Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    34—மரித்தோர் நம்முடன் பேசுவார்களா?

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 551—562)

    ரிசுத்த தேவதூதர்களின் ஊழியம் என்று வேதவாக்கியங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சத்தியம், கிறிஸ்துவின் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் மிக அதிகமான ஆறுதலைக் கொண்டுவரும் விலைமதிப்பு உள்ள ஒன்றாகும். ஆனால் பிரபலமான இறையியலின் தவறுகளினால், இதைக் குறித்த வேதபோதனை புரட்டப்பட்டு இருளாக்கப்பட்டுள்ளது. மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்று வேதவாக்கியங்களில் மிகத் தெளிவாகப் போதிக்கப்பட்டிருக்கும் உண்மையை, அஞ்ஞான தத்துவத்திலிருந்து முதலில் கடனாகப் பெறப்பட்டு, பெரும் மருளவிழுகையின் இருளில் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் பதிக்கப்பட்ட—அழியாமை இயற்கையானது என்னும் கோட்பாடு நீக்கியிருக்கிறது. மனிதனுடைய மரணத்திற்குமுன்பே தேவதூதர்கள் இருந்தனர் என்பதும், மனித வரலாற்றுடன் அவர்களுக்கிருந்த தொடர்பும் வேதவாக்கியங்களில் மிகவும் தெளிவான சாட்சியாக கொடுக்கப்பட்டிருந்தும், மரித்தவர்களின் ஆவிகளே இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப் படும் பணிவிடை ஆவிகள் என்று திரளானவர்கள் நம்புகின்றனர். (1)GCTam 647.1

    மரணத்தில் மனிதனுக்கு உணர்வுண்டு என்கிற கோட்பாடு, குறிப்பாக மரித்தவர்களின் ஆவிகள் உயிருள்ளவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு திரும்புகின்றன என்னும் நம்பிக்கை நவீன ஆவிமார்க்கத்திற்கான பாதையை ஆயத்தம் செய்திருக்கிறது. மரித்தவர்கள் தேவனுடைய பரிசுத்த தேவதூதர்களுடைய சமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் இதற்குமுன் கொண்டிருந்ததைவிட அதிகமான அறிவை உடையவர்களாகும்பபடி சலுகை அளிக்கப்பட்டிருந்தால், உயிருள்ளவர்களுக்கு அறிவைக் கொடுக்கவும் போதிக்கவும் அவர்கள் ஏன் பூமிக்குத் திரும்பக்கூடாது? பிரபலமான இறையியல் வல்லுனர்களால் போதிக்கப்பட்டிருப்பதுபோல, மரித்தவர்களின் ஆவிகள் பூமியிலுள்ள அவர்களது நண்பர்களுக்கு மேலாக வட்டமிட்டுக்கொண்டிருந்தால், தீமைக்கு எதிராக அவர்களை எச்சரிக்கவும் அல்லது அவர்களது துயரங்களில் ஆறுதலளிக்கவும் அவைகள் ஏன் அனுமதிக்கப்படக்கூடாது? மரணத்தில் மனிதன் உணர்வுள்ளவனாக இருக்கிறான் என்பதை நம்புகிறவர்களால், மகிமைப்படுத்தப்பட்ட ஆவிகள் வழியாக அவர்களுக்கு கொடுக்கப்படும் தெய்வீக ஒளியை எப்படி நிராகரிக்க முடியும்? சாத்தான் அவனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காகச் செயல்படுத்தும் பரிசுத்தமானது என்று கருதப்படுகின்ற ஒரு பாதை இங்கு உள்ளது. அவனுடைய உத்தரவைச் செயல்படுத்தும் விழுந்துபோன தூதர்கள், ஆவி உலகத்திலிருந்து வரும் ஊழியக்காரர்களைப்போலத் தோற்றமளிக்கின்றனர். உயிருள்ளவர்களை மரித்தவர்களுடன் தொடர்பு கொள்ள கொண்டுவருகிறதுபோல சொல்லிக்கொண்டு, மனங்களை அடிமைப்படுத்தும் தனது செல்வாக்கை தீமையின் பிரபு அவர்களது மனங்களில் செயல்படுத்துகிறான். (2)GCTam 647.2

    தங்களிடமிருந்து பிரிந்துசென்றுவிட்ட நண்பர்களின் தோற்றங்களை மனிதர்கள் முன் கொண்டுவரும் வல்லமையை அவன் பெற்றிருக்கிறான். அந்தக் கள்ளச் செயல் குறையற்றிருக்கிறது. பழக்கப்பட்ட பார்வையும் பேச்சும் தொனியும் ஆச்சரியமாக அதேபோன்று இருக்கிறது. தங்களுக்கு அன்பானவர்கள் பரலோக பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் நிச்சயத்தினால் அநேகர் ஆறுதலடகிறார்கள். ஆபத்தைப்பற்றிய சந்தேகமின்றி, “வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும்” செவிகொடுக்கின்றனர். (3)GCTam 648.1

    மரித்தவர்கள் தங்களுடன் தொடர்புகொள்ளுவதற்காக உண்மையாகவே திரும்பியிருக்கிறார்கள் என்று நம்பும்படி அவர்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, ஆயத்தமில்லாமல் கல்லறைக்குள் சென்றவர்களை சாத்தான் தோன்றச் செய்கிறான். அவர்கள் பரலோகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், மேலான பதவியில் இருப்பதாகவுங்கூடக் கூறுகிறான். இவ்வாறாக அந்தத் தவறு பரவலாகப் போதிக்கப்படுவதினால், நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடையில் வேற்றுமை இல்லாமல் செய்யப்படுகிறது. ஆவி உலகிலிருந்து வந்து மரித்தவர்களைப்போன்ற உருவில் நடிக்கும் பார்வையாளர்கள் சில சமயங்களில் எச்சரிப்புகள் கொடுக்கிறார்கள். அவை சரியாக இருப்பதாகவும் மெய்ப்பிக்கப்படுகின்றன. அவ்விதமான நம்பிக்கையை ஆதாயப்படுத்திக்கொண்டபின், வேதவாக்கியங் களில் உள்ள விசுவாசத்தை நேரடியாக வலுவிழக்கச்செய்கிற கோட்பாடுகளை முன்வைக்கிறான். பூமியிலுள்ள தங்களது நண்பர்களின் நன்மையில் மிகுந்த அக்கரை உள்ளவர்கள் என்கிற தோற்றத்துடன் ஆபத்துமிக்க தவறுகளை அவை நுழைக்கின்றன. சில உண்மைகளை கூறுவதாலும், எதிர்கால சம்பவங்களை சில சமயங்களில் முன்னதாகச் சொல்ல முடிவதாலும், அவைகளின் அறிக்கைகள் நம்பக்கூடியவை என்னும் தோற்றத்தைக் கொடுக்கிறது. இவ்வாறாக, அவைகளின் தவறான போதனைகள் திரளானவர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவைகள் வேதாகமத்தின் மிகப்பரிசுத்தமான சத்தியங்கள் என்பதுபோல் மிகச் சரியானவை என நம்பப்படுகின்றன. தேவனுடைய கற்பனைகள் ஒரு பக்கமாக நீக்கப்பட்டு, கிருபையின் ஆவி நிந்திக்கப்பட்டு, உடன்படிக்கையின் இரத்தம் பரிசுத்தமற்ற ஒரு பொருளாக எண்ணப்படுகிறது. அந்த ஆவிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுத்து, சிருஷ்டிகரை தங்களுக்கு சமமான நிலையில் வைக்கின்றன. இவ்வாறாக ஒரு புதிய மாறுவேடத்தில், தேவனுக்கு எதிராக பரலோகத்தில் ஆரம்பித்து, பூமியின்மேல் ஆறாயிரம் வருடங்களாகத் தொடர்ந்துசெய்யும் போராட்டத்தை சாத்தான் முன்கொண்டு செல்லுகிறான். (4)GCTam 648.2

    ஆவியின் வெளிப்படுத்தல்களை ஏமாற்று என்றும், அதைச் செய்பவரின் தைத்திறன் என்றும் கணக்கிட அநேகர் முயலுகின்றனர். ஆனால் தந்திரமான செயல்கள் உண்மையான மந்திரவாதத்தின் வெளிப்படுத்தல்கள் இல்லை என்று மறைக்கப்படும்போது, இயற்கைக்கு மேலான வல்லமையின் குறிப்பிடப்பட்ட வெளிக்காட்டலும் இருந்திருக்கிறது. நவீன ஆவிமார்க்கம் ஆரம்பமாகக் காரணமாயிருந்த இரகசியத் கைதட்டல்கள், மனிதக் கைவித்தைகளின் செயல்கள் அல்ல. மாறாக, ஆத்துமாவை அழிக்க மிகவும் வெற்றிகரமான மாயங்களில் ஒன்றை அறிமுகப்படுத்திய தீய தூதர்களின் நேரடியான வேலையாகும். ஆவிமார்க்கம் என்பது சாதாரணமான ஏமாற்று வேலைதான் என்னும் நம்பிக்கையால், அநேகர் சாத்தானது கண்ணிகளில் அகப்படுத்தப்படுவார்கள். இயற்கைக்கு மேலான வெளிப்படுத்தல்களே அல்லாமல் இவை வேறொன்றுமில்லை என்று கருதவேண்டிய நிலைக்கு நேரடியாகக் கொண்டுவரப்படும்போது, அவர்கள் வஞ்சிக்கப்பட்டு, அவைகளை தேவனின் பெரும் வல்லமை என்று ஏற்றுக்கொள்ளும் படியாக நடத்தப்படுவார்கள். (5)GCTam 649.1

    இந்த மனிதர்கள், சாத்தானாலும் அவனது பிரதிநிதிகளாலும் செய்யப்படும் ஆச்சரியமானவைகளைப்பற்றிய வேதாகம சாட்சியை கவனிக்காமலிருக்கின்றனர். தேவனுடைய செயலுக்கு எதிரான போலியான ஒன்றைச் சாத்தானின் உதவியுடன் செய்ய, பார்வோனின் மந்திரவாதிகள் தகுதிப்படுத்தப்பட்டனர். அதைப் போன்ற சாத்தானின் வல்லமையின் வெளிக்காட்டல்கள், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னரும் இருக்கும் என்று பவுல் தெளிவான சாட்சிபகருகிறார். “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்’-2 தெச. 2:9,10. கடைசி நாட்களில் அற்புதங்களைச் செய்யும் வல்லமைகள் வெளிக்காட்டப்படுதலைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும்போது: “அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி” (வெளி. 13:13-14) என்கிறார். இங்கு வெறும் ஏமாற்று வேலைகளைப்பற்றி மட்டும் முன்னறிவிக்கப்படவில்லை. மனிதர்களால் செய்யப்படும் அற்புதங்களினாலேயே மனிதர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். (6)GCTam 649.2

    தன் மனத்திறமையின் வல்லமைகளை இதுவரை ஏமாற்று வேலைகளுக்காகச் செயல்படுத்தியிருந்த அந்தகாரப்பிரபு, மனிதர்களில் சகல வகுப்பினருக்கும் சகல நிலைகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் திறமையாக தனது சோதனைகளை அமைக்கிறான். பண்பட்டவர்களுக்கும் தேர்ந்தவர்களுக்கும் தேர்ந்த அறிவுமிக்க விதத்தில் ஆவிமார்க்கத்தை முன்வைத்து, இவ்விதமாக அநேகரை தன் வலையில் அகப்படுத்துவதில் வெற்றியடைகிறான். ஆவிமார்க்கம் கற்பிக்கும் ஞானம் அப்போஸ்தலனாகிய யாக்கோபினால் “இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது” (யாக். 3:15) என்று விவரிக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், மறைத்து வைப்பது அவனது நோக்கத்திற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியதாக இருக்கும்போது, பெரும் வஞ்சகன் தன்னை மறைத்து வைத்துக்கொள்ளுகிறான். சோதனையின்போது, வனாந்தரத்தில் கிறிஸ்துவிற்கு முன்பாக, பரலோக சேராபீன்களின் ஒளிமிக்க உடையை அணிந்தவனாக தோன்றக்கூடியவனாக இருந்தவன், ஒளியின் தூதனுடைய வேஷத்தில் மிகவும் கவரக்கூடிய விதத்தில் மனிதர்களுக்கு முன்பாகவும் வருகிறான். உயர்த்தக்கூடிய விவாத விஷயங்களை முன்வைத்து, காரணங்களைக் காணும்படி அவன் வேண்டுகோள் விடுக்கிறான். அளவுகடந்த ஆனந்தத்தை உண்டுபண்ணும் விநோதத்தினால் மகிழச்செய்கிறான். அன்பு, உதாரத்துவம் ஆகியவைகளைப்பற்றி, அவனது வாக்குவன்மைமிக்க விளக்கங்களினால் அறிவு புகட்டுகிறான். உன்னதமான ஒருவரைத் தங்களது இருதயத்தில் அவமதிப்பதற்கு மனிதர்களை அவர்களது சொந்த ஞானத்தில் மிகப் பெருமை உள்ளவர்களாக இருக்கும்படி நடப்பித்து, அவர்களது கற்பனைகளை மிகுந்த உயரத்திற்கு எழுப்பிவிடுகிறான். உலக மீட்பரை மிக அதிக உயரமான மலையின் கொடுமுடிக்குத் தூக்கிச்சென்று உலக மகிமை அனைத்தையும் கடந்து செல்லும்படியாகச் செய்யக்கூடியவனாகவும் இருந்த வல்லமைமிக்கவன், மனிதர்களுக்கு முன்பாக, தெய்வீக வல்லமையினால் கேடயமாக மறைக்கப்படாத அனைவரின் புலன்களும் தாறுமாறாகிவிடும் விதத்தில், தனது சோதனையை வைப்பான். (7)GCTam 650.1

    முகஸ்துதியினாலும் தடைசெய்யப்பட்டிருக்கும் அறிவை அடைந்துகொள்ளவேண்டும் என்று ஆசையை தூண்டிவிடுவதினாலும் தன்னை உயர்த்தவேண்டும் என்ற மேலான ஆசையினாலும், சாத்தான் ஏதேனில் ஏவாளை வஞ்சித்ததுபோல, இப்போதும் மனிதர்களை வஞ்சிக்கிறான். இந்தத் தீமைகளை இருதயத்தில் வைத்துப் போற்றியிருந்ததுதான் அவனது விழுகைக்குக் காரணமாக இருந்தது. அவைகளின் மூலமாக மனிதர்களின் பாழ்க்கடிப்பை அவன் வனைந்துகொள்ளக் குறிவைக்கிறான். “நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி. 3:5) என்று அவன் அறிவிக்கிறான். “முன்னேறிக்கொண்டே செல்லுபவன் மனிதன். பிறப்பு முதல் முன்னேறுவது, நித்தியத்திற்குங்கூட தெய்வத்துவத்தை நோக்கி முன்னேறுவது அவனது விதியாக இருக்கிறது” என்று ஆவிமார்க்கம் போதிக்கிறது. “ஒவ்வொரு மனமும் மற்றதையல்ல தன்னைத்தானே நியாயந்தீர்த்துக்கொள்ளும்” “தனக்குத்தானே நியாயந்தீர்ப்பதால் அத்தீர்ப்புச் சரியானதாக இருக்கும்.... சிங்காசனம் உனக்குள் இருக்கிறது” என்று மறுபடியும் கூறுகிறது. “ஆவிக்குரிய உணர்வு” தனக்குள் எழுந்ததால், “என் உடன் மனிதர்களே நாம் அனைவரும் வீழ்ச்சியடையாத பாதி தெய்வங்களாக இருக்கிறோம்” என்று ஒரு ஆவிமார்க்க ஆசிரியர் கூறினார். “நீதியும் பூரணமுமுள்ள எவனும் கிறிஸ்துவாக இருக்கிறான்” என்று மற்றொருவர் அறிவிக்கிறார். (8)GCTam 651.1

    இவ்வாறாக, துதிப்பதற்கு இலக்காக உள்ள முடிவில்லாத தேவனுடைய நீதியும் பூரணமும் இருக்கும் இடத்தில், மனிதன் அடைந்தாக வேண்டிய உண்மையான எல்லையான அவரது கற்பனையின் பூரணமாக நீதியிருக்கும் இடத்தில், பாவகரமான, தவறும் மனித இயல்பை, துதிக்கவேண்டிய ஒரே பொருளாக, நியாயத்தீர்ப்பின் ஒரே சட்டமாக, அல்லது குணத்தில் எல்லையாக சாத்தான் வைத்துவிட்டான். இது முன்னேற்றம் தான், ஆனால் மேல்நோக்கியதல்ல கீழ்நோக்கியது! (9)GCTam 651.2

    பார்ப்பதினால் நாம் மாறுகிறோம் என்பது அறிவிற்கும் ஆவிக்குரிய தன்மைக்கும் ஒரே நியதியாக இருக்கிறது. மனம் எதன்மீது சஞ்சரிக்கும்படி அனுமதிக்கப்படுகிறதோ அந்தப் பொருளுக்கு இசைவாக மெதுவாக அமைந்துவிடுகிறது. நேசிக்கவும், பக்திசெலுத்தவும் எது பழக்கப்படுத்தப்படுகிறதோ, அதை அது ஜீரணித்துக்கொள்ளுகிறது. தன்னிடமுள்ள தூய்மை, நல்ல தன்மை, சத்தியம் ஆகியவைகளைவிட உயரமாக மனிதன் ஒருபோதும் உயரமாட்டான். அவனது மிகவுயர்ந்த லட்சியம் சுயத்தைப்பற்றியதாக மட்டுமிருந்தால், அவன் தொடர்ச்சியாக அதைவிட கீழேயே அமிழ்ந்துகொண்டிருப்பான். மனிதனை மேலே உயர்த்துவதற்கு தேவ கிருபை ஒன்றுக்கு மட்டுமே வல்லமை உள்ளது. தனக்குத்தானே அவன் விட்டுவிடப்படும்போது, அவனது பாதை தவிர்க்கமுடியாத விதத்தில் கீழ்நோக்கிச் செல்லும். (10)GCTam 652.1

    அதிகத் தெளிவுள்ளவர்களையும் அறிவுமிக்கவர்களையும்விட சுயத்தைப் பேணுபவர்களுக்கும், இன்பத்தை நாடுவோருக்கும், புலனுணர்வில் இருப்போருக்கும், ஆவிமார்க்கம் தன்னை மிகவும் தந்திரக்குறைவுள்ளதாக மறைத்துக் காட்டுகிறது. அதன் மொத்த வடிவுகளில் அவர்கள் அதை அவர்களது விருப்பங்களுக்கு இசைவுள்ளதாகக் காணுகின்றனர். மனித இயல்பின் பலவீனங்களின் அடையாளம் ஒவ்வொன்றையும் சாத்தான் ஆராய்கிறான். தனிப்பட்ட ஒவ்வொருவரும் செய்ய விரும்பும் பாவங்கள் ஒவ்வொன்றையும் அவன் குறித்துக்கொண்டு, அதன்பின், தீமை செய்யும் சுபாவத்தைத் திருப்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லாமல் போகாதபடி கவனித்துக் கொள்ளுகிறான். சரியான காரியங்களில் அளவுகடக்க வைத்து, இச்சையடக்கமின்மையினால் அவர்களது சரீர, மன, ஆவிக்குரிய சக்திகளை பலவீனமடையச் செய்வதற்கேதுவாக சோதிக்கிறான். ஆசைகளில் மூழ்கடிப்பதன் மூலமாக மனிதனின் இயல்பு முழுவதையும் மிருகத்தனமாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை அவன் அழித்திருக்கிறான், அழித்துக்கொண்டும் இருக்கிறான். தன்னுடைய வேலைகளை முடித்துக் கொள்ளுவதற்காக, ஆவிகளின்மூலமாக, “உண்மையான அறிவு மனிதனை சகல பிரமாணங்களுக்கும் மேலானவனாக வைக்கிறது” “எவை சரியானவையாகத் தோன்றுகின்தோ அவை சரியே” “தேவன் ஒருவரையும் குற்றப்படுத்துவதில்லை” “செய்யப்பட்ட பாவங்களனைத்தும் அறியாமையினால் செய்யப்பட்டவைகள்தான்” என்றும் அறிவிக்கிறான். இவ்விதமாக, ஆசைதான் மிக மேலான பிரமாணம் என்று மனிதர்கள் நடத்தப்படும்போது, சுயாதீனம் உரிமம் ஆகும்போது, மனிதன் தனக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவனாக இருக்கிறான் என்னும்போது, ஊழலும் ஒழுக்கக்கேடும் எல்லாப் பக்கங்களிலும் பெருகுகின்றன என்பதைப்பற்றி எவர்கள் ஆச்சரியப்படுவார்கள்? மாம்சப்பிரகாரமான மனதின் தூண்டுதல்களுக்கு கீழ்ப்படியும் சுதந்திரத்திற்கு அவர்களை நடத்தும் போதனைகளைத் திரளானவர்கள் ஆவலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றனர். சுயக் கட்டுப்பாட்டின் கடிவாளக்கயிறுகள் இச்சையின் கழுத்தின்மீது வைக்கப்பட்டு, மன, ஆத்துமாவின் வல்லமைகள் மிருகத்தனமான குணங்களுக்குக் கீழாகும்படிச் செய்யப்பட்டு, இவ்விதமாக சாத்தான் வெற்றிச்சிரிப்புடன் தங்களைக் கிறிஸ்துவின் அடியார்கள் என்று கூறிக்கொள்ளும் ஆயிரக்கணக்கானவர்களை அவனுடைய வலைக்குள் இழுத்துக்கொள்ளுகிறான். (11)GCTam 652.2

    ஆனால், ஆவிமார்க்கத்தின் பொய்யான உரிமை பாராட்டுதல்களைக் குறித்து ஒருவரும் வஞ்சிக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. அந்த கண்ணியைக் கண்டுபிடிக்க மனிதர்கள் தகுதி அடைவதற்குப் போதுமான ஒளியை தேவன் உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே காட்டப்பட்டுள்ளபடி ஆவிமார்க்கத்தின் அஸ்திவாரத்தை அமைக்கும் தத்துவ விளக்கம் வேதவாக்கியங்களின் தெளிவான அறிக்கைகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது. மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், அவர்களது யோசனைகள் அழிந்துபோயின. சூரியனுக்குக் கீழே செய்யப்படும் யாதொன்றிலும் அவர்களுக்குப் பங்கில்லை. பூமியில் அவர்களுக்கு மிகவும் அருமையானவர்களாக இருந்தவர்களின் சந்தோஷத்தைப்பற்றியோ அல்லது வருத்தத்தைப்பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று வேதாகமம் அறிவிக்கிறது. (12)GCTam 653.1

    இதற்கும் மேலாக, பிரிந்துசென்ற ஆவிகளுடனுள்ள தொடர்பு போலத் தோன்றக்கூடிய அனைத்தையும் தேவன் வெளிப்படை யாகத் தடை செய்திருக்கிறார். எபிரெயரின் நாட்களில் இன்றுள்ள ஆவிமார்க்கத்தினரைப்போலவே, மரித்தவர்களுடன் தொடர்புள்ளவர்களாக உரிமைபாராட்டியிருந்த ஒருவகை மக்கள் இருந்தனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட, “பழக்கப்பட்ட ஆவிகள்” என்று அழைக்கப் பட்டிருந்த இவைகளை பிசாசுகளின் ஆவிகள் என்று வேதாகமம் அறிவிக்கிறது. (ஒப்பிடுக: எண். 25:1-3; சங். 106:28; 1 கொரி. 10:20; வெளி 16:14). பழக்கப்பட்ட ஆவிகளுடனுள்ள நடவடிக்கைகள் கர்த்தருக்கு அருவருப்பானது என்று கூறப்பட்டு, மரணதண்டனையின் கீழ் பக்தி விநயமாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. (லேவி. 19:31 20:27). சூனிய வித்தை என்னும் பெயரே இப்பொழுது கண்டனம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களால் தீய ஆவிகளுடன் தொடர்புகொள்ளமுடியும் என்ற கருத்து, இருண்ட காலங்களில் உள்ள ஒரு கட்டுக்கதை என்று கருதப்பட்டிருக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கானவர்களை, இலட்சக்கணக்கானவர்களைத் தனது அணிக்குள் மதமாற்றம் செய்யும் ஆவிமார்க்கம், அதன் பாதையை விஞ்ஞான வட்டத்திற்குள் அமைத்ததுடன், சபைகளை ஆக்கிரமிப்புச் செய்ததுடன், சட்ட மன்றங்களின் ஆதரவையும் கண்டுள்ளது. அரசர்களின் ராஜசபைகளிலும் ஆதரவைக் கண்டுள்ளது. இப்பொழுது புதிய உடையில் தோன்றும் சூனிய வித்தையின் ஒரு எழுப்புதலான மிகப்பெரிய வஞ்சகம், முற்காலத்தில் பழிக்கப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருந்தது. (13)GCTam 653.2

    ஆவி மார்க்கத்தின் உண்மையான சுபாவத்திற்கான வேறு சான்று எதுவும் இல்லாமல் இருந்தாலுங்கூட, நீதிக்கும் பாவத்திற்கும் இடையிலும், மிக மேன்மையும் தூய்மையுமிக்கவர்களான கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கும் மிகவும் கறைபடிந்த சாத்தானின் வேலைக்காரர்களுக்கும் இடையிலும் இந்த ஆவிகள் வேற்றுமை காண்பதில்லை என்பதே கிறிஸ்தவனுக்குப் போதுமான சான்றாக இருக்கவேண்டும். மனிதர்களில் மிகவும் கீழானவனுங்கூட பரலோகத்தில் மிக உயர்நத நிலையில் இருப்பதாக எடுத்துக்காட்டும் சாத்தான், உலகை நேக்கி: “நீங்கள் எப்படிப்பட்ட துன்மார்க்கராக இருந்தாலும் அது காரியமல்ல. நீங்கள் தேவனையும் வேதாகமத்தையும் விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் அது ஒரு பொருட்டல்ல. உங்கள் விருப்பப்படி வாழுங்கள். பரலோகம் உங்கள் வீடாக உள்ளது” என்று கூறுகிறான். ஆவிமார்க்கத் தலைவர்கள்: “பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும்” (மல். 2:17) அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையோ “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5:20) என்கிறது.(14)GCTam 654.1

    அப்போஸ்தலர்களைப் போலத் தோற்றமளிக்கும் இந்தப் பொய்யின் ஆவிகள், அப்போஸ்தலர்கள் பூமியிலிருந்தபோது, பரிசுத்தஆவியின் ஏவுதலினால் எவைகளை எழுதினார்களோ அவைகளுடன் முரண்படுகின்றன. அவைகள் வேதாகமத்தின் தெய்வீகப் பிறப்பை மறுத்து, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை உடைத்தெறிந்து, பரலோகத்திற்கான பாதையை வெளிக்காட்டும் விளக்கை அனைத்துவிடுகின்றன. வேதாகமம் ஒரு கட்டுக்கதை அல்லது மனித இனத்தின் குழந்தைப் பருவத்திற்குப் பொருத்தமானது, அதை இப்பொழுது சாதாரணமாகத்தான் கருதவேண்டும் அல்லது நடைமுறையில் இல்லாததாகக் கருதி ஒதுக்கிவைக்க வேண்டுமென்று சாத்தான் உலகை நம்பச்செய்துகொண்டிருக்கிறான். தேவனுடைய வார்த்தையின் இடத்தை எடுத்துக்கொள்ளும்படி அவன் ஆவிக்குரிய வெளிக்காட்டல்களை எடுத்துக்காட்டுகிறான். இங்கு முற்றிலுமாக அவனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதை உள்ளது. இதன் மூலமாக, அவன் எதை விரும்புகிறானோ அதை உலகம் நம்பும்படிச்செய்ய அவனால் முடியும். அவனையும் அவனது அடியார்களையும் நியாயம்தீர்க்கவுள்ள புத்தகத்தை, அது எங்கே இருக்கவேண்டுமென்று விரும்புகிறானோ, அங்கே இருளுக்குள் மறைத்துவைக்கிறான். உலக இரட்சகர் சாதாரண மனிதரைவிட மேலானவரல்ல என்று கருதும்படி அவன் செய்கிறான். இயேசுவின் கல்லறையைக் காவல் காத்திருந்த ரோமப்படையின் காவல்காரனிடம், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பொய்யென்று கூறும்படி ஆசாரியர்களும் மூப்பர்களும் கற்றுக்கொடுத்தபடி, பொய்யான அறிக்கையை அவன் எங்கும் பரப்பினதுபோல, நமது இரட்சகரின் வாழ்க்கையிலிருந்த சூழ்நிலையில் அற்புதமான எதுவும் இருக்கவில்லை என்று தோன்றும்படிச் செய்ய ஆவிமார்க்க வெளிக்காட்டுதல்களில் நம்பிக்கை உள்ளவர்கள் முயலுகின்றனர். இப்படியாக இயேசுவைக் கீழாக்க வகைதேடியபின் அவர்களுடைய சொந்த அற்புதங்களுக்குக் கவனம் செலுத்தும்படி அழைத்து, அவை கிறிஸ்துவின் செயல்களைவிட மிக மேலானவை என்கின்றனர். (15)GCTam 654.2

    ஆவிமார்க்கம் இப்பொழுது அதற்கு அதிகமான எதிர்ப்புள்ள முக்கியமான பகுதிகளைத் திரையிட்டு மறைத்து, அதன் உருவத்தை மாற்றிக்கொண்டு, கிறிஸ்தவ உடையை அணிந்துகொண்டுள்ளது உண்மைதான். ஆனால் மேடைகளின் மேலிருந்த அதன் பேச்சுகளும் அச்சக வெளியீடுகளும் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் முன்னர் இருக்கிறது. இவைகளில் அதன் சுபாவம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் போதனைகளை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. (16)GCTam 655.1

    இப்போதுள்ள அதன் வடிவில், முந்தி இருந்ததைவிட சகிக்கக்கூடாமலிருந்தாலும், மிகவும் தந்திரமான வஞ்சகத்தோடு இருப்பதினால் உண்மையில் அது மிகவும் ஆபத்தானதே. முன்னர் அது கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தபோதிலுங்கூட, இப்பொழுது இரண்டையுமே ஒப்புக்கொள்ளுவதாகக் கூறிக்கொள்ளுகிறது. ஆனால் வேதாகமத்திலுள்ள பக்திவிநயமான சத்தியங்களை பலனற்றவைகளாக்குகின்ற அதே நேரத்தில், புதுப்பிக்கப்படாத இருதயத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் வேதாகமத்திற்கு விளக்கம் கொடுக்கிறது. அன்புதான் தேவனின் போற்றப்படக்கூடிய பண்பு என்று கூறப்படுகிறது. ஆனால் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் உள்ள வேற்றுமையை உணரமுடியாத ஒரு பலவீனமான உணர்வு அது என்று கருதப்படுகிறது. தேவனுடைய நீதியும், பாவத்தின் மீதான அவரது பகிரங்கமான குற்றச்சாட்டும், அவரது பரிசுத்த கற்பனைகளின் தேவையும் புறம்பாக்கப்பட்டிருக்கின்றன. கற்பனைகளை உயிரற்ற எழுத்துக்களாகக் கருதும்படி மக்கள் போதிக்கப்பட்டுள்ளனர். சந்தோஷம் கொடுக்கக்கூடியதும், மெய்மறக்கச் செய்யக்கூடியதும் புலன்களை அடிமைப்படுத்தக்கூடியதுமான கட்டுக்கதைகள் அவர்களுடைய விசுவாசத்தின் அஸ்திவாரமாக இருப்பதற்காக, வேதாகமத்தை நிராகரிக்கும்படி மனிதனை நடத்துகிறது. இதற்குமுன் மறுக்கப்பட்டதைப்போலவே, கிறிஸ்து இப்போதும் மறுக்கப்படுகிறார். ஆனால் அந்த வஞ்சகத்தை அறிந்துகொள்ளமுடியாமலிருக்கும்படி, சாத்தான் மக்களின் கண்களைக் குருடாக்கியிருக்கிறான். (17)GCTam 655.2

    ஆவிமார்க்கத்தையும் அதன் செல்வாக்கின்கீழ் வருவதிலுள்ள அபாயத்தைப்பற்றியும், சிலர் மட்டுமே சரியாக புரிந்துகொண்டுள்ளனர். அநேகர் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களது ஆவலைத் திருப்திப்படுத்த அதனுடன் வீணாகத் தலையிடுகின்றனர். அதில் அவர்களுக்கு உண்மையான விசுவாசமில்லாமல் இருந்து, ஆவியின் கட்டுப்பாட்டிற்குத் தங்களைக் கீழ்ப்படுத்த வேண்டியதாகிவிடும் என்னும் எண்ணம் அவர்களை பயங்கரத்தால் நிரப்பும். ஆனால் தடைசெய்யப்பட்ட இடத்தில், அவர்கள் நுழைய முயலுகின்றனர். அழிக்கும் வலிமைமிக்கவன், அவர்களது சித்தத்திற்கு எதிராக அவர்கள்மீது அவனது வல்லமையை செயல்படுத்துகிறான். அவனது திசையில் செல்லுவதற்குக் கீழ்ப்படிய ஒரு தடவை தங்கள் மனதை இழக்கும்படி அவர்கள் விட்டுவிடும்போது, அவர்களை அவன் அடிமைகளாகப் பிடித்துக்கொள்ளுகிறான். மனதை மயக்கும் இந்தக் கவர்ச்சி அலையிலிருந்து தங்களுடைய சுயபலத்தால் விடுபடுவது என்பது இயலாததாக உள்ளது. கண்ணியில் பிடிக்கப்பட்டுள்ள இந்த ஆத்துமாக்களை விசுவாசத்துடன் கூடிய ஆர்வமிக்க ஜெபத்திற்கு விடையாக தேவனால் அருளப்படும் வல்லமை ஒன்றினால் மட்டுமேயன்றி வேறு எதினாலும் விடுவிக்க இயலாது.(18)GCTam 656.1

    தீய சுபாவமுடைய செயல்களில் ஈடுபடும் அனைவரும், அல்லது ஒரு பாவத்தை அறிந்து, வேண்டுமென்றே அதைச் சிந்தையில் வைத்துப் போற்றும் அனைவரும், சாத்தானின் சோதனைகளை அழைக்கின்றனர். அவர்கள் தேவனிடமிருந்தும் தேவதூதர்களின் காவலிலிருந்தும் தங்களைப் பிரித்துக்கொள்ளுகின்றனர். தீயவன், அவனது வஞ்சகத்திட்டத்தை முன்வைக்கும்போது, அவர்கள் பாதுகாப்பு அற்றவர்களாக இருந்து அவனது எளிதான இரையாக விழுந்து விடுகின்றனர். இவ்விதமாக, அவனது வல்லமைக்குள் தங்களை வைப்பவர்கள், அவர்களது நடத்தை எங்கு சென்றுமுடியும் என்பதை உணராதவர்களாக உள்ளனர். அவர்களைக் கவிழ்ப்பதில் வெற்றி அடைந்தபின், பிறரைக் கெடுக்க அவர்களைத் தனது பிரதிநிதிகளாக சோதனைக்காரன் இழுத்துக்கொள்ளுகிறான். (19)GCTam 656.2

    “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தை யின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்ச மில்லை” (ஏசா. 8:19,20) என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். மனிதனுடைய இயல்பையும் மரித்தவர்களின் நிலையையும்பற்றி வேதவாக்கியங்களில் மிகவும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சத்தியங்களைப் பெற்றுக் கொள்ள மனிதர்கள் விருப்பமுள்ளவர்களாக இருந்திருந்ததால், ஆவிமார்க்கம் பாராட்டும் உரிமைகளிலும், வெளிக்காட்டல்களிலும் பொய்யான அடையாளங்களுடனும் அற்புதங்களுடனும் சாத்தான் செயலாற்றுவதை அவர்களால் காணமுடியும். மாம்ச சிந்தையுடன் ஒத்துப்போகக்கூடிய சுயாதீனத்திற்கு இணங்குவதைவிட, அவர்கள் நேசிக்கும் பாவங்களை விட்டுவிலகுவதைவிட, திரளானவர்கள் வெளிச்சத்திற்குத் தங்கள் கண்களை மூடிக்கொண்டு, எச்சரிக்கைகளை மதிக்காமல் நேராகச் செல்லுகின்றனர். சாத்தான் அவனது வலையை அவர்களைச் சுற்றிப் பின்னுகிறான். அவர்கள் அவனுக்கு எளிதான இரையாகின்றனர். “இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் ... சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்” —2 தெச. 2:10-12. (20)GCTam 657.1

    ஆவிமார்க்கத்தின் சோதனைகளை எதிர்ப்பவர்கள் மனிதர்களுடன் மட்டும் போரிடாமல், சாத்தானுடனும் அவனது தூதர்களுடனுங்கூடப் போராடுகின்றனர். துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் அவர்கள் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். பரலோக ஊழியக்காரர்களின் வல்லமையால், பின்நோக்கி விரட்டப்படாதவரை சாத்தான் ஒரு அங்குல இடத்தைக்கூட விட்டுக்கொடுக்கமாட்டான். இப்படி எழுதியிருக்கிறதே என்னும் வார்த்தையினால் நமது இரட்சகர் சாத்தானை சந்தித்ததைப்போல, அவனைச் சந்திப்பதற்கு தேவனுடைய மக்கள் தகுதி உள்ளவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் நாட்களில், வேத வாக்கியங்களை மேற்கோளாகக் காட்டியதைப் போலவே, சாத்தானால் இப்பொழுதும் செய்யமுடியும். அவனது மாயங்களைத் தாங்கும் விதத்தில், அதன் போதனைகளை அவன் தாறுமாறாக்குவான். ஆபத்தான இப்படிப்பட்ட நேரத்தில் நிற்க விரும்புகிறவர்கள், வேதவாக்கியங்களின் சான்றுகளைத் தங்களுக்கென்று புரிந்திருக்கவேண்டும். (21)GCTam 657.2

    தங்களால் நேசிக்கப்படும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வடிவில் தோன்றி, மிகப் பயங்கரமான மதப்புரட்டுகளை அறிவிக்கும் பிசாசுகளின்ஆவிகளை மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டியதிருக்கும். இந்த ஆவிகள், நமது மென்மையான அனுதாபங்களைத் தூண்டி, அவர்கள் கூறும் போலியானவைகளை ஆதரிப்பதற்காக, அற்புதங்களைச் செய்வார்கள். மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இப்படித் தோன்றுபவைகள் பிசாசுகளின் ஆவிகளே என்கிற வேதாகம சத்தியத்துடன் அவர்களைத் தாக்குப்பிடித்து நிற்பதற்கு நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். (22)GCTam 658.1

    “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்கு” (வெளி. 3:10) சற்று முன்பாக நாம் இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையின்மீது உறுதியாக நிலைநிறுத்தப்படாமலிருக்கும் அனைவரின் விசுவாசமும் வஞ்சிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும். பிள்ளைகளின் மீதுள்ள கட்டுப்பாட்டை ஆதாயப்படுத்திக்கொள்ள, சாத்தான் அநீதியினால் உண்டாகும் சகல வித வஞ்சகத்தோடும் செயலாற்றுகிறான். அவனது வஞ்சகங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால் மனிதர்கள் தாங்களாகவே அவனது சோதனை களுக்கு இணங்கும்போதுமட்டுமே, அவனால் தனது நோக்கத்தில் ஆதாயமடைய முடியும். சத்தியத்தைப்பற்றிய அறிவை ஆவலுடன் தேடி, கீழ்ப்படிதலின் மூலமாகத் தங்களது ஆத்துமாவைப் பரிசுத்தப்படுத்த முயன்றவர்கள், இவ்விதமான போராட்டத்திற்காக ஆயத்தம்செய்ய முடிந்தவைகளைச் செய்பவர்கள், நிச்சயமாகவே சத்தியத்தின் தேவனில் ஒரு பாதுகாப்பைக் காண்பார்கள். என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், நானும் உன்னைக் காப்பேன் என்பது இரட்சகரின் வாக்குத்தத்தமாக உள்ளது. அவரை நம்புகின்ற ஒரே ஒரு ஆத்துமாகூட, சாத்தானால் மேற்கொள்ளப்படுவதற்கு விட்டுவிடப்படாதபடி அவரது மக்களைப் பாதுகாக்க,அவர் பரலோகத்தில் உள்ள ஒவ்வொரு தேவதூதனையும் விரைவாக அனுப்பிவைப்பார். (23)GCTam 658.2

    தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து துன்மார்க்கர் தங்களைக் காத்துக்கொள்ளும்படி, துன்மார்க்கரின்மீது வரவிருக்கும் பயங்கரமான வஞ்சகத்தை ஏசாயா தீர்க்கதரிசி: “நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெரு வெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே” (ஏசா. 28:15) என்கிறார். பாவிக்குத் தண்டனை இல்லை, அத்தனைபேரும் எத்தனை கறைப்பட்டிருந்தாலும் தேவதூதர்களைப் போலாவதற்காகப் பரலோகத்திற்கு உயர்த்தப்படுவார்கள் என்ற நிச்சயத்தினால் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் செய்துகொள்ளும் முரட்டாட்டமிக்க, பாவத்திற்கு வருந்தாதவர்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ள வகுப்பில் உள்ளனர். இக்கட்டுக்காலத்தில் நீதிமானுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி பரலோகம் ஏற்பாடு செய்திருக்கும் சத்தியத்தை மறுத்து, அதற்குப் பதிலாக சாத்தான் தரும் பொய்யை அடைக்கலமாக ஏற்றுக்கொள்ளுபவர்கள் ஆவிமார்க்கத்தின் வஞ்சகமிக்க போலியை ஏற்றுக்கொள்ளுபவர்கள் மிக அதிக அழுத்தத்துடன் மரணத்துடனும் பாதாளத்துடனும் உடன்படிக்கை செய்துகொண்டிருக்கின்றனர். (24)GCTam 659.1

    இந்தத் தலைமுறையில் உள்ள மக்களின் குருட்டுத்தனம் வெளியில் தெரிவிப்பதற்கும் அப்பாற்பட்ட ஆச்சரியமானதாக இருக் கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் சாத்தானின் வஞ்சகத்தை ஆவலுள்ள நம்பிக்கையுடன் ஏற்று, தேவனுடைய வார்த்தை நம்பக் கூடியதாக இல்லை என நிராகரிக்கின்றனர். சந்தேகவாதிகளும் ஏளனம் செய்பவர் களும் தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்கள் ஆகியவர்களின் விசுவாசத் திற்காகப் போரிடுபவர்களின் மத வைராக்கியத்தைப் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டுகின்றனர். கிறிஸ்துவைப்பற்றியும், இரட்சிப்பின் திட்டம்பற்றியும், சத்தியத்தை நிராகரிப்பவர்களின்மீது உண்டாகவுள்ள தேவ கோபமாகிய தண்டனையைப்பற்றியும் உள்ள பக்திவிநயமான அறிவிப்புகளைக் கேலியாகச் சிரிக்கும்படி உயர்த்திப்பிடித்து, அவைகளில் இருந்து அவர்கள் தங்களைத் தாங்களாகவே வேறு திசையில் திருப்பிக்கொள்ளுகின்றனர். தேவனுடைய உரிமைகளை ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யவும் அவரது கற்பனைகளின் அவசியங்களுக்குக் கீழ்ப்படியவும் மறுக்கிற இடுக்கமான பலவீனமான மூடநம்பிக்கையுள்ள மனங்களின்மீது அவர்கள் மிகுந்த இரக்கம் பாராட்டுகின்றனர். தேவனுடைய பழிவாங்குதலுக்கும் அவர்களுக்கும் இடையில், கடக்கமுடியாததும் நுழையமுடியாததுமான ஒரு வேலியை அமைத்துக்கொண்டது போலவும் மரணத்துடன் ஒரு உடன்படிக்கையையும் நரகத்துடன் ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டதுபோலவுமான நிச்சயத்தை உண்மையாகவே அந்த அளவிற்கு வெளிக்காட்டுகின்றனர். எதினாலும் அவர்களது பயத்தைப் போக்கமுடியாது. அவனுடைய கண்ணியிலிருந்து விடுபடும் பெலனும் விருப்பமும் இல்லாத அளவிற்கு சோதனைக்காரனுக்கு முழுமையாக இணங்கி, அவனுடன் மிகநெருக்கமாக ஒற்றுமைப்பட்டிருந்து, அவனுடைய ஆவியினால் முற்றிலுமாக நிரப்பப்பட்டுள்ளனர். (25)GCTam 659.2

    உலகத்தை வஞ்சிக்கும் இறுதிமுயற்சிக்காக சாத்தான் நீண்ட நாட்களாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறான். “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதி. 3:4,5) என்று ஏதேனில் ஏவாளிடம் கூறிய வாக்குறுதியில் அவனது ஏமாற்றுதலின் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. அவனது வஞ்சகத்தின் சிறப்புச் செயலாகிய ஆவிமார்க்கத்தின் முன்னேற்றத்தைச் செய்வதற்கான பாதையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஆயத்தம் செய்திருக்கிறான். தந்திரமான அவனது திட்டத்தில், பூரணமான நிறைவேறுதலை அவன் இன்னும் அடையவில்லை. ஆனால் மீதியான கடைசி நேரத்தில், அது அந்த நிலையை அடையும். “தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது” (வெளி. 16:13,14) என்று தீர்க்கதரிசி கூறுகிறான். அவருடைய வார்த்தையின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவ வல்லமையினால் காக்கப்படுகிறவர்களைத் தவிர, உலகம் முழுவதும் இந்த மாயமான ஏமாற்றத்திற்குள்ளாக அடித்துச் செல்லப்படும். தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்படுவதினால் எழுப்பப்படுவதற்காகவே மக்கள் சாவுக்குரிய பாதுகாப்பினால் உறங்கவைக்கப்பட்டுள்ளனர். (26)GCTam 660.1

    “நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டு போகும். நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்” (ஏசாயா 28:17,18) என்று கர்த்தர் கூறுகிறார். (27)GCTam 660.2