Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    25—மாற்றப்பட முடியாத தேவனுடைய கற்பனைகள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 433—450)

    “பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது;”-வெளி. 11:19. பரிசுத்தஸ்தலத்தின் இரண்டாவது அறையான மகா பரிசுத்தஸ்தலத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி இருக்கிறது. பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலாக உள்ளவைகளாக பூமியின் ஆசரிப்புக்கூடாரத்தின் ஊழியத்திற்குப் பயன்பட்டிருந்த இந்த அறை, பரிசுத்தஸ்தலத்தைச் சுத்திகரிக்கும் பாவநிவாரண நாள் ஒன்றில் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. எனவே, பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது என்னும் அறிவிப்பானது பாவநிவாரணப்பணியைச் செயல்படுத்தும்படி கிறிஸ்து பரலோக மகா பரிசுத்தஸ்தலத்தில் கி.பி- 1844-ல் பிரவேசித்ததைச் சுட்டிக்காட்டுகிறது. பிரதான ஆசாரியர், அவரது ஊழியத்தைச் செய்வதற்காக மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தபோது, விசுவாசதினால் தங்களின் பிரதான ஆசாரியரைப் பின்தொடர்ந்தவர்கள், அங்கு அவரது உடன்படிக்கையின் பெட்டியைக் கண்டனர். பரிசுத்தஸ்தலம் என்னும் பொருள்பற்றி அவர்கள் ஆராய்ந்து, இரட்சகரின் ஊழியத்திலுள்ள மாற்றத்தைப் புரிந்துகொண்டதினால், தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக பாவிகளின் சார்பாகத் தமது இரக்கத்துடன் அவர் பரிந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டனர். (1)GCTam 503.1

    பூமியின் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த உடன்படிக்கையின் பெட்டியில் இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளின் மீது தேவனுடைய பிரமாணங்களாகிய கற்பனைகள் எழுதப்பட்டிருந்தன. உடன்படிக்கைப் பெட்டியானது கற்பனைகள் எழுதப்பட்டிருந்த கற்பலகைகளைக் கொண்டிருந்த சாதாரணமானதாக இருந்தது. அதனுள் வைக்கப்பட்டிருந்த தெய்வீகப் பிரமாணங்களின் பிரசன்னம் அதற்கு மதிப்பையும் பரிசுத்தத்தையும் கொடுத்து, பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டபோது, அவரது உடன்படிக்கையின்பெட்டி காணப்பட்டது. பரலோக ஆலயத்தில் இருக்கும் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் சீனாய் மலையின்மீது இடிமுழக்கங்களுக்கிடையில் தேவனுடைய சொந்த விரலினால் கற்பலகைகளின்மீது எழுதப்பட்ட கற்பனை தெய்வீகக்கற்பனை, பரிசுத்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. (2)GCTam 503.2

    பரலோக பரிசுத்தஸ்தலத்தில் உள்ள தேவனுடைய கற்பனை பெரும் மூலப்படிவமாக உள்ளது. கற்பலகைகளில் எழுதப்பட்டு, மோசேயால் பதிக்கப்பட்ட அது, பிழையில்லாத அதன் மறுபதிப்பாக இருந்தது. இந்த மிக முக்கியமான பொருள்பற்றிப் புரிந்துகொண்டவர்கள் இவ்வாறாக தெய்வீகப்பிரமாணத்தின் பரிசுத்தமிக்க மாறாத தன்மையைக் காணும்படி நடத்தப்பட்டனர். “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத் திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது” (மத்தேயு 5:18) என்ற இரட்சகரின் வார்த்தைகளின் வல்லமையை, அதற்குமுன் ஒருபோதும் இல்லாதவிதத்தில் அவர்கள் கண்டனர். தேவனுடைய கற்பனை அவரது சுபாவத்தின் வெளிப்படுத்தலாகவும், மறுபதிப்பாகவும் இருந்தது. பரலோகத்திலுள்ள உண்மையான சாட்சியாக என்றென்றும் நிலைத்து நின்றாக வேண்டும். எந்த ஒரு கற்பனையும் பயனற்றதென்றோ செல்லாததென்றோ அவற்றுள் இல்லை. ஒரு எழுத்தோ அல்லது எழுத்தின் உறுப்போ மாற்றப்படவில்லை. “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.” “அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்”-சங். 119:89; 111:7,8. (3)GCTam 504.1

    அந்தப் பிரமாணங்களின் இதயம் போன்ற இடத்தில் நான்காவது பிரமாணம், “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பா யாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவ னானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” (யாத். 20:8-11) என்று முதலில் அறிவிக்கப்பட்டதுபோலவே உள்ளது. (4)GCTam 504.2

    தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்த வேத மாணாக்கர்களின் இருதயங்களை தேவனுடைய ஆவி உணர்த்தியது. சிருஷ்டிகளின் இளைப்பாறும் நாளைக் கவனிக்காமல் விட்டுவிட்டதினால், அவர்கள் அறியாமையின் காரணமாக இந்தக் கற்பனையை மீறியிருந்தனர் என்னும் மன உணர்த்துதல் அவர்கள்மீது வந்தது. தேவன் பரிசுத்தப்படுத்தியிருந்த நாளுக்குப்பதிலாக, வாரத்தின் முதல்நாளை ஆசரிப்பதற்கான காரணத்தை அவர்கள் சோதிக்கத் தொடங்கினர். நான்காவது கற்பனை நீக்கப்பட்டதற்கான ஆதாரத்தை வேதவாக்கியத்திலிருந்து அவர்களால் காணமுடியவில்லை. ஏழாம் நாளைப் பரிசுத்தமாக்கியிருந்த முதல் ஆசீர்வாதம் ஒருபோதும் நீக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதின்படி நடக்க அவர்கள் நேர்மையுடன் தேடினார்கள். இப்பொழுது அவர்கள் தாங்களே அவரது பிரமாணத்தை மீறியிருப்பதைக் கண்டபோது துயரம் அவர்களது இருதயங்களை நிரப்பிற்று. அவரது ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிப்பதினால் தேவனுக்கு உண்மையாக இருப்பதை வெளிக்காட்டினார்கள். (5)GCTam 505.1

    அவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்க்கும்படிச் செய்யப்பட்ட முயற்சிகள் ஏராளமானதாகவும் ஆர்வமிக்கதாகவும் இருந்தன. பூமிக்குரிய பரிசுத்தஸ்தலம் பரலோக பரிசுத்தஸ்தலத்தின் சாயலாக இருந்தது என்பதையும், உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த கற்பனையின் மிகச்சரியான மறுபதிப்பாக இருந்தது என்பதையும் ஒருவராலும் காணாமலிருக்க முடியவில்லை. பரலோக பரிசுத்தஸ்தலத்தைப்பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வது என்பது தேவனுடைய கற்பனையின் உரிமைகளையும் நான்காவது கற்பனையில் உள்ள ஓய்வுநாள் பிரமாணத்திலுள்ள கடமைகளையும் அங்கீகரிப்பதில் சம்பந்தப்பட்டுள்ளது. பரலோக பரிசுத்தஸ்தலத்தில் நடைபெறும் கிறிஸ்துவின் ஊழியத்தை இசைவாக வெளிப்படுத்தும் வேதவாக்கியத்திற்கெதிரான கசப்பான எதிர்ப்பின் இரகசியம் இங்குதான் உள்ளது. தேவன் திறந்த கதவை அடைக்கவும், அடைத்த கதவைத் திறக்கவும் மனிதர்கள் வகைதேடினார்கள். “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; ... இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்”-வெளி. 3:7,8. கிறிஸ்து கதவைத் திறந்திருந்தார். அல்லது மகா பரிசுத்தஸ்தலத்திலுள்ள ஊழியத்தை ஆரம்பித்தார். பரலோக பரிசுத்தஸ்தலத்தின் திறக்கப்பட்டிருந்த வாசல் வழியாக ஒளி பிரகாசித்துக்கொண்டிருந்தது. அங்கு புனிதமாக வைக்கப்பட்டிருந்த கற்பனைகளுள், நான்காவது கற்னையும் பேணிப் பாதுகாக்கப்பட்டிருப்பதானது எனக்குக் காட்டப்பட்டது. தேவன் எதை நிலை நாட்டியிருந்தாரோ, அதை எந்த மனிதனாலும் தூக்கியெறிந்து வீசிவிட முடியாது. (6)GCTam 505.2

    கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியம் பற்றிய கற்பனையின் நித்தியத்துவ சத்தியத்தை ஏற்றிருந்தவர்கள் இவை வெளி 14-ம் அதிகாரத்தில் வெளிக்காட்டப்பட்ட சத்தியங்கள் என்று அறிந்து கொண்டனர். இந்த அதிகாரத்தில் அமைந்துள்ள தூதுதான், கர்த்தரின் இரண்டாம் வருகைக்கென்று பூமியில் குடியிருப்பவர்களை ஆயத்தப்படுத்தும் மூன்றுவிதமான எச்சரிப்புகளை உடையதாக இருந்தது. அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது என்னும் அறிவிப்பு, மனிதனுடைய இரட்சிப்பிற்கான கிறிஸ்துவின் ஊழியத்தின் முடிவைச் சுட்டிக்காட்டுகிறது. இரட்சகரின் பரிந்துபேசுதல் நிறுத்தப்பட்டு, தமது மக்களைத் தம்முடன் எடுத்துக்கொள்ள அவர் திரும்ப வரும்வரைக்கும் பறைசாற்றவேண்டிய ஒரு சத்தியமாக அது உள்ளது. கி.பி.1844-ல் ஆரம்பமான நியாயத்தீர்ப்பின் பணி உயிருள்ளவர்கள், மரித்தவர்கள் ஆகிய அனைவரது வழக்குகளும் முடியும்வரை தொடர்ந்து செல்லவேண்டியதாக உள்ளது. எனவே, மனிதனின் தவணையின் காலம் முடிவடையும்வரை அது தொடரும். மனிதர்கள் நியாயத்தீர்ப்பில் நிற்பதற்கென்று ஆயத்தப்படும்படி அந்தத் தூது, தேவனுக்குப்பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள் என்று அவர்களுக்குக் கட்டளை கொடுக்கிறது. இந்தத் தூதுகளை ஏற்றுக்கொண்டதின் விளைவுகள், தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிற பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்ற வார்த்தையால் கொடுக்கப்பட்டது. நியாயத் தீர்ப்பிற்கு ஆயத்தமாக இருப்பதற்கு மனிதர்கள் தேவனுடைய கற்பனை களைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது. நியாயத் தீர்ப்பில் பண்பை நிர்ணயம் செய்யும் சட்டமாகக் கற்பனை இருக்கும். “எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத் துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப் பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.” “தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்” (ரோமர் 2:12,16) என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவிக்கிறார். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதற்கு விசுவாசம் அத்தியாவசியமாக உள்ளது. ஏனெனில் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” “விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே”-எபி. 11:6; ரோமர் 14:23. (7)GCTam 506.1

    தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தி, அவரை வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்ற தொழும்படி, முதலாம் தூதனால் மனிதர்கள் அழைக்கப்படுகிறார்கள். இதைச்செய்வதற்கு அவர்கள் “அவரது கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே” (பிர.12:13) என்று ஞானி கூறுகிறான். தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாத தொழுகை அவருக்குப் பிரியமானதாக இருக்காது. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூருவதாகும். “வேதத்தைக் (கற்பனையை) கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது” -1யோவான் 5:3; நீதி. 28:9. (8)GCTam 507.1

    தேவன் சிருஷ்டிகராக இருக்கிறார் என்பதும் மற்ற உயிரினங்கள் அனைத்தும், அவருக்குக் கடமைப்பட்டவைகளாக உள்ளன என்பதும், அவரைத் தொழுகின்ற கடமைக்கு அடிப்படையாக உள்ளன. வேதாகமத்தில் எங்கெல்லாம் அஞ்ஞானிகளின் தெய்வங்களுக்கு மேலாக அவருக்கு பக்தியும் தொழுகையும் செலுத்தப்படவேண்டும் என்ற அவரது உரிமைபாராட்டுதல் முன்வைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அவரது படைக்கும் வல்லமை அத்தாட்சியாக எடுத்துக்காட்டப்படுகிறது. “சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.” “இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.” “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.” “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார் கள்” (சங். 96:5; ஏசாயா 40:25,26; 45:18; சங். 100:3; 95:6; வெளி. 4:11) என்று பரலோகத்தில் தேவனைத் தொழுதுகொள்ளும் பரிசுத்தவான்கள் அவர்களது தொழுகை ஏன் அவருக்கு உரித்தானது என்கிற காரணத்தையும் கூறுகின்றனர்.(9)GCTam 507.2

    வெளி. 14-ம் அதிகாரத்தில் சிருஷ்டிகரைத் தொழுதுகொள்ளும்படி மனிதர்கள் அழைக்கப்படுகின்றனர். முத்தூதின் பலனாக ஒரு மக்கள் கூட்டம் தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்ளுவதை தீர்க்கதரிசனம் காட்சிக்குக் கொண்டுவருகிறது. இந்தக் கற்பனைகளில் ஒன்று தேவன்தான் சிருஷ்டிகர் என்று சுட்டிக்காட்டுகிறது. “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லா வற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” (யாத். 20:8-11) என்று நான்காவது கற்பனை அறிவிக்கிறது. “என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு, அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்” (எசே. 20:20) என்று மேலும் கர்த்தர் ஓய்வுநாளைப்பற்றிக் கூறுகிறார். இதற்கான காரணம் என்னவெனில், “அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்” (யாத். 31:17) என்பதாகும். (10)GCTam 508.1

    ஓய்வுநாள் சிருஷ்டிப்பின் நினைவுச்சின்னம் என்பதின் முக்கியத்துவம் என்னவெனில், தொழுகை தேவனுக்குரியது என்பதற்கான உண்மையான காரணத்தை அது எப்பொழுதும் முன்வைக்கிறது. ஏனெனில் அவர் நமது சிருஷ்டிகரும் நாம் அவரது சிருஷ்டிகளுமாக இருக்கிறோம். எனவே, தெய்வீகத் தொழுகையின் அஸ்திவாரத்திலேயே ஓய்வுநாள் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அது இந்தப் பெரும் சத்தியத்தை உணர்த்தக்கூடிய விதத்தில் போதிக்கிறது. வேறு எந்த அமைப்புகளும் இதைச் செய்வதில்லை. தெய்வீகத்தைத் தொழுவதற்கான உண்மையான அடிப்படை ஏழாம்நாளில் தொழுவதில் மட்டுமாக இல்லாமல், சகலவிதமான தொழுகைகளும் சிருஷ்டிகருக்கும் சிருஷ்டிகளுக்கும் இடையில் உள்ள மேலான (உறவின்) மேன்மையில் காணப்படுகிறது. இது ஒருபோதும் வழக்கில் இல்லாமல் நீங்கிப்போகமுடியாததாகவும் ஒருபோதும் மறக்க முடியாததாகவும் உள்ளது.—J.N. Andrews History of the Sabbath,Chapter 27. மனிதர்களின் மனங்களின் முன் இந்த சத்தியத்தை எப்பொழுதும் வைப்பதற்காகவே, தேவன் ஏதேனில் ஓய்வுநாளை ஏற்படுத்தினார். நாம் ஏன் அவரைத் தொழவேண்டும் என்பதற்கான காரணமானது யாதெனில், அவர் நமது சிருஷ்டிகராக இருக்கிறார் என்பது தொடரும்வரை, ஓய்வுநாள் அவரது நினைவுச்சின்னமாகத் தொடரும். ஒய்வுநாள் உலகம் முழுவதிலும் அனைவராலும் ஆசரிக்கப்பட்டிருந்தால், பக்திக்கும் தொழுகைக்கும் உரியவராகக் கிறிஸ்து இருக்கிறார் என்று மனிதர்களின் எண்ணங்களும் பற்றுகளும் சிருஷ்டிகரின்பால் நடத்தப்பட்டிருந்தால், ஒரு விக்கிரக ஆராதனைக்காரனோ ஒரு நாத்திகனோ ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவனோ ஒருபோதும் இருந்திருக்கமாட்டான். ஓய்வுநாளை ஆசரிப்பது வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுக்களையும் உண்டாக்கின மெய் தேவனின் மீதுள்ள உண்மையான விசுவாசத்தின் அடையாளமாக இருக்கிறது. மனிதர்கள் தேவனைத் தொழுது அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடும் தூது, சிறப்பாக நான்காவது கற்பனையைக் கைக்கொள்ளும்படி அவர்களை அழைக்கிறது. (11)GCTam 508.2

    தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத் தையும் காத்துக்கொள்ளுகிறவர்களுடன் ஒப்பிடும்படியாக மூன்றாம் தூதன் வேறொரு வகுப்பினர்களிடம் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு எதிரான பக்திவிநயமான ஒரு எச்சரிப்பை இவ்விதமாகக் கூறியிருக்கிறான். “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிர மாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்”-வெளி. 14:9,10. இந்தத் தூதைப் புரிந்துகொள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள அடையாளங்களைப்பற்றிய ஒரு சரியான விளக்கம் அவசியமாக உள்ளது. மிருகம், அதன் சொரூபம் அதன் அடையாளம் ஆகியவையால், என்ன எடுத்துக்காட்டப்படுகிறது? (12)GCTam 509.1

    இந்த அடையாளங்களை எடுத்துக்காட்டும் தீர்க்கதரிசனத்தின் பாதை வெளி. 12-ம் அதிகாரத்தில், கிறிஸ்துவை அவரது பிறப்பின்போது அழிக்க வகைதேடின வலுசர்ப்பத்துடன் ஆரம்பமாவது காணப்படுகிறது. வலுசர்ப்பம் என்பது சாத்தான் என்று கூறப்பட்டுள்ளது. வெளி. 12:9. ஆனால் முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ சகாப்தத்தின் போது, கிறிஸ்துவுடனும் அவரது ஜனங்களுடனும் போர்செய்து கொண்டிருக்கும் சாத்தானின் பிரதிநிதியாக ரோமப் பேரரசு இருந்தது. அப்போது அஞ்ஞான மார்க்கம் நிலவியிருந்தது. இப்படியாக வலுசர்ப்பமானது முதலாவது சாத்தானை எடுத்துக்காட்டும்போது, இரண்டாவது அர்த்தத்தில் அஞ்ஞான ரோம அரசின் அடையாளமாக உள்ளது. (13)GCTam 510.1

    வெளி. 13-ம் அதிகாரத்தில் (1-10) வேறொரு மிருகம் விவரிக்கப்பட்டுள்ளது. அது சிறுத்தையைப்போல் இருந்தது. வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. பெரும்பாலான புரொட்டஸ்டாண்டுகள் நம்பியிருந்ததுபோல மிருகம், ஒரு காலத்தில் பழங்கால ரோமப் பேரரசு வைத்திருந்த வல்லமையையும் சிங்காசனத்தையும், அதிகாரத்தையும், போப்புமார்க்கம் பிற்காலத்தில் அடைந்துகொண்டது என்பதை இந்த அடையாளம் எடுத்துக்காட்டுகிறது. சிறுத்தையைப் போலிருந்த மிருகம்பற்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன்வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது”-வெளி. 13:5-7. தானியேலின் தீர்க்கதரிசனம் ஏழாம் அதிகாரத்தில் காணப்படும் சின்னக்கொம்பைப் பற்றிய வர்ணனைக்கு ஏறத்தாழ இசைவாக இருக்கும் இந்தத் தீர்க்கதரிசனம் கேள்விக்கிடமின்றி போப்பு மார்க்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. (14)GCTam 510.2

    “நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது” என்பது காலமும் காலங்களும் அரைக்காலமுமாகிய மூன்றரை வருடங்கள் அல்லது 1260 நாட்கள் என்று தானியேல் 7-ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது, ரோமன் கத்தோலிக்க வல்லமை தேவனுடைய மக்களை ஒடுக்கவேண்டிய அதே காலமாக இருந்தது. முந்தின அதிகாரங்களில் கூறப்பட்டதுபோல, போப்புமார்க்கம் கி.பி.538-ல் ஆரம்பமாகி, கி.பி.1798-ல் முடிவடைந்தது. போப்புமார்க்கம் நீக்கப்பட்டு, பிரெஞ்சு இராணுவத்தினால் போப்பு சிறையாக்கப்பட்டபோது, போப்புமார்க்கம் சாவுக்கேதுவான அதன் காயத்தை அடையவே, சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான் என்னும் திட்டமான தெய்வீக முன்னறிவிப்பு நிறைவேறியது! (15)GCTam 510.3

    இந்தக் கட்டத்தில் வேறொரு அடையாளம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. “பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது”-வெளி. 13:11. அந்த மிருகத்தின் தோற்றம் அது எழும்பிய விதம் ஆகிய இரண்டும் சேர்ந்து அது எந்த நாட்டை எடுத்துக்காட்டுகிறதோ அது, இதற்கு முன் எடுத்துக்காட்டியிருந்த அடையாளங்களைப்போல இல்லாததாக இருந்தது. உலகத்தை ஆட்சிசெய்த பெரும் ராஜ்யங்கள் தானியேல் தீர்க்கதரிசிக்கு, கொல்லும் தன்மையுடைய மிருகங்களாகவும், வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தில் அடித்தபோது (தானி. 7:2) எழும்பினதாகவும் காட்டப்பட்டது. வெளி. 17-ம் அதிகாரத்தில் தண்ணீர்கள் என்பது ஜனங்களையும், கூட்டங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும் குறிப்பிடுகின்றது என்று தேவதூதன் விளக்கினான். (வெளி. 17:15). காற்றுகள் என்பது யுத்தத்தின் ஒரு அடையாளமாக உள்ளது. பெரிய சமுத்திரத்தின்மீது வீசியது என்பது, இராஜ்யங்கள் அவைகளின் வல்லமையைப் போரினாலும் புரட்சியினாலும் அடைந்துகொண்டதை எடுத்துக்காட்டுகிறது. (16)GCTam 511.1

    ஆனால் ஆட்டுக்குட்டியைப் போன்ற கொம்புகளை உடையதாக இருந்த மிருகம், பூமியின்மீதிருந்து எழும்பிவருவதாகக் காணப்பட்டது. தன்னை அமைத்துக்கொள்ளுவதற்காக, மற்ற வல்லமைகளைக் கவிழ்ப்பதற்குப்பதிலாக, இதற்குமுன் குடியேற்றமில்லாத இடத்தில் இருந்து இவ்விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்த இந்த நாடு, மெதுவாகவும் சமாதானமாகவும் எழும்பியாக வேண்டும். அப்படியானால், ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்த கூட்டமான, பழையஉலகத்தின் நாடுகளுக்கிடையிலிருந்து ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள்? பாஷைக்காரர் களாகிய கலங்கும் சமுத்திரத்திலிருந்து அது தோன்றியிருந்திருக்கமுடியாது. அது மேற்குக் கண்டத்தில் தேடப்படவேண்டும் (ஏனைய கண்டங்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளால் ஆளப்பட்டிருந்தன). (17)GCTam 511.2

    உலகின் கவனத்தைக் கவர்ந்து, பலம், பெரிய தன்மை ஆகியவைகளை வாக்குத்தத்தம் செய்துகொண்டு, உலகத்தின் எந்த நாடு கி.பி.1798-ல் வல்லமையானதாக எழுந்தது? எந்த ஒரு நாட்டின் இந்த அடையாளமானது கேள்விக்கிடமின்றிப் பொருந்தக்கூடியதாக உள்ளது? தீர்க்கதரிசனத்தில் உள்ள குறிப்புகளுடன் ஒரே ஒரு நாடு தான். ஆம். அது தவறில்லாதவிதத்தில் அமெரிக்க நாட்டைச் சுட்டிக்காட்டுகிறது! பரிசுத்த வேதவாக்கியங்களை எழுதினவரின் அதே எண்ணங்கள் மறுபடியும் மறுபடியும் தோன்றினதால், ஏறத்தாழ அதே வார்த்தைகளை இந்த நாட்டின் எழுச்சியையும் வளர்ச்சியையும் பற்றி விவரிக்கும்போது புகழ்பெற்ற பேச்சாளரும் வரலாற்று ஆசிரியருமான ஒருவர் கீழ்க்கண்ட வார்த்தைகளால் வர்ணித்தார். “அந்த மிருகம் பூமியிலிருந்து எழும்பி வருவதாகக் காணப்பட்டது.” மொழிபெயர்ப்பாளர்களின் கருத்துப்படி எழும்பியிருத்தல் என்று இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொல், எழுத்தின்படி ஒரு செடி வளர்வது அல்லது உயர எழுவது என்பதாக அடையாளப்படுத்துகிறது. இந்த நாடு இதற்குமுன், மக்கள் குடியில்லாமலிருந்த இடத்திலிருந்து எழும்பியாக வேண்டும் என்பதை நாம் கண்டிருக்கிறோம், ஐக்கிய அமெரிக்க நாட்டின் வளர்ச்சியைப்பற்றி ஒரு முன்னணி எழுத்தாளர் விவரிக்கும்போது, : “இல்லாமையிலிருந்து மேலுயர்ந்துவரும் அதன் மர்மம் என்றும், பேசாத ஒரு விதையைப் போல நாம் ஒரு பேரரசாக வளர்ந்தோம்” என்றும் கூறுகிறார்.--Townsend,The New World Compared With The Old,Page 162. “பூமியின் மௌனத்திற்கிடையில் அதன் வல்லமையையும், பெருமையையும் சேர்த்துக்கொண்டு உயரும் ஒரு ஆச்சரியமான நாடாக அது உள்ளது” என்று ஐக்கிய அமெரிக்காவைப்பற்றி 1850 —ல் ஒரு ஐரோப்பியப் பத்திரிக்கை எழுத்தாளர் கூறினார்.--The Dublin Nation. லெய்டன் என்னும் ஒரு சிறு சபையினர் “மனச்சாட்சியின் சதந்திரத்தை அனுபவிப்பதற்காக இருளின் எதிர்ப்பு இல்லாத எதேச்சாதிகார ஆவியின் நடமாட்டமில்லாத இடத்தில், தூரமாக பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு இளைப்பாறும் இடத்தைக் கண்டார்களா? இதோ சமாதானமான, வெற்றி உள்ள, வலிமைமிக்க இடத்தைப் பாருங்கள்.... அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக் கொடிகளைத் தாங்கி இருந்தனர்” என்பதாக தமது பரதேசப் பயண அமைப்பாளர்களைப்பற்றிய சொற்பொழிவில் எட்வர்ட் எவரெட் என்பவர் கூறினார்.—Speech delivered at Plymouth,Massachusetts,Dec. 22,1824, page 11. (18)GCTam 511.3

    அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக, இரண்டு கொம்புகளை உடையதாக இருந்தது. ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான கொம்புகள், இளமை களங்கமின்மை சாதுவான தன்மை ஆகிய ஐக்கிய அமெரிக்காவின் சுபாவத்துக்குப் பொருத்தமான தன்மைகளை உடையதாக, 1798-ல் எழும்பிவருவதாக தீர்க்கதரிசிக்கு எடுத்துக்காட்டப்பட்டது. தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, அரசாங்கத்தின் ஒடுக்குதல், குருமார்களின் சகிப்புத்தன்மையற்ற தன்மை (பலாத்காரம்) ஆகியவைகளிலுமிருந்து ஒரு புகலிடம் கண்டடைந்து, அவர்கள் சமூக சுதந்திரம், சமயச் சுதந்திரம் என்னும் பரந்த அஸ்திவாரத்தின்மீது ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தீர்மானித்தனர். சகல மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியில் நாட்டம் ஆகியவைகளில் வேறுபடுத்தமுடியாத உரிமைகளைப் பெற்றவர்களாக உள்ளனர். ஒட்டெடுப்பின் மூலமாகத் தெரிந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள், சட்டங்களை இயற்றி, அவைகளை நடைமுறைப்படுத்தலாம் என்கிற சுயஅரசு என்னும் உரிமையை மக்களுக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் செய்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனச்சாட்சியின் விருப்பப்படி தேவனைத் தொழும் உரிமையாகிய சமயச் சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுக் கோட்பாடும், புரொட்டஸ்டாண்டு கோட்பாடும் அந்த நாட்டின் அடிப்படைக் கொள்கைகள் ஆயின. இந்தக் கொள்கைகள் அந்த நாட்டின் வல்லமை, செழுமை ஆகியவைகளின் இரகசியமாக இருக்கின்றன. கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களும் காலின் கீழிட்டு மிதிக்கப்பட்ட வர்களுமாயிருந்தவர்கள், ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இந்த நாட்டை நோக்கித் திரும்பினர். லட்சக்கணக்கானவர்கள் அதன் கரைகளைத் தேடி வந்தடைந்தனர். பூமியின் மிகுந்த வல்லமையுள்ள நாடுகளில் ஒன்று என்ற இடத்தைப் பற்றும்படி ஐக்கிய அமெரிக்க உயர்ந்தெழுந்திருக்கிறது. (19)GCTam 512.1

    ஆனால் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகக் கொம்புகளை உடையதாக இருந்த அந்த மிருகம் வலுசர்ப்பத்தைப்போல் பேசினது. “அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று”- வெளி. 13:11-14. (20)GCTam 513.1

    ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான கொம்பும், வலுசர்ப்பத்தைப் போன்ற பேச்சும் ஆகிய அடையாளங்கள், இவ்வாறாகக் குறிப்பிடப்படும் நாட்டின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் நன்கு தெரியக்கூடிய முரண்பாடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த சட்டமன்றங்கள், நீதித் துறை ஆதிகாரிகள் ஆகியவர்களின் செயல்கள்தான் பேச்சு என்று உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட செயல்கள், அந்த நாட்டின் அஸ்திவாரமாக முன்வைக்கப்பட்டுள்ள சுதந்திரம், சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கெதிரான பொய்யாகிவிடும். வலுசர்ப்பத்தையும் சிறுத்தையையும் போன்றவைகளால் குறிக்கப்பட்ட நாடுகளால் வெளிக்காட்டப்பட்ட சகிப்புத்தன்மையின்மை, உபத்திரவம் செய்தல் ஆகிய ஆவியின் முன்னேற்றத்தை அது வலுசர்ப்பத்தைப்போல் பேசி, முந்தின மிருகத்தின் வல்லமை முழுவதையும் நடப்பிக்கும் என்னும் முன்அறிவிப்பு தெளிவாக அறிவிக்கிறது. இரண்டு கொம்புள்ள மிருகம், முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிச் செய்தது என்னும் அறிக்கை, அந்த நாட்டின் அதிகாரம் போப்பு மார்க்கத்திற்கு வணக்கத்தைச் செலுத்த சில காரியங்களைக் கடைப்பிடிக்க வற்புறுத்தவிருப்பதை அடையாளப்படுத்துகிறது. (21)GCTam 513.2

    அப்படிப்பட்ட செயல் அந்த நாட்டின் அரசாங்கத்தின் கொள்கை களுக்கும் அதன் சுதந்திர அமைப்பின் அறிவிற்கும் சுதந்திரப் பிரகடனத்திலுள்ள பக்திவிநயமான பிரதிக்கினைகளுக்கும் அரசியலமைப் பிற்கும் நேர் எதிரானதாக உள்ளது. சபை, மதச்சார்பற்ற வல்லமையைத் தனதாக எடுத்துக்கொள்ளும்போது, சகிப்புத்தன்மை யின்மை, உபத்திரவம் ஆகியவை தவிர்க்க முடியாததாகிவிடும். இதைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்புச்செய்ய, அந்த நாட்டிற்கு அஸ்திவரமிட்டவர்கள் ஞானமாக வகைதேடினர். மத அமைப்பு எதற்கும் மதிப்புக் கொடுக்கவும் அல்லது அது சுதந்திரமாக இயங்குவதைத் தடைசெய்யாமலிருக்கவும் அமெரிக்கச் சட்டமாமன்றம் சட்டம் இயற்றியது. ஐக்கிய மாகாணங்களில் உள்ள எந்தப் பொது வேலைக்குமான தகுதியைச் சோதிப்பதற்கு, எந்த விதமாக மத சம்பந்தப்பட்ட தேர்வும் ஒருபோதும் அவசியமாக்கப்படக்கூடாது என்று அரசியலமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்கும், வெளிப்படையான கேட்டிற்கும் சமூகப்பாதுகாப்பையும் மீறினால் மட்டுமே, மதசம்பந்தமான எந்தக் கடைப்பிடிப்பையும் சமூக அதிகாரத்தால் கண்டிக்கமுடியும், ஆனால் பொருத்தமற்ற அப்படிப்பட்ட நடவடிக்கை அதன் அடையாளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட, எந்த வகையிலும் பெரிதல்ல. ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான கொம்புகளை உடைய மிருகம், செயலில் தூய்மையானதாகவும் சாதுவானதாகவும் தீங்கு செய்யாததாகவும் இருந்த மிருகம், இப்பொழுது வலுசர்ப்பத்தைப் போல் பேசுகிறது! (22)GCTam 514.1

    மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. சட்டமியற்றும் வல்லமை மக்களிடம் உள்ளது என்னும் ஒரு அரசாங்க அமைப்பு இங்கு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நாடு ஐக்கிய அமெரிக்க நாடு தான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டான சான்றாக உள்ளது. (23)GCTam 514.2

    ஆனால் மிருகத்தின் சொரூபம் என்றால் என்ன? அது எவ்வாறு அமைய இருக்கிறது? அந்த சொரூபம் இரண்டு கொம்புள்ள மிருகத்தால் செய்யப்பட்டு, அது முதலாம் மிருகத்தின் சொரூபமாக உள்ளது. அது மிருகத்தின் சொரூபம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்படியானால், அந்த சொரூபம் எதைப்போன்று இருக்கிறது என்பதை அறிய நாம் மிருகத்தின் குணலட்சணங்களையே—போப்பு மார்க்கத்தையே ஆராய வேண்டும். ஆரம்பகாலசபைசுவிசேஷத்தின் எளிமையைவிட்டுப்பிரிந்துசென்று, அஞ்ஞானச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஏற்றுக்கொண்டு, அது தன்னிடமிருந்த தேவனுடைய ஆவியையும், வல்லமையையும் இழந்துவிட்டபோது, கறைப்பட்டுப்போயிற்று. மக்களின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அது மதச்சார்பற்ற வல்லமையின் ஆதரவைத் தேடினபோது, அது கறைபட்டுப்போனது. அதன்பலன் நாட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, தனது நலனை மேம்பாடடையச் செய்வதற்காக அதைச் செயல்படுத்தி, குறிப்பாக (அதற்கு எதிரான) மதவிரோதத்தை தண்டிக்கும் ஒரு சபையாக போப்புமார்க்கம் உருவானது. ஐக்கிய அமெரிக்க நாட்டில், மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணுவதற்காக, மார்க்க வல்லமையானது, சமூகத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தியாகவேண்டும். சபை தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, அரசாங்க அதிகாரத்தையுங்கூடப் பயன்படுத்திக்கொள்ளும். (24)GCTam 515.1

    சபைக்கு எப்பொழுதெல்லாம் சமயச் சார்பற்ற வல்லமை கிடைத்ததோ, அப்பொழுதெல்லாம் அது தனது கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பவர்களைத் தண்டிக்க அந்த வல்லமையைப் பயன்படுத்தியது. உலக வல்லமைகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்ட புரொட்டஸ்டாண்டு சபைகள், ரோமன் கத்தோலிக்க சபையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அதைப்போலவே மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வாஞ்சையை வெளிக்காட்டியுள்ளது. இங்கிலாந்து சபையைவிட்டுப் பிரிந்துசென்றவர்களின்மீது செயல்படுத்தப்பட்ட நீண்டநாள் உபத்திரவம் இதற்கு ஒரு உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து சபைக்கு இணங்காத ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது சபையைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டு, போதகர்களும் விசுவாசிகளுமாயிருந்த அநேகர் அபராதத்திற்கும், சிறைவாசத்திற்கும், சித்திரவதைக்கும், இரத்தசாட்சிகளாவதற்கும் உள்ளானார்கள்.(25)GCTam 515.2

    ஆரம்பகால சபையின் மருள விழுகைதான் சமுக அரசாங்கத்தின் உதவியை நாடும்படி வழிநடத்தினது. அது போப்புமார்க்கம் முன்னேற்றமடைவதற்கான வழியை ஆயத்தப்படுத்தினது. “விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படுவான் (2 தெச. 2:3) என்று பவுல் கூறினார். அதைப்போலவே, சபையின் மருளவிழுகை மிருகத்தின் சொரூபத்திற்கு வழியை ஆயத்தம்செய்யும். (26)GCTam 516.1

    கர்த்தரின் வருகைக்குமுன் முதலாம் நூற்றாண்டில் உண்டானதுபோல, மார்க்கத்தன்மையில் ஒரு வீழ்ச்சி நிலவும் என்று வேதாகமம் கூறுகிறது. “மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர் களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகி களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியரா யிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும்” (2 தீமோ. 3:1-5; 1 தீமோ. 4:1,2; 2தெச. 2:9-11) சாத்தான் செயல் ஆற்றுவான். “அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்”-2 தெச. 2:12. இவ்விதமான தெய்வபக்தி இல்லாத நிலைமை உண்டாகும்போது, முதலாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அதே பலன்கள் பின்தொடரும்.(27)GCTam 516.2

    புரொட்டஸ்டாண்டு சபைகளில் உள்ள வேற்றுமையான நம்பிக்கைகளை சரிப்படுத்த வற்புறுத்தலினால் ஒரு வேற்றுமையை உண்டுபண்ண எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளமுடியாது என்பதே, முடிவான சான்றாக அநேகரால் கருதப்படுகிறது. ஆனால் புரொட்டஸ்டாண்டு விசுவாசமுடைய சபைகளில் பொதுவான கோட்பாட்டின் அடிப்படையில் உண்டாகக்கூடிய ஒற்றுமைக்கு அனுகூலமான, பலமிக்கதாக வளர்ந்துவரும் நுண்ணுணர்வுகள் பல ஆண்டுகளாக உள்ளன. இப்படிப்பட்ட ஒரு ஒற்றுமைகள் முக்கியமானவைகளாக இருந்தபோதிலும், எல்லோராலும் ஒத்துக்கொள்ளமுடியாத விஷயங்களின்மீது விவாதம் செய்வதை விட்டுவிடவேண்டியது அவசியமாகும்.(28)GCTam 516.3

    கி.பி.1846-ம் வருடத்தில் சார்லஸ் பீச்சர் என்பவர் ஒரு பிரசங்கத்தின்போது, “சுவிசேஷ பரொட்டஸ்டாண்டு சபைகளின் உழியம் வழிநெடுகிலும் மனித பயம் என்னும் நிர்பந்தத்ததினால் அமைக்கப்பட்டது மட்டுமின்றி, அடிப்படையில் ஊழல்மிக்க காரியங்களிலேயே அவர்கள் நகர்ந்து மூச்சுவிட்டு வாழுகின்றனர். சத்தியத்தை மூடி மறைப்பதற்காக அவர்களது கீழ்த்தரமான தன்மைகளுக்கு இறங்கி, மருளவிழுகையின் வல்லமையின்முன் தங்களுடைய முழங்கால்களை மடக்கி மண்டியிடுகின்றனர். ரோமன் கத்தோலிக்கர்களுடனுள்ள காரியங்கள் இப்படிப்பட்டதாக இருந்ததில்லையோ! நாம் மறுபடியும் அதன் வாழ்க்கையின்படியே வாழ்ந்துகொண்டிருப்பதில்லையா! நமக்குச் சற்று முன்னால் நாம் எதைக் காண்பிக்கிறோம்! இன்னொரு பொதுக்குழு! ஒரு உலக மாநாடு! சுவிசேஷ சம்பந்தம்! உலகளாவிய சபை!-Sermon on “The Bible a Sufficient Creed,” delivered at Fort Wayne,Indiana,Feb. 22,1846. முழுமையான ஒற்றுமைக்காக இதை அடைந்துகொள்ளும்போது, அது நிர்ப்பந்தத்திற்கு வகைதேடும் ஒருபடியாக அமையும்” என்றார். (29)GCTam 517.1

    ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள தலையாய சபைகள், தங்களுக்கு இடையிலுள்ள பொதுவான கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்றுசேரும்போது, தங்களுடைய அமைப்புகளைத் தாங்குவதற்காக, வற்புறுத்தும் சட்டங்களை இயற்ற அவை அரசை வசீகரிக்கும்போது, புரொட்டஸ்டாண்டு அமெரிக்காவானது, ரோமன் கத்தோலிக்க மதத்தலைமைக்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணும். அப்பொழுது பிரிவினைக்காரர்களின்மீது உபத்திரவங்களும், சமுக தண்டனைகளும் தவிர்க்கமுடியாத பலனாக நிகழும். (30)GCTam 517.2

    இரண்டு கொம்புகளுடைய மிருகம், “சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள்யாவரும்தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது”—வெளி. 13:16-17. “அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடிப்பான்” (வெளி. 14:9,10) என்பது மூன்றாம் தூதனின் எச்சரிப்பாக உள்ளது. இரண்டுகொம்புள்ள மிருகத்தின் வற்புறுத்துதலினால், தொழுதுகொள்ளப்பட்ட இந்தத் தூதில் உள்ள மிருகம், முதலாம் மிருகமாக அல்லது வெளி. 13-ம் அதிகாரத்தில் காணப்படும் சிறுத்தையைப்போன்ற மிருகமாக போப்புமார்க்கமாக உள்ளது. மிருகத்தின் சொரூபம் என்பது புரொட்டஸ்டாண்டு சபைகள் தங்களுடைய பிடிவாதமான கோட்பாட்டை வற்புறுத்துவதற்காக அரசு வல்லமையின் உதவியைத் தேடும்போது, உண்டாகக்கூடிய மருளவிழுந்த புரொட்டஸ்டாண்டுமார்க்கத்தின் அமைப்பை எடுத்துக்காட்டுகிறது. மிருகத்தின் அடையாளம் என்பது இனிமேல் விளக்கப்பட உள்ளது. (31)GCTam 517.3

    மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவதற்கு எதிரான எச்சரிப்பைக் கொடுத்தபின், தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர் களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” (வெளி. 14:12) என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறது. தேவனுடைய கற்பனையைக் காத்துக்கொள்ளுகிறவர்கள், மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, அதன் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் இடையிலுள்ள ஒப்பிடும் வேற்றுமையான இடத்தில் வைக்கப்படுவதினால், தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்ளுதல் ஒருபக்கத்திலும் அதற்கெதிரான மீறுதல் மறுபக்கத்திலும் இருப்பது தேவனை வணங்குபவர்களுக்கும் மிருகத்தை வணங்குபவர்களுக்கும் இடையில் உள்ள தெளிவான வேற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.(32)GCTam 518.1

    மிருகத்தின் விசேஷமான குணலட்சணங்களும், அதன் காரணமாக அதன் சொரூபத்தின் தன்மையும் தேவனுடைய கற்பனைகளைத் தகர்ப்பதாக உள்ளது. “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்” என்று தானியேல் கூறுகிறான். பவுல் அந்த வல்லமைக்கு தன்னைத்தானே தேவனுக்கு மேலாக உயர்த்தும் பாவமனுஷன் என்று பெயரிடுகிறான். ஒரு தீர்க்கதரிசனம் மற்றொரு தீர்க்கதரிசனத்திற்கு வாழ்த்துரையாக உள்ளது. தேவனுடைய கற்பனையை மாற்றும் செயல் ஒன்றினால் மட்டுமே போப்பு மார்க்கத்தால் தன்னை தேவனுக்கு மேலாக உயர்த்தமுடிந்தது. இவ்விதமாக கற்பனை மாற்றப்பட்டுள்ளது என்பதை நன்கு புரிந்துகொண்டும், அதை எவர்கள் கைக்கொள்ளுகிறார்களோ, அவர்கள் அந்த மாற்றத்தை உண்டுபண்ணின வல்லமைக்கு அதிமேன்மையான மேன்மையைக் கொடுக்கின்றவர்களாக இருப்பார்கள். போப்புமார்க்கத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் அப்படிப்பட்ட செயலானது, தேவனுக்குப் பதிலாக போப்புவுடன் உறவுகொள்ளும் ஒரு அடையாளமாக இருக்கும்.(33)GCTam 518.2

    தேவனுடைய கற்பனையை மாற்றுவதற்குப் போப்புமார்க்கம் முயன்றிருக்கிறது. விக்கிரக ஆராதனையைத் தடைசெய்யும் இரண்டாவது கற்பனையை கற்பனைகளிலிருந்து நீக்கிவிட்டது. ஏழாம்நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பதற்குப்பதிலாக, முதலாம் நாளை ஆசரிக்க அனுமதியைக் கொடுத்தது. நான்காவது கற்பனையையும் மாற்றியமைத்துள்ளது. மேலும் அது முதலாவது கற்பனையிலேயே உள்ளடக்கமாக இருப்பதினால், இரண்டாவது கற்பனை அவசியமற்றது. எனவே, அதனை நீக்குவதற்கு அதுவே காரணமென்று புரிந்துகெள்ளவேண்டும் என்றும், தேவன் அதை வடிவமைத்தவிதத்தில் அவர்கள் அதைக் கொடுத்திருக்கின்றனர் என்றும் போப்பிஸ்டுகள் வற்புறுத்துகின்றனர். தீர்க்கதரிசியினால் முன்னுரைக்கப்பட்ட மாற்றமாக இது இருக்கமுடியாது. வேண்டுமென்றே திட்டமிட்டே செய்யப்பட்டுள்ள மாற்றமாக இருக்கிறது. அவன் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். நான்காம் கற்பனையில் உண்டுபண்ணப்பட்ட மாற்றம், தீர்க்கதரிசனத்தை மிகச்சரியாக நிறைவேற்றுகிறது. ஏனெனில் இதற்கான ஒரே அதிகாரத்தின்மீது உரிமைபாராட்டுதல் சபையினுடையதாக உள்ளது. இங்கு போப்புமார்க்க வல்லமையானது, தன்னை வெளியரங்கமாக தேவனுக்கும் மேலாக வைக்கிறது. (34)GCTam 519.1

    நான்காவது கற்பனையானது, தேவனின் சிருஷ்டிக்கும் வல்லமையின் அடையாளமாக இருக்கிறது. மனிதனின் பக்தி, தொழுகை ஆகியவைகளின்மீதுள்ள அவரது உரிமைக்கு அது சாட்சியாக இருக்கிறது. எனவே, நான்காவது கற்பனையின்மீது வைத்திருக்கும் மதிப்பின் காரணமாக, தேவனைத் தொழுபவர்கள் மிகச்சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்களாக தெளிவுபடுத்திக் காட்டப்படுகின்றனர். மிருகத்தைத் தொழுபவர்கள் சிருஷ்டிகரின் நினைவுச்சின்னத்தைத் தகர்த்தெறியும் அவர்களது முயற்சியினாலும், ரோமன் கத்தோலிக்க சபை ஏற்படுத்தின அமைப்பை உயர்த்துவதினாலும், தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவார்கள். போப்புமார்க்கம் தனது தற்பெருமை மிக்க உரிமைகளை ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பில்தான் உறுதிப்படுத்தியது. அது அரசு வல்லமையை முதலாவது கையாண்டது. ஞாயிற்றுக்கிழமையைக் கர்த்தருடைய நாளாக ஆசரிக்க வற்புறுத்தும் செயலில்தான் இருந்தது. ஆனால் வேதாகமம் முதல்நாளை கர்த்தருடைய நாளாகச் சுட்டிக்காட்டாமல், ஏழாவது நாளைத்தான் சுட்டிக்காட்டுகிறது. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்று கிறிஸ்து கூறினார். ஏழாம்நாள் கர்த்தருடைய ஓய்வுநாள் என்று நான்காவது கற்பனை அறிவிக்கிறது. கர்த்தர் ஏசாயா தீர்க்தரிசியினால் அந்த நாளை என்னுடைய பரிசுத்தநாள் என வடிவமைத்தார். (மாற்கு 2:28; ஏசாயா 58:13).(35)GCTam 519.2

    கிறிஸ்து ஓய்வுநாளை மாற்றிவிட்டார் என்பதாக அடிக்கடி முன்வைக்கப்படும் உரிமைபாராட்டுதல், அவரது சொந்த வார்த்தைகளினாலேயே தவறு என்பதாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிற தற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோக ராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத்தேயு 5:17-19) என்று இயேசு அவரது மலைப்பிரசங்கத்தில் கூறினார். (36)GCTam 520.1

    ஓய்வுநாளின் மாற்றத்திற்கான அதிகாரத்தை வேதவாக்கியங்கள் கொடுப்பதில்லை என்பது புரொட்டஸ்டாண்டுகளால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அமெரிக்கன் டிராக்ட் சொசைட்டி, அமெரிக்கன் சண்டே ஸ்கூல் யூனியன் ஆகியவைகளின் வெளியீடுகளில் இது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (வாரத்தின் முதல் நாள்) ஓய்வுநாள் என்பதைப்பற்றிய ஏதாவது தெளிவான கட்டளை அல்லது சம்பந்தப்பட்ட காரியத்தில் புதிய ஏற்பாட்டின் முழுமையான மௌனத்தை இந்த வெளியீடுகளில் ஒன்று ஒப்புக்கொள்ளுகிறது.-George Elliott,The Abiding Sabbath,page 184.(37)GCTam 520.2

    கிறிஸ்துவின் மரணம்வரை அந்தநாளில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆவணங்கள் காட்டும்வரை, அவர்கள் (அப்போஸ்தலர்கள்) ஏழாம்நாளை நீக்கம்செய்து, அதற்குப்பதிலாக வாரத்தின் முதலாம்நாளை ஆசரிக்கவேண்டும் என்ற தெளிவான கட்டளை எதையும் கொடுக்கவில்லை.—A. E. Waffle, The Lord’s Day,pages 186—188.(38)GCTam 520.3

    ஓய்வுநாள் தங்களது சபையால்தான் மாற்றப்பட்டது என்று ரோமன் கத்தோலிக்கர்கள் ஒப்புக்கொண்ட ஞாயிற்றுக்கிழமையை புரொட்டஸ்டாண்டுகள் ஆசரிப்பதின்மூலம், அவர்கள் அதன் வல்லமையை அங்கீகரிக்கின்றனர் என்று அறிவிக்கின்றனர். கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க வேதபாடம் என்னும் நூலில், நான்காம் கற்பனைக்குக் கீழ்ப்படிந்து ஆசரிக்கப்படவேண்டிய நாளைப்பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலாக, பழைய சட்டத்தின் காலத்தில் சனிக்கிழமை பரிசுத்தமாக்கப்பட்ட நாளாக இருந்தது. ஆனால் இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்டு, தேவ ஆவியினால் இயக்கப்பட்ட சபை, சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை ஏற்படுத்தினது. எனவே, இப்பொழுது நாங்கள் ஏழாம்நாளுக்குப் பதிலாக, முதல்நாளைப் பரிசுத்தப்படுத்துகிறோம் என்று கூறுகிறது. (39)GCTam 520.4

    ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிய அதே நடவடிக்கையை புரொட்டஸ்டாண்டுகள் அனுமதித்து, ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பதினால், பண்டிகை நாட்களை ஏற்படுத்தவும் பாவத்தின்கீழ் நடத்தவும் உள்ள கத்தோலிக்கசபையின் வல்லமையை ஏற்கச்செய்வது கத்தோலிக்கசபையின் அதிகாரத்தின் அடையாளமாக உள்ளது என்று போப்புமார்க்க எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர்.--Henry Tuberville,An Abridgment of the Christian Doctrine,page 58. அப்படியானால் ஓய்வுநாள் மாற்றம் என்பது, ரோமன் கத்தோலிக்க சபையின் அதிகாரத்தின் அடையாளம் தான் என்றால், மிருகத்தின் முத்திரை என்பது அல்லாமல் வேறு என்ன? (40)GCTam 521.1

    ரோமன் கத்தோலிக்க சபையின் மேலாதிக்கத்தின்மீதுள்ள அதன் உரிமையை விட்டுவிலகவில்லை. புரொட்டஸ்டாண்டு சபைகள் வேதாகம ஓய்வுநாளை ஏற்றுக்கொள்ளுவதினால், அவைகள் இந்த அனுமானத்தை ஒத்துக்கொள்கின்றனர். அவர்கள், இந்த மாற்றத்திற்கு பாரம்பரியம், முற்பிதாக்கள் ஆகியோரின் அதிகாரத்தின்மீது உரிமைபாராட்டலாம். இப்படிச்செய்வதினால், அவர்களை ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து வேறுபடுத்தும் அதே கொள்கைகளை வேதாகமம்! வேதாகமம் ஒன்றுதான் புரொட்டஸ்டாண்டு மக்களின் மதமாக இருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இந்தக் காரியத்தில் உள்ள உண்மைகளுக்குத் தங்கள் கண்களை வேண்டுமென்றே மூடிக்கொள்ளுவதன் மூலமாக, போப்பு மார்க்கவாதிகள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொண்டிருப்பதை அவர்களால் காணமுடியும், ஞாயிறு ஆசரிப்பை வற்புறுத்தும் இயக்கம் ஆதரவைப் பெறும்போது, அது காலப்போக்கில் புரொட்டஸ்டாண்டு உலகம் முழுவதையும் தனது துகில் கொடியின்கீழ் கொண்டுவரமுடியும் என்ற நிச்சயத்தில் மகிழ்ச்சி அடைகிறது. (41)GCTam 521.2

    புரொட்டஸ்டாண்டுகள் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பது என்பதானது ரோமன்கத்தோலிக்க மார்க்கத்தின் அதிகாரத்திற்கு அவர்களாகவே வணக்கம் செலுத்துவதாகும் என்று ரோமன் கத்தோலிக்க சபையினர் அறிவிக்கின்றனர்.-Mgr. Segur, Plain Talk About the Protestantism of Today,page 213. புரொட்டஸ்டாண்டுகள் தங்கள் பங்காக ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வற்புறுத்துவது போப்புமார்க்கத்தை வணங்கும்படிச் செய்யும் ஒரு வற்புறுத்தலாக மிருகத்தை வணங்குவதாக இருக்கிறது. நான்காவது பிரமாணத்தின் உரிமைகளைப் புரிந்துகொண்டு, உண்மையான ஓய்வுநாளுக்குப் பதிலாகத் தவறான ஓய்வுநாளை அனுசரிக்கத் தேர்ந்து கொள்ளுவதினால், எந்த வல்லமையால் அந்தக் கட்டளை உண்டாயிருக்கிறதோ, அதற்கு வணக்கம் செலுத்துகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற வல்லமை, ஒரு மத சம்பந்தமான கடமையைச் செய்யும்படி வற்புறுத்தும் அதே செயலினால், சபைகள் தாங்களாகவே மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணும். எனவே ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிக்கவேண்டும் என்னும் ஒரு வற்புறுத்தல் என்பது மிருகத்தையும் அதன் செரூபத்தையும் வணங்குவதற்காகச் செய்யப்படும் ஒரு வற்புறுத்தலாக இருக்ககும். (42)GCTam 521.3

    ஆனால், கடந்த தலைமுறைகளில் இருந்த கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையை ஆசரித்தபோது, அவர்கள் வேதாகம ஓய்வுநாளை ஆசரிப்பதாக எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் இப்போது ரோமன் கத்தோலிக்க உறவைத் தவிர்க்காதவர்களாயும் ஞாயிற்றுக்கிழமைதான் தெய்வீகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓய்வுநாள் என்றும், நேர்மையாக நம்பும் உண்மைக் கிறிஸ்தவர்கள் உள்ளனர். தேவன் அவருக்கு முன்னுள்ள அவர்களது நோக்கத்தின் நேர்மையையும், நாணயத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறார். ஆனால் ஞாயிறு ஆசரிப்பு சட்டத்தின் மூலமாக வற்புறுத்தப்படும்போது, உண்மையான ஓய்வுநாள் கோரும் கடமைகள் என்ன என்பதைப்பற்றி உலகம் முழுவதும் ஒளி அடையும்போது, எவர்கள் ரோமன் கத்தோலிக்கச் சபையைவிட மேலான அதிகாரத்தை உடையதாக இராத ஒரு கற்பனைக்குக் கீழ்ப்படிவதற்காக தேவனுடைய கற்பனையை மீறுவார்களோ, அவர்கள் அதன் காரணமாக போப்புமார்க்கத்தை, தேவனைவிட மேன்மையாக மதிப்பார்கள். சபைக்கும், ரோமன்கத்தோலிக்க சபையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பை வற்புறுத்தும் வல்லமைக்கும் வணக்கம் செலுத்துகின்றனர். தேவனுடைய அதிகாரத்தின் அடையாளம் என்று அறிவித்த அமைப்பை மனிதர்கள் நிராகரித்து, அதற்குப்பதிலாக ரோமன்கத்தோலிக்க மார்க்கத்தின் மேலாதிக்கத்தின் அடையாளமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை மேன்மைப்படுத்தும்போது, அவர்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்துடன் உறவு கொள்ளும் அடையாளமாகிய மிருகத்தின் முத்திரையை ஏற்றுக்கொள்ளுவார்கள். மக்கள் முன்பாக இந்தப் பிரச்சினை இவ்விதமாகத் தெளிவாக வைக்கப்படாதவரை, அவர்கள் தேவனுடைய கற்பனைகளுக்கும், மனிதனுடைய கற்பனைகளுக்கும் இடையில் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்படி கொண்டுவரப்படும்போது, எவர்கள் தொடர்ந்து மீறுவார்களோ, அவர்கள் மிருகத்தின் முத்திரையைப் பெறுவார்கள். (43)GCTam 522.1

    அழிவுக்குரிய மக்களுக்கு இதுவரை ஒருபோதும் அறிவிக்கப்பட்டிராதவிதத்தில், மிகப் பயங்கரமான எச்சரிப்பு மூன்றாம் தூதனுடைய தூதில் உள்ளது. இரக்கம் கலவாத தேவனுடைய கோபத்தை அழைக்கின்ற ஒரு பயங்கரமான பாவமாக அது இருந்தாகவேண்டும். இந்த முக்கியமான காரியத்தைப்பற்றி, மனிதர்கள் இருளில் விடப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். அனைவரும் ஏன் துன்பப்படுகின்றனர் என்பதை அறியவும், அவைகளிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பினை அடையவும், இந்தப் பாவத்திற்கு எதிராக தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிகழுமுன், உலகத்திற்கு அதைப்பற்றிய எச்சரிப்புக் கொடுக்கப்படவேண்டியதுள்ளது. பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் முதலாம் தூதன் அவனுடைய தூதைக் கொடுத்தாகவேண்டும் என்று தீர்க்கதரிசனம் அறிவிக்கிறது. அதே முத்தூதுகளின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்றாம் தூதனின் எச்சரிப்பு (முதலாம் தூதனின் தூதைவிட) குறைவான அளவில் வரக்கூடியதாக இருக்கப்போவது இல்லை. வானத்தின் மத்தியில் பறக்கும் ஒரு தூதனால், உரத்த சத்தமாக அறிவிப்பதற்காகத் தீர்க்கதரிசனத்தில் அது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அது உலகத்தின் கவனத்தைக் கவரும். (44)GCTam 523.1

    இந்தப் போட்டியில் உள்ள பிரச்சினையில், கிறிஸ்தவ சமுகம் அனைத்தும் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுபவர்கள் என்றும், மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, அதன் முத்திரையைப் பெற்றுக்கொள்ளுபவர்கள் என்றும் இருபெரும் வகுப்புகளாகப் பிரிந்துபோகும். சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள் தரித்திரர், சுயாதீனர்—அடிமைகள் யாவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளுவதற்கு வற்புறுத்த இணைந்தபோதிலும், தேவனுடைய மக்கள் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். “அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியான வருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” (வெளி. 15:2,3) என்று பாடினதை பத்மு தீவின் தீர்க்கதரிசி காண்கிறான். (45)GCTam 523.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents