சாலொமோன் பரலோகப் பிரமாணத்தை மேன்மைப்படுத்தின போது தேவன் அவனோடிருந்தார்; இஸ்ரவேலைநேர்மையோடும், இரக்கத்தோடும் ஆளுகிற ஞானத்தைத் தந்தார். செல்வமும் புகழும் பெருகினபோதிலும், சாலொமோன் முதலில் தாழ்மையோடு தான் இருந்தான். அதனால், அவன் செல்வாக்கு அதிகமாகப் பெருகியது. ‘ஐபிராத்து நதி தொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லை மட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொ மோன் ஆண்டு கொண்டிருந்தான்’. ‘அவனைச் சுற்றி எங்கும் சமாதா னம் இருந்தது. சாலொமோனுடைய நாளெல்லாம் யூதாவும் இஸ்ர வேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார் கள்’. 1 இரா 4:21, 24, 25. தீஇவ 51.1
’கர்த்தருக்கு அன்பானவன்’ என்று பொருள்தரும் யெதிதியா என்ற பெயர் சாலொமோனுக்கு இருந்தது. 2சாமு 12:25. தன் ஞானத் தாலும் நேர்மையாலும் உலகளாவிய புகழடையுமளவிற்குத் தேவன் தம் தயவைத் தந்து, அவனைக் கனப்படுத்தினார்; இஸ்ர வேலின் தேவனைக் கனப்படுத்துமாறு பிறரை அவன் வழிநடத்தி னான். ஒளிமயமான எதிர்காலம் இருப்பதுபோல் அவனுடைய வாழ்க்கை துவங்கியது; பின்னர் வழிவிலகலால் அது இருண்டது. யேகோவாவைத் தொழாமல், அஞ்ஞானச் சிலைகளைத் தொழுதான் என்கிற வருத்தமான உண்மையை வரலாறு பதிவு செய்துள்ளது. தீஇவ 51.2
இஸ்ரவேலை ஆளவிருந்த ராஜாக்களுக்கு நேரிடவிருந்த ஆபத்துகளை முன்னறிந்த கர்த்தர் அவர்களை வழிநடத்துவதற் கான வழிமுறைகளை மோசேயிடம் கொடுத்திருந்தார். சாலொமோன் அரியணையில் அமர்வதற்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்ன தாகவே அப்படிச் செய்திருந்தார். இஸ்ரவேலை ஆளப்போகிற வர்கள் என்ன செய்யவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார். ‘’அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவ னுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள் ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற் காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும் பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்தி லிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்” என்றார் தேவன். உபாகமம் 17:18-20. தீஇவ 52.1
’’இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படு கிறவன் தன் இருதயம் பின்வாங்கிப்போகாதபடி, அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்க வேண்டாம்; வெள்ளியையும் பொன்னை யும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்” என்று இன்னோர் எச்சரிப்பும் கர்த்தர் தந்திருந்தார். வச 17. தீஇவ 52.2
இதை நன்கு அறிந்திருந்த சாலொமோன் சில காலம் அதற்குச் செவிசாய்த்தான். சீனாயில் தேவன் தந்த கட்டளைகளின்படி ஆட்சி செய்து வாழ்வதுதான் அப்போது அவனுடைய மிகப்பெரும் வாஞ்சையாக இருந்தது. தன் அரசாங்க அலுவல்களை அவன் நடத்தின் விதம் அக்காலத்திலிருந்த மற்ற தேசங்களின் பழக்க வழக்கங்களைப் போல இல்லை; அதாவது, அத்தேசங்கள் தேவபய மின்றி இருந்தன. அவற்றின் அரசர்கள் தேவனுடய பரிசுத்த பிர மாணத்தை மதிக்கவில்லை. தீஇவ 52.3
இஸ்ரவேலுக்குத் தெற்கேயிருந்த வல்லரசுடன் தன் உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காக, தேவன் தடைசெய்த செயல்களைச் செய்ய முற்பட்டான் சாலொமோன். ஒருவன் தேவனுக்குக் கீழ்ப் படிந்தால் எவ்வளவு நன்மையான விளைவுகள் ஏற்படுமென்பது சாத்தானுக்குத் தெரியும். சாலொமோனின் ஆரம்பக்கால ஆட்சி மகிமையானதாய் இருந்ததற்குக் காரணம் அவன் ஞானமும் கருணையும் நேர்மையுமே. அக்காலங்களில் தேவன் மேல் அவன் வைத்திருந்த பக்தியை நயவஞ்சகமாய் அழிக்க முயன்றான் சாத்தான். அதற்கான சூழ்நிலைகளை அவன் உருவாக்கினான். தேவனை விட்டு சாலொமோன் பிரிய அது ஏதுவாயிற்று. எதிரி இதில் வெற்றி யடைந்து விட்டான் என்பதை வேதாகமம் சொல்கிறது: ‘சாலொ மோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங் கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அர மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்று மதிலையும் கட்டித் தீருமட்டும், அவன் அவளைத் தாவீதின் நகரத் தில் கொண்டு வந்து வைத்தான். ‘1இராஜா 3:1. தீஇவ 53.1
வேத போதனைகளுக்கு எதிரான இத்திருமணத்திலும் ஆசீர் வாதம் இருப்பதுபோல் தெரிந்தது. சாலொமோனின் அஞ்ஞான மனைவி மனமாற்றம் அடைந்து, அவனோடு சேர்ந்து மெய்த் தேவனைத் தொழுதாள்; பார்வோனும் கேசேர் எனும் நகரத்தைக் கைப்பற்றி, கேசேரில் குடியிருந்த கானானியரைக் கொன்று போட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத் திக்குச் சீதனமாகக் கொடுத்தான். 1 இரா9:16. சாலொமோன் இந்த நகரத்தைத் திரும்பக் கட்டி, தன் ராஜ்யத்தை மத்திய தரைக்கடல் எல்லைவரைக்கும் பலப்படுத்தினான். ஆனால், தேவன் தம் ஜனங்களின் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள உண்டாக்கியிருந்த ஞானமான ஏற்பாட்டை இதன் மூலம் முன்யோசனையின்றி அலட்சியம் செய்துவிட்டான் சாலொமோன். ஓர் அந்நிய தேசத் துடன் உடன்படிக்கை செய்ததும், சிலை வழிபட்ட இளவரசியைத் திருமணம் செய்து, அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்ததும் தேவ ஏற்பாட்டுக்கு எதிரானவை. அதனால், தன் எகிப்திய மனைவி மனமாற்றம் அடையக்கூடும் என்று அவன் நினைத்திருந்தால், அது பாவத்திற்கான சாக்குப்போக்கே ஆகும். தீஇவ 53.2
அந்த மோசமான தவற்றின் தீய விளைவுகளை தேவன் தம் மிகுந்த இரக்கத்தினால் சில காலம் தடுத்திருந்தார். தன்னுடைய விவேகமற்ற செயல் துவக்கின் தீய சக்திகளை அவன் பெரிய அள வில்ஞானமாகத் தடுத்திருக்கலாம். ஆனால், அவனோ தன் வல்ல மைக்கும் மகிமைக்கும் ஆதாரமானவரை மறக்கலானான். பகுத் தறிவை விஞ்சிய உலகப்பற்றால் அவனுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. கர்த்தருடைய நோக்கங்களைத் தன் சொந்த வழியில் நிறைவேற்ற முயன்றான். ‘சுற்றிலுமிருந்த தேசங்களோடு வணிகத் தொடர்பும் அரசியல் தொடர்பும் ஏற்படுத்துவதால், அவை மூலம் அவர்களும் மெய்யான தேவனை அறிந்துகொள்ளக்கூடும்” என்று காரணங்கற்பித்தான். இவ்வாறு தன் செயலை நியாயப்படுத்தி, பிற தேசத்தாரோடு பரிசுத்தமற்ற உடன்படிக்கைகளைச் செய்துகொண் டான்; அஞ்ஞான இளவரசிகளைத் திருமணம் செய்து, இந்தத் தொடர்புகளை உறுதிப்படுத்தினான். பிற தேசங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டான்; அதன்மூலம், யேகோவாவின் கட்டளைகளை ஒதுக்க ஆரம்பித்தான். தீஇவ 53.3
’அஞ்ஞான மார்க்கத்தாராகிய தன் மனைவிகள் தன் ஞானத் தையும் முன்மாதிரியையும் பார்த்து, சிலைவழிபாட்டை விட்டு விடுவார்கள்; மெய்த்தேவனைத் தொழுதுகொள்வார்கள்’ என்றும், ‘தன் உடன்படிக்கைகள் நிமித்தம் இஸ்ரவேலுக்கும் சுற்றிலுமிருந்த தேசங்களுக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்படும்’ என்றும் தன்னையே ஏமாற்றிக்கொண்டான். இவையெல்லாம் வீண்நம்பிக் கைகளே! அஞ்ஞான மார்க்கத்தாரின் செல்வாக்கைத் தாக்குப் பிடிக்குமளவிற்கு தனக்குப் பெலன் இருக்கிறதென்று அவன் நினைத்துக்கொண்டது மிகப்பெரிய ஆபத்தாக முடிந்தது. ‘என் செயல் மூலமாக தேவ பிரமாணத்தை நான் அவமதித்தாலும், என் மூலம் மற்றவர்கள் அதன் நீதிபோதனைகளுக்குக் கீழ்ப் படிவார்கள்; அதை உயர்வாகப் போற்றுவார்கள்’ என்று நினைத் தானே! அது சாவுக்கேதுவான வஞ்சனையாக இருந்தது. தீஇவ 54.1
அஞ்ஞான தேசங்களோடு சாலொமோன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் மூலமாகவும் வணிகத் தொடர்புகள் மூலமா கவும் ராஜாவுக்குப் பேரும் புகழும் ஏற்பட்டன; உலகச் சம்பத்துகள் ஏராளமாகக் குவிந்தன. ஓப் பீரிலிருந்து பொன்னையும் தர்ஷி ஸிலிருந்து வெள்ளியையும் அவன் பெருமளவில் தருவிக்க அது ஏதுவாயிருந்தது. ‘ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன் னையும் கற்கள் போலவும், கேதுரு மரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள் போலவும் அதிகமாக்கினான்’ என் கிறது. 2 நாளாகமம் 1:15. சாலொமோனின் நாட்களில், ஏராளமான செல்வந்தர் உருவானார்கள். ஆனால், பசும்பொன்னுக்கு இணை யான் நற்குணம் அவர்களில் மங்கி, களங்கமடைந்து விட்டது. செல் வத்துடன் வருகிற சோதனைகள் பெருகிவிட்டன. தீஇவ 54.2
சாலொமோன் படிப்படியாகதேவனை மறந்தான். தன் நிலையை உணரும்முன், அவன் தன் தேவனைவிட்டு விலகி, வெகுதூரம் சென்றுவிட்டான். தேவநடத்துதல் மேலும் தேவ ஆசீர்வாதத்தின் மேலும் தனக்கிருந்த நம்பிக்கையைக் குறைத்து, அவன் உணரா மலேயே தன் சுயபெலத்தின்மேல் அதிக நம்பிக்கை வைத்தான். இஸ்ரவேலரைவிசேஷித்த ஜனங்களாக மாற்றத் தேவையான கீழ்ப் படிதலைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தான்; சுற்றிலுமிருந்த தேசத்தாரின் பழக்கவழக்கங்களை அதிகமதிகமாக ஏற்றுக்கொண்டான். வெற்றியும் அவனுக்கிருந்த உயர் பதவியும் கொண்டு வந்த சோதனைகளுக்கு இடங்கொடுத்தான்; அதனால், தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்திற்கு ஆதாரமாக இருந்த ஆண்ட வரை மறந்து போனான். அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் சகல தேசத்தாரையும் விஞ்சவேண்டும் எனும் ஆசை அதிகரித்தது. அதனால், அதுவரையிலும் தேவமகிமைக்கென அவன் பயன் படுத்தி வந்த பரலோக ஈவுகளை இப்போது தன் சுயநல நோக்கங் களுக்காகச் செலவழிக்கும் படி தடம்புரண்டான். ஏழை மக்களின் நலனுக்காகவும், பரிசுத்த வாழ்வின் நியதிகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காகவும் பயபக்தியுடன் செலவளிப்பதற்காக அவ னிடம் தேவன் தந்த பணத்தை, பேராசையான சுயநலத்திட்டங் களுக்காக வீணே செலவழித்தான். தீஇவ 55.1
உலகத்தாரின் பார்வையில் மற்றத் தேசங்களை விஞ்சி நிற்க வேண்டும் என்கிற பேராவலே அவனில் விஞ்சி நின்றது. அத னால், குணத்தில் பரிபூரணமும் அலங்காரமும் பெற்றுக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை ராஜா மறந்துவிட்டான். உலகத்தா ருக்கு முன்பாக தன்னை மகிமைப்படுத்த முயன்றதால், அவன் தன் மேன்மையையும் நேர்மையையும் விற்றுப்போட்டான். பல தேசங் களுடன் வணிகம் செய்ததன் மூலம் பெருமளவில் வருவாய் கிடைத்தது. மேலும், வரிப்பணம் அதிகம் வசூலித்தான். பெருமை, பேராசை, ஊதாரித்தனம், சிற்றின்ப நாட்டம் போன்றவற்றால் கொடுமையும் பணம் பறித்தலும் தலைவிரித்தாடின. தன் ஆட்சி யின் ஆரம்பக்காலங்களில் அவன் நேர்மையோடும் அக்கறையோ டும் மக்களை அணுகிவந்த மனநிலை இப்போது மாறிவிட்டது. மன்னர்களிலெல்லாம் ஞானமும் மிகுந்த இரக்கமும் நிறைந்தவ னாய் இருந்தவன் இப்போது கொடுங்கோலன் ஆனான். கருணை யோடும் தெய்வபயத்தோடும் மக்களைப் பாதுகாத்தவன், அடக்கி யாளவும் கொடுமைப்படுத்தவும் தொடங்கினான்; வரிக்குமேல் வரிவிதித்தான் ; அரண்மனையில் சுகபோகமாக வாழவே அப்படிச் செய்தான். தீஇவ 55.2
மக்கள் குறைகூற ஆரம்பித்தார்கள். தங்கள் அரசன்மேல் அவர்கள் ஒரு சமயத்தில் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மாறிப்போய், வெறுப்பும் அருவருப்பும் உண்டாயின. தீஇவ 56.1
இஸ்ரவேலை ஆளுகிறவர்கள் மனிதனுடைய புயபெலத் தைச் சாராமல் இருப்பதற்காக, தங்களுக்கென குதிரைகளைப் பெருக்கிக் கொள்ளக்கூடாது என்று ஆண்டவர் எச்சரித்திருந்தார். ஆனால், இந்தக் கட்டளையை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், ‘சாலொமோன் தனக்குக் குதிரைகளை எகிப்திலிருந்து அழைப் பித்தான்’. 1இரா 10:28. ‘எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது. 2நாளா 9:28. ‘சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த் தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது. பன்னீரா யீரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக் கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்’. 1இரா 10:26. தீஇவ 56.2
சுகபோகமும் சிற்றின்ப மோகமும் உலகதயவுமே மேன்மைக் கான அடையாளங்கள் எனும் எண்ணம் ராஜாவின் மனதில் அதி கம் அதிகமாக உண்டாக ஆரம்பித்தது. எகிப்து, பெனிக்கேயா, ஏதோம், மோவாப் போன்ற நாடுகளிலிருந்து வசீகர அழகுடைய பெண்கள் வரவழைக்கப்பட்டார்கள்; அப்படிப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிலை களை வழிபடுகிறவர்களாகவும், கொடுமையும் இழிவுமான சடங் குகளைப் பின்பற்றப் பயிற்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அழகில் ராஜா மதிமயங்கிப்போனதால், அவன் தன் தேவனுக்கும் தன் ராஜ்யத்திற்கும் ஆற்றவேண்டிய கடமைகளைப் புறக்கணிக்கலானான். தீஇவ 56.3
அவன்மேல் அவருடைய மனைவிகளுக்கு இருந்த செல் வாக்கு மிகவும் பெரியதாக இருந்தது. தங்களோடு சேர்ந்து சிலை களை வணங்குமாறு படிப்படியாக அவனை அவர்கள் இணங்க வைத்தனர். அஞ்ஞான மார்க்கங்களுக்கு எதிரான ஒரு தடைக் கல்லாக விளங்கும்படி தேவன் கொடுத்திருந்த ஒரு கட்டளையை சாலொமோன் முன்னர் புறக்கணித்ததால், இப்போது பொய்த் தெய்வங்களை வணங்க, தன்னை விற்றுப்போட்டான். ‘சாலொ மோன் வயதுசென்ற போது, அவனுடைய மனைவிகள் அவன் இரு தயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார் கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீ தின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தம் மாயிருக்கவில்லை. சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில் கோமையும் பின்பற்றினான். ‘1இராஜா 11:4, 5. தீஇவ 56.4
யேகோவாவின் அழகான ஆலயம் அமைந்திருந்த மோரியா மலைக்கு எதிர்ப்புறத்தில், ஒலிவமலையின் உச்சியில் தென்புறமாக சிலைவழிபாட்டுக்கென பெரிய கட்டடங்களை சாலொமோன் கட்டினான். ஒலிவமரத்தோப்புகளும் இலவங்கமரத்தோப்புகளும் நிறைந்திருந்த அப்பகுதியில் தன் மனைவிகளைத் திருப்திப் படுத்துவதற்காக உயரமானவையும் கல்லாலும் மரத்தாலும் செய்யப்பட்டவையுமான அருவருக்கத்தக்க சொரூபங்களை வைத்தான். அந்தப் பொய்த்தெய்வங்களின் பலிபீடங்களுக்கு முன்னால், ‘மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோருக்கும்’ அஞ் ஞானமார்க்கத்தின்படி மிக இழிவான சடங்குகள் நடத்தப் பட்டன. 1இராஜாக்கள் 11:7. தீஇவ 57.1
சாலொமோனின் இந்தப் போக்கு அதற்கேற்ற தண்டனை களைக் கொண்டுவந்தது. சிலைவழிபாட்டுக்காரர்களுடன் இணைந் ததன் மூலம், தன் தேவனைவிட்டு அவன் பிரிந்ததே அவனுடைய அழிவுக்குக் காரணமாக அமைந்தது. தேவனுக்கு உண்மையாக இருப்பதை அலட்சியப்படுத்தியதால், தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொள்ளும் தன்மையை இழந்துபோனான்; அதனால், அவனுடைய ஒழுக்கத்திறன்கள் ஒழிந்துபோயின; மென்மையான உணர்வுத்திறன்கள் மழுங்கிப்போயின; மனச்சாட்சியில் உணர் வற்றவனானான். தன் ஆளுகையின் ஆரம்பக்காலத்தில், ஒன்று மறியாக் குழந்தை ஒன்றை அதன் தாயுடன் திரும்பச்சேர்ப்பதில் தன் ஞானத்தை வெளிப்படுத்தி, பரிவும் இரக்கமும் காட்டிய அவன் இப்போது சிலைகளை அமைத்து, அங்குக் குழந்தைகளைப் பலியிடுமளவிற்குத் தரம் தாழ்ந்து போனான். 1 இரா 3:16 - 28. வாலிபனாக இருந்த காலத்தில் அவன் பகுத்தறிவும் ஞானமும் பெற்றிருந்தான். பலம் வாய்ந்த வீரனாக அவன் இருந்த காலத்தில், ‘மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்’ என்று எழுதினான். நீதி 14:12. அதே சாலொமோன் பிற்காலங்களில் ஒழுக்கக்கேடும் அருவருப்புமான சமயச் சடங்குகளைக் காமோசுக்கும் அஸ்தரோத்துக்கும் செய்து, பரிசுத்தத்தைவிட்டுப் பின்வாங்கிப் போனான். ஆலயப்பிரதிஷ்டை யில் தன் மக்களிடம், ‘’உங்கள் இருதயம் நம் தேவனாகிய கர்த்த ரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” என்றவன், தானே தன் வார்த் தைகளை முழுமனதுடன் கடைப்பிடிக்காமல் குற்றவாளியாகி விட்டான். 1இரா 8:61. கட்டுப்பாடற்ற வாழ்க்கையே சுதந்தரம் என் கிறதப்பெண்ணம் வந்தது. இருளை வெளிச்சத்தோடும், தீமையை நன்மையோடும், அசுத்தத்தைச் சுத்தத்தோடும், பேலியாளைக் கிறிஸ்துவோடும் இணைக்க முயன்றான். அதற்கு அவன் கொடுத்த விலை பெரிது! தீஇவ 57.2
ஆட்சி செய்வதில் ராஜாக்களில் மேன்மையாக விளங்கினவன் அவன். ஆனால், வாழ்வதில் ஒழுக்கமற்றவனாகவும் பிறருக்கு அடிமையாகவும் கைப்பாவையாகவும் மாறினான். உயர்வும் உறுதியுமான குணநலன்களை ஒரு சமயத்தில் அவன் பெற்றி ருந்தான்; அவையெல்லாம் ஊக்கம் குன்றி, உறுதி குலைந்து போயின. நாத்திக உணர்வுகள் தோன்றின; சந்தேகங்கள் ஏற்பட்டன. ஜீவனுள்ள தேவன்பேரில் இருந்த விசுவாசம் போய்விட்டது. அவ நம்பிக்கையால் மகிழ்ச்சி குறைந்துவிட்டது; ஒழுக்கம் நலிந்து விட்டது; வாழ்வு தாழ்ந்துவிட்டது. ஆரம்பத்தில் நீதியோடும் பெருந்தன்மையோடும் விளங்கிய ஆட்சியில் கொடுமையும் அடக்குமுறையும் நிறைந்துவிட்டன. மனித தன்மையின் பெல வீனத்தை நாம் என்ன சொல்ல! தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் மென்கிற உணர்வை ஒருவன் இழந்துவிட்டால், தேவன் அவனுக் குச் செய்யக்கூடியது எதுவுமில்லை . தீஇவ 58.1
இஸ்ரவேலர் தங்கள் தேவனை மறந்த அந்நாட்களில், அவர் களின் ஆன்மிக நிலை வெகுவேகமாகச் சரிந்தது. ராஜாவே தன் திட்டங்களைச் சாத்தானின் செயல்பாடுகளோடு இணைத்துக்கொண்ட நிலையில், வேறென்ன நிகழக்கூடும்? மெய்த்தொழுகைக்கும் பொய்த் தொழுகைக்குமிடையே உள்ள வித்தியாசத்தை உணர முடியாத விதத்தில் இஸ்ரவேலரின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த எதிரியான சாத்தான் தன் பிரதிநிதிகள் மூலம் கிரியை செய்தான். இஸ்ரவேலரும் அதற்கு இரையாகிப்போனார்கள். பிற தேசங் களோடு செய்த வர்த்தகத்தினிமித்தம், தேவன்மேல் அன்பற்ற வர்களோடு இஸ்ரவேலர் நெருங்கிப் பழகநேரிட்டது; அதன்மூலம் இஸ்ரவேலரும் தேவன்மேல் அன்பற்றவர்களாக மாற ஆரம்பித் தனர். தேவனுடைய பரிசுத்த குணம் பற்றிய உணர்வுகள் மங்கிப் போயின. கீழ்ப்படிதலின் பாதையில் செல்ல மறுத்து, நீதியின் சத்துருவுக்கு நெருக்கமானவர்களாக மாறினார்கள். சிலைவழி பாட்டுக்காரர்களைத் திருமணம் செய்வது பொதுவான பழக்கமாகி விட்டது. சிலைவழிபாட்டை அருவருக்கிற தன்மை இல்லாமல் போயிற்று. பலதாரப் பழக்கம் பரவியது. சிலைவழிபட்ட தாய் மார்கள் தங்கள் பிள்ளைகளை அஞ்ஞானச் சடங்காச்சாரங்களில் வளர்த்தார்கள். தேவன் நியமித்த பரிசுத்த வழி பாட்டு முறையை மறந்த சிலர் சிலைவழிபாட்டின் அந்தகார முறைமைகளுக்கு இடமளித்தார்கள். தீஇவ 58.2
உலகம், அதன் போக்கு, அதன் செல்வாக்குகளிலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். உலகில் நம்மை வாழவைக்க தேவனால் முடியும்; ஆனால், நாம் இந்த உல கிற்கு உரியவர்களாக வாழக்கூடாது. தேவ அன்பு நிலையற்றதோ, மாறக் கூடியதோ அல்ல. அளக்க முடியாத அக்கறையோடு அவர் தம் பிள்ளைகளை எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கிறார். நாம் முற்றிலும் அவருக்கு உண்மையாயிருப்பதை விரும்புகிறார். ‘இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒரு வனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு 6:24. தீஇவ 59.1
சாலொமோனுக்கு தேவன் அற்புதமான ஞானம் தந்திருந்தார். உலகமோ தேவனிடமிருந்து அவனைப் பிரித்தது. அவனைவிட இன்றைய மக்கள் பெலம் வாய்ந்தவர்கள் அல்லர்; அவனை விழச் செய்த அதே சூழ்நிலைகள் இவர்களுக்கும் ஏற்படலாம். அவ னுக்கு இருந்த ஆபத்துகளைக் குறித்து தேவன் அவனை எச்சரித் ததுபோல, இன்றும் எச்சரிக்கிறார். உலகத்தோடு ஒத்துப்போய், உங்கள் ஆத்துமாக்களை ஆபத்துக்கு உள்ளாக்க வேண்டாமென்று எச்சரிக்கிறார். ‘’நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப் பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்’‘ என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2கொரிந்தியர் 6:17,18. தீஇவ 59.2
செழிப்பின் மத்தியில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. ஒருவ ரிடம் பணமும் கனமும் இருந்தால், அவன் தனது தாழ்மையையும் ஆன்மிகத்தையும் விட்டுவிடக்கூடிய ஆபத்து அவனுக்கு இருக் கிறது. இதை எல்லாக் காலங்களிலும் நாம் பார்க்கமுடிகிறது. காலிக்குடத்தைச் சுமந்து செல்வது எளிது; நிறைகுடத்தைச் சம் நிலையில் சுமப்பதுதான் கடினம். வேதனையும் சோதனையும் நமக்குத் துக்கத்தைத் தரலாம். ஆனால், செல்வச்செழிப்புதான் ஆன்மிக வாழ்விற்கு அதிக ஆபத்தானது. மனிதர் தேவசித்தத் திற்குத் தொடர்ந்து அடிபணிந்து, சத்தியத்தால் பரிசுத்தமடை யாவிட்டால், அவர்களிடம் இருக்கிற செல்வச் செழிப்பு நிச்சய மாகவே இறுமாப்பான சுபாவத்தை அவர்களில் உருவாக்கிவிடும். தீஇவ 59.3
ஒவ்வோர் அடியை நாம் எடுத்துவைக்கும்போதும், தேவவழி நடத்துதல் நமக்குத் தேவை; அவர் போதனை தேவை. இப் படிப்பட்ட தாழ்மை எனும் பள்ளத்தாக்கில் நமக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், உயரமான சிகரத்தில் நிற்பவர்களுக்கு ஆபத்து இருக்கிறது; அவர்களுடைய பதவியினிமித்தம் அவர் களுக்கு அதிக ஞானம் இருக்கவேண்டும்; ஆனால், ஆபத்துகள் தாம் அதிகம் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் தங்கள் தேவனை தங்கள் நம்பிக்கையாக வைக்காத பட்சத்தில் நிச்சயமாக விழுந்து விடுவார்கள். தீஇவ 60.1
பெருமைக்கும் பேராசைக்கும் இடங்கொடுக்கும்போதெல் லாம் வாழ்க்கை சீர்கெடுகிறது. ஏனெனில், பெருமை இருந்தால், நாம் நம் ஏழ்மையை உணர்வதில்லை; பரலோகத்தின் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற முடியாதவாறு நாம் நம் இருதயத்தை அடைத்துக்கொள்கிறோம். சுய மகிமை அடைவதையே தன் நோக்கமாகக் கொண்டவன், தேவகிருபை இல்லாதவனாகக் காணப்படுவான். ஏனெனில், தேவ வல்லமையால் மாத்திரமே மெய்யான ஐசுவரியத்தையும் நிறைவான மகிழ்ச்சியையும் பெற முடியும். கிறிஸ்துவுக்காக சகலத்தையும் செய்கிறவனும் கொடுக் கிறவனும், ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்பதைக் கண்டு கொள்வான். நீதி 10:22. கிருபையின் மென்மையான தொடுதலால், கவலைகளையும் அசுத்த ஆசைகளையும் ஆத்துமாவிலிருந்து இரட்சகர் அகற்றுகிறார்; பகைமை மாறி அன்பு பிறக்கும்; அவிசு வாசம் மாறி நம்பிக்கை பிறக்கும். ‘’என்னைப் பின்பற்று’‘ என்று அவர் ஆத்துமாவோடு பேசும்போது, முன்பு நம்மில் உலகக் கவர்ச்சி ஏற்படுத்தியிருந்த மருட்சி உடைந்துபோம்; பேராசை, புகழார்வம் எனும் ஆவிகள் அவர் குரலின் சத்தம் கேட்டவுடன் உள்ளத்திலிருந்து பறந்தோடும். மனிதர் அவற்றின் அடிமைத்த னத்திலிருந்து விடுபட்டு, தேவனைப் பின்பற்ற எழுந்திருப்பார்கள். தீஇவ 60.2