Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    10—ஜெர்மனியில் சீர்திருத்தத்தின் செயல்பாடுகள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம் : 185—196)

    லு த்தர் இரகசியமாக காணாமல்போய்விட்டது ஜெர்மனி முழுவதிலும் பெரும் திகில்மிக்க குழப்பத்தை உண்டுபண்ணியது. அவரைப்பற்றிய விசாரிப்பு எங்கும் கேட்கப்பட்டது. அவரைப்பற்றிய பயங்கரமான வதந்திகள் எங்கும் பரவவே, அநேகர் அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என நம்பினர். அவருக்காக நண்பர்கள் மட்டுமின்றி, சீர்திருத்தத்தை வெளிப்படையாக ஆதரிக்காதிருந்த ஆயிரக்கணக்கானவர்களும், புலம்பினர். அவரது இறப்பிற்காகப் பழிவாங்குவோம் என் அநேகர் ஆணையிட்டனர். (1)GCTam 203.1

    அவருக்கு ஆதரவாக உள்ள மக்களின் எழுச்சி எவ்விதமாக உள்ளது என்பதை ரோமன் கத்தோலிக்க தலைவர்கள் திகிலுடன் கண்டனர். முதலில் லுத்தரின் மரணம்பற்றிய உத்தேசத்தினால், அவர்கள் வெற்றிச்சிரிப்புச் சிரித்திருந்தபோதிலும், விரைவில் மக்களின் கோபத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள விரும்பினர். தனது எதிரிகளுக்கு மத்தியி லிருந்தபோது அவர் செய்த துணிகரமான செயல்களால், அவரது எதிரிகளுக்கு உண்டான துன்பங்கள் அவர் நீக்கப்பட்டதினால் உண்டான துன்பங் களுக்கு ஒப்பாக இருக்கவில்லை. தைரியசாலியாக இருந்த சீர்திருத்த வாதியை அழிக்கவேண்டுமென்று தங்களது கோபத்தில் வகைதேடியிருந்தவர் களுங்கூட, அவர் ஒரு உதவியற்ற அடிமையாக்கப்பட்டுவிட்டார் என்ற அச்சத்தால் நிரப்பப்பட்டனர். “நம்மைக்காத்துக்கொள்ள எஞ்சி நிற்கும் ஒரே வழி, லுத்தரை விரும்புகிற ஜனத்துக்கு அவரைத் தரும்வரைக்கும் நாம் நமது தீவட்டிகளைக் கொளுத்தி, உலகெங்கிலும் அவரைத் தேடுவதுதான்” என்று ஒருவர் கூறினார்.—D'Aubigne, b. 9, ch. 1. பேரரசரின் அரசாணை வலுவிழந்தது விழுந்ததுபோல் இருந்தது. அதைக்காட்டிலும் லுத்தரைப்பற்றிய செய்தி அதிக கவனத்தைப் பெற்றதால் போப்புவின் பிரதிநிதிகள் மூர்க்கமடைந்தனர். (2)GCTam 203.2

    அவர் ஒரு சிறைக்கைதியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி மக்களின் பயத்தை சாந்தப்படுத்திய அதே சமயத்தில், அவருடைய நலத்தைக்குறித்த ஆர்வத்தைத் தூண்டியது. முன்னர் இருந்ததைவிட அதிகமான ஆர்வத்துடன், அவரது எழுத்துக்கள் வாசிக்கப் பட்டன. பயங்கரமான அந்த நிலைமைகளில் தேவனுடைய வார்த்தையைக் காத்துநின்ற அந்த வீரரின் காரியத்தில் அதிகம்பேர் சேர்ந்தனர். சீர்திருத்தம் தொடர்ச்சியாக பலமடைந்துகொண்டுவந்தது. லுத்தரால் விதைக்கப்பட்ட விதை எங்கும் முளைத்தெழும்பின. அவரது பிரசன்னத்தால் செய்துமுடிக்க இயலாமல் இருந்த பணியை, அவரது மறைவு நிறைவேற்றியது. அவர்களது பெரும் தலைவர் நீக்கப்பட்டதால் உண்டான ஒரு புதிய பொறுப்பை, மற்ற ஊழியர்கள் உணர்ந்தனர். இவ்விதமாக மிகுந்த மேன்மையுடன் தொடங்கப் பட்ட ஊழியம் இடறலடையும்படி விட்டுவிடப்படக்கூடாது என்று புதிய விசுவாசத்துடனும் ஆர்வத்துடனும் அதை முன்கொண்டு சென்றனர். (3)GCTam 204.1

    ஆனால் சாத்தான் ஓய்ந்திருக்கவில்லை! ஏனைய ஒவ்வொரு சீர்திருத்த இயக்கத்தையும் அழிக்க முயன்றதைப்போலவே, இப்பொழுதும் மக்களை வஞ்சித்து அழிக்க, உண்மையான ஊழியத்திற்குப் பதிலாக, ஒரு போலியான சீர்திருத்தத்தை அவர்களுக்குள் தோற்றுவித்தான். முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபைக்குள்ளாக கள்ளக்கிறிஸ்துக்கள் இருந்தது போல, பதினோறாம் நூற்றாண்டில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பினர். (4)GCTam 204.2

    உலகில் உண்டான சமயம் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பெருக்குகளினால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட சில மனிதர்கள், தாங்கள் பரலோகத்திலிருந்து சிறப்பான தகவல்களைப் பெற்றிருப்பதாகக் கற்பனைசெய்துகொண்டு, லுத்தரால் மிகவும் பலவீனமான விதத்தில் தொடங்கப்பட்ட சீர்திருத்தத்தை முடிவிற்கு நடத்திச்செல்லும்படி தெய்வீகத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று அறிவித்தனர். உண்மையில் லுத்தர் நிறைவேற்றியிருந்த ஊழியத்தை அவர்கள் சீர்குலைத்துக் கொண்டிருந்தனர். நடைமுறை சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும் தேவனுடைய வார்த்தைதான் பூரணசட்டமாக இருக்கிறது என்ற சீர்திருத்தத்தின் அடிப்படை அஸ்திவாரமான பெரும் கொள்கையை அவர்கள் நிராகரித்து, அந்தத் தவறாத வழிகாட்டுதலுக்குப் மாற்றாக, மாறக்கூடிய நிச்சயமற்ற தங்களது அபிப்பிராயங்களையும் உணர்ச்சிகளையும் தவறையும் ஏற்படுத்தினார்கள். உண்மையையும் தவறையும் கண்டுபிடிக்கும் மாபெரும் கருவியாகிய வேதாகமத்தை அவர்கள் ஒதுக்கி வைத்ததினால், தனக்குப் பிரியமான விதத்தில் மனங்களைக் கட்டுப்படுத்துகின்ற பாதை சாத்தானுக்குத் திறந்துவிடப்பட்டது! (5)GCTam 204.3

    இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளில் ஒருவர், தான் காபிரியேல் தூதனால் போதிக்கப்பட்டிருப்பதாக உரிமைபாராட்டினார். இவருடன் இணைந்ததினால், தனது கல்வியைத் தொடராமல் விட்டுவிட்ட ஒரு மாணவர், தேவனுடைய வார்த்தையை விளக்கும் ஞானத்தினால், தேவன் தன்னை நிரப்பியிருப்பதாக அறிவித்தார். இயல்பாகவே மூடநம்பிக்கையைப் பின்பற்ற விரும்பின மற்றவர்களும் அவர்களுடன் இணைந்தனர். இந்த உற்சாகவாதிகளின் செயல்கள் அதிகமான உணர்ச்சிப்பெருக்கை உண்டுபண்ணிற்று. லுத்தரின் பிரசங்கங்கள் சீர்திருத்தத்தின் தேவையை உணரும்படி எங்குமிருந்த மக்களை எழுப்பியிருந்தது. இந்தப் பாசாங்கான தீர்க்கதரிசிகளினால் சில நேர்மையானவர்களும் தவறாக நடத்தப்பட்டனர். (6)GCTam 205.1

    இந்த இயக்கத்தின் தலைவர்கள் விட்டன்பர்க் நகருக்குச் சென்று, மெலாங்தன்மீதும் அவரது சக ஊழியர்களின்மீதும் தங்களுக்குள்ள உரிமையை வற்புறுத்தினர். “மக்களுக்குப் போதிக்கும்படி நாங்கள் தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறோம் நாங்கள் தேவனிடமிருந்து சிறப்பான வெளிப்படுத்தல்களையும் பெற்றிருக்கிறோம் எனவே என்ன நிகழும் என்பதையும் அறிவோம் நாங்கள் அப்போஸ்தலர்களாகவும், தீர்க்கதரிசி களாகவும் இருந்து, சொல்லுகிற சத்தியத்தினால் டாக்டர் லுத்தரிடம் முறை யிடுகிறோம்” என்று அவர்கள் கூறினர்.-D’Aubigne, b. 9, ch. 7. (7)GCTam 205.2

    சீர்திருத்தவாதிகள் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர். இது அவர்கள் ஒருபோதும் சந்தித்திராத ஒரு காரியமாக இருந்தது. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறியாதிருந்தனர். “இந்த மனிதர்களிடம் உண்மையில் அபூர்வமான ஆவிகள் காணப்படுகின்றன. ஆனால் எப்படிப்பட்ட ஆவிகள்? ஒருபக்கம் தேவனுடைய ஆவியை அவித்துப்போடாமலிருக்கவும், மறுபக்கம் சாத்தானின் ஆவியினால் வழிவிலகாமலிருக்கவும் நாம் எச்சரிக்கையாக இருப்போமாக” என்று மெலாங்தன் குறிப்பிட்டார்.- D'Aubigne, b. 9, ch. 7. (8)GCTam 205.3

    புதிய போதனையின் கனிகள் விரைவில் வெளித்தோன்றத் தொடங்கின. மக்கள் வேதாகமத்தை அலட்சியம்செய்யவும் அல்லது முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் நடத்தப்பட்டனர். பள்ளிகள் குழப்பத்தில் ஆழ்ந்தன. மாணவர்கள் சகலவிதமான கட்டுப்பாடுகளையும் ஒதுக்கி, கல்வியை விட்டுவிட்டு, பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறினர். சீர்திருத்தத்தின் பணியை எழுப்பி, அதைக் கட்டுப்படுத்தத் தாங்கள் தகுதிவாய்ந்தவர்கள் என்று எண்ணின மனிதர்கள், அதை அதன் அழிவின் விளிம்புக்குக் கொண்டுவருவதில் தான் வெற்றியடைந்தனர். ரோமன் கத்தோலிக்கவாதிகள் தங்களது நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டவர்களாக “இன்னும் ஒரு முயற்சி, பின்பு அனைத்தும் நமதாகி விடும்” என்று கூறிக்கொண்டனர்.—Ibid., b. 9, ch. 7. (9)GCTam 205.4

    நிகழ்ந்ததை வார்ட்பர்கிலிருந்து செவியுற்ற லுத்தர், “இந்தக் கொள்ளைநோயை சாத்தான் அனுப்புவான்” என்று நான் எப்போதும் எதிர்பார்த்திருந்தேன் என்று கவலையுற்றவராகக் கூறினார்.-Ibid., b. 9, ch. 7. பாசாங்கான தீர்க்கதரிசிகளின் சுபாவத்தை உணர்ந்தவராக சத்தியத்தை அச்சுறுத்தும் ஆபத்தைக் கண்டார். போப்பு, பேரரசன் ஆகியவர்களால் உண்டான எதிர்ப்புங்கூட, இப்பொழுது அவர் அனுபவித்த குழப்பத்தையும் மனத்துயரையும்விடப் பெரிதாக இருக்கவில்லை. சீர்திருத்தத்தின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களிடமிருந்துதான், அதற்கு மிகமோசமான எதிரிகள் தோன்றினார்கள். அவருக்கு அதிக மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டுவந்திருந்த அதே சத்தியங்கள், சபையில் சண்டைகளும் குழப்பங்களும் ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன. (10)GCTam 206.1

    சீர்திருத்தத்தின் பணியில் முன்செல்லும்படி தேவாவியால் நடத்தப்பட்ட லுத்தர் அவருக்கு அப்பாற்பாட்ட நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். அந்த நிலையை அடையவேண்டும் என்ற நோக்கமோ அல்லது பெரிய மாற்றங்களை உண்டுபண்ண வேண்டுமென்ற எண்ணமோ அவரிடம் இருக்கவில்லை. எல்லையற்ற வல்லமையின் கரத்தில் அவர் ஒரு கருவியாக மட்டும் இருந்திருந்தார். அப்படியிருந்தும் தனது ஊழியத்தின் பலனை நினைத்து அவர் அடிக்கடி நடுங்கினார். “எனது கோட்பாடுகள் ஒரு மனிதனை அவன் எப்படிப்பட்ட ஏழ்மையான அறியாமையிலிருந்தாலும் காயப்படுத்தியிருந்தால்,—அது காயப்படுத்தாது அதுதான் சுவிசேஷமே- பின்வாங்குவதைவிட, நான் பத்து தடவைகள் சாவேன்” என்று அவர் ஒருமுறை கூறினார்.--Ibid., b. 9, ch. 7. (11)GCTam 206.2

    சீர்திருத்தத்தின் மையம் என்று சொல்லப்பட்ட விட்டன்பர்க் நகரம் இப்பொழுது மிக விரைவாக மூட நம்பிக்கை, சட்டமின்மை ஆகிய வல்லமைகளின்கீழ் விழுந்துகொண்டிருந்தது. இந்தப் பயங்கரமான நிலைமை லுத்தரின் பேதனைகளினால் உண்டாகவில்லை. ஆனால் ஜெர்மன் நாடு முழுவதிலுமிருந்த அவரது எதிரிகள் இந்தக் குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தினர். “இந்த பெரும் சீர்திருத்தத்தின் முடிவு இப்படி இருக்க முடியுமா” என்று அவர் தனது ஆத்துமாவில் உண்டான கசப்பினால் சில சமயங்களில் கேட்டார்.-Ibid., b. 9, ch. 7. மறுபடியும் அவர் தேவனுடன் போராடினபோது, அவரது இதயத்திற்குச் சமாதானம் வந்தது. “இந்த வேலை என்னுடையதாயிராமல், உம்முடையதாயிருக்கிறது. மூட நம்பிக்கையினாலும் மத வெறியினாலும் இந்த வேலை பாதிக்கப்படும்படி நீர் அனுமதிக்கமாட்டீர்” என்று ஜெபித்தார். இப்படிப்பட்ட போராட்டம் நிறைந்த நெருக்கடியான நேரத்தில், அதிக காலம் விலகியிருத்தல் என்கிற எண்ணம் ஏற்றுக்கொள்ளக்கூடாததாக இருந்ததினால், விட்டன்பர்க் நகருக்குத் திரும்பு வதற்குத் அவர் தீர்மானித்தார். (12)GCTam 206.3

    தாமதமின்றி ஆபத்து நிறைந்த பயணத்தைத் துவங்கினார். பேரரசனால் தடைசெய்யப்பட்டிருந்தார். எதிரிகள் அவரது உயிரை எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தார்கள். அவருக்கு உதவுவதற்கும் புகலிடம் தருவ தற்கும் அவரது நண்பர்கள் தடைசெய்யப்பட்டிருந்தனர். அவரைச் சார்ந்தவர் களுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு இருந்தது. ஆனால் சுவிசேஷத்தின் பணி அபாயமான நிலைமைக்கு உள்ளாகியிருந்ததை அவர் கண்டு, சத்தியத்திற்காகப் போராடுவதற்காக, கர்த்தரின் நாமத்தினால் அச்சமின்றிப் புறப்பட்டுச்சென்றார். (13)GCTam 207.1

    வார்ட்பர்க் நகரைவிட்டுச் செல்லும் அவரது நோக்கத்தைப்பற்றிய கடிதத்தில், “ஒரு தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பைவிட, மேலான பாதுகாப்புடன் நான் விட்டன்பர்க் நகருக்குச் செல்லுகிறேன் என்பது மேன்மை தங்கிய உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். மேன்மை தங்கிய உங்களது ஆதரவைக் கோரும் எண்ணம் எனக்கில்லை. உங்களுடைய மேன்மையைக் காப்பது என் நோக்கமாயிருப்பதால் அந்த ஆதரவை விரும்பும் தூரத்தைவிட அதிக தூரம் சென்றுவிட்டேன். உங்கள் மேன்மை என்னை பாதுகாக்கும் அல்லது பாதுகாக்க முடியும் என்று தெரிந்திருப்பதால் நான் விட்டன்பர்கிற்கு வரவில்லை. எந்த உலகப்பிரகாரமான ஆயுதமும் இந்த நோக்கத்தை முன்கொண்டுசெல்லாது. மனிதனுடைய உதவியும் சம்மதமும் இல்லாமல் தேவனே எல்லாவற்றையும் செய்யவேண்டும். அதிக விசுவாசம் கொண்டவனே அதிக பாதுகாப்பைப் பெறுகிறான்” என்று தேர்தல் அதிகாரிக்கு எழுதியிருந்தார்.--Ibid., b. 9, ch. 8. (14)GCTam 207.2

    “மேன்மை தங்கிய உங்களது அதிருப்தியையும் உலகத்தின் கோபத்தையும் பெற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். விட்டன்பர்க் நகர மக்கள் எனது சொந்த ஆடுகளில்லையா? தேவன் அவர்களை எனது பொறுப்பில் விடவில்லையா? தேவைப்பட்டால், அவர்களுக்காக நான் என் ஜீவனையும் கொடுக்க வேண்டாமா? இதைத்தவிர, ஜெர்மனி முழுவதிலும் ஒரு கலகம் உண்டாவதையும், அதனால் தேவன் நம்நாட்டை தண்டிக்கப் போவதையும் காண நான் பயப்படுகிறேன்” என்று விட்டன்பர்க் செல்லும் வழியில் இரண்டாவது கடிதத்தில் எழுதினார்.—Ibid., b. 9, ch. 7. (15)GCTam 207.3

    மிகுந்த எச்சரிக்கையுடனும் தாழ்மையுடனும் கூடவே உறுதியான முடிவுடனும் அவர் தனது பணியில் ஈடுபட்டார். “பலாத்காரத்தின் மூலமாக எவைகளெல்லாம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனவோ, அவைகளை தேவனுடைய வார்த்தையினால் நாம் தூக்கியெறிய வேண்டும்” என்றார்.- Ibid., b. 9, ch. 8. (16) மூடநம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் உடையவர்களுக்கு எதிராக, நான் பலவந்தம் செய்யமாட்டேன். வற்புறுத்தவேண்டாம். மனசாட்சியின் சுதந்திரத்திற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். விசுவாசத்தின் சாராம்சமே அதுதான்” என்றார். லுத்தர் விட்டன்பர்க் நகருக்குத் திரும்பிவந்துவிட்டார் என்றும் விரைவில் அவர் பிரசங்கம் செய்யவிருக்கிறார் என்றும் எங்கும் சொல்லப்பட்டது. எல்லாத் திசைகளிலுமிருந்து மக்கள் ஆலயத்திற்கு வந்து கூடினர். ஆலயம் நிரம்பி வழிந்தது. அவர் பிரசங்க பீடத்திலேறி, மிகுந்த ஞானத்துடன் மென்மையாக உபதேசித்துக் கடிந்துகொண்டார். திருப்பலியை அழிக்கும் முயற்சியில் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிலரது நடவடிக்கைகளைப் பற்றி: (17)GCTam 208.1

    “திருப்பலி (பூசை) என்பது தவறான ஒரு காரியம். தேவன் அதை எதிர்க்கிறார். அது நீக்கப்படவேண்டும். உலகமெங்கிலும் சுவிசேஷ த்தில் உள்ள இராப்போஜனம் (கர்த்தருடைய திருவிருந்து) அதற்குப் பதிலாக ஏற்படுத்தப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் பலாத்காரத்தினால் ஒருவரும் அதிலிருந்து நீக்கப்படலாகாது. இந்தக் காரியத்தை நாம் தேவனின் கரங்களில் விட்டுவிடவேண்டும். நாம் அல்ல, தேவனுடைய வார்த்தை செயலாற்ற வேண்டும். ஏன் அப்படி? என்று நீங்கள் கேட்பீர்கள். ஏனெனில், குயவன் கரத்தில் களிமண் இருக்கிறதுபோல, எனது கரத்தில் மனிதர்களின் இதயங்கள் இல்லை. பேசும் உரிமை நமக்குள்ளது. கட்டாயப்படுத்தும் உரிமை நமக்கில்லை. நாம் போதிப்போமாக. மீதியுள்ளவைகள் தேவனுடையவைகள். நான் வற்புறுத்தினால், அதனால் எனக்கு என்ன ஆதாயம்? முகச்சுளிப்பு, சம்பிரதாயங்கள், சேஷ்டைகள், மனிதச் சட்டங்கள், கபட நாடகங்கள்தான். இதயத்தில் உண்டாகும் உண்மை, மெய்விசுவாசம், அன்பு ஆகிய எதுவும் இருக்காது. இந்த மூன்றும் இல்லாத இடத்தில் ஒன்றுமே இல்லை. அதனாலுண்டாகும் வெற்றியை நான் ஆதரிக்கமாட்டேன். நானும் நீங்களும் இந்த உலகமும் ஒருமிப்பதனால், நமக்கு உண்டாகக்கூடிய பலத்தைவிட, அவரது வார்த்தையின் எளிய பலத்தினால் தேவன் அதிகம் செய்கிறார். தேவன் இதயத்தைப் படிக்கிறார். இதயம் எடுத்துக்கொள்ளப்படும்போது, அனைத்தும் வெற்றியாகும்....” என்றார்.(18)GCTam 208.2

    “பிரசங்கம் செய்யவும் எழுதவும் விவாதிக்கவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால் எவரையும் வற்புறுத்தமாட்டேன். ஏனெனில், விசுவாசம் என்பது தானாக உண்டாகும் செயல். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பாருங்கள். போப்பு, பாவமன்னிப்பு நடவடிக்கைகள், போப்புமார்க்கவாதிகள் ஆகியவற்றிக்கெதிராக நின்றேன். ஆனால் பலாத்காரமும் கலகமும் செய்யவில்லை. நான் தேவனுடைய வார்த்தையை முன்வைத்தேன் பிரசங்கித்தேன், எழுதினேன், அத்தோடு நிறுத்திவிட்டேன். நான் உறங்கிக் கொண்டிருந்தபோது... இளவரசரோ, பேரரசரோ செய்யமுடியாததை நான் சொன்ன தேவனின் வார்த்தைகள் செய்து, போப்புமார்க்கத்தைத் தூக்கிவீசியது. என் பங்கிற்கு அதை அடுத்து நான் ஒன்றுமே செய்யவில்லை. தேவனுடைய வார்த்தை முழு வேலையையும் செய்தது. பலாத்காரம் செய்யும்படி நான் வேண்டுகோள் விடுத்திருந்தால், ஒருவேளை ஜெர்மனி எங்கும் இரத்த ஆறு ஓடியிருந்திருக்கும். அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? ஆத்துமாவும் சரீரமும் அழிந்திருக்கும். எனவே, தேவனுடைய வார்த்தையை உலகத்திற்கு ஊடாக செல்லும்படி விட்டுவிட்டு, நான் அமைதியாக இருந்தேன்” என்றார்.--Ibid., b. 9, ch. 8. (19)GCTam 209.1

    ஆர்வமிக்க கூட்டத்தினருக்கு லுத்தர் ஒவ்வொரு நாளும் ஒரு வாரகாலத்திற்குத் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். மதவெறியினால் உண்டான எழுச்சி அலையை தேவனுடைய வார்த்தை தகர்த்தது. தவறான பாதையில் நடத்தப்பட்டிருந்த மக்களை சுவிசேஷத்தின் வல்லமை சத்தியத்தின் பாதைக்குத் திருப்பிக்கொண்டுவந்தது. (20)GCTam 209.2

    பெரும் தீமையை விளைவிக்கக்கூடிய பாதையிலிருந்த மத வெறியாளர்களைச் சந்திக்க லுத்தர் விரும்பவில்லை. இவர்கள் நியாயம் அற்றவர்களாகவும், ஒழுக்கமற்ற ஆசைகளை உடையவர்களாகவும் இருந்து, பரலோக வெளிச்சத்தினால் ஒளி அடைந்திருக்கிறோம் என்று உரிமைபாராட்டிக்கொண்டு, மிகலேசான முரண்பாட்டையோ, மிகமேலான அன்புள்ள கடிந்துகொள்ளு தலையோ, ஆலோசனையையோகூட சகிக்க முடியாதவர்களாக உள்ள மனிதர்கள் என்பதை லுத்தர் அறிந்திருந்தார். இவர்கள் மேலான அதிகாரத்தைத் தங்களுக்குத் தாங்களாகவே எடுத்துக்கொண்டு, எந்தவிதமான கேள்வியுமின்றி ஒவ்வொருவரும் அவர் சொல்வதை அங்கீகரிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவருடன் ஒரு நேர்முகச் சந்திப்பு தேவையென்று அவர்கள் கோரியபோது, அவர் சம்மதித்து, அவர்களது போலியான தன்மையை அவர் வெற்றிகரமாக எடுத்துக்காட்டியதினால், அந்த வஞ்சகர்கள் உடனே விட்டன்பர்கை விட்டுச் சென்றனர். (21)GCTam 209.3

    மதவெறி சிறிது காலத்திற்குத் தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பல வருடங்களுக்குப் பின், அது பெரும்பலாத்காரத்துடன் எழுந்து, அதிக பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவந்தது. இந்த இயக்கத்திலிருந்த தலைவர்களைப் பற்றி சொல்வதென்றால், “தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்கு உயிரற்ற கடிதமாயிருந்தது. அவர்கள் ‘ஆவி ஆவி’ என்று குரலெழுப்பத் தொடங்கினர். அவர்களுடைய ஆவி அவர்களை நடத்திச் செல்லுகிற இடத்திற்கு நிச்சயமாக நான் அவர்களை பின்பற்றிச் செல்லமாட்டேன். அப்படிப்பட்ட பரிசுத்தவான்கள்மட்டுமே இருக்கிற சபையிலிருந்து தேவன் தமது இரக்கத்தினால் என்னைப் பாதுகாப்பாராக. தங்களது பாவங்களை அறிந்து, உணர்ந்து, தேவனிடமிருந்து ஆறுதலையும் ஆதரவையும் பெறுவதற்காகத் தொடர்ச்சியாக எவர்கள் தங்கள் இதயங்களின் ஆழத்திலிருந்து கதறுகின்றனரோ, அப்படிப்பட்ட தாழ்மையான பலவீனமான நோயுற்றவர்களுடன் நான் வாழ விரும்புகிறேன்” என்று லுத்தர் கூறினார்.- Ibid., b. 10, ch. 10. (22)GCTam 210.1

    மதவெறியர்களில் அதிகம் செலாற்றியிருந்த தாமஸ் முன்செர் திறமைமிக்க மனிதர். சரியாக நடத்தப்பட்டிருந்தால், நல்ல காரியங்களைச் செய்ய அது அவருக்கு உதவியிருக்கும். ஆனால் மெய்யான சமயத்தின் முதல் கொள்கையை அவர் கற்றுக் கொள்ளவில்லை. சீர்திருத்தம் தன்னிலிருந்து ஆரம்பமாகவேண்டும் என்பதை மறந்துவிட்ட ஆர்வம் மிக்கவர்கள் செயல்படுவதுபோல, உலகத்தைச் சீர்திருத்த தேவன் தன்னை அபிஷேகம் செய்திருப்பதாகக் கற்பனைசெய்துகொண்டார்.--Ibid., b. 9, ch. 8. பதவியையும் செல்வாக்கையும் அடையும் ஆசைகொண்டவராக, லுத்தருக்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக இருக்கக்கூட விருப்பமற்றவராக இருந்தார். போப்புவின் வார்த்தைக்குப் பதிலாக வேதவாக்கியங்களின் அதிகாரத்தை வைக்கும் சீர்திருத்தவாதிகளின் செயலானது போப்பு மார்க்கத்தின் வடிவுள்ள வேறொரு அமைப்பை ஏற்படுத்துகின்ற முயற்சிதான் என்றும் அறிவித்தார். உண்மையான சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தும்படி தெய்வீகத்தால் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக அவரைப்பற்றி அவரே உரிமைபாராட்டினார். “ஆவியை உடையவன் எவனும், தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் பரிசுத்த வேத வாக்கியங்களைக் கண்டே இராதவனாக இருந்தாலும், மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறான்” என்று முன்செர் கூறினார்.- Ibid., b. 10, ch. 10. (23)GCTam 210.2

    தங்களில் உண்டாகக்கூடிய ஒவ்வொரு எண்ணமும் உணர்ச்சித்துடிப்பும், தேவனுடைய சத்தம்தான் என்று கருதி, அவைகளின் உணர்த்துதலினால் நடத்தப்படும்படிக்கு மதவெறி ஆசிரியர்கள் தங்களை ஒப்புக்கொடுத்திருந்தனர். அதன் விளைவாக, வரம்புகளைக் கடந்தனர். “எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்ப்பிக்கிறது” என்று வியந்துகூறித் தங்கள் வேதாகமங்களை எரிக்கவும் செய்தனர். முன்சொன்ன போதனைகள் ஆச்சரியமானவை களின்மீது நாட்டம்வைக்கும்படி மனிதர்களை நடத்தினது. அது மனிதர்களின் யோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தேவனுடைய வார்த்தைக்கும் மேலாக வைக்கும்படி அவர்களது அகந்தையைத் திருப்திப்படுத்தியது. ஆயிரக்கணக்கானவர்களால் அவரது கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விரைவில் அவர் சகலவிதமான பொது ஆராதனை களையும் மறுத்து, இளவரசர்களுக்குக் கீழ்ப்படிவதென்பது, தேவன் பேலியாள் ஆகிய இருவரையும் தொழும் முயற்சி என்று அறிவித்தார். (24)GCTam 210.3

    போப்புமார்க்கத்தின் நுகத்தை தூக்கி எறிய ஏற்கனவே ஆரம்பமாகியிருந்த மக்களின் மனங்கள், சமூக அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் இருப்பதற்குப் பொறுமையற்றதாக மாறத் தொடங்கியது. தெய்வீக அனுமதியோடு செய்வதாக உரிமை பாராட்டின முன்செரின் புரட்சிகரமான போதனைகள், சகலவிதமான கட்டுப்பாடுகளையும் உடைக்கும்படி அவர்களை நடத்தி, தங்களது தவறான எண்ணங்களின்படியும் ஆசைகளின்படியும் நடந்துகொள்ள அவர்களை அனுமதித்தது. மிகப்பயங்கரமான இராஜத் துரோகங்கள் சண்டைகள் ஆகியவைகளின் காட்சி பின்தொடர, ஜெர்மன் நாடு இரத்தக்களரியானது. (25)GCTam 211.1

    மதவெறியின் விளைவுகள் சீர்திருத்தத்தின் விளைவுகளாக குற்றச்சாட்டப்பட்டதைக் கண்ட லுத்தர். எர்பர்ட் நகரில் இதற்குமுன் அனுபவித்த ஆத்தும வேதனைபோல இரண்டத்தனையான வேதனை அடைந்தார். லுத்தரின் கோட்பாடுகள்தான், சட்டரீதியாக கலகங்களின் காரணம் என்று போப்புமார்க்கவாதிகளான இளவரசர்கள் அறிவித்தனர். அநேகர் அதை அங்கீகரிக்க ஆயத்தமாயிருந்தார்கள். இந்தக் குற்றச்சாட்டு எந்தவிதமான அடிப்படை அஸ்திவாரமும் இல்லாதிருந்துங்கூட, சீர்திருத்தவாதியின் மனம் பெரும் துயரடைந்தது. சத்தியத்தின் நோக்கமானது கீழ்த்தரமான மதவெறியோடு சமமாகக் கணக்கிடப்பட்டதை அவரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. மறுபக்கம் கலகக்காரர்களின் கோட்பாடுகளை எதிர்த்ததோடு, அவர்கள் பாராட்டும் உரிமை, தெய்வீக நடத்துதலினால் உண்டாகவில்லை என்று கூறி, சமூக அதிகாரத்திற்கு எதிராக கலகம்செய்கிறவர்கள் என்றும் அவர்களை அறிவித்ததினால், கலகக்காரர்கள் லுத்தரை வெறுத்தனர். அதற்குப் பதில் நடவடிக்கையாக, அவர்கள் லுத்தரைப் பாசாங்குக்காரன் என்றனர். இளவரசர்கள், மக்கள் ஆகிய இரு சாராரின் எதிர்ப்பையும் அவர் தன்மீது வரவழைத்துக்கொண்டதுபோல் காணப்பட்டார்.(26)GCTam 211.2

    மிகவும் விரைவாக விழுந்துவிட உள்ள சீர்திருத்தத்தின் வீழ்ச்சியை எதிர்நோக்கி, ரோமன் கத்தோலிக்கவாதிகள் வெற்றிச்சிரிப்புச் சிரித்து, மிகுந்த ஆர்வத்துடன் சீர்திருத்த முயன்ற தவறுகளுக்காகக்கூட, அவர்கள் லுத்தரைக் குறைகூறினர். மதவெறியர்கள் தாங்கள் அநீதியாக நடத்தப்படுகின்றனர் என்று பொய்யாகக்கூறி, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் வெற்றியடைந்து, அநேக சமயங்களில் தவறான பக்கத்தில் நிற்பவர்களுக்குச் சம்பவிப்பதுபோல—இரத்த சாட்சிகள் என்றும் கருதப்பட்டனர். இவ்வாறாக, சீர்திருத்தத்திற்கு எதிராகத் தங்களது சக்திகள் ஒவ்வொன்றையும் செலவிட்ட ஒரு கூட்டத்தினர் கொடுமைக்கும், ஒடுக்கப்படுதலுக்கும் இரையானவர்கள் என இரக்கம் காட்டப்பட்டுப் புகழப்பட்டனர். இது, பரலோகத்தில் முதலில் வெளிக்காட்டப்பட்ட, கலகத்தின் ஆவியினால் தூண்டப்பட்ட சாத்தானின் அதே செயலாக இருந்தது. (27)GCTam 212.1

    அநீதியை நீதியென்றும் நீதியை அநீதியென்றும் அழைக்கும்படி மனிதர்களை வஞ்சிக்க சாத்தான் தொடர்ந்து வகை தேடித்திரிகிறான். அவனது வேலை எப்படி வெற்றிகரமானதாக உள்ளது! தேவனுடைய விசுவாசமிக்க ஊழியக்காரர்கள் சத்தியத்தைப் பாதுகாக்கும்பணியில் அச்சமின்றி நிற்கும்போது, அவர்கள்மீது எவ்விதமாக அடிக்கடி பழியும் நிந்தையும் சுமத்தப்படுகின்றன! தேவனுக்கு உண்மையாக இருப்பவர்கள் அதற்காக மதிக்கப்பட்டு, தாங்கப்படவேண்டியவர்களாக இருப்பதற்குப் பதிலாக, சந்தேகத்தினாலும், அவநம்பிக்கையினாலும் தனியாக நிற்கும்படி விடப்பட்டிருக்கும்போது, சாத்தானின் ஏவலாளர்களாக இருக்கும் மனிதர்கள் துதிக்கப்பட்டு, முகஸ்துதி செய்யப்பட்டு இரத்தசாட்சிகள் என்றுங்கூட நோக்கப்படுகின்றனர்! (28)GCTam 212.2

    போலியான பரிசுத்தம், போலியான பரிசுத்தமாக்கப்படுதல் தன் வஞ்சகத்தைத் தெடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. வேதவாக்கியங் களிலிருந்து மனிதர்களின் மனங்களை திசைதிருப்பி, தேவப்பிரமாணங் களுக்குக் கீழ்ப்படிவதற்குப்பதிலாக, தங்களது உணர்ச்சிகளையும் உணர்த்துதல்களையும் பின்பற்றும்படியாக, லுத்தரின் நாட்களைப்போலவே, அதே ஆவி, பல்வேறு வடிவங்களில் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறது. தூய்மை, சத்தியத்தின்மீது நிந்தையைக் கொண்டுவர சாத்தான் கையாளும் வெற்றிகரமான கருவிகளில் இதுவும் ஒன்று. (29)GCTam 212.3

    ஒவ்வொரு திசையிலிருந்தும் சுவிசேஷத்திற்கு எதிராக உண்டான தாக்குதலை லுத்தர் அச்சமின்றித் தடுத்தார். ஒவ்வொரு போராட்டத்தின் சமயத்திலும் தேவனுடைய வார்த்தை தன்னில்தானே பலமுள்ள ஆயுதம் என்பதை மெய்ப்பித்தது. போப்புவின் அதிகார ஆசைக்கு எதிராகவும், சீர்திருத்தத்துடன் உறவுகொள்ள முயன்ற மதவெறிக்கு எதிராகவும், லுத்தர் தேவனுடைய வார்த்தையினால் போர் செய்தார். (30)GCTam 212.4

    ஒன்றையொன்று எதிர்க்கின்ற இவ்வொவ்வொன்றும், அதன் சொந்த வழியில், மனித ஞானத்தை சமயம், சத்தியம், அறிவு ஆகியவைகளின் ஆதாரம் என்று உயர்த்திக்கொண்டு, வேதவாக்கியத்தை ஒரு பக்கமாக நீக்கிவைத்தது. நியாய சாஸ்திரம் அறிவை உருவமாக்கி, அதனை மதத்தின் அளவுகோலாக அமைக்கிறது. ரோமமார்க்கம், போப்புவின் மேலாதிக்கம் அப்போஸ்தலரின் வழியாக அறுந்துபோகாமல் தொடர்ந்து வருகிறது என்றும், காலங்கள் நெடுகிலும் மாறாத தன்மை உடையதென்றும் உரிமைபாராட்டி, ஒவ்வொரு வகையான ஊதாரித்தனத்திற்கும் ஊழலுக்கும் போதுமான வாய்ப்பைக் கொடுத்து, அதை அப்போஸ்தல ஆணையத்தின் பெயரால் பக்தியென்று கூறி மறைக்கிறது. முன்செரினாலும் அவரது உடனாளிகளாலும் ஆவியின் ஏவுதல் என்றும் உரிமைபாராட்டப்பட்ட இவைகள், கற்பனையைத்தவிர மேலான எதனாலும் உண்டாகவில்லை. அதன் செல்வாக்கு தெய்வீக அதிகாரம் அல்லது மனித அதிகாரம் ஆகிய அனைத்தையும் குழிதோண்டிப் புதைப்பதாக இருந்தது. உண்மையான கிறிஸ்தவ மார்க்கமோ, தேவனுடைய வார்த்தையை, தேவ ஆவியின் ஏவுதலாகிய கருவூலத்திலிருந்து பெற்ற சத்தியமாக, சகலவிதமான ஏவுதல்களையும் சோதித்தறிகின்றதாக இருக்கிறது. (31)GCTam 213.1

    லுத்தர் வார்ட்பர்கிலிருந்து திரும்பி வந்தபின்பு, புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு விரைவில் முடிக்கப்பட்டு, சுவிசேஷம் ஜெர்மன் மக்களுக்கு அவர்களது சொந்த மொழியில் கொடுக்கப்பட்டது. சத்தியத்தை நேசித்த அனைவராலும் இந்த மொழிபெயர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் மனிதப் பாரம்பரியங்களையும் மனிதக் கட்டளைகளையும் தெரிந்து கொண்டவர்களால் பரிகாசமாக நிராகரிக்கப்பட்டது. (32)GCTam 213.2

    சாதாரண மக்கள்கூட இப்பொழுது தேவனுடைய வார்த்தையின் கட்டளைகளைப்பற்றித் தங்களுடன் விவாதிக்கத் தகுதியடைந்து விடுவார் கள். அப்பொழுது தங்களது சொந்த அறியாமை வெளிப்பட்டுவிடும் என்ற எண்ணம் அவர்களை எச்சரிப்படையச் செய்தது. தேவ ஆவியின் வார்த்தை களுக்கெதிராக காரணங்காட்டப்படுகிற அவர்களுடைய ஆயுதங்கள் வல்லமையற்றவையாக இருந்தன. வேதவாக்கியங்கள் பரவுவதைத் தடுக்கத் தனது சகல வல்லமையையும் அது செயல்படுத்தியது. ஆனால், கட்டளைகள் எதிர்ப்புகள் சித்திரவதைகள் யாவுமே ஒட்டுமொத்தமாக வீணாயின. கத்தோலிக்கமார்க்கம் எந்த அளவிற்கு வேதாகமத்தை பழித்து, அதைத் தடைசெய்ததோ, அந்த அளவிற்கு, அது உண்மையில் என்ன போதிக்கிறதென்பதை அறியும் ஆவல் மக்களிடம் அதிகரித்தது. வாசிக்கத் தெரிந்த அனைவரும் தங்களுக்கென்று தேவனுடைய வார்த்தையை வாசிக்க ஆர்வமுள்ளவர்களானார்கள். தங்களுடன் எடுத்துச்சென்று, அதன் பெரும்பகுதிகள் தங்களது ஞாபகத்தில் நிற்கும்வரை திருப்தி அடையாமல், திரும்பத்திரும்ப வாசித்தார்கள். மிகுந்த வரவேற்புடன் புதிய ஏற்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டதைக் கண்ட லுத்தர், பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கி, எவ்வளவு விரைவாக மொழிபெயர்த்தாரோ அவ்வளவு விரைவாக அவைகளை வெளியிட்டார் (33)GCTam 213.3

    லுத்தரின் எழுத்துக்கள் நகரத்தில் வரவேற்கப்பட்டதைப்போலவே, சிற்றூர்களிலும் வரவேற்கப்பட்டது. லுத்தரும் அவரது நண்பர்களும் எழுதி முடித்தவைகளை மற்றவர்கள் பரப்பினார்கள். மடத்தின் தனிமையான கடமைகள் சட்டத்திற்குப் புறம்பனவை என்பதைப்பற்றி, மனதில் உணர்த்தப் பட்ட சந்நியாசிகள், சோம்பேறித்தனமான வாழ்க்கைக்குப் பதிலாக ஆக்கப் பூர்வமான பணியில் ஈடுபட விரும்பினார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையை அறிவிக்க முடியாத அறியாமையில் இருந்த அவர்கள் மாநிலங்களெங்கும் திரிந்தும், சிற்றூர்களையும் குடிசைகளையும் சந்தித்தும் லுத்தரும் அவரது நண்பர்களும் எழுதின புத்தகங்களை விற்றனர். விரைவில் ஜெர்மன் நாடு தைரியமிக்க இந்தப் புத்தக ஊழியர்களால் நிறைந்தது.-- Ibid., b. 9, ch. 11. (34)GCTam 214.1

    மகிழ்ச்சியுடனும் பேரார்வத்துடனும் வேதாகம எழுத்துக்கள் செல்வந்தர்களாலும் ஏழைகளாலும் கற்றோராலும் கல்லாதவர்களாலும் வாசிக்கப்பட்டன. இரவுவேளைகளில் கிராமப்பள்ளிகளின் ஆசிரியர்கள் நெருப்பருகில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு அவைகளைச் சத்தமாக வாசித்துக்காட்டினர். செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு முயற்சியினாலும் சத்தியத்தைப்பற்றி உணர்த்தப்பட்ட சில ஆத்துமாக்கள் தேவனுடைய வார்த்தையை மகிழ்ச்சியுடன் பெற்று, அந்த நற்செய்தியை அவர்களது பங்காகப் பிறருக்கும் கூறினர். (35)GCTam 214.2

    ஏவுதலினாலான வார்த்தைகள் பரிசோதிக்கப்பட்டன. “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர் களாக்கும்” (சங்கீதம் 119:130). வேதவாசிப்பு மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் பலமிக்க மாறுதலைச் செய்து கொண்டிருந்தது. போப்பு மார்க்க ஆளுகை அதற்குக் கீழானவர்களை அறியாமை, கீழ்த்தரம் ஆகியவைகள் என்ற நரகத்தின்கீழ் பிணைத்து வைத்திருந்தது. அதில் மூடநம்பிக்கை மிகுந்த செயல்கள் பக்திவிநயத்துடன் செய்யப்பட்டன. ஆனால் அவர்களது சகல வேலைகளிலும் இதயத்திற்கும் நுண்ணறிவிற்கும் கொஞ்சங்கூடப் பங்கில்லாமலிருந்தது. சத்தியத்தின் தெளிவான வார்த்தையை முன்வைத்து லுத்தர் சொற்பொழிவாற்றியதும், அதன்பின் தேவனுடைய வார்த்தை சாதாரண மனிதர்களின் கரத்தில் வைக்கப்பட்டதும், அவர்களுக்குள் அடங்கியிருந்த வல்லமையை எழுப்பினதுமட்டுமின்றி, ஆவிக்குரிய தன்மையைத் தூய்மைப்படுத்தி மேன்மைப்படுத்தி, அவர்களது நுண்ணறிவிற்குப் புதுப்பெலனையும் வலிமையையும் தந்தது. (36)GCTam 214.3

    சீர்திருத்தத்தின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் சகல நிலைகளிலிருந்த மனிதர்களும் தங்கள் கரங்களில் வேதாகமங்களை வைத்திருந்தனர். வேதவாக்கியங்களை ஆராய்வதை குருமார்களிடமும் சந்நியாசிகளிடமும் விட்டிருந்த போப்புமார்க்கவாதிகள், புதிய போதனைகளை மறுத்துப்பேசுவதற்கு வரும்படியாக குருமார்களையும் சந்நியாசிகளையும் அழைத்தனர். அவர்கள் எவர்களையெல்லாம் கல்வியறிவில்லாத மதவிரோதிகள் என்று மறுத்துக் கூறியிருந்திருந்தார்களோ, அவர்களுக்குமுன், வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமலிருந்த இந்த குருமார்களும் சந்நியாசிகளும் மொத்தமாகத் தோற்கடிக்கப்பட்டனர். “மகிழ்வதற்கு ஏதுவில்லாதபடி பரிசுத்த வேதவாக்கியங்களின்மீது மாத்திரம் விசுவாசம் வைக்கும்படி லுத்தர் தனது பின்னடியார்களை இசையச் செய்தார்” என்று ஒரு ரோமன் கத்தோலிக்க எழுத்தாளர் எழுதினார்.—Ibid., b. 9, ch. 11. மிகக் குறைவான கல்விஅறிவுடைய மனிதர்கள் சத்தியத்திற்காகப் பரிந்துரை செய்வதையும், கற்றறிந்தவர்களுடனும் சொல்வன்மைமிக்க இறைஇயல்வாதிகளுடனும் அவர்கள் வாதம்செய்வதையும் கேட்க மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். சாதாரணமான தேவனுடைய வார்த்தைகளில் உள்ள போதனைகளின் விவாதங்களால் சந்திக்கப் பட்டபோது, இந்தப் பெரிய மனிதர்களின் வெட்கக்கேடான அறியாமை வெளியில் தெரிந்தது. குருமார்களையும் கற்றறிந்த அறிஞர்களையும் விட கூலிக்காரர்களும் இராணுவ வீரர்களும் பெண்களும் சிறுபிள்ளைகளுங்கூட வேதாகமத்தின் போதனைகளை நன்கறிந்திருந்தனர். (37)GCTam 215.1

    பொதுமனிதர்களில், சுவிசேஷத்தை உயர்த்திப்பிடித்திருந்த அதன் சீடர்களுக்கும், மூடநம்பிக்கைமிக்க போப்புமார்க்கவாதிகளுக்கும் இடையில் காணப்பட்ட வேற்றுமை, படித்தவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலும் தெளிவாகக் காட்டப்பட்டிருந்தது. “மொழிகளைக் கற்பதையும் இலக்கியங்களை அறிவதையும் அலட்சியம் செய்திருந்த மதத்தலைவரின் பழைய வீரர்களை எதிர்த்தவர்கள், வேதவாக்கியங்களை ஆராய்ந்து, பழங்காலப் வழக்கங்களை அறிந்திருந்த இளைஞர்களாக இருந்தார்கள். செயலாற்றல் மிகுந்து, துணிவுள்ள இதயம் கொண்டிருந்த இந்த இளைஞர்கள், நீண்ட நாட்களுக்கு இவர்களுடன் போட்டியிட ஒருவராலும் முடியாது என்ற அளவிற்கு விரைவாக திறமையடைந்தனர். எனவே, சீர்திருத்தத்தைத் தாங்கின இவர்கள், ரோமன் கத்தோலிக்க அறிஞர்களை சந்தித்த பொதுவான நேரங்களில், எதிரிகளின் மந்த நிலையை வெட்கப்படச்செய்து, அனைவரும் பழிக்கும்படி வெளிக்கொண்டுவருவதற்கேதுவாக எளிதாகவும் நம்பிக்கையுடனும் வாதிட்டனர்.”—Ibid., b. 9, ch. 11. (38)GCTam 215.2

    போப்புமார்க்கப்போதகர்கள் தங்களுடைய சபையினரின் எண்ணிக்கை குறைவதைக்கண்டு, நீதிபதிகளின் உதவியைக் கெஞ்சிக்கேட்டு, அவர்களது போதனைகளைக் கேட்டிருந்தவர்களைத் திரும்பக்கொண்டுவர, தங்களது சக்திக்குட்பட்ட சகலவிதமான உபாயங்களையும் செய்தனர். ஆனால் புதிய போதனையில், தங்களது ஆத்துமாவின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதை கண்டு, இதுவரை மூடநம்பிக்கைமிக்க சமயச்சடங்குகள், மனிதப் பாரம்பரியங்கள் என்கிற உமியையே உணவாகத் தந்திருந்தவர்களை விட்டு மக்கள் திரும்பினார்கள். (39)GCTam 216.1

    சத்தியத்தின் ஆசிரியர்களின்மீது உபத்திரவம் என்ற பெருநெருப்பு கொளுத்திவிடப்பட்டபோது, “ஒரு பட்டணத்தில் உங்களைத்துன்பப்படுத்தினால் மறுபட்டணத்திற்கு ஓடிப்போங்கள்” (மத்தேயு 10:23) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவி சாய்த்தார்கள். ஒளி எங்கும் ஊடுருவிச் சென்றது. ஓடிப்போனவர்கள் தங்களை உபசரிக்கத் திறக்கும் வாசல்களைக் கண்டு, அங்கு தங்கி, சில சமயத்தில் ஆலயங்களிலோ அல்லது அந்த சலுகை மறுக்கப்பட்டபோது, தனியார் வீடுகளிலோ, அல்லது பொது இடங்களில் நின்றோ கிறிஸ்துவைப் பிரசங்கித்தனர். பிரசங்கிக்கக்கூடிய இடம் எங்கிருந்ததோ, அது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயமாகக் கருதப்பட்டது. இவ்விதமான வல்லமையுடனும் நிச்சயத்துடனும் அறிவிக்கப்பட்ட சத்தியம் தடுக்கப்படமுடியாத வல்லமையுடன் பரவியது. (40)GCTam 216.2

    மதவிரோதத்தை ஒடுக்குவதற்கு சபை அதிகாரிகளும் சமூக அதிகாரிகளும் வீணாக அழைக்கப்பட்டனர். சிறைத்தண்டனை, சித்திரவதை, நெருப்பு, பட்டயம் ஆகியவைகளை வீணாகவே கையாண்டனர். ஆயிரக் கணக்கான விசுவாசிகள் அவர்களது விசுவாசத்தை தங்களுடைய இரத்தத் தினால் முத்திரையிட்டனர். அப்படியிருந்தும் ஊழியம் முன்சென்றது. சத்தியம் அதிகமாகப் பரவிட உபத்திரவம் உதவியது. சாத்தான் தன்னுடைய மதவெறியை அதனுடன் இணைத்துக்கொள்ள முயற்சித்த செயல் தேவனுடைய ஊழியத்திற்கும் சாத்தானுடைய செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டியது. (41)GCTam 216.3