Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  19—காரிருளில் தோன்றிய ஒளி!

  (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 343-354)

  ந்த பூமியில் யுகங்கள்தோறும் நடந்த ஒவ்வொரு சமய இயக்கத்திலும் அல்லது பெரும் சீர்திருத்தத்திலும் குறிப்பிடத்தகுந்த ஒற்றுமை இருப்பதை தேவனுடைய செயல்கள் காட்டுகின்றன. மனிதர்களுடன் தேவன் ஈடுபடும் கொள்கைகள் எப்போதும் ஒரேவிதமாகவே உள்ளன. நிகழ்காலத்தில் உள்ள முக்கியமான இயக்கங்களுக்கு இணையான சம்பவங்கள், முற்காலங்களில் இருந்தன. கடந்தகாலங்களிலிருந்த சபையின் அனுபவம் நமது காலத்திற்குறிய பெருமதிப்புள்ள பாடங்களைக் கொண்டுள்ளன. (1)GCTam 395.1

  இரட்சிப்பின் ஊழியத்தை முன்கொண்டு செல்லும் பூமியின் மீதுள்ள பெரும் இயக்கங்களை, தேவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அவரது ஊழியக்காரர்களைக்கொண்டு நடத்துகிறார் என்பதைவிட அதிகமாக எந்த சத்தியமும் வேதாகமத்தில் மிகத்தெளிவாகப் போதிக்கப்படவில்லை. தேவனுடைய கிருபை, இரக்கம் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதில், தேவனுடைய கரத்தில் கருவிகளாக இருக்கும்படி, மனிதர்கள் அவரால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யவேண்டிய வேலையின் பகுதி உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பணியைச் செய்ய அவனைத் தகுதிப்படுத்தும்படிக்கும், அந்தக் காலத்தின் தேவைக்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட அளவு வெளிச்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு மனிதனும் அவன் எந்த அளவிற்குப் பரலோகத்தால் கௌரவிக்கப்பட்டவனாக இருந்தபோதிலும், மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றிய முழுமையான புரிந்துகொள்ளுதலை அடையவில்லை அல்லது தன் காலத்தின் பணியில் தெய்வீக நோக்கத்தைப்பற்றிய பூரணமான போற்றுதலையும் உணரவில்லை. செய்யும்படி அவர் தங்களிடம் கொடுக்கும் பணியினால், தேவன் எதை நிறைவேற்றக்கூடும் என்பதை மனிதர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளுவதில்லை. அவரது பெயரால் அவர்கள் கூறும் தூதில் அடங்கியிருக்கிற செய்தியையும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளுவதில்லை. (2)GCTam 395.2

  “தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?”-யோபு 11:7. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது”- ஏசாயா 55:8,9. “நானே தேவன், வேறொருவரும் இல்லை; அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும்செய்யப்படாத வைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்”-ஏசாயா 46:9,10. (3)GCTam 396.1

  ஆவியின் சிறப்பான ஒளியினால் அனுகூலம் பெற்றிருந்த தீர்க்கதரிசிகளுங்கூட, தங்களிடம்ஒப்படைக்கப்பட்டிருந்த வெளிப்படுத்தல்களின் முக்கியத்துவம்பற்றி, முழுமையாக அறிந்திருக்கவில்லை. தேவனுடைய மக்களுக்கு அதில் அடங்கியிருந்த போதனையின் அவசியத்திற்குத்தக்கபடி, ஒவ்வொரு காலத்திலும் அதன் பொருள் விவரிக்கப்படவேண்டியதாக இருந்தது. (4)GCTam 396.2

  சுவிசேஷத்தின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள இரட்சிப்பைப்பற்றி எழுதும்போது, “உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையா யிருக்கிறார்கள்” (1பேதுரு 1:10-12) என்று பேதுரு கூறுகிறார்.(5)GCTam 396.3

  ஆண்டவரால் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு கொடுக்கப்படாதிருந்தும், தேவன் வெளிப்படுத்த விரும்பியிருந்த அத்தனை வெளிச்சத்தையும் அடைந்துகொள்வதற்கு அவர்கள் அக்கரையுடன் வகைதேடினார்கள். அவர்கள் “இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ” “கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்.” கிறிஸ்தவ காலத்திலுள்ள தேவனுடைய ஜனங்களுக்கு அவர்களுடைய நன்மைக்கென்று அவரது ஊழியக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எப்படிப்பட்ட ஒரு பாடமாக உள்ளது! “தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது.” இன்னும் பிறக்காமல் இருந்த தலைமுறையினருக்கென்று வெளிப்படுத்தப்பட்டவைகளைப் பற்றி “கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினதால்” அந்த அவர்களின் தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் சாட்சிகளாயிருக்கிறார்கள். இந்த பரிசுத்தமான வாஞ்சையோடு, பிற்காலங்களில் உள்ளவர்களது— பரலோகத்தின் இந்த ஈவைப்பற்றின அக்கரையின்மையுடனும் சம்பந்தமற்ற விதத்துடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்! சௌகரியமாக இருப்பதை விரும்பி, உலகை நேசித்து, தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளமுடியாதவைகள் என்று அறிவித்து, மந்தமாகவும், திருப்தியாகவும் இருப்பவர்களுக்கு இது எப்படிப்பட்ட ஒரு கடிந்துகொள்ளுதலாக இருக்கிறது! (6)GCTam 396.4

  எல்லையில்லாத ஒருவரின் ஆலோசனைக்குள் நுழைவதற்கு, எல்லைக்குட்பட்ட மனிதர்களின் மனங்கள் போதுமானதாக இல்லாமலிருந்தாலும், அல்லது அவரது நோக்கங்களை அவர் செயல்படுத்தும் விதத்தை முழுவதுமாக அறிந்துகொள்ள அவர்களால் முடியாமலிருந்தாலும், அவர்களிடமுள்ள சில தவறுகளாலும் அலட்சியங்களாலும்தான், பரலோகத்தின் தூதை அவர்கள் மங்கலாகப் புரிந்துகொள்ளுகின்றனர். மக்களின் மனங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களின் மனங்கள்கூட, மனிதர்களின் கருத்துக்கள், பாரம்பரியங்கள், தவறான போதனைகளினால் அடிக்கடி குருடாகிவிடுவதனால், தேவன் அவரது வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ள பெரும் காரியங்களின் ஒருபகுதியை மட்டுமே அவர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்துவின் சீடர்களிடமும், இரட்சகர் அவர்களுடன் நேரடியாக இருந்தபோதுங்கூட இப்படியே இருந்தது. இஸ்ரவேலை உலகளாவிய பேரரசின் அரியணைக்கு உயர்த்தும் உலகப்பிரகாரமான ஒரு இளவரசராக மேசியா வருவார் என்ற பெரும்பான்மையினரின் எண்ணத்தினால், சீடர்களின் மனங்களும் நிரப்பப்பட்டிருந்ததினால், அவரது பாடுகளையும் மரணத்தையுங்குறித்து அவர் முன்னறிவித்த வார்த்தைகளின் பொருளை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. (7)GCTam 397.1

  “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற்கு 1:15) என்ற தூதுடன் கிறிஸ்துதாமே அவர்களை அனுப்பிவைத்தார். அந்தத் தூது தானியேல் ஒன்பதாம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிரபுவாகிய மேசியா வரும்வரைக்கும் அறுபத்தொன்பது வாரங்கள் செல்லும் என்று தேவதூதனால் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் மேசியாவின் ராஜ்யம் எருசலேமில் அமைக்கப்பட இருப்பதை மேலான நம்பிக்கையுடனும், மகிழ்ச்சிமிக்க எதிர்பார்ப்புடனும் சீடர்கள் எதிர்நோக்கி இருந்தனர்.(8) கிறிஸ்து அவர்களுக்கு ஒப்புவித்த தூதின் பொருளை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருந்தபோதிலும் அத்தூதைப் பிரசங்கித்தனர். அவர்களது அறிவிப்பு, தானியேல் 9:25-ஐ அஸ்திவாரமாகக் கொண்டிருந்தபோதிலும், அதே அதிகாரத்தின் அடுத்த வசனத்தில், மேசியா சங்கரிக்கப்படுவார் என்றிருந்ததை அவர்கள் காணவில்லை. அவர்களது பிறப்பிலிருந்தே, அவர்களது இருதயங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்த பூமிக்குரிய அரசின் மகிமையின்மீது பதிந்திருந்தது. அது தீர்க்கதரிசனக் குறிப்புகளையும் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் புரிந்துகொள்ளுவதை ஒரேயடியாகக் குருடாக்கியிருந்தது. (9)GCTam 398.1

  யூதஇனத்திற்கு இரக்கத்தின் அழைப்பை முன்வைக்கும் பணியை செய்து, அதே நேரத்தில், அவர் தாவீதின் சிங்காசனத்திற்கு உயர்த்தப்படுவதை அவர்கள் எதிர்பார்த்திருந்தபோது, அவர் ஒரு குற்றவாளியாகப் பிடிக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு, கேவலமாக நடத்தப்பட்டு, பழிக்கப்பட்டு, கல்வாரி சிலுவையின்மீது உயர்த்தப்பட்டதைக் கண்டனர். அவர்களது கர்த்தர், கல்லறையில் நித்திரை செய்திருந்த நாட்களின்போது, எப்படிப்பட்ட மனத்துயரமும் மனவேதனையும் சீடர்களின் இருதயங்களைக் கிழித்திருந்தது? (10)GCTam 398.2

  தீர்க்கதரிசனத்தால் குறிக்கப்பட்டிருந்த மிகச்சரியான நேரத்திலும் விதத்திலும் கிறிஸ்து வந்தார். அவரது ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேத வாக்கியங்களின் சாட்சிகள் நிறைவேறின. அவர் இரட்சிப்பின்தூதைப் பிரசங்கித்தார். “அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தது.” அதைக் கேட்டவர்களின் இருதயங்கள் அது பரலோகத்தினுடையது என்று சாட்சி பகர்ந்தன. தமது குமாரனின் தெய்வீக ஏற்படுத்துதலுக்கு வசனமும் தேவ ஆவியும் சாட்சிகொடுத்தன. (11)GCTam 398.3

  சீடர்கள் இன்னமும் அழியாத அன்போடு அவர்களது அன்பான ஆண்டவரைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அவர்களது மனங்கள் நிச்சயமின்மை, சந்தேகம் ஆகியவைகளால் சூழ்ந்துகொள்ளப் பட்டிருந்தன. அவர்களது மனவேதனையில், கிறிஸ்து அவரது பாடுகளையும், மரணத்தையும் குறித்து முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்த வார்த்தைகளை நினைவுக்குக்கொண்டுவர அவர்கள் தவறியிருந்தனர். நசரேயனாகிய இயேசு மெய்யான மேசியாவாக இருந்திருந்தால், அவர்கள் இப்படிப்பட்ட துயரிலும் மனமடிவிலும் மூழ்கி இருந்திருப்பார்களா? இந்தக் கேள்விதான், அவரது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் குறுக்கிட்டிருந்த நம்பிக்கையற்ற அந்த ஓய்வுநாளின் மணிநேரங்களில் இரட்சகர் நித்திரை செய்திருந்தபோது, அவர்களைச் சித்திரவதை செய்திருந்தது. (12)GCTam 398.4

  துயர இரவின் இருள், இயேசுவின் அந்த அடியார்களைச் சுற்றிலும் கனமாக இருந்திருந்தபோதிலும், அவர்கள் கைவிடப்படவில்லை. “நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.... அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்”— மீகா 7:8-9. “உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப் படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” (சங். 139:12) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். “செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்'‘-சங். 112:4. உ “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்று தேவன் கூறியிருக்கிறார். (13)GCTam 399.1

  கர்த்தருடைய நாமத்தினால் சீடர்கள் கொடுத்த அறிவிப்பு, குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் சரியாக இருந்து, அவைகள் சுட்டிக்காட்டியிருந்த நிகழ்ச்சிகளும் நடந்துகொண்டிருந்தன. “காலம் நிறைவேறிற்று தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்பது அவர்களது தூதாக இருந்தது. “காலம்” தானியேல் ஒன்பதாம் அதிகாரத்தின் கிறிஸ்து மேசியாவாக அபிஷேகம்பண்ணப்படும்வரை நீண்டிருந்த அறுபத்து ஒன்பது வாரங்கள் முடிந்தபோது, கிறிஸ்து யோர்தானில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபின், ஆவியானவரால் அபிஷேகம்பண்ணப்பட்டார். “சமீபமாயிருக்கிறது” என்று அவர்கள் அறிவித்த “தேவனுடைய இராஜ்யம்” கிறிஸ்துவின் மரணத்தினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த இராஜ்யம் நம்பும்படி அவர்கள் போதிக்கப்பட்டிருந்ததுபோல பூமிக்குரிய இராஜ்யமல்ல. அல்லது “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்;...சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்”-தானியேல் 7:27. காலத்தில் ஸ்தாபிக்கப்படவிருக்கிற எதிர்கால நித்திய இராஜ்யமும் அல்ல. வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதுபோல, தேவனுடைய இராஜ்யம் என்பது கிருபையின் இராஜ்யம், மகிமையின் இராஜ்யம் ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறது. எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் கிருபையின் இராஜ்யம் பவுலினால் காட்சிக்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதவிக்கக் கூடியவராக, நமக்காகப் பரிந்துபேசும் மனஉருக்கமுள்ளவராகக் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியபின், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபி. 4:15,16) என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறான். கிருபையின் சிங்காசனம் கிருபையின் இராஜ்யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஏனெனில் ஒரு சிங்காசனம் இருக்கிறது என்பது, ஒரு இராஜ்யம் இருக்கிறது என்பதை பொருள்படுத்துகிறது. மனிதர்களின் இருதயங்களில் தெய்வீகக் கிருபை செயல்படுவதை எடுத்துக்காட்ட, கிறிஸ்து அவரது அநேக உவமைகளில் தேவனுடைய இராஜ்யம் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். (14)GCTam 399.2

  அப்படியே மகிமையின் சிங்காசனம் என்பது மகிமையின் இராஜ்யத்தைக் குறிக்கிறது. இந்த இராஜ்யம் இரட்சகரின் கீழ்க்காணும் வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்”-மத்தேயு 25:31,32. இந்த இராஜ்யம் இன்னமும் எதிர்காலத்தில் இருக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழும்வரை, இது ஏற்படுத்தப்படக்கூடாததாக இருக்கிறது. (15)GCTam 400.1

  மனிதன் பாவத்தில் விழுந்த உடனேயே குற்றமுள்ள இனத்திற்காக மீட்பின் திட்டம் வடிவமைக்கப்பட்டபோதே, கிருபையின் இராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. அது தேவனுடைய நோக்கத்திலும், அவருடைய வாக்குத்தத்தத்திலும் இருந்தது. விசுவாசத்தின்மூலமாக மனிதர்கள் அதன் பிரஜைகளாகமுடியும். அப்படியிருந்தும் கிறிஸ்துவின் மரணம் நிகழும்வரை, அது உண்மையாக ஏற்படுத்தப்படவில்லை. இரட்சகர் பூமிக்குரிய அவரது ஊழியத்தில் பிரவேசித்தபின்னருங்கூட, மனிதர்களின் பிடிவாதத்தினாலும், நன்றியறியாமையினாலும் களைப்புற்றிருந்ததால், கல்வாரியின் தியாக பலியிலிருந்து பின்வாங்கியிருந்திருக்கலாம். கெத்செமனேயில் தத்தளிப்பின் பாத்திரம் அவரது கரத்தில் நடுங்கியது. அந்த நேரத்திலுங்கூட அவர் தனது புருவத்திலிருந்த இரத்த வேர்வையைத் துடைத்துவிட்டு, குற்றமுள்ள இனம் அதன் அக்கிரமத்தில் அழியும்படி விட்டுச் சென்றிருக்கலாம். அவர் இதைச் செய்திருந்தால், விழுந்துபோன மனிதர்களுக்கு மீட்பு இருந்திருக்காது. ஆனால் இரட்சகர் அவரது ஜீவனை விடச் சம்மதித்து, “எல்லாம் முடிந்தது” என்று கதறினபோது, மீட்பின் திட்டத்தின் நிறைவேறுதல் உறுதிசெய்யப்பட்டது. ஏதேனிலிருந்த பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட இரட்சிப்பின் வாக்குத்தத்தம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்குமுன் இருந்த தேவனுடைய வாக்குத்தத்தத்தினாலாகிய கிருபையின் இராஜ்யம் அப்போது அமைக்கப்பட்டது. (16)GCTam 400.2

  இவ்வாறாக, கிறிஸ்துவின் மரணம் தங்களுடைய நம்பிக்கையின் இறுதி அழிவு என்று சீடர்கள் நோக்கியிருந்த அந்தச் சம்பவமே- அவ்வாக்குத்தத்தத்தை என்றென்றைக்குமாக நிச்சயப்படுத்தியது. கொடுமை யான மனமடிவை அவர்களுக்குக் கொண்டுவந்திருந்தபோதே, அவர்களுடைய நம்பிக்கை சரியானதானதே என்கிற சான்றின் உச்சக்கட்டமாக அது இருந்தது. துக்கங்கொண்டாடுதலினாலும் மனத்துயரினாலும் அவர்களை நிரப்பிய, யுகங்கள் நெடுகிலும் தேவனுடைய விசுவாசமிக்கவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், நித்திய மகிழ்ச்சிக்கும் நடுநாயகமாக இருந்த அந்த நிகழ்ச்சி, ஆதாமின் ஒவ்வொரு பிள்ளைக்கும் திறக்கப்பட்டிருந்த நம்பிக்கையின் கதவாகவும் இருந்தது. (17)GCTam 401.1

  முடிவற்ற இரக்கத்தின் நோக்கங்கள், சீடர்களின் மன ஏமாற்றத்தின் வழியாகவுங்கூட, நிறைவேறிக்கொண்டிருந்தன. ஒருபோதும் மனிதன் பேசியிராதவிதத்தில் பேசினவருடைய போதனையின் தெய்வீகக் கிருபையினாலும் வல்லமையினாலும் அவர்களுடைய இருதயங்கள் வெற்றி கொள்ளப்பட்டிருந்தபோதிலும், இயேசுவின் மேலிருந்த சுத்தத்தங்கம் போன்ற அவர்களுடைய அன்புடன், உலகப்பிரகாரமான பெருமையும், சுயநலமிக்க ஆசைகளும், கீழ்த்தரமான உலோகமாகக் கலந்திருந்தன. பஸ்கா பண்டிகை யின் அறையிலுங்கூட, அவர்களுடைய ஆண்டவர் கெத்செமனேயின் நிழலுக்குள் ஏற்கனவே நுழைந்து கொண்டிருந்த பக்திவிநயமான நேரத்திலும், “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று”-லூக். 22:24. அவர்களுக்குமுன் அவமானம், கெத்சமனே தோட்டத்தின் வேதனை, நியாயத்தீர்ப்பு மன்றம், கல்வாரிச் சிலுவை, ஆகியவை வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களது பார்வை அரியணை, கிரீடம், மகிமை ஆகியவைகளால் நிறைந்திருந்தன. அவர் களுடைய இருதயத்தின் பெருமையும், உலக மகிமையின்மீதிருந்த தாகமும், அவர்களின் காலத்திலிருந்த தவறான போதனைகளை விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும், அவரது இராஜ்யத்தின் மெய்யான தன்மையோடு அவரது வேதனையையும் மரணத்தையும் முன்சுட்டிக் காட்டியிருந்த இரட்சகரது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் விட்டுவிடவும், அவர்களை நடத்தின. இந்தத் தவறுகள், கூர்மையான- ஆனால் அவசியமான—அவர்களை சீர்திருத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட— சோதனையில் முடிவடைந்தன. சீடர்கள் தங்களது தூதின் பொருளைத் தவறாக எண்ணியிருந்தபோதும், எதிர்பார்ப்பை உணரத்தவறியிருந்தபோதும் தேவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த எச்சரிப்பை அவர்கள் பிரசங்கித்திருந்தனர். கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்திற்குப் பலனளித்து, அவர்களுடைய கீழ்ப்படிதலை சிறப்பிப்பார். உயிர்த்தெழுந்த கர்த்தரைப்பற்றிய மகிமையான சுவிசேஷத்தை சகல ஜனத்திற்கும் முன்னறிவிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படவிருந்தது. இந்த ஊழியத்திற்கென்று அவர்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே, இவ்வளவு கசப்பாகக் காணப்பட்ட அந்த அனுபவம் அனுமதிக்கப்பட்டது. (18)GCTam 401.2

  இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப்பின், எம்மாவுக்குப் போகும் வழியில் அவரது சீடர்களுக்குக் காணப்பட்டு, “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண் பித்தார்”-லூக்கா 24:27. சீடர்களின் இருதயங்கள் தூண்டப்பட்டது. விசுவாசம் கொழுந்துவிட்டெரிந்தது. இயேசு தம்மை அவர்களுக்கு வெளிக்காட்டுமுன்பே, அவர்கள் மறுபடியும் உயிருள்ள நம்பிக்கை உடையவர்களாக பிறப்பிக்கப்பட்டனர். அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை தெளிவாக்கி, “உறுதியான தீர்க்கதரிசன வசனத்தின்” மீது அவர்களது நம்பிக்கையைப் பிணைக்கச்செய்வது, அவரது நோக்கமாக இருந்தது. அவரது நேரடியான சாட்சியால் மட்டுமல்லாமல், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் மற்றும் பிரமாணத்தில் இருந்த அடையாளங்கள், பொருட்பாடங்கள் கொடுத்த கேள்விக்கிடமில்லாத சான்றுகளினாலும் ஆதரவு பெற்றிருந்த சத்தியம் அவர்களுடைய உள்ளங்களில் வேரூன்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். கிறிஸ்துவின் பின்னடியார்களுக்கு, தங்களுக்காக மட்டுமன்றி, கிறிஸ்துவைப்பற்றிய அறிவை உலகத்திற்கு எடுத்துச் செல்லுவதற்காகவும், நுண்ணறிவுமிக்க விசுவாசம் அவசியமாக இருந்தது. இந்த அறிவைப் புகட்டும் முதல்படியாக, இயேசு அவரது சீடர்களை மோசேயினிடத்திற்கும், தீர்க்கதரிசிகளிடத்திற்கும் நடத்தினார். பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களின் மதிப்பிற்கும் முக்கியத்திற்கும் உயிர்த்தெழுந்த இரட்சகர் கொடுத்த சாட்சி அப்படிப்பட்டதாக இருந்தது. (19)GCTam 402.1

  தாங்கள் நேசித்த ஆண்டவரின் முகத்தை அவர்கள் மறுபடியும் பார்த்தபோது, சீடர்களின் உள்ளத்தில் உண்டான மாறுதல் எப்படிப்பட்டதாக இருந்தது! இதற்குமுன் ஒருபோதும் இருந்திராத அதிகமான முழுமையும் பூரணமுமான உணர்வுடன், நியாயப்பிரமாணத்தில் மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருந்த அவரை, அவர்கள் கண்டனர். நிச்சயமின்மை, வேதனை, மனத்துயர் ஆகியவை பூரணமான வாக்குறுதிக்கும் மூடலற்ற விசுவாசத்திற்கும் இடம்கொடுத்தன. அவர் பரமேறிச்சென்றபின், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்தில் அனுதினமும் தரித்திருந்து தேவனைத் துதித்தது எப்படிப்பட்ட ஆச்சரியமாக இருந்திருக்கும்! இரட்சகரின் நிந்தைமிக்க மரணத்தை மட்டுமே அறிந்திருந்த மக்கள், சீடர்களின் முகங்களில் துக்கம், குழப்பம், தோல்வி ஆகிய உணர்வுகளை மட்டுமே காண்பதற்கு நோக்கினார்கள். ஆனால் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கண்டனர். அவர்களுக்குமுன் இருந்த ஊழியத்திற்காக எப்படிப்பட்ட ஒரு ஆயத்தத்தை இந்த சீடர்கள் பெற்றிருந்தனர்! அவர்களால் அனுபவிக்கமுடிந்த மிக ஆழமான சோதனைகளின் வழியாக, மனிதப்பார்வையில் எல்லாம் இழக்கப்பட்டதாகத் தோன்றியபோது, தேவனுடைய வார்த்தை வெற்றிகரமாக நிறைவேறியதைக் கண்டனர். அதற்குமேல் அவர்களுடைய விசுவாசத்தை எதினால் அசைக்க முடியும்? அல்லது அவர்களது அன்பின் அனலை எதினால் குளிரச்செய்ய முடியும்? அவர்களது கடினமான துக்கத்தில் “நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாக” இருந்த “பலத்த ஆறுதலைப்” பெற்றனர். தேவனுடைய ஞானத்திற்கும், வல்லமைக்கும் அவர்கள் சாட்சிகளாக இருந்தனர். “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்”-ரோமர் 8:36-39. “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்”- 1பேதுரு 1:25. “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே” (ரோமர் 8:34) என்று அவர்கள் கூறினர். (20)GCTam 403.1

  “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை”- யோவேல் 2:26. “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங்கீதம் 30:5) என்று கர்த்தர் கூறுகிறார். இரட்சகர் உயிர்த்தெழுந்த நாளில், அவரது சீடர்கள் அவரைச் சந்தித்தபோது, அவரது வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்களுடைய இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அவர்களுக்காகக் காயப்பட்ட அவரது கைகளையும் கால்களையும் பார்த்தபோது, அவர் பரத்திற்கு எழுந்தருளிச் செல்லுமுன், அவர்களைப் பெத்தானிவரை நடத்திச்சென்று, கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்து: “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மாற்கு 16:15 மத்தேயு 28:20) என்று கூறியபோது, பெந்தேகொஸ்தே நாளில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த ஆவியானவர் இறங்கி, வல்லமை பரத்திலிருந்து கொடுக்கப்பட்டு, எழுந்தருளிச்சென்ற கர்த்தரின் உணரக்கூடிய பிரசன்னத்தினால் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சிலிர்த்தபோது—அப்போது, அவர்கள், அவரது பாதையைப்போன்றே அவர்களுடைய பாதையும் தியாகம், இரத்தசாட்சியாகும் நிலைமை ஆகியவைகளின் ஊடாக சென்றபோதிலும், அவருடைய கிருபையைக் குறித்த நற்செய்தி ஊழியத்தை அவரது வருகையின்போது பெற்றுக்கொள்ளும் “நீதியின் கிரீடத்தோடு”கூட, ஆதியில் சீஷர்களானபோது நம்பியிருந்த உலக சிங்காசனத்திற்காக மாற்றியிருப்பார்கள். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் ... நமக்குச் செய்ய வல்லவராகிய” அவர், அவருடைய பாடுகளுக்குப் பங்காளிகளாவதோடு அவருடைய உறவினால் உண்டாகும் மகிழ்ச்சியையும்—“அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்” மகிழ்ச்சியை, சொல்லமுடியாத மகிழ்ச்சியை, “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவத்தோடு” “ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” என்று பவுல் கூறின “மிகவும் அதிகமான நித்திய கனமகிமையையும்” அவர்களுக்குக் கொடுத்தார். (21)GCTam 404.1

  இயேசுவின் முதலாம் வருகையின்போது, இராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்திருந்த சீடர்களுடைய அனுபவத்தின் மறுபக்கம், அவரது இரண்டாம் வருகையின் தூதை அறிவித்தவர்களின் அனுபவத்தில் இருந்தது. “காலம்நிறைவேறிற்று, தேவனுடைய இராஜ்யம் சமீபமாய் இருக்கிறது” என்று சீடர்கள் பிரசங்கித்துக்கொண்டு சென்றது போல, மில்லரும் அவரது சகாக்களும், வேதாகமத்தில் காட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மிக நீண்டதும் கடைசியுமான தீர்க்கதரிசன காலம் முடிவடையவுள்ளது,நியாயத்தீர்ப்பு சமீபமாக இருக்கிறது, நித்திய இராஜ்யம் உதயமாக உள்ளது என்று அறிவித்தனர். காலம் சம்பந்தப்பட்ட சீடர்களின் பிரசங்கம், தானியேல் ஒன்பதாம் அதிகாரத்திலுள்ள எழுபது வாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மில்லரும் அவரது சகாக்களும் கொடுத்திருந்த தூது, தானியேல் 8:14-ல் உள்ள 2300 நாட்களின் முடிவை அறிவித்தது. எழுபது வாரங்கள் இதன் ஒருபகுதியாகும். இந்தப் பிரசங்கம் ஒவ்வொன்றும் அதே பெரிய தீர்க்கதரிசன காலத்தின் பல்வேறு பகுதிகளுடைய நிறைவேறுதலின் அடிப்படையின்மீது இருந்தது. (22)GCTam 404.2

  முதலில் இருந்த சீடர்களைப்போலவே, வில்லியம் மில்லரும் அவரது சகாக்களும் தாங்கள் கொடுத்த தூதின் முழுமையை அறியாதிருந்தனர். வெகுகாலமாக சபையில் நிலவியிருந்த தவறுகள், இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு முக்கியமான பகுதியின் சரியான விளக்கத்தை அடையமுடியாதபடி அவர்களைத் தடுத்தது. எனவே உலகத்திற்குத் தரும்படி தேவன் தங்களிடம் ஒப்படைத்திருந்த தூதை அவர்கள் கொடுத்திருந்தபோதிலும், அதன் பொருளைத் தவறாகப் புரிந்திருந்ததினால் ஏமாற்றம் அடைந்தனர்.(23)GCTam 405.1

  “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” (தானி. 8:14) என்கிற வசனத்திற்கு விளக்கம் கொடுத்தபோது, “பூமிதான் பரிசுத்தஸ்தலம் என்று பொதுவான விளக்கத்தை, ஏற்கனவே குறிப்பிட்டபடி மில்லர் பின்பற்றினார். எனவே கர்த்தரின் இரண்டாம் வருகையின்போது, உலகம் அக்கினியால் தூய்மையாக்கப்படுவதுதான் பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படுதல் என அவர் நம்பினார். அதோடு 2300 நாட்களின் முடிவு திட்டவட்டமாக முன்னரைக்கப்பட்டிருந்ததால், அதன்படியே அது இரண்டாம் வருகையின் காலத்தை வெளிப்படுத்துகிறது என அவர் முடிவுசெய்தார்.” பரிசுத்தஸ்தலம் எது என்பதைக் குறித்த ஒரு பெரும்பான்மை நோக்கு இருந்தது. மில்லர் அந்த நோக்கினை ஒப்புக்கொண்டது அவரது தவறாக இருந்தது. (24)GCTam 405.2

  கிறிஸ்துவின் பலியையும், ஆசாரியத்துவத்தையும் நிழலாகக் கொண்டிருந்த வழக்கமான அமைப்பில், பிரதான ஆசாரியனால் வருடம் முழுவதும் செய்யப்பட்ட ஊழியத்தின் கடைசிப்பகுதியாக பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரிப்பது இருந்தது. அது பாவ நிவாரணத்தின்—இஸ்ரவேலில் பாவத்தை அகற்றும் முடிவான பணியாக இருந்தது. நமது பிரதான ஆசாரியர் பரலோகத்தில் செய்யும் ஊழியத்தில், பரலோக ஆவணங்களிலிருந்து தமது ஜனங்களின் பாவங்களை துடைத்து நீக்கும் முன்னடையாளமாக அது இருந்தது. இந்த ஊழியம் நுட்ப நியாய விசாரணை, நியாயத்தீர்ப்பு ஆகியவைகளை உள்ளடக்கியதாகவும், வானமேகங்களின்மீது மிகுந்த வல்லமையுடனும் மிகந்த மகிமையுடனும் கிறிஸ்து வருவதற்குமுன் நடக்க இருந்தது. “அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி. 22:12) என்று இயேசு சொன்னார். இரண்டாம் வருகைக்கு முன்னுள்ள இந்த நியாயத்தீர்ப்பின் வேலைதான் “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” (வெளி. 14:7) என்கிற முதலாம் தூதனின் தூதினால் அறிவிக்கப்பட்டது. (25)GCTam 405.3

  இந்த எச்சரிப்பை அறிவித்தவர்கள் சரியான தூதைச் சரியான வேளையில் கொடுத்தனர். ஆரம்பகால சீடர்கள், தானியேல் ஒன்பதின் அடிப்படையில் “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய இராஜ்யம் சமீபமாய் இருக்கிறது” என்ற செய்தியைக் கொடுத்தபோதும், அதே வாக்கியத்தில் முன்கூறப்பட்டிருந்த மேசியாவின் சங்காரத்தைப்பற்றி உணர்ந்துகொள்ளவில்லை. அதைப்போலவே, மில்லரும் அவரது சகாக்களும், தானி. 8:14 மற்றும் வெளி. 14:7 ஆகிய வசனங்களை அடிப்படையாகக்கொண்ட தூதைக்கொடுத்தும், வெளி. 14-ல் பார்வைக்குக் கொண்டுவரப்பட்ட, கர்த்தரின் வருகைக்குமுன் கொடுக்கப்படவேண்டிய மற்ற செய்திகளைக் காணத் தவறினர். எழுபது வாரங்களின் முடிவில் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்று சீடர்கள் தவறாகக் கருதினதைப்போலவே, 2300 நாட்களின் முடிவில் நிகழவேண்டிய சம்பவத்தை, அட்வென்டிஸ்டுகளும் தவறாக எண்ணி இருந்தனர். இந்த இரு சம்பவங்களிலும், சத்தியத்திற்கு கண்களை குருடாக்கும் பிரபலமான தவறுகள் அங்கீகரிக்கப்பட்டும் பற்றிக்கொள்ளப்பட்டும் இருந்தன. கொடுக்கவேண்டும் என்று தேவன் விரும்பின தூதைக் கொடுத்ததின்மூலம் அந்த இரு சாராரும் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதேசமயம், தங்கள் தூதுகளைத் தவறாகப் புரிந்திருந்ததால் அந்த இருசாராரும் ஏமாற்றம் அடைந்தனர். (26)GCTam 406.1

  அப்படியிருந்தும், நியாயத்தீர்ப்பைப்பற்றிய எச்சரிப்பை, அது இருந்த விதமாகவே கொடுக்க அனுமதித்ததன் மூலம் தேவன் தமது இரக்கமிக்க நோக்கத்தை நிறைவேற்றினார். பெரும்நாள் சமீபித்திருந்தது. தங்களது இருதயங்களில்இருப்பதைமக்கள்அறியும்படி, ஒரு குறிப்பிட்டகாலசோதனைக்கு தேவ திட்டத்தால் அவர்கள் உட்படுத்தப்பட்டனர். சபையைச் சோதிக்கவும், தூய்மைப்படுத்தவும் அந்தத்தூது வடிவமைக்கப்பட்டிருந்தது, அவர்களது பற்று உலகத்தின்மீதா அல்லது பரலோகத்தின்மீதும் கிறிஸ்துவின்மீதும் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் காணும்படி நடத்தப்படவிருந்தனர். அவர்கள் தங்களது இரட்சகரை நேசிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் தங்களது அன்பை மெய்ப்பிக்கவேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய உலக நம்பிக்கைகளையும் ஆசைகளையும் மறுத்து, தங்களது கர்த்தரின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆயத்தமாக இருந்தனரா? அவர்களது மெய்யான ஆவிக்குரிய நிலையை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அந்தத் தூது வடிவமைக்கப்பட்டிருந்தது. மனந்திரும்புதலுடனும் தாழ்மையுடனும் கர்த்தரைத் தேடும்படி அவர்களை எழுப்ப, இரக்கத்தினால் அது அனுப்பப்பட்டது. (27)GCTam 406.2

  அந்த ஏமாற்றம், தாங்கள் கொடுத்த செய்தியைத் தவறாக புரிந்துகொண்டதினால் விளைந்திருந்தும், அது அவர்களுக்கு நன்மையாக மாற்றப்பட இருந்தது. அந்த எச்சரிப்பைப் பெற்றுக்கொள்ளுகிறோம் என்று கூறிக்கொள்ளுகிறவர்களின் இதயங்களை அது சோதிக்கும். அவர்களது ஏமாற்றத்தின்முன் அவசரகோலமாக தங்களுடைய அனுபவத்தை விட்டுவிட்டு, தேவனுடைய வார்த்தையின்மீதுள்ள நம்பிக்கையை எறிந்து விடுவார்களா? அல்லது ஜெபத்தினாலும் தாழ்மையினாலும் தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தை எங்கு புரிந்துகொள்ளத் தவறினார்கள் என்பதை அறிந்துகொள்ள வகைதேடுவார்களா? பயத்தினாலும் உணர்ச்சியினாலும், உணர்ச்சியின் கொந்தளிப்பினாலும் அசைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் முழு இருதயமற்றும் விசுவாசமற்றும் இருந்தனர்? திரள்கூட்டமானவர்கள், கர்த்தர் தோன்றுவதை நேசிப்பதாகக் கூறினர். உலகத்தின் பரிகாசங்களையும் நிந்தைகளையும், தாமதம், ஏமாற்றம் என்னும் சோதனைகளையும் சகிக்க அழைக்கப்படும்போது, அவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பார்களா? அவர்களுடனுள்ள தேவனின் ஈடுபாடுகளைப்பற்றி அவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளாததினால், அவரது வார்த்தையிலுள்ள தெளிவான சாட்சியினால் தாங்கப்படும் சத்தியங்களை அவர்கள் எறிந்துவிடுவார்களா? (28)GCTam 407.1

  தேவஆவியும் வேதவார்த்தையும் போதித்ததாக தாங்கள் நம்பினவைகளுக்கு, உண்மையான விசுவாசத்தோடு கீழ்ப்படிகிறவர்களின் பலத்தை இச்சோதனை வெளிப்படுத்தும். வேதத்தையே அதை விளக்கவுரையாக எடுத்துக்கொள்ளாமல், மனிதர்களின் தத்துவங்களையும், விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளுவதில் உள்ள ஆபத்தை, அனுபவம் மட்டுமே கற்றுத்தரும் விதத்தில் இச்சோதனை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். விசுவாசத்தின் பிள்ளைகளுக்கு, அவர்களது தவறுகளினால் உண்டாகும் குழப்பமும், வருத்தமும், தேவையான திருத்தத்தை உண்டுபண்ணும். தீர்கக்தரிசன வசனங்களை ஆழமாக ஆராயும்படி அவர்கள் நடத்தப்படுவார்கள். தங்களது விசுவாசத்தின் அஸ்திவாரத்தை மிகுந்த கவனத்துடன் சோதித்துப்பார்க்கவும், கிறிஸ்துவ உலகத்தினால் எவ்வளவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், சத்தியமாகிய வேதவாக்கியத்தின்மீது கட்டப்படாத அனைத்தையும் நிராகரிக்கவும் அவர்கள் போதிக்கப்பட்டிருப்பார்கள். (29)GCTam 407.2

  முதலில் இருந்த சீடர்களைப்போலவே இவ்விசுவாசிகளுக்கும், சோதனைவேளையில் தங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு இருளாகக் காணப்பட்டது பின்னர் தெளிவாக்கப்படும். கர்த்தருடைய முடிவை அவர்கள் பார்க்கும்போது, தங்களின் தவறுகளினால் சோதனை உண்டானபோதிலும் அவர்கள்மீதான அவரது அன்பின் நோக்கங்கள் சீராக நிறைவேறிக்கொண்டிருப்பதை அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள். “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர் களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்” என்பதையும், “கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவர்” என்பதையும் அறிந்துகொள்ளுவார்கள். (30)GCTam 408.1