Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    26—ஒரு சீர்திருத்தப் பணி!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 451—460)

    டைசி நாட்களில் நிறைவேற்றப்படவேண்டிய ஓய்வுநாள் சீர்திருத்தப்பணியைப்பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் இவ்விதமாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. “கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.” “கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்”-ஏசாயா 56:1,2,6,7. (1)GCTam 525.1

    “இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்” (ஏசா. 56:8) என்பதான வார்தைகள் கிறிஸ்தவ காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. சுவிசேஷ த்தினால் புறஜாதியினர் சேர்க்கப்படுவது இதனால் முன்நிழலாகக் காட்டப்பட்டுள்ளது. தேவனுடைய கற்பனையில் முத்திரை நான்காவது கற்பனையில் காணப்படுகிறது. ஓய்வுநாளை மேன்மைப்படுத்துபவர்களின்மீது ஒரு ஆசீர்வாதம் கூறப்பட்டது. இப்படியாக நான்காவது கற்பனையின் கட்டளையானது, கிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றுடன் இந்த மகிழ்ச்சி மிக்க செய்தியானது அவருடைய ஊழியக்காரர்களால் தேசங்களனைத்திற்கும் பிரசங்கிக்க வேண்டிய காலம்வரை தொடர்கிறது. (2)GCTam 525.2

    “சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்” (ஏசா. 8:16) என்று அதே தீர்க்கதரிசியினால் கர்த்தர் கட்டளையிடுகிறார். தேவனுடைய கற்பனையின் முத்திரை நான்காவது கற்பனையில் காணப்படுகிறது. பத்துக் கற்பனையைக் கொடுப்பவரின் பெயரையும், பதவியையும் பார்வைக்குக் கொண்டுவருகிறது. அவர் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர் என்று அறிவித்து, மற்றெல்லோருக்கும் மேலாக பக்திக்கும் தொழுகைக்கும் உரியவராக அவர் இருக்கிறார் என்னும் அவரது உரிமைபாராட்டுதலை அது அறிவிக்கிறது. இந்தக் கற்பனையைத் தவிர, வேறு எந்தக் கற்பனையினாலும், அவரது அதிகாரத்தினால்கற்பனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக்காட்டமுடியாது. போப்புமார்க்க வல்லமையினால், ஓய்வுநாள் மாற்றப்பட்டபோது, அந்த முத்திரை கற்பனையிலிருந்து நீக்கப்பட்டது. நான்காவது கற்பனையிலுள்ள ஓய்வுநாளை சிருஷ்டிகரின் நினைவுச் சின்னமாகவும் அவரது அதிகாரத்தின் அடையாளமாகவும் உயர்த்தி, எடுத்துக் கட்டுவதற்கு இயேசுவின் சீடர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். (3)GCTam 526.1

    முரண்பாடுள்ள கோட்பாடுகளும் தத்துவ விளக்கங்களும் பெருகும் போது, அனைத்துக் கருத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும் சோதிக்கப்படுதற்கு தேவனுடைய கற்பனை ஒன்றுதான் தவறாத நியதியாக உள்ளது. “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசா. 8:20) என்று தீர்க்கதரிசி கூறுகிறார். (4)GCTam 526.2

    “சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசா. 58:1) என்ற கட்டளை மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது துன்மார்க்கமான உலகத்திற்கு என்று கொடுக்கப்படாமல், என்னுடைய ஜனங்கள் என்று கர்த்தர் எவர்களைக் குறிக்கிறாரோ அவர்களது மீறுதல்களுக்காக, அவர்கள் கடிந்துகொள்ளப்பட வேண்டும். “தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்” - ஏசாயா 58:2. இங்கு தங்களைப் பற்றித் தாங்களே நீதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு வகுப்பினர் தேவனுடைய சேவையில் மிகுந்த ஆர்வத்தை வெளிக்காட்டுபவர்களாகத் தோற்றமளிக்கும் ஒரு வகுப்பினர், காட்சிக்குக் கொண்டுவரப்படுகின்றனர். ஆனால் கடுமையாக பக்திவிநயமாக இருதயங்களை ஆராய்ந்து அறிபவரால் உண்டாகும் கடுமையான பக்திவிநயமான கடிந்துகொள்ளுதலானது, அவர்களை தெய்வீகப் பிரமாணங்களைக் காலின் கீழிட்டு மிதிப்பவர்களாக உள்ளனர் என்பதை மெய்ப்பிக்கிறது. (5)GCTam 526.3

    கைவிடப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட சட்டதிட்டங்களைத் தீர்க்கதரிசி, இவ்விதமாகச் சுட்டிக்காட்டுகிறார். “உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று”-ஏசாயா 58:12,14. இந்தத் தீர்க்கதரிசனம் நமது காலத்திற்கும் பொருந்தக்ககூடியதாக இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க வல்லமையினால் ஓய்வுநாள் மாற்றப்பட்டபோது, கற்பனையில் விரிசல் உண்டாக்கப்பட்டது. ஆனாலும் அந்த தெய்வீக அமைப்பை எடுத்துக்கட்டுவதற்கான வேளை வந்திருக்கிறது. அந்த விரிசல் சரிசெய்யப்பட்டு, தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திவாரங்கள் மீண்டும் உயர எழுப்பப்பட்டாக வேண்டும். (6)GCTam 527.1

    சிருஷ்டிகரின் ஓய்வினாலும், ஆசீர்வாதங்களினாலும், பரிசுத்தப் படுத்தப்பட்டது ஓய்வுநாள். ஆதாமினால் அவனுடைய குற்றமற்ற தன்மையில் ஏதேனிலும், அவன் அந்த தனது மகிழ்ச்சிமிக்க தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னும், விழுந்துபோனவனும் மனம் திரும்பினவனுமான ஆதாமினால் ஓய்வுநாள் ஆசரிக்கப்பட்டிருந்தது. ஆபேல் முதல், நீதிமானான நோவா, ஆபிரகாம், யாக்கோபு ஆகிய முற்பிதாக்கள் அனைவராலும் ஓய்வுநாள் ஆசரிக்கப்பட்டிருந்தது. தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, விக்கிரக ஆராதனைக்கு நடுவில், அநேகர் தேவனுடைய கற்பனையைப்பற்றிய அறிவை இழந்திருந்தனர். ஆனால் இஸ்ரவேலர்களைக் கர்த்தர் விடுவித்தபோது, அவர்கள் அவருடைய சித்தத்தை அறிந்து, அவருக்குப்பயந்து, அவருக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவேண்டும் என்பதற்காக, அவர் திரள்கூட்டத்திற்கு முன்பாக நடுங்கவைக்கும் கம்பீரத்துடன், அவர் தமது கற்பனையை அறிவித்தார். (7)GCTam 527.2

    அந்த நாள் தொடங்கி இந்த நாள்வரை, பூமியில் தேவனுடைய கற்பனையைப் பற்றிய அறிவு பாதுகாக்கப்பட்டு, நான்காவது கற்பனையில் உள்ள ஓய்வுநாள் ஆசரிக்கப்பட்டுவருகிறது. தேவனுடைய பரிசுத்த நாளைக் காலின்கீழே மிதிப்பதில் பாவமனிதன் வெற்றியடைந்த போதிலும், அப்படிப்பட்ட அவனது மேலாதிக்கத்தின் காலத்திலுங்கூட, அதற்கு மேன்மையைச் செலுத்தியிருந்த, விசுவாசமுள்ள மக்கள் இரகசியமான இடங்களில் மறைந்திருந்திருந்தனர். சீர்திருத்தம் ஆரம்பமானதிலிருந்து, ஒவ்வொரு தலைமுறையிலும் அதைக் கடைபிடிப்பதிலும் ஆசரிப்பதிலும் தொடர்ச்சியாகச் சிலர் இருந்தனர். அடிக்கடி நிந்தைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் நடுவில் அவர்கள் இருந்த போதிலும், தேவனுடைய கற்பனையின் நித்தியத்துவத்திற்கும், சிருஷ்டிப்பின் ஓய்வில் உள்ள பரிசுத்தமான கடமைக்கும், தொடர்ச்சியான ஒரு சாட்சி தாங்கி நின்றது. (8)GCTam 528.1

    வெளி. 14-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுவரும் நித்திய சுவிசேஷம் சம்பந்தமாக இந்த சத்தியங்கள் கிறிஸ்துவின் வருகையின் போது, அவரது சபையை விசேஷப்படுத்திக்காட்டும். ஏனெனில் “தேவனு டைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிற பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” (வெளி. 14:12) என்பது இந்த முத்தூதுகளின் பலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய வருகைக்குமுன் கடைசியாகக் கொடுக்கப்படவேண்டியதாக இந்தத்தூது இருக்கிறது. இதன் அறிவிப்பைத் தொடர்ந்து, மனிதகுமாரன் பூமியின் விளைச்சலை அறுவடை செய்யும்படி வருவது தீர்க்கதரிசியால் காணப்பட்டது. (9)GCTam 528.2

    பரிசுத்தஸ்தலம் பற்றியும் தேவனுடைய கற்பனையின் மாறாத தன்மைபற்றியும் ஒளியைப்பெற்றுக்கொண்டவர்களுக்கு சத்தியத்தின் அமைப்பிலுள்ள அழகும், இசைவும் அவர்களது புரிந்துகொள்ளுதலுக் கென்று திறக்கப்பட்டபோது, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியினாலும் ஆச்சரியத்தினாலும் நிரப்பப்பட்டனர். இவ்வளவு விலையேறப்பெற்றதாக அவர்களுக்குத் தோன்றின ஒளியானது, மற்ற கிறிஸ்தவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தவிர வேறு விதத்தில் இருக்காதென்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் தங்களைக் கிறிஸ்துவின் அடியார்கள் என்று உரிமைபாராட்டின அநேகருக்கு, உலகத்திலிருந்து அவர்களை வேறுபடுத்திவைக்கக்கூடிய சத்தியங்கள் வரவேற்கப்படத்தக்கவையாக இல்லை. நான்காவது கற்பனைக்குக் கீழ்ப்படிவது ஒரு தியாகத்தை கட்டாயப்படுத்துகிறது. எனவே அதிலிருந்து பெரும்பான்மையினர் பின்வாங்கினர்.(10)GCTam 528.3

    ஓய்வுநாளின் உரிமைகள் முன்வைக்கப்பட்டபோது, அநேகர் உலகப்பிரகாரமான பார்வையுடன் காரணம் கண்டனர். நாங்கள் எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமையை ஆசரித்துவந்திருக்கிறோம். எங்களது பிதாக்களும் அதையே ஆசரித்திருக்கின்றனர். அநேக நல்லவர்களும் பக்திமிக்கவர்களுமான மனிதர்கள் அதை ஆசரித்திருந்தே மகிழ்ச்சியுடன் இறந்துபோனார்கள். அவர்கள் சரியானவர்களாக இருந்திருந்தால், நாங்களும் சரியானவர்களாகத்தான் இருக்கிறோம். இந்தப் புதிய ஓய்வுநாளை ஆசரிப்பது எங்களை உலகத்திடமிருந்து இசைவற்றவர்களாக்கி, வெளியே வீசி எறிந்துவிடும். அப்போது அவர்கள்மீது எங்களுக்குச் செல்வாக்கு இருக்காது. ஞாயிற்றுக்கிழமையை ஆசரித்துவரும் உலகமனைத்திற்கும் எதிராக, ஏழாம்நாளை ஆசரிக்கும் ஒரு சிறு கூட்டத்தினரால் எதைச் சாதித்துவிடமுடியும்? இவ்விதமான வாதங்களினால்தான் யூதர்கள் கிறிஸ்துவை நிராகரித்தை நியாயப்படுத்த முயன்றனர். பலிமுறைகளைச் செலுத்தியதால் அவர்களது பிதாக்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்தனர். அப்படியிருக்க அதே பாதையைப் பின்பற்றுவதனால் பிள்ளைகள் ஏன் இரட்சிப்பைக் காணமுடியாது? அப்படியே லுத்தரின் காலத்தில் உண்மையான கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தில் மரித்தனர். எனவே, அந்த (கத்தோலிக்க)மதம் இரட்சிப்புக்குப் போதுமானது என்று போப்புமார்க்கத்தினர் காரணம் காட்டினர். அப்படிப்பட்ட காரணம் காணுதல், சகலவிதமான சமய விசுவாசம் அல்லது பழக்கம் ஆகியவைகளின் முன்னேற்றத்திற்கும், வலிமைமிக்க தடையாக இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும், (11)GCTam 529.1

    ஞாயிறு ஆசரிப்பு என்பது சபையால் ஏற்படுத்தப்பட்ட கொள்கையாகவும், உலகெங்கும் பரவியுள்ள வழக்கமாகவும், நூற்றாண்டுகளாக உள்ளது என்றும் அநேகர் வற்புறுத்தினர். இந்த வாதத்திற்கு எதிராக ஓய்வுநாளும் அதன் ஆசரிப்பும் மிகப் பழமையானதும் அதிகமாகப் பரவினதுமாக இருந்து, அது பூமி எந்த அளவிற்கு மூப்புடையதாக உள்ளதோ, அந்த அளவிற்கு தேவனுடையதாகவும் தேவதூதர்களினுடையதாகவும், அங்கீகரிப்பை உடையதாகவும் உள்ளது என்று காட்டப்பட்டது. பூமிக்கு அஸ்திவாரமிட்டபோது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடினபோது, தேவபுத்திரர் எல்லோரும் கெம்பீரித்தபோது, ஓய்வுநாளின் அஸ்திவாரம் இடப்பட்டது. இந்த அமைப்பு நமது பக்தியை நன்கு கோரலாம். அது மனித அதிகாரத்தினால் அபிஷேகம் பண்ணப்படாமலும், மனித பாரம்பரியங்களைச் சாராமலும் உள்ளது. அது நீண்ட ஆயுசுள்ளவரால் ஏற்படுத்தப்பட்டு, அவரது நித்திய வார்த்தையினால் கட்டளையிடப்பட்டிருந்தது. (12)GCTam 529.2

    ஓய்வுநாள் சீர்திருத்தம்பற்றி மக்களின் கவனம் அழைக்கப்பட்டபோது, புகழ்பெற்ற ஊழியக்காரர்கள் தேவனுடைய வார்த்தையைமாற்றி, அதைப்பற்றி விசாரிப்பவர்களின் மனங்களை அமைதிப்படுத்துவதற்கு மிகச் சிறப்பாகப் பொருந்தக்கூடிய விதத்தில், விளக்கங்களை அதன் சாட்சியின்மீது வைத்தனர். தங்களுக்கென்று வேதவாக்கியங்களை ஆராயாதவர்கள், தங்களது விருப்பங்களுக்கு இசைவாக இருந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதில் திருப்தி உள்ளவர்களாக இருந்தனர். வாதம், குதர்க்கம், பிதாக்களின் பாரம்பரியங்கள், சபையின் அதிகாரம் ஆகியவைகளினால் சத்தியத்தைக் கவிழ்க்க அநேகர் முயன்றனர். நான்காவது கற்பனையின் சொல்லுகிற தன்மையைப் பாதுகாக்க, அதற்காகப் பரிந்துபேசுபவர்கள் அவர்களது வேதாகமங்களுக்கு ஏவப்பட்டனர். சத்திய வார்த்தையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டிருந்த தாழ்மையான மனிதர்கள், கற்றறிந்த மனிதர்களின் தாக்குதல்களைச் சமாளித்து நிற்கவே, தங்களுடைய நூதனமான பேச்சுத் திறமை, பள்ளிகளில் இருந்த தந்திரம் ஆகியவைகள் வேத வாக்கியங்களில் தேர்ந்திருந்த நேர்மையும், எளிமையுமிக்க மனிதர்களுக்கு எதிராக வல்லமை அற்றதாக இருந்ததை அவர்கள் ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் கண்டனர். (13)GCTam 530.1

    அவர்களுக்குச் சாதகமாக வேதாகமச் சான்று இல்லாமலிருந்தபோது, அநேகர் தங்களது களைப்பில்லாத பிடிவாதத்துடன் ... இதே காரணத்தால், கிறிஸ்துவிற்கும் அவரது சீடர்களுக்கும் எதிராக எவ்விதமாகச் செயல்படுத்தப்பட்டது என்பதை மறந்தவர்களாக, நமது பெரிய மனிதர்கள் இந்த ஓய்வுநாள் கேள்வியை ஏன் புரிந்துகொள்ளவில்லை? என்று கேட்டனர். ஆனால் நீங்கள் நம்புவதுபோலச் சிலர் நம்புகின்றனர். அதனாலேயே உலகத்திலுள்ள கற்றறிந்த மனிதர்கள் அனைவரும் தவறாகவா உள்ளனர். நீங்கள் மட்டும் சரியானவர்களா அப்படி இருக்கமுடியாது என்றனர். (14)GCTam 530.2

    இப்படிப்பட்ட வாதங்கள் அனைத்தையும் மறுப்பதற்கு வேதவாக்கியங்களின் போதனைகளையும் எல்லாக்காலங்களிலும் கர்த்தர் தமது மக்களுடன் ஈடுபாடுகொண்டிருந்த வரலாற்றையும் குறிப்படுவது மட்டுமே அவசியமாக இருந்தது. எவர்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டு, அவரது சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள் மூலமாக தேவன் பேசிச்செயலாற்றுகிறார். தேவைப்பட்டால், பலரும் அறிந்த பாவங்களைக் கடிந்துகொள்ள அஞ்சாதவர்கள் மூலமாக சுவையற்ற வார்த்தைகளில் பேசுகிறார். கற்றறிந்த மனிதர்களையும் மேலான பதவியில் உள்ளவர்களையும் சீர்திருத்த இயக்கங்களை நடத்துவதற்குத் தெரிந்துகொள்ளாத காரணம் என்னவெனில், அப்படிப்பட்டவர்கள், அவர்களது மன நம்பிக்கைகள், கோட்பாடுகள், இறையியல் மறைகள் ஆகியவைகளை நம்பி, தேவனால் போதிக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று உணருகின்றனர். ஞானத்தின் ஆதாரமாயிருப்பவருடன் உள்ள ஒரு நேரடியான உறவுமட்டுமே வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் தகுதி உடையதாக இருக்கின்றன. குறைவான பள்ளிக்கல்வியை உடையவர்கள் சில சமயங்களில் சத்தியத்தை அறிவிக்கும்படி அழைக்கப்படுகின்றனர். அவர்கள் கல்வி அறிவற்றவர்களாக இருப்பதினாலும் அல்லாமல், அவர்கள் போதிக்கப்படமுடியாத அளவிற்குச் சுயநிறைவு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் பள்ளியில் பயிலுகின்றனர். அவர்களது பணிவும், கீழ்ப்படிதலும் அவர்களைப் பெரியவர்களாக்குகிறது. தேவனுடைய சத்தியத்தைப் பற்றிய அறிவை அவர்களிடம் ஒப்படைப்பதில் ஒரு மேன்மையை தேவன் அவர்கள்மீது வைக்கிறார். அதை ஒப்படைக்கும்போது, உலகப்பிரகாரமான மேன்மையும் பெரிய மனிதன் என்னும் தன்மையும் அடையாளம் தெரியாதவைகளாக மூழ்கிவிடுகின்றன. (15)GCTam 530.3

    பரிசுத்தஸ்தலம், தேவனுடைய கற்பனை ஆகியவைகளைப் பற்றிய சத்தியங்களை அட்வென்டிஸ்டுகளில் பெரும்பான்மை யானவர்கள் நிராகரித்து, அட்வெந்து இயக்கத்தின் மீதிருந்த அவர்களது விசுவாசத்தை அநேகர் மறுதலித்து, அந்த ஊழியத்துடன் சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களில் சரியற்றதும் முரண்பட்டதுமான நோக்குகளைப் பொருத்தினர். கிறிஸ்துவின் வருகைக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் திரும்பத்திரும்பக் குறிக்கும் தவறுகளுக்குள் சிலர் நடத்தப்பட்டனர். இரண்டாம் வருகையைக் குறிக்கும் தவறுகளுக்குள் சிலர் நடத்தப்பட்டனர். இரண்டாம் வருகையைக் குறிக்கும் தீர்க்கதரிசன காலம் இருக்கவில்லை என்பதைப் பரிசுத்தஸ்தலம் என்னும் பொருளின்மீது இப்போது வீசிக்கொண்டிருக்கும் ஒளி அவர்களுக்குக் காட்டியிருந்திருக்கும். ஆனால் அவர்கள் அந்த ஒளியை விட்டு விலகி, கர்த்தரின் வருகையை எதிர்நோக்கி, அதற்கான நேரத்தைக் குறித்து ஒவ்வொரு தடவையிலும் ஏமாற்றமடைந்தனர். (16)GCTam 531.1

    தெசலோனிக்கேயசபை கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய தவறான நோக்கினைப் பெற்றுக்கொண்டபோது, அவர்களுடைய நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் தேவனுடைய வார்த்தையினால் கவனமாகச் சோதிக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு ஆலோசனை கூறினார். கிறிஸ்துவின் வருகைக்குமுன் நடைபெறவேண்டிய தீர்க்கதரிசன நிகழ்ச்சிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவருடைய நாளில் அவரை எதிர்பார்ப்பதற்கான ஆதாரம் எதுவும் அவர்களுக்கு இல்லை என்பதை அவர் அவர்களுக்குக் காட்டினார். “எவ்விதத்தினாலும்” என்பது அவரது எச்சரிப்பின் வார்த்தையாக இருந்தது. வேதவாக்கியங்கள் அனுமதிக்காத எதிர்பார்ப்பை அவர்கள் வழக்கப்படுத்தினால், தவறான ஒரு செயலைப் பின்பற்றும்படி அவர்கள் நடத்தப்படவேண்டிய நிலை உண்டாகும். அவிசுவாசிகளினால் உண்டாகும் ஏளனத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாக நேரிடும். அதனால் அதைரியத்திற்கு இடமுண்டாக்கக்கூடிய அபாயத்திற்குள்ளாக நேரிடும். அவர்களது இரட்சிப்பிற்கு அத்தியாவசியமான சத்தியங்களின்மீது சந்தேகம் அடையக்கூடிய சோதனைகளுக்கு உள்ளாவார்கள். தெசலோனிக்கேயருக்கு அப்போஸ்தலன் கொடுத்த எச்சரிப்பில் கடைசிக் காலத்தில் வாழுபவர்களுக்கான முக்கியமான பாடம் அடங்கியிருந்தது. கர்த்தருடைய வருகையின் ஒரு குறிப்பான நேரத்தின்மீது தங்களுடைய விசுவாசத்தை வைக்காதவரை, அவர்களால் ஆயத்தம்செய்யும் பணியும் வைராக்கியமும் அக்கரையும் உள்ளவர்களாக இருக்கமுடியாது என்று அநேக அட்வென்டிஸ்டு இயக்கத்தினர் உணர்ந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கைகள் அழிக்கப்படுவதற்கென்று மறுபடியும் மறுபடியும் உணர்ச்சியால் தூண்டப்படும்போது, தீர்க்கதரிசனங்களின் பெரும் சத்தியங்களால் நன்கு உணர்த்தப்படமுடியாத அளவிற்கு அவர்களது விசுவாசம் அப்படிப்பட்ட அதிர்ச்சியைப் பெறுகிறது. (17)GCTam 531.2

    முதலாம் தூதைக் கொடுக்கும் பணியில், நியாயத்தீர்ப்பிற்கான ஒரு குறிப்பிட்ட நேரம்பற்றிய, அந்தத் தூதை அடிப்படையாகக்கொண்டு, கணிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசன காலங்கள் 1844-ம் வருடம் இலையுதிர் காலம் 2300 நாட்களின் முடிவை வைத்திருந்ததானது, கண்டன மற்றதாக இருக்கிறது. அந்தத் தீர்க்கதரிசன காலங்களின் ஆரம்பம், முடிவு ஆகியவைகளைப்பற்றிய புதிய தேதிகளைக் கண்டறிவதற்காகத் திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட முயற்சிகளும், இந்த நிலைகளைத் தாங்குவதற்குத் தேவையாக இருந்த சரியற்ற காரணம் காட்டுதலும், மனங்களை நிகழ்கால சத்தியங்களில் இருந்து தூரமாக நடத்துவது மட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசனங்களை விளக்கும் எல்லா முயற்சிகளின்மீதும் கண்டனத்தை வீசுகிறது. இரண்டாம் வருகைக்கென்று எந்த அளவிற்கு அதிகமாக ஒரு நேரம் குறிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதிகமாக அது சாத்தானின் நோக்கங்களுக்குச் சாதகமாக அமைகிறது. அந்த நேரம் கடந்துசென்றபின் அதற்காகப் பரிந்து பேசுபவர்களுக்கெதிராக, அவன் பரிகாசத்தையும் கண்டனத்தையும் தூண்டிவிட்டு, இப்படியாக 1843, 1844-ல் நிகழ்ந்த பெரும் அட்வெந்து இயக்கத்தின்மீது நிந்தையைச் சுமத்துகிறான். இந்தத் தவறில் பிடிவாதமாக இருப்பவர்கள் இறுதியில் கிறிஸ்துவின் வருகைக்கென்று மிகவும் அதிக தூரமான ஒரு நாளைக் குறிப்படுகின்றனர். இப்படியாக அவர்கள் ஒரு தவறான பாதுகாப்பில் இளைப்பாறும்படி நடத்தப்பட்டு, அது காலம் கடந்துவிட்டது என்கிற வரை, அநேகர் வஞ்சிக்கப்படாதவர்களாக இருக்கமாட்டார்கள். (18)GCTam 532.1

    பண்டைய இஸ்ரவேலர்களின் வரலாறானது அட்வெந்து அமைப்பின் கடந்தகால அனுபவத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு உதாரணமாக உள்ளது. இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்திலிருந்து நடத்தியதைப் போலவே மிகவும் பெரிய அட்வெந்து இயக்கத்திலும் நடத்தினார். எபிரெயர்களின் விசுவாசமானது செங்கடலில் சோதிக்கப்பட்டதுபோலவே, மிகவும் பெரிய அந்த ஏமாற்றத்தினால் அட்வென்டிஸ்டுகளின் விசுவாசமும் சோதிக்கப்பட்டது. அவர்களது கடந்த கால அனுபவத்தில் அவர்களுக்கு வழிகாட்டியிருந்த கரத்தின் மீது அவர்கள் இன்னும் நம்பிக்கை உடையவர்களாக இருந்திருந்தார்களானால், தேவனால் உண்டாகக்கூடிய இரட்சிப்பை அவர்களால் கண்டிருந்திருக்கமுடியும். அந்தப்பணியில் அனைவரும் ஐக்கியப்பட்டவர்களாக இருந்து, 1844-ல் பெற்றுக்கொண்ட முத்தூதை, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அறிவித்திருந்தால், அவர்களது முயற்சிகளுடன் சேர்ந்து கர்த்தரும் பலமாகக் கிரியை செய்திருந்திருப்பார். உலகத்தின்மீது ஒரு ஒளிவெள்ளம் பாய்ந்திருக்கும். பல வருடங்களுக்கு முன்பாகவே பூமியின் குடிகள் எச்சரிக்கப்பட்டிருந்திருப்பார்கள். இறுதிப்பணி முடிவடைந்திருக்கும். இயேசு கிறிஸ்துவும் அவருடைய மக்களின் மீட்பிற்காக வந்திருந்திருப்பார்! (19)GCTam 533.1

    இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரியவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை. அவர்களை நேரடியாகக் கானான் தேசத்திற்குள் நடத்தி, ஒரு பரிசுத்தமான மகிழ்ச்சிமிக்க மக்களாக மாற்றியமைக்க அவர் விரும்பினார். ஆனால் அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போயிற்று. (எபி. 3:19). மருளவிழுகையினால் அவர்கள் வனாந்தரத்தில் அழிந்தார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேசத்தில் பிரவேசிக்கும்படி மற்றவர்கள் எழுப்பப்பட்டனர். அதேவிதமாகக் கர்த்தருடைய வருகையும் நீண்ட காலம் தாமதிக்கப்படவேண்டும் என்பதும், பாவமும் வருத்தமுமிக்க இந்த உலகில் அவரது ஜனங்கள் அநேக வருடங்கள் இருக்கவேண்டும் என்பதும், தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை. ஆனால் அவநம்பிக்கை தேவனிடமிருந்து அவர்களைப் பிரித்தது. அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்த பணியை அவர்கள் செய்ய மறுத்ததினால், அந்தத் தூதை அறிவிக்க மற்றவர்கள் எழுப்பப்பட்டனர். எச்சரிப்பைக் கேட்பதற்குப் பாவிகளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், தேவனுடைய வாதை ஊற்றப்படுவதற்குமுன் அவருக்குள் ஒரு அடைக்கலத்தைக் காணவும் வேண்டி, இந்த உலகத்தின்மீதுள்ள இரக்கத்தினால், இயேசு அவரது வருகையைத் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறார்.(20)GCTam 533.2

    கடந்துபோன காலங்களில் இருந்தபடியே அந்தக் காலங்களில் உள்ள பாவங்களையும் தவறுகளையும் கண்டிக்கும் ஒரு சத்தியம் முன்வைக்கப்படுவது எதிர்ப்பை எழும்பச்செய்யும். “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்”-யோவான் 3:20. மனிதர்கள் தங்களின் நிலை வேதவாக்கியத்திற்கு இசைவானதாக இல்லை என்பதைக் காணும்போது, தங்களது அனைத்துத் தவறான வழிகளின் நிலைமையையும் தொடர அநேகர் தீர்மானம்செய்து, பெரும்பான்மை இல்லாத சத்தியத்தின் சார்பில் நிற்பவர்களின் சுபாவத்தையும் நோக்கத்தையும் தீய ஆவியுடன் தீவிரமாகத் தாக்குகின்றனர். யுகங்கள் நெடுகிலும் இதே கொள்கை தொடரப்பட்டுள்ளது. இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் எலியா என்று அறிவிக்கப்பட்டது. எரேமியா ராஜ துரோகி என்னப்பட்டான். அந்தநாள்முதல் இந்தநாள்வரை சத்தியத்திற்கு உண்மையான பக்தி உள்ளவர்களாக இருந்தவர்கள் துரோகம் செய்பவர்கள் என்றும், மதவிரோதிகள் என்றும், பிரிந்துசெல்லும் குணமுடையவர்கள் என்றும், பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர். மேலும் அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனங்களை ஏற்றுக்கொள்ள நம்பிக்கையில்லாத திரள்கூட்டமானவர்கள் நாகரிகமான பாவங்களைக் கண்டிப்பதற்குத் துணிபவர்களுக்கெதிராக கேள்விக்கிடமற்ற எளிதில் நம்பக்கூடிய குற்றச்சாட்டுகளைப் பெறுவார்கள். இப்படிப்பட்ட ஆவியானது மேலும்மேலும் அதிகரிக்கும். நாட்டின் சட்டங்கள் தேவனுடைய கற்பனைகளுடன் முரண்படும்போது, தேவனுடைய கற்பனைகள் அனைத்திற்கும் எவர்கள் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் தீங்குசெய்பவர்களாக எண்ணப்பட்டு, நிந்தையையும் தண்டனையையும் சந்திக்கத் துணியவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது. (21)GCTam 534.1

    இதன் காரணமாக சத்தியத்தின் ஊழியக்காரனின் கடமை என்ன? அதன் உரிமைகளிலிருந்து விலகிச்செல்லுவதற்கும் அல்லது தடுப்பதற்கும் மனிதர்களை எழுப்புவதே அதன் விளைவாக இருப்பதினால், சத்தியம் பிரசங்கிக்கப்படக்கூடாததாக உள்ளது என்று அவன் தீர்மானிக்கலாமா? அப்படி அல்ல! அது முந்திய சீர்திருத்தக்காரர்கள் அடைந்திருந்ததைவிட அதிகமான எதிர்ப்பை நிறுத்திவைப்பதற்கு அதிகப்படியான எவ்விதமான காரணமும் அவனிடம் இல்லை. பின்வரும் தலைமுறையினரின் நன்மைக்காக பரிசுத்தமானவர்கள், இரத்தசாட்சிகள் ஆகியோரின் விசுவாச அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. தேவனுக்குச் சாட்சியாக நிற்கும்படி அழைக்கப்பட்டுள்ளவரின் தைரியத்தைத் தூண்டிவிடுவதற்காக பரிசுத்தத்திற்கான அந்த உயிருள்ள உதாரணங்களும் அசையாத நேர்மையும் இறங்கி வந்துள்ளன. அவர்கள் தங்களுக்கு மட்டுமென்று கிருபையையும் சத்தியத்தையும் பெற்றுக்கொள்ளாமல், அவர்கள் மூலமாக உலகம் தேவனைப்பற்றிய அறிவினால் ஒளியடையவேண்டும் என்பதற்காக அவைகளைப் பெற்றிருந்தனர். இந்தத் தலைமுறையிலுள்ள தேவனுடைய ஊழியக்காரர்களுக்காக அவர் ஒளியைக் கொடுத்திருக்கிறாரா? அப்படியானால் அவர்கள் அந்த ஒளியை உலகத்தில் பிரகாசிப்பதற்காகச் செயலாற்றவேண்டும். (22)GCTam 534.2

    “இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.” “மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்”-எசே. 3:7 2:7. “சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசா. 58:1) என்பது இந்த நேரத்தில் தேவனுடைய ஊழியக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாக உள்ளது. (23)GCTam 535.1

    “மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்” (எசே. 3:17-19) என்று கூறும் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கும் பக்திவிநயமும், பயங்கரமுமிக்க பொறுப்பு இஸ்ரவேலின் தீர்க்கதரிசிக்கு இருந்ததுபோன்ற பொறுப்பு—சத்தியத்தின் ஒளியைப் பெற்றுக் கொண்டவனுக்கு அவனது வாய்ப்பு பிரிவடைந்துசெல்லும் தூரமெங்கிலும் அறிவிக்கின்ற பக்திவிநயமும், பயங்கரமுமிக்க பொறுப்பாக உள்ளது. (24)GCTam 535.2

    சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுவதும் அதைப் பறைசாற்றுவது மாகிய இரு காரியங்களிலும் உள்ள பெரும் தடை என்னவென்றால், அதில் வசதியின்மையும் அவமானமும் சம்பந்தப்பட்டுள்ளது என்னும் உண்மை ஆகும். சத்தியத்திற்கு எதிராக உள்ள இந்த ஒரே ஒரு வாதம் மட்டும் அதன் பரிந்துபேசுபவர்களால் ஒதுபோதும் மறுக்கமுடியாததாக உள்ளது. ஆனால் கிறிஸ்துவின் உண்மையான அடியார்களை இது அதைரியப்படுத்துவதில்லை. அவர்கள் கூறும் சத்தியம் மக்களால் விரும்பப்படுவதற்காகக் காத்திருப்பதில்லை. அவர்களது கடமையைப்பற்றி மனதிருப்தி அடைந்தவர்களாக அவர்கள் நன்கு யோசித்து சிலுவையை ஏற்றுக்கொண்டு, “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது”-2 கொரி. 4:17. “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷ ங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்”—என்று பண்டைய முதியவரான பவுல் அப்போஸ்தலனுடன் சேர்ந்து எண்ணுகின்றார். (25)GCTam 536.1

    மத சம்பந்தமான காரியங்களில், கொள்கைகளைவிட சட்டங்களின்படிச் செயல்படுபவர்கள், அவர்களது தொழில் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் தங்களுடைய இருதயத்தில் உலகத்தை சேவிக்கிறவர்களாகவே உள்ளனர் என்பது சரியாக இருக்கிறது என்பதினாலேயே நாம் சரியானதைத் தெரிந்துகொண்டு விளைவுகளைத் தேவனிடத்தில் விட்டுவிடவேண்டும். கொள்கை, விசுவாசம், துணிவு ஆகியவை உள்ள மனிதர்களுக்கு உலகம் அதன் பெரும் சீர்திருத்தத்திற்காக கடமைப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மனிதர்களால் இந்தக் காலத்திற்குரிய சீர்திருத்தங்களின் ஊழியம் முன்சென்றாக வேண்டும். “நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்புத் தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்” (ஏசா. 51:7,8) என்கிறார் ஆண்டவர். (26)GCTam 536.2