39—ஆபத்துக்காலம்!
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
- Contents- இந்தநூலை எழுதியவரின் எண்ணம் என்ன?
- 1—எருசலேமின் அழிவு!
- 2—முதலாம் நூற்றாண்டுகளின் உபத்திரவம்!
- 3—சத்தியத்தின் இருண்ட காலம்!
- 4—வால்டென்னியர்கள்!
- 5—ஜான் விக்ளிப்!
- 6—ஹஸ் மற்றும் ஜெரோம்!
- 7—லுத்தர் ரோமை விட்டு வெளியேறுகிறார்!
- 8—விசாரணை சபையின் முன்பு லுத்தர்!
- 9—சுவிஸ்சர்லாந்தின் சீர்திருத்தவாதி!
- 10—ஜெர்மனியில் சீர்திருத்தத்தின் செயல்பாடுகள்!
- 11—இளவரசர்களின் எதிர்ப்பு!
- 12—பிரெஞ்சு சீர்திருத்தம்!
- 13—நெதர்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியா!
- 14—பிற்காலத்திய ஆங்கிலேய சீர்திருத்தவாதிகள்!
- 15—வேதாகமமும், பிரெஞ்சுப் புரட்சியும்!
- 16—முற்பிதாக்களின் பயணம்!
- 17—அதிகாலையின் சத்தம்!
- 18—ஓர் அமெரிக்க சீர்திருத்தவாதி!
- 19—காரிருளில் தோன்றிய ஒளி!
- 20 — மாபெரும் ஆன்மீக எழுப்புதல்!
- 21—ஒரு எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டது!
- 22—நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்!
- 23—ஆசரிப்புக்கூடாரம் என்றால் என்ன?
- 24—மகா பரிசுத்த ஸ்தலத்தில்!
- 25—மாற்றப்பட முடியாத தேவனுடைய கற்பனைகள்!
- 26—ஒரு சீர்திருத்தப் பணி!
- 27—நவீன எழுப்புதல்கள்!
- 28—வாழ்வின் வழக்குகள் சந்திக்கப்படுகின்றன!
- 29—தீமையின் தொடக்கம்!
- 30—மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள பகை!
- 31—தீய ஆவிகளின் செயல்பாடுகள்!
- 32—சாத்தானின் கண்ணிகள்!
- 33—மாபெரும் முதலாம் வஞ்சகம்!
- 34—மரித்தோர் நம்முடன் பேசுவார்களா?
- 35—மனசாட்சியின் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது!
- 36—வரவிருக்கும் போராட்டம்!
- 37—வேதாகமம் என்னும் அரண்!
- 38—இறுதி எச்சரிக்கை!
- 39—ஆபத்துக்காலம்!
- 40—தேவ மக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்!
- 41—பூமி பாழாக்கப்படுதல்!
- 42—மாபெரும் ஆன்மீகப் போராட்டம் முடிவடைகிறது!
Search Results
- Results
- Related
- Featured
- Weighted Relevancy
- Content Sequence
- Relevancy
- Earliest First
- Latest First
- Exact Match First, Root Words Second
- Exact word match
- Root word match
- EGW Collections
- All collections
- Lifetime Works (1845-1917)
- Compilations (1918-present)
- Adventist Pioneer Library
- My Bible
- Dictionary
- Reference
- Short
- Long
- Paragraph
No results.
EGW Extras
Directory
39—ஆபத்துக்காலம்!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 613—634)
“உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்” -தானியேல் 12:1. (1)GCTam 727.1
மூன்றாம் தூதனின் தூது கொடுத்து முடிக்கப்பட்டவுடன் பூமியின் மேல் குடியிருக்கும் பாவிகளுக்கான தேவனுடைய இரக்கமும் கிருபையும் பரிந்துபேசுதலும் முடிந்துபோய்விடுகிறது. இவ்வுலகில் இருக்கும் தேவபிள்ளைகள் தாங்கள் இந்த உலகத்தின் மக்களுக்குச் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிமுடித்துவிட்டார்கள். அதோடு அவர்கள் பின்மாரியை அதாவது தேவனுடைய சந்திதானத்திலிருந்து வரும் வல்லமையைப் பெற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் தங்களுக்கு முன்பாக இருக்கிற சோதனையான காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். பரலோகத்திலிருந்து தேவதூதர்கள் மிகவும் அவசரத்தோடு பூமிக்கு வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். பூமியில் இருந்து பரலோகத்திற்கு வருகிற தேவதூதன் ஒருவன் தனது வேலை முடிந்துவிட்டது என்கிறான். அப்பொழுது கடைசியாக இந்த உலகத்திற்கு வரவேண்டிய சோதனை வந்தாயிற்று. தேவனுடைய தெய்வீகப்பிரமாணங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எல்லோரும் ஜீவனுள்ள தேவனின் முத்திரையை பெற்றுக்கொண்டுவிட்டார்கள். இப்படி அவர்கள் முத்திரையைப் பெற்றுக்கொண்டதும், இயேசு பரலோகத்தில் உள்ள ஆசரிப்புக்கூடாரத்தில் பரிந்துபேசுவதை நிறுத்திவிடுகிறார். நிறுத்திவிட்டுத் தனது கரங்களை உயர்த்தி, “எல்லாம் முடிந்தது” என்று பலத்த குரலில் கூறுகிறார். பிறகு “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:1) என்கிற தேவ அறிவிப்பைக் கொடுக்கிறார். அப்பொழுது தேவதூதர் சேனைகள் அனைவரும் தங்களது கிரீடங்களைக்கழற்றி அவரது காலடியில் வைக்கிறார்கள். பூமியில் உள்ள ஒவ்வொருவருடைய காரியமும் வாழ்வா சாவா என்பது தீர்மானமாகிவிட்டது. கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்காகப் பாவ நிவாரணம் செய்து, அவர்களது பாவங்களை அழித்துப்போட்டுவிட்டார். அவரது இராஜ்யத்தின் குடிமக்களின் எண்ணிக்கை பூர்த்தியாகிவிட்டது. பூலோகமெங்கும் உள்ள இராஜ்யங்களும் அவற்றின் அதிகாரங்களும் மேன்மைகளும் இரட்சிப்பைச் சுதந்தரித்துக்கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றன. இயேசு ராஜாதிராஜனாகவும் தேவாதி தேவனாகவும் இருந்து அரசாளுவார். (2)GCTam 727.2
அவர் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டு வெளியே வந்ததும், பூமியிலே குடியிருக்கிறவர்கள்மேல் இருள் கவிழ்ந்துகொள்ளுகிறது. பயங்கரமான இந்த நேரத்தில் நீதிமான்களாக இருக்கிறவர்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக இயேசுவின் பரிந்துபேசுதல் இல்லாமலேயே நீதிமான்களாக நிற்கவேண்டும். அக்கிரமத்தின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்துவந்த பரிசுத்தஆவியானவர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மனந்திருந்தாத மனிதர்களின்மேல் சாத்தான் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தத் துவங்குவான். தேவனின் நீடியபொறுமை முடிவடையும் காலம் வந்துவிட்டது. இந்த உலகமானது அவரது அன்பை வெறுத்துவிட்டது. அவரது நியாயப்பிரமாணத்தை அவமானமாக்கிவிட்டது. அக்கிரம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கிருபையின் கெடு தாண்டிவிட்டது. பரிசுத்த ஆவியினால் இதுவரையிலும் இருந்துவந்த பாதுகாவல் இனி இருக்கமுடியாது. தீயவனாகிய சாத்தானிடமிருந்து அவர்களுக்கு இனி பாதுகாப்பு கிடையாது. ஆகவே இப்பொழுது சாத்தான் இவ்வுலகில் குடியிருக்கிறவர்களைக் கடைசியானதும் மகாப்பெரியதுமான ஒரு உபத்திரவத்திற்குள் மூழ்கடிக்கக் காத்திருக்கிறான். மனிதனுக்குள் புயல்போல் பொங்கியெழும் உணர்ச்சிகளை அடக்கிக் கட்டுப்படுத்தும் வேலையை இப்பொழுது தேவதூதர்கள் செய்யமாட்டார்கள். ஆகவே மனிதர்களிடையே எல்லாவிதமான கலகங்களும் கட்டவிழ்த்து விடப்படும். எனவே அந்தக் காலத்தில் எருசலேமிற்கு ஏற்பட்ட அழிவைவிடப் பயங்கரமான அழிவு உலகம் முழுவதற்கும் ஏற்படும். (3)GCTam 728.1
அன்று எகிப்து நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தும்படி அதன் தலைப்பிள்ளைகள் அனைவரையும் அழித்துவிட்டது ஒரே ஒரு தூதன்தான். அன்று தாவீது தேவன் கோபப்படும்படி ஜனங்களைக் கணக்கெடுத்தபோது, அந்தப் பாவத்திற்காகத் தண்டிக்கும்படி இஸ்ரவேலில் பெரிய அழிவை உண்டாக்கியது ஒரே ஒரு தேவதூதன்தான். தேவன் கட்டளையிடும்போது இப்படிப்பட்ட பெரும் அழிவுகளை உண்டாக்கும் வல்லமை பரிசுத்த தூதர்களுக்கு உண்டு. அதேபோல தேவன் மட்டும் அனுமதிப்பாரானால், பிசாசுகளும் இதேபோன்ற அழிவு வேலையைச் செய்ய முடியும். எங்கும் பாழ்க்கடிப்பை உண்டாக்கும்படி தேவ அனுமதிக்காகப் பிசாசுகள் இப்பொழுதே காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. (4)GCTam 728.2
மேற்படி பிசாசுகளின் அழிவுச் செயலால் உலகம் முழுவதிலும் இயற்கையின் சீரழிவுகள், மனிதர்களிடையே கலகம், இரத்தஞ்சிந்துதல் ஆகிய பயங்கரங்கள் நிறைந்திருக்கும். தேவனது பிரமாணத்தைக் கனப்படுத்துகிற பிள்ளைகள்தாம் இந்த அழிவிற்கும் தண்டனைக்கும் காரணம் என்று குற்றம்சாட்டப்படுவார்கள். கடைசியாகக் கொடுக்கப்பட்ட வல்லமையான எச்சரிப்பினால், பலர் மனந்திருந்திவிட்டனர். இது சாத்தானின் பிள்ளைகளை மூர்க்கமடையச்செய்யும். அப்படி மனந்திரும்பிய பிள்ளைகள்மேல் அவர்களது கோபம் கனல் போல் மூண்டு எரியும். அவர்களை வெறுத்து உபத்திரவப்படுத்தும் ஆவியை சாத்தான் தனது பிள்ளைகளுக்கு மேலும் மேலும் அதிகமாக ஊட்டிவிடுவான். (5)GCTam 729.1
தேவனுடைய சமுகம் இறுதியில் யூத தேசத்தின் மத்தியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், அதை ஆசாரியர்களும் சரி சாதாரண ஜனங்களும்சரி அறியாமலிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் அப்பொழுது சாத்தானின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தார்கள். மோசமான பயங்கரமான வெறியுணர்ச்சிகள் அவர்களை ஆட்டிவைத்துக்கொண்டிருந்தன. ஆனால் அந்த நிலையிலுங்கூட, அவர்கள் தங்களை தேவனுக்குச் சொந்தமான விசேஷித்த ஜனமாகவே கருதிக்கொண்டிருந்தனர். ஆகவே எருசலேமில் இருந்த ஆலயத்தில் செய்யப்பட்டுவந்த ஊழியங்கள் தொடர்ந்தன. தீட்டுப்பட்டுப்போயிருந்த அதன் பலிபீடங்களில், பலிகள் இடப்பட்டுவந்தன. இவற்றுக்கும்மேலாக, தேவகுமாரனின் இரத்தத்தைச் சிந்தினது மட்டுமன்றி, அவருடைய ஊழியர்களான அப்போஸ்தலர்களின் இரத்தத்தையும் சிந்தினர். இதில் தீவிரமாயிருந்த ஜனங்கள்மேல், தேவனின் நாமத்தில் தினமும் ஆசீர்வாதங்கள் உரைக்கப்பட்டன. அதுபோலவே, பரலோக ஆசரிப்புக்கூடார ஊழியம் முடிந்ததும், இவ்வுலகின்மேல் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். அது முடிவான நியாயத்தீர்ப்பாகவும், அழிவுக்குரிய நியாயத்தீர்ப்பாகவும் இருக்கும். அந்தத் தீர்ப்பு வழங்கப்படும்போது, அதைக்குறித்து இவ்வுலகத்தார் அறியமாட்டார்கள். ஆகவே தேவ ஆவி தங்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அவர்கள் தங்கள் மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பார்கள். தீமையின் பிரபுவானவன் இந்த ஜனங்கள்மேல் தன் ஆவியை ஊற்றி, இவர்கள் தங்கள் மார்க்கங்களில் இன்னும் அதிகத் துடிப்போடு செயல்பட உதவுவான். இவர்கள் மூலம் தனது தீய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைவான். இவர்களது செயல்கள் எல்லாம் தேவன்மேல் பக்திவைராக்கியம் கொண்டவர்கள்போல இவர்களைக் காட்டுவனவாக இருக்கும்.(6)GCTam 729.2
பரிசுத்த ஓய்வுநாளைக் குறித்த விஷயம் கிறிஸ்தவ உலகமெங்கும் விவாதத்திற்குரிய விஷயமாக ஆகும்போது மதத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஞாயிறு ஆசரிப்பைக் கட்டாயமாக்கும்போது ஜனங்களிலே சிறு கூட்டத்தினராகிய ஒரு சாரார் இந்த விஷயத்தில் உலகத்தோடு ஒத்துப்போக மறுக்கும்போது அவர்களை உலகமே ஒட்டுமொத்தமாக சபிக்கும். சபை நிர்ணயித்த காரியத்தை அரசாங்கம் விதித்த சட்டத்தை எதிர்க்கிறவர்களைச் சகிக்கக்கூடாது என்றும், உலகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு இல்லாமல் குழப்பத்தில் மூழ்கிவிடுவதைவிட அவர்கள் பாடுபடுவது நல்லது என்றும் நிர்பந்திக்கப்படும். ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும் என்று தீய சிந்தை கொண்ட காய்பாவால் பதினெட்டு நூற்றாண்டுகளுக்குமுன் கிறிஸ்துவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது (யோவான் 11:50). அதைப்போலவே இப்பொழுதும் இந்த வாதம் தீர்க்கமானதாக இருக்கும். முடிவிலே நான்காம் பிரமாணம் உரைக்கும் ஓய்வுநாளை உயர்த்திப் பிடிக்கிறவர்களுக்கு எதிராக ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். உலகத்தோடு சேர்ந்து ஞாயிறு ஆசரிப்பை ஏற்றுக்கொள்ளாத எவரும் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நாளுக்குப்பிறகு இவர்களைக் காண்கிறவர்கள் கண்ட இடத்திலேயே கொன்றுவிடவேண்டும் என்றும் அந்தக் கட்டளை கூறும். இப்படியாக நியாயப்பிரமாணங்களை முழுமையாகக் கடைப்பிடிப்போருக்கு எதிராக ஐரோப்பாவின் கத்தோலிக்கர்களும் அமெரிக்க நாட்டின் புரொட்டஸ்டாண்டுகளும் ஒன்றுபட்டுச் செயல்படுவர்.(7)GCTam 730.1
இதன்பிறகு, தேவனுடைய ஜனங்கள் தீர்க்கதரிசிகளால் யாக்கோபின் இக்கட்டுக்காலம் என்று கூறப்பட்ட காலமாகிய துன்பமும் துயரமுமான காலத்திற்குள்ளாகப் பிரவேசிப்பார்கள். இந்த யாக்கோபின் இக்கட்டுக்காலம் குறித்து: “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை. முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் ... ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்” (எரே. 30:5-7) என்று கர்த்தர் சொல்லுகிறார். (8)GCTam 730.2
ஏசாவின் கைகளுக்குத் தன்னை தப்புவிக்கும்படி (ஆதி. 32:24- 30) ஜெபத்திலே போராடின யாக்கோபின் சஞ்சலமான இரவானது இந்த உபத்திரவ காலத்தில் தேவனுடைய பிள்ளைகளின் அனுபவத்தை விவரிக்கிறது. ஏசாவிற்கு கிடைக்கவேண்டிய தகப்பனின் ஆசீர்வாதத்தை யாக்கோபு ஏமாற்றி எடுத்துக்கொண்டதினாலே, ஏசா தன் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினான். அதனால் யாக்கோபு உயிருக்குப் பயந்து ஓடிப்போனான். பல வருடங்கள் புறதேசத்திலே இருந்துவிட்டு, தேவனின் கட்டளைப்படி அவன் தனது மனைவிகள், குழந்தைகள், ஆடுகள், மாடுகளோடு தன் சொந்த தேசத்திற்குத் திரும்பினான். தேசத்தின் எல்லையை நெருங்கியபோது, ஏசா யுத்தத்திற்கு ஆயத்தமான மனிதர்களோடு புறப்பட்டு வந்துகொண்டிருக்கும் தகவல் எட்டியது. தனக்கு இழைக்கப்பட்ட தீமைக்குப் பழிவாங்கத்தான் ஏசா வருகிறான் என்று அறிந்த யாக்கோபு பயத்தால் மிகவும் நடுங்கிப்போனான். யாக்கோபின் கூட்டத்தில் ஆயுதம் ஏந்திச் சண்டைபோடத்தக்கவர் யாருமில்லை. ஆகவே யாக்கோபின் கூட்டத்தார் காப்பாற்றுவார் யாருமின்றி கொடூரமாக வெட்டிக்கொல்லப்படுவது நிச்சயம் என்றாயிற்று. ஒட்டுமொத்தமாக அழியப்போகிறோம் என்கிற சஞ்சலம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் இதற்கெல்லாம் காரணம் தனது சகோதரனுக்கு எதிராகத் தான் செய்த பாவமே என்கிற உணர்வும் அதற்காக வருந்திய வருத்தமும் யாக்கோபின் இருதயத்தை அழுத்தி நசுக்கின. தேவன் இரக்கங்காட்டி இடைப்பட்டாலொழிய வேறு நம்பிக்கைக்கே இடமில்லை. தனது பாதுகாப்பிற்காக தான் இப்பொழுது செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, ஜெபம் செய்வதுதான் என்பதை யாக்கோபு உணர்ந்துகொண்டான். அதே சமயத்தில், தனது சகோதரனுக்கு எதிராகச் செய்த பாவத்திற்குத் தன்னால் என்னென்ன பிராயச்சித்தம் செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்தான். அதோடு மட்டுமின்றி, ஒருவேளை தாக்கப்படுவதைத் தடுக்கமுடியாது என்கிற சூழ்நிலை வருமானால், உயிர்தப்ப என்ன செய்யமுடியுமோ அவைகளையும் செய்தான். அவைகளைச் செய்தபின்னர்தான் ஜெபத்திலே அவன் தேவனோடு போராடினான். உபத்திரவகாலம் நெருங்கிவரும்போது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும் இப்படித்தான் செய்யவேண்டும். அவர்கள் தாங்கள் உண்மையும் உத்தமுமானவர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளுவதற்கு என்னென்ன செய்வேண்டுமோ அவைகளனைத்தையும் செய்யவேண்டும். அதோடு அவர்கள் ஞாயிறு ஆசரிப்புச்சட்டம் வராமல் தடுக்க என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளையும் செய்யவேண்டும். இதையெல்லாம் செய்தபின்னர், அதையும்மீறி வரவிருக்கிற உபத்திரவத்தால் தாங்கள் வீழ்ந்துவிடாதபடி, காக்கும் கிருபைக்காக இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். (9)GCTam 731.1
தனது சஞ்சலங்களை தன்னுடைய குடும்பத்தார் அறிந்துகொள்ளவேண்டாம் என்று எண்ணி, யாக்கோபு அவர்களை அனுப்பிவிட்டு, தனிமையாக இருந்து தேவனிடத்தில் தனது வேண்டுதல்களை வைக்கிறான். தனது பாவத்தை அறிக்கையிடுகிறான். தன்மீது இதுகாறும் இரக்கம் பாராட்டி வந்ததற்காக நன்றிகளை ஏறெடுக்கிறான். மிகுந்த மனத்தாழ்மையோடு தேவனுக்கு முன்பாக நின்று, அவர் தமது பிதாக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளையும் பெத்தேலில் இராத்தரிசனத்திலும் அந்நிய தேசங்களில் இருந்த சமயங்களிலும் அவர் தனக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் நினைவுபடுத்தி அவற்றின்படி அவர் தனக்குச் செய்யவேண்டுமென்றும் வேண்டினான். அவனது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய நெருக்கடி வந்துவிட்டதே. எல்லாமே மோசம்போய்விடும் என்கிற நிலை ஆகிவிட்டதே. அந்த இருளிலும் அந்தத் தனிமையிலும் இருந்து அவன் தொடர்ந்து தேவனுக்குமுன் தன்னைத் தாழ்த்தி ஜெபித்துக்கொண்டு இருந்தான். திடீரென்று அவன் தோளை ஒரு கை தொட்டது. யாரோ ஒரு எதிரி தன்னைக் கொல்ல வந்திருப்பதாக யாக்கோபு எண்ணிக்கொண்டான். மிகவும் பயந்துபோனவனாகத் தனது முழுப்பலத்தோடும் தன்னைத் தாக்கவந்தவரோடு போராடினான். இரவு முழுவதும் போராடிய அந்த நபர், பொழுது விடியத்தொடங்கியபோது தான் சாதாரண மனிதன் அல்ல என்பதை யாக்கோபிற்கு வெளிப்படுத்தினார். அவர் யாக்கோபைத் தொட்டதுமே வலிமையான உடலை உடைய யாக்கோபு கை, கால் விளங்காதவனைப்போலத் தொய்ந்து விழுந்தான். வேறு எதுவும் செய்யமுடியாதவனாக, இனம் புரியாதிருந்த அந்த எதிரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கெஞ்சி அழத்தொடங்கினான். ஏனென்றால் தான் போராடிய நபர் வேறு யாருமல்ல, தன்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட தேவனே என்பதை யாக்கோபு இப்பொழுது அறிந்துகொண்டான். உடல் வலுவிழந்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலும் அவன் தனது குறிக்கோளை மறந்துவிடவில்லை. எவ்வளவோ காலமாகத் தனது பாவத்தைக் குறித்து உள்ளத்தில் கலக்கமும் மனதில் பெரும் உறுத்தலும் இருதயத்தில் வேதனையும் அனுபவித்துக்கொண்டிருந்தது போதும். இப்பொழுது தான் மன்னிக்கப்பட்டுவிட்டோம் என்கிற உத்தரவாதம் மட்டுமே அவனுக்குத் தேவை. யாக்கோபை வந்து சந்தித்த அந்தத் தேவமனிதர், அவனிடம் விடைபெற்றுக் கொள்வார்போலத் தோன்றியது. ஆனால் யாக்கோபு அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தன்னை ஆசீர்வதிக்கும்படி கெஞ்சினான். “அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது” என்று வற்புறுத்தினார். ஆனால் நமது முற்பிதாவாகிய யாக்கோபோ “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று விடாப்பிடியாக பிடித்துக்கொண்டான். என்ன ஒரு நம்பிக்கையும் உறுதியும் விடாமுயற்சியும் இங்கே வெளிப்படுகின்றன! யாக்கோபின் இந்த வேண்டுதல் பெருமையோடும் துணிகரத்தோடும் இருந்திருக்குமானால், அவன் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுப் போயிருப்பான். ஆனால் தன்னுடைய தகுதியின்மையையும் பலவீனத்தையும் அறிக்கையிடுகிறபோதிலும் உடன்படிக்கையைக் காக்கும் தேவனுடைய இரக்கத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறவனுக்கு கிடைக்கும் நிச்சயத்தோடிருந்தான். (10)GCTam 732.1
“அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான்” என்கிறது வேதாகமம் (ஓசியா 12:4). பாவங்களோடு தவறு செய்து அழியக்கூடியவனான இவன் தன்னைத் தாழ்த்தி மனந்திரும்பி சரணாகதி அடைந்ததின் மூலமாகப் பரலோகத்தின் உன்னதமானவரோடு போராடி வென்றான். பாவியாக இருந்தாலும் தன்னுடைய நடுங்கும் கரங்களால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை பிடித்துக்கொண்டு நின்றான். வரம்பற்ற அன்புடைய தேவனின் இருதயத்தால் பாவியின் மன்றாட்டை மறுக்கமுடியாது போயிற்று. அவனுடைய வெற்றியின் அடையாளமாகவும், அவனது உதாரணத்தைப் பின்பற்ற மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் தேவன் அவனது பெயரை மாற்றினார். பாவத்தை நினைவூட்டின அவனது பெயர்(யாக்கோபு) வெற்றியை நினைவூட்டும் பெயராக (இஸ்ரவேல்) மாற்றப்பட்டது. யாக்கோபு தேவனோடு போராடி மேற்கொண்டான் என்கிற உண்மை அவன் மனிதரோடும் போராடி மேற்கொள்வான் என்ற நிச்சயத்தை அவனுக்குத் தந்தது. தேவன் அவனுக்குப் பாதுகாப்பாக இருந்ததால் இப்போது தனது சகோதரனுடைய கோபத்தைக்குறித்து அவன் பயப்படவில்லை. (11)GCTam 733.1
அவன் செய்த பாவத்தின் நிமித்தம் அவனை அழித்துப்போடத் தனக்கு உரிமையுண்டு என்று சொல்லி சாத்தான் தேவதூதர்களுக்கு முன்பாக யாக்கோபைக் குற்றம் சாட்டினான். யாக்கோபிற்கு எதிராகப் படையொன்றை நடத்திச்செல்ல ஏசாவை ஏவிவிட்டான். நமது முற்பிதாவின் அந்த நீண்ட இரவு போராட்டத்தில் அவனை அதைரியப்படுத்தவும் தேவன்மேல் அவனுக்கிருந்த பிடிப்பை முறிக்கவும் அவனுடைய பாவத்தைக்குறித்த ஒரு குற்ற உணர்வை அவனுக்குள் திணிக்கவும் சாத்தான் முயன்றான். யாக்கோபு கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டான். ஆனால் பரலோகத்திலிருந்து உதவி வந்தாலொழிய தான் அழிந்துபோவது நிச்சயம் என்பதை அவன் அறிந்திருந்தான். தான் செய்த பெரிய பாவத்தைக் குறித்து மெய்யாகவே மனம் வருந்தி தேவனிடம் விண்ணப்பித்தான். தன் நோக்கத்திலிருந்து அவன் திரும்பப்போவதில்லை. தூதுவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஊக்கமாக மனவேதனையோடு— மேற்கொள்ளும்வரை தன் விண்ணப்பத்தை முன்வைத்தான். (12)GCTam 733.2
சாத்தான் யாக்கோபிற்கு எதிராக படையெடுக்கும்படி ஏசாவைத் தூண்டியதுபோலவே உபத்திரவகாலத்தில் தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக அக்கிரமக்காரர்களைத் தூண்டிவிடுவான். யாக்கோபைக் குற்றப்படுத்தினதுபோலவே, தேவனுடைய ஜனங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூறுவான். உலகத்து ஜனங்களை தன்னுடையவர்களாக எண்ணியிருக்கிறான். ஆனால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற சிறிய கூட்டம் மேலாதிக்கத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை இந்தப் பூமியில் இல்லாதபடி அகற்றிவிட்டால், அவனுடைய வெற்றி முழுமையாகிவிடும். பரிசுத்த தூதர்கள் அவர்களைப் பாதுகாப்பதை அவன் காண்கிறான். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று யூகிக்கிறான். ஆனால் அவர்களுடைய வழக்குகள் பரலோக ஆசரிப்புக்கூடாரத்தில் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பது அவனுக்குத் தெரியாது. செய்யும்படி அவர்களைத் தூண்டின பாவங்களைக் குறித்த சரியான துல்லியமான அறிவு அவனுக்கு இருப்பதால், அவர்களுடைய பாவங்களை தேவனுக்கு முன்பாக மிகவும் பெரிதுபடுத்திக்காட்டி, அவர்களும் தன்னைப்போலவே தேவனுடைய தயவிலிருந்து விலக்கப்படவேண்டியவர்கள் என்று காண்பிக்கிறான். தேவன் தம்முடைய நீதியின்படி தன்னையும் தனது தூதர்களையும் அழிக்கும்போது அவர்களை மன்னிக்க முடியாது என்று அறிவிப்பான். அவர்கள், தன்னுடைய இரை என்று உரிமைகோரி, அவர்களை அழிக்கும்படி தன்னுடைய கரங்களில் கொடுத்துவிடவேண்டும் என்று நிர்ப்பந்திப்பான். (13)GCTam 734.1
சாத்தான் தேவனுடைய பிள்ளைகளின் பாவங்களைக் குறித்துக் குற்றஞ்சாட்டும்போது, அவர்களை கடைசிமட்டும் முடிந்தவரையிலும் சோதிக்க ஆண்டவர் அவனை அனுமதிக்கிறார். தேவன்மேல் உள்ள நம்பிக்கையும் அவர்களது விசுவாசமும் உறுதியும் கடுமையாக சோதிக்கப்படும். அவர்கள் தங்களது கடந்தகால வாழ்க்கையைத் திருப்பிப்பார்க்கும்போது அவர்கள் நம்பிக்கை மூழ்குகிறது. அதில் குறைவான நல்லவைகளையே காண்கிறார்கள். அவர்களுடைய பலவீனத்தையும் தகுதியின்மையையும் குறித்து முழுமையாக உணருகிறார்கள். அவர்களது வழக்கு நம்பிக்கையற்றது, அவர்களுடைய பாவக்கறைகள் ஒருபோதும் கழுவப்படாது என்கிற எண்ணங்களினால் அவர்களை பயமுறுத்த சாத்தான் முயற்சிக்கிறான். இப்படியாக, அவர்கள் அவனுடைய தூண்டுதல்களுக்கு ஒப்புக்கொடுத்து, தேவனுக்கு உண்மையாயிருப்பதிலிருந்து விலகுவதற் கேதுவாக அவர்களுடைய விசுவாசத்தை அழிக்க நம்பிக்கையாயிருக்கிறான். (14)GCTam 734.2
தங்களை அழித்துவிடும் எதிரிகளால் தேவனுடைய மக்கள் சூழப்பட்டிருந்தாலும் அவர்களது வேதனையெல்லாம் சத்தியத்திற்காக தாங்கள் அனுபவிக்கும் உபத்திரவத்தைப் பற்றியதல்ல. ஒவ்வொரு பாவமும் வருந்தி அறிக்கைபண்ணப்படவில்லையோ என்றும் இப்படி தங்களிலிருக்கும் சில தவறுகளினால் “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வெளி. 3:10) என்கிற இரட்சகரின் வாக்குத்தத்தம் நிறைவேறுவதை உணரமுடியாமல் போய்விடுமோ என்றும் பயப்படுவார்கள். தாங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டுவிட்டோம் என்கிற நிச்சயம் மட்டும் அவர்களுக்கு இருக்குமானால், மரணத்தைக் குறித்தோ சித்திரவதை செய்யப்படுவதைக் குறித்தோ அவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களுடைய குணத்தில் இருக்கும் ஒரு குறையினால் தகுதியற்றவர்களாக நிரூபிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ தேவனுடைய பரிசுத்த நாமம் களங்கப்பட்டுவிடுமே. (15)GCTam 735.1
எப்பக்கத்திலும் துரோகத் திட்டங்களையே கேள்விப்படுகிறார்கள், மீறுதல்களின் செயல்களையே காண்கிறார்கள். எனவே இந்தப் பெரிய எதிர்ப்பு நிறுத்தப்படவேண்டும் என்றும் துன்மார்க்கரின் அக்கிரமங்கள் முடிவடையவேண்டும் என்றும் ஒரு தீவிர ஆசையும் உண்மையான ஆத்தும ஏக்கமும் அவர்களில் எழும்புகிறது. கலகச்செயல்களைத் தடுத்து நிறுத்தும்படி தேவனிடம் மன்றாடும் அதே வேளையில் இந்தத் தீமையின் அலைகளைத் தடுத்து நிறுத்தவும் பின்னுக்குத் தள்ளவும் தாங்கள் சக்தியற்றவர்களாக இருப்பதற்காக, தங்களையே நொந்துகொள்ளவும் செய்வார்கள். கிறிஸ்துவின் ஊழியத்தில் தங்களது எல்லாத் திறமைகளையும் எல்லா நேரத்திலும் பயன்படுத்தியிருந்தால், பலத்தின்மேல் பலமடைந்திருந்தால், தங்களுக்கு எதிராக செயல்பட சாத்தானின் சேனைகளுக்கு கொஞ்ச பலமே இருந்திருக்கும் என்று உணருவார்கள். (16)GCTam 735.2
அநேக கடந்தகால பாவங்களக்காக மனம்வருந்தி மன்னிப்புக் கேட்டதைச் சுட்டிக்காட்டி, “அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்” (ஏசா. 27:5) என்கிற இரட்சகரின் வாக்குத்தத்தத்திற்காக மன்றாடி தேவனுக்கு முன்பாகத் தங்கள் ஆத்துமாவைத் தாழ்த்துவார்கள். தங்களுடைய ஜெபங்கள் உடனே பதிலளிக்கப்படவில்லை என்பதினால் அவர்களது விசுவாசம் குலைந்துபோவதில்லை. மிகமிகக் கடுமையான சஞ்சலத்தாலும் பயத்தாலும் துயரத்தாலும் அவதிப்பட்டபோதிலும் தங்களுடைய விண்ணப்பங்களை அவர்கள் நிறுத்தமாட்டார்கள். யாக்கோபு தூதனைப் பிடித்துக்கொண்டதைப் போலவே இவர்களும் தேவனுடைய பலத்தைப் பிடித்துக்கொள்ளுவார்கள். அவர்களது ஆத்தும மொழியெல்லாம்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்பதாகவே இருக்கும். (17)GCTam 735.3
தனது சகோதரனின் சேஷ்டபுத்திரபாகத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட பாவத்தைக் குறித்து ஏற்கனவே யாக்கோபு மனம் வருந்தாமல் இருந்திருந்தால் தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு இரக்கமாக அவனது உயிரைப் பாதுகாத்திருக்கமாட்டார். அதைப்போலவே, அறிக்கைபண்ணப்படாத பாவங்கள் இக்கட்டுக் காலத்தில் தேவஜனங்களிடம் காணப்படுமானால், பயத்தாலும் சஞ்சலத்தாலும் வாதிக்கப்படுகின்றபோது அவர்கள் மடங்கடிக்கப்பட்டு, விரக்தி அவர்களுடைய விசுவாசத்தை துண்டித்துவிட, விடுதலைக்காக தேவனிடத்தில் மன்றாடும் தைரியத்தை கொண்டிருக்கமாட்டார்கள். தங்களுடைய தகுதியின்மையைக் குறித்த ஆழ்ந்த உணர்வு ஒருபக்கம் இருப்பினும் வெளியே கொண்டுவருவதற்கான மறைத்து வைக்கப்பட்ட பாவங்கள் அவர்களிடம் இருக்காது. அவர்கள் பாவங்கள் முன்னதாகவே நியாயத்தீர்ப்புக்குச் சென்று நீக்கிப்போடப்பட்டன. அவைகளை அவர்கள் நினைவுக்கும் கொண்டுவர இயலாது. (18)GCTam 736.1
வாழ்க்கையின் சிறுசிறு விஷயங்களில் தங்களின் நேர்மையின்மையை தேவன் கண்டுகொள்ளமாட்டார் என்று நம்பும்படி சாத்தான் அநேகரை நடத்திக்கொண்டிருக்கிறான். ஆனால் தேவன் எக்காரணத்திலும் தீமையை அங்கிகரிக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ மாட்டார் என்பதை யாக்கோபோடு நடந்துகொண்டதின் வழியாக அவர் காண்பிக்கிறார். தங்களிடமுள்ள பாவங்களை காரணப்படுத்தவும் மறைக்கவும் முயன்று அறிக்கையிடப்பட்டு மன்னிக்கப்படாத பாவமாக அவைகளைப் பரலோகப் புத்தகத்தில் வைத்திருக்கிறவர்கள் சாத்தானால் மேற்கொள்ளப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு உன்னதமான தொழில் செய்திருந்தார்களோ எவ்வளவு மதிப்பான பதவியில் இருந்தார்களோ தேவனுடைய பார்வையில் அவர்களது காரியம் அவ்வளவு மோசமானதாக இருக்கும். சாத்தான் அவர்கள் மேல் பெறும் வெற்றியும் அவ்வளவு நிச்சயமாக இருக்கும். கர்த்தரின் நாளுக்கென்று செய்யவேண்டிய ஆயத்தத்தை தாமதிக்கிறவர்கள் உபத்திரவ காலத்திலோ அல்லது அதற்குப் பிந்தைய ஒரு காலத்திலோ அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படிப்பட்ட அனைத்து மக்களின் நிலையும் நம்பிக்கையற்றதேயாகும்.(19)GCTam 736.2
இந்த இறுதியான பயங்கரமான போராட்டத்திற்கு ஆயத்தமின்றி வந்திருக்கிற கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் துன்மார்க்கர் அவர்களுடைய துன்பத்தைப் பார்த்து பேருவகையடைய தங்களுடைய விரக்தியில் கொடிய வேதனை நிறைந்த வார்த்தைகளால் தங்களது பாவத்தை அறிக்கைசெய்வார்கள். ஏசாவும் யூதாசும் செய்த பாவ அறிக்கைகளைப்போன்றவையே இவர்களுடைய பாவ அறிக்கைகளும். அவர்கள் தாங்கள்செய்த பாவத்திற்காக அல்ல மீறுதலின் விளைவைப் பார்த்துப் புலம்புகிறார்கள். தீமைக்காகத் துக்கப்படவும் வெறுக்கவும் இல்லை. தண்டனையைக் குறித்த பயத்தினால் தாங்கள் பாவங்களை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தண்டனை நீக்கப்படுமானால், அன்று பார்வோன் செய்ததுபோல இவர்களும் பரலோகத்தை எதிர்க்கவே திரும்புவார்கள்.(20)GCTam 737.1
ஏமாற்றப்பட்டு தூண்டப்பட்டு பாவத்திற்குள் விழுந்திருந்தாலும் உண்மையான மனந்திரும்புதலோடு தன்னிடம் வருகின்ற எவரையும் தேவன் புறம்பே தள்ளிவிடுவதில்லை என்பதை யாக்கோபின் சரித்திரம் நிச்சயிக்கிறது. இவர்களை அழித்துப்போடும்படி சாத்தான் முயலும் அதே சமயம் ஆபத்தான வேளையில் அவர்களை ஆறுதல்படுத்தி பாதுகாக்க தேவன் தமது தூதர்களை அனுப்புவார். சாத்தானுடைய தாக்குதல்கள் கடுமையாகவும் தீர்மானமானதாகவும், அவனது வஞ்சகங்கள் பயங்கரமானவையாகவும் இருக்கும். ஆனால் தேவனுடைய கண்கள் அவரது ஜனங்கள் மேலும் அவரது செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்தும் இருக்கின்றன. அவர்களது வேதனை பெரியது. உலையின் தீச்சுவாலைகள் அவர்களைப் பட்சித்து விடுவதைப் போலத் தோன்றுகின்றன. ஆனால் அவர்களைப் சுத்திகரிப்பவர் அவர்களை நெருப்பில் புடமிடப்பட்ட பொன்னாக கொண்டுவருவார். கடுமையான சோதனையின் காலத்தில் தேவனுடைய ஜனங்கள் மேல் இருக்கும் அவருடைய அன்பு, பிரகாசமாகவும் வளமாகவும் இருந்த காலத்தில் அவர்கள்மேல் இருந்ததைப் போலவே வலிமையாகவும் மென்மையாகவும் இருக்கும். கிறிஸ்துவின் சாயல் அவர்களில் பூரணமாக பிரதிபலிக்கப்படும்படி அவர்களுடைய மாம்சிகம் அழியவேண்டும். (21)GCTam 737.2
களைப்பையும் தாமதத்தையும் பசியையும் சகிக்கிற கடுமையாக நெருக்கப்பட்டாலும் விழுந்துபோகாத விசுவாசம் நமக்கு முன்னால் இருக்கிற வருத்தமும் சஞ்சலமுமான இக்கட்டுக்காலத்தில் நமக்குத் தேவைப்படுகிறது. அந்தக் காலத்திற்கு ஆயத்தமாகும்படிக்கே ஒரு கிருபையின் காலம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விடாப்பிடியாகவும் தீர்மான மாகவும் இருந்ததாலேயே யாக்கோபு மேற்கொண்டார். விடாப்பிடியாக ஜெபிக்கிற ஜெபத்தின் வல்லமைக்கு யாக்கோபின் வெற்றி ஒரு சான்று. அவனைப்போலவே தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பிடித்துக் கொள்ளுகிற அனைவரும், அவனைப்போலவே உண்மையாகவும் விடாமுயற்சியோடு இருக்கிற அனைவரும் அவன் வென்றதைப் போலவே வெற்றியடைவார்கள். சுயத்தை மறுக்கவிரும்பாதவர்களும் தேவனுக்கு முன்பாகத் தங்களுக்காக வேதனைப்படமுடியாதவர்களும் அவருடைய ஆசீர்வாதத்திற்காக தொடர்ந்து உண்மையாக ஜெபத்திலே தரித்திராதவர்களும் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். தேவனோடு போராடுவது என்ன என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே! அனைத்து வல்லமையும் செயல்படும்வரை ஆழ்ந்த வாஞ்சையோடு ஆண்டவர் முன்பாக தங்கள் ஆத்துமாக்களை ஊற்றிவிடுகிறவர்கள் மிகச் சிலரே! மன்றாடுகிறவர்மேல் விவரிக்கவே இயலாத சஞ்சலம் அலை அலையாக வரும்போது நசித்துப்போகாத விசுவாசத்தோடு தேவனின் வாக்குத்தத்தங்களைப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் மிகச் சிலரே. (22)GCTam 737.3
தங்களது விசுவாசத்தை இன்றைக்கு நடைமுறைப் படுத்தாதவர்கள், சாத்தானின் வஞ்சகங்களிலும் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களிலும் விழுந்துவிடும் அபாயத்திற்குள்ளாக இருக்கிறார்கள். அப்படியே ஒருவேளை நிலைநின்றாலுங்கூட உபத்திரவ காலத்தில் அதிக ஆழமான விரக்தியிலும் வேதனையிலும் அமிழ்ந்துவிடுவார்கள். காரணம்...? தேவனை நம்பியிருப்பதை ஒருபோதும் அவர்கள் பழக்கப்படுதிக்கொள்ளவில்லை. புறக்கணித்த விசுவாசப் பாடங்களை, தைரியமில்லாத சூழ்நிலைகளின் பயங்கரமான அழுத்தத்தில் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவர்.(23)GCTam 738.1
தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிரூபித்துப்பார்ப்பதன்மூலம் இப்போது அவரை அறிந்துகொள்ளவேண்டும். உண்மையாகவும் உள்ளார்ந்த உணர்வோடும் ஏறெடுக்கப்படும் ஒவ்வொரு ஜெபத்தையும் தூதர்கள் குறித்து வைக்கிறார்கள். தேவனோடுள்ள தொடர்பை தவிர்ப்பதற்குப் பதிலாக சுயத்தை திருப்திப்படுத்துவதைப் தவிர்க்கவேண்டும். தேவனுடைய அனுமதியோடு அனுபவிக்கும் கொடிய வறுமையும் கடுந்தியாகமும், அதின்றி கிடைக்கும் செல்வம், மதிப்பு, சுகம், நட்பைக்காட்டிலும் மேலானவைகள். ஜெபிப்பதற்கு நேரம் செலவிடவேண்டும். உலக ஆசைகளால் கவரப்படும்படி நமது மனங்களை அனுமதித்தால், நம்முடைய விக்கிரகங்களாகிய பொன்னையும் வீடுகளையும் செழிப்பான நிலங்களையும் நம்மிடமிருந்து விலக்கினால் ஒருவேளை தேவன் நமக்கு நேரம் கொடுப்பார்.(24)GCTam 738.2
தேவனுடைய ஆசீர்வதித்தை கேட்கமுடியாத எந்த பாதையிலும் நுழைவதற்கு மறுப்பதின் வாயிலாக, இளைஞர்கள் பாவம்செய்யும் உலகத்திற்கான கடைசி எச்சரிப்பின் தூதைக் கொண்டுசெல்லும் ஊழியர்கள், குளிர்ந்துபோன கருத்தில்லாத சோம்பலான விதத்திலல்லாது, ஊக்கமாக விசுவாசத்தோடு தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக யாக்கோபைப்போல ஜெபித்தால் “தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர்தப்பிப்பிழைத்தேன்” (ஆதி. 32:30) என்று சொல்லுவதற்கேதுவான அநேக இடங்களைக் காண்பார்கள். தேவனோடும் மனுஷரோடும் போராடி மேற்கொள்ளும் வல்லமையுள்ள இளவரசர்களாக பரலோகத்தால் மதிக்கப்படுவார்கள்.(25)GCTam 738.3
இதுவரைக்கும் இருந்திராத இக்கட்டுக்காலம் சீக்கிரமே நம்மேல் வரவிருக்கிறது. அதை எதிர்நோக்குவதற்கு இப்போது நாம் பெற்றிராத பெறுவதற்கு அநேகர் அசதியாயிருக்கிற ஒரு அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. பொதுவாக உண்மையிலேயே துன்பத்தை அனுபவிப்பதைவிட அதை எதிர்பார்க்கிற எதிர்பார்ப்பு அதிகத் துன்பமாக இருக்கும். ஆனால் நமக்கு முன் இருக்கிற இக்கட்டு இதைப் போன்றதல்ல. எவ்வளவு தெளிவான விளக்கமும் அதன் கடுமையின் பரிமாணத்தைத் தொட முடியாது. இந்த சோதனைக் காலத்தில் ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கு முன்பு தமக்காக நிற்க வேண்டும். “நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்” எசே. 14:20. (26)GCTam 739.1
நமது பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமக்காகப் பாவநிவாரணம் செய்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில்தானே நாம் கிறிஸ்துவிற்குள் பரிபூரணமாகுவதற்கேற்றவைகளைத் தேடவேண்டும். ஒரு நினைப்பினால்கூட சோதனையின் வல்லமைக்கு நமது இரட்சகரைக் கொண்டுசெல்ல இயலவில்லை. மனித இருதயத்திலே காலூன்றுவதற்கான சில காரியங்களை சாத்தான் காண்கிறான். அவனுடைய சோதனைகள் தனது வல்லமையை ஊன்றக்கூடிய சில பாவ ஆசைகள் போற்றப்படுகின்றன. ஆனால் கிறிஸ்து தம்மைக் குறித்து: “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (யோவான் 14:30) என்றார். சாத்தானுக்கு வெற்றிதர உதவக்கூடிய ஒன்றையும் தேவகுமாரனிடம் அவனால் காணமுடியவில்லை. அவர் தமது பிதாவின் பிரமாணங்களைக் கைக்கொண்டிருந்தார். சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு பாவமும் அவரிடம் இருக்கவில்லை. இக்கட்டுக் காலத்தில் நிற்பவர்கள் இந்த நிலையில் காணப்படவேண்டும். (27)GCTam 739.2
கிறிஸ்துவின் பாவநிவாரண இரத்தத்தின்மேலுள்ள விசுவாசத்தினால், இந்த வாழ்க்கையில்தானே நம்மைவிட்டு பாவத்தை பிரிக்கவேண்டும். மேன்மை மிகுந்த நமது இரட்சகர் நம்மை அவரோடும், நம்முடைய பலவீனத்தை அவருடைய பலத்தோடும், நம்முடைய அறியாமையை அவரது ஞானத்தோடும், நம்முடைய தகுதியின்மையை அவருடைய தகுதியோடும் இணைத்துக்கொள்ள அழைக்கிறார். அவர் நமக்கு ஏற்படுத்தித் தருகிற சூழ்நிலை, அவருடைய சாந்தத்தையும் தாழ்மையையும் நாம் கற்றுக்கொள்ளுகிற பள்ளிக்கூடமாகும். நாம் தெரிந்துகொள்ளுகிற லகுவான இன்பமான பாதையை அல்ல, வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நம் ஆண்டவர் எப்போதும் நம்முன் வைக்கிறார். நமது குணங்களை தேவசாயலாக மாற்றும்படி பரலோகம் அனுப்பும் முகவர்களோடு ஒத்துழைப்பது நமது கையில் இருக்கிறது. தங்கள் ஆத்துமாக்களை மிகப்பெரிய ஆபத்துக்குட்படுத்தாமல் யாரும் இந்த வேலையை புறக்கணிக்கவோ தள்ளிவைக்கவோ முடியாது. (28)GCTam 740.1
அப்போஸ்தலனாகிய யோவான் தான் கண்ட தரிசனத்திலே “ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” (வெளி. 12:12) என்று சொல்லிய பலத்த சத்தத்தைக் கேட்டான். பரலோகத்திலிருந்து திகிலான சத்தத்தை வரவழைக்கக்கூடிய அளவு இந்தக்காட்சிகள் மிகப் பயங்கரமானவை. தனது முடிவிற்கான காலம் சமூபமாகிக்கொண்டிருப்பதை அறிந்து, சாத்தானின் கோபம் அதிகமாகிறது. அவன் செய்கிற வஞ்சகங்களும் அழிவுகளும் இக்கட்டுக் காலத்தில் உச்சநிலையை அடையும். (29)GCTam 740.2
அற்புதங்களைச் செய்யவல்ல பிசாசுகளின் சக்திக்கு அடையாளமாக இயற்கையாக உண்டாகமுடியாத பயங்கரமான காட்சிகள் சீக்கிரமே வானத்தில் தோன்றும். பிசாசுகளின் ஆவிகள் பூமியின் இராஜாக்களிடமும் உலக மக்களனைவரிடமும் சென்று, வஞ்சகத்தால் அவர்களைக் கட்டி, பரலோக ராஜ்யத்திற்கு எதிராகச் சாத்தான் செய்யும் கடைசிக் கலகத்தில் அவனோடு சேரும்படி அவர்களை வற்புறுத்தும். இவைகளால் ஆளுவோரும் ஆளப்படுவோரும் ஒரே மாதிரியாக ஏமாற்றப்படுவார்கள். தங்களைக் கிறிஸ்துவாகவே சொல்லிக்கொள்ளுகிற நபர்கள் எழும்பி உலக இரட்சகருக்கு மட்டுமே உரிய உரிமையையும் துதியையும் உரிமைபாராட்டுவார்கள். சுகமளிக்கும் ஆச்சரியமான அற்புதங்களைச் செய்து, வேதவாக்கியங்களின் சாட்சிக்கு முரண்பட்ட வெளிப்பாடுகள் பரலோகிலிருந்து தங்களுக்குக் கிடைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளுவார்கள். (30)GCTam 740.3
இந்த ஏமாற்று நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியாக, சாத்தான் தானே கிறிஸ்துவைப்போல வேடமணிந்து வருவான். இரட்சகருடைய வருகையை தங்களுடைய நம்பிக்கையின் முழுமையாக காலங்காலமாக சபை எதிர்பார்த்திருக்கிறது. இப்பொழுது கிறிஸ்துதானே வந்துவிட்டார் என்பதுபோன்று இந்தப் பெரிய ஏமாற்றுக்காரன் காண்பிப்பான். உலகின் வெவ்வேறு பகுதிகளில் கண்களைக் கூசவைக்கும் பிரகாசத்தோடு, கம்பீரத் தோற்றம் உடையவனாக யோவானுக்கு தேவகுமாரனைக் குறித்து வெளிப்படுத்தலில் கொடுக்கப்பட்டிருக்கிற விளக்கத்தின்படி (வெளி. 1:13- 15), மனிதர்களுக்கு நடுவிலே சாத்தான் தன்னை வெளிப்படுத்துவான். அவனைச் சூழ்ந்திருக்கும் மகிமை எதாலும் விஞ்சமுடியாத, இதுவரை மனிதக் கண்கள் கண்டிராததாக இருக்கும். “கிறிஸ்து வந்துவிட்டார்! கிறிஸ்து வந்துவிட்டார்!” என்கிற ஆரவாரத்தொனி காற்றில் எங்கும் தொனிக்கிறது. ஜனங்கள் அவனைப் போற்றி நெடுஞ்சாண்கிடையாக அவன்முன் விழுந்து வணங்குவார்கள். அவன் கிறிஸ்து பூமியில் இருந்த போது தனது சீடர்களை ஆசீர்வதித்ததைப்போலவே தனது கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதிப்பான். அவனது குரல் சாந்தமாகவும் தணிந்ததாகவும் மெல்லிசைபோல் இனிமையாக ஒலிக்கும். மிருதுவான, கருணைமிகுந்த தொனியில் பேசி, இரட்சகர் போதித்த அதே நேர்த்தியான பரலோக சத்தியங்களில் சிலவற்றைப் போதிப்பான். அவன் வியாதிப்பட்ட ஜனங்களைக் குணமாக்குவான். பிறகு கிறிஸ்து அதிகாரத்தோடு பேசியதைப்போலவே பேசி, தான் ஓய்வுநாளை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றிவிட்டதாகக் கூறி, தன்னால் ஆசீர்வதிக்கப்பட்ட நாளை உலக மக்கள் அனைவரும் சிறப்பிக்கும்படி கட்டளையுமிடுவான். ஏழாம்நாளைத்தான் பரிசுத்த நாளாக ஆசரிப்போம் என்று உறுதியாக இருக்கிறவர்கள், வெளிச்சத்தோடும் சத்தியத்தோடும் அனுப்பப்பட்ட தன்னுடைய தூதர்களுக்குச் செவிகொடுக்க மறுத்ததினால் தனது நாமத்தை தூஷிக்கிறார்கள் என்றும் சொல்லுவான். இது வலிமையான அனைத்தையும் அடக்கி ஆளுகிற வஞ்சனை. சீமோனுடைய மாய வித்தையினால் வஞ்சிக்கப்பட்ட சமாரியர்களைப்போல, சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரும் இந்த மாயத்திற்கு செவிகொடுத்து, “தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான்” (அப். 8:10) என்பார்கள். (31)GCTam 741.1
ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஏமாற மாட்டார்கள். இந்த அந்திக்கிறிஸ்துவின் போதனை வேதவாக்கியங்களுக்கு ஒத்ததாக இல்லை. கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட தேவனுடைய கோபாக்கினை எவர்மேல் ஊற்றப்படும் என்று வேதாகமம் அறிவிக்கிறதோ மிருகத்தையும் அதன் சொருபத்தையும் யார் வணங்குகிறார்களோ அவர்கள்மேல் அவன் ஆசீர்வாதம் கூறப்பட்டிருக்கிறது. (32)GCTam 741.2
மேலும் கிறிஸ்து வருகிற அதேவிதமாக வருவதற்கு சாத்தான் அனுமதிக்கப்படவில்லை. இந்த காரியத்தில் இரட்சகர் மக்களை எச்சரித்து, தமது இரண்டாம் வருகையைக்குறித்து தெளிவாக முன்னறிவித்தார். “ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்”- மத்தேயு 24:24-27. (இதைக் குறித்து மேலும் மத்தேயு 24:31 25:31 வெளி 1:7 1 தெச. 4:16,17 ஆகிய வசனங்களிலும் காணலாம்). இந்த வருகையைப்போல நடிக்க வாய்ப்பே இல்லை. இது உலகம் முழுவதிலும் அறியப்பட்டு, அனைவரும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.(33)GCTam 742.1
வேதாகமத்தை தளராது ஊக்கமாகப் படிக்கும் மாணாக்கர்களும், சத்தியத்தின்மேலுள்ள அன்பை ஏற்றுக்கொண்டவர்களும்தான் உலகம் முழுவதையும் சிறைப்பிடிக்கப்போகிற வல்லமையான மாயத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். வேதாகமத்தின் சாட்சியால் மாயக்காரனின் வேடத்தைக் கண்டுபிடிப்பார்கள். அனைவருக்கும் சோதனைக்காலம் வருகிறது. சோதனையின் வழியாக சலிக்கப்படுவதினால் மெய்க்கிறிஸ்தவன் வெளிப்படுவான். உணர்வுகளின் சாட்சிகளால் விழுந்துவிடாதபடிக்கு தேவ ஜனங்கள் அவருடைய வார்த்தையின்மேல் உறுதியாக கட்டப்பட்டிருக்கிறார்களா? அப்படிப்பட்ட இக்கட்டில் அவர்கள் வேதாகமத்தை வேதாகமத்தை மாத்திரமே சார்ந்து இருப்பார்களா? அந்நாளில் நிற்பதற்கேதுவான ஆயத்தத்தை பெற்றுவிடாதபடிக்கு சாத்தான் கூடுமானால் அவர்களை தடுக்கவும் செய்வான். அந்தநாள் திருடனைப்போல அவர்கள்மேல் வரும்படிக்கு அவர்கள் இருதயங்கள் உலகக் கவலைகளினால் பாரமடையும்படி, அவர்கள் வழியை அடைக்கவும், உலக செல்வங்களில் சிக்கவும், பாரமான தளர்ந்துபோகச்செய்கிற பாரங்களை சுமக்கவும்தக்கதாக காரியங்களை அவன் அமைப்பான். (34)GCTam 742.2
கற்பனையை கைக்கொள்ளுகிறவர்களுக்கு எதிராக கிறிஸ்தவ உலகத்தில் வெவ்வேறு அதிகாரிகளால் வெளியிடப்படும் சட்டங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பை விலக்கி, அவர்களை அழிக்க விரும்புகிறவர்களிடம் அவர்களை ஒப்படைக்கும்போது, தேவனுடைய ஜனங்கள் கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் ஓடி சிறுசிறு குழுக்களாக மிகவும் வனாந்தரமான தனிமையான இடங்களில் வாசம் பண்ணுவார்கள். அநேகர் மலைகளின் மறைவிடங்களில் அடைக்கலம் காணுவார்கள். பிட்மண்ட் பள்ளத்தாக்குகளிலே இருந்த கிறிஸ்தவர்களைப்போல, இவர்கள் பூமியின் உயர்ந்த இடங்களைப் புகலிடமாகக்கொண்டு, அந்த கன்மலையின் அரண்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுவார்கள் (ஏசா. 33:16). ஆனால் பல நாடுகளையும் வகுப்புகளையும் சார்ந்த அநேகர் உயர்ந்தோர் தாழ்ந்தோர், பணக்காரர் ஏழை, கருப்பர்—வெள்ளையர் என்கிற பாகுபாடு இல்லாமல், அநீதியாக கொடிய சிறைச்சாலைகளுக்குள் தள்ளப்படுவார்கள். சங்கிலிகளால் கட்டப்பட்டவர்களாகவும், சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாகவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களாகவும் தேவனால் நேசிக்கப்படும் இந்த ஜனங்கள் சோர்வான நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் பட்டினியால் சாகும்படி இருண்ட அருவருப்பான காற்று புகமுடியாத அறைகளுக்குள் தள்ளி அடைக்கப்படுவார்கள். அவர்களுடைய வேதனையின் முனகல்களைக் கேட்பதற்கு எந்த மனித செவியும் இருக்காது. உதவி செய்வதற்கு எந்த மனிதக் கரமும் நீட்டப்பட்டிருக்காது. (35)GCTam 742.3
இந்தச் சோதனையான நேரத்தில் தேவன் தம் ஜனங்களை மறந்துவிடுவாரா? ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்து மக்கள்மேல் நியாயத்தீர்ப்புகள் விழுந்தபோது விசுவாசமான நோவாவை தேவன் மறந்துவிட்டாரா? சமவெளியின் பட்டணங்களை அழிக்கும்படி வானிலிருந்து அக்கினி வந்தபோது லோத்துவை அவர் மறந்துவிட்டாரா? எகிப்து தேசத்திலே விக்கிரக ஆராதனைக்காரர்களால் சூழப்பட்டிருந்த யோசேப்பை அவர் மறந்துவிட்டாரா? பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு நேர்ந்தகதி உனக்கும் நேரும் என்று யோசபேல் மிரட்டியபோது எலியாவை அவர் மறந்துவிட்டாரா? சிறைவீட்டிற்குள் இருந்த இருண்ட உளையான கிணற்றுக்குள் இறக்கிவிடப்பட்டிருந்த எரேமியாவை அவர் மறந்துவிட்டாரா? சூளையின் நடுவிலிருந்த மூன்று வாலிபரை மறந்துவிட்டாரா அல்லது சிங்கத்தின் கெபிக்குள் போடப்பட்டிருந்த தானியேலைத்தான் அவர் மறந்துவிட்டாரா? (36)GCTam 743.1
“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” ஏசாயா 49: 14-16. “உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” (சகரியா 2:8) என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். (37)GCTam 743.2
எதிரிகள் அவர்களை சிறைக்குள் தள்ளி அடைத்தாலும், அவர்களது ஆத்துமாக்களுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பை சிறையின் சுவர்களால் தடுக்கமுடியாது. அவர்களின் பலவீனங்களை எல்லாம் பார்க்கிறவர், எல்லா சோதனைகளுடனும் அறிமுகம்பெற்றவர் பூலோக வல்லமைகள் எல்லாவற்றையும்விட மேலானவர். வெளிச்சத்தையும் சமாதானத்தையும் எடுத்துக்கொண்டு தனிமையான சிறை அறைகளுக்கு பரலோகத்திலிருந்து தூதர்கள் வருவார்கள். சிறை அவர்களுக்கு அரண்மனையைப்போலாகிவிடும். ஏனெனில் விசுவாசத்தில் ஐசுவரியவான்கள் அங்கே வாசம்செய்கிறார்கள். பிலிப்பியச் சிறையிலே நடு இரவிலே பவுலும் சீலாவும் துதிபாடி ஜெபித்தபோது நடந்ததைப்போலவே இருண்ட சுவர்கள் பரலோக ஒளியினால் வெளிச்சமடையும். (38)GCTam 744.1
தேவனுடைய ஜனங்களை நெருக்கவும் அழிக்கவும் தேடினவர்கள்மீது தேவனுடையநியாயத்தீர்ப்புகள்வரும். அக்கிரமக்காரர்கள்மீதுள்ள அவருடைய நீடிய பொறுமை மனிதர்களை மீறுதல் செய்ய துணிகரமாக்கியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய தண்டனை மிகத் தாமதமாக வருவதால் நிச்சயமில்லாததாகவோ அல்லது பயங்கரமற்றதாகவோ போய்விடாது. வராக இருக்கிறர். அவர்கள் மனந்திரும்பவேண்டும் என்று ஆனால் அவர்களோ தேவன் நம்மை காணவில்லை என்று தைரியங்கொண்டு. மேலும் அதிகமதிகமாக அக்கிரமம்செய்கிறார்கள். ஆகவே அவர்கள்மீது தண்டனை வரவே செய்யும். எவ்வளவு தாமதமாக தண்டனை வருகிறதோ, அவ்வளவு கடுமையாக இருக்கும். “கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்”-ஏசா. 28:21. இரக்கமுள்ள நமது ஆண்டவருக்கு தண்டிக்கிற செயல் அபூர்வமான செயல்தான். “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” (எசே. 33:11) என்கிறார். “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்” யாத். 34:6,7. “. கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்”-நாகூம் 1:3. மிதிக்கப்பட்ட அவரது கற்பனையின் அதிகாரத்தை நீதியோடுகூடிய பயங்கரமான காரியங்களால் நிரூபிப்பார். மீறினவர்கள்மேல் வரக் காத்திருக்கும் கோரமான பழிவாங்குதலை நீதிசெலுத்தும் ஆண்டவரின் தயக்கத்தை வைத்து நிதானிக்கலாம். அநேக காலமாக அவர் பொறுத்திருக்கிற ஜனம், அவரது கணக்கின்படி தனது அக்கிரமத்தை எட்டும்வரை அவர் தண்டிக்காமல் விட்டிருக்கிற ஜனம் கடைசியாக அவருடைய கிருபை கலக்காமல் வார்க்கப்பட்ட உக்கிரத்தைக் குடிக்கும்.(39)GCTam 744.2
ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்து தனது பரிந்து பேசும் ஊழியத்தை முடிக்கும்போது, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, அதின் அடையாளத்தைத் தரித்துக்கொள்ளுகிறவர்மேல், இரக்கம் கலவாத உக்கிரமான கோபம் ஊற்றப்படும் (வெளி. 14:9,10). இஸ்ரவேல் ஜனத்தை விடுதலை செய்யும் முன்னதாக எகிப்தின்மேல் ஊற்றப்பட்ட வாதைகள், தேவனுடைய ஜனங்கள் கடைசியாக விடுதலை பெறுவதற்குச் சற்று முன்னதாக உலகத்தின்மேல் விழவிருக்கும் மிகப் பயங்கரமான விரிவான நியாயத்தீர்ப்புகளுக்கு ஒத்த கடுமையானவையே. இப்பயங்கரமான சவுக்கடிகளைப்பற்றி விவரிக்கும் வெளிப்படுத்தல்காரர், “மிருகத்தின் முத்திரையைத்தரித்தவர்களும் அதின்சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று. சமுத்திரத்திலே ... அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின. ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின” (வெளி. 16:2—4) என்கிறார். இப்படிப்பட்ட வாதைகள் கடுமையாக இருப்பதைப்போலவே தேவனுடைய நீதி முழுமையாக நிரூபிக்கப்படுகிறது. தேவதூதன்: “இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள்” (வெளி. 16:5—6) என்று அறிவிக்கிறான். தேவனுடைய ஜனங்களுக்குக் கொலைத்தண்டனை விதித்ததன்மூலம் அவர்கள் தங்களுடைய கைகளாலேயே தேவனுடைய ஜனங்களின் இரத்தத்தைத் சிந்தியது போன்ற குற்றத்திற்கு உள்ளாகிறார்கள். தீர்க்கதரிசிகளைக் கொலை செய்த நபர்கள் கொண்டிருந்த அதே ஆவியோடு அதே கிரியைகளை செய்ய யூதர்கள் தேடினபடியால், அவர்களை ஆபேலின் நாட்கள் முதல் அனைத்துப் பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் சிந்தினவர்களென்று கிறிஸ்து குற்றஞ்சாட்டினார். (40)GCTam 745.1
தொடர்ந்தவாதையில் “தீயினால்மனுஷரைத்தகிக்கும்படி” சூரியனுக்கு “அதிகாரங் கொடுக்கப்பட்டது.” “மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே’ தகிக்கப்பட்டனர் (வெளி. 16:8,9). இந்த வாதையின்போது பூமியின் நிலையை ” பூமி துக்கங்கொண்டாடுகிறது; ... வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று. ... வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுப்புத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று. விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின. மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது” (யோவேல் 1:10-12 17—20) என்றும் “அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (ஆமோஸ் 8:3) என்றும் தீர்க்கதரிசனங்கள் விவரிக்கின்றன. (41)GCTam 746.1
இந்த வாதைகள் உலகளாவிய வாதைகளல்ல. இல்லாவிட்டால் பூமியின் மனித இனமே பூண்டற்றுப்போகும். என்றாலும் மனிதர்களுக்கு இதுகாலம்வரை அறிந்திருந்த மற்றெந்த வாதையையும்விட மகா பயங்கரமானவைகளாக இருக்கும். கிருபையின் காலமுடிவிற்கு முன் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் எல்லாவற்றிலுமே தேவனின் இரக்கம் கலந்திருந்தது. முழுமையான தண்டனை பெறுவதிலிருந்து பரிந்துபேசும் கிறிஸ்துவின் இரத்தம் பாவிகளை மறைத்துக்கொண்டது. ஆனால் இந்த கடைசி நியாயத்தீர்ப்பில் இரக்கம் கலவாத கோபம் ஊற்றப்படுகிறது. (42)GCTam 746.2
அந்நாளில் இதுவரை இழிவாகக் கருதிய தேவனுடைய கிருபையின் மறைவிற்காக திரளானவர்கள் ஏங்குவார்கள். “இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்” ஆமோஸ் 8:11,12. (43)GCTam 746.3
தேவனுடைய ஜனங்களுக்கும் வேதனைகள் இல்லாமலிராது. ஆனால், உபத்திரவமும் துயரமும் அனுபவிக்கும் அவ்வேளையிலும் உணவு இல்லாமல் பசியும் பட்டினியும் அனுபவிக்கும் அவ்வேளையிலும், அவர்கள் அழிந்துபோகும்படி விடப்படமாட்டார்கள். எலியாவைப் போஷித்த அந்த தேவன், சுயத்தைத் தியாகம் செய்த தம் பிள்ளைகளில் எவரையும் தாண்டிப்போகமாட்டார். அவர்களுடைய தலையிலுள்ள மயிர்களை எண்ணியிருப்பவர் அவர்களை விசாரிப்பார். பஞ்ச காலத்தில் அவர்கள் திருப்தியடைவார்கள். துன்மார்க்கர் பசியினாலும் வியாதியினாலும் செத்துக்கொண்டிருக்கும்போது, தூதர்கள் நீதிமான்களைச் சூழ இருந்து அவர்களது தேவைகளைச் சந்திப்பார்கள். நீதியாய் நடக்கிறவனுக்கு “அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்”(ஏசா. 33:16) “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசா. 41:17) என்று தேவன் வாக்குத்தத்தம் கொடுக்கிறார். (44)GCTam 746.4
“அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்”-ஆபகூக் 3:17-18.()GCTam 747.1
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:5-7) “அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங். 91:3-10) என்று வேதாகமம் கூறுகிறது. (46)GCTam 747.2
ஆனாலும் மனிதனின் பார்வையில் தேவனுடைய ஜனங்கள் தங்களுக்கு முன்னிருந்த இரத்தசாட்சிகளைப்போலவே தங்களுடைய சாட்சியை விரைவாக இரத்தத்தினால் முத்திரிக்கப்போவதுபோலத் தோன்றும். எதிரிகளின் கையினால் விழும்படி தேவன் அவர்களை விட்டுவிட்டார் என்று அவர்களேகூட பயப்படுவார்கள். இது ஒரு பயங்கரமான வேதனை நிறைந்த நேரம். விடுதலைக்காக இரவும் பகலும் அவர்கள் தேவனை நோக்கிக் கதறுவார்கள். துன்மார்கள் பேருவகையோடு, இப்பொழுது உங்கள் விசுவாசம் எங்கே? நீங்கள் உண்மையிலேயே அவருடைய பிள்ளைகளாக இருந்தால் அவர் ஏன் எங்கள் கைகளிலிருந்து உங்களை விடுவிக்கவில்லை? என்கிற ஏளனச் சத்தம் கேட்கப்படும். அந்தச் சமயத்தில் காத்திருப்பவர்கள், இயேசு கல்வாரிச் சிலுவையிலே மடிந்துகொண்டிருந்ததையும் அவரைச் சுற்றிலும் ஆசாரியர்களும் அதிகாரிகளும் நின்று உரத்துக் கேலிபேசி “மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்” (மத்தேயு 27:42) என்று கூறியதை நினைவுகூருவார்கள். யாக்கோபைப்போல அனைவரும் தேவனோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தின் வியாகுலங்களை அவர்களுடைய முகங்கள் வெளிக்காட்டும். அவர்கள் முகங்கள் வெளிரிப்போயிருக்கின்றன. என்றாலும் தங்களது உள்ளார்ந்த வேண்டுதலை நிறுத்தமாட்டார்கள். (47)GCTam 748.1
பரலோகப் பார்வையில் மனிதர்கள் பார்த்தார்களானால் கிறிஸ்துவின் பொறுமையின் வார்த்தையைக் காத்துக்கொண்டிருந்தவர்களைச் சுற்றி வலிமை வாய்ந்த தூதர்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருந்திருப்பார்கள். உருக்கமான இரக்கத்துடன் அவர்களுடைய வேதனையை தூதர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆபத்திலிருந்து அவர்களை விடுவித்துக்கொண்டு போவதற்கான தங்களுடைய அதிபதியின் கட்டளைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் சற்றுநேரம் காத்திருக்கவேண்டும். தேவ ஜனங்கள் குடிக்கவேண்டிய பாத்திரத்தில் குடித்து, பெறவேண்டிய ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். மிகவும் வேதனையான அதே தாமதம்தான் அவர்களுடைய விண்ணப்பத்திற்கான சிறந்த பதில். தேவன் கிரியைசெய்யும்படி விசுவாசத்தோடு காத்திருக்க முயற்சிக்கும்போது, தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறிதே பயின்றிருந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பொறுமையையும் பயில நடத்தப்படுகிறார்கள். என்றாலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாக அந்நாட்கள் குறைக்கப்படும். “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்”-லூக்கா 18:7,8. மனிதர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் விரைவாக முடிவு வரும். களஞ்சியத்தில் சேர்க்கப்படும்படி கோதுமை கதிர்களாகக் கட்டப்படும். களைகளோ அழிக்கும் அக்கினிக்காக கட்டப்படும். (48)GCTam 748.2
பரலோகக் காவலாளிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாயிருந்து தொடர்ந்து காவல்காப்பார்கள். கற்பகைளைக் கைக்கொள்ளுகிறவர்களை கொலைசெய்யும்படியான நேரத்தை ஒரு பொதுவான சட்டம் குறித்திருந்தாலும், அதை எதிர்பார்த்து, அதற்கு முன்பாகவே சிலருடைய உயிரை எடுக்கும்படியாக எதிரிகள் முயற்சிப்பார்கள். ஆனால் உண்மையான இந்த ஆத்துமாக்களைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கிற வல்லமையான பாதுகாப்பாளர்களை யாராலும் தாண்டமுடியாது. நகரங்களையும் கிராமங்களையும்விட்டு ஓடும்போது சிலர் எதிரிகளால் தாக்கப்படுவர். ஆனால் அவர்களுக்கு எதிராக உயர்த்தப்பட்ட பட்டயங்கள் ஒரு வைக்கோலைப்போல பெலமின்றி உடைந்து கீழே விழும். மற்றவர்கள் போர்வீரர்களின் தோற்றத்திலிருக்கும் தூதர்களால் பாதுகாக்கப்படுவர்.(49)GCTam 749.1
யுகங்கள் நெடுகிலும் தமது ஜனங்களுக்கு உதவவும் விடுவிக்கவும் தூதர்கள் வழியாக தேவன் செயலாற்றியிருக்கிறார். பரலோகவாசிகள் மனிதர்களது காரியங்களில் குறிப்பிடத்தக்க பங்குவகித்திருக்கிறார்கள். மின்னலைப்போலப் பிரகாசித்த ஆடை தரித்தவர்களாக காணப்பட்டிருக்கி றார்கள். வழிப்போக்கர்களின் உடை தரித்தவர்களாக மனிதர்களுக்குத் தோன்றியிருக்கிறார்கள். தேவமனிதர்களுக்கு தேவதூதர்கள் மனித வடிவில் காணப்பட்டிருக்கிறார்கள். களைப்படைந்தவர்களைப்போல மதியவேளையில் கர்வாலி மரங்களின்கீழ் ஓய்வெடுத்திருக்கிறார்கள். மனிதர்களின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இரவில் தடுமாறித் தத்தளித்த பயணிகளுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த கைகளினாலே பலிபீடங்களில் நெருப்பு மூட்டியிருக்கிறார்கள். சிறைச்சாலைகளின் கதவுகளைத் திறந்து தேவ ஊழியர்களை விடுதலை செய்திருக்கிறார்கள். பரலோகக் கவசம் அணிந்தவர்களாக இரட்சகரின் கல்லறையிலிருந்த கல்லை உருட்டித் தள்ளுவதற்காக வந்திருக்கிறார்கள். (50)GCTam 749.2
மனித உருவங்களில் நீதிமான்களின் சபைகளில் அடிக்கடி தூதர்கள் பங்கேற்கிறார்கள். சோதோமுக்குப்போனதைப்போல, அவர்கள் செய்கைகளை குறிப்பெடுக்கும்படிக்கும், அவர்கள் தேவனுடைய பொறுமையின் எல்லையை தாண்டிவிட்டார்களா என்பதைத் தீர்மானிக்கும்படிக்கும் அக்கிரமக்காரரின் சபைகளிலும் வருகிறார்கள். தேவன் இரக்கத்தில் பிரியப்படுகிறார். அவருக்கு உண்மையாக ஊழியம் செய்யும் ஒரு சிலர் நிமித்தமாக அழிவுகளைத் தடுத்து, திரளானவர்களின் சமாதானத்தை நீட்டிக்கச் செய்கிறார். தாங்கள் பரியாசம்பண்ணி ஒடுக்க விரும்புகிற உண்மையான சிலருக்கு தங்கள் வாழ்க்கையையே கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்கள் சிறிதளவே உணருகிறார்கள். (51)GCTam 750.1
இவ்வுலகின் ஆட்சியாளர்கள் அறியாதிருந்தாலும் அவர்களுடைய ஆலோசனை கூட்டங்களில் தேவதூதர்கள் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். மனிதர்களின் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. மனிதக் காதுகள் அவர்களது விண்ணப்பங்களை கேட்டிருக்கின்றன. மனித உதடுகள் அவர்களுடைய யோசனைகளை எதிர்த்து ஆலோசனைகளை பரிசாசம் செய்திருக்கின்றன. மனிதக் கைகள் அவர்களை அடித்து அவமானப்படுத்தியிருக்கின்றன. ஆலோசனைக் கூடங்களிலும் நியாயஸ்தலங்களிலும் இப்பரலோக தூதர்கள் மனித சரித்திரத்தில் தங்களுக்குள்ள நெருக்கமான அறிமுகத்தை காண்பித்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக மிகத் தகுதிவாய்ந்த பேச்சுத் திறமையான பாதுகாவலர்களைவிட மேன்மையாக வாதாடினவர்களாக தங்களை நிரூபித்திருக்கிறார்கள். தேவனுடைய வேலையைத் தாமதப்படுத்தி அவருடைய ஜனங்களுக்கு மிகுந்த வேதனையைக் கொண்டுவந்திருக்கும் தீமைகளை தடுத்து நோக்கங்களை தோற்கடித்திருக்கிறார்கள். ஆபத்தும் துயரமுமான வேளைகளில் “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர் களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” சங். 34:7. (52)GCTam 750.2
தங்களது ராஜாவின் வருகையின் அடையாளங்களைப் பேராவலோடு உற்றுப்பார்த்துக்கொண்டு, தேவனுடைய ஜனங்கள் காத்திருக்கிறார்கள். இப்பூமியின் ஜாமக்காரர்களை நோக்கி: “ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது” (ஏசாயா 21:11-12) என்கிறான். மலைகளுக்கு மேலாக மேகங்களில் வெளிச்சம் மின்னுகிறது. சீக்கிரமே தேவனுடைய மகிமை வெளிப்படப்போகிறது. நீதியின் சூரியன் பிரகாசிக்கவிருக்கிறார். விடியற்காலையும் இரவும் நீதிமான்களுக்கு முடிவில்லாத பகலும் துன்மார்க்கருக்கு நித்திய இரவும் சமீபத்திலிருக்கின்றன. (53)GCTam 750.3
போராடிக்கொண்டிருப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவனிடம் வைத்துக்கொண்டே இருக்கும்போது பார்க்கக் கூடாதவைகளிலிருந்து அவர்களைப் பிரித்திருந்த திரை கிட்டத்தட்ட முற்றிலும் விலக்கப்படுகிறது. நித்தியப் பகலின் விடியற்காலை வெளிச்சத்தில் பரலோகம் பிரகாசிக்க தூதர்களின் பாடல்களின் இனிமையில் “உங்கள் விசுவாசத்தில் உண்மையாக நில்லுங்கள். உதவி வந்துகொண்டிருக்கிறது” என்கிற வார்த்தைகள் அவர்கள் காதுகளில் ஒலிக்கின்றன. வல்லவரும் வெற்றி வீரருமாகிய கிறிஸ்து களைத்துச் சோர்ந்துபோயிருக்கும் தமது வீரர்களுக்கு மங்காத மகிமையான கிரீடத்தை உயர்த்திக் காண்பிக்கிறார். பாதி திறந்திருக்கும் வாசலிலிருந்து: “இதோ நான் உங்களோடு இருக்கிறேன். பயப்படாதேயுங்கள். உங்கள் துக்கங்களோடெல்லாம் அறிமுகமாகியிருக்கிறேன். உங்களது துயரங்களை நான் சுமந்திருக்கிறேன். பரீட்சிக்கப்படாத எதிரிகளோடு நீங்கள் யுத்தம்பண்ணவில்லை. உங்கள் சார்பாக நான் யுத்தம்பண்ணி யிருக்கிறேன். என் நாமத்தில் நீங்கள் முற்றிலும் ஜெயங் கொள்ளுகிறவர்களயிருக்கிறீர்கள்” என்று அவருடைய சத்தம் வருகிறது. (54)GCTam 751.1
நமக்கு தேவைப்படுகிற நேரத்தில் அருமை இரட்சகர் உதவி அனுப்பித் தருவார். பரலோகத்திற்கான பாதை அவரது அடிச்சுவடுகளால் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய பாதங்களை காயப்படுத்தும் ஒவ்வொரு முள்ளும் அவருடைய பாதத்தை காயப்படுத்தியிருக்கின்றன. சுமக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நம்முடைய ஒவ்வொரு சிலுவையையும் அவர் நமக்கு முன்பாகவே சுமந்திருக்கிறார். ஆத்துமாவை சமாதானத்திற்கு ஆயத்தப்படுத்தும்படிக்கே ஆண்டவர் போராட்டங்களை அனுமதிக்கிறார். இக்கட்டுக்காலம் தேவனுடைய ஜனங்களுக்கு பயப்படத்தக்க சோதனை நேரம்தான். ஆனால் உண்மையான விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் தலைகளை உயர்த்தி வாக்குத்தத்தத்தின் வில் அவரைச் சூழ்ந்து இருப்பதை விசுவாசத்தினாலே காண்கிற நேரம்.(55)GCTam 751.2
“அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே? சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை. உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே, அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய்ச் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர். நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்'—ஏசா. 51:11-16. (56)GCTam 751.3
“ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறி கொண்டவளே, நீ கேள். கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. உன்னை நோக்கி: நாங்கள் கடந்து போகும்படிக்குக் குனியென்றுசொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்”-ஏசா. 51:21—23. (57)GCTam 752.1
தேவனுடைய கண்கள் யுகங்கள் நெடுகிலும் பார்த்தபோது, அவருடைய ஜனங்கள் சந்திக்கவேண்டியிருந்த இக்கட்டின் மேல் அவர்களுக்கு எதிராக பூலோக வல்லமைகள் அணிவகுத்து நிற்கும் இக்கட்டின் மேல் பதிந்தது. சிறைப்பிடிக்கப்பட்டு கடத்தப்பட்டவர்களைப்போல பட்டினியினாலும் கொடுமையினாலும் அவர்கள் மரணபயத்தில் இருப்பார்கள். ஆனால் இஸ்ரவேலுக்கு முன்பாக செங்கடலைப் பிளந்த பரிசுத்தமானவர் தமது மகா வல்லமையை வெளிக்காட்டி அவர்களுடைய சிறையிருப்பை மாற்றிப்போடுவார். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்”- மல். 3:17. கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளின் இரத்தம் இப்போது சிந்தப்பட்டால், அது தேவனுக்கு அறுவடையை ஆயத்தம்பண்ணும்படி விதைக்கப்பட்ட இரத்தசாட்சிகளின் இரத்தத்தைப்போலிராது. அவர்களுடைய உறுதி, மற்றவர்களுக்கு சத்தியத்தை உணர்த்தும் சாட்சியாக இருக்காது. ஏனெனில் மூர்க்கமான இருதயம் மீண்டும் திரும்பி வராத அளவிற்கு கிருபையின் அலைகளை திருப்பி அனுப்பி விட்டது. நீதிமான்கள் இப்போது சத்துருக்களின் கைகளில் இரையாக விழும்படி விட்டுவிடப்பட்டால் அது அந்தகார பிரபுவிற்கு ஒரு வெற்றியாக இருக்கும். “தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்” (சங். 27:5) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்” (ஏசா. 26:20, 21) என்று கிறிஸ்து சொல்லுகிறார். அவருடைய வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்த ஜீவப் புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கிறவர்களின் விடுதலை மகிமையானதாயிருக்கும்.(58)GCTam 752.2