Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    32—சாத்தானின் கண்ணிகள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 518—530)

    றத்தாழ ஆறாயிரம் வருடங்களாகக் கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்கும் இடையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த மாபெரும் போராட்டம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே மனிதனின் சார்பாகக் கிறிஸ்து செய்யும் வேலையைத் தோற்கடிக்கவும் ஆத்துமாக்களைக் கண்ணிகளில் பிடித்து வைக்கவும், பொல்லாங்கன் தன் முயற்சிகளை இரண்டு மடங்காக்குகிறான். இதற்குமேல் பாவத்திற்கான பலி இல்லை என்றாகும்வரை இரட்சகரின் மத்தியஸ்த ஊழியம் முடிவடையும்வரை ஜனங்களை இருளிலும், பாவத்திற்காக மனம் வருந்தாதவர்களாகவும் வைத்திருப்பதுதான் அவன் நிறைவேற்றவிரும்பும் அவனது நோக்கமாக உள்ளது. (1)GCTam 607.1

    அவனது வல்லமையைத் தடுக்க விசேஷமான முயற்சிகள் செய்யப்படாதபோதும், சபையிலும் உலகத்திலும் மந்தமான நிலைமை காணப்படும்போதும் சாத்தான் கவலைப்படாதவனாக இருக்கிறான். ஏனெனில் அவனுடைய சித்தத்தின்படி அடிமைகளாக நடந்துகொண்டிருப்பவர்களை இழக்கும் அபாயத்தில் அவன் இல்லை. ஆனால், நித்தியமான காரியங்களைப்பற்றிய கவனம் தேவை என்று அழைக்கப்படும்போது, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று ஆத்துமாக்கள் விசாரிக்கும்போது, அவன் தன்னுடைய வல்லமையை கிறிஸ்துவின் வல்லமைக்கு ஈடாக்க வகைதேடி, பரிசுத்த ஆவியின் செல்வாக்கிற்கு எதிரான போலிச்செல்வாக்கை நடைமுறைப்படுத்த களத்தில் நிற்கிறான். (2)GCTam 607.2

    ஒரு சமயம் தேவபுத்திரர் கர்த்தருடைய சமுகத்திற்குமுன் கூடிவந்த சமயத்தில், அவர்களுக்கிடையில் சாத்தானும் வந்தான் என்று வேதவாக்கியங்கள் அறிவிக்கின்றன. (யோபு 1:6) அவன் நித்திய அரசரைப் பணிந்துகொள்ளுவதற்கு வராமல், நீதிமான்களுக்கு எதிரான விரோதமான திட்டங்களை முன்வைப்பதற்காகவே வந்தான். தேவனை ஆராதிப்பதற்காக மக்கள் கூடும்போது, அவன் அதே நோக்கத்துடன் அவர்கள் நடுவில் தோன்றி இருக்கிறான். பார்வையில் காணமுடியாதபடி அவன் தன்னை மறைத்துக்கொண்டாலும், ஆராதிப்பவர்களின் மனங்களைக் கட்டுப்படுத்த சகலவிதமான அக்கரையுடனும் செயலாற்றுகிறான். திறமைமிக்க ஒரு படைத்தலைவனைப்போல, அவன் தனது திட்டங்களை முன்னதாகவே தீட்டுகிறான். தேவனுடைய ஊழியக்காரன் வேதவாக்கியங்களைத் தேடுவதை அவன் காணும்போது, மக்கள்முன் வைக்கப்படவுள்ள வேதாகமப் பொருள்பற்றி அவன் குறிப்பெடுத்துக்கொள்ளுகிறான். அதன்பின் அவன் யாரை எந்த வேதாகமப்பொருளின்மீது வஞ்சித்துக்கொண்டிருக்கிறானோ, அவருக்கு அந்தத்தூது சென்றடையாதவண்ணம், சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த தனது தந்திரங்கள் அனைத்தையும் மதிநுட்பத்தையும் பயன்படுத்துகிறான். அந்த எச்சரிக்கை எந்த ஒருவருக்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அவரை ஏதாவது ஒரு தொழிலில் அவரது நேர்முக ஈடுபாட்டை அவசரப்படுத்தி, அல்லது அப்படிப்பட்டவருக்கு உயிரூட்டும் சுவையாக இருக்கும் அந்த வார்த்தைகளைக் கேட்பதிலிருந்து வேறு ஏதாவது ஒரு உபாயத்தினால் தடுத்துவிடுகிறான். (3)GCTam 607.3

    மறுபடியும் ஜனங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கும் ஆவிக்குரிய இருளைப்பற்றி கர்த்தருடைய வேலைக்காரர்கள் பாரமுள்ளவர்களாக இருப்பதை அவன் பார்க்கிறான். மந்தமான நிலை, கவலையின்மை, சோம்பேறித்தனம் ஆகிய அலைகளைத் தகர்ப்பதற்குத் தேவையான தெய்வீக கிருபைக்காகவும், வல்லமைக்காகவும் ஆர்வத்துடன் அவர்கள் ஜெபிப்பதை அவன் கேட்கிறான். அப்பொழுது புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்துடன் அவன் தனது யுக்திகளைச் செயல்படுத்துகிறான். அமித உணவில் ஈடுபட, அல்லது சுயதிருப்திக்கான வேறு கரியங்களில் ஈடுபட, அவர்களைச் சோதிக்கிறான். இவ்வாறாக அவர்களது புலன்கள் மரத்துப்போகின்றன. அப்படிச்செய்து, அதன் காரணமாக அவர்கள் மிகவும் அவசியமாகக் கற்றுக்கொள்ளவேண்டிய காரியங்களைக் கேட்பதிலிருந்து தவறிவிடச் செய்கிறான். (4)GCTam 608.1

    ஜெபத்தையும் வேதவாக்கிய ஆராய்ச்சியையும் அலட்சியம் செய்யும்படி சாத்தானால் நடத்தப்படக்கூடிய அனைவரும் அவனது தாக்குதலினால் மேற்கொள்ளப்படுவார்கள் என்பதை அவன் நன்கு அறிந்திருக்கிறான். எனவே, மனதை ஆட்கொள்ளமுடிகின்ற சகலவித உபாயங்களையும் அவன் கண்டுபிடிக்கிறான். தெய்வ பக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டிருக்கும் ஒரு சாரார் எப்போதுமே இருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைப் பின்பற்ற அறிவதற்குப் பதிலாக, தங்களுடன் ஒத்துப்போகாதவர்களிடம் சுபாவத்திலும் விசுவாசத்திலும் உள்ள தவறைத் தேடுவதை தங்களுடைய மதமாகச் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் சாத்தானுக்கு வலதுகரமாக உள்ளனர். தேவன் செயலாற்றிக்கொண்டிருக்கிறபோதும், அவரது ஊழியக்காரர்கள் அவருக்கு உண்மையான வணக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதும், சகோதரர்கள்மீது குறைகூறி, அவ்வாறு எப்போதும் தீவிரமாகச் செயல் படுகிறவர்கள் சிலர் அல்ல, ஏராளமானவர்களாக உள்ளனர். சத்தியத்தை நேசித்து, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களின் வார்த்தைகளின்மீதும், செயல் களின்மீதும் அவர்கள் தவறான வர்ணம் பூசுவார்கள். மிகுந்த ஆர்வமும் அக்கறையும் சுறுசுறுப்பும் உள்ள கிறிஸ்தவர்களை அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள் என்றும், வஞ்சகர்கள் என்றும் எடுத்துக்காட்டுவார்கள். ஒவ்வொரு உண்மையான மேன்மைமிக்க நோக்கத்தையும் தவறான செயல் என்று எடுத்துக்காட்டி, தவறான எண்ணங்களைப் பரப்புவதும் அனுபவமில்லாத மனங்களில் சந்தேகத்தை எழுப்புவதும் அவர்களது பணியாக உள்ளது. தூய்மையும் நீதியுமாக உள்ளதை தவறும் வஞ்சகமும் மிக்கது என்று பொருந்தக்கூடிய ஒவ்வொரு விதத்திலும் கருதச்செய்வார்கள்.(5)GCTam 608.2

    ஆனால் அவர்கள் நிமித்தம் ஒருவரும் வஞ்சிக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் யாருடைய பிள்ளைகள், யாருடைய உதாரணத்தைப் பின்பற்றுகின்றனர், யாருடைய வேலையைச் செய்கின்றனர் என்பது எளிதில் காணப்படும். “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”-மத்தேயு 7:16. அவர்களது நடத்தை விஷமிக்க அவதூறு செய்து சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும் சாத்தானுடையதைப் போன்று உள்ளது. (வெளி. 12:10). (6) ஆத்துமாக்களைக் கண்ணியில் அகப்படுத்த, ஏதாவது அல்லது சகலவிதமான தவறுகளையும் முன்வைக்கக்கூடிய ஏராளமான ஆதரவாளர்களை உடையவனாக அந்தப் பெரும் வஞ்சகன் இருக்கிறான். அவனால் கெடுக்கப்படக்கூடியவர்களாக இருப்பவர்களின் மாறுபட்ட சுவைகளுக்கும் தகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய மதப்புரட்டுக்களை ஆயத்தம் செய்துவைத்திருக்கும் ஆதரவாளர்களை உடையவனாகவும் இருக்கிறான். உண்மையற்றவர்களையும் மறுபடியும் பிறவாதவர்களையும் சபைக்குள் கொண்டுவருவது அவனது திட்டமாக உள்ளது. இவர்கள் தேவனுடைய ஊழியம் முன்னேறுவதையும், முன்னேற்றமடையச்செய்வதையும் காண விரும்பும் அனைவருக்கும் இடையூறு செய்யும்படியாக சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் உற்சாகப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள். தேவனிலும், அவரது வசனத்திலும் உண்மையான விசுவாசம் இல்லாத அநேகர், சத்தியத்தின் சில கொள்கைகளுக்கு இணங்கி, கிறிஸ்தவர்களாகத் தேர்வடைகின்றனர். இவ்விதமாக அவர்கள் தங்களுடைய தவறுகளை வேதவாக்கியக் கொள்கைகளாக அறிமுகம்செய்யத் தகுதி அடைகின்றனர். (7)GCTam 609.1

    மனிதன் எதை நம்பினாலும் ஒன்றுமாகாது என்னும் நிலை சாத்தானின் மிக வெற்றிகரமான வஞ்சகங்களில் ஒன்று. சத்தியத்தின் மீதுள்ள அன்புடன் அதைப் பெற்றுக்கொள்ளுபவரின் ஆத்துமாவை அது பரிசுத்தப்படுத்துகிறது என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனவே தவறான தத்துவ விளக்கங்களையும், கட்டுக்கதைகளையும் வேறொரு சுவிசேஷத்தையும் பதிலாக வைக்க அவன் தொடர்ந்து வகைதேடுகிறான். ஆரம்பகாலத்திலிருந்தே கெட்டமனிதர்கள் என்று மட்டும் கூறாமல், ஆத்துமாவிற்கு மரணத்தை உண்டுபண்ணக்கூடிய தவறுகளை உபதேசிப்பவர்கள் என்றும் அவர்களுக்கெதிராகப் போரிட்டுள்ளான். எலியா, எரேமியா, பவுல் ஆகியோர் தேவனுடைய வார்த்தையிலிருந்து மனிதர்களைத் திருப்பினவர்களை உறுதியுடனும், அச்சமின்றியும் எதிர்த்தனர். ஒருசரியான மதவிசுவாசம் முக்கியமானது அல்ல என்று கருதும் அந்தச் சுயாதீனமானது, சத்தியத்தின் பரிசுத்தமான பாதுகாவலர்களாக இருந்த இவர்களின் ஆதரவைக் காணவில்லை. (8)GCTam 610.1

    தெளிவற்றதும் கவர்ச்சிமிக்கதுமான வேதவாக்கிய விளக்கங்கள் கிறிஸ்தவ உலகில் காணப்படும் மதவிசுவாசம்பற்றிய முரண்பட்ட அநேக தத்துவ விளக்கங்கள், மற்றும் சத்தியத்தை அறிந்துகொள்ளமுடியாதபடி மனதைக் குழப்பும் செயல்கள் அனைத்தும், நமது பெரும் எதிராளியினுடையதாக உள்ளன! ஒரு சாதகமான தத்துவ விளக்கத்தை வேதவாக்கியங்கள் ஆதரிக்கவேண்டும் என்ற, வழக்கத்தில் உள்ள சம்பிரதாயம், கிறிஸ்தவ உலகில் சபைகளுக்கிடையில் நிலவிவரும் அதிருப்திக்கும் பிரிவினைகளுக்கும் பெரும் அளவிற்குக் காரணமாக உள்ளது. தேவனுடைய சித்தத்தைப்பற்றிய அறிவை அடைந்துகொள்ளுவதற்காக, மனத் தாழ்மையுடன் வேத வாக்கியங்களை ஆராய்வதற்குப் பதிலாக, அநேகர் வழக்கமாக இல்லாத, தாறுமாறான, அல்லது அடிப்படை ஆதாரமாக உள்ள சிலவற்றைக் கண்டுபிடிக்க மட்டுமே வகை தேடுகின்றனர். (9)GCTam 610.2

    தவறான கோட்பாடுகளையும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத பழக்கங்களையும் தாங்குவதற்காக சிலர் முழுமையான விஷயத்திலிருந்து விலகிச் சென்று, வேதவாக்கியத்தின் பகுதிகளை எடுத்துக்கொள்ளுவார்கள். தங்கள் கருத்தை நிரூபிக்க எடுத்துக்கொள்ளும் ஒரு வசனத்தின் மறுபாதி நேர் எதிரான கருத்தைக் காட்டிக்கொண்டிருக்கும். சர்ப்பத்தின் தந்திரத்துடன் அவர்கள் தங்களது மாமிசத்திற்குரிய விருப்பங்களுக்குப் பொருத்தமாகப் பொருள்கொள்ளக்கூடிய சம்பந்தமற்ற வார்த்தைகளுக்குப் பின்னால், தங்களைப் பாதுகாப்புக் குழிகளுக்குள் மறைத்துக்கொள்ளுகின்றனர். இப்படியாக அநேகர் தேவனுடைய வார்த்தையை வேண்டுமென்றே குதர்க்கம் செய்கின்றனர். செயலாற்றல்மிக்க, கற்பனை சக்தியுடைய மற்றவர்கள் பரிசுத்த எழுத்துக்களில் உள்ள அடையாளங்களையும் உருவகங்களையும் எடுத்து, வேதாகமமே அதற்கு விளக்கம் என்பதைக் கருதாமல், தங்களது கற்பனைகளுக்குப் பொருந்தக்கூடியவிதத்தில் விளக்கம் கொடுத்து, தங்களுடைய தடுமாற்றங்களை வேதாகமப் போதனை என்றும் காட்டுகின்றனர்.(10)GCTam 610.3

    ஜெபம், தாழ்மை, போதிக்கும்ஆவி ஆகியவைகள் இல்லாமல் வேதவாக்கியங்களை ஆராயத்தொடங்கும்போது, மிகத் தெளிவானதும் எளிமையானதுமானவைகளைப் போலவே கடினமான பகுதிகளும் அவைகளின் உண்மையான அர்த்தத்திலிருந்த தப்பான அர்த்தங்களை உண்டுபண்ணும். வேதாகமத்தை வாசிக்கவும், தங்களுக்கென்று அவைகளின் பரிசுத்தமான சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும் கூடிய சலுகைகளைப் போப்புமார்க்கத் தலைவர்கள் மக்களுக்கு மறுக்கும் அதே சமயத்தில், அவர்களது நோக்கங்களுக்கு பயன்படக்கூடிய வேதவாக்கியப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பொருந்தக்கூடியவிதத்தில் அவர்களாகவே மக்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். வேதாகமம் வேதாகமமாகவே மக்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். தவறாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள போதனைகளைக் கொண்டிருப்பதைவிட வேதாகமம் இல்லாதிருப்பதே அவர்களுக்கு அதிக நன்மையாக இருக்கும். (11)GCTam 611.1

    தங்களைப் படைத்தவருடைய சித்தத்துடன் அறிமுகமானவர்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்படி வேதாகமம் வடிவமைக்கப்பட்டது. அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனத்தை தேவன் மனிதர்களுக்குக் கொடுத்தார். சீக்கிரத்தில் சம்பவிக்க இருப்பவைகளைத் தானியேலுக்கும் யோவானுக்கும் அறிவிக்க தேவதூதர்களும் கிறிஸ்துவுங்கூட வந்தன. நமது இரட்சிப்பு சம்பந்தப்பட்ட அந்த முக்கியமான காரியங்கள் இரகசியமானவைகளாக வைக்கப்படவில்லை. சத்தியத்தை நேர்மையுடன் தேடுபவர்களை குழப்பவும் வழிவிலகிச் செல்லுவதற்கேதுவாகவும் அவை வெளிப்படுத்தப்படவில்லை. “தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” (ஆபகூக் 2:2) என்று ஆபகூக் தீர்க்கதிரிசியால் கர்த்தர் உரைத்தார். ஜெபிக்கும் இருதயத்துடன் வாசிக்கும் அனைவருக்கும் தேவனுடைய வார்த்தை தெளிவாக உள்ளது. உண்மையான—நேர்மைமிக்க ஒவ்வொரு ஆத்துமாவிற்காகவும், சத்தியத்தின் ஒளியிடத்திற்கு வரும் நீதிமானுக்காகவும் வெளிச்சம் விதைக்கப்பட்டிருக்கிறது (சங். 97:11). மறைந்துள்ள பொக்கிஷத்தைத் தேடுவதுபோல ஆர்வத்துடன் தேடாதவரை, எந்தச் சபையாலும் பரிசுத்தத்தில் முன்னேறமுடியாது. (12)GCTam 611.2

    சாத்தான் அவனது நோக்கத்தை நிறைவேற்ற எப்பொழுதும் சீராக வேலைசெய்துகொண்டிருக்கும்போது, தாராளம் என்னும் குரலினால் தங்களுடைய எதிராளியின் உபாயங்களுக்கு மனிதர்கள் குருடாக்கப்பட்டு உள்ளனர். மனித உத்தேசங்களை, வேதாகமத்திற்குப் பதிலாக வைப்பதில் அவன் வெற்றி அடையும்போது, தேவப்பிரமாணம் ஒரு ஓரமாக வைக்கப்படவே, சபைகள் தாங்கள் விடுதலையானவையாக அறிவிக்கும் வேளையிலும், அவைகள் பாவத்தின் அடிமைத்தளையில் தான் உள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சி அநேகருக்கு ஒரு சாபமாக உள்ளது. விஞ்ஞானம், கலை ஆகியவைகளின் கண்டுபிடிப்புகளில், ஒளியானது உலகத்தின் மீது வெள்ளமாகப் பாய்வதற்கு தேவன் அனுமதிக்கிறார். ஆனால் மிகப்பெரிய மனமுங்கூட, ஆராய்ச்சியில் தேவனால் வழிநடத்தப்படாவிட்டால், விஞ்ஞானம் வெளிப்படுத்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள உறவை ஆராயும் அவர்களது முயற்சியில் குழப்பமடைவார்கள். (14)GCTam 611.3

    உலகப் பொருள்கள், ஆவிக்குரியவைகள் ஆகிய இரண்டையும் பற்றிய மனித அறிவு, அரைகுறையானதும் பூரணமற்றதாகவும் உள்ளது. எனவே, அநேகர் தங்களின் விஞ்ஞான நோக்குகளை, வேத வாக்கிய அறிவிப்புகளுடன் இசையச்செய்ய முடியாதவர்களாக உள்னனர். அநேக சாதாரணமான தத்துவ விளக்கங்களையும் உத்தேசங்களையும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் என்று ஏற்றுக்கொண்டு, விஞ்ஞானம் என்று தவறாகக் கூறப்படும் ஒன்றினால், தேவனுடைய வார்த்தைகள் சோதிக்கப்படவேண்டுமென்றும் எண்ணுகின்றனர் (1 தீமோத்தேயு 6:20). சிருஷ்டிகரும் அவரது செயல்களும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. அவைகளை இயற்கையின் பிரமாணங்களால் விளக்கமுடியாததினால், வேதாகம வரலாறு நம்ப முடியாததாக உள்ளது என்று கருதுகின்றனர். பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆகியவைகளில் உள்ள ஆதாரங்களின் நம்பக்கூடிய தன்மையை சந்தேகிப்பவர்கள், அடிக்கடி மேலும் ஒரு அடி கடந்து சென்று தேவன் இருப்பதையும் சந்தேகித்து, முடிவில்லாத வல்லமையை இயற்கைக்குச் சூட்டுகின்றனர். நங்கூரத்தை இழந்த அவர்கள், கடவுள் இல்லை என்னும் வாதமாகிய பாறையின்மீது மோதும்படி விட்டுவிடப்படுகின்றனர். (15)GCTam 612.1

    இவ்வாறாக, அநேகர் விசுவாசத்திலிருந்து தவறி, சாத்தானால் வஞ்சிக்கப்படும்படிக்கு விட்டுவிடப்படுகின்றனர். மனிதர்கள் அவர்களுடைய சிருஷ்டிகரைவிட அதிக ஞானமுள்ளவர்களாக இருப்பதற்கு முயல்கின்றனர். ஒருபோதும் வெளிப்படுத்தப்பட முடியாததாக இருக்கின்ற இரகசியங்களைத் தேடி விளக்கம் கொடுக்க, நித்திய காலங்களினூடாக மனிதத்துவம் முயன்றிருக்கிறது. தேவன் அவரைப்பற்றியும் அவருடைய நோக்கங்களைப்பற்றியும் அறிவித்திருக்கின்றவைகளைப் புரிந்துகொள்ளும்படி மனிதர்கள் தேடுவார்களானால், யேகோவாவின் மகிமை, மகத்துவம், வல்லமை ஆகியவைபற்றிய நோக்கினை அடைந்து, தங்களது குறைகளை உணர்ந்து, அவர்களுக்காகவும் அவர்களது பிள்ளகளுக்காகவும் எவைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவைகளில் திருப்தி அடைவார்கள். (16)GCTam 612.2

    அறியப்படாதவைகளாக தேவன் வைத்திருப்பவைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டியதில்லை என்று அவர் நினைக்கிறவைகளையும் அறிந்துகொள்ளத் தேடுவதற்கும் யூகம் செய்வதற்கும் மனிதமனங்களை ஈடுபடச்செய்வது, சாத்தானின் வஞ்சகங்களில் மிகச்சிறந்த ஒரு சாதனையாக உள்ளது. இப்படித்தான் லூசிபர் பரலோகத்தில் அவனுக்கிருந்த இடத்தை இழந்தான். தேவனுடைய நோக்கங்களின் இரகசியங்களனைத்தும், அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த உயர்ந்த நிலையில், அவனுடைய வேலையைப்பற்றி அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருந்தவைகளை முற்றிலுமாகக் கருதாமலிருந்துவிட்டான். அதே அதிருப்தியை அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாக இருந்த தேவதூதர்களுக்குள்ளும் எழுப்பி, அவர்களது விழுகைக்குக் காரணத்தை உண்டுபண்ணினான். இப்பொழுதும் அதே ஆவியை மனிதர்களின் மனங்களில் நிரப்பி, தேவனுடைய நேரடியான கட்டளைகளை அவர்கள் மதிக்காமலிருக்கும்படி நடத்த வகைதேடுகிறான்.(17)GCTam 613.1

    வேதாகமத்திலுள்ள தெளிவான பிரித்துக்காட்டும் சத்தியங்களை ஏற்றுக்கெள்ள விரும்பாதவர்கள் தங்களுடைய மனச்சாட்சியை அமைதிப்படுத்தும் மகிழ்ச்சிமிக்கக் கட்டுக்கதைகளைத் தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். சுயத்தை மறுக்கும், தாழ்மைப்படுத்தும் கோட்பாடுகளை முன்வைக்கும்போது, எந்த அளவிற்கு ஆவிக்குரிய தன்மை குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு அவைகள் மிகுந்த அனுகூலத்துடன் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த மனிதர்கள் தங்களுடைய நுண்ணறிவின் வல்லமைகளைத் தரம் தாழ்த்துகின்றனர். தெய்வீக நடத்துதலுக்காக, நொறுங்குண்ட இருதயத்துடனும் ஆர்வமிக்க ஜெபத்துடனும் வேதவாக்கியங்களை ஆராயமுடியாதபடிக்கு அவர்களது சொந்த விசித்திரமான எண்ணங்களில் அதிக ஞானமுள்ளவர்களாக உள்ளனர். மாயையில் இருந்து காக்கப்பட அவர்களிடம் கேடயம் இல்லை. இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு சாத்தான் தயாராக இருந்து, சத்தியத்தின் இடத்தில் வஞ்சகங்களைக் கையடக்கமாக வைக்கிறான். இவ்விதமாகத்தான் போப்புமார்க்கம் மனிதர்களின் மனங்களின்மீது அதன் வல்லமையை பெற்றுக்கொண்டது. சத்தியத்தில் சிலுவை அடங்கியுள்ளதால், அதை நிராகரிப்பதின் வாயிலாக, புரொட்டஸ்டாண்டுகளும் அதே பாதையைப் பின்பற்றுகின்றனர். இந்த உலகத்திலிருந்து மாறுபட்டவர்களாக இல்லாமல் இருப்பதற்கான சௌகரியத்திற்காகவும் கொள்கைக்காகவும், தேவனுடைய வார்த்தையை வாசிப்பதை அலட்சியம் செய்யும் அனைவரும், சத்தியத்திற்குப் பதிலாக அழிவுக்குரிய மதப்புரட்டைப் பெற்றுக்கொள்ளும்படி விட்டுவிடப்படுவார்கள். சத்தியத்தை மனப்பூர்வமாக நிராகரிப்பவர்களால் மனதில் தோன்றக்கூடிய தவறுகள் ஒவ்வொன்றும் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு வஞ்சகத்தை அச்சத்துடன் நோக்கும் ஒருவன் உடனடியாக மற்றொன்றையும் பெறுவான். இரட்சிக்கப்படும்படியாக சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கீகரியாமல்போன, ஒரு வகுப்பினரைப்பற்றிப் பவுல்: “சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்” (2 தெச. 2:10-12) என்று அறிவிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு எச்சரிப்பு நமக்குமுன் இருக்கும்போது, எந்தக் கோட்பாடுகளை பெற்றுக்கொள்கிறோமென்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். (18)GCTam 613.2

    பெரும் வஞ்சகனின் மிகுந்த வெற்றிகரமான ஏதுகரங்களுக்கிடையில் ஆவிமார்க்கத்தின் மாயையான போதனைகளும் பொய்யான அற்புதங்களும் உள்ளன. ஒளியின் தூதனின் ஆடையில் தன்னை மறைத்துக்கொண்டு, கொஞ்சங்கூட சந்தேகம் உண்டாகாதவிதத்தில் அவன் தனது வலையை விரிக்கிறான். தேவனுடைய புத்தகத்தைப் புரிந்துகொள்ளும்படி மனிதர்கள் ஆர்வமிக்க ஜெபத்துடன் அதை வாசிப்பார்களானால், இருளில் விடப்படாமல் அல்லது தவறான கோட்பாடுகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை நிராகரிக்கும்போது, வஞ்சகத்திற்கு ஒரு இரையாக விழுகின்றனர். (19)GCTam 614.1

    அபாயகரமான வேறொரு தவறு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுக்கின்ற, இந்த உலகத்தில் பிறப்பதற்குமுன், அவர் இருக்கவில்லை என்ற கோட்பாடாகும். வேதாகமத்தை நம்புவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு பெரும் கூட்டமான மக்களால், இந்தத் தத்துவ விளக்கம் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பிதாவுடன் உள்ள தமது உறவைப்பற்றி இரட்சகர் தருகின்ற தெளிவான அறிக்கைகள் அவரது தெய்வீக சுபாவம், அவரது முந்தின நிலை (மனிதனாகத் தோன்றுவதற்குமுன் அநாதி காலமாக இருந்த நிலை) ஆகியவைகளுடன் அது நேரடியாக முரண்படுகிறது. வேதவாக்கியங்களுடன் தேவையற்ற விதத்தில் தர்க்கிக்காமல் அதை வரவேற்க இயலாது. மீட்பரின் பணியைப்பற்றிய மனிதனின் இருதயத்து எண்ணங்களை அது கீழ்த்தரமாக்குவதோடல்லாமல், வேதாகமம் தேவனுடைய வெளிப்படுத்துதல் என்ற விசுவாசத்தின் அஸ்திவாரத்தையும் அழிக்கிறது. இந்த நிலை அதிகமான ஆபத்துள்ளதாகும். அதே நேரத்தில், அதைச் சந்திப்பதையும் கடினமாக்குகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்து ஆவியின் ஏவுதலினால் உள்ள வேதவாக்கிய சாட்சியை மனிதர்கள் நிராகரித்தினால் அப்படிப்பட்டவர்களுடன் விவாதம்செய்வது வீணாயிருக்கும். ஏனெனில் முடிவுள்ள எப்படிப்பட்ட வாதமும் அவர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தாது. “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”-1 கொரி. 2:14. இந்தத் தவறைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒருவராலும் கிறிஸ்துவின் சுபாவத்தையோ அல்லது அவரது ஊழியத்தைப்பற்றியோ உண்மையான அறிவை உடையவராக இருக்கமுடியாது. (20)GCTam 614.2

    மேலும் தந்திரமும் கேடுவிளைவிப்பதுமான ஒரு தவறு என்னவென்றால், சாத்தான் என்னும் ஒருவன் ஒரு தனிநபராக இல்லை என்றும், இந்தப் பெயர் மனிதர்களின் தீய சிந்தனைகளையும் விருப்பங்களையும் எடுத்துக்காட்டுவதற்காக வேதாகமத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் எண்ணுகின்ற தவறான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை வேகமாகப் பரவிவருகின்றது! (21)GCTam 615.1

    தனிப்பட்ட ஒவ்வொருவரும் இறக்கும்போது அவர்களிடம் கிறிஸ்து வருவதுதான், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்று புகழ் வாய்ந்த பிரசங்க மேடைகளில் இருந்து பரவலாக எதிரொலிக்கும் போதனை, வான மேகங்களின்மீது வரும் கிறிஸ்துவின் ஆள்தத்துவமான (இரண்டாம்) வருகையிலிருந்து மனிதர்களின் மனங்களைத் திசைதிருப்பச் செய்யப்பட்டுள்ள ஒரு கருவியாகும். இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சாத்தான் கூறிக்கொண்டிருக்கும் இந்த வஞ்சகத்தை ஏற்றுக்கொள்ளுவதினால், அநேக ஆத்துமாக்கள் அழிவிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.(22)GCTam 615.2

    உலக ஞானமானது, ஜெபம் முக்கியமானதல்ல என்று மறுபடியும் போதிக்கிறது. விஞ்ஞான மனிதர்கள் ஜெபங்களுக்கு உண்மையான பதில் பெற்றுக்கொள்ளமுடியாது என்றும், அற்புதங்கள் இயற்கையின் நியதியை மீறுகின்றதாக உள்ளதால், அப்படி ஒன்றும் இல்லை என்றும் சாதிக்கின்றனர். இந்தப் பிரபஞ்சமானது, குறிப்பிடப்படும் நியதிகளால் இயக்கப்படுகிறது. தேவனுங்கூட இந்த நியதிகளுக்கெதிராக எதையும் செய்வதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இவ்விதமாக தேவன் அவரது சொந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டவர். தெய்வீகப்பிரமாணங்களின் ஆளுகை, தெய்வீக சுதந்திரத்தைத் தவிர்க்கக்கூடியது என்பதுபோல் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இப்படிப்பட்ட போதனைகள் வேத வாக்கியங்களுக்கும் அவைகளின் சான்றுகளுக்கும் எதிரானவைகளாக உள்ளன. கிறிஸ்துவினாலும் அவரது சீடர்களினாலும் அற்புதங்கள் செய்யப்படவில்லையா? மனிதர்களுக்கிடையில் நடந்துசென்றபோது, விசுவாசத்தினால் உண்டான ஜெபங்களைக் கேட்க விரும்பியிருந்த அதே மன உருக்கமுள்ள இரட்சகர் இன்றும் உயிருடனிருந்து, அன்றுபோல் இன்றும் விசுவாசமிக்க ஜெபங்களைக் கேட்பதற்கு விருப்பமிக்கவராக இருக்கிறார். இயற்கையானது இயற்கைக்கும் மேலானவருடன் ஒத்துழைக்கிறது. நாம் கேட்காவிட்டால் நமக்கு அருளாமலிருக்கக்கூடியவைகளை, விசுவாசமிக்க நமது ஜெபத்திற்கு மறுமொழியாக நமக்கு அருளுவது தேவனுடைய திட்டத்தில் ஒரு பகுதியாகும். (23)GCTam 615.3

    கிறிஸ்தவ உலகத்தின் சபைகளுக்கிடையில் பெற்றுக்கொள்ளப் படுகின்ற தவறான கோட்பாடுகளும் விநோதமான எண்ணங்களும் எண்ணிலடங்காதவையாக உள்ளன. தேவனுடைய வார்த்தையினால் நடப்பட்ட எல்லை அடையாளங்களில் ஒன்றினைக்கூட நீக்குவதினால் உண்டாகும் தீய விளைவுகளை அனுமானிப்பது முடியாததாக உள்ளது. இதைச் செய்வதற்கு முயல்பவர்களில் சிலர் ஒரு சத்தியத்தை (கோட்பாடுகளில் ஒன்றை) நிராகரித்து, அத்துடன் நின்றுவிடுகின்றனர். பெரும் பான்மையினர் உண்மையாகவே தேவன் என்பவர் இல்லை என்று கூறுபவர்களாகும்வரை, சத்தியத்தின் கொள்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஒதுக்கிவைத்துவிடுகின்றனர். (24)GCTam 616.1

    பலரும் அறிந்த தேவயியலின் குறைகள் அநேக ஆத்துமாக்களை கடவுள் இல்லை என்னும் வாதத்திற்கு விரட்டியிருக்கிறது. அப்படி இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் வேதவாக்கியங்களில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருப்பார்கள். அவரது உணர்வுகளான நீதி, இரக்கம், அனுதாபம் ஆகியவைகளை கொதிக்கவைக்கும் கோட்பாட்டை ஒப்புக்கொள்ளுவது அவரால் முடியாததாக உள்ளது. இவைகள் வேதாகமத்தின் போதனைகள் என்று எடுத்துக்காட்டப்படுவதால், அவர் அவைகளை தேவனுடைய வார்த்தையென்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். (25)GCTam 616.2

    சாத்தான் நிறைவேற்ற விரும்பும் நோக்கம் இதுதான். தேவன் மீதும் அவரது வார்த்தையின்மீதும் உள்ள நம்பிக்கையை அழிப்பதைவிட வேறு எதையும் அவன் அதிகமாக விரும்புவதில்லை. சந்தேகப்படுபவர்களின் சேனையின் தலைவனாக அவன் நின்று, ஆத்துமாக்களை அவனது அணியில் சேர்த்துக்கெள்ள தந்திரமாக ஏமாற்றுகிறான். சந்தேகப்படுவது கண்ணியமானதாகவுள்ளது. தேவனுடைய வார்த்தை பாவத்தைக் கடிந்து குற்றப்படுத்துகிறது. அதனால் பாவத்திற்குக் காரணமாக இருப்பவனைப் போலவே, ஒரு பெரும் வகுப்பினராலும் தேவனுடைய வார்த்தை நம்பிக்கையின்றி நோக்கப்படுகிறது. அது கோரும் அவசியங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு விருப்பமற்றவர்கள் அதன் அதிகாரத்தைத் தூக்கி எறிவதற்கு முயலுகின்றனர். அவர்கள் வேத வாக்கியங்களிலோ அல்லது பிரசங்கத்திலோ தவறு கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வேதாகமத்தை வாசிக்கின்றனர். அல்லது பரிசுத்தமான மேடையிலிருந்து முன்வைக்கப்படும் அதன் போதனைகளைக் கவனிக்கின்றனர். கடமையில் உள்ள அலட்சியத்தை தாங்களாகவே நியாயப்படுத்திக் கொள்ளுவதற்காக அல்லது சாக்குப்போக்கிற்காக கடவுள் இல்லை என்று கூறி நாத்திகர்களானவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல. மற்றவர்கள் அகந்தையினாலும் சோம்பேறித்தனத்தினாலும் கடவுள் இல்லை என்கிற கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். மேன்மையை உண்டுபண்ணும் மதிப்புமிக்க காரியம் எதையாவது செய்வதற்கு முயற்சியும் சுயமறுப்பும் தேவையாக உள்ளது. இப்படிச் செய்து, தங்களைச் சிறப்பித்துக் காட்டும் நோக்கமின்றி, அதிக சுகபோகத்தை விரும்பி இருந்து, அதே சமயம் தங்களிடம் மேலான ஞானம் உள்ளது என்னும் புகழை அடைந்துகொள்வதற்காகவே, இப்படிப்பட்டவர்கள் வேதாகமத்தை விமர்சிக்கின்றனர். அளவிற்குட்பட்ட மனம், தெய்வீக ஞானத்தால் ஒளிப்படுத்தப்படாதபோது, புரிந்துகொள்ள முடியாதது ஏராளமாயிருக்கிறது. இவ்விதமாக, விமரிசனம் செய்வதற்கு அவர்கள் சந்தர்ப்பம் காணுகின்றனர். நம்பிக்கையின்மை, சந்தேகிக்கும்தன்மை, கடவுள் இல்லை என்னும் விவாதம் ஆகியவைகளின் கட்சியில் நிற்பது ஒரு மேலான பண்பு என உணர்வதுபோல் பலர் காணப்படுகின்றனர். கபடமின்மை என்னும் தோற்றத்திற்கடியில் அப்படிப்பட்டவர்கள் சுயநம்பிக்கையினாலும் அகந்தையினாலும் ஏவப்பட்டிருப்பது தெளிவாகக் காணப்படும். வேதவாக்கியத்தினால் மற்றவர்களுடைய மனங்களைத் திகைக்க வைப்பதில் அநேகர் மகிழ்ச்சியைக் காண்கின்றனர். எதிர்வாதத்தின்மீதுள்ள ஆசையினால், முதலில் தவறான வழியில் விமர்சனமும் காரணமும் காட்டுபவர்களாக சிலர் உள்ளனர். இவ்விதமாக அவர்கள் தங்களைத் தாங்களே வேடனின் கண்ணிக்கு உட்படுத்துகிறதை உணராமல் உள்ளனர். அவர்களது நம்பிக்கையின்மையைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டபின், அவர்கள் அதே நிலையில் தொடரவேண்டாம் என்று உணருகின்றனர். இவ்விதமாக அவர்கள் தெய்வபக்தி இல்லாதவர்களுடன் ஒன்றுசேர்ந்து, அவர்களுக்கான பரத்தின் வாசல்களை அவர்களாகவே மூடிக்கொள்ளுகின்றனர். (26)GCTam 616.3

    தேவன் அவரது வார்த்தையின் தெய்வீக சுபாவத்திற்குப் போதுமான சான்றினை வைத்திருக்கிறார். நமது மீட்பு சம்பந்தப்பட்ட பெரும் சத்தியங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. பரிசுத்த ஆவியினை உண்மையுடன் தேடும் அனைவருக்கும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அவரது உதவியினால், ஒவ்வொரு மனிதனாலும் இந்த சத்தியங்களை தனக்கென்று புரிந்துகொள்ளமுடியும். பலமிக்க அஸ்திவாரத்தின்மீது மனிதர்கள் அவர்களுடைய விசுவாசத்தை வைக்கும்படி தேவன் அனுமதித்திருக்கிறார். இருந்தபோதிலும், மனிதர்களின் அளவுக்குட்பட்ட மனங்கள், முடிவில்லாத ஒருவருடைய திட்டங்களையும் நோக்கங்களையும் பூரணமாக அறிந்துகொள்ளப் போதுமானவையாக இல்லை. அவைகளைத் தேடுவதினால், நம்மால் ஒருபோதும் தேவனைக் கண்டுபிடிக்கமுடியாது. தேவன் அவரது மகத்துவத்தை மறைத்து வைத்திருக்கும் திரையை நாம் நமது இறுமாப்புள்ள கரத்தினால் நீக்க முயலக்கூடாது. “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33) என்று அப்போஸ்தலன் வியந்து கூறுகிறார். எல்லையற்ற அன்பும் இரக்கமும் முடிவில்லாத வல்லமையுடன் ஒன்றித்திருப்பதை அறிந்துகொள்ளும் அளவிற்கே, நம்மோடு அவர் வைத்துள்ள உறவையும், அவரைச் செயலாற்றத் தூண்டும் நோக்கங்களையும் நம்மால் அறியமுடியும். பரலோகத்திலிருக்கும் நமது பிதா, ஒவ்வொன்றுக்கும் ஞானத்துடனும் நீதியுடனும் உத்தரவிடுகிறார். நாம் திருப்தியற்றவர்களாகவும் நம்பிக்கையில்லாதவர்களாகவும் இருக்காமல் பக்திமிக்க பணிவுடன் தொழவேண்டும். அவர்களது நோக்கங்களை நாம் இந்த அளவிற்கு அறிந்திருந்தால் நமது நன்மைக்குப் போதுமானது என்னும் அளவிற்கு அவர் நமக்கு வெளிப்படுத்துவார். அதற்கும் அப்பால் சர்வ வல்லமையுள்ள அவரது கரத்தையும் அன்பினால் நிறைந்துள்ள அவரது இருதயத்தையும் நாம் நம்பவேண்டும். (28)GCTam 617.1

    விசுவாசிப்பதற்குப் போதுமான சான்றுகளைக் கொடுத்திருக்கும் தேவன், நம்பிக்கையின்மைக்கான சாக்குப்போக்குகள் அனைத்தையும் ஒருபோதும் நீக்கமாட்டார். தங்களுடைய சந்தேகங்களைத் தொங்க விடுவதற்குக் கொக்கிகளைத் தேடும் அனைவரும் அவைகளைக் காண்பார்கள். ஒவ்வொரு மறுப்பும் நீக்கப்படும்வரை, சந்தேகத்திற்கு இனி இடமில்லையென்னும்வரை, தேவனுடைய வார்த்தையை ஏற்று, அதற்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் ஒருபோதும் ஒளியினிடத்திற்கு வரமாட்டார்கள். (29)GCTam 618.1

    தேவன்மீதுள்ள அவநம்பிக்கை, அவருடன் பகையாக இருக்கும் புதுப்பிக்கப்படாத இருதயத்தில் இயல்பாக உண்டாகும் வேண்டாத வளர்ச்சியாகும். ஆனால் விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு, இருதயத்தில் வைத்துப் போற்றப்படும்போது மட்டுமே செழிக்கிறது. தீர்மானமான முயற்சி இல்லாமல், எந்த மனிதனாலும் விசுவாசத்தில் பலப்படவே முடியாது. நம்பிக்கையின்மை அதற்குத் தைரியமூட்டும்போது பலப்படுகிறது. மனிதர்கள் அவர்களுடைய விசுவாசத்தைத் தாங்கும்படி தேவன் கொடுத்திருக்கும் சான்றுகளின்மீது வாழாமல், கேள்விகளுக்கும் அற்பமான மறுப்புகளுக்கும் தங்களை அனுமதிக்கும்போது, அவர்களது சந்தேகங்கள் தொடர்ந்து அதிகமாக உறுதியடைவதைக் காண்பார்கள்! (30)GCTam 618.2

    ஆனால் தேவனுடைய வார்த்தைகளில் சந்தேகம்கொண்டு, அவரது கிருபையைப்பற்றிய வாக்குறுதியின்மீது அவநம்பிக்கை கொள்ளுகிறவர்கள் தேவனை அவமதிக்கின்றனர். அவர்களுடைய செல்வாக்கு மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் இழுப்பதற்குப்பதிலாக, அவரைவிட்டு விலகிச்செல்ல நடத்துகிறது. அவர்கள் தங்களின் இருண்ட கிளைகளை விசாலமாகப் பரப்பி, இலைகள் மிகுந்து, மற்ற செடிகளுக்கான சூரிய ஒளியை தடுத்து நிறுத்தி, மிகக் குளிரான நிழலின் கீழ் இலைகள் தொங்கிச் சாகும்படிச் செய்யக் காரணமாக உள்ள கனிகொடாத மரங்களாக உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைச் செயல்கள் ஒருபோதும் முடிவடையாத அவர்களுக்கு எதிரான சாட்சியாகக் காணப்படும். தவறாமல் அறுவடையைத் தருகின்ற, சந்தேகமான, கடவுள் இல்லை என்னும் கொள்கைகளை அவர்கள் விதைக்கின்றனர். (31)GCTam 619.1

    சந்தேகத்திலிருந்து விடுதலை அடையவேண்டும் என்று நேர்மையாக விரும்புபவர்கள், பின்தொடரக்கூடிய ஒரு பாதை உள்ளது. அவர்களுக்குப் புரியாதவைகளைப்பற்றிக் கேள்விகள் கேட்டுக்கொண்டும் அற்பமான மறுப்புகளைக் கூறிக்கொண்டும் இருப்பதற்குப்பதிலாக, அவர்களின்மீது ஏற்கனவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளிக்கு அவர்கள் கீழ்ப்படியட்டும். அப்பொழுது அவர்கள் அதிகமான ஒளியைப் பெறுவார்கள். அவர்களது புரிந்துகொள்ளுதலுக்குத் தெளிவாக்கப்பட்ட ஒவ்வொரு கடமையையும் அவர்கள் செய்வார்களாக. அப்பொழுது அவர்கள், சந்தேகத்திற்குள்ளாக இருப்பவைகளைப் புரிந்துகொள்ளவும் செயலாற்றவும் தகுதிப்படுத்தப்படுவார்கள். (32)GCTam 619.2

    சத்தியத்தைப் போல் நெருக்கமாகத் தோன்றும் போலியான ஒன்றை நமக்கு முன்வைக்க சாத்தானால் முடியும். சத்தியத்தினால் கோரப்பட்ட சுயமறுப்பையும் தியாகத்தையும் தவிர்க்க விரும்புவதினால், வஞ்சிக்கப்பட விரும்புபவர்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட்டுப்போவார்கள். ஆனால் என்ன விலை கொடுத்தாகிலும் சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று நேர்மையாக விரும்பும் ஒரு ஆத்துமாவைக்கூடத் தன் வல்லமையின் அடியில் கட்டுப்படுத்தி வைக்கச் சாத்தானால் முடியாது. கிறிஸ்துவே சத்தியமானவர். “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி-யோவான் 1:9. மனிதர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்த தேவ ஆவியானவர் அனுப்பப்பட்டிருக்கிறார். “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்” -மத்தேயு 7:7. “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, ... என்று அறிந்துகொள்ளுவான்”- யோவான் 7:17. (33)GCTam 619.3

    கிறிஸ்துவின் அடியார்கள் தங்களுக்கு எதிராக, சாத்தானும் அவனது சேனைகளும் அமைத்துக்கொண்டிருக்கின்ற திட்டங்களைப்பற்றிக் குறைவாகவே அறிந்திருக்கின்றனர். ஆனால் வானங்களுக்கு மேலாக அமர்ந்திருக்கும் ஒருவர், அவரது ஆழ்ந்த திட்டங்களை நிறைவேற்ற, இந்த உபாயங்களனைத்தையும் தமது அதிகாரத்தால் நீக்குவார். சோதனை என்னும் பயங்கரமான நெருப்பின்கீழாக, கர்த்தர் அவரது மக்களை அனுமதிக்கிறார். அவர்களது துன்பங்களிலும் துயரங்களிலும் அவர் மகிழ்ச்சி அடைவதற்காக அல்லாமல், அது அவர்களது இறுதி வெற்றிக்கு முக்கியமான செய்முறை என்பதனாலேயே அதனை அனுமதிக்கிறார். அந்தச் சோதனையின் முக்கியமான நோக்கமே, ஆசைகாட்டி சிக்கவைக்கும் கவர்ச்சியைத் தடுத்து, அவர்களை ஆயத்தப்படுத்துவது என்பது மட்டுமே ஆகும்.(34)GCTam 620.1

    தேவனுடைய மக்கள் தாழ்மையுடனும், நொறுங்குண்ட இருதயங் களுடனும் பாவ அறிக்கை செய்து, விசுவாசத்தினால் அவரது வாக்குத் தத்தங்களின்மீது உரிமைபாராட்ட விரும்புவார்களானால், தேவனுடைய வேலைக்கு இடையூறு செய்யவோ அல்லது அவரது பிரசன்னத்தை அவரது மக்களிடமிருந்து மூடித் தடுக்கவோ துன்மார்க்கர்களாலும் பிசாசினாலும் முடியாது. பகிரங்கமானதோ அல்லது இரகசியமானதோ ஒவ்வொரு சோதனையும் ஒவ்வொரு எதிரிடையான செல்வாக்கும் வெற்றிகரமாகத் தடுக்கப்படலாம். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்”-சகரியா 4:6. (35)GCTam 620.2

    “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள்வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமை செய்கிறவன் யார்?”-1 பேதுரு 3:12,13. விலைமதிப்புமிக்க வெகுமானங் களினால் பிலேயாம் கவரப்பட்டு, இஸ்ரவேலுக்கு எதிராக பிரார்த்தனை செய்தபோது, கர்த்தருக்கு பலிகளைச் செலுத்தி இஸ்ரவேலின்மீது சாபத்தைக் கொண்டுவர முயன்றபோது, அவன் கூறிட விரும்பிய சாபத்தை கூறவிடாமல் தேவனுடைய ஆவியானவர் அவனைத் தடுத்தார். பிலேயாம்: “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக” என்றான். மறுபடியும் பலிசெலுத்தப்பட்டபோது, தெய்வ பக்தியற்ற அந்தத் தீர்க்கதரிசி :'இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்-எண். 23:8,10,20,21,23. இருந்தபோதிலும் மறுபடியும் மூன்றாவது தடவையாக பலிபீடங்கள் கட்டப்பட்டன. மறுபடியும் ஒரு சாபத்தை வரவழைக்க பிலேயாம் பேசினான். ஆனால் விருப்பமற்ற அந்தத் தீர்க்கதரிசியின் உதட்டிலிருந்து, தேவனுடைய ஆவியானவர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் செழுமையை அறிவித்து அவர்களது பகைஞரின் பொய்யையும் கெட்ட எண்ணங்களையும் கண்டித்தார். “உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” (எண். 24:9) என்றான். (36)GCTam 620.3

    இந்தச் சமயத்தில் இஸ்ரவேல் மக்கள் தேவனுக்குப் பக்திவிசுவாசமிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் அவரது கற்பனைக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்தவரை, பூமியிலிருந்த எந்த வல்லமைகளினாலும் அந்தகாரத்திலிருந்த எந்த வல்லமைகளினாலும் அவர்களை மேற்கொள்ளவே முடியவில்லை. எனவே தேவனுடைய ஜனங்களுக்கு எதிராகக் கூறும்படி பிலேயாம் அனுமதிக்கப்படாத சாபத்தை, அவர்கள்மீது கொண்டுவருவதில் பாவம் செய்யும் கெட்ட வழியில் அவர்களை வசீகரித்ததின் மூலமாக வெற்றியடைந்தான். தேவனுடைய பிரமாணங்களை அவர்கள் மீறினபோது, அவர்கள் அவரைவிட்டு தாங்களாகவே பிரிந்துசென்று, அழிப்பவனின் வல்லமையை உணரும்படியாக விட்டுவிடப்பட்டனர். (37)GCTam 621.1

    கிறிஸ்துவில் தங்கியிருக்கும் பலவீனமான ஆத்துமாவுங்கூட, அந்தகாரச் சேனைக்குச் சமமாக இருப்பதைவிடவும் மேலானது. அவன் தானாகவே வெளிப்படையாகத் தன்னை வெளிக்காட்டினால், அவனை நேராகச் சந்தித்து தடுக்கப்படுவான் என்வதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். எனவேதான், அவனது கோட்டைக்குள் நுழைய முயலும் அனைவரையும் அழிக்கும் ஆயத்தத்துடன் தனது படைகளோடு பதுங்கி இருந்து, சிலுவையின் வீரர்களை அவர்களது பாதுகாப்பான அரணுக்குள்ளிருந்து வெளியே இழுக்க வகைதேடுகிறான். பணிவுடன் தேவனைச் சார்ந்திருந்து, அவரது பிரமாணங்கள் அனைத்திற்கும் கீழ்ப்படிவதினால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்கமுடியும். ஒரு நாளோ அல்லது ஒருமணி நேரமோ ஜெபமின்றி ஒருவராலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது. மிக முக்கியமாக தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளும் ஞானத்திற்காகக் கெஞ்சி மன்றாடவேண்டும். அந்த சோதனைக்காரனின் தந்திரங்களும், அவனை வெற்றிகரமாகத் தடுக்கக்கூடிய உபாயங்களும் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டுவதில் அவன் நிபுணன். நம்மை இடறிவிழச் செய்ய வேதவாசகப் பகுதியில் தனது சுயமான விளக்கங்களை வைப்பதில் சாத்தான் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருக்கிறான். தேவனைச் சார்ந்திருக்கிறோம் என்னும் நமது பார்வையை நாம் ஒருபோதும் இழந்துவிடாமல், தாழ்மையான இருதயத்துடன் வேதாகமத்தை வாசிக்கவேண்டும். சாத்தானின் உபாயங்களில் இருந்து நம்மை தொடர்ச்சியாக காவல்செய்யும் அதே நேரத்தில், எங்களை சோதனைக்குட்படப்பண்ணாதிரும் என்றும் விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். (38)GCTam 621.2