக்களாகவும், மனிதத்தன்மையும் அனுதாபமும் கொண்டிருந்தார்களென்பதால் அவர்களது செல்வாக்கு அதிக பலமுள்ளதாக இருந்தது. கிறிஸ்தவ அமைப்புகளுக்கிடையில் எப்போதும்போல வாழ்ந்திருந்தாலும், அவர்களது குணம் ஓரளவிற்குச் சுற்றுப்புறங்களினால் உருவாக்கப்பட்டதாக இருந்தது. அவர்களுக்கு மரியாதையையும் நம்பிக்கையையும் சம்பாதித்துத்தந்த மேன்மைகள் வேதாகமத்தால் கிடைத்திருந்தன என்றபோதும் இந்த நல்ல ஈவுகள் தேவனுடைய வார்த்தைக்கு எதிரான செல்வாக்கை உண்டுபண்ணும்படி மாறுபடுத்தப்பட்டிருந்தன. இந்த மனிதர்களின் கூட்டுறவினால் மில்லர் அவர்களது உணர்ச்சிக்கருத்துக்களைத் தழுவும்படி நடத்தப்பட்டார். வழக்கத்திலிருந்த வேதாகம விளக்கங்கள், கடக்கமுடியாததுபோல் காணப்பட்ட நெருக்கங்களை கொடுத்தது. கூடவே வேதாகமத்தை ஒதுக்கிவைத்த புதிய நம்பிக்கையும், அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும்படியான மேன்மையான எதையும் தராமலிருக்கவே, அவர் மனநிறைவில்லாதவராகவே இருந்தார். எப்படியிருந்தாலும், இந்த நோக்கத்தில் அவர் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்தார். ஆனால் அவரது 34-வது வயதில், பாவியென்ற அவருடைய நிலையைக் குறித்த ஒரு உணர்வை பரிசுத்த ஆவியானவர் அவரது இருதயத்தில் பதித்தார். அவரது பழைய நம்பிக்கையில் கல்லறைக்கப்பாலுள்ள மகிழ்ச்சியைப்பற்றிய நிச்சயத்தை அவர் காணவில்லை. எதிர்காலம் இருளாகவும் துயரமிக்கதாகவும் இருந்தது. அக்காலத்தில் அவரிலிருந்த உணர்ச்சிகளைப்பற்றிப் பின்னர்: (3) GCTam 366.1
“முற்றிலுமான அழிவு என்பது நடுங்க வைக்கும் குளிரான எண்ணமாகவும், கணக்குக் கொடுக்கவேண்டும் என்பது அனைவரது அழிவின் நிச்சயமாகவும் இருந்தது. வானம் எனது தலைக்குமேல் பித்தளையைப்போலவும், பூமி என் கால்களுக்குக்கீழ் இரும்பைப்போலவும் இருந்தது. நித்தியம்—அது என்ன? மரணம் அது ஏன்? அதிகமாக அதைக் காரணப்படுத்தினபோது, அதன் விளக்கத்திலிருந்து அதிகமான தூரத்தில் இருந்தேன். அதிகமாகச் சிந்தித்தபோது, என் முடிவுகள் அதிகமாகச் சிதறியது. சிந்திப்பதை நான் நிறுத்த முயன்றேன். ஆனால் எனது சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமையில் இருந்தேன், ஆனாலும் அதன் காரணத்தை நான் புரிந்துகொள்ளவேயில்லை. முறுமுறுத்துக் குறைகூறினேன், ஆனால் யாரைக்குறித்து என்று அறியாம லிருந்தேன். அங்கே ஒரு தவறு இருப்பதை அறிந்தேன், ஆனால் சரியானதை எப்படி எங்கு கண்டுபிடிப்பது என்பதை அறியாமலிருந்தேன். நம்பிக்கையில்லாதவனாக துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். (4) GCTam 366.2
இந்த நிலையில் அவர் சில மாதங்களைத் தொடர்ந்தார். “திடீரென்று ஒரு இரட்சகரின் பண்பு என் மனதில் மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டது. நமது மீறுதல்களுக்காக தம்மையே பரிகாரமாகத் தந்து, அதன் மூலமாகப் பாடுகளிலிருந்தும் பாவத்தின் தண்டனை களிலிருந்தும் நம்மை இரட்சிக்கக்கூடிய நல்லவரும் மனஉருக்கம் மிகுந்தவருமான ஒருவர் இருந்தாகவேண்டும் என்று காணப்பட்டது. அப்படிப்பட்ட நபர் எவ்வளவு விரும்பப்படத்தக்கவராக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து, அவருடைய கரங்களில் என்னைக் கொடுத்து அவருடைய இரக்கத்தின்மீது நம்பிக்கை வைக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். ஆனால் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை எப்படி மெய்ப்பிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. அவ்வாறு ஒரு இரட்சகர் இருக்கிறார் அல்லது ஒரு எதிர்காலம் உள்ளது என்பதைக்குறித்த சான்றினை வேதாகமத்திற்கு வெளியே அடையமுடியாது என்பதை நான் கண்டேன்.” (5) GCTam 367.1
“எனக்குத் தேவையாக இருந்த அப்படிப்பட்ட ஒரு இரட்சகரை வேதாகமம் காட்சிக்குக் கொண்டுவந்ததை நான் கண்டேன். விழுந்துபோன உலகத்தின் தேவைகளை சந்திக்கக்கூடிய கொள்கைகளை ஆவியின் ஏவுதலற்ற ஒரு நூலினால் எவ்விதமாக உண்டுபண்ண இயலும் என்று நான் குழம்பியிருந்தேன். வேதவாக்கியங்கள் தேவனிடமிருந்து வந்த ஒரு வெளிப்படுத்துதலாகத்தான் இருக்குமென்று ஒத்துக்கொள்ள நான் நெருக்கி ஏவப்பட்டேன். அது எனது மகிழ்ச்சியானது. இயேசுவில் ஒரு நண்பரைக் கண்டேன். இயேசு எனக்கு பதினாயிரம் பேர்களில் சிறந்தவராக ஆனார். இதற்குமுன் இருளும் முரண்பாடுகளுமாயிருந்த வேத வாக்கியங்கள் இப்பொழுது என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமும் ஆயிற்று. எனது மனம் அமர்ந்து திருப்தியடைந்தது. வாழ்க்கை என்னும் பெரும்கடலின் நடுவில் கர்த்தராகிய தேவன் ஒரு கன்மலையாக இருப்பதை நான் கண்டேன். வேதாகமமே எனது சிறப்பு ஆராய்ச்சியாக மாறி, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை ஆராய்ந்தேன் என்று என்னால் உண்மையாகவே சொல்லமுடியும். அதில் பாதிகூட எனக்குச் சொல்லப்பட வில்லை என்பதைக் கண்டேன். அதன் அழகையும் மகிமையையும் இதற்குமுன் நான் ஏன் காணவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். கண்டிருந்தால் நான் அதை நிராகரித்திருப்பேனா என்று வியந்தேன், எனது இருதயம் வாஞ்சித்த அனைத்தும் அதில் வெளிப்படுத்தப் பட்டிருந்ததையும், என் ஆத்துமாவின் ஒவ்வொரு நோய்க்கான மருந்தையும் கண்டேன். மற்ற புத்தகங்களின் மேலிருந்த சுவையை இழந்து, தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ள எனது மனதைச் செலுத்தினேன்.”—S. Bliss,Memoirs of Wm. Miller,pages 65—67. (6) GCTam 367.2
இகழ்ந்திருந்த மதத்தின் மீதான விசுவாசத்தை இப்போது அவர் பகிரங்கமாக அறிக்கைசெய்தார். ஆனால் நேர்மையற்ற அவரது கூட்டாளிகள் அவர்தாமே அடிக்கடி வேதவாக்கியங்களின் தெய்வீக அதிகாரம்பற்றிச் சொல்லியிருந்த வாதங்களனைத்தையும் முன்வைப்பதில் வேகமாயிருந்தனர். அவர்களுக்குப் பதில் கூற அப்போது அவர் ஆயத்தமா யிருக்கவில்லை. ஆனால் வேதாகமம் தேவனுடைய வெளிப்படுத்தலாக இருந்திருந்தால், அது அதற்குள்ளாக இசைந்திருக்கவேண்டும் என்றும், அது மனிதனின் போதனைக்கென்று கொடுக்கப்பட்டிருப்பதால், அவனது புரிந்துகொள்ளுதலுக்கு பொருந்தவேண்டுமென்றும் அவர் காரணம் சொன்னார். வேதவாக்கியங்களைத் தனக்கென்று வாசிக்கவும், வெளிப்படையாகக் காணக்கூடிய முரண்பாடுகள் அனைத்தையும் இசைவுபடுத்தமுடியாதா என்பதை உறுதிப்படுத்தவும் தீர்மானித்தார். (7) GCTam 368.1
முன்னதாகக்கொண்டிருந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒருபக்கமாக வைத்துவிட்டு, அவைகளின் விளக்கங்களையும் ஒதுக்கிவிட்டு, ஒத்துவாக்கிய அகராதி, குறிப்புகள் ஆகியவைகளின் உதவியுடன் அவர் வேதவசனத்தை வேதவசனத்துடன் ஒப்பிட முயற்சித்தார். இவ்வாறாக, ஆதியாகமத்தில் தொடங்கி, வசனம் வசனமாக, தடுமாற்றமடைய ஏதுவிராதபடி வசனங்களின் பொருள் புரியும்வரை மெதுவாகவும் முறையாகவும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஏதாகிலும் புரியக்கூடாதிருந்ததால், அதை, அதைக்குறித்த மற்ற ஒவ்வொரு வசனத்துடனம் ஒப்பிட்டுப்பார்ப்பதென்பது அவரது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு வசனமும் அதன் கருத்தில் முறையான ஆதாரங்கிடைக்கும்படி அனுமதிக்கப்பட்டு, அதைப்பற்றிய அவரது நோக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட வசனப்பகுதிகளுடன் பொருந்தினால், அது இலகுவானதென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்படியாகப் புரிந்து கொள்ளுவதற்குக் கடினமாகக் காணப்பட்ட பகுதிகளைச் சந்தித்த போதெல்லாம் அதன் விளக்கத்தை வேதவாக்கியங்களின் வேறு ஏதாவதொரு பகுதியில் அவர் கண்டார். தெய்வீக வெளிச்சத்திற்காக அக்கரையுடன் ஜெபித்து, ஆராய்ந்தபோது, அவரது புரிந்துகொள்ளுதலுக்கு இருளாகத் தோன்றியிருந்தவைகள் தெளிவாக்கப்பட்டன. “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங். 119:130) என்னும் சங்கீதக்காரனின் வார்த்தைகளில் உள்ள உண்மையை அவர் அனுபவித்தார். (8) GCTam 368.2
மற்ற வசனங்களில் பயன்படுத்தியிருந்த அதே கொள்கையைப் பயன்படுத்தி, மிகவும் ஆழ்ந்த ஆர்வத்துடன் தானியேலின் தீர்க்கதரிசன புத்தகத்தையும் வெளிப்படுத்தின விசேஷத்தையும் விளங்கிக்கொள்ளுவதற்கு முயன்றபோது, தீர்க்கதரிசன உருவகங்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சிகொண்டார். இதுவரையில் நிறைவேறியிருந்த தீர்க்கதரிசனங்கள் எழுத்துப்படியே நிறைவேறியிருந்ததையும், பலவிதமான எண்ணிக்கைகளின் உருவகங்கள், உவமைகள், சாயல் அனைத்தும், தொடர்ச்சியாக வந்த வசனங்களில் விளக்கப்பட்டிருந்ததையும், அல்லது அதற்காக உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் மற்ற வேதவாக்கியங்களால் விளக்கப்பட்டதையும், இப்படி விளக்கப்பட்டவைகள் எழுத்துப்பூர்வமாக நிறைவேற வேண்டியதிருந்ததையும் கண்டார். இவ்விதமாக “அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போக அவசியமில்லாதபடி தெளிவாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் அமைப்பாக வேதாகமம் இருப்பதைக்கண்டு நான் திருப்தியடைந்தேன்” என்றார்.-Bliss,page 70. தீர்க்கதரிசனங்களின் பெரும் பாதைகளைப் படிப்படியாக அவர் கண்டுபிடித்தபோது, சத்தியம் என்னும் சங்கிலியின் வளையங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவரது முயற்சிக்குப் பரிசாகக் கிடைத்தன. தேவதூதர்கள் அவரது மனதிற்கு வழிகாட்டி, புரிந்துகொள்ளும் வண்ணம் வேத வசனங்களைத் திறந்தனர். (9) GCTam 369.1
எதிர்காலத்தில் நிறைவேற உள்ள தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள, கடந்தகாலத்தில் அவைகள் நிறைவேறியிருந்த வகையை விதியாகக்கொண்டு படித்ததால், கிறிஸ்துவின் ஆவிக்குரிய ஆட்சி உலகமுடிவிற்கு முன்பாக உலகப்பிரகாரமான ஆயிரவருட ஆட்சி வேதவார்த்தைகளால் தாங்கப்படவில்லை என்பதைக் கண்டு திருப்தியடைந்தார். கர்த்தரின் நேரடியான இரண்டாம் வருகைக்குமுன், நீதியும் சமாதானமும் உள்ள ஒரு ஆயிரம் வருடத்தைக்குறித்த இந்த கோட்பாடு, தேவனுடைய நாளைப்பற்றிய பயத்தைத் தூரமாக நீக்கி வைக்கின்றது. அவை மகிழ்ச்சிதருவதாக இருந்தாலும் “அறுவடைக் காலம் (உலகத்தின் முடிவு) வரைக்கும் கோதுமையும் களையும் ஒன்றாக வளரட்டும்” (மத்தேயு 13:30,38—41) என்ற கிறிஸ்துவின் போதனைக்கும், “பொல்லாதவர்களும் எத்தர்களு மானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர் களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்”-2 தீமோத்தேயு 3:13. “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும்”-2 தீமோத்தேயு 3:1. இருளின் ராஜ்யம் கர்த்தரின் வருகைமட்டும் தொடர்ந்து, “அவரது வாயின் சுவாசத்தினாலும் வருகையின் பிரசன்னத்தினாலும்” அழிக்கப்படும் (2 தெச. 2:8) என்கிற அவரது சீடர்களின் போதனைக்கும் முரண்பட்டதாக உள்ளது. உலகத்தின் மனமாற்றம் கிறிஸ்துவின் ஆவிக்குரிய ஆளுகை என்னும் கோட்பாடுகள் ஆதி அப்போஸ்தலர்களின் சபையில் இருக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம்வரை அது கிறிஸ்தவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற ஒவ்வொரு தவறின் விளைவைப்போலவே, இதன் விளைவுகளும் தீமையானதாகவே இருந்தது. அது கர்த்தரின் வருகையை வெகு தெலைவில் எதிர்பார்க்கச்செய்து, அவரது வருகையை முன்னறிவிக்கும் அடையாளங்களைக் கவனிப்பதிலிருந்து தடைசெய்திருந்தது. நன்றாக அஸ்திவாரமிடப்படாத நம்பிக்கை பாதுகாப்பு ஆகிய ஒரு உணர்வினைத் தூண்டி, தங்கள் ஆண்டவரைச் சந்திக்கத் தேவையான ஆயத்தம் செய்வதை அலட்சியம் செய்யும்படி அநேகரை வழிநடத்தினது. (10) GCTam 369.2
கிறிஸ்துவின் எழுத்துப்படியான சரீரப்பிரகாரமான வருகையை வேதவாக்கியங்கள் தெளிவாகக் கூறுவதை மில்லர் கண்டார். “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (1 தெச. 4:16) என்று பவுல் கூறுகிறார். “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்”-மத்தேயு 24:30. “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்” (மத்தேயு 24:27) என்று இரட்சகர் கூறுகிறார். அவர் பரலோகத்தின் சேனைகளனைத்துடனும் சேர்ந்து வரவேண்டியதிருக்கிறது. “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்”-மத்தேயு 25:31. “வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமதுதூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்”-மத்தேயு 24:31. (11) GCTam 370.1
அவரது வருகையின்போது, மரித்த பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டு, உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் மறுரூபமாக்கப்படுவார்கள். “நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்” (1கொரி. 15:51—53) என்று பவுல் கூறுகிறார். தெசலோனிக்கேயருக்கு எழுதின நிருபத்தில் கர்த்தருடைய வருகையைப்பற்றி விவரித்தபின், “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1தெச. 4:16—17) என்று கூறினார். (12) GCTam 371.1
கிறிஸ்துவின் பிரத்தியட்சமான வருகை நிகழும்வரைக்கும் அவருடைய மக்கள்ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத்தேயு 25:31-34) என்று அழைக்கவிருப்பதை இரட்சகர் கூறினார். இதுவரை கொடுக்கப்பட்ட வேதவாக்கியங்களிலிருந்து, மனுஷகுமாரன் வரும்போது, மரித்தவர்கள் அழியாமை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதையும் உயிரோடிருப்பவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள் என்பதையும் நாம் கண்டிருக்கிறோம். இந்த மாபெரும் மாற்றத்தின் மூலமாக, இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள் ஆயத்தமாக்கப்படுகின்றனர். ஏனெனில் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை” (1கொரி. 15:50) என்று பவுலார் சொல்லுகிறார். மனிதன் இப்போதுள்ள நிலையில் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழையமுடியாது. ஆனால் இயேசு வரும்போது, அவர் தம் மக்களுக்குச் சாவாமையை வழங்குகிறார். அதன்பின் இதுவரை வாரிசாகமட்டுமே இருந்த அவர்களை இராஜ்யத்தைச் சுதந்தரிக்கும்படி அழைக்கவிருக்கிறார். (13) GCTam 371.2
கிறிஸ்துவின் வருகைக்குமுன் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமாதானத்தின் ஆளுகை, பூமியின்மீது தேவனுடைய ராஜ்ஜியத்தை ஏற்படுத்துதல் ஆகியவை, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின் நிகழவேண்டியவை என்பதை இவ்வசனங்களும் மற்ற வேதவாக்கியங்களும் மில்லரின் மனதிற்குத் தெளிவாக நிரூபித்தன. அதற்கும் மேலாக, காலங்களின் அடையாளங்கள் அனைத்தும், உலகத்தின் நிலைமையும், கடைசிநாட்களைப்பற்றிய தீர்க்கதரிசன விளக்கங்களுடன் சம்பந்தப் பட்டிருக்கின்றன என்பதையும் காட்டின. உலகம் அதன் தற்போதுள்ள நிலைமையில் தொடரும்படி அதற்குக் கொடுக்கப்பட்ட காலம் ஏறத்தாழ முடிவடையவுள்ளது என்கிற முடிவிற்கு வேதவாக்கிய ஆராய்ச்சியால் அவர் நிர்பந்திக்கப்பட்டார். (14) GCTam 372.1
“எனது மனதை முக்கியமாகப் பாதித்த வேறொரு வகையான சான்று: வேதவாக்கியங்களிலிருந்த காலவரிசையாகும். முன்கூறப்பட்டு கடந்தகாலத்தில் நிறைவேறியிருந்த நிகழ்ச்சிகள், கொடுக்கப்பட்டிருந்த காலத்திற்குள் நிறைவேறியிருந்தன. ஜலப்பிரளயத்திற்கு முன்னான நூற்று இருபது வருடங்கள் (ஆதி. 6:3), அதற்கு முந்திய ஏழு நாட்கள் மற்றும் முன்சொல்லப்பட்டிருந்த நாற்பது நாட்கள் மழை (ஆதி. 7:4), ஆபிரகாமின் சந்ததியினர் நானூறு வருடங்கள் அலைந்துதிரிதல் (ஆதி. 15:13), பானபாத்திரக்காரன் சுயம்பாகியின் கனவுகளிலிருந்த மூன்று நாட்கள் (ஆதி. 40:12—20), பார்வோனின் ஏழு வருடங்கள் (ஆதி. 41:28—54), வனாந்தரத்தின் நாற்பது வருடங்கள் (எண். 14:34), மூன்றரை வருடப்பஞ்சம் (1ராஜா. 17:1 லூக்கா 4:25), எழுபது வருட அடிமைத்தனம் (தானியேல் 4:13-16), யூதர்களின்மீது விதிக்கப்பட்ட எழுபது வாரங்களைக்கொண்ட ஏழு வாரங்களும் அறுபத்திரண்டு வாரங்களும் ஒருவாரமும் (தானியேல் 9:24—27) போன்ற கால அளவிற்குட்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் தீர்க்கதரிசனமாயிருந்தன, முன்னுரைக்கப்பட்டபடியே நிறைவேறியிருந்தன” என்று மில்லர் கூறுகிறார்.--Bliss,page 74,75. (15) GCTam 372.2
வேதாகம ஆராய்ச்சியில் அவரது புரிந்துகொள்ளுதலின்படி, வரிசையான கால அளவுகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் தொடர்ந்ததால், தேவன் தமது ஊழியக்காரருக்கு வெளிப்படுத்தின அவைகளை, “முன்குறிக்கப்பட்ட காலங்களாகவே” கருதினார். “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” (உபா. 29:29) என்று மோசே கூறுகிறான். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” (ஆமோஸ் 3:7) என்று கர்த்தர் அவரது தீர்க்கதரிசியாகிய ஆமோஸின் மூலமாக அறிவிக்கிறார். அப்படியானால் சத்திய வேதவாக்கியங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித வரலாற்றில் நிகழவுள்ள மிகப்பிரம்மாண்டமான நிகழ்ச்சியை வேதமாணவர்கள் நிச்சயத்துடன் எதிர்பார்க்கலாம். (16) GCTam 373.1
“தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிற வேதவாக்கியங்களெல்லாம் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோத். 3:16). அது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் (2 பேதுரு 1:21), “தேவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர் களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” (ரோமர் 15:4) என்று நான் பூரணமாக உணர்த்தப்பட்டபோது, வேதாகமத்திலுள்ள காலக்கணக்கின் அளவுப்பகுதிகளானது மற்ற எந்த வேதாகமப்பகுதியையும்போலவே, முக்கியமானதாக கருதப்படுவதற்கு தகுதிவாய்ந்தவை என்று என்னால் உணரமுடிந்தது. எனவே தேவன் தமது இரக்கத்தினால், வெளிப்படுத்தத் தகுதியானவைகள் என்று கண்டவைகளை, நான் அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது, தீர்க்கதரிசனக் காலஅளவுகளைக் கடந்துசெல்லும் உரிமை எனக்கில்லை என்பதை உணர்ந்தேன்.”—Bliss,page 75. (17) GCTam 373.2
இயேசுவின் இரண்டாம் வருகையின் நேரத்தை மிகத்தெளிவாக வெளிப்படுத்துவதுபோல் காணப்பட்ட தீர்க்கதரிசனம் “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும், பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” (தானியேல் 8:14) என்பதே. ஒரு வேதவாக்கியத்திற்கு அதன் அடுத்த வாக்கியம் தானாக விளக்கம் தரும் என்ற அவரது விதியைப் பின்பற்றி, உருவகமான தீர்க்கதரிசனத்தில் ஒருநாள் ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதை மில்லர் அறிந்தார். எண். 14:34; எசே. 4:6. இரண்டாயிரத்து முந்நூறு நாட்கள் என்ற காலஅளவு அல்லது எழுத்தின்படியான வருடங்கள் யூதசபையின் நிர்வாக காலத்திற்கு அப்பால் வெகுதூரம் கடந்துசெல்லும் என்பதையும் அது யூதசமய அமைப்பிலிருந்த ஆசரிப்புக்கூடாரம் அல்ல என்பதையும் அவர் கண்டார். கிறிஸ்தவர்களின் காலத்தில் இந்த உலகம்தான் ஆசரிப்புக்கூடாரம் என்கிற பொதுவான பார்வையை மில்லர் ஏற்றிருந்தார். எனவே, தானியேல் 8:14-ல் முன்னறிவிக்கப்பட்டிருந்த பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்பது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இந்த உலகம் அக்கினியால் சுத்திகரிக்கப்பட இருப்பதைக் குறிக்கிறது என்று புரிந்துகொண்டார். அந்தக் கருத்து சரியானது என்றால், 2300 நாட்களுக்கான சரியான ஆரம்ப இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், இரண்டாம்வருகையின் நேரத்தை எளிதாகவே உறுதிப்படுத்திவிடலாம் என்று முடிவுசெய்தார். இப்போதிருக்கும் நிலை, அதனுடைய பெருமை, வல்லமை, ஆடம்பரம், மாயை, துன்மார்க்கம், ஒடுக்கப்படுதல் ஆகியவைகளோடு முடிவுக்கு வரும்போது,... சாபம் பூமியைவிட்டு நீக்கப்படும்போது, மரணம் அழிக்கப்படும்போது, தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும், தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள், அவரது நாமத்துக்குப் பயப்படுகிற அனைவருக்கும் உரிய பலன் வழங்கப்படும்போது, பூமியைக் கெடுத்தவர்கள் அழிக்கப்படும்போது, இப்படி அந்த முடிவுகாலத்தின் நேரம் வெளிப்படும்.--Bliss,page 76. (18) GCTam 373.3
ஒரு புதிய ஆழமான ஆர்வத்துடன் ஒரு பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்த, கவனம் முழுவதையும் ஈர்க்கக்கூடியதாக இருந்த தீர்க்கதரிசனங்களை ஆராய்வதில் இரவும்பகலுமாக மில்லர் ஈடுபட்டார். தானியேல் எட்டாம் அதிகாரத்தில் 2300 நாட்களின் துவக்கத்திற்கான குறிப்பு எதையும் அவரால் காணமுடியவில்லை. காபிரியேல் தூதன் தானியேலுக்கு தரிசனத்தைப் புரியவைக்கும் கட்டளையைப் பெற்றிருந்தபோதும், ஒரு பகுதி விளக்கத்தை மட்டுமே கொடுத்திருந்தான். சபைக்கு நேரிடவுள்ள பயங்கரமான உபத்திரவத்தை தீர்க்கதரிசி தரிசித்தபோது, தனது சரீரபலத்தை இழந்தான். அதற்குமேல் அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எனவே தூதன் சற்று நேரம் அவனை விட்டுச்சென்றார். “நான் சோர்வடைந்து சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன் ஒருவரும் அதை அறியவில்லை” (தானியேல் 8:27) என்று தானியேல் கூறினான். (19) GCTam 374.1
“இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணு” என்று தேவன் அவரது தூதனுக்குக் கட்டளையிட்டிருந்தார். அது நிறைவேற்றப்படவேண்டும். அதற்குக் கீழ்ப்படிந்து, சற்று காலம் கழித்து அந்தத் தூதன் தானியேலிடம் திரும்பி வந்து, “தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்” (தானியேல் 9:22,23) என்றான். எட்டாம் அதிகாரத்திலுள்ள தரிசனத்தின் ஒரே ஒரு காரியம்தான் அதாவது 2300 நாட்கள் என்கிற காலஅளவுதான் விளக்கப்படாமலிருந்தது. எனவே, அதன் விளக்கத்தைத் தெடர்ந்த தூதன்: (20) GCTam 374.2
“உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்” (தானியேல் 9:24—27) என்று குறிப்பிடத்தகுந்த விதத்தில் காலஅளவுபற்றிய காரியத்தை விளக்கினான். (21) GCTam 375.1
தானியேல் புரிந்துகொள்ளத்தவறிய, எட்டாம் அதிகாரத்தின் தரிசனமாகிய, காலஅளவைக் குறித்த “2300 இராப்பகல் செல்லும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்பதை விளக்கிக்கூறும்படிக்கே அந்த தேவதூதன் தானியேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தான். “இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்ட்ேடு, தரிசனத்தை அறிந்துகொள்” என்று தானியேலை அழைத்தபின், அடுத்த வார்த்தையாக தேவதூதன்: “உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “குறிக்கப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தை எழுத்தின்படி “வெட்டப்பட்டிருக்கிறது” என்றே பொருள்படும். வெட்டப்படும் என்று அந்த தூதன் அறிவித்த 490 வருடத்தைக் குறிக்கும் 70 வாரம் குறிப்பாக யூத ஜாதியுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. ஆனால் அவை எதிலிருந்து வெட்டப்படும்? எட்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருந்த ஒரே கால அளவு 2300 நாட்களாக இருந்ததால், இந்தக் கால அளவிலிருந்துதான் எழுபது வாரங்கள் வெட்டப்பட்டாக வேண்டும். எனவே, அந்த எழுபது வாரங்கள் 2300 நாட்களின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இந்த இரண்டு கால அளவுகளும் ஒன்றாக ஆரம்பமாக வேண்டும். அந்த எழுபது வாரங்கள் எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்று தேவதூதன் அறிவித்தான். அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட தேதியைக் காண முடிந்தால், அதன்பின் 2300 நாட்கள் என்கிற பெரிய கால அளவின் ஆரம்பத்தை ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். (22) GCTam 375.2
இந்தக் கட்டளை எஸ்றா புத்தகத்தின் ஏழாம் அதிகாரத்தில் காணப்படுகிறது. எஸ்றா 7:12-26. பெரிய அரசனான அர்தசஷ்டாவினால் அது கி.மு.457-ல் கொடுக்கப்பட்டது. ஆனால் எஸ்றா 6:14-ல் “கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளை யின்படி” எருசலேமிலிருந்த கர்த்தருடைய ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மூன்று அரசர்களும், அதை ஆரம்பிக்கவும் மீண்டும் உறுதிப்படுத்தவும் பின்பு முழுமைப்படுத்தவும் பிறப்பித்த கட்டளை களினால், 2300 நாட்களின் ஆரம்பத்தை, தீர்க்கதரிசி எதிர்பார்த்த முழுமைக்குக் கொண்டுவந்தனர். அந்தக் கட்டளை முழுமையடைந்த காலமாக கட்டளையின் காலமாக கி.மு.457-ஐ எடுத்துக்கொண்டபோது, எழுபதுவாரம்பற்றிய தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு குறிப்பும் நிறைவேறியிருந்ததைக் காணமுடிந்தது. (23) GCTam 376.1
“எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்” என்பது அறுபத்தொன்பது வாரங்கள் அல்லது 483 வருடங்கள். அர்தசஷ்டாவின் கட்டளை கி.பி.457-ன் இலையுதிர் காலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தேதியிலிருந்து 483 வருடங்கள் கி.பி. 27-ன் இலையுதிர் காலம்வரை நீண்டுசென்றது. அந்தக்காலத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. “மேசியா” என்கிற சொல், “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பதைக் குறிக்கிறது. கி.பி. 27-ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில், கிறிஸ்து யோவானால் ஞான ஸ்நானம்பெற்று, ஆவியின் அபிஷே கத்தைப் பெற்றார். “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்” (அப். 10:38) என்று பேதுரு அப்போஸ்தலன் சாட்சி கொடுக்கிறார். “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்” (லூக்கா 4:18) என்று இரட்சகர் தாமே அறிவித்தார். ஞானஸ்நானத்திற்குப் பிறகு இயேசு கலிலேயாவிலே வந்து, “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்று “தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை” பிரசங்கித்தார்—மாற்கு 1:14,15. (24) GCTam 376.2
“அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி”-இங்கு “வாரம்” என்று பார்வைக்குக் கொண்டுவரப் பட்டிருப்பது யூதர்களுக்கென்று கொடுக்கப்பட்ட எழுபது வாரங்களின் கடைசி வாரமாகும். கி.பி.27 முதல் கி.பி.34 வரையிலான இந்த ஒருவார காலத்தில் முதலாவது தாமேயும், அதன்பின் தமது சீடர்களின் மூலமாகவும், கிறிஸ்து சுவிசேஷ அழைப்பை, மிகக் குறிப்பாக யூதர்களுக்குக் கொடுத்தார். இராஜ்யத்தின் நற்செய்தியுடன் அப்போஸ்தலர்கள் சென்றபோது: “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” (மத்தேயு 10:5,6) என்று இரட்சகர் வழிகாட்டினார். (25) GCTam 377.1
“அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்;” அவருடைய ஞானஸ்நானத்திற்கு மூன்றரை வருடங்களுக்குப்பின், கி.பி.31-ல் நம்முடைய ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார். கல்வாரியின்மீது செலுத்தப்பட்ட அந்த மாபெரும் பலியுடன் நாலாயிரம் ஆண்டுகளாக தேவ ஆட்டுக்குட்டியை முன்குறித்துக்காட்டியிருந்த பலிகளும் காணிக்கை முறைகளும் முடிவடைந்தன. நிஜம் அதன் நிழலைச் சந்தித்தது, பலிகளும், சடங்காச்சாரங்களுமாகிய அனைத்தும் அங்கு முடிவடைய வேண்டியதாக இருந்தது. (பார்க்க: லேவி. 2:1-3 எண். 7:2,3,12,19,25). (26) GCTam 377.2
நாம் ஏற்கனவே பர்த்ததுபோல யூதர்களுக்கென்று குறிப்பாகக் கொடுக்கப்பட்டிருந்த எழுபது வாரங்கள் அல்லது 490 வருடங்கள் கி.பி. 34-ல் முடிவடைந்தன. அந்த நேரத்தில், ஸ்தேவானை இரத்தசாட்சியாக கொலைசெய்து, கிறிஸ்துவின் பின்னடியார்களை உபத்திரவப்படுத்திய யூதர்களின் சனகரீப் சங்கத்தின் நடவடிக்கையின்மூலமாக, யூதஜாதி சுவிசேஷத்தை நிராகரித்ததை முத்திரித்து உறுதிப்படுத்தியது. அதன்பின் இரட்சிப்பின் தூது தெரிந்துகொள்ளப்பட்டிருந்த மக்களுக்கென்று மட்டுமல்லாது உலகம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டது. உபத்திரவத்தின் மூலமாக எருசலேமைவிட்டு ஓடிப்போக நேர்ந்த சீடர்கள், “எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” “பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்”—அப். 8:4,5. பேதுரு தெய்வீக நடத்துதலினால், செசரியா பட்டணத்து தெய்வபயமிக்க நூற்றுக்கு அதிபதியாயிருந்த கொர்நேலியுவிற்கு சுவிசேஷத்தைக் கூறினான். கிறிஸ்துவின் விசுவாசத்திற்கு ஜெயிக்கப்பட்ட வைராக்கியமிக்க பவுல், சந்தோஷமிக்க நற்செய்தியை தூரமாய் புறஜாதிகளிடத்திலே அறிவிக்கும்படி ஏற்படுத்தப்பட்டான்-அப். 8:4,22,21. (27) GCTam 377.3
இதுவரை தீர்க்கதரிசனத்தின் விவரங்கள் ஒவ்வொன்றும் குறிப்படும்படி நிறைவேறியது. எழுபது வாரங்களின் ஆரம்பம் கி.மு.457-கும் முடிவு கி.பி.34-கும் கேள்விக்கிடமின்றி குறிக்கப்பட்டது. இந்தக் கணக்கினால், 2300 நாட்களின் முடிவைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. எழுபது வாரங்கள் 490 நாட்கள், இந்த 2300 வருடங்களில் இருந்து வெட்டப்பட்டபின் 1810 நாட்கள் மீதியிருந்தது. 490 வருடங்களுக்குப் பிறகு 1810 நாட்கள் இன்னும் நிறைவேறவேண்டியதிருந்தது. கி.பி.34-ல் இருந்து 1810 வருடங்கள் 1844-குச் சென்றது. அதன் விளைவாக தானியேல் 8:14- ல் கூறப்பட்ட 2300 நாட்களானது கி.பி.1844-ல் முடிவடைகிறது. இப்பெரும் தீர்க்கதரிசனக் காலஅளவின் முடிவில், அந்த தேவதூதன் சாட்சிகொடுத்தபடி “பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்.” இவ்வாறாக, பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்காலம்—இரண்டாம் வருகையின்போது நிகழும் என்று எல்லோராலும் நம்பப்பட்ட காலம் நிச்சயமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. (28) GCTam 378.1
மில்லரும் அவரது சகாக்களும் 2300 நாட்கள் அல்லது வருடங்கள் கி.பி.1844-ன் வசந்தகாலத்தில் முடியும் என்று முதலில் நம்பினார்கள். ஆனால் தீர்க்கதரிசனம் அந்த வருடத்து இலையுதிர்காலத்தைச் சுட்டிக்காட்டியது. கர்த்தரின் இரண்டாம் வருகைக்காக முதலில் குறிக்கப்பட்ட தேதியை நம்பியிருந்தவர்களுக்கு இந்தத் தவறான புரிந்துகொள்ளுதல் ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் தந்தது. ஆனபோதிலும் 2300 நாட்கள் 1844— ல் முடிவடைந்தது என்பதையும், பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்பதால் குறிக்கப்பட்டிருந்த மாபெரும் நிகழ்ச்சி அப்பொழுது நடைபெற்றாகவேண்டும் என்பதையும் சார்ந்த வாதத்தின் பலத்தை இது பாதிக்கவேயில்லை. (29) GCTam 378.2
வேதவாக்கியங்கள் தேவனிடமிருந்து வந்த வெளிப்பாடு என்பதை மெய்ப்பிக்க, இதுவரை செய்திருந்ததைப்போலவே, வேதஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மில்லரால், இப்பொழுது வந்துசேர்ந்த முடிவைக் குறித்த எந்த எதிர்பார்ப்பும் இருந்திருக்கவில்லை. அவரது ஆராய்ச்சியின் பலன்களை அவருக்கே நம்புவது கடினமாக இருந்தது. ஆனால் அவைகளை ஒதுக்கிவிடமுடியாதபடி வேதவாக்கியச் சான்றுகள் மிகத்தெளிவாகவும் வலிமைமிக்கதாகவும் இருந்தது. (30) GCTam 378.3
இரண்டு வருடகாலம் வேதாகம ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, 1818-ல், கிறிஸ்து அவரது ஜனங்களை மீட்கும்படியாக இன்னமும் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குள் தோன்றிவிடுவார் என்ற பக்திவிநயமான உணர்த்துதலைப் பெற்றார். “மகிழ்ச்சியான அந்த வாய்ப்பைப் பார்த்ததால் உண்டான ஆனந்தத்தையும் மீட்கப்பட்டவர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளும் என் ஆத்துமாவின் உற்சாகமான ஏக்கத்தையும் நான் கூறவேண்டிய அவசியம் இல்லை” என்று மில்லர் கூறுகிறார். இப்பொழுது வேதாகமம் எனக்கு ஒரு புதிய புத்தகமாகிவிட்டது. அது என் அறிவுக்கு உண்மையிலேயே விருந்தாக இருக்கிறது. அதன் போதனைகளில் இருளாகவும் புதிராகவும் இருந்த அனைத்தும் அதன் பக்கங்களிலிருந்து உதித்த தெளிவான வெளிச்சத்தினால் விலகிப்போயின. ஓ! சத்தியம் எவ்வளவு பிரகாசமாகவும் மகிமையானதாகவும் தோன்றியது. அந்த வார்த்தையில் இதற்கு முன் காணப்பட்டிருந்த முரண்பாடுகளும் இசைவின்மையும் நீங்கிவிட்டன. எல்லாவற்றையம் புரிந்துகொண்டேன் என்று என்னால் திருப்திப்படமுடியாமலிருந்த அநேக பகுதிகள் அதில் இருந்தபோதிலும், முன்பு இருண்டிருந்த மனதை வெளிச்சமாக்க அதிகமான ஒளி அதிலிருந்து வீசியது. இதற்குமுன் அதன் போதனைகளிலிருந்து புரியாதவைகள்போல் இருந்தவைகளை ஆராய்வதில் நான் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன்.- Bliss,pages 76,77. (31) GCTam 379.1
வேதவாக்கியங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ள இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிகள், மிகக்குறைவான காலத்தில் நிறைவேறவுள்ளது என்னும் பக்திவிநயமான உணர்த்துதல் என் மனதைப் பாதித்ததினால் இந்த உலகத்திற்கு நான் செய்யவேண்டிய கடமையைப் பற்றிய கேள்வி என்னுள்ளத்தில் மிகுந்த வல்லமையுடன் வந்தது.--Ibid., page 81. தான் பெற்றுக்கொண்ட வெளிச்சத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது தனது கடமை என்பதை அவரால் உணராமலிருக்க முடியவில்லை. பக்தி இல்லாதவர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்த்தாலும், சகல கிறிஸ்தவர்களும் தாங்கள் நேசிப்பதாகக் கூறிக்கொள்ளும் இரட்சகரை சந்திக்கும் நம்பிக்கையில் மகிழ்ச்சியடைவார்கள் என்று நிச்சயமாயிருந்தார். அவரது ஒரே பயம், மிகவிரைவில் நிகழவிருக்கும் இந்த மகிமைமிக்க விடுதலை வாய்ப்பின் மகிழ்ச்சியால், அநேகர், சத்தியத்தை விளக்கும் வேதாகமச் சான்றுகளை போதுமான அளவு சோதிக்காமல் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுவார்களே என்பதுதான். ஆகையால், தான் தவறாக இருந்து, தனது போதனைகள் அநேகமான மற்றவர்களையும் தவறுக்குள் நடத்திவிடக்கூடாது என்று எண்ணி, அதைப் பிறர்முன் வைப்பதற்குத் தயங்கினார். இவ்விதமாக, இந்த முடிவிற்கு அவரை கொண்டுவந்த சான்றுகளை திருப்பிப்பார்க்கவும், அவரது மனதுக்குக் கடினமாகத் தோன்றிய ஒவ்வொன்றையும் ஜாக்கிரதையாகக் கவனிக்கவும் நடத்தப்பட்டார். சூரிய ஒளிக்கதிரின்முன் பனிப்படலம் நீங்குவதுபோல், தேவனுடைய வார்த்தையின் ஒளியின்முன் மறுப்புகள் நீங்குவதை கண்டார். இப்படியாகச் செலவிடப்பட்ட ஐந்து வருடங்கள் அவரது நிலை சரியானது என்கிற முழுமையான திடநம்பிக்கையைத் தந்தது. (32) GCTam 379.2
வேதவாக்கியங்களால் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ளதாக தான் நம்பியிருந்ததை பிறருக்கு அறிவிக்கவேண்டியது தனது கடமை என்ற உணர்வு, புதிய வலிமையுடன் அவரை வற்புறுத்தியது. “நான் எனது தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ‘போய் வரவிருக்கும் ஆபத்தைப்பற்றி உலகுக்குச் சொல்’ என்று எனது செவிகளில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. ‘நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்’ (எசே. 33:8,9) என்ற வசனங்கள் தொடர்ந்து எனக்குள் வந்துகொண்டிருந்தன. துன்மார்க்கரைத் திறமையாக எச்சரித்தால், அவர்களில் திரள்கூட்டமானவர்கள் மனம் திருந்துவார்கள். எச்சரிக்காமல் விட்டுவிட்டால், அவர்களது இரத்தப்பழி என்னிடத்தில் கேட்கப்படும் என்பதை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.-Bliss,page 92. (33) GCTam 380.1
ஏதாவது ஊழியக்காரர் அவைகளின் வலிமையை உணர்ந்து, அவைகளை அறிவிக்கத் தன்னை ஈடுபடுத்துவார் என்கிற ஜெபத்துடன் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது அவரது கருத்தை தனிப்பட்ட முறையில் அறிவிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த எச்சரிப்பைத் தானே கொடுக்கவேண்டிய ஒரு கடமை தனக்கிருந்தது என்கிற உணர்த்துதலை அவரால் நீக்க இயலவில்லை. “போய் இதை உலகத்துக்குச் சொல்லு. அவர்கள் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்” என்ற வார்த்தைகள் அவரது மனதில் எப்போதும் தோன்றிக்கொண்டே இருந்தன. 1831-ம் வருடம், அவரது விசுவாசத்தின் காரணத்தை முதன்முதலாக பொது இடத்தில் அறிவிக்கும்வரை, அந்த பாரம் அவரை அழுத்திக்கொண்டிருக்க, ஒன்பது வருடங்கள் அவர் காத்திருந்தார்.(34) GCTam 380.2
வயலிலிருந்த தனது எருதுகளுக்குப் பின்செல்லுவதிலிருந்து தீர்க்கதரிசனப் பணிக்கான சால்வையைப் பெற்றுக்கொள்ளும்படி எலிசா அழைக்கப்பட்டதுபோல, தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை மக்களுக்குத் திறந்துகாட்டுவதற்காக தனது கலப்பையை விட்டுவிட்டுவரும்படி வில்லியம் மில்லரும் அழைக்கப்பட்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரையிலுமுள்ள தீர்க்கதரிசன காலத்தை படிப்படியாக, அவரைக் கேட்டிருந்தவர்களுக்குப் புரியவைக்கும் அவரது பணியில், நடுக்கத்துடன் அவர் பிரவேசித்தார். அவரது வார்த்தைகளினால் உண்டான பரவலான ஆர்வத்தைக் கண்டபோது, ஒவ்வொரு முயற்சியிலும் பலத்தையும் தைரியத்தையும் அடைந்தார். (35) GCTam 381.1
விசுவாச சகோதரர்களின் அழைப்பில், தேவனுடைய அழைப்பை அவர் கேட்டதினால்தான் மில்லர் அவரது கருத்துக்களைப் பொதுமக்கள் முன் வைக்க இணங்கினார். பொது இடங்களில் பேசும் பழக்கமற்றவராக தனக்கு முன்னுள்ள ஊழியத்திற்காக தகுதியின்மையை பாரமாக உணர்ந்த ஐம்பது வயதான மனிதராயிருந்தார் இப்போது அவர். ஆனால் ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக ஆரம்பத்திலிருந்தே அவரது உழைப்புகள் குறிப்பிட்ட விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தன. அவரது முதல்சொற்பொழிவே ஒரு எழுப்புதலைக் கொண்டுவந்தது. அதில் இரண்டு நபர்களைத்தவிர முப்பது குடும்பத்தினர் ஆவிக்குரிய விழிப்படைந்தனர். உடனே வேறு இடங்களில் பேசும்படி அவர் வற்புறுத்தப்பட்டதுடன், கிட்டத்தட்ட அவர் ஊழியம் செய்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு எழுப்புதல் விளைந்தது. பாவிகள் மனந்திரும்பினார்கள். கிறிஸ்தவர்கள் பெருமளவில் பிரதிஷ்டைக்கென்று எழுப்பப்பட்டனர். இயற்கை சமயவாதிகளும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் வேதாகம சத்தியத்தையும் கிறிஸ்தவ மதத்தையும் ஒப்புக்கொள்ளும்படி நடத்தப்பட்டனர். “பிற மனிதர்களுடைய செல்வாக்கிற்கு உட்படாதவர்களாக இருந்த ஒருபிரிவு மக்களின் உள்ளங்களையும் அவரது செய்தி அடைந்துள்ளது” என்ற சாட்சி அவர் ஊழியம் செய்த மக்களிடமிருந்து வந்தது.--Ibid., page 138. அக்காலத்தில் அதிகரித்துக்கொண்டிருந்த உலகப்பிரகாரமான நிலையையும் சிற்றின்பங்களையும் தடுத்து, மக்களின் மனதை மார்க்கத்திலிருந்த பெரும் காரியங்களை நோக்கி எழுப்பும்படியாக அவரது போதனைகள் திட்டமிடப்பட்டிருந்தன. (36) GCTam 381.2
அவரது சொற்பொழிவின் பயனாக ஒவ்வொரு நகரத்திலும் ஏறத்தாழ இருபது முதல் சில இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மனமாற்றம் அடைந்தனர். அநேக இடங்களில் அனைத்துப் புரொட்டஸ்டாண்டு சபைகளைச் சார்ந்த ஆலயங்களும் அவருக்கென்று திறக்கப்பட்டதுடன், பல்வேறுபட்ட சபை ஊழியக்காரர்களிடமிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன. அழைக்கப்படாத எந்த இடத்திலும் ஊழைப்பதில்லை என்பது அவரது மாறுபடாத நியதியாக இருந்தபோதும், அவருக்கு வந்த வேண்டுகோள்களில் பாதியைக்கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை எனபதைக் கண்டார். (37) GCTam 381.3
இயேசுவின் இரண்டாம் வருகையின் மிகச்சரியான வேளையைப்பற்றிய அவரது நோக்கினை ஏற்றுக்கொள்ளாமலிருந்த அநேகருங்கூட, கிறிஸ்து வுடைய வருகையின் நிச்சயத்தையும், சமீபத்தையும், அவர்கள் ஆயத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் குறித்த உணர்வை அடைந்தார்கள். சில பெரிய நகரங்களில் அவரது ஊழியம் குறிப்படும்படியான ஒரு உணர்த்துதலை உண்டுபண்ணியது. மதுபான விற்பனையாளர்கள் தங்களது வியாபாரத்தை விட்டுவிட்டு, அவர்களுடைய கடைகளை மக்கள் கூடுமிடமாக மாற்றினார்கள். சூதாடும் குகைகள் தகர்க்கப்பட்டன. நாத்திகர்களும், இயற்கை சமயவாதிகளும் ஊதாரித்தனமாயிருந்தவர்களில் சிலரும், வருடக்கணக்காக ஆலயத்திற்குச் செல்லாமலிருந்தவர்களுங்கூட, சீர்திருத்தமடைந்தனர். ஜெபக்கூட்டங்கள் பல்வேறுபட்ட சபையினராலும் பல்வேறு இடங்களிலும் ஏறத்தாழ ஒவ்வொரு மணிநேரமும் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வர்த்தகர்கள் நண்பகலில் ஜெபிக்கவும் துதிக்கவும் கூடினார்கள். வீணான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இருக்கவில்லை. ஆனால் அனைவரது மனங்களிலும் ஒருமுகமான பக்திவிநயம் காணப்பட்டிருந்தது. ஆரம்பகால சீர்திருத்தவாதிகளின் ஊழியத்தைப்போலவே, அவரது ஊழியமும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதைவிட, புரிந்துகொள்ளுதலை அறிவுறுத்துவதாகவும் மனச்சாட்சியை எழுப்புவதாகவும் இருந்தது. (38) GCTam 382.1
1833 - ல் உறுப்பினராயிருந்த பாப்டிஸ்டு சபையிலிருந்து பிரசங்கம் செய்வதற்கான உரிமம் (லைசன்ஸ்) பெற்றார். அவரது சபையிலிருந்த அநேக ஊழியர்கள் அவரது ஊழியத்தை அங்கீகரித்தார்கள். அவர்களது முறையான அனுமதியுடன் அவர் தனது ஊழியத்தைத் தொடர்ந்தார். (39) GCTam 382.2
அவருடைய நேரடியான ஊழியம் முக்கியமாக நியூ இங்கிலாந்திற்குள்ளும், மத்திய மாகாணங்களுக்குள்ளும் அடங்கியிருந்த போதிலும், ஓய்வின்றி அவர் பயணம் செய்து பிரசங்கம் செய்தார். அநேக வருடங்களாக அவரது செலவுகளை அவரது சொந்தப் பணத்திலேயே பார்த்துக்கொண்டார். அதற்குப்பின்னும் ஒருபோதும் அழைக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லுமளவு போதுமான பணம் பெற்றுக்கொள்ளவில்லை. இவ்விதமாக, குறைந்த வருமானத்திலிருந்து அவர் செய்திருந்த பொது ஊழியம், அவரது சொத்துக்களைப் பாதித்தது. பின்னர் அவரது வாழ்நாளில் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தும்போனது. அவர் ஒரு பெரிய குடும்பத்தின் தந்தையாக இருந்தார். ஆனால் அவர்கள் சிக்கனமும் உழைப்பும் உள்ளவர்களாக இருந்ததினால், அவர்களது குடும்பப் பராமரிப்பையும் அவரது செலவையும் சமாளிப்பதற்கு அவரது பண்ணையின் வருமானம் போதுமானதாக இருந்தது. (40) GCTam 382.3
கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையைப்பற்றி மில்லர் பொது இடங்களில் பிரசங்கிக்கத் தொடங்கிய இரண்டு வருடங்களுக்குப்பின், இரட்சகர், அவரது இரண்டாம் வருகையின் அடையாளமாகக் கூறியிருந்த கடைசி அடையாளம் காணப்பட்டது. “வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும்” (மத்தேயு 24:29) என்று இயேசு சொன்னார். “அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது” (வெளி. 6:13) என்று யோவான் வெளிப்படுத்துதலில், தேவனுடைய நாளை அறிவிக்கும் காட்சிகளைத் தரிசனத்தில் கண்டபோது கூறினார். நவம்பர் 13-ம் நாள், 1833-ம் வருடம் நிகழ்ந்த விண்வெளிக் கற்களின் வீழ்ச்சியால், இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் மக்களிடத்தில் குறிப்பான உணர்த்துதலைப் பெற்றது. ஒருபோதும் பதிவுசெய்யப்படாதவிதத்தில் மிகவும் விசாலமானதும் ஆச்சரியமானதுமான நட்சத்திர விழ்ச்சியின் காட்சி அது. “அமெரிக்க ஐக்கிய நாடெங்கிலுமிருந்த ஆகாயம் முழுவதும், மணிக்கணக்கில், நெருப்பின் ஒளியால், அமைதியற்றதாக இருந்தது. அந்த நாடு அமைக்கப்பட்டதுமுதல், சமுதாயத்தின் ஒரு பகுதியினரால் தீவிரமான வரவேற்புடனும் வேறொரு பகுதியினரால் பயத்துடனும் அபாயக்குரலுடனும் பார்க்கப்பட்ட இவ்விதமான விண்வெளிக்காட்சி, இந்த நாட்டில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.” “அதன் மாட்சிமையும், பயங்கரமுமான அழகும், இன்னும் அநேகரது மனங்களில் தங்கி நிற்கிறது.... அந்த விண்வெளிக்கற்கள் பூமியின்மீது, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் வீழ்ந்த அடர்த்தியளவிற்கு, மழைகூட ஒருபோதும் பெய்ததில்லை.... எப்பக்கமும் ஒரேமாதிரியாக இருந்தது. வார்த்தையில் கூறுவதானால், வானம் முழுவதும் அசைவதுபோல் இருந்தது.... பேராசிரியர் சில்லிமோனின் பத்திரிக்கையில் விவரிக்கப்பட்டதுபோல், அந்தக் காட்சி வட அமெரிக்கா எங்கிலும் காணப்பட்டது.... இரவு இரண்டு மணிமுதல் காலைஒளி பரவும்வரை, வானம் முற்றிலுமாக அமைதியாகவும் மேகங்கள் இல்லாமலும் இருந்தது, வானம் முழுவதிலும் ஓய்வின்றி ஒளிப்பிழம்புகள் விளையாடிக்கொண்டு இருந்தன.”—R. M. Devens,American Progress; or, The Great Events of the Greatest Century, ch. 28,pars. 1—5. (41) GCTam 383.1
“அந்த பிரம்மாண்டமான காட்சியின் வர்ணணையை எந்த மொழியினாலும் விவரிக்கமுடியாது. நேரில் கண்டிராத ஒருவராலும் அதன் மகிமையை போதுமான அளவில் எண்ணிப்பார்க்க முடியாது. உச்சியில் ஒரு இடத்தில் விண்மீன் மண்டலம் முழுவதும் ஒன்றுதிரண்டு, மின்னலின் வேகத்தில் ஒரே நேரத்தில், அடிவானத்தின் எல்லாத் திசையிலும் விண்கற்களை வீசியதுபோல இருந்தது. அப்படியிருந்தும், அவை தீர்ந்துபோகாததுபோலக் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திற்கென்றே படைக்கப்பட்டவைபோல், ஆயிரக்கணக்கானவைகளை, ஆயிரக்கணக் கானவைகள் அதனதன் பாதைகளில் விரைவாகப் பின்தொடர்ந்தன.”—F. Reed,in the Christian Advocate and Journal,Dec. 13,1833. (42) GCTam 383.2
“அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது” என்ற வர்ணணையைவிட மிகச்சரியான ஒன்றைக் கொடுக்க இயலாது.”வாந ழுடன ஊழரவெசலஅயஇெ” ழைசவடயனெ நுஎநனெபெ யுன்எநசவளைநச,ழேஎ. 26,1833.(43) GCTam 384.1
நியூயார்க் நகரில், 1833-ம் வருடம் நவம்பர் 14-ம் தேதி வெளியான JournalofCommerce என்கிற வர்த்தகப் பத்திரிக்கையில்: “நேற்றுக் காலையில் நிகழ்ந்த நிகழ்ச்சியைப்போன்ற ஒன்றினை எந்த ஒரு தத்துவ சாஸ்திரியும், மூதறிஞனும் இதுவரை கூறியதுமில்லை எழுதினதுமில்லை என்று நான் உத்தேசிக்கிறேன். ஒரு தீர்க்கதரிசி பதினெட்டு நூற்றாண்டுகளுக்குமுன் இதை மிகச் சரியாக முன்னறிவித்தார். இங்கு கூறப்பட்டுள்ள நட்சத்திரங்கள் விழுவதை எழுத்தின்படி எரிகற்களாகப் புரிந்துகொள்ளமுடியாவிட்டால்- எழுத்தின்படி அதைத்தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது” என்று ஆச்சரியமான இந்தக் காட்சியைப்பற்றி நீண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. (44) GCTam 384.2
“அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” (மத்தேயு 24:33) என்று இயேசு அவரது சீடர்களுக்குக்கூறி எச்சரித்திருந்த அவரது வருகையைப்பற்றிய கடைசி அடையாளம் இவ்விதமாக வெளிக்காட்டப்பட்டது. இந்த அடையாளங்களுக்குப்பின், வரவிருக்கும் பெரிய நிகழ்ச்சியாக, வானம் சுருட்டப்பட்ட புத்தகம்போலாகி விலகிப்போவதையும், பூமி அதிர்வதையும், மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோவதையும், துன்மார்க்கர் பயத்தினால் மனுஷகுமாரனுடைய சமூகத்திலிருந்து ஓடிப்போக வகை தேடினதையும் யோவான் கண்டான் (வெளி. 6:12-17). (45) GCTam 384.3
நட்சத்திரங்களின் (விண்கற்களின்) விழுகையைக் கண்ட அநேகர், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் முன்னறிவிப்பாக அதைக் கண்டனர். “பெரிதும் பயங்கரமுமான நாளின் ஒரு பயங்கரமான நிழலாக, நிச்சயமான முன்னோடியாக, ஒரு இரக்கமான அடையாளமாக, அதைக் கண்டனர்.- “The Old Countryman,” in Portland Evening Advertiser, Nov. 26,1833. இவ்வாறாக, தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை நோக்கி, மக்களின் கவனம் திரும்பியது. அநேகர் இரண்டாம் வருகையைப்பற்றிய எச்சரிப்பிற்கு செவிகொடுக்கும்படி நடத்தப்பட்டனர். (46) GCTam 384.4
1840-ல் மற்றுமொரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் பரவலான ஆர்வத்தை எழுப்பியது. இரண்டாம் வருகையைப்பற்றிப் பிரசங்கித்தவர்களில் ஒருவரான ஜோசியா லிட்ச், இரண்டு வருடத்திற்கு முன்னரே, ஒட்டோமன் பேரரசுடைய விழுகையைக் குறித்த வெளிப்படுத்தின விசேஷம் ஒன்பதாம் அதிகாரத்தின் விளக்கத்தை வெளிக்காட்டியிருந்தார். அவரது காலக்கணக்கின்படி அந்த வல்லமை, “கி.பி.1840-ன் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்க்கப்பட்டுப் போகவேண்டியதிருந்தது.” அந்தச் சம்பவம் நிறைவேறுவதற்குச் சில நாட்களுக்குமுன் “துருக்கியின் அனுமதியுடன் டிகோசஸ் என்பவன் அரியணை ஏறுவதற்குமுன், முதல் பகுதியான 150 வருடங்கள் மிகச் சரியாக நிறைவேறியாக வேண்டும். அந்த 301 வருடங்களும், பதினைந்து நாட்களும், முதலாம் பகுதியின் முடிவில் ஆரம்பமாகி, கான்ஸ்டாண்டிநோபிளில் உள்ள ஒட்டோமனின் வல்லமை உடைந்துபோகும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலமான 1840-ம் வருடம், ஆகஸ்ட் 11-ம் தேதியில் முடிவடையும். இதுதான் நடக்கவுள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று அவர் எழுதினார்.—Josiah Litch,in Signs of the Times,and Expositor of Prophecy,Aug. 1,1840. (47) GCTam 385.1
குறிப்பிடப்பட்டிருந்த அதே நேரத்தில், துருக்கி தனது தூதர்களின் மூலமாக ஐரோப்பாவிலிருந்த கூட்டணி வல்லமைகளின் பாதுகாப்பை ஏற்று, இவ்வாறாக அது தன்னை கிறிஸ்தவ நாடுகளின் கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தது. முன்கூறப்பட்டிருந்த இந்தச் சம்பவம் மிகச்சரியாக நிறைவேறியது. இது அறியப்பட்டபோது, மில்லராலும் அவரது கூட்டாளிகளாலும் பின்பற்றப்பட்டிருந்த தீர்க்கதரிசன விளக்கக் கோட்பாடுகளின் உண்மையைக் குறித்து திரளானவர்கள் உணர்வடைந்தனர். அதனால் திருவருகையின் இயக்கத்தில் ஒரு ஆச்சரியமான உத்வேகமே ஏற்பட்டது. கற்றறிந்தவர்களும் பதவிகளில் இருந்த மனிதர்களும் மில்லரின் நோக்குகளைப் பிரசங்கிப்பதிலும் செய்திகளாக வெளியிடுவதிலும் அவருடன் ஒருமைப்பட்டதினால் இந்தப் பணியானது 1840 முதல் 1844 வரை விரைவாகப் பரவியது. (48) GCTam 385.2
சிந்தனையினாலும் ஆராய்ச்சியினாலும் ஒழுக்கப்படுத்தப் பட்டிருந்த மில்லர், மனோவலிமை உடையவராக இருந்தார். இவைகளுடன் ஞானத்தின் ஆதாரமாக உள்ளவருடன் தன்னைப் பிணைத்துக் கொண்டதினால், பரத்தின் ஞானத்தையும் சேர்த்துக்கொண்டார். எங்கெல்லாம் மரியாதை, உயர்வு, பண்பின் நேர்மை, சன்மார்க்க உயர்வு ஆகியவை மதிக்கப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அவர் போற்றத்தகுந்த குணங்களை உடையவராக இருந்தார். கிறிஸ்தவத் தாழ்மையுடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் இருதயத்தில் மெய்யான இரக்கம் கொண்டிருந்த அவர், எல்லோரிடமும் சகஜமாகப் பேசக்கூடியவராகவும் பிறருடைய கருத்துக்களைக் கவனிக்கத் தயாராக இருந்து, அவர்களது வாதங்களை நிறுத்துப்பார்க்கக்கூடியவராகவும் இருந்தார். விருப்பமும் உணர்ச்சியின் எழுப்புதலுமின்றி எல்லாக் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தேவனுடைய வார்த்தையினால் சோதித்தார். அவரது பலமிக்க பகுத்தாயும் திறனும் பூரணமான வேத அறிவும் தவறுகளை மறுக்கவும் பொய்களை வெளிக்காட்டவும் அவரைத் தகுதிப்படுத்தியிருந்தது. (49) GCTam 385.3
அப்படியிருந்தும் கசப்புமிக்க எதிர்ப்பில்லாமல் அவரால் அவரது ஊழியத்தை முன்கொண்டுசெல்ல இயலவில்லை. ஆரம்பகால சீர்திருத்தவாதி களுக்கு நேரிட்டது போலவே, இவரும் சத்தியத்தை முன்வைத்தபோது, பிரபலமான சமய போதகர்கள் அதை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. வேதவாக்கியங்களைக்கொண்டு அவர்கள் தங்கள் நிலையைத் தாங்க முடியாதவர்களாக இருந்ததால், மனிதர்களின் கோட்பாடுகளையும் போதனை களையும், முற்பிதாக்களின் பாரம்பரியங்களையும் பற்றிக்கொள்ளத் தேடினர். ஆனால் திருவருகையின் சத்தியத்தைப் பிரசங்கித்தவர்களால் தேவனுடைய வார்த்தை ஒன்று மட்டுமே சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. “வேதாகமம்! வேதாகமம் ஒன்று மட்டுமே” என்பதே அவர்களது ஒரே வார்த்தையாக இருந்தது. எதிர்தரப்பினரிடம் வாதத்திற்கு வேதவாக்கியங்கள் இல்லாமலிருந்தபோது, பரிகசித்துப் பேசவும், அவமதிக்கவும் செய்தனர். கர்த்தரின் இரண்டாம் வருகைக்காக மகிழ்ச்சியுடன் பார்த்திருந்து, பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழவும், அவரது பிரசன்னத்திற்காக ஆயத்தப்படும்படி மற்றவர்களுக்கு புத்திமதிகூறவும் முயன்றதை அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக எடுத்துக்கொண்டு, அதை அவதூறுபடுத்த காலம், பொருட்கள், தாலந்துகள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. (50) GCTam 386.1
இரண்டாம் வருகை என்கிற விஷயத்திலிருந்து மக்களின் மனதைத் திருப்புவதற்கு ஊக்கமான முயற்சிகள் செய்யப்பட்டன. கிறிஸ்துவின் வருகையையும் உலகத்தின் முடிவையும் பற்றிய தீர்க்கதரிசனங்களை ஆராய்வது பாவமாகவும், மனிதர்கள் வெட்கப்படவேண்டிய காரியமாகவும் தோன்றும்படி செய்யப்பட்டது. இவ்வாறாகப் பெரும்பான்மை மக்களாலான ஊழியம், தேவனது வார்த்தையின்மீதிருந்த விசுவாசத்தைக் கெடுத்தது. அவர்களது போதனைகள் மனிதர்களை நாத்திகர்களாக்கியது. அநேகர் தங்களது சுயமான பக்தியற்ற இச்சைகளின்படியே நடப்பதற்கு உரிமை எடுத்துக்கொண்டனர். அதன்பின் தீமைக்குக் காரணமானவர்கள், அந்தத் தீமைகளையெல்லாம் அட்வென்டிஸ்டுகளின்மீது சுமத்தினர். (51) GCTam 386.2
நுண்ணறிவுள்ளவர்களையும், கவனமாகக் கேட்கக் கூடியவர்களையும் இழுத்தபோதும், பரிகாசமும் பகிரங்கமாகக் குற்றங்கூறுதல் இல்லாமல் சமய அச்சகத்தில் மில்லரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கவனமற்றவர்களும் பக்தியற்றவர்களும் சமய ஆசிரியர்களின் நிலைகளால் தைரியமடைந்து, அவர்மீதும் அவரது பணியின்மீதும் அவமதிப்பைக் குவிக்கும் நோக்கத்துடன் மானக்கேடான பட்டப்பெயர்களைச் சூட்டுவதிலும், கீழ்த்தரமான, தேவ தூஷணங்களைப் பேசுவதிலும் ஈடுபட்டனர். நெருங்கிக்கொண்டிருக்கும் நியாயத்தீர்ப்பைப்பற்றி, இந்த உலகத்திற்கு பக்திவிநயமான எச்சரிப்பைக் கொடுப்பதற்காக நகரத்திலிருந்து நகரத்திற்கும், ஊர்களிலிருந்து- ஊர்களுக்கும், ஓய்வு ஒழிச்சல் இன்றித் தனது வசதிகள் நிறைந்த வீட்டைவிட்டு, தனது சொந்தச் செலவில் பயணம் செய்திருந்த அந்த நரைத்த தலையை உடைய மனிதன் மதவெறியன், பொய்யன், யூகித்துக்கூறும் வஞ்சகன் என்று உறுமலுடன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். (52) GCTam 387.1
அவர்மேல்குவிக்கப்பட்ட பரிகாசம், தவறு, ஏச்சு ஆகியவைகட்கு எதிராக சமயச்சார்பற்ற அச்சகத்திலிருந்துங்கூட கோபமிக்க எதிர்ப்பு உண்டானது: “இந்த அளவு திகைக்கவைக்கும் மகத்துவத்தையும் பயங்கரமான விளைவுகளையும் உள்ள அப்படிப்பட்ட ஒரு காரியத்தை விளையாட்டுப்போல சாதாரணமாகப் பேசுவது, அதைப் பிரச்சாரம் செய்பவர்கள், அதற்காகப் பரிந்துபேசுபவர்கள் ஆகியோரின் உணர்வுகளுடன் விளையாடுவதாக மட்டுமன்றி, நியாயத்தீர்ப்பு நாளைக் கேலிசெய்வதாகவும் தெய்வத்துவத்தையே ஊனப்படுத்துவதாகவும், அவரது நியாயச்சங்கத்தின் பயங்கரத்தை இகழ்வதாகவும் இருக்கிறது” என்று உலகப்பிரகாரமான மனிதர்களால் அறிவிக்கப்பட்டது.-Bliss,page 183.(53) GCTam 387.2
தீமைகளையெல்லாம் தூண்டிவிடுபவன் திருவருகையின் தூதின் விளைவுக்கு எதிரான போலியைச் செயல்படுத்த வகைதேடினது மட்டுமன்றி, அந்தச் செய்தியினை அறிவித்துவந்த செய்தியாளனையே அழிக்க வகைதேடியிருந்தான். மில்லரின் வார்த்தைகள் அதைக் கேட்டிருந்தவர்களின் பாவங்களைக் கடிந்து, அவர்களது சுயதிருப்திக்கு இடையூறு செய்யக்கூடிய விதத்தில் நடைமுறை வேதாகம சத்தியங்களாக இருந்ததினால், அந்தத் தெளிவான வெட்டும் வார்த்தைகள் அவர்களிடத்தில் பகைமையை உண்டாக்கியது. அவரது செய்திக்கு நேராக சபை அங்கத்தினர்களால் வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பு கீழ்த்தரமானவர்களை மேலும் மோசமான விதத்தில் நடந்துகொள்ள தைரியப்படுத்தவே, அவர் கூட்டம் நடத்திய இடத்தை விட்டுச்செல்லும்போது பகைவர்கள் அவரது உயிரை எடுக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தக்கூட்ட நெரிசலில் பரிசுத்த தேவதூதர்கள் இருந்தனர். மனித உருவிலிருந்த அவர்களில் ஒருவன் கர்த்தருடைய ஊழியக்காரனின் கரத்தைப்பிடித்து அந்தக் கோபாவேசமான கூட்டத்தினருக்கிடையிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச்சென்றான். மில்லரது ஊழியம் இன்னமும் நடந்து முடியவில்லை. சாத்தானும் அவனது அணியினரும் அவர்களுடைய நோக்கத்தில் தோல்வியடைந்தனர். (54) GCTam 387.3
எல்லா எதிர்ப்புகளையும் கடந்து, திருவருகையின் இயக்கத்திலிருந்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்தது. இருபது, நூறிலிருந்து பல ஆயிரங்களாக சபையினர் பெருகினர். பல்வேறுபட்ட ஆலயங்களில் அநேகர் சேர்ந்தனர். ஆனால் சிறிது காலத்திற்குப்பின், இந்த சபை மாறினவர்களுக்கு விரோதமாக எதிர்ப்பின் ஆவி செயல்பட்டது. மில்லரின் நோக்கினைத் தழுவினவர்களின்மீது சபைகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தன. இந்த நடவடிக்கைக்கு பதிலாக அவரது கோட்பாடுகளில் தவறு இருக்குமானால், அதை அவருக்கு வேதவாக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டவேண்டுமென்று அவர் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளையும் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். (55) GCTam 388.1
“எங்களது விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் ஒரு சட்டமாக ஒரே ஒரு சட்டமாக வேத வாக்கியங்களை மட்டுமே நம்புகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். வேதவாக்கியங்களை அல்லாமல் நாங்கள் வேறு எதை நம்புகிறோம்? பிரசங்க மேடையிலிருந்தும், அச்சகங்கள் மூலமாகவும் எங்களை மிகவும் கடுமையாக, பகிரங்கமாக குற்றம்சாட்டுவதற்கு நாங்கள் செய்தது என்ன? எங்களை (அட்வென்டிஸ்டுகளை) சபைகளில் இருந்தும் ஐக்கியத்திலிருந்தும் நீக்குவதற்கு என்ன நியாயமான காரணம் இருக்கிறது? நாங்கள் தவறானவர்களாக இருந்தால், எங்களது தவறு எங்கே இருகிறது என்று காட்டுங்கள் என்று நாங்கள் மன்றாடுகிறோம். நாங்கள் போதுமான அளவு கேலிசெய்யப்பட்டிருக்கிறோம் அது நாங்கள் தவறில் இருக்கிறோம் என்று எங்களை ஒருபோதும் நம்பச்செய்யாது. தேவனுடைய வார்த்தை ஒன்றுமட்டுமே எங்களுடைய நோக்கினை மாற்ற வல்லது. வேதவாக்கியங்களில் சான்றுகளைக் கண்டதால், எங்களுடைய முடிவுகள் ஆராய்ந்து ஜெபத்தோடு செய்யப்பட்டிருக்கின்றன”என்று எழுதினார்.—Ibid., pages 250,252. (56) GCTam 388.2
யுகங்கள் நெடுகிலும் தேவன் அவரது ஊழியக்காரர்களின் மூலமாக உலகத்திற்குக் கொடுத்த எச்சரிப்புகள் இவ்விதமான அவ நம்பிக்கையுடனும் அவிசுவாசத்துடனும்தான் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்த மக்களுடைய அக்கிரமங்கள் பூமியின் மேல் வெள்ளத்தை அனுப்பும்படி அவரை ஏவினபோது, தங்களுடைய துன்மார்க்கமான வழிகளை விட்டுத் திரும்பும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்படி, அவர் தமது நோக்கத்தை அவர்களுக்கு முதலில் அறிவித்தார். அவர்களை அழிப்பதன் வாயிலாக தேவ கோபம் வெளிப்படாதபடிக்கு, 120 வருடங்கள் மனந்திரும்பும்படியான எச்சரிப்பு அவர்களது செவிகளில் ஒலித்தது. ஆனால் அந்தத் தூது அவர்களுக்கு ஒரு கட்டுக்கதைபோலக் காணப்பட்டது, அவர்கள் அதை நம்பவில்லை. துன்மார்க்கத்தினால் தைரியம் அடைந்த அவர்கள், தேவனுடைய தூதைப் பரிகசித்தனர், அவனது மன்றாட்டுக்களை லேசாகக் கருதி, அவன் யூகித்து கூறுகிறான் என்றுங்கூட அவரைக் குற்றப்படுத்தினர். பூமியின் பெரியமனிதர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு மனிதன் நின்றது எப்படிப்பட்ட துணிகரம்? நோவாவின் தூது உண்மையானதாக இருந்திருந்தால், ஏன் உலகம் முழுவதும் அதைப் பார்க்கவில்லை? நம்பவில்லை? ஆயிரக்கணக்கானவர்களின் ஞானத்திற்கு எதிராக ஒரு மனிதனின் வலியுறுத்தல் இருந்தது! அவர்கள் அந்த எச்சரிப்பை மதிக்கமாட்டார்கள் அந்த பேழைக்குள் அடைக்கலம்புகவும்மாட்டார்கள். (57) GCTam 388.3
மாறாமல் வந்துகொண்டிருக்கின்ற பருவகாலங்கள், ஒரு போதும் மழையைப் பொழியச்செய்திராத நீலவானம், இரவில் மென்மையாகப் பெய்யும் பனியினால் புத்துணர்வடைந்த பசுமையான வயல்வெளிகளாகிய இயற்கையின் பொருட்களை, ஏளனம் செய்தவர்கள் சுட்டிக்காட்டி, “இவன் உவமைகளைத்தானே கூறுகிறான்” என்று குரல் எழுப்பினார்கள். குற்றப்படுத்துவதில் அவர்கள் அந்த நீதியின் பிரசங்கியைக் காட்டுத்தனமான வெறியன் என்று கூறி, தாங்கள் அனுபவித்திருந்த காரியங்களில், இதற்கு முன்னிருந்ததைவிட அதிகமாக ஈடுபட அதிகமான ஆவலுடன் சென்றனர். ஆனால் அவர்களது அவநம்பிக்கை முன்னறிவிக்கப்பட்டிருந்த சம்பவத்தைத் தடுக்கவில்லை. மனந்திரும்புவதற்குப் போதுமான வாய்ப்பினை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களது துன்மார்க்கத்தை தேவன் நீண்ட காலமாகப் பொறுமையுடன் சகித்தார். ஆனால் குறிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது இரக்கத்தை நிராகரித்தவர்களை அவரது நியாயத்தீர்ப்புகள் சந்தித்தன! (58) GCTam 389.1
தமது இரண்டாம் வருகையைப்பற்றி அதேபோன்ற நம்பிக்கையின்மை இருக்கும் என்று கிறிஸ்து அறிவிக்கிறார். நோவாவின் காலத்தில் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.” “அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:39) என்கிறது நமது இரட்சகரின் வார்த்தை. தேவனுடைய ஜனங்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள், உலகத்துடன் ஒன்றுபட்டு, அவர்களைப் போலவே வாழ்ந்து, தடைசெய்யப்பட்டுள்ள சந்தோஷங்களில் அவர்களுடன் கலக்கும்போது, உலகத்தின் ஆடம்பரம் சபையின் ஆடம்பரமாகும்போது, திருமணமணிகள் ஒலிக்கும்போது, அநேக வருட உலகச்செழுமையை அநேகர் எதிர்நோக்கி இருக்கும்போது, வானத்தில் மின்னல் திடீரென்று தோன்றி மறைவதுபோல், அவர்களது பிரகாசமான தரிசனங்களும் மாயத்தோற்றமான நம்பிக்கைகளும் முடிவுக்குவரும். (59) GCTam 389.2
வரவிருந்த ஜலப்பிரளயத்தைப்பற்றி உலகை எச்சரிக்கும்படி, தேவன் தமது ஊழியக்காரனை அனுப்பினதுபோல, அவரது கடைசி நியாயத்தீர்ப்பின் சமீபத்தைப்பற்றி அறியச்செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரர்களை அவர் அனுப்பினார். நோவாவின் நாட்களிலிருந்தவர்கள் நீதியைப் பிரசங்கித்தவனின் செய்தியைப் பரிகசித்துச் சிரித்ததுபோலவே, மில்லரின் நாட்களிலும், தேவனுடைய மக்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்களிலும் அநேகர், எச்சரிக்கையின் வார்த்தைகளைப் பரிகசித்தனர்.(60) GCTam 390.1
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய கோட்பாட்டின் பிரசங்கம் சபைகளுக்கு ஏன் வரவேற்கப்படாததாக இருந்தது? துன்மார்க்கருக்கு கர்த்தருடைய வருகை ஆபத்தையும் பாழ்க்கடிப்பையும் கொண்டுவரும்போது, நீதிமான்களுக்கு அது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவருகிறது. யுகங்கள் நெடுகிலும் இந்த மாபெரும் சத்தியம் தேவனுடைய விசுவாசமிக்கவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஏன் அது அவருடைய ஜனங்கள் என்று சொல்லிக்கொண்டவர்களுக்கு, அதன் ஆசிரியரைப்போலவே, “இடறுதற்கேதுவான கல்லும் விழுவதற்கேதுவான கன்மலையுமாயிற்று”? “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, ... மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3) என்கிற வாக்குத்தத்தத்தை ஆண்டவர்தாமே தமது சீடர்களுக்குக் கொடுத்தார். மன உருக்கமிக்க நமது இரட்சகர்தான், அவர் பரலோகத்திற்குச் சென்றபோது, தமது பின்னடியார்களின் தனிமையையும் துயரையும் எதிர்பார்த்து, நேரடியாக மறுபடியும் வருவார் என்னும் வாக்குறுதியினால் அவர்களை ஆறுதல்படுத்தும்படி தமது தூதர்களை ஏற்படுத்தினார். தாங்கள் நேசித்தவரின் கடைசி சாயலைக் காணும்படியான நோக்கத்துடன் மேல்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களின் கவனம், “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப். 1:11) என்ற வார்த்தைகளினால் திருப்பப்பட்டது. அந்த தேவதூதர்களின் தூதினால் நம்பிக்கை புதிதாகச் சுடர்விட்டது. “அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள்”- லூக். 24:52,53. இயேசு அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதினாலும், இந்த உலகத்தின் போராட்டங்களுடனும், சோதனைகளுடனும் அவர்கள் விட்டுவிடப்பட்டனர் என்பதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையாமல், அவர் மறுபடியும் வருவார் என்கிற அந்த தேவதூதர்களின் வாக்குறுதியினால் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். (61) GCTam 390.2
பெத்லெகேமின் மேய்ப்பர்களுக்கு தேவதூதனால் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியான நற்செய்தியாக இருந்ததைப்போன்று, கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய அறிவிப்பும் இருந்திருக்க வேண்டும். இரட்சகரை உண்மையாகவே நேசிப்பவர்கள், தங்களது நித்திய ஜீவனைப்பற்றிய நம்பிக்கைகள் எவரை மையமாகக் கொண்டுள்ளதோ, அவர் மறுபடியும் வருகிறார் கேவலப்படவும் நிந்திக்கப்படவும், முதலாம் வருகையைப் போன்று நிராகரிக்கப்படவுமல்ல் வல்லமையுடனும், மகிமையுடனும் அவரது மக்களை மீட்க வருகிறார்—என்கிற தேவனுடைய வார்த்தையின்மீது கட்டப்பட்ட அறிவிப்பை மகிழ்ச்சியுடன் போற்றியிருக்கவேண்டும். இரட்சகரை நேசிக்காதவர்கள்தான் அவர் தூரமாக இருக்கட்டும் என்று விரும்புவர். இந்தச் சபைகள் தேவனைவிட்டு விலகிச் சென்றுவிட்டன என்பதற்கு பரலோகம் அனுப்பின அந்தத் தூதினால் எரிச்சலும் விரோத மனப்பான்மையும் எழும்பினது என்பதைவிட முடிவான சான்று வேறு ஒன்றுமில்லை. (62) GCTam 391.1
திருவருகையின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள், தேவனுக்கு முன்பாக மனந்திரும்பவும் தாழ்மைப்படவும் வேண்டிய அவசியத்தை அறிந்தனர். நெடுநாட்களாகக் கிறிஸ்துவிற்கும் உலகத்திற்கும் இடையில் நின்றுகொண்டிருந்த அநேகர், “ஒரு தீர்மானம் எடுக்கவேண்டிய வேளை இப்பொழுது வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். நித்தியகாரியங்கள் அவர்களுக்கு ஒரு அபூர்வமானதாகக் கணக்கிடப்பட்டது. பரலோகம் சமீபமாகக் கொண்டுவரப்பட்டது. தேவனுக்கு முன்பாக தாங்கள் குற்றவாளிகளாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். கிறிஸ்தவர்கள் புதிய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உயிர்ப்பிக்கப்பட்டனர். காலம் மிகக் குறைவாக உள்ளது என்றும் மனிதர்களுக்காக என்ன செய்யவேண்டுமோ அவைகள் விரைவாகச் செய்யப்படவேண்டும் என்றும் அவர்கள் உணர்ந்தனர். பூமி பின்சென்றது. நித்தியம், அது சம்பந்தப்பட்ட இன்பம் அல்லது துன்பம் அனைத்தோடும், அவர்கள்முன் திறக்கப்படுவதுபோல் காணப்பட்டது. அநித்தியமான அனைத்தும் விழுங்கப்பட்டதுபோல் ஆத்துமா உணர்ந்தது.” தேவ ஆவியானவர் அவர்கள்மீது தங்கி, தங்களது சகோதரர்களுக்கும், அதைப்போலவே பாவிகளுக்கும் தேவனுடைய நாளுக்கு என்று ஆயத்தமாகும்படி, வாஞ்சைமிக்க வேண்டுகோளைக் கொடுக்கத்தக்கதாக, அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். அர்ப்பணிக்காத சடங்கின் படியான சபை விசுவாசிகளுக்கு, மௌனமான அவர்களுடைய அன்றாட வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான கடிந்துகொள்ளுதலாக இருந்தது. இன்பம் தேடி அலைவதிலிருந்தும், பணம் சம்பாதிக்கும் ஈடுபாட்டிலிருந்தும், உலக மேன்மைக்கான அவர்களது ஆசைகளிலிருந்தும், தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே, திருவருகை விசுவாசத்திற்கும், அதைப் பறைசாற்றியவர்களுக்கும் எதிராகப் பகையும் எதிர்ப்பும் எழும்பியது. (63) GCTam 391.2
தீர்க்கதரிசன காலக்கணக்கிலிருந்த வாதங்கள் தகர்க்கமுடியாததாகக் காணப்பட்டதினால், அந்த பொருளைப்பற்றி ஆராய்பவர்களை, எதிரிகள் இந்தத் தீர்க்கதரிசனங்கள் முத்திரிக்கப்பட்டவை என்று போதித்து, அதைரியப்படுத்த முயன்றனர். இப்படியாகப் புரொட்டஸ்டாண்டுகள் ரோமன் கத்தோலிக்கர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினர். போப்புமார்க்க சபை மக்களிடமிருந்து வேதாகமத்தைத் தடுத்துவைத்திருந்த அதே நேரம், பரிசுத்த வார்த்தைகளின் முக்கியமான பகுதிகள், குறிப்பாக நமது காலத்திற்குப் பொருந்தக்கூடியவைகள், புரிந்துகொள்ளமுடியாதவைகள் என புரொட்டஸ்டாண்டு சபைகள் கூறிக்கொண்டன. (64) GCTam 392.1
தானியேலின் தீர்க்கதரிசனங்களிலும், வெளிப்படுத்தின விசேஷத்திலும் உள்ள தீர்க்கதரிசனங்கள் புரிந்துகொள்ளமுடியாத தேவ இரகசியங்கள் என்று ஊழியக்காரர்களும் மக்களும் அறிவித்தனர். ஆனால் கிறிஸ்து அவரது சீடர்களை அவர்களுடைய காலத்தில் நிகழ உள்ள சம்பவங்களைப்பற்றி தானியேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளினிடத்திற்கு நடத்தி, “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” (மத்தேயு 24:15) என்று கூறினார். வெளிப்படுத்தின விசேஷம் புரிந்துகொள்ளமுடியாத தேவ இரகசியம் என்கிற பிடிவாதமான கூற்று, “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக் காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” (வெளி. 1:1-3) என்று அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயரினாலேயே அந்தக் கருத்துடன் முரண்பட்டுள்ளது. “காலம் சமீபமாயிருக்கிறது” என்பதே தேவனின் வாக்கு! (65) GCTam 392.2
அதை வாசிக்கிறவன் பாக்கியவான் என்று தீர்க்கதரிசி கூறுகிறான்— அதை வாசிக்காதவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆசீர்வாதம் இல்லை. அதைக் கேட்கிறவர்கள் பாக்கியவான்கள்—ஆம், அதைப்போலவே அந்தத் தீர்க்கதரிசனங்களைப்பற்றி எதையும் கேட்க மறுப்பவர்களும் உள்ளனர். அந்த ஆசீர்வாதங்கள் அந்த வகுப்பினருக்கு இல்லை. இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள எச்சரிப்புகளுக்கும் போதனைகளுக்கும் செவிசாய்க்க அநேகர் மறுக்கின்றனர். அவர்களில் ஒருவராலும் இதில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள ஆசீர்வாதங்களின்மீது உரிமைபாராட்ட முடியாது. இதில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை பரிகாசித்து சிரித்து, பக்திவிநயத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பரிகசிக்கும் அனைவரும், தங்களது வாழ்க்கையைச் சீர்திருத்தி, மனுஷ குமாரனுடைய வருகைக்கென்று தங்களை ஆயத்தம்செய்ய மறுக்கும் அனைவரும், ஆசீர்வதிக்கப்படாதவர்களாக இருப்பார்கள். (66) GCTam 393.1
ஆவியானவரின் ஏவுதலினால் அருளப்பட்டுள்ள சாட்சி, காணக் கூடியதாக இருந்தும், வெளிப்படுத்தின விசேஷம் மனிதனின் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட தேவ இரகசியம் என்று மனிதர்கள் எவ்வளவு துணிவாக போதிக்கின்றனர்? அது வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒரு தேவ இரகசியம்! திறக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம்!! வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆராய்ச்சி தானியேலின் தீர்க்கதரிசனத்திற்கு மனதை நடத்துகிறது. அவை இரண்டும் தேவனால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த உலக வரலாற்றின் முடிவில் நிகழ உள்ள சம்பவங்களைப்பற்றிய முக்கியமான போதனைகளை முன் வைக்கிறது. (67) GCTam 393.2
ஆழமானதும், மயிர்க்கூச்செரியச் செய்வதுமான சபையின் அனுபவத்திலுள்ள காரியங்களின் காட்சிகள் யோவானுக்குத் திறக்கப்பட்டன. தேவனுடைய மக்களின் நிலைமைகள், அபாயங்கள், போராட்டங்கள், இறுதி விடுதலை ஆகியவைகளை யோவான் கண்டான். பரலோகக் களஞ்சியத்திற்கான கதிர்களாகவோ அல்லது அழிவின் நெருப்பிற்கான விறகுகளாகவோ அறுவடையை முற்றச்செய்வதற்கான முடிவுச் செய்திகளை அவன் பதிவுசெய்கிறான். தவறிலிருந்து சத்தியத்திற்குத் திரும்புகிறவர்கள் அவர்களுக்கு முன்னுள்ள ஆபத்துக்களையும் போராட்டங்களையுங்குறித்து அறிவுறுத்தப்படுவதற்காக மிக முக்கியமான, குறிப்பாக கடைசிகாலச் GCTam 393.3
சபைக்கான விஷயங்கள் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டன. இந்த உலகத்தின் மீது வருகிறவைகளைக்குறித்து ஒருவரும் இருளில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. (68) GCTam 394.1
அப்படியானால் ஏன் பரிசுத்த எழுத்துக்களின் முக்கியமான ஒரு பகுதியைப்பற்றிய இந்தப் பரந்த அறியாமை இருந்து வருகிறது? அதன் போதனைகளை ஆராய்ந்து பார்ப்பதில் பொதுவான விருப்பமின்மை ஏன்? அந்தகார லோகாதிபதியின் வஞ்சகங்கள் மனிதர்களுக்கு வெளிக்காட்டப்படுவதை மறைக்கும்படி, அவனது திட்டமிடப்பட்ட முயற்சியின் விளைவே அது. வெளிப்படுத்தின விசேஷத்தை ஆராய்வதற்கு எதிராக நடத்தப்படவுள்ள போரை முன்னதாகவே கண்டு, வெளிப்படுத்தல்காரரான இயேசு கிறிஸ்து, அதை வாசிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுபவர்களுக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அறிவித்திருக்கிறார்.(69) GCTam 394.2