Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    20 — மாபெரும் ஆன்மீக எழுப்புதல்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 355—374)

    கி றிஸ்துவின் அதிசீக்கிர வருகையின்கீழ் நிகழவுள்ள ஒரு பெரிய சமய எழுப்புதல் வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்தில் உள்ள முதலாம் தூதனின் தூதாகிய தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தூதன் வானத்தின் மத்தியில் பறப்பதுபோல் காணப்பட்டு, “அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.” வெளி. 14:6,7. (1)GCTam 409.1

    இந்த எச்சரிப்பை ஒரு தூதன் அறிவிப்பதாகக் கூறப்படும் அந்த உண்மை குறிப்பிடத்தக்கது. இந்தத் தூதினால் நிறைவேற்றப்பட உள்ள ஊழியத்தின் உயர்ந்த தன்மையையும், அதற்கு துணைசெய்யும் வல்லமையையும் மகிமையையும், பரலோக தூதனுடைய சுத்தம் வல்லமை, மகிமையினால் குறிப்பிட்டுக்காட்டுவது தெய்வீக ஞானத்திற்குப் பிரியமாக இருந்தது. அந்தத் தூதன் வானத்தின் மத்தியில் பறப்பதும், மிகுந்த சத்தமிட்டு அந்த எச்சரிப்பைக்கொடுப்பதும், பூமியின்மேல் வாசம்செய்யும் அனைவருக்கும் சகல ஜனங்களுக்கும் பறைசாற்றுவதும் இந்த இயக்கத் தின் விரைவிற்கும் உலகளாவிய தன்மைக்கும் சான்று பகருகிறது. (2)GCTam 409.2

    இந்த இயக்கம் நிகழ உள்ள காலத்தைப்பற்றிய ஒளியை அந்தத் தூதுதானே கொடுக்கிறது. அது நித்திய சுவிசேஷத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பின் ஆரம்பத்தை அறிவிக்கிறது. இரட்சிப்பின் தூது யுகங்கள் நெடுகிலும் பிரசங்கிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்தத் தூது, கடைசிநாட்களில் மட்டுமே அறிவிக்கப்படகூடிய சுவிசேஷத்தின் ஒருபகுதியாக இருக்கும். ஏனெனில் அப்போதுதான் நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது என்பது உண்மையாக இருக்கமுடியும். நியாயத்தீர்ப்பின் ஆரம்பத்தை நோக்கிச் செல்லும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை தீர்கக்தரிசனங்கள் வரிசைப்படுத்திக் காட்டுகின்றன. இது தானியேலின் புத்தகத்தைப் பற்றிய மிகச் சிறப்பான உண்மை. ஆனால் கடைசிக்காலம் சம்பந்தப்பட்ட தீர்கக்தரிசனத்தை முடிவுகாலமட்டும் புதைபொருளாக முத்திரையிட்டு வைக்கும்படி தானியேல் கட்டளையிடப்பட்டான். தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை அடிப்படையாகக்கொண்ட இந்தக் காலத்தை நாம் எட்டும்வரை, நியாயத்தீர்ப்பைப்பற்றிய ஒரு தூது அறிவிக்கப்பட முடியாமலிருந்தது. அதனால் கடைசி காலத்தில், “அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்”- தானியேல் 12:4. (3)GCTam 409.3

    அப்போஸ்தலனாகிய பவுல், தனது காலத்தில் கிறிஸ்துவின் வருகை நிகழும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று சபையை எச்சரித்தான். “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.” 2 தெச. 2:3. பெரும் மருளவிழுகைக்குப் பின்னும், பாவமனிதன் நீண்டகால ஆளுகை முடியும்வரை, நமது கர்த்தரின் வருகையை நம்மால் எதிர்பார்க்க இயலாது. “அக்கிரமத்தின் இரகசியம்”,“கேட்டின் மகன்”,“அந்தத் துன்மார்க்கன்” என்று அழைக்கப்படும் போப்புமார்க்கத்தைக் குறிக்கும் “பாவமனுஷன்” தீர்க்கதரிசனத்தில் முன்னரைக்கப்பட்டபடி, 1260 வருடங்கள் தனது மேலாதிக்கத்தை கொண்டிருக்கவேண்டியதாக இருந்தது. இந்தக் காலம் கி.பி.1798-ல் முடிவடைந்தது. அதற்கு முன்னான காலத்தில் கிறிஸ்துவின் வருகை நடக்கமுடியாது. இந்த எச்சரிக்கையுடன் பவுல் 1798 வரையிலுமுள்ள கிறிஸ்தவ உலகத்தை எச்சரிக்கிறார். அந்த நாளுக்குப் பின்னுள்ள இந்தக் காலப்பகுதியில்தான், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய தூது அறிவிக்கப்படவேண்டும். (4)GCTam 410.1

    கடந்த காலங்களில் இப்படிப்பட்ட தூது, ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. நாம் கண்டிருப்பதைப்போல, பவுல் அதைப்பற்றி பிரசங்கிக்கவில்லை. அவன் கிறிஸ்துவின் வருகை, எதிர்காலத்தில் மிகவும் தூரத்தில் உள்ளது என்பதைத் தனது சகோதரர்களுக்குச் சுட்டிக்காட்டினான். சீர்திருத்தவாதிகள் அதை அறிவிக்கவில்லை. மார்ட்டின் லுத்தர் அவரது காலத்திற்கு முந்நூறு வருடங்களுக்குப்பின் நியாயத்தீர்ப்பபு நிகழும் என்று கூறினார். ஆனால் கி.பி.1798-ல் இருந்து தானியேலின் புத்தகத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, தீர்க்கதரிசனங்களைப்பற்றிய அறிவு அதிகரித்து, நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்கிற பக்திவிநயமான செய்தியை அநேகர் அறிவித்திருக்கின்றனர். (5)GCTam 410.2

    பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தத்தைப்போலவே, ஒரேசமயத்தில் பல கிறிஸ்தவ நாடுகளில் அட்வெந்து (திருவருகை) இயக்கம் தோன்றியது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், விசுவாசமும் ஜெபமுமுள்ள மனிதர்கள் தீர்க்கதரிசனங்களை ஆராயும்படி நடத்தப்பட்டு, ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்ட ஆதாரங்களில், எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிருக்கிறது என்று உணர்த்தும் சான்றுகள் இருப்பதைக் கண்டனர். பல்வேறு நாடுகளிலும், தனித்தனியான கிறிஸ்தவ அமைப்புகள் வேதவாக்கியங்களை முழுமையாக ஆராய்ந்ததினால், இரட்சகரின் திருவருகை சமீபமாக இருக்கிறது என்கிற நம்பிக்கைக்கு வந்தனர். (6)GCTam 411.1

    கி.பி.1821-ல் நியாயத்தீர்ப்பின் வேளையைச் சுட்டிக்காட்டும் தீர்க்கதரிசனங்களை மில்லர் விளக்கிக்காட்டிய மூன்று வருடங்களுக்குப்பின் “உலகத்தின் மிஷனரி” என்றழைக்கப்படும் டாக்டர் ஜோசப் உல்ஃப் என்பவர், கர்த்தரின் அதிசீக்கிர வருகையை அறிவிக்கத் தொடங்கினார். உல்ஃப் ஜெர்மனியில் பிறந்த எபிரெய பெற்றோரின் மரபு வழியைப் பெற்றிருந்தார். அவரது தந்தை ஒரு யூத ரபி. மிக இளமையிலேயே அவர் கிறிஸ்தவ மதத்தைப்பற்றிய மனஉணர்த்துதலைக் கொண்டிருந்தார். மிகுந்த செயலாக்கமும், உண்மையைக்கண்டறியும் மனமும்கொண்டிருந்த அவர், பக்திமிக்க எபிரெயர்கள் நாள்தோறும் அவரது தந்தையின் வீட்டில்கூடி அவர்களுடைய மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் வரவிருக்கும் மேசியாவின் மகிமையையும், இஸ்ரவேல் எடுத்துக் கட்டப்படுவதையும்பற்றிய உரையாடல்களைக் கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். ஒரு நாள் நசரேயனாகிய இயேசுவைப்பற்றிக் குறிப்பிடப்பட்டதைக்கேட்ட அந்தச் சிறுவன், அவர் யார் என்று விசாரித்தார். “நிகரில்லாத் திறமை வாய்ந்த ஒரு யூதர்” என்பது அதற்கான பதிலாக இருந்தது. “ஆனால் அவர் தம்மை மேசியா என்று கூறிக்கொண்டதினால், யூத விசாரணை மன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது” என்றும் கூறப்பட்டது. “எருசலேம் ஏன் அழிக்கப்பட்டது? நாம் ஏன் அடிமைத்தனத்தில் இருக்கிறோம்?” என்று அச்சிறுவன் கேட்டான். “துயரம்! துயரம்! ஏனெனில் யூதர்கள் தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தனர்” என்று அவர் தந்தை பதில் தந்தார். “ஒருவேளை இயேசுவும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருக்கவேண்டும்; யூதர்கள் அவர் குற்றமற்றவராயிருந்தபோது அவரையும் கொலை செய்திருக்கின்றனர்” என்ற எண்ணம், அச்சிறுவனுக்கு உடனே உண்டானது.—Travels and Adventures of the Rev. Joseph Wolff, vol. 1, p. 6. அந்த உணர்வுகள் மிகவும் பலமாக இருந்ததினால், கிறிஸ்தவ ஆலயத்திற்குள் செல்வதற்கு அவர் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும், பிரசங்கங்களை கேட்பதற்காக அடிக்கடி அவ்வாலயங்களின் வெளியே நின்றிருக்கிறார். (7)GCTam 411.2

    அவருக்கு ஏழே வயது ஆகியிருந்தபோது, மேசியாவின் வருகையில் இஸ்ரவேலரின் எதிர்கால வெற்றி எப்படியிருக்கும் என்று, வயதுசென்ற ஒரு கிறிஸ்தவ அண்டை வீட்டு மனிதனிடம் பெருமையாக பேசியிருக்கிறார். அந்த வயதானவர்: “அன்பான சிறுவனே! உண்மையான மேசியா யார் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். பண்டைய தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தபோது, உங்களுடைய முன்னோர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற நசரேயனாகிய இயேசு தான் அவர். வீட்டிற்குப்போய் ஏசாயாவின் ஐம்பத்துமூன்றாம் அதிகாரத்தைப் படித்துப்பார். இயேசுகிறிஸ்துதான் தேவனுடைய குமாரன் என்பதை உணர்வாய்” என்றார்.-Ibid., vol. 1. உடனே அவர் மனம் உணர்வடைந்தது. வீட்டிற்குச் சென்று, நசரேயனாகிய இயேசுவில் அது எப்படி மிகச்சரியாக நிறைவேறியிருக்கும் என்பதைக் காண ஆச்சரியத்துடன் அந்த வேதவாக்கியத்தை வாசித்தார். அந்தக் கிறிஸ்தவரின் வார்த்தைகள் உண்மையா? அந்தத் தீர்க்கதரிசனத்தின் விளக்கத்தை அச்சிறுவன் அவனது தந்தையிடம் கேட்டான். ஆனால் அவனது தந்தையின் பதில் கடுமையான மௌனமாக இருக்கவே, அந்த விஷயத்தைப்பற்றி மீண்டும் குறிப்பிட அவருக்குத் துணிவு இருக்கவில்லை என்றாலும் அது கிறிஸ்தவ மதத்தைப்பற்றி மேலும் அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும் என்ற அவருடைய ஆசையை அதிகரிக்கவே செய்தது. (8)GCTam 412.1

    அவர் தேடிய அறிவு அந்த யுத இல்லத்தில் அவரிடமிருந்து மிகக் கடுமையாக விலக்கப்பட்டிருந்தது. ஆனால் பதினோறு வயதே ஆனபோது, அவருக்கென்று கல்வியைப் பெற்றுக்கொள்ளவும் தனது மதத்தையும் வாழ்க்கைத் தொழிலையும் தெரிந்துகொள்ளவும், தகப்பனின் வீட்டைவிட்டு வெளியேறி உலகத்துக்குள் சென்றார். அவரது இனத்தாரிடம் சில காலம் அவருக்கு அடைக்கலம் கிடைத்தது. ஆனால் மருளவிழுந்தவன் என்று எண்ணப்பட்டு அங்கிருந்து விரைவில் விரட்டப்பட்டார். தனித்தவராகவும் கையில் காசில்லாதவராகவும் அந்நியர்களுக்கிடையிலும் அவரது சொந்தப் பாதையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதாயிற்று. அக்கரையுடன் ஆராய்வதோடு, எபிரெய மொழியைக் கற்றுக்கொடுப்பதின்மூலமாகத் தனது வாழ்க்கையை நடத்தினவராக இடம்விட்டு இடம் சென்றார். ஒரு ரோமன் கத்தோலிக்கப் போதனையாளரின் (உபதேசியார்) செல்வாக்கின்மூலமாக, ரோம விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, தமது சொந்த ஜனங்களுக்கு ஒரு மிஷனரியாக இருக்கும் நோக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நோக்கத்துடன் சில வருடங்களுக்குப்பின் ரோம் நகரிலுள்ள பிரச்சாரக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடருவதற்காகச் சென்றார். இங்கு அவரது சுதந்திரமாகச் சிந்திக்கும் பழக்கமும், யதார்த்தமான பேச்சும் அவருக்கு மதவிரோதி என்ற பெயரைச் சுமத்திற்று. சபையின் தகாத செயல்களை அவர் பகிரங்கமாகத் தாக்கி, சீர்திருத்தத்தின் அவசியத்தை வற்புறுத்தினார். ஆரம்பத்தில் கத்தோலிக்க உயர் அதிகாரிகளால் சிறப்பான ஆதரவுடன் நடத்தப்பட்டிருந்போதிலும், சிறிது காலத்திற்குப்பின் அவர் ரோம் நகரிலிருந்து நீக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் அடிமைத்தனத்திற்கு அவரை மீண்டும் திருப்பிக்கொண்டுவர முடியாது என்று தெரியும்வரை, சபையின் கண்காணிப்பின்கீழ் இடம்விட்டு இடம்மாறிச் சென்றார். திருத்தப்படமுடியாதவர் என்று அறிவிக்கப்பட்டு, அவர் விரும்பிய இடத்திற்குப் போகும்படி விட்டுவிடப்பட்டார். இப்போது இங்கிலாந்து சென்று, புரொட்டஸ்டாண்டு விசுவாசத்தை அறிக்கைசெய்து, ஆங்கில சபையில் ஐக்கியப்பட்டார். இரண்டு வருடக் கல்விக்குப்பின் 1821-ல் அவர் தனது ஊழியத்தைத் தொடங்கினார். (9)GCTam 412.2

    கிறிஸ்து அவரது முதலாம் வருகையின்போது, துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவராகவும் இருந்தார் என்கிற மாபெரும் சத்தியத்தை உல்ஃப் ஏற்றுக்கொண்ட அதே சமயத்தில், வல்லமையோடும் மகிமையோடும் அவர் இரண்டாம்முறை வருவதை, தீர்க்கதரிசனங்கள் அதே தெளிவுடன் காட்சிக்குக் கொண்டுவருவதையும் கண்டார். நசரேயனாகிய இயேசுதான் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவர் என்பதையும், தாழ்மையான அவருடைய முதலாம் வருகை மனிதர்களின் பாவங்களுக்காகப் பலியாகும்படிக்கே என்பதையும் காண்பிக்க வகைதேடிய அதே வேளையில், அரசராகவும் விடுதலை வழங்குபவராகவும் இரண்டாம் வருகையில் வரவிருப்பதையும் அவர் போதித்தார்.(10)GCTam 413.1

    “கரங்களும் பாதங்களும் துளைக்கப்பட்டு, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலிருந்து, துக்கம் நிறைந்த வரும், பாடுகளை அனுபவித்தவருமாயிருந்து, செங்கோல் யூதாவை விட்டு நீங்கினபின்பு, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களைவிட்டு ஒழிந்த பின்பு, முதல்தடவையாக வந்த மெய்யான மேசியாவாகிய நசரேயனாகிய இயேசுவே-இரண்டாம் விசை வான மேகங்களின்மீதும், பிரதான தூதனுடைய சத்தத்துடனும் வருவார்” என்று அவர் கூறினார். (Joseph Wolff,Researches and Missionary Labors,page 62). அவர் ஒலிவமலையின்மீது நிற்பார். படைப்பின்போது ஆதாமுக்கு ஒரு தடவை கொடுக்கப்பட்டு, அவனால் இழக்கப்பட்டுப்போன ஆளுகை இயேசுவிற்குக் கொடுக்கப்படும். (ஆதி. 1:26 3:17). அவர் சர்வபூமிக்கும் அரசராக இருப்பார். படைப்பில் காணப்படும் அலறுதலும் புலம்பலும் இல்லாமற்போகும். ஆனால் துதியின் பாடல்களும் நன்றிகூறுதலும் கேட்கப்படும்.... இயேசு அவருடைய பிதாவின் மகிமையுடனும் பரிசுத்த தூதர்களுடனும் வரும்போது.... இறந்துபோன விசுவாசிகள் முதலாவதாக எழும்புவார்கள். (1தெச. 4:16; 1 கொரி. 15:32). இதைத்தான் கிறிஸ்தவர் களாகிய நாம் முதலாம் உயிர்த்தெழுதல் என்கிறோம். அதன்பின் விலங்கினங்களின் தன்மை மாற, அவை இயேசுவிற்குக் கீழ்ப்படியும் (ஏசா. 11:6-9 சங்கீதம் 8). பிரபஞ்சமெங்கும் சமாதானம் நிலவும்”—Journal of the Rev. Joseph Wolff, pages 378,379. “கர்த்தர் மறுபடியும் பூமியைப்பார்த்து: ‘அது மிகவும் நன்றாயிருந்தது’ என்பார்.”—Ibid., page 294. (11)GCTam 413.2

    கர்த்தரின் வருகை மிகவும் சமீபம் என்று உல்ஃப் நம்பினார். அவரது தீர்க்கதரிசன காலங்களின் விளக்கங்கள் மில்லரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த கால அளவின்படி கர்த்தரின் வருகை சில வருடங்களுக்குள் இருப்பதுபோல் இருந்தது. “அந்த நாளையும் நாழிகையையும் ஒருவனும் அறியான்”,அவரது வருகையின் சமீபத்தைப்பற்றி மனிதர்கள் ஒன்றையும் அறியக்கூடாதவர்களாக இருக்கின்றனர் என்று வேதவாக்கியங்களை முன்வைத்துக் கேட்டவர் களுக்கு உல்ஃப்: “அந்த நாளும் நாழிகையும் ஒருபோதும் அறியப்படக்கூடாது என்று நமது கர்த்தர் கூறினாரா? அத்திமரத்தில் இளந்தளிர்கள் தோன்றும்போது வசந்தகாலம் சமீபமாயிருக்கிறதென்று ஒருவர் அறிந்துகொள்ளுவதுபோல் அவரது வருகையின் சமீபத்தை நாம் அறிந்துகொள்ளுவதற்காக காலங்களின் அடையாளங்களை அவர் நமக்குத் தரவில்லையா?—(மத்தேயு 24:32). அவர் தாமே தானியேலின் தீர்க்கதரிசனப் புத்தகத்தை வாசிப்பது மட்டுமன்றி, அதைப் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று உபதேசித்திருக்க, நாம் அந்தக் காலத்தை ஒருபோதும் அறியாதவர்களாக இருக்கவேண்டுமா? அதே தானியேலின் புத்தகத்தில், முடிவுகாலத்திற்கென்று (அவனது காலத்தில் அக்காலம் அப்படி இருந்தது) அவை மூடிவைக்கப்பட்டுள்ளன என்றும் ‘அநேகர் அங்கும் இங்கும் ஓடி ஆராய்வார்கள்’ (காலத்தைக் கவனிப்பதும் அதைப்பற்றிச் சிந்திப்பதும் ஆகியவைபற்றிய ஒரு எபிரெய வழக்குச்செல்) ‘அறிவும் பெருகிப்போம்’ (காலத்தைப்பற்றிய) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே (தானியேல்12:4). இதைத்தவிர, காலத்தின் சமீபம் அறியப்படாததாக இருக்குமென்று அல்ல, மிகச்சரியான ‘அந்தநாளையும் நாழிகையையும் ஒருவனும் அறியான்’ என்றுதான் நமது கர்த்தர் இதன்மூலம் கூறவிரும்புகிறார். நோவா பேழையை ஆயத்தம் செய்ததுபோல், அவரது வருகைக்கென்று ஆயத்தம்செய்ய நம்மைத் தூண்டும்படி, காலங்களின் அடையாளங்களால் போதுமான அளவிற்கு அறியப்படும் என்று அவர் கூறுகிறார்” என்று பதில் கூறினார்.-Wolff,Researches and Missionary Labors, pages 404, 405. (12)GCTam 414.1

    உல்ஃப் வேதவாக்கியங்களைச் சரியாகவோ அல்லது தவறாகவோ விளக்குவதுபற்றிய பெரும்பான்மையினரின் வழக்கத்தைப்பற்றி: “கிறிஸ்தவ சபையின் பெரும்பகுதி வேதவாக்கியத்திலுள்ள தெளிவான அர்த்தத்தை விட்டுவிட்டு, புத்தர்களின் கற்பனை அமைப்பிற்கு திரும்பியிருக்கின்றனர். அவர்கள், மனித இனத்தின் எதிர்கால மகிழ்ச்சி ஆகாயத்தில் சஞ்சரிப்பதில் இருக்கும் என்று நம்புகிறார்கள். யூதர்கள் என்று வாசிக்கும்போது அஞ்ஞானிகள் என்றும், எருசலேம் என்று வாசிக்கும்போது அதை சபை என்றும், பூமி என்றால் அதன் பொருள் வானம் என்றும், ஆண்டவரின் வருகையை மிஷனரி சொசைட்டிகளின் முன்னேற்றம் என்றும், தேவனுடைய வீடாகிய பர்வதத்திற்குச் செல்லுதல் என்றால் அது மெதடிஸ்டுகளின் மிகச்சிறந்த பெருங்கூட்டம் என்றும் புரிந்துகொள்ளுகின்றனர்” என்றார்.- Journal of the Rev. Joseph Wolff,page 96. (13)GCTam 415.1

    கி.பி.1821 முதல் 1845 வரையிலான இந்த இருபத்து நான்கு வருட காலத்தில் ஆப்பிரிக்கா, எகிப்து, அபிசீனியா போன்ற இடங்களுக்கும், ஆசியாவில் பாலஸ்தீனத்தைக் கடந்து சிரியா, பெர்சியா, பொக்காரா, இந்தியா ஆகிய விசாலமான இடங்களுக்கும் உல்ஃப் பயணம் செய்தார். அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் சந்தித்து, செயின்ட் ஹெலீனா தீவிலும் பிரசங்கம் செய்தார். 1837-ம் வருடம் ஆகஸ்டு மாதத்தில் நியூயார்க் வந்து சேர்ந்தார். அந்த நகரில் பேசியபின், பிலதெல்பியா, பால்டிமோர் ஆகிய இடங்களில் பிரசங்கித்தபின் வாஷிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். “ஜான் குன்சி ஆடம்ஸ் என்னும் முன்னாள் குடியரசுத் தலைவர் செய்த முயற்சியினால், காங்கிரஸ் மகாசபை கூடுகின்ற ஒரு அரங்கத்தைப் பயன்படுத்திக்கெள்ள ஏகமனதான அனுமதி கிடைத்தது. ஒரு சனிக்கிழமையில் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அனைவரது வருகையினாலும், வெர்ஜீனிய பிஷப்பின் வருகையினாலும், போதகர்கள், வாஷிங்டன் நகர மக்கள் ஆகியோரின் வருகையினாலும் கனப்படுத்தப்பட்டேன். இதே விதமான கௌரவத்தை நியூ ஜெர்சி, பென்சில்வேனியா ஆகிய அரசுகளிடமிருந்தும் பெற்று, நான் ஆசியாவில் நிகழ்த்திய எனது ஆராய்ச்சிகளைப்பற்றியும், கிறிஸ்துவின் நேரடியான ஆளுகையைப்பற்றியும், அந்த நாடுகளில் சொற்பொழிவாற்றினேன்” என்றும் கூறினார்.-Ibid., pages 398,399. (14)GCTam 415.2

    டாக்டர் உல்ஃப் எவ்வித ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்புமின்றி, துன்பங்களைச் சகித்துக்கொண்டு, எண்ணிலடங்கா ஆபத்துக்கள் சூழ, மிகப் பயங்கரமான காட்டுமிராண்டிகளின் நாட்டுப்புறங்களில் பயணம்செய்தார். அவர் சிறைப்பிடிக்கப்பட்டும் பட்டினியாகவும் அடிமையாக விற்கப்பட்டும், மூன்றுமுறை மரண தண்டனை விதிக்கப்பட்டவராகவும் இருந்தார். கொள்ளைக் கூட்டத்தினரால் சூழப்பட்டு, சில சமயங்களில் தாகத்தால் கிட்டத்தட்ட சாகும் நிலையை அடைந்தார். ஒரு சமயம் உடமைகளனைத்தும் பறிக்கப்பட்டவராக, மலைகளின் வழியாக, நூற்றுக்கணக்கான மைல்கள், பனிக்காற்று முகத்தில்வீச, வெறும்கால்கள் பனியால் உறைந்துபோயிருந்த நிலத்தைத் தொட்டதினால் மரத்துப்போக, நடந்துசெல்லும்படி விட்டுவிடப்பட்டார். (15)GCTam 416.1

    காட்டுமிராண்டிகளுக்கும், துன்பம் தரும் மலை ஜாதியினருக்கும் நடுவில், ஆயத்தமில்லாமல் செல்லுவதைப்பற்றி எச்சரிக்கப்பட்டபோது, “ஜெபம், கிறிஸ்துவின் மேலுள்ள வைராக்கியம், அவருடைய உதவியின் மீதுள்ள நம்பிக்கை” ஆகியவை தனக்கு ஆயுதங்களாக வழங்கப்பட்டுள்ளன என்று அவர் அறிவித்தார். “தேவ அன்பும், எனது இருதயத்தில் எனது அயல்வாசியும், எனது கரத்தில் வேதாகமமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.—W.H.D. Adams,In Perils Oft,page 192. அவர் சென்ற இடங்களிலெல்லாம் தன்னுடன் எபிரெய, ஆங்கில வேதாகமங்களைக் கொண்டுசென்றார். பிற்கால பயணம் ஒன்றைக் குறித்து: “நான் எனது வேதாகமத்தை எனது கரத்தில் திறந்து வைத்திருந்தேன். எனது வல்லமை இந்தப் புத்தகத்தில் உள்ளது என்றும், அதன் வல்லமை என்னைத் தாங்கும் என்றும் நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.-Ibid., page 201. (16)GCTam 416.2

    இவ்வாறாக, நியாயத்தீர்ப்பின் தூது உலகின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் செல்லும்வரை அவரது ஊழியத்தின் முயற்சியைத் தொடர்ந்தார். யூதர்கள், துருக்கியர்கள், இந்துக்கள் இன்னும் அநேக இனத்தவருக்கு மத்தியிலும் தேவனுடைய வார்த்தைகளை அவர் இந்த மாறுபட்ட மொழிகளில் பகிர்ந்தளித்து, எல்லா இடங்களிலும் சமீபித்துக்கொண்டிருக்கும் மேசியாவின் ஆளுகையை முன்னறிவிப்பவராக இருந்தார். (17)GCTam 416.3

    அவரது பொக்காரோ பயணத்தின்போது, ஒரு தூரமான இடத்தில் தனித்திருந்த மக்கள், கர்த்தரின் அதிசீக்கிர வருகையைப் பற்றிய கோட்பாட்டைப் பற்றியிருந்ததை அவர் கண்டார். “ஏமன் நாட்டிலுள்ள அராபியர்கள் சீரா என்கிற ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் அவருடைய மகிமைமிக்க ஆட்சியையும் அறிவிக்கிறது. 1840-ல் பெரும் சம்பவங்கள் நிகழும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.-Journal of the Rev. Joseph Wolff,page 377. “ஏமன் நாட்டில் ரேகாபியர்களின் பிள்ளைகளுடன் நான் ஆறு நாட்கள் தங்கினேன். அவர்கள் திராட்சைரசம் குடிப்பதில்லை. திராட்சைத் தோட்டத்தைப் பயிரிடுவதும் இல்லை. விதை விதைப்பதில்லை. கூடாரங்களில் வாழுகின்றனர். ரேகாபின் மகனான யோனத்தானின் வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களோடு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த இஸ்ரவேலின் பிள்ளைகளை கண்டேன்.... அவர்களும் ரேகாபியரின் பிள்ளைகளுடன் சேர்ந்து, வான மேகங்களின்மேல் மேசியாவின் அதிசீக்கிர வருகையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.”—Ibid., page 389. (18)GCTam 416.4

    இதே போன்ற விசுவாசம், டாட்டாரி என்கிற இடத்திலிருப்பது, வேறொரு மிஷனரியால் கண்டறியப்பட்டது. கிறிஸ்து இரண்டாவது தடவையாக எப்போது வருவார்? என்னும் கேள்வியை ஒரு டாட்டாரிய ஆசாரியன் இந்த மிஷனரியிடம் கேட்டான். அந்த மிஷனரி தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியபோது, தன்னை ஒரு வேதாகம ஆசிரியர் என்று கூறிக்கொள்பவரின் அறியாமையைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு, தீர்க்கதரிசனத்தின்மேலிருந்த தனது சொந்த நம்பிக்கையை கிறிஸ்து 1844— ல் வருவார் என்று அறிவித்தான். (19)GCTam 417.1

    கி.பி.1826-ம் ஆண்டுக்கும் முன்னரே வருகையின் தூது இங்கிலாந்தில் பிரசங்கிக்கப்பட ஆரம்பித்தது. இந்த இயக்கம் அமெரிக்காவில் இருந்ததைப்போன்று ஒரு குறிப்பான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. வருகையின் மிகச்சரியான நேரம் பொதுவாகப் போதிக்கப்படாமல், வல்லமையுடனும், மகிமையுடனும் இருக்கும் கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையின் பெரும் சத்தியம் பரவலாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரிவினைவாதிகளுக்கும் இசைவற்றவர் களுக்கும் மத்தியிலுங்கூட அந்த நம்பிக்கை இருந்தது. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை அறிவிப்பதில், இங்கிலாந்து சபையைச் சேர்ந்த ஏறத்தாழ 700 ஊழியக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று மௌரான்ட் நப்ராக் என்னும் ஆங்கில எழுத்தாளர் கூறுகிறார். கிரேட் பிரிட்டனிலும் கர்த்தரின் வருகை 1844-ல் நிகழும் என்பதைச் சுட்டிக்காட்டும் தூது கொடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மாநிலங்களிலிருந்து வந்த வருகையின் வெளியீடுகள் பரவலாக எங்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருந்தன. புத்தகங்களும் பத்திரிக்கைகளும் இங்கிலாந்தில் மீண்டும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவிலிருந்தபோது வருகையின் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட, பிறப்பினால் ஆங்கிலேயராயிருந்த ராபர்ட் வின்டா என்பவர், கர்த்தரின் வருகையை முன்னறிவிப்பதற்கென்று தனது பிறந்த ஊருக்குத் திரும்பிவந்தார். இப்பணியில் அநேகர் அவருடன் ஐக்கியப்படவே, இங்கிலாந்தின் பல பகுதியிலும் நியாயத்தீர்ப்பின் தூது அறிவிக்கப்பட்டது. (20)GCTam 417.2

    காட்டுமிரண்டித்தனங்களுக்கும், பூசாரித்தனங்களுக்குமிடையில், தென்அமெரிக்காவிலிருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான லகுன்சா என்னும் ஜெஸுய்ட் குரு, வேத வசனங்களுக்கு நடத்தப்பட்டு, கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையின் சத்தியத்தைப் பெற்றுக்கொண்டார். அந்த எச்சரிப்பைக் கொடுக்கும்படி ஏவப்பட்ட அவர், ரோமன் கத்தோலிக்க சபையின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காக, அவரது கருத்துக்களை “ரபி பென்- இஸ்ரவேல்” என்னும் மதம்மாறின யூதனாகக் காட்டும் புனைப்பெயரால் வெளியிட்டார். லகுன்சா பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆனால் 1825—ல் இந்தப் புத்தகம் லண்டனுக்குத் தன்வழியைக் கண்டு, அங்கு சென்றபின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இரண்டாம் வருகை என்னும் பொருள்பற்றி ஏற்கனவே அங்கு நிலவியிருந்த ஆர்வத்தை அந்த வெளியீடு அதிகமாக ஆழமாக்க உதவியது. (21)GCTam 418.1

    ஜெர்மனியில் இந்தக் கோட்பாடு பதினெட்டாம் நூற்றாண்டில் பென்ஜெல் என்பவரால் ஆதரிக்கப்பட்டது. அவர் ஒரு லுத்தரன் சபைப் போதகராகவும் புகழ்வாய்ந்த வேதாகம அறிஞராகவும் விமர்சகராகவும் இருந்தார். பென்ஜெல் வேதாகம ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். “ஆரம்பகாலத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால், அவரது சமய சம்பந்தமான தன்மையிலிருந்த விருப்பத்தை அது ஆழப்படுத்தியிருந்தது. சிந்தனைமிக்க சுபாவத்தை உடையவர்களான மற்ற இளைஞர்களைப்போலவே, அவரும் இதற்கு முன்னரும், இந்நேரத்திலிருந்தும் மத சம்பந்தமான சந்தேகங்களுடனும், கஷ்டங்களுடனும் போராடவேண்டியவராக இருந்தார். ‘அவரது பலவீனமான இருதயத்தைத் துளைத்து, அவரது இளமையைக் கடினமாக்கியிருந்த அநேக அம்புகளைப் பற்றி’ மிகுந்த உணர்ச்சியுடன் மேற்கோள் காட்டுகிறார். ஊர்ட்டம்பர்க் சபையின் தொடர் அங்கத்தினராகி, மதச் சுதந்திரத்திற்கான காரணத்தை அவர் எடுத்துக்கூறினார். சபைக்குள்ள சலுகைகளையும் உரிமைகளையும் ஆதரித்த அதே நேரத்தில், மனச்சாட்சியின் அடிப்படையில் எவர்கள் சபையின் தொடர்பிலிருந்து பின்வாங்கிச் செல்லவேண்டுமென்ற உணர்வைக் கொண்டுள்ளனரோ, அதற்குக் கட்டுப்பட அவர்களது அறிவுமிக்க சுதந்திரத்திற்காக அவர் வாதாடினார்.”—Encyclopaedia Britannica,9th ed.,art. அவரது செந்த மாநிலத்தில் இதன் நல்ல பலன்கள் இன்றும் உணரப்படுகின்றன. (22)GCTam 418.2

    “அட்வெந்து ஞாயிற்றுக்கிழமை” பிரசங்கத்திற்காக அவர் வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரத்திலிருந்து ஆயத்தம்செய்து கொண்டிருந்தபோது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய ஒளியானது பென்ஜெலின் மனதில் உதித்தது. இதுவரை ஒருபோதும் இல்லாதவிதத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்கதரிசனங்கள் அவரது புரிந்துகொள்ளுதலுக்கு விரிவடைந்தது. தீர்க்கதரிசியினால் முன்வைக்கப்பட்ட பிரமிப்பூட்டுகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததும் எல்லையில்லா மகிமைமிக்கதுமான காட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டு, அவர் சிறிது நேரம் அவரது பிரசங்கப் பொருள்பற்றியத் தியானத்திலிருந்து திரும்பினார். அவர் பிரசங்க பீடத்திலிருந்துபோது, அந்த விஷயம் மறுபடியும் அவருக்கு, அதன் தெளிவுடனும் வல்லமையுடனும் காட்டப்பட்டது. அந்த நேரத்திலிருந்து, அவர் தீர்க்கதரிசனங்களை ஆராய்வதில் ஈடுபட்டு, விரைவில் அவைகள் கிறிஸ்துவின் வருகையின் சமீபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன என்னும் நம்பிக்கைக்கு வந்துசேர்ந்தார். இரண்டாம் வருகையைப்பற்றி அவர் நிச்சயித்திருந்த தேதி, பின்னர் மில்லரால் பற்றிக்கொள்ளப்பட்ட தேதிக்கு சில வருடங்களுக்குள் இருந்தன. (23)GCTam 419.1

    கிறிஸ்தவ உலகம் முழுவதற்கும் பென்ஜெல் அவர்களின் எழுத்துக்கள் பரவிக்கொண்டிருந்தன. அவரது சொந்த மாநிலமான ஊட்டம்பர்க்கிலும், ஓரளவிற்கு ஜெர்மனியின் இதர பாகங்களிலும், அவரது தீர்க்கதரிசன நோக்குகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவரது மரணத்திற்குப் பின்னரும் அந்த இயக்கம் தொடர்ந்து, வருகையின் தூது ஜெர்மனியில் கேட்கப்பட்ட அதே சமயத்தில், மற்றநாடுகளின் கவனத்தையும் அது கவர்ந்துகொண்டிருந்தது. ஆரம்பநாட்களில் சில விசுவாசிகள் ரஷ்யாவுக்குச்சென்று, அங்கு காலனிகளை அமைத்தனர். அந்த நாட்டிலுள்ள ஜெர்மன் ஆலயங்களில், இன்றைக்கும் கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையைப்பற்றிய விசுவாசம் இருக்கிறது. (24)GCTam 419.2

    பிரான்சிலும், சுவிட்சர்லாந்திலுங்கூட ஒளி பரவியது. பாரலும், கால்வினும் சீர்திருத்தத்தின் சத்தியத்தைப் பரப்பியிருந்த ஜெனீவாவில் இரண்டாம் வருகையின் தூதை கசேன் என்பவர் பிரசங்கித்தார். கசேன் என்பவர் ஒரு மாணவராக இருந்தபோது, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஐரோப்பா எங்கும் பரவியிருந்த பகுத்தறிவுவாதத்தின் ஆவியைச் சந்தித்து, அவர் ஊழியத்திற்குள் பிரவேசித்தபோது, மெய்யான விசுவாசத்தைப்பற்றிய அறியாமை உள்ளவராக இருந்ததோடுமட்டுமின்றி, சந்தேகவாதத்தில் விருப்பமுள்ளவராகவு மிருந்தார். “ரோலின்ஸ்-ன் பண்டைய வரலாறு” என்கிற நூலை வாசித்தபின், அவரது கவனம் தானியேல் இரண்டாம் அதிகாரத்திற்குச் சென்றது. அந்த வரலாற்று ஆசிரியர் எழுதியிருந்தபடி, ஆச்சரியமான விதத்தில் மிகச் சரியாக அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைக்கண்டு வியந்தார்! வேதவாக்கியங்கள் ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்கிற இந்தச் சாட்சி, பிற்காலத்தில் உண்டான ஆபத்துகளுக்கு நடுவில் அவருக்கு ஒரு நங்கூரமாக இருந்தது. பகுத்தறிவுவாதத்தின் போதனையால் திருப்தியடைய முடியவில்லை. வேதாகமத்தைப் படித்து, தெளிவான வெளிச்சத்திற்காக ஆராய்ந்ததால், சிறிது காலத்திற்குப்பின், அது அவரைச் சரியான விசுவாசத்திற்குள் நடத்தினது. (25)GCTam 419.3

    தீர்க்கதரிசனங்களை தொடர்ந்து ஆராய்ந்தபோது, கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது என்னும் நம்பிக்கைக்கு அவர் வந்துசேர்ந்தார். இந்த மாபெரும் சத்தியத்தின் பக்திவிநயத்தையும் முக்கித்துவத்தையும் உணர்ந்த அவர், அதை மக்கள்முன் கொண்டுவர வாஞ்சித்தார். ஆனால் தானியேலின் தீர்க்கதரிசனங்கள் தேவ இரகசியமானவையும் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் உள்ளன என்னும் பிரபலமான நம்பிக்கை, அவரதுபாதையில் மோசமான ஒரு தடையாகவிருந்தது. ஜெனீவாவிற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அவருக்கு முன்பாகவே பாரல் செய்ததுபோல சிறுவர்களிடம் தொடங்கி, அவர்கள் மூலமாக பெற்றோரின் ஆர்வத்தைத் தூண்டலாமென இறுதியில் தீர்மானித்தார். (26)GCTam 420.1

    இந்தக் காரியத்தைச் செய்வதில் அவரது நோக்கத்தைப்பற்றிப் பின்னர் அவர்: “இது புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று விரும்புகிறேன். அதன் சிறிய முக்கியத்துவத்தின் காரணமாக அல்ல. அதற்குமாறாக, அதன் பெருமதிப்பின் காரணமாக, நான் பழக்கப்பட்டமுறையில் அதை முன்வைக்க விரும்பி, அதைச் சிறுவர்களுக்குக் கூறினேன். அது கேட்கப்படவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் பெரியவர்களிடம் முதலில் நேரடியாகக் கூறியிருந்தால், கேட்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே, சிறுவர்களிடம் சொல்லத் தீர்மானித்தேன். நான் கூறுவதை கேட்கக்கூடியவர்களான ஒரு சிறுவர்கூட்டத்தைச் சேர்க்கிறேன். அந்தஅணி பெரியதானால், அவர்கள் கவனிப்பதுபோல் காணப்பட்டால், சந்தோஷமுள்ளவர்களாக இருந்தால், ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், அவர்களால் அந்தப் பொருளைப் புரிந்து விளக்கமுடிந்தால், இரண்டாவது அணியை நிச்சயமாகத் திரட்டலாமென்றிருந்தேன். அப்படிச்செய்தால், அமர்ந்து ஆராய்வது மதிப்புடையது என்று பெரியவர்களும் காண்பார்கள். அப்படிச்செய்யும்போது அதன் நோக்கம் வெற்றியடைகிறது” என்றார்.--L. Gaussen, Daniel the Prophet,vol. 2,Preface. (27)GCTam 420.2

    அந்த முயற்சியானது வெற்றிகரமானதாக இருந்தது. அவர் சிறுவர்களுக்குப் பிரசங்கித்தபோது பெரியவர்களும் கவனிப்பதற்கு வந்தனர். அவரது ஆலயத்தின் ஆசனங்கள் அனைத்தும் கவனமாகக் கேட்பவர்களால் நிறைந்தன. அவர்களில் உயர்ந்த அந்தஸ்தை உடையவர்களும், கற்றோரும், அந்நியர்களும், வெளிநாட்டிலிருந்து ஜெனீவாவிற்கு பார்வையாளர் களாக வந்திருந்தவர்களும் இருந்தனர். இவ்விதமாக அந்தத் தூது மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. (28)GCTam 421.1

    இதன் வெற்றியினால் தைரியமடைந்த கசேன், பிரெஞ்ச்மொழி பேசிய மக்களிருந்த சபைகளில், தீர்க்கதரிசன ஆராய்ச்சியை மேம்படுத்தும் நம்பிக்கையுடன், அவரது பாடங்களை வெளியிட்டார். “சிறுவர்களுக்கான போதனைகளை வெளியிடுவது, ‘அந்தப் புத்தகங்கள் புரிந்துகொள்ள முடியாதவை’ என்கிற தவறான நோக்கத்தில் அவைகளை வாசிக்காமல், அடிக்கடி அலட்சியம் செய்யும் பெரியவர்களிடம் ‘உங்கள் பிள்ளைகள் அவைகளைப் புரிந்துகொண்டிருக்கும்போது, அவைகள் இருளானவை என உங்களால் எப்படிக் கூறவியலும்?’ என்று பேசுவதாக இருந்தது.” ‘கூடுமானால் நமது கூட்டத்தில் இருப்பவர்களில் புகழ்வாய்ந்தவர்களுக்கு தீர்க்கதரிசன அறிவைக் கொடுக்க எனக்கு ஒரு பெரும் வாஞ்சை இருந்தது.” “அக்காலத்தின் தேவைகளுக்கு பதில் தருவதாக எனக்குக் காணப்பட்ட வேறு ஆராய்ச்சி உண்மையில் இருக்கவில்லை.” “இதன் வழியாகத்தான் சமீபத்திலுள்ள உபத்திரவத்திற்கென்று நாம்ஆயத்தம் செய்து, இயேசு கிறிஸ்துவிற்காக விழித்துக் காத்திருக்கவேண்டும்.” (29)GCTam 421.2

    பிரெஞ்சு மொழியில் பிரசங்கித்த ஊழியர்களில், மிகச்சிறப்பு வாய்ந்தவர்களில் ஒருவராக கசேன் இருந்தபோதிலும், சிறிது காலத்திற்குப்பின் அவர் ஊழியத்தில் இருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தலையாய குற்றம்... இளைஞர்களுக்குப் போதிப்பதற்கு விசுவாசத்திற்கு வழிநடத்தாத, பழக்கப்பட்ட, பகுத்தறிவார்ந்த சபைக்கொள்கை புத்தகத்தை உபயோகிக்காமல், வேதாகமத்தைப் பயன்படுத்தினார் என்பதே! பின்னர் அவர் வேறொரு சமயத்துறைப் பள்ளியில் ஆசிரியரானார். ஞாயிற்றுக்கிழமையில் உபதேசியாராகத் தனது பணியை தொடர்ந்து, சிறுவர்களுக்கு வேத வாக்கியங்களிலிருந்து போதித்தார். தீர்க்கதரிசனங்களின்மீதான அவரது புத்தகங்கள் பெரும் ஆர்வத்தை எழுப்பியது. பேராசிரியருடைய ஆசனத்திலிருந்தும், அச்சகத்தின் மூலமாகவும், சிறுவர்களுக்கான உபதேசியார் என்னும் அவருக்குப் பிடித்தமான வேலைமூலமாகவும், அதிகக் காலம் பரவலான செல்வாக்கை ஏற்படுத்தி, கர்த்தருடைய வருகை சமீபமாக இருக்கிறது என்பதைக் காட்டியிருந்த தீர்க்கதரிசன ஆராய்ச்சிக்கு ஏராளமானவர்களின் கவனத்தை அழைக்கும் கருவியாக இருந்தார்.(30)GCTam 421.3

    ஸ்காண்டிநேவியாவிலும் வருகையின் தூது அறிவிக்கப்பட்டு, பரவலான ஆர்வம் எழுப்பப்பட்டது. அநேகர் அஜாக்கிரதையான பாதுகாப்பிலிருந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிடவும், விட்டுவிடவும், கிறிஸ்துவின் பெயரால் பாவமன்னிப்பைத் தேடவும் எழுப்பப்பட்டனர். ஆனால், அரசுசபைப் போதகர்கள் இந்த இயக்கத்தை எதிர்த்தனர். அவர்களது செல்வாக்கினால் இந்தத் தூதைப் பிரசங்கித்த சிலர், சிறையில் தள்ளப்பட்டனர். கர்த்தரின் அதிசீக்கிர வருகையைப்பற்றி அறிவித்த பிரசங்கிமார்கள் பல இடங்களிலும் இவ்விதமாக மௌனப்படுத்தப்பட்டபோது, அதிசயமான விதத்தில், சிறுவர்களின் மூலமாக இந்தத் தூதை அனுப்புவது தேவனுக்குப் பிரியமாக இருந்தது. அவர்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்ததினால், நாட்டின்சட்டம் அவர்களைத் தடைசெய்யமுடியாது இருக்கவே, அவர்கள் தடையின்றிப் பேச அனுமதிக்கப்பட்டனர். (31)GCTam 422.1

    இந்த இயக்கம் முக்கியமாக சமுதாயத்தின் கீழான நிலைமையில் இருந்தவர்களுக்கிடையில் இருந்தது. தாழ்மையான கூலிக்காரர்களின் இல்லங்களில், எச்சரிப்பைக் கேட்க மக்கள் கூடினர். குழந்தைப் பிரசங்கிகளும், பெரும்பாலும் ஏழைக்குடிசைவாசிகளாக இருந்தனர். அவர்களில் சிலர் ஆறு அல்லது எட்டு வயதிற்கும் குறைவானவர்களாக இருந்தனர். அவர்கள் இரட்சகரை நேசித்திருந்ததற்கு, அவர்களது வாழ்க்கை சாட்சிபகர்ந்திருந்த போதும், தேவனுடைய பரிசுத்த நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க அவர்கள் முயன்றிருந்தபோதும், சாதாரணமான அந்த வயதையொத்த சிறுவர்களிடம் வழக்கமாகக் காணப்படும் நுண்ணறிவையும் திறமையையுமே வெளிக்காட்டினர். ஆனாலும், மக்கள்முன் நின்றபோது, அவர்களுடைய இயற்கையான ஈவுகளுக்கும் மேலான ஒரு செல்வாக்கினால் இயக்கப்பட்டிருந் தனர் என்பது தெளிவாக தெரிந்தது. அவர்களது குரலின் தன்மையும் விதமும் மாறி, பக்தி விநயமிக்க வல்லமையுடன்: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என்னும் அதே வாக்கியங்களைப் பயன்படுத்தி, நியாயத்தீர்ப்பைப்பற்றின எச்சரிப்பைக் கொடுத்தனர். மக்களின் பாவங்களைக் கடிந்துகொண்டு, சன்மார்க்கக் கேடு, தீய பழக்கங்கள், உலகப்பிரகாரமான தன்மை, பின்வாங்கிச் செல்லுதல் ஆகியவைகளையும் கடிந்துகொண்டு, வரவிருக்கும் கோபத்திலிருந்து தப்பியோடும்படி, கேட்டவர்களை எச்சரித்தனர். (32)GCTam 422.2

    மக்கள் நடுக்கத்துடன் கேட்டனர். குற்றத்தை அறிவுறுத்தும் தேவ ஆவியானவர், அவர்களது இருதயங்களில் பேசினார். புதியதும் ஆழமிக்கதுமான ஆர்வத்துடன் அநேகர் வேதவாக்கியங்களைத் தேட நடத்தப்பட்டனர். புலனடக்கமற்றவர்களும், சன்மார்க்கமற்றவர்களும் சீர்திருந்தினர். மற்றவர்கள் அவர்களது நேர்மையற்ற பழக்கங்களை விட்டொழித்தனர். இந்த இயக்கத்தில் தேவனுடைய கரம் இருக்கிறது என்று அரசுசபைப் போதகர்களுங்கூட அறிக்கைசெய்ய நெருக்கப்படும் விதத்தில் குறிப்பாக அந்த ஊழியம் நடந்தது. (33)GCTam 422.3

    ஸ்காண்டிநேவியா நாடுகளில் இரட்சகரின் வருகையைப்பற்றிய செய்தி கொடுக்கப்படவேண்டுமென்பது தேவனுடைய சித்தமாக இருந்தது. அவரது ஊழியக்காரர்களின் சத்தங்கள் மௌனப்படுத்தப்பட்டபோது, அந்த ஊழியம் நிறைவேறும்படியாக, சிறுவர்களின் மீது அவர் தமது ஆவியை வைத்தார். வெற்றி முழக்கத்தோடு குருத்தோலைகளை அசைத்து, அவரைத் தாவீதின் குமாரன் என்று முன்னறிவித்த திரள்கூட்டமானவர்கள் சூழ இயேசு எருசலேமை நெருங்கினபோது, பொறாமைமிக்க பரிசேயர்கள் அவர்களை மௌனப்படுத்தும்படி இயேசுவைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் இவை அனைத்தும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல். இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று இயேசு கூறினார். ஆசாரியர்கள் அதிபதிகளின் பயமுறுத்தல்களினால், பயந்துபோன மக்கள், எருசலேமின் வாசலுக்குள் நுழைந்தபோது, அவர்களது மகிழ்ச்சியின் அறிவிப்பை நிறுத்திவிட்டனர். ஆனால் அதன்பின் ஆலயப் பிராகாரத்தில் இருந்த சிறுவர்கள், விட்டுவிடப்பட்ட அந்தத் துதியை எடுத்து, குருத்தோலைகளை அசைத்து, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கினர். மிகவும் வெறுப்படைந்த பரிசேயர்கள் அவரை நோக்கி: “இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்” மத்தேயு 21:8-17. கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது, தேவன் பாலகர்களின் மூலமாகச் செயலாற்றியது போலவே, இரண்டாம் வருகையின் தூதைக் கொடுக்கவும் அவர்கள் மூலமாகச் செயலாற்றினார். இரட்சகரின் வருகையைப் பற்றிய அறிவிப்பு, சகல ஜனங்களுக்கும் பாஷைக்காரர்களுக்கும் ஜாதியினருக்கும் கொடுக்கப்பட்டாகவேண்டும் என்கிற தேவனுடைய வார்த்தை நிறைவேறவேண்டும். (34)GCTam 423.1

    அமெரிக்காவில் இந்த எச்சரிப்பின் ஊழியத்தைச் செய்யும் பணி, வில்லியம் மில்லருக்கும், அவரது உடன் ஊழியக்காரர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. மாபெரும் அட்வெந்து இயக்கத்திற்கு இந்த நாடு மையமாக அமைந்தது. இங்குதான் முதலாம் தூதனுடைய தூதைப்பற்றிய தீர்க்கதரிசனம் நேரடியாக நிறைவேறியது. மில்லரும் அவரது உடன் ஊழியர்களும் எழுதியவைகள் தூர தேசங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. மிஷனரிமார்கள் உலகம் முழுவதிலும் எங்கெல்லாம் நுழைந்தனரோ, அங்கெல்லாம் கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையைப்பற்றிய நற்செய்தி கொண்டுசெல்லப்பட்டது. “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என்னும் நித்திய சுவிசேஷத்தின் தூது தூரமாகவும் விசாலமாகவும் பரவியது. (35)GCTam 423.2

    கிறிஸ்துவின் வருகை 1844-ம் ஆண்டின் வசந்த காலத்தில் இருக்கும் என்பதுபோல் சுட்டிக்காட்டின தீர்க்கதரிசனச் சான்றுகள், மக்களின் மனங்களை ஆழமாகப் பற்றிக்கொண்டது. அத்தூது ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குச் சென்றபோது, எங்கும் மிகப்பரவலான ஆர்வம் எழுப்பப்பட்டது. தீர்க்கதரிசன காலத்தின் அடிப்படையிலிருந்து உண்டான வாதங்கள் சரியானவை என்னும் மன உணர்த்துதல் அநேகரில் உண்டாக, அவர்களது சொந்தக்கருத்தின் பெருமையை விட்டுவிட்டு, சத்தியத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். சில ஊழியர்கள் தங்களது சபைப் பாகுபாடு என்கிற உணர்ச்சிகளையும் நோக்குகளையும் ஒரு பக்கமாக வைத்துவிட்டு, தங்களது சம்பளங்களையும் சபைகளையும் தள்ளிவிட்டு, இயேசுவின் வருகையை அறிவிப்பதில் ஒன்றுபட்டனர். இத்தூதை ஏற்றுக்கொண்ட ஊழியக்காரர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும்போது சிலராக இருந்தபடியால், பெருமளவிற்கு தாழ்மையான சுயாதீன ஊழியர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலங்களை விட்டுவிட்டனர். மெக்கானிக்குகள் தங்கள் கருவிகளையும், வியாபாரிகள் அவர்களது வியாபாரங்களையும், தொழில் நுணுக்கமிக்கவர்கள் தங்கள் தொழில்களையும் விட்டுவிட்டனர். அப்படியிருந்தும் நிறைவேற்றி முடிக்கவேண்டிய ஊழியத்துடன் ஒப்பிடப்பட்டபோது, அவர்களது எண்ணிக்கை மிக்குறைவாகவே இருந்தது. சபையின் தெய்வபக்தியற்ற நிலையும், துன்மார்க்கத்தில் கிடக்கும் ஒரு உலகமும் மெய்யான காவலாளிகளின் ஆத்துமாக்களைப் பாரப்படுத்தியது. இரட்சிப்புக்கேதுவாக மனந்திரும்பும்படி மனிதர்களை அழைப்பதற்காக அவர்கள் உழைப்பையும், தனிமையையும், பாடுகளையும் விருப்பத்துடன் சகித்தனர். சாத்தானால் எதிர்க்கப்பட்டபோதிலும் அந்த ஊழியம் சீராக முன்சென்றது. வருகையின் சத்தியம் ஆயிரக்கணக்கானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (36)GCTam 424.1

    உலகப்பிரகாரமானவர்கள், சபை அங்கத்தினர் ஆகிய இருவகுப்பு பாவிகளையும் வரும் கோபத்திற்குத் தப்பிக்கொள்ளும்படியாக எச்சரித்த இருதயங்களை ஆராயும் சாட்சி எங்கும் கேட்கப்பட்டது. கிறிஸ்துவிற்கு முன்சென்ற யோவான் ஸ்நானகனைப் போல, பிரசங்கிமார்கள் மரத்தின் வேர் அருகே கோடாரிகளை வைத்து, மனந்திரும்புதலுக்கேதுவான கனிகளை கொடுக்கும்படி அனைவரையும் மன்றாடினர். பிரபலமான மேடைகளிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிச்சயித்திருந்த செய்திகளுக்கு எதிரிடையாக அவர்களுடைய இருதயங்களைக் தூண்டும் வேண்டுகோள்கள் இருந்தன. ஆவியானவரின் வல்லமையோடு வேத வாக்கியங்களில் இருந்த மிக எளிமையான, நேரடியான சாட்சிகள் ஆழமான உணர்த்துதலைக் கொண்டுவர, வெகு சிலரால் மட்டுமே அதை முழுமையாக தடுக்கமுடிந்தது. சமயவாதிகள் அவர்களது பொய்யான பாதுகாப்பிலிருந்து எழுப்பப்பட்டனர். அவர்கள் தங்களுடைய பின்வாங்குதலையும், உலகப்பிரகாரமான வாழ்க்கையையும், அவநம்பிக்கை, பெருமை, சுயநலம் ஆகியவைகளையும் கண்டனர். அநேகர் மனந்திரும்புதலுடனும், தாழ்மையுடனும் கர்த்தரைத் தேடினர். இதுவரை உலகப் பொருட்களின்மீது வைக்கப்பட்டிருந்த பற்று இப்போது பரலோகத்தின் மீது பதிக்கப்பட்டது. தேவ ஆவியானவர் அவர்களின்மீது தங்கினார். அவர்கள் மென்மையாக்கப்பட்ட சாந்தமடைந்த இருதயங்களுடன் “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என்னும் குரலை எழுப்பிட இணைந்தனர்.(37)GCTam 424.2

    “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று பாவிகள் அழுகையுடன் விசாரித்தனர். நேர்மையற்ற வாழ்க்கையினால் குறித்துக்காட்டப்பட்டிருந்தவர்கள், திரும்ப அதை எடுத்துக்கட்ட அக்கரை உள்ளவர்களானார்கள். கிறிஸ்துவில் சமாதானத்தைக் கண்ட அனைவரும் பிறரும் அந்த ஆசீர்வாதத்தில் பங்குபெறுவதைக் காண ஏங்கினர். பிதாக்களின் இருதயங்கள் பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளைகளின் இருதயங்கள் பிதாக்க ளிடத்திற்கும் திருப்பப்பட்டன. அகந்தை, ஒதுங்கியிருந்த தடைகள் அடித்து நீக்கப்பட்டன. இருதயப்பூர்வமான பாவஅறிக்கைகள் செய்யப்பட்டு, வீட்டின் அங்கத்தினர்கள் யாவரும் தங்களுக்கு அருகிலிருந்தவர்கள், அன்பானவர் களுடைய இரட்சிப்பிற்காக உழைத்தனர். அக்கரையோடு பரிந்துபேசின சத்தம் அடிக்கடி கேட்கப்பட்டது. மிகுந்த மனத்துயருடன் தேவனை நோக்கிக் கெஞ்சி மன்றாடும் ஆத்துமாக்கள் எங்கும் காணப்பட்டன. தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்கிற நிச்சயத்தைப்பெறவோ அல்லது தங்களது உறவினர்கள், அயலார்கள் ஆகியோரின் மாற்றத்திற்காகவோ அநேகர் இரவு முழுவதும் ஜெபத்தில் போராடினர். (38)GCTam 425.1

    அட்வெண்டிஸ்டுகளின் கூட்டங்களுக்கு எல்லா வகுப்பினரும் கூடினர். செல்வந்தர் வறியோர், உயர்ந்தோர்—தாழ்ந்தோர் ஆகிய பல்வேறு வகைப்பட்டவர்கள் தங்களுக்கென்று இரண்டாம் வருகையின் கோட்பாட்டைக் கேட்க ஆவலுள்ளவர்களாக இருந்தனர். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவர்களுடைய விசுவாசத்திற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தபோது, எதிர்ப்பின் ஆவியைக் கர்த்தர் தடுத்து நிறுத்தியிருந்தார். சில சமயங்களில் இதைச்செய்த கருவி பலவீனமானதாக இருந்தது. ஆனால் தேவ ஆவியானவர் அவரது சத்தியத்திற்கு வல்லமை கொடுத்தார். இந்தக் கூட்டங்களில் பரிசுத்த தேவ தூதர்களின் பிரசன்னம் இருப்பது உணரப்பட்டு, தினந்தோறும் அநேகர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகைக்கான சான்றுகள் திரும்பத்திரும்பக் கூறப்பட்டபோது, மிகத்திரளான கூட்டமானவர்கள் பக்திவிநயமான இந்தச் சத்தியத்தை மௌனமாகக் கவனித்தனர். பரலோகமும் பூலோகமும் ஒன்றையொன்று நெருங்கியது போல் காணப்பட்டது. முதியோர், இளைஞர், மத்திய வயதுடையோர் ஆகியோரின்மீது தேவனுடைய வல்லமை உணர்த்தப்பட்டிருந்தது. மனிதர்கள் உதடுகளில் துதியுடன் தங்களது வீடுகளைத் தேடித் திரும்பிச்சென்றனர். அமைதிமிக்க இரவில், மகிழ்ச்சிகரமான அந்த சத்தம் மணியோசையாக ஒலித்தது. அந்தக் கூட்டங்களில் பங்குபெற்ற எவராலும் மிகுந்த ஆழமிக்க ஆர்வத்தின் காட்சிகளை ஒருபோதும் மறக்க இயலாது. (39)GCTam 425.2

    கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய குறிப்பான நேரத்தின் அறிவிப்பு, பிரசங்க மேடையிலிருந்த ஊழியரிலிருந்து, மோசமான உணர்வற்ற, பரலோகத்தை எதிர்க்கத் துணியும் பாவி வரை, பல வகுப்பைச் சேர்ந்த ஏராளமானவர்களிடமிருந்து எதிர்ப்பைக் கொண்டுவந்தது. “முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்” (2பேதுரு 3:3,4) என்கிற தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறின. இரட்சகரை நேசிக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்த அநேகர், இரண்டாம் வருகையின் கோட்பாட்டை அல்ல, அதன் குறிப்பான நேரத்தையே மறுப்பதாக அறிவித்தனர். ஆனால் சகலத்தையும் காணும் தேவனுடைய கண்கள், அவர்களது இருதயங்களை ஆராய்ந்தது. உலகத்தை நீதியாக நியாயம் தீர்க்க கிறிஸ்து வருகிறார் என்பதைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உண்மையற்ற வேலைக்காரர்களாக இருந்தனர். அவர்களது செயல்கள் இருதயங்களை ஆராயும் தேவனுடைய சோதனையைத் தாங்கிக்கொள்ளாது. எனவே, அவர்கள் கர்த்தரைச் சந்திக்கப் பயந்தனர். இயேசுவின் முதலாம் வருகையின்போது இருந்த யூதர்களைப்போலவே, இவர்களும் கிறிஸ்துவை வரவேற்க ஆயத்தமில்லாதவர்களாக இருந்தனர். வேதாகமத்திலிருந்த தெளிவான வாதங்களைக் கவனிப்பதற்கு மறுத்தது மட்டுமன்றி, கர்த்தருக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்களையு ம் அவர்கள் பரிகசித்துச் சிரித்தனர். சாத்தானும் அவனது தூதர்களும் வெற்றியுடன் எக்களித்து, அவருடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், அவர்மீது மிகக் குறைவான அன்பு வைத்திருப்பதால் அவருடைய வருகையை விரும்பாமலிருக்கின்றனர் என்கிற நிந்தனையைக் கிறிஸ்துவின் முகத்திலும் அவரது தூதர்கள் முகத்திலும் வீசினர்.(40)GCTam 426.1

    “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்” என்பது வருகையின் விசுவாசத்தை நிராகரித்தவர்களால் அடிக்கடி முன்வைக்கப்பட்ட எதிர்வாதமாக இருந்தது. வேதாகமம் “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்” (மத்தேயு 24:36) என்கிறது. கர்த்தரை எதிர்நேக்கி காத்திருந்தவர்களால் இந்த விசுவாசத்தைப்பற்றிய தெளிவான இசைவான விளக்கம் கொடுக்கப்பட்டு, அவர்களது எதிர்ப்பாளர்களால் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டவிதம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. இந்த வார்த்தைகள், கிறிஸ்து கடைசித்தடவையாக தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுச்சென்றபின், ஒலிவமலையின்மீதிருந்து, அவரது சீடர்களுடன் நடத்திய, நினைவில் நிற்கக்கூடிய உரையாடலின்போது கூறப்பட்டிருந்தன. “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று சீடர்கள் கேள்விகேட்டனர். இயேசு அவர்களுக்கு அடையாளங்கள் கொடுத்து, “அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” (மத்தேயு 24:3,33) என்றார். இரட்சகரின் ஒரு வார்த்தை, அவருடைய மற்றொரு வார்த்தையை அழிக்கும்படிச் செய்யக்கூடாது. அவரது வருகையின் நாளையும் நாழிகையையும் ஒருவனும் அறியாமலிருந்தாலும், அது எப்பொழுது சமீபமாக இருக்கிறது என்பதை அறிய நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். நோவாவின் காலத்திலிருந்தவர்கள் ஜலப்பிரளயம் வருகிறது என்பதை அறியமறுத்த காரணத்தால் சாவுக்கேதுவாக இருந்ததுபோல, அவரது எச்சரிப்பைக் கவனிக்காது விடுவதும், அவரது வருகை எப்போது சமீபம் என்பதை அறிய மறுப்பதும், அலட்சியப்படுத்துவதும், நமக்கும் இருக்கும் என்று நாம் மேலும் போதிக்கப்பட்டிருக்கிறோம். அதே அதிகாரத்தில் விசுவாசமுள்ள வேலைக்காரனையும் விசுவாசமில்லாத வேலைக்காரனையும் ஒப்பிட்டு, “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்று தன் இருதயத்தில் கூறிக்கொண்ட வேலைக்காரனுக்குத் தண்டனையைக் கொடுக்கிற உவமை, அவரது வருகையைப்பற்றி விழித்திருந்து போதிப்பவர்களையும் அதனை மறுப்பவர்களையும் எப்படிப்பட்ட வெளிச்சத்தில் கிறிஸ்து கருதிப் பரிசளிப்பார் என்பதைக் காட்டுகிறது. எனவே “விழித்திருங்கள்” ... “எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்”- மத்தேயு 24:42,46. “நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்” (வெளி 3:3) என்று கூறுகிறார். (41)GCTam 427.1

    கிறிஸ்துவின் வருகை எந்த வகுப்பினருக்குத் தெரியாத நிலையில் இருக்குமோ அவர்களைப் பற்றி “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர் களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளான வர்களல்லவே” (1தெச. 5:2-5) என்று பவுல் கூறுகிறான் (42)GCTam 428.1

    இவ்வாறாக, கிறிஸ்துவின் வருகையின் சமீபத்தைப்பற்றி, மனிதர்கள் அறியாமலிருக்க வேண்டுமென்ற அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது காட்டப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்திற்குச் செவிகளை மூடி, சத்தியத்தை நிராகரிப்பதற்கு ஒரு சாக்குப்போக்கை விரும்பினவர்களுக்கு, “அந்த நாளையும் நாழிகையையும் ஒருவனும் அறியான்” என்கிற வசனங்கள் தைரியமிக்க பரியாசக்காரர்களாலும், கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்பவர்களாலுங்கூட, தொடர்ந்து கூறப்பட்டு எதிரொலித்தது. மக்கள் எழுப்பப்பட்டு இரட்சிப்பின் பாதையைப்பற்றி விசாரிக்கத் தொடங்கிய போது, தேவனுடைய வார்த்தைகளுக்குத் தவறான விளக்கம் கூறுவதன்மூலம், மத சம்பந்தமாக ஆசிரியர்கள், அவர்களது பயத்தை அமைதிப்படுத்த வகைதேடி, அவர்களுக்கும் சத்தியத்திற்கும் இடையில் குறுக்கிட்டனர். விசுவாசமில்லாத காவல்காரர்களும் பெரும் வஞ்சகனுடைய பணியில் ஒன்று சேர்ந்து, தேவன் சமாதானத்தைப்பற்றி பேசாதபோது, “சமாதானம், சமாதானம்” என்று குரலெழுப்பினர். கிறிஸ்துவின் நாட்களில் இருந்த பரிசேயர்களைப்போல், அநேகர் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மறுத்ததோடு, பிரவேசிக்கின்ற மற்றவர்களுக்கும் இடையூறு செய்தனர். அந்த ஆத்துமாக்களின் இரத்தம் அவர்களது கரங்களிலிருந்து கோரப்படும். (43)GCTam 428.2

    மிகவும் தாழ்மையான பக்தியான சபை மக்கள் தான் வழக்கமாக இந்தத்தூதைப் பெறுவதில் முதன்மையாக இருந்தனர். தங்களுக்கென்று வேதவாக்கியங்களை ஆராய்ந்தவர்களால், தீர்க்கதரிசனத்தைப் பற்றிய வேதவாக்கிய ஆதாரமற்ற பிரபலமான நோக்கினைக் காணமுடிந்தது. போதகர்களின் செல்வாக்கினால் எங்கெல்லாம் மக்கள் சமயகுருமார்களின் செல்வாக்கினால் கட்டப்படாதவர்களாக இருந்தார்களோ, எங்கெல்லாம் எங்கெல்லாம் தேவனுடைய வார்த்தைகளைத் தங்களுக்கென்று ஆராய முடிந்ததோ, அங்கெல்லாம் திருவருகையைக் குறித்த கோட்பாடு, அதின் தெய்வீக அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கு, வேத வாக்கியங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அவசியம் இருந்தது. (44)GCTam 429.1

    விசுவாசமில்லாத தங்களது சகோதரர்களால் அநேகர் உபத்திரவப்படுத்தப்பட்டனர். சபையில் தங்களுக்கிருந்த அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காக சிலர் தங்களுடைய நம்பிக்கையைப்பற்றி மௌனம் சாதிக்கச் சம்மதித்தனர். ஆனால் மற்றவர்கள் தங்களது நம்பிக்கைக்கு ஒப்படைக்கப்பட்ட சத்தியங்களை மறைத்து வைப்பதை தேவனுக்கு உண்மையாக இருப்பது தடுப்பதை உணர்ந்தனர். வேறு எந்த ஒரு காரணமுமின்றி, கிறிஸ்துவின் வருகையின் மீதிருந்த தங்களுடைய நம்பிக்கையை வெளிக்காட்டிய ஒரே காரணத்திற்காக சபையின் ஐக்கியத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள், ஒரு சிலர் அல்ல. “உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே” (ஏசா. 66:5) என்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் தங்களது விசுவாசச் சோதனையைத் தாங்கிக்கொண்ட மக்களுக்கு மிகவும் விலைமதிப்புள்ளதாக இருந்தன. (45)GCTam 429.2

    அந்த எச்சரிப்பின் விளைவுகளை தேவதூதர்கள் ஆழ்ந்த ஆர்வத்துடன் கவனித்தனர். சபைகளால் இந்தத் தூது பொதுவாக நிரா கரிக்கப்பட்டபோது, தூதர்கள் வருத்தத்துடன் திரும்பினர். என்றாலும் வருகையின் சத்தியம் தொடர்பாக இதுவரை சோதிக்கப்படாதவர்கள் ஏராளமானோர் இருந்தனர். அட்வெண்டிஸ்டுகள் போதிப்பதைப்போன்ற மதப்புரட்டுகளைக் கவனிப்பதுங்கூட பாவம் என்று நம்பும்படி அநேகர் கணவர் களாலும், மனைவிகளாலும், பெற்றோர்களாலும், பிள்ளைகளாலும் தவறாக நடத்தப்பட்டனர். இந்த ஆத்துமாக்களை உன்னிப்பாகக் கவனிக்கும்படி தூதர்கள் கட்டளை பெற்றிருந்தனர். வேறொரு வெளிச்சம் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து இன்னமும் அவர்கள்மீது வீசவேண்டியதிருந்தது. (46)GCTam 429.3

    அந்தத் தூதைப் பெற்றுக்கொண்டவர்கள் சொல்லிமுடியாத வாஞ்சையுடன் அவர்களது இரட்சகரின் வருகைக்காக விழித்துக் கொண்டிருந்தனர். அவரைச் சந்திக்க அவர்கள் எதிர்பார்த்திருந்த நேரம் சமீபமாக இருந்தது. பக்திவிநயமான அமைதியுடன் அவர்கள் அந்த நேரத்தை நெருங்கினர். ஒளிமயமான எதிர்காலத்தில் அவர்களுடையதாக இருந்த ஊக்கமான சமாதானத்தோடு, தேவனுடனுள்ள இன்பமான உறவில் அவர்கள் இளைப்பாறினார்கள். இந்த நம்பிக்கையை அனுபவித்திருந்த ஒருவரும், காத்திருந்த விலைமதிப்புமிக்க அந்த நேரத்தை மறக்கமுடியாது. ஏனெனில், அந்த நேரத்திற்கு முந்தின சில வாரங்களில் உலகப்பிரகாரமான தொழில்கள் அதிகமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தன. உண்மையான விசுவாசிகள் தாங்கள் மரணப்படுக்கையில் கிடப்பதுபோலவும், ஒருசில மணிநேரங்களுக்குள் உலகப்பிரகாரமான காட்சிகளிலிருந்து தங்கள் கண்களை மூடப்போவதாகவும் எண்ணி, தங்கள் இருதயங்களின் ஒவ்வொரு சிந்தனையையும், உணர்வுகளையும் கவனமாகச் சோதித்தனர். “எழுந்தருளிச்செல்லும் உடைகள்” செய்யப்படவில்லை. ஆனால் இரட்சகரைச் சந்திப்பதற்கான ஆயத்தமாக உள்ளனர் என்கிற உள்ளான சான்றின் தேவையை அவர்கள் அனைவரும் உணர்ந்தனர். அவர்களது வெண்ணங்கிகள் ஆத்துமத்தின் தூய்மையாக பாவநிவாரணம் அருளும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குணங்களாக இருந்தன. தேவனுடைய ஜனங்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களிடம் இருதயத்தை ஆராயும் அதே ஆவி, அதே ஆவல், தீர்மானமான விசுவாசம் ஆகிவைகள் இருக்கவேண்டும். இவ்விதமாகத் தங்களைக் கர்த்தருக்குமுன் தாழ்த்துவதில் அவர்கள் தொடர்ந்திருந்து, கிருபாசனத்தில் தங்கள் மன்றாட்டுக்களை அடுக்கி இருந்திருந்தால், இப்பொழுது அவர்களிடம் இருப்பதைவிட, அதிகமான ஐசுவரியமிக்க அனுபவத்தை உடையவர்களாக இருந்திருப்பார்கள். மிகமிகக் குறைவான ஜெபமும், குறைவான குற்ற உணர்வும், ஜீவனுள்ள விசுவாசமின்மையும் நமது மீட்பரால் தாராளமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கிருபையற்றவர்களாக அநேகரை விட்டுவிடுகிறது. (47)GCTam 429.4

    தமது பிள்ளைகளை நிரூபிக்கத் தேவன் திட்டம் செய்தார். தீர்க்கதரிசனக் காலங்களைக் கணக்கிடுவதில் உள்ள ஒரு தவறை, அவரது கரம் மறைத்தது. அட்வெந்துக்கள் அந்தத் தவறைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களது எதிராளிகளாக இருந்த மிகவும் கற்றவர்களாலும் அது கண்டுபிடிக்கப்படவில்லை. “உங்களது தீர்க்கதரிசனக் கணக்கிடுதல் சரியானது. ஏதோ ஒரு பெரிய சம்பவம் நிகழ உள்ளது. ஆனால் அது மில்லர் முன்னறிவிப்பது அல்ல. அது உலகத்தின் மாற்றத்தைப் பற்றினது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றினது அல்ல” என்று இரண்டாமவர்கள் கூறினார்கள். (48)GCTam 430.1

    எதிர்பார்த்திருந்த நேரம் கடந்து சென்றது. தமது மக்களின் விடுதலைக்காக கிறிஸ்து தோன்றவில்லை. உண்மையான அன்புடனும் விசுவாசத்துடனும் தங்களது இரட்சகருக்காக பார்த்திருந்தவர்கள் கசப்பான ஏமாற்றத்தை அனுபவித்தனர். என்றாலும் தேவனுடைய நோக்கங்கள் நிறைவேறின. அவரது தோற்றத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்தவர்களின் இருதயங்களை அவர் சோதித்துக்கொண்டு இருந்தார். எந்த மேலான நோக்கத்தினாலுமன்றி, பயத்தினால் மட்டுமே செயலாற்றியிருந்த அநேகர், அவர்களுக்கிடையில் இருந்திருந்தனர். அவர்களது விசுவாச அறிக்கை அவர்களது இருதயங்களையோ அல்லது வாழ்க்கைகளையோ பாதித்திருக்கவில்லை. எதிர்பார்த்த நிகழ்ச்சி நடைபெறத் தவறியபோது, இந்த மனிதர்கள் தாங்கள் ஏமாற்றமடையவில்லையென்று அறிவித்தனர். கிறிஸ்து வரக்கூடுமென்று தாங்கள் ஒருபோதும் நம்பியிருக்கவில்லையென்றும் அறிவித்தனர். உண்மையான விசுவாசிகளின் துயரைப் பரிகசிப்பதில் அவர்கள் முதலானவர்களாக இருந்தனர். (49)GCTam 431.1

    ஆனால் சோதிக்கப்பட்டு, உண்மையுள்ளவர்களாயிருந்தும் ஏமாற்றமடைந்திருந்தவர்களை இயேசுவும் பரலோக சேனை முழுவதும் அன்புடனும் அனுதாபத்துடனும் நோக்கினர். பார்க்கக்கூடியதிலிருந்து பார்க்கக்கூடாமலிருப்பதைப் பிரித்துவைத்திருக்கும் திரை பின்தள்ளப் படுமானால், தேவதூதர்கள், இந்த நிலைகுலையாத ஆத்துமாக்களுக்கு அருகில் வந்து, சாத்தானின் பட்டயத்திலிருந்து அவர்களை மறைப்பது காணப்பட்டிருந்திருக்கும். (50)GCTam 431.2