Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    40—தேவ மக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 635—652)

    தேவனுடைய கட்டளைகளை கனப்படுத்தினவர்களிடமிருந்து மனித சட்டங்களின் பாதுகாப்பு விலக்கப்படும்பொழுது, உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் அவர்களை அழித்துப்போடுவதற்கென்ற இயக்கங்கள் தோன்றும். கட்டளையில் குறிக்கப்பட்ட நேரம் நெருங்கிவரும்போது, வெறுக்கப்பட்ட கூட்டத்தினரை அழித்துப்போட மக்கள் சதித்திட்டங்களைத் தீட்டுவார்கள். எப்படி என்று ஆலோசிப்பார்கள். இணங்காததும் கடிந்து கொள்ளுகிறதுமான சத்தத்தை முழுமையாக மௌனப்படுத்திடும் தீர்க்கமான ஒரு அடியை குறிக்கப்பட்ட ஒரே இரவில் அடிக்க தீர்மானிக்கப்படும். (1)GCTam 755.1

    உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பிசாசுகளால் தூண்டப் பட்ட ஆயுதமணிந்த மனிதர்கள் அழித்துப்போடுவதற்கென்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் சிலர் காடுகளிலும் மலைகளிலும் மறைவான இடங்களிலுமிருந்து தெய்வீகப் பாதுகாப்பிற்காக இன்னமும் மன்றாடிக்கொண்டிருப்பார்கள். இப்போது, முடிவின் உச்சநிலையான இந்த வேளையில் தான் தெரிந்துகொண்டவர்களின் விடுதலைக்காக இஸ்ரவேலின் தேவன் குறுக்கிடுவார். “பண்டிகை ஆசரிக்கப் படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்” (ஏசாயா. 30:29,30) என்று கர்த்தர் கூறுகிறார். (2)GCTam 755.2

    வெற்றிக்கூச்சலோடும் ஏளனப்பேச்சோடும் சாபங்களோடும் தீயவர் களின் கூட்டம் தங்களுடைய இறையின்மேல் பாயும்நேரம், இதோ ஒரு கனத்த இருள், நடு இரவையும் விட ஆழ்ந்த இருள் பூமியின்மேல் வந்து கவியும். பின்னர் தேவனுடைய சிங்காசனத்தின் மகிமையோடு பிரகாசிக்கிற ஒரு வானவில், ஆகாயம் முழுவதையும் வளைத்து நின்று, ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கூட்டத்தையும் சூழ்ந்துகொள்ளும். வெறிபிடித்த கூட்டம் சடுதியாக நிறுத்தப்படுகிறது. அவர்களுடைய ஏளனக்கூச்சல்கள் மறைந்துபோகிறது. அவர்களுடைய கொலைவெறியின் குறிக்கோள்கள் மறந்துபோயின. பயங்கரமான எச்சரிப்புகளோடு தேவனுடைய உடன்படிக்கை யின் அடையாளத்தைக் கூர்ந்துபார்த்து, மிஞ்சின வல்லமையோடிருக்கிற அதன் பிரகாசத்திலிருந்து மறைக்கப்படும்படி ஏங்குவார்கள். (3)GCTam 756.1

    தேவபிள்ளைகளால் “மேலே பார்” என்கிற தெளிவான இனிமையான ஒரு குரல் கேட்கப்படும். தங்கள் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி அங்கே உடன்படிக்கையின் வானவில்லைக் காண்பார்கள். ஆகாயத்தை மூடியிருந்த கருத்துக் குமுறிக்கொண்டிருந்த மேகங்கள் விலகுகின்றன. ஸ்தேவானைப்போல வானத்தை நிலையாகப் பார்த்து, அங்கே ஆண்டவருடைய மகிமையையும் மனுஷகுமாரன் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் காண்கிறார்கள். அவருடைய தெய்வீக உடம்பில் தாழ்மையின் சின்னங்களை கண்டு, அவருடைய உதடுகளிலிருந்து “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோவான் 17:24) என்கிற தமது கோரிக்கையை அவர் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் வைப்பதைக் கேட்கிறார்கள். மறுபடியும் இனிமையான வெற்றித்தொனியில் “பரிசுத்தமும் தீங்கற்ற தீட்டுப்படாதவர்களாகவும் அவர்கள் வருகிறார்கள்! அவர்கள் வருகிறார்கள்! அவர்கள் என்னுடைய பொறுமையின் வார்த்தையைக் காத்துக்கொண்டார்கள். அவர்கள் தூதர்களுக்கு மத்தியிலே நடப்பார்கள்” என்று சொல்லும் ஒரு குரல் கேட்கிறது. தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டவர்களுடைய வெளுத்துப்போன நடுங்கும் உதடுகள் வெற்றித்தொனியை எழுப்புகிறது. (4)GCTam 756.2

    தனது ஜனங்களை விடுவிப்பதற்காக தேவன் தமது வல்லமைகளை நடு இரவில் வெளிப்படுத்துகிறார். சூரியன் தனது முழுவல்லமையோடும் பிரகாசித்துக் காணப்படுகிறது. அடையாளங்களும் அற்புதங்களும் துரிதகதியில் அடுத்தடுத்து பின்தொடருகிறது. நீதிமான்கள் தாங்கள் விடுவிக்கப்படுவதன் அடையாளங்களை பக்தி கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, துன்மார்க்கர் இக்காட்சிகளைத் திகிலோடும் வியப்போடும் காண்பார்கள். இயற்கையின் ஒவ்வொன்றும் வழக்கத்திற் கெதிராக திரும்பினதுபோல காணப்படுகிறது. ஓடிக்கொண்டிருந்த அருவிகள் நின்றுபோகின்றன. கனமான கார்மேகங்கள் மேலெழும்பி ஒன்றோடொன்று மோதுகின்றன. மூர்க்கமான வானத்தின் மத்தியிலே, விவரிக்கமுடியாத மகிமைபொருந்திய ஒரு தெளிவான இடத்திலிருந்து, பெருவெள்ள இரைச்சலைப் போன்று “ஆயிற்று” என்று சொல்லிய தேவனுடைய சத்தம் பிறக்கிறது.(5)GCTam 756.3

    அந்த குரல் வானத்தையும் பூமியையும் அசைக்கிறது. “பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை” -வெளி. 16:18. ஆகாயம் திறப்பதுபோலவும் மூடுவதுபோலவும் தோன்றுகிறது. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து மகிமை அதன்வழியே பாய்ந்து வருவதுபோலத் தோன்றுகிறது. மலைகள் காற்றில் நாணல் அசைவது போல அசைகின்றன. கரடுமுரடான பாறைகள் எல்லாத் திசைகளிலும் தூக்கியெறியப்படுகின்றன. வரவிருக்கும் புயலின் கர்ஜனையைப் போன்ற குமுறல். கடல் சீறி அடிக்கிறது. அழிவுவேலையில் ஈடுபட்டிருக்கும் பிசாசுகளின் சத்தத்தைப்போல் சூறாவளிக் காற்று கிறீச்சிடுகிறது. கடலின் அலைகளைப்போல பூமி இடம்பெயர்கிறது. அதன் பரப்பு பிளக்கிறது. அதன் அஸ்திபாரங்கள் முதலாய் காணப்படுவதுபோல் தெரிகிறது. தொடர் மலைகள் அமிழ்கின்றன. குடியிருந்த தீவுகள் மறைந்துபோகின்றன. சோதோமைப்போலாகியிருந்த துறைமுகப் பட்டணங்கள் பொங்கியெழும் கடலலைகளால் விழுங்கப்படுகின்றன. “மகாபாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது”-வெளி. 16:19,21. தாலந்து நிறையாக பெரிய கல்மழையும் தன்னுடைய அழிவுவேலையை நடப்பித்துக்கொண்டிருக்கிறது. பூமியின் பெருமையான பட்டணங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. உலகின் பெரிய மனிதர்கள் தங்களை மகிமைப்படுத்தும்படியாக தமது செல்வங்களையெல்லாம் செலவழித்துக்கட்டிய செருக்கான அரண்மனைகள் அவர்களது கண்களுக்கு முன்பாக நொறுங்கித் தூசியைப்போல விழுகின்றன. சிறைச்சாலைகளின் சுவர்கள் தகர்ந்து விழுகின்றன. அங்கே தங்களது விசுவாசத்திற்காகச் சிறைவைக்கப்பட்டிருந்த தேவனுடைய ஜனங்கள் விடுவிக்கப்படுகிறார்கள். (6)GCTam 757.1

    கல்லறைகள் திறக்கப்படுகின்றன. “பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்” விழித்து எழுந்திருக்கிறார்கள் தானி. 12:2. மூன்றாம் தூதனுடைய தூதைக் குறித்த விசுவாசத்தில் மரித்துப்போன அனைவரும், தேவன் தமது பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தவர்களோடு செய்யும் சமாதான உடன்படிக்கையைக் கேட்கும்படி மகிமையடைந்தவர்களாக கல்லறையைவிட்டு வெளியே வருகிறார்கள். “அவரைக் குத்தினவர்களும்”(வெளி. 1:7) கிறிஸ்துவின் மரண வேதனையை பரியாசம்பண்ணி ஏளனம்பண்ணினவர்களும், சத்தியத்தையும் அவரது பிள்ளைகளையும் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவருடைய மகிமையில் அவரைக் காணவும், உண்மையாக கீழ்ப்படிந்தவர்கள்மேல் வைக்கப்படும் கனத்தைக் காணவும் எழுப்பப்படுகிறார்கள். (7)GCTam 757.2

    அடர்ந்த மேகங்கள் வானில் இன்னும் இருக்கும். ஆனாலும் சூரியன் அவ்வப்போது வெளிவந்து பழிவாங்கும் யேகோவாவின் கண்களைப் போல தோற்றமளிக்கும். கடும் மின்னல்கள் வானத்திலிருந்து வந்து உலகத்தைத் தீச்சுவாலையில் வளைத்துப்பிடிக்கும். பயங்கரமான இடி முழக்கத்திற்குமேல் மர்மமானதும் கலங்கப்பண்ணுகிறதுமான குரல்கள் எழும்பி துன்மார்க்கரின் கதியை அறிவிக்கும். பேசப்பட்ட அந்த வார்த்தைகள் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படவில்லை. என்றாலும் கள்ளப்போதகர்களால் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படும். சற்று நேரத்திற்கு முன்பு அலட்சியத் தோடிருந்த, பெருமையோடு இணக்கமற்றிருந்த, தேவனுடைய கற்பனை களைக் கைக்கொள்ளுகிறவர்களுக்குச் செய்த கொடுமையில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தவர்கள் இப்பொழுது திகிலால் மூழ்கடிக்கப்பட்டு, பயத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் புலம்பல்கள் இயற்கையின் சத்தங்களுக்கும் மேலாகக் கேட்கிறது. மனிதர்கள் கிருபைக்காக விண்ணப்பம்செய்து பரிதாபகரமான பயத்தினால் தாழவிழுந்துகொண்டிருக்க, பிசாசுகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை அறிக்கையிட்டு, அவருடைய வல்லமைக்கு முன்பாக நடுங்கிக்கொண்டிருக்கின்றன. (8)GCTam 758.1

    தேவனுடைய நாளை பரிசுத்த தரிசனத்தில் கண்ட அந்தக்காலத் தீர்க்கதரிசிகள்: “அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்” (ஏசா. 2:10-12) என்றும், “கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும் வரும்” “பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும்விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன்விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்” (ஏசா. 2:10-12 20—21) என்றும் சொல்லியிருக்கின்றனர். (9)GCTam 758.2

    இருட்டோடு ஒப்பிடும்போது, நான்குமடங்கு பிரகாசமான ஒரு நட்சத்திரம் மேகங்களிடையே உண்டான ஒரு இடைவெளி வழியாக பிரகாசிக்கிறது. அது உண்மையானவர்களுக்கு நம்பிக்கையையும் மிகிழ்ச்சியையும் கொடுக்க, கடவுளுடைய பிரமாணங்களை மீறினாவர்களுக்கோ கடுமையையும் கோபாக்கினையையும் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்கள் தேவனுடைய கூடாரத்தில் ஒளிக்கப்பட்டவர்களைப்போல பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் சோதிக்கப்பட்டு உலகத்தின் முன்பாகவும் சத்தியத்தை நிராகரித்தவர்கள் முன்பாகவும் தங்களுக்காக மரித்தவருக்கு உறுதியாயிருந்ததை வெளிக்காட்டியிருக்கிறார்கள். மரணத்தின்முன்பும் தங்கள் உண்மையைப் பற்றிக்கொண்டிருந்தவர்கள் மேல் அற்புதமான மாற்றம் வந்திருக்கிறது. பிசாசுகளைப்போல மாறியிருந்த மனிதர்களின் பயங்கரமாக இருண்ட கொடுமையிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சற்று முன்பு வெளிரியும் ஏக்கத்தோடும் தளர்ந்தும் போயிருந்த அவர்களுடைய முகங்கள் இப்பொழுது அதிசயத்தாலும் விசுவாசத்தாலும் அன்பாலும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய குரல்கள் “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங். 46:1-3) என்ற ஜெயகீதத்தினால் உயர்கிறது. (10)GCTam 759.1

    இப்படிப்பட்ட பரிசுத்த நம்பிக்கையை வெளிப்டுத்தும் வார்த்தைகள் மேலே தேவனிடத்திற்குச் செல்லும்போது மேகங்கள் விலகி நட்சத்திரங்கள் நிறைந்த வானம், இருபக்கமும் இருக்கிற கருத்த மூர்க்கமான ஆகாயத்திற்கு நேரெதினான மகிமையோடு காணப்படுகிறது. திறந்திருக்கிற கதவுகளின் வழியாக வானலோக நகரத்தின் மகிமை வருகிறது. அப்பொழுது வானத்திலே ஒன்றாக மடிக்கப்பட்ட இரண்டு கற்பலகைகளைப் பிடித்துகொண்டிருக்கிற ஒரு கை தோன்றுகிறது. “வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி” (சங். 50:6) என்று தீர்க்கதரிசி கூறுகிறான். இடிமுழக்கத்திற்கும் நெருப்பிற்கும் மத்தியில் வாழ்க்கையின் வழிகாட்டியாக சீனாய் மலையிலிருந்து அறிவிக்கப்பட்ட தேவனுடைய நீதியாகிய அந்த பரிசுத்த பிரமாணங்கள், நியாயத்தீர்ப்பின் சட்டமாக மனிதனுக்கு இப்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது. அந்தக் கை அந்தப் பலகைகளைத் திறக்கிறது. அங்கே பத்துப்பிரமாணங்கள் நெருப்பால் எழுதப்பட்ட எழுத்துக்களாகத் தெரிகின்றன. அந்த வார்த்தைகள் மிகத் தெளிவாக இருக்கின்றன மனம்வருந்தி மாறிக்கொள்ளுவதற்கு தருணம் இருந்தபோதே தங்களுடைய குணங்களை அதோடு ஒப்பிட்டு தங்களின் குறைகளை அறிந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் தயவைப் பெறுவதற்காக அந்த பிரமாணங்களை தள்ளிவைத்து மீறும்படியாக மற்றவர்களுக்கும் போதித்தார்கள். ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாக்கும்படி தேவனுடைய ஜனங்களையும் கட்டாயப்படுத்த முயற்சித்தார்கள். தாங்கள் புறக்கணித்த அந்த பிரமாணத்தினாலேயே இப்போது கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். போக்குச்சொல்லக்கூடாத வர்களாக இருப்பதை பயங்கரமான சூழ்நிலையில் தெளிவாகக் காண்கின்றனர். யாருக்கு ஊழியம்செய்து யாரைத் தொழுதுகொள்ளுவோம் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். “அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்”மல். 3:18. (11)GCTam 759.2

    போதகர்களிலிருந்து கடைசி நபர் வரை தேவனுடைய பிரமாணங் களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள், சத்தியத்தையும் கடமையையும் குறித்த புதிய அறிவைப் பெறுகின்றனர். நான்காம் பிரமாணத்தின் ஓய்வுநாளே ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்கிறதை அவர்கள் மிகவும் காலங்கடந்தபின் காண்கிறார்கள். போலியான ஓய்வுநாளின் உண்மையான தன்மையையும் மணலின்மேல் அஸ்திவாரம் போட்டதையும் அவர்கள் மிகவும் காலங்கடந்து காண்கிறார்கள். தேவனுக்கு எதிராக யுத்தம் செய்துகொண்டிருந்ததை அறிகிறார்கள். பரலோகத்தின் வாசலுக்கு நடத்திச்செல்லுவதாகக் கூறிக்கொண்ட மதபோதகர்கள், ஆத்துமாக்களை அழிவுக்கு நடத்தியிருக்கிறார்கள். பரிசுத்த ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் பொறுப்பு எவ்வளவு பெரியது என்பதையும், அதற்கு உண்மையாயிராதபோது அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதையும் கடைசியாகக் கணக்குக்கொடுக்கும்வரை அறிந்துகொள்ளமுடியாது. ஒரு தனிப்பட்ட ஆத்துமாவின் இழப்பு எவ்வளவு என்பதை நித்தியத்தில் தான் நாம் சரியாக நிதானிக்கமுடியும். பொல்லாத ஊழியக்காரனே என்னைவிட்டு அகன்று போ என்று யாரைப்பார்த்து தேவன் சொல்லுவாரோ அவனுடைய கதி மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.(12)GCTam 760.1

    இயேசுவுடைய வருகையின் நாளையும் நேரத்தையும், தமது ஜனங்களுக்கு நித்திய உடன்படிக்கையையும் அறிவிக்கும் தேவனுடைய குரல் பரலோகத்திலிருந்து கேட்கிறது. இடிமுழக்க ஓசையைப்போல அவருடைய வார்த்தைகள் உலகத்தில் உருண்டோடும். தேவனுடைய இஸ்ரவேலர்கள் பார்வையை மேலே பதித்தவர்களாக கவனிக்கிறார்கள். அவர்களது முகங்கள் அவருடைய மகிமையால் ஒளிர்ந்து, சீனாய் மலையிலிருந்து மோசே இறங்கி வந்தபோது அவனுடைய முகம் பிரகாசித்ததைப்போல பிரகாசிக்கும். துன்மார்க்கரால் அவர்களைப் பார்க்கக்கூடாது. ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்து அதன்மூலம் அவரை கனப்படுத்தினவர்களை ஆசீர்வதிக்கும் சொல்லப்படும்போது, பலத்த வெற்றி முழக்கம் எழும்புகிறது. (13)GCTam 761.1

    விரைவில் கீழ்த்திசையில் கையளவான சிறிய கறுத்த மேகம் தோன்றுகிறது. அது வெகுதூரத்தில் இருண்டதாக காட்சியளிக்கிற இரட்சகரைச் சூழ்ந்திருக்கும் மேகம்தான். இதுதான் மனுஷகுமாரனுடைய அடையாளம் என்பது தேவனுடைய ஜனங்களுக்குத் தெரியும். பூமிக்கு அருகில் வரவர பிரகாசமாகவும் மிகுந்த மகிமையாகவும் ஆகிக்கொண்டிருக்கிற அது, மிகப்பெரிய வெண்மேகமாகி, அதன் அடிப்பாகம் பட்சிக்கிற அக்கினிக்கு ஒப்பான மகிமையடைந்து, அதற்கு மேல் உடன்படிக்கையின் வில் காணப்படும்வரை அவர்கள் பவித்திரமான அமைதியோடு அதைக் கூர்ந்து கவனிப்பார்கள். இயேசு பராக்கிரமமுள்ள வெற்றிவீரராக பவனி வருகிறார். அவமானமும் ஆபத்தும் நிறைந்த கசப்பான பாத்திரத்திலிருந்து குடிக்கிற துக்கமுள்ளவராக அல்ல, வானத்திலும் பூமியிலும் வெற்றிபெற்றவராக ஜீவனுள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க அவர் வருகிறார். உண்மையும் சத்தியமுமுள்ளவராக, நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறவராக அவர் வருகிறார். பரலோகத்திலுள்ள சேனைகள் அவருக்குப் பின்சென்றார்கள் (வெளி. 19:11,14). பரலோக கீதங்களின் இனிமையோடு எண்ணக்கூடாத திரளான பரிசுத்த தூதர்கள் அவருடனேகூட வருகிறார்கள். ஆயிரம்ஆயிரமாகவும் பதினாயிரம் பதினாயிரமாகவும் உள்ள ஒளிமிகுந்த தேவதூதர்களால் வானமே நிறைந்துவிட்டதுபோல் காணப்படுகிறது. எந்த மனித எழுதுகோலும் அக்காட்சியை விவரிக்கமுடியாது. அதன் மாட்சியை அழியக்கூடிய மனிதனின் மனதினால் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியாது. “அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது”-ஆபகூக் 3:3,4. அந்த ஜீவனுள்ள மேகம் இன்னும் அருகில் வரும்போது ஜீவாதிபதியானவரை பூமியிலுள்ள ஒவ்வொரு கண்ணும் காணுகிறது. புனிதமான அவரது தலையைக் இப்பொழுது எந்த முள்முடியும் கெடுக்கவில்லை. மாறாக, ஒரு மகிமையான மகுடம் அவரது புனிதமான நெற்றிக்கு மேலாக இருக்கிறது. அவருடைய முகத்தின் பிரகாசம் கண்ணைக் கூசச்செய்யும் நண்பகல் சூரியனையும் மிஞ்சுவதாக இருக்கிறது. “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது”-வெளி. 19:16. (14)GCTam 761.2

    அவருடைய பிரசன்னத்திற்கு முன்பாக முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கின்றன (எரே. 30:6). தேவனுடைய இரக்கத்தை தள்ளினவர்கள்மேல் நித்திய அழிவைக் குறித்த பயம் விழுகிறது. “மனம் கரைந்து போகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது”- நாகூம் 2:10. நீதிமான்களும் நடுக்கத்தோடு “யார் நிலைநிற்கக்கூடும்” என்று கதருகிறார்கள். தூதர்களின் பாடல் நின்றுபோகிறது. பயங்கரமான அமைதி அங்கே உண்டாகிறது. பின்னர் “என் கிருபை உனக்குப் போதும்” என்கிற இயேசுவின் குரல் கேட்கிறது. நீதிமான்களின் முகங்கள் ஒளிருகிறது. ஒவ்வொரு இருதயத்தையும் மகிழ்ச்சி நிரப்புகிறது. பின்னர் தூதர்கள் அடுத்த ஸ்வரத்தில் பாடத்துவங்கி, பூமியை நெருங்க நெருங்க மீண்டும் பாடுகின்றனர். (15)GCTam 762.1

    ராஜாதி ராஜா மேகத்தின்மேல் அமர்ந்தவராக நெருப்பு ஜுவாலையால் சூழப்பட்டவராக இறங்கிவருகிறார். வானங்கள் புத்தக சுருளைப்போல சுருண்டுபோகின்றன. பூமி அவருக்கு முன்பாக நடுங்குகிறது. “நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்”-சங். 50:3,4. (16)GCTam 762.2

    “பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக் கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்”-வெளி. 6:15-17. (17)GCTam 762.3

    இகழ்ச்சியான கேலிகள் நின்றுபோயின. பொய் உதடுகள் அமைதியாயின. ஆயுதங்களின் ஒலிகளும் யுத்த சந்தடிகளும் “அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும்” அடங்கின. விண்ணப்பங்களின் குரலையும் அழுகையின் புலம்பலையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. சற்றுமுன்புவரை பரியாசம்செய்த உதடுகளிலிருந்து அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்” என்ற புலம்பலே புறப்படுகிறது. தாங்கள் புறக்கணித்து ஒதுக்கினவரின் முகத்தைச் சந்திப்பதற்குப் பதிலாக மலைகளின் கீழாக புதைக்கப்படும்படி துன்மார்க்கர் விண்ணப்பிக்கிறார்கள்.(18)GCTam 763.1

    மரித்தோரின் காதுகளை துளைக்கும் குரலை அவர்கள் அறிவார்கள். எத்தனை முறை அதன் தெளிவான இரக்கமான குரல் மனந்திரும்பும்படியாக அவர்களை அழைத்திருக்கிறது. ஒரு நண்பன் ஒரு சகோதரன் ஒரு இரட்சகனுடைய உருக்கமான வேண்டுதல்களில் எத்தனை முறை அந்தக்குரலைக் கேட்டிருக்கிறார்கள்! அவருடைய கிருபையை நிராகரித்தவர்களுக்கு “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்” (எசே. 33:11) என்று அதிக காலம் அவர்களிடம் மன்றாடின அந்தக் குரலைப்போல வேறு எதுவும் கண்டிப்பு நிறைந்ததாக கண்டனத்தால் பாரமடைந்ததாக இருக்காது. ஓ! அது அவர்களுக்கு அந்நியனின் சத்தமாக இருந்தது! “நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்” (நீதி. 1:24,25) என்று இயேசு சொல்லுகிறார். நிராகரித்த எச்சரிப்புகள், மறுத்துவிட்ட அழைப்புகள், அற்பமாய் எண்ணப்பட்ட வாய்ப்புகள்—அவர்களால் அழிக்கமுடியாத இவைகளை அக்குரல் அவர்கள் நினைவிற்குக் கொண்டுவரும். (19)GCTam 763.2

    கிறிஸ்துவின் தாழ்மையில் அவரை கேலிபேசியவர்கள் அங்கே இருக்கிறார்கள். பிரதான ஆசாரியனால் நெருக்கப்பட்டபோது “மனுஷ குமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 26:64) என்று வேதனையில் கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் சிலிர்க்கவைக்கும் வல்லமையோடு அவர்கள் மனதிற்கு வரும். இப்போது அவர்கள் அவரை மகிமையில் காண்கிறார்கள். சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதை இனிமேல்தான் காண்பார்கள்.(20)GCTam 763.3

    தாம் தேவகுமாரன் என்று அவர் கூறியதைக் கேட்டு பரிகாசம் செய்தவர்கள் இன்று பேச்சற்று நிற்கிறார்கள். தான் யூதர்களின் ராஜா என்று இயேசு சொன்னதைக் கேட்டு இகழ்ந்து பரிகசித்த சேவகரிடம் அவரை ராஜாவாக முடிசூட்டச் சொன்ன ஏரோது ராஜா அங்கே இருக்கிறான். தெய்வபயம் அற்ற கரங்களால் அவரது உடலில் சிவப்பு அங்கியைப் போர்த்தி, அவரது புனிதமான நெற்றியிலே முள்முடியை வைத்து, எதிர்த்துத் தாக்காத அவரது கரங்களிலே போலியான செங்கோலைத் திணித்து, அவருக்கு முன்னால் தூஷணமான பரியாசத்தினால் பணிந்த மனிதர்கள் அங்கே இருக்கிறார்கள். அவரை அடித்தவர்களும் முகத்தில் துப்பியவர்களும் இன்று அவரது துளைக்கும் பார்வையிலிருந்து திரும்பி, அவருடைய சமுகத்தின் மேற்கொள்ளும் மகிமையினால் ஓடிப்போகத் தேடுகிறார்கள். அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தவர்கள், அவருடைய விலாவிலே குத்தின சேவகன், அந்த அடையாளங்களை பயத்தோடும் வாதிக்கப்பட்டவர்களாக காண்கிறார்கள். (21)GCTam 764.1

    துல்லியமான தெளிவோடு ஆசாரியர்களும் அதிகாரிகளும் கல்வாரியின் சம்பவங்களை நினைவுகூர்ந்தனர். நடுங்கும் திகிலோடு “மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணி யில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவை யிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்” (மத்தேயு 27:42,43) என்று தலையை ஆட்டிக்கொண்டு பிசாசின் பேருவகையோடு பேசினதை நினைவுகூர்ந்தனர். (22)GCTam 764.2

    குத்தகைக்கு எடுத்த தோட்டக்காரர்கள் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்குக் குத்தகை தர மறுத்து, அவனுடைய வேலைக்காரர்களை அடித்து விரட்டியதுமன்றி, அவனுடைய மகனையும் ‘கொலை செய்தார்கள் என்று இரட்சகர் கூறிய உவமை தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு நினைவிற்கு வருகிறது. அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் அந்த அக்கிரமக்காரர்களைச் சங்கரித்துப்போடுவான் என்று கூறி, அவர்கள் தங்களைத் தாங்களே நியாயந்தீர்த்துக்கொண்டதும் அவர்களுக்குத் தெளிவாக நினைவிற்கு வருகிறது. விசுவாசம் இல்லாத அந்த குத்தகைக்காரர்கள் செய்த பாவத்திலும் அதற்கு அவர்கள் அடைந்த தண்டனையிலும் ஆசாரியர்களும் மூப்பர்களும் தாங்கள் நடந்த பாதையையும் தங்களுடைய நீதியான அழிவையும் காண்கிறார்கள். இப்போது அவர்களிடமிருந்து மரண வேதனையான பெரும் ஓலம் கேட்கிறது. “அவனைச் சிலுவையில் அறையுங்கள்! அவனைச் சிலுவையில் அறையுங்கள்!” என்று எருசலேம் நகரத் தெருக்களில் கூவினதைவிடவும் பலமாக இப்பொழுது “அவர் தேவகுமாரன்தான்! அவர்தான் உண்மையான மேசியா!” என்று கூறி பயங்கரமாக ஓலமிட்டு அழும் ஒலி எழும்புகிறது. அந்த ராஜாதி ராஜனின் பிரசன்னத்தில் இருந்து தப்பியோட முயலுகிறார்கள். குமுறி வெடித்த இயற்கையால் பூமியில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் போய்ப் பதுங்கி மறைந்திட வீணாக முயற்சி செய்கிறார்கள். (23)GCTam 764.3

    சத்தியத்தை தள்ளிவிடுகிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மாய்மாலமான வாழ்க்கையின் துயர எண்ணங்களை நினைவுகூருவதும் வீணான வருத்தங்களால் ஆத்துமா அலைக்கழிக்கப்படுவதுமான மனச்சாட்சி விழித்தெழும் சமயங்கள் உண்டு. “பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் நேரிடும்போதும்” (நீதி. 1:27) என்ற நாளுடன் ஒப்பிடும்போது, இந்த வருத்தம் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவையும் அவருடைய விசுவாசமான ஜனங்களையும் அழிக்க வகைதேடினவர்கள் இப்பொழுது அந்த மக்களின் மீதிருக்கும் மகிமையைக் காண்கிறார்கள். அவர்களுடைய திகிலின் மத்தியில் பரிசுத்தவான்களின் குரல் மகிழ்ச்சியான தொனியில்: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்” (ஏசா. 25:9) என்று பாடும் பாடலைக் கேட்கிறார்கள். (24)GCTam 765.1

    நடுங்கும் தரை, அடிக்கும் மின்னல், குமுறும் இடி இவைகளுக்கு மத்தியில் தேவகுமாரனின் குரல் தூங்கிக்கொண்டிருக்கும் பரிசுத்தவான்களை அழைக்கிறது. அவர் நீதிமான்களின் கல்லறைகளைப் பார்த்து, தமது கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி: “பூமியின் தூளில் உறங்குகிறவர்களே எழுந்திருங்கள், எழுந்திருங்கள், எழுந்திருங்கள்!” என்று சொல்லுகிறார். பூமியின் நீளத்திலும் அகலத்திலும் மரித்தவர்கள் அந்த சத்தத்தைக் கேட்பார்கள் கேட்பவர்கள் பிழைப்பார்கள். சகல ஜாதியாலும், கோத்திரத்தாலும், பாஷைக்காரராலும், ஜனக்கூட்டத்தாராலுமான மகா சேனையின் காலடியால் பூமி அதிர்கிறது. மரணம் என்கிற சிறையிலிருந்து அழிவில்லாத மகிமைபொருந்தினவர்களாக வந்து: “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரி. 15:55) என்று ஆர்ப்பரிக்கிறார்கள். உயிரோடு இருக்கும் நீதிமான்களும் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும் ஒன்றாகச் சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சிகரமான வெற்றித்தொனியில் ஆர்ப்பரிக்கிறார்கள். (25)GCTam 765.2

    கல்லறையிலிருந்து வெளியேவரும் அனைவரும் அதற்குள் பிரவேசிக்கும்போது கொண்டிருந்த அதே வளர்த்தியில் இருந்தனர். உயிர்த்தெழுந்த கூட்டத்தாரிலிருந்த ஆதாம் நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமுடையவனாகவும், ஆனால் தேவகுமாரனைவிடச் சற்றே சிறியவனாகவும் காணப்படுகிறான். ஆதாமுக்கும் பின்சந்ததி மக்களுக்கும் இடையே இருந்த குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஒரு வகையில் மனிதகுலத்தின் பெரும் சீரழிவை காண்பித்தது. ஆனால் எல்லோருமே நித்திய இளமையின் புத்துணர்வோடும் உயிர்த்துடிப்போடும் எழும்புகிறார்கள். ஆரம்பத்தில் மனிதன் குணாதிசயத்தில் மட்டுமின்றி வடிவிலும் அமைப்பிலுங்கூட தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருந்தான். பாவம் அந்த தேவசாயலை மழுங்கடித்து கிட்டத்தட்ட அழித்தேவிட்டது. ஆனால் இழந்துபோனதை மீண்டும் கொடுக்கவே கிறிஸ்து வந்தார். நம்முடைய சீர்குலைந்த சரீரத்தை மாற்றி, தம்முடைய மகிமையுள்ள சரீரத்தைப்போன்று வடிவமைப்பார். மரிக்கக்கூடிய, கெட்டுப்போகிற, அழகிழந்த, ஒருகாலத்தில் பாவத்தால் கறைபட்டிருந்த சரீரம் முழுமையானதும் அழகானதும் நித்தியமானதுமாக மாறுகிறது. சரீரத்தில் இருந்த குறைபாடுகள் எல்லாம் உருக்குலைவுகள் எல்லாம் கல்லறையிலேயே விட்டுவிடப்படுகின்றன. வெகுகாலத்திற்குமுன்பு இழந்துவிட்ட ஏதேனின் ஜீவவிருட்சம் திரும்பக் கொடுக்கப்பட்டதால், மீட்கப்பட்டவர்கள் மனித இனத்தின் ஆதிகால மகிமையான முழு உயரத்திற்கு வளருகிறார்கள் (மல்கியா 4:2). கடைசியாக எஞ்சியிருக்கும் பாவசாபத்தின் சின்னங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, கிறிஸ்துவின் விசுவாசப்பிள்ளைகள், நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரின் மகிமையில் தோன்றி, மனதிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் தங்கள் ஆண்டவரின் மாசற்ற சாயலைப் பிரதிபலிப்பார்கள். யுகயுகமாகப் பேசப்பட்டு, யுகயுகமாக நம்பிக்காத்திருந்து, மிகுந்த ஆவலோடு எண்ணிப்பார்க்கப்பட்டிருந்தும் ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாததாக இருந்த அற்புதமான மீட்பு ஆகா! (26)GCTam 765.3

    உயிரோடு இருக்கிற நீதிமான்கள் “ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே” மறுரூபமாக்கப்படுகிறார்கள். தேவனுடைய குரல் ஒலியினால் அவர்கள் மகிமையடைந்தார்கள். இப்பொழுது அவர்கள் சாவாமையுள்ளவர்களாக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களோடு சேர்ந்து ஆண்டவரை வானத்திலே சந்திக்கும்படியாக எடுத்துக்கொள்ளப் படுகிறார்கள். தேவதூதர்கள் “அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலு மிருந்து” கூட்டிச் சேர்க்கிறார்கள். சிறுபிள்ளைகள் பரிசுத்த தேவதூதர்களால் அவர்களது அன்னையரின் கரங்களிலே ஒப்படைக்கப்படுகிறார்கள். மரணத்தினால் நெடுநாள் பிரிக்கப்பட்டிருந்த நண்பர்கள் இனி ஒருபோதும் பிரியாதபடி இணைந்து, மகிழ்ச்சியின் கீதங்களைப் பாடிக்கொண்டு தேவ னுடைய பட்டணத்தைநோக்கி ஒன்றாக எழும்பிச் செல்லுகிறார்கள். (27)GCTam 766.1

    மேகரதத்தின் ஒவ்வொரு பக்கமும் செட்டைகள் இருக்கின்றன. அவற்றுக்குக் கீழே ஜீவ சக்கரங்கள் இருக்கின்றன. அந்த ரதம் புதிய எருசலேமை நோக்கி மேலெழும்பும்போது, சக்கரங்கள் பரிசுத்தம் என்று ஒலி எழுப்புகின்றன. அதன் செட்டைகள் அசையும்பொழுது பரிசுத்தம் என்று ஒலி எழுப்புகின்றன. தேவதூதர்களின் பரிவாரம் “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று கூவுகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் “அல்லேலூயா” என்கிறார்கள். (28)GCTam 767.1

    தேவ நகரத்திற்குள் நுழையுமுன்பாக இரட்சகர் தன்னைப் பின்பற்றியவர்களுக்கு வெற்றிச் சின்னங்களைக் கொடுத்து, அவர்கள் ராஜ குடும்பத்தினர் என்பதற்கான விருதுகளை அணிவிக்கிறார். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் கூட்டம், பரிசுத்தவான்களையும் தேவதூதர்களையும்விட கம்பீரமாய் உயர்ந்திருக்கிற, மிகுந்த அன்போடு தங்கள்மேல் பிரகாசிக்கிற முகத்தோடிருக்கிற தங்களுடைய ராஜாவைத் சுற்றி சதுர வடிவில் நிற்கிறது. எண்ணமுடியாத மீட்கப்பட்டவர்களின் சேனை முழுவதிலுமுள்ள ஒவ்வொரு பார்வையும் அவர்மேல் பதிந்து ஒவ்வொரு கண்ணும், மனுஷனைப்பார்க்கிலும் அந்தக்கேடு அடைந்திருந்த முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அந்தக்கேடு அடைந்திருந்த ரூபமும் கொண்டிருந்த அவருடைய மகிமையைக் காண்கிறது. ஜெயங்கொண்டவர்களின் தலைகள் மேல் இயேசு தமது சொந்த வலக்கரத்தினாலே மகிமையின் கிரீடத்தை வைக்கிறார். ஒவ்வொருவருக்கும் அவரவரது புதிய நாமமும் (வெளி. 2:17) “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்றும் எழுதப்பட்ட ஒரு கிரீடம் உண்டு. ஒவ்வொருவருடைய கரத்திலும் வெற்றியோலையும் மின்னுகிற சுரமண்டலமும் கொடுக்கப்படுகின்றன. முன்னிலை வகிக்கும் தேவதூதர்கள் தங்களது சுரமடண்டலத்தை வாசிக்கத் தொடங்க, ஒவ்வொரு கரமும் சுரமண்டலத்தை மிகத் திறமையாக வாசிக்கிறது. பண்பட்ட செறிவு மிகுந்த இனிய இசை ஓங்கி எழுகிறது. விவரிக்கமுடியாத இன்ப அதிர்வுகள் ஒவ்வொருவரது இருதயத்திலும் கிளர்ந்தெழுகின்றன. “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளி. 1:6) என்று ஒவ்வொரு குரலும் நன்றியின் துதியோடு எழும்பும். (29)GCTam 767.2

    பணயம் கொடுத்து மீட்கப்பட்ட அந்தக் கூட்டத்தாருக்கு முன்பாகப் பரிசுத்த நகரம் இருக்கிறது. சத்தியத்தைக் கைக்கொண்ட ஜனம் உள்ளே பிரவேசிப்பதற்காக இயேசு முத்துக்களாலான கதவுகளை விரிவாகத் திறக்கிறார். அங்கே அவர்கள் தேவனுடைய பரலோகத்தை குற்றமில்லாமையிலிருந்த ஆதாமின் வாசஸ்தலத்தைக் காணுகிறார்கள். அப்பொழுது இதுவரை மனிதன் கேட்ட எந்த இசையிலும் இனிமையான அந்தக் குரல் “உங்களுடைய போராட்டம் முடிந்தது.” “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று கூறும். (30)GCTam 767.3

    நான் எங்கே இருக்கிறேனோ அங்கே நீர் எனக்குத் தந்தவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன் என்று இயேசு தமது சீடர்களுக்காக ஏறெடுத்த ஜெபம் இப்பொழுது நிறைவேறுகிறது. “மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே ... மாசற்றவர்களாய்”,“இதோ நானும் நீர் எனக்குத் தந்தவர்களும்”,“தேவரீர் எனக்குத் தந்தவர்களை நான் காத்துக்கொண்டேன்” என்று தமது இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களை கிறிஸ்து பிதாவிடம் சமர்ப்பிக்கிறார். ஆகா மீட்கும் அன்பின் ஆச்சரியம்தான் என்னே! பாவத்தின் இசைவின்மை அகற்றப்பட்டவர்களாக, அதன் கருகல் நீக்கப்பட்டவர்களாக தெய்வீகத்தோடு மீண்டும் இசைவுள்ளதாக்கப்பட்ட மீட்கப்பட்டவர்களில் பிதாவானவர் தமது சாயலைக் காணும் மணிநேரத்தின் மகிமைதான் என்னே! (31)GCTam 768.1

    விவரிக்க இயலாத அன்போடு இயேசு தம்முடைய விசுவாசப் பிள்ளைகளை அவர்களது ஆண்டவரின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கும்படி அழைக்கிறார். இரட்சகரின் சந்தோஷமெல்லாம் அவர் அனுபவித்த வேதனைகள் சிறுமைகளின் மூலமாக இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களை மகிமையின் ராஜ்யத்தில் காண்பதில்தான். ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் நடுவிலே தங்களது ஜெபங்களாலும் உழைப்புகளாலும் அன்போடு செய்த தியாகங்களாலும் கிறிஸ்துவிற்காக ஆதாயப்படுத்தப்பட்டவர்களைக் காணும்போது, மீட்கப்பட்டவர்கள் அந்த மகிழ்ச்சிக்குப் பங்காளிகளாகிறார்கள். தேவனுடைய உன்னதமான வெள்ளைச் சிங்காசனத்தைச் சூழ அவர்கள் ஒன்றுசேரும்போது தாங்கள் கிறிஸ்துவிற்காக வெற்றிகொண்டவர்கள் மற்றவர்களையும், அவர்கள் மற்றவர்களையும் ஆதாயப்படுத்தியிருப்பதையும், அவர்களெல்லாரும் இளைப்பாறுதலின் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இயேசுவின் பாதத்தில் தங்களுடைய கிரீடங்களை வைத்து, முடிவில்லாத நித்தியத்திற்கும் அவரை துதிக்கிறதையும் காணும்போது, சொல்லமுடியாத களிப்பு அவர்கள் இருதயத்தை நிறைக்கிறது. (32)GCTam 768.2

    மீட்கப்பட்டவர்கள் தேவனுடைய நகரத்திற்குள் வரவேற்கப்படும்போது பெரும்மகிழ்ச்சியுடனான ஆராதனைத் தொனி வானில் ஒலிக்கும். இரண்டு ஆதாம்களும் சந்திக்க இருக்கிறார்கள். தாம் சிருஷ்டித்த, சிருஷ்டித்தவருக்கு எதிராக பாவம்செய்த, யாருடைய பாவத்தினால் இரட்சகர் சிலுவையின் அடையாளங்களை தம் சரீரத்தில் சுமந்துகொண்டிருக்கிறாரோ அந்த நமது இனத்தின் முற்பிதாவை ஏற்றுக்கொள்ளும்படி தேவகுமாரன் தம் கரங்களை நீட்டினவராக நிற்கிறார். ஆதாம் கொடிய ஆணிகளின் அச்சடையாளங்களை காணும்போது, ஆண்டவருடைய மார்பில் சாயாமல், தாழ்மையோடு “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராயிருக்கிறார் பாத்திரராயிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே அவரது பாதங்களில் விழுகிறார். இரட்சகர் அவனை இரக்கத்தோடு தூக்கியெடுத்து, அவன் வெகுகாலத்திற்குமுன் வெளியேற்றப்பட்ட ஏதேன் வீட்டைப் பார்க்கும்படி அழைக்கிறார்.(33)GCTam 768.3

    ஏதேன் தோட்டத்தைவிட்டு அனுப்பப்பட்டபிறகு பூமியில் ஆதாமின் வாழ்க்கை கவலையால் நிறைந்தது. காய்ந்துவிழும் ஒவ்வொரு இலையும், பலியிடப்படும் ஒவ்வொரு ஆடும், இயற்கையின் அழகிய முகத்தில் தோன்றும் ஒவ்வொரு வாட்டமும், மனிதனுடைய பரிசுத்தத்தில் விழும் ஒவ்வொரு கறையும், ஆதாமிற்கு அவனுடைய பாவத்தை புதிதாக நினைவுபடுத்திக்கொண்டிருந்தன. அக்கிரமம் பெருகிக் கொண்டிருந்ததைக் கண்டபோதும், கொடுத்த எச்சரிப்புகளுக்கு விடையாக பாவத்திற்கு காரணம் அவன்தான் என்று அவன்மேல் விழுந்த நிந்தனைகளைச் சந்தித்தபோதும் அவனது துக்கத்தினாலெழுந்த வேதனை மிகவும் கொடியதாக இருந்தது. பொறுமையோடுகூடிய தாழ்மையுடன் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் மீறுதலின் தண்டனையை அவன் சுமந்தான். அவனது பாவத்திற்காக அவன் உண்மையாகவே மனந்திரும்பி, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட இரட்சகரின் தகுதியை நம்பியிருந்தான். மேலும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு மரித்தான். தேவகுமாரன் மனிதனின் தோல்வியையும் விழுகையையும் மீண்டும் சீர்படுத்தினார். இப்பொழுது பாவநிவாரண ஊழியத்தின் மூலமாக ஆதாம் தன்னுடைய முன்னான ஸ்தானத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறான். (34)GCTam 769.1

    இரட்சகர் அவனை ஜீவவிருட்சத்திற்கு அருகே அழைத்துச்சென்று, மகிமையான அந்தப் பழங்களைப் பறித்து சாப்பிடச்சொல்லி அவனிடம் கொடுக்கிறார். அவன் தன்னைச் சுற்றிலும் பார்க்கிறான். தன் குடும்பத்தைச் சேர்ந்த திரளான ஜனங்கள் மீட்கப்பட்டவர்களாகத் தன்னோடு அந்த பரலோகத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அப்பொழுது அவன் தனது மின்னுகிற கிரீடத்தை எடுத்து இயேசுவின் காலடியில் வைத்துவிடடு அவரது மார்பில் விழுந்து அவரை அணைத்துக்கொள்ளுகிறான். பிறகு தனது பொன் சுரமண்டலத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறான். அது பரலோகம் முழுவதும் எதிரொலிக்கிறது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரரே பாத்திரரே பாத்திரரே என்பதாக அந்தப் பாடல் ஒலிக்கிறது. ஆதாமின் குடும்பத்தாரும் சேர்ந்து அந்தப் பாடலைப் பாடுகிறார்கள். பாடிய வண்ணம் தங்களது கிரீடங்களை இரட்சகரின் காலடியில் வைத்து, தாழ்ந்து வணங்கித் துதிக்கிறார்கள். (35)GCTam 769.2

    ஆதாமின் குடும்பமும் தேவனும் இணையும் அந்தக் காட்சியைத் தேவதூதர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆதாம் பாவத்தில் விழுந்தபோது அதன் நிமித்தமாக அழுதவர்கள். பிறகு இயேசு உயிர்த்தெழுந்து பரமேறி தமது நாமத்தை விசுவாசிக்கிற அனைவரது கல்லறைகளையும் திறந்து அவர்களை விடுவிக்கப்போவதை நிச்சயம் செய்தபொழுது பெரும் மகிழ்ச்சியடைந்தவர்கள். இப்பொழுது அந்த இரட்சிப்பின் வேலைகள் முடிவடைந்து இருப்பதைக் காணுகிறார்கள். கண்டு, பாடப்படும் பாடலுக்கு இசைவாகத் தங்களது குரலையும் இணைத்து அவர்களோடு சேர்ந்து புகழ்ந்து பாடுகிறார்கள். (36)GCTam 770.1

    தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாகக் கண்ணாடிக்கடல் என்கிற ஒன்று இருக்கிறது. அது கண்ணாடியும் தீப்பிழம்புகளும் சேர்ந்திருப்பதுபோல் தோற்றமளிக்கிறது. தேவனுடைய மகிமையினால் சுடர்விட்டுப் பிரகாசிப்பதாக அக்கடல் தோன்றுகிறது. மிருகத்தின்மேலும் அதின் சொரூபத்தின்மேலும் அவனது முத்திரையின்மேலும் வெற்றி கொண்டவர்கள் என்ற தகுதியைப் பெற்ற பரிசுத்தர்கள் அந்த கண்ணாடிக் கடலின்மேல் கூட்டப்படுகிறார்கள். ஆட்டுக்குட்டியானவர் சீயோன் மலையில் அமர்ந்திருக்க, மானிடக் குடும்பங்களிலிருந்து மீட்கப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் இவர்களே. இவர்கள் தங்களது தேவசுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். அப்பொழுது திரளான தண்ணீர்களின் இரைச்சல் போலவும், பெரும் இடியின் ஒலியைப்போலவும், சுரமண்டலம் வாசிக்கிறவர்கள் தங்களது சுரமண்டலத்தை வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகப் புதியதொரு பாடலையும் பாடுகிறார்கள். அந்தப் பாடலானது அந்த இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம்பேர்கள் தவிர வேறு எவரும் பாடமுடியாத பாடலாகும். அது மோசேயின் பாடலும் ஆட்டுக்குட்டியானவரின் பாடலுமாகிய விடுதலையின் பாடலாகும். அந்தப் பாடல் ஒரு இலட்சத்து நாற்பத்தினாலாயிரம்பேர்கள் தவிர வேறு எவரும் கற்றுக்கொள்ளமுடியாத ஒரு அனுபவத்தின் பாடலாகும். அந்த அனுபவத்தை மற்றவர்கள் எவரும் பெற்றிருக்கவில்லை. ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே என்று வேதாகமம் இவர்களைப்பற்றி மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறுகிறது. பூமியிலே உயிரோடிருந்தவர்களிடமிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்களாகிய இவர்கள் பிதாவிற்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்றும் வேதாகமம் கூறுகிறது.-வெளி. 15:2,3 14:1-5. அவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். அந்தக் காலத்தை யாக்கோபின் இக்கட்டுக்காலம் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது. அந்த மகா உபத்திரவ காலத்தின் பரிதவிப்பிலே நிலைநின்றவர்கள், தேவன் அனுமதித்த கடைசியான சோதனைக் காலத்திலே, பரிந்துபேசுபவர் இல்லாமலேயே இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெண்மையாக்கப்பட்ட நீதியின் வஸ்திரங்களை இவர்கள் தரித்திருந்தார்கள். ஆகவே அவர்கள் தேவசிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவரது ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள். சிங்காசனத்திலே அமர்ந்திருக்கிறவர் அவர்களுக்கு மத்தியில் வாசம்செய்வார். இந்த உலகம் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் நாசமாக்கப்பட்டதையும், மனிதர்களை மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்க சூரியனுக்கு வல்லமை இருந்ததையும் பார்த்திருப்பது மட்டுமன்றி, அவர்களேகூட துன்பம், பசி, தாகம் அனைத்தையும் சந்தித்தவர்களுமாக இருந்தவர்கள்.-வெளி. 7:14,15. “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்”— வெளி. 7:14-17. (37)GCTam 770.2

    இரட்சகராலே தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உபத்திரவமென்கிற பள்ளிக்கூடத்தில் நியாயப்பிரமாணம் என்கிற கல்வியைக் கற்று, கீழ்ப்படிதல் என்கிற அறிவிலே தேறியவர்கள் என்பது எல்லாக் காலங்களிலுமே நிகழ்ந்த உண்மை. இவர்கள் இந்த உலகத்திலே இடுக்கமான பாதை வழியாக நடந்தவர்கள். துன்பம் என்கிற அடுப்பிலே புடமிடப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டவர்கள். இயேசுவின் நிமித்தம் இவர்கள் எதிர்ப்பு வெறுப்பு அவதூறு ஆகியவற்றைச் சகித்தவர்கள். இவர்கள் சாத்தானோடு நடக்கும் போராட்ட வேதனைகளிலே தேவனை விடாமல் பின்பற்றி நடந்தவர்கள். சுயத்தை வெறுத்து கசப்பான ஏமாற்றங்களை அனுபவித்தவர்கள். பாவம் என்பது எவ்வளவு தீமையானது எவ்வளவு அழிவுகளை உண்டாக்கக்கூடியது என்பவற்றைத் தங்களுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவங்களினாலே கற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பாவத்தை அருவருக்கிறவர்கள். அதைச் செய்யப் பயப்படுகிறவர்கள். ஒரு தடவை நுழைந்துவிட்ட பாவத்தைக் களைவதற்காக எவ்வளவு பெரிய விலை கொடுக்கப்படவேண்டியதாயிற்று என்பதை எண்ணிப்பார்த்தவர்கள். அதனால் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டவர்கள். இவர்களது இந்த அனுபவம், பாவமே செய்யாதவர்களுக்குக் கிடையாது. இவர்கள் தேவனாலே அதிகம் மன்னிக்கப்பட்டவர்கள். தேவனுடைய துன்பத்தில் பங்கெடுத்தவர்கள் என்பதால் தேவனுடைய மகிமையிலும் பங்கெடுப்பதற்குத் தகுதி பெற்றவர்களும் இவர்களே.(38)GCTam 771.1

    தேவனுடைய சுதந்திரத்திற்குப் பங்காளிகளாக வருகிறவர்கள் பல இடங்களிலிருந்தும் வருவார்கள். அவர்கள்மேலறைகளிலிருந்தும் வருவார்கள். பதார்ள் அறைகளிலிருந்தும் வருவார்கள். சிறைச்சாலைகளிலிருந்தும் தூக்குமேடைகளிலிருந்தும் வருவார்கள். மலைகளிலிருந்தும் வனாந்தரங்களிலிருந்தும் பூமியின் குகைகளிலிருந்தும் வருவார்கள். பூமியிலே அவர்கள் திக்கற்றவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் வாதிக்கப்பட்டவர்களுமாக இருந்தார்கள். சாத்தானின் ஏமாற்று வஞ்சனைகளுக்கு இணங்கிப்போகாததினாலே உலகத்தாரின் நிந்தனைகளாலே நிரப்பப்பட்டுக் கல்லறைகளில் இறங்கிப்போனவர்களான இலட்சக்கணக்கானவர்கள்! இப்பொழுது தேவனே மனிதர்களின் நியாயாதிபதியாக இருக்கிறார் (சங். 50:6). இப்பொழுது உலகத்தின் தீர்ப்புகள் நேர் எதிராக மாறிவிட்டன. தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார் (ஏசா. 25:8). அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும் கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவார்கள் (ஏசா. 62:12). தேவன் அவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடைகளையும் (ஏசா. 61:3) கொடுக்க ஒரு நாளை நியமித்திருக்கிறார். அதன்பின் அவர்கள் பலவீனர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருப்பதில்லை. இப்படியாக அவர்கள் தேவனோடு என்றென்றும் இருப்பார்கள். உலகிலே மிகவும் கனவான்களாக இருந்தவர்கள் உடுத்தியிருந்த உடைகளை விட மிகச் சிறந்த ஆடைகளைத் தரித்து, தேவசிங்காசனத்தின் முன்பாக நிற்பார்கள். உலகத்திலிருந்த எந்த ராஜாவும் அணிந்திராத அதிக மகிமை உள்ள மகுடங்களினாலே முடிசூட்டப்படுவார்கள். வேதனையும் அழுகையும் நிறைந்திருந்த நாட்கள் இனி அவர்களுக்கு வருவதே இல்லை. மகிமையின் ராஜா அவர்களது கண்ணீரையெல்லாம் அவர்களது முகத்திலிருந்து துடைத்துவிட்டார். துக்கம் உண்டாவதற்கான காரணங்கள் எல்லாம் ஒழிந்துபோயின. வெற்றியின் அடையாளமாகக் குருத்தோலைகளை வீசிக்கொண்டும் இசைவான இனிமையான தெளிவான முறையில் துதியின் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருப்பார்கள். ஒவ்வொருவரும் அந்தப் பாட்டில் பங்கெடுத்துப் பாடத் துவங்க அந்தப் பாட்டு பரலோகமெங்கும் எதிரொலிக்கும். இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்திலே வீற்றிருக்கும் எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக... ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக (வெளி. 7:10.12) என்பதாக அந்தப் பாடல் ஒலிக்கும்.(39)GCTam 772.1

    மனித இனத்தில் மீட்பு என்கிற தத்துவம் மகா அற்புதமானது. இந்த வாழ்க்கையில் நாம் அதைப்பற்றி அறிந்துகொள்ளுவதெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளிதான். சிலுவையிலே அவமானமும் மகிமையும் சந்திக்கின்றன. வாழ்வும் சாவும் சந்திக்கின்றன. இந்தக் காரியங்களை நமக்கிருக்கும் குறைந்த அறிவுத் திறனைக் கொண்டு பெரும் முயற்சியோடு ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் என்னதான் நமது மனதின் சக்திகளையெல்லாம் ஒன்றுசேர்த்து சிந்தித்தாலும் மேற்படி காரியங்களின் தன்மைகளையும் முக்கியத்துவத்தையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. மனித மீட்பிற்குப் பின்னால் உள்ள தேவ அன்பின் நீளத்தையும் அகலத்தையும் ஆழத்தையும் உயரத்தையும் குறித்து நாம் புரிந்துகொண்டிருப்பது மிகவும் கொஞ்சமே. பணயம் கொடுத்து மீட்கப்பட்டவர்களின் அறிவுத்திறன் மிக அதிகமாக இருக்கும். ஆகவே தாங்கள் பார்க்கப்படுவதைப்போலவே பார்க்கவும், தாங்கள் அறிந்துகொண்டிருப்பதைப்போலவே அறியவும் அவர்களால் முடியும். ஆயினும் மீட்புத் திட்டத்தின் இரகசியங்கள் அனைத்தையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ஆராயும்பொழுது, புதிய புதிய உண்மைகளை கோர்வையாக விளங்கிக்கொண்டே வருவார்கள். அது அவர்களுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பூமியில் நிலவிய துயரங்கள் வேதனைகள் சோதனைகள் அனைத்தும் கடந்துபோயின. அவற்றிற்குக் காரணமான பாவமும் ஒழிந்துபோனது. என்றாலும், பாவத்தின் ஒரு காரியத்தைக் குறித்துத் தெளிவான நுட்பமான அறிவு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். ஆம். பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்கான விலையானது எவ்வளவு பெரிய விலை என்பதே அந்தக் காரியம்.(40)GCTam 773.1

    கிறிஸ்துவின் சிலுவை மீட்படைந்த மனிதர்களின் அறிவிற்கும் அன்புக்கும் என்றென்றும் விருந்தளிப்பதாக இருக்கும். கிறிஸ்துவாலே மகிமையடைந்த அவர்கள் கிறிஸ்துவின் மகிமையை அதிகமதிகமாகக் கண்டுகொண்டே இருப்பார்கள். இயேசு தமது படைப்பின் வல்லமையால் எல்லையில்லா அண்டவெளியில் எண்ணில்லாத உலகங்களைப் படைத்தும் தாங்கி நடத்தியும் வருபவர். இயேசு பரலோகத்தின் ராஜாவாக இருந்தார். இயேசு கேரூபீன்களாலும் சேராபீன்களாலும் களிப்போடு துதிக்கப்படுபவர். இவ்வளவு உன்னதராகிய இயேசு விழுந்து விட்ட மனிதனைத் தூக்கியெடுப்பதற்காகத் தன்னை அந்த அளவு உயரத்திலிருந்து தாழ்த்தினாரே! பாவத்தின் நிந்தையையும் அவமானத்தையும் சகித்துக்கொண்டாரே! அதனால் அவரது பிதாவின் முகத்தைக் காணவொட்டாமல் போவதையும் ஏற்றுக்கொண்டாரே! விழுந்துபோன உலகின் வேதனைகள் அவரது இருதயத்தை நசுக்கிக் கல்வாரிச் சிலுவையிலே அவரது உயிரை எடுக்கும்படிக்கு ஒப்புக்கொடுத்தாரே! இந்த உண்மைகளையெல்லாம் மீட்கப்பட்ட மனித இனம் ஒருபோதும் மறக்காது. உலகங்களையெல்லாம் படைத்து எல்லாருடைய முடிவுகளையும் தீர்மானிக்கிற தேவன், மனிதன்மேல் வைத்த அன்பின் நிமித்தம் தனது மகிமைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இப்படித் தன்னை இழிவிற்குள்ளாக்கிக்கொண்டார் என்கிற அவரைக்குறித்த உண்மை இந்தப் பிரபஞ்சத்திலே அவரைக்குறித்து எழும்பும் ஆச்சரியத்தையும் துதியையும் நித்தியகாலமாக அனல்மூட்டிக்கொண்டே இருக்கும். இரட்சிக்கப்பட்ட தேசத்தார்கள் இரட்சகரைப் பார்க்கும்போது, அவரது முகத்திலே நித்திய பிதாவின் மகிமை பிரகாசித்துக்கொண்டு இருப்பதைக் காணுகிறார்கள். அவரது சிங்காசனத்தைக் காணும்போது அது என்றென்றும் இருந்தது, என்றென்றும் இருக்கப்போகிறது என்பதையும், அவரது ராஜ்யத்திற்கு முடிவே இராது என்பதையும் உணருகிறார்கள். அதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் தனது சொந்த ரத்தத்தைச் சிந்தினவர் நம்மை தேவனுக்கென்று மீட்டுக்கொண்டவர் என்பதால் அவர் பாத்திரரே அவர் பாத்திரரே என்று ஓயாமல் பாடுவார்கள். (41)GCTam 773.2

    தேவன் சிலுவையில் ஏன் மரித்தார் என்கிற இரகசியத்தை புரிந்துகொண்டால் போதும். மற்ற மர்மங்கள் எல்லாமே விளங்கிவிடும். தேவனைக் குறித்த பயமும் பிரமிப்பும் உள்ளவர்கள் அந்த பயத்தையும் பிரமிப்பையும் கல்வாரியிலிருந்து வீசுகின்ற வெளிச்சத்திலே வைத்துப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவை அழகாகவும் கண்ணிற்கு இனிமையாகவும் தோன்றும். அங்கே இரக்கம், இசைவு, தந்தை தாயன்பு ஆகியவைகள் பரிசுத்தம், நீதி, வல்லமை ஆகியவற்றோடு இணைந்து நிற்பதைக் காணலாம். அவரது சிங்காசனம் உன்னதத்தில் உயர்த்தப்பட்டு கம்பீரமாக விளங்குவதைக் காணும்போது, அவரது குணாதிசயத்தில் கிருபை மிளிர்வதைப் பார்க்கலாம். அதோடு எங்கள் பிதா என்று அருமையாக அவர் அழைக்கப்படுவதின் உண்மையான அர்த்தத்தையும் உணர்ந்துகொள்ளலாம். (42)GCTam 774.1

    அப்பொழுது நமக்கு ஒன்று தெளிவாக விளங்கும். தேவகுமாரனின் பலியினாலன்றி நமக்கு மீட்பில்லை என்பதே அது. அப்படி தேவகுமாரனைப் பலிகொடுக்காமல் நமது இரட்சிப்பின் திட்டத்தைத் தீட்ட வரம்பெற்ற பிதாவின் தெய்வ ஞானத்துக்கும் இயலவில்லையே. இப்படி கொடுக்கப்பட்ட பலியின் பயன் என்னவெனில் அந்தப் பணயத்தால் மீட்கப்பட்ட பரிசுத்தமான மகிழ்ச்சியான சாவாமையையுடைய மானிடர்களால் பூமியை நிரப்புகிற மகிழ்ச்சியே. அந்தகார சக்திகளோடு இரட்சகர் நடத்திய யுத்தத்தின் பயன் என்னவெனில், மீட்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் தேவனுக்கு மகா மகிமையும் சேர்ந்தன. அவை நித்திய நித்தியமாகச் சேர்ந்து கொண்டிருக்கும் என்பதுதான். இந்த மனித ஆத்துமாக்களுக்குப் பிதா சம்பாதித்துக் கொடுத்த விலை இதுவே. பிதா மட்டுமல்ல, கிறிஸ்துவுங்கூட சம்பாதித்துக் கொடுத்த விலை இதுவே. தான் செய்த பெரிய தியாகத்தின் இந்தக் கனிகளைக் கண்டு அவர் திருப்தி ஆவார். (43)GCTam 774.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents