Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    42—மாபெரும் ஆன்மீகப் போராட்டம் முடிவடைகிறது!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 662—678)

    யிரம் ஆண்டுகள் முடிந்தபிறகு கிறிஸ்து மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார். மீட்கப்பட்ட பரிசுத்த கூட்டமும் அவரோடுகூட வருகிறது. அவருக்குச் சேவைசெய்யும்படி ஒரு பெரிய தேவதூதர்கள் கூட்டமும் அவரோடுகூட வருகிறது. ஒப்பற்ற கம்பீரத்தோடு இறங்கி வந்துகொண்டிருக்கும்பொழுதே பூமியில் மரித்துப்போய்க்கிடக்கும் அக்கிரமக்காரர்களைக் கிறிஸ்து உயிரோடு எழுப்புகிறார். ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதே. அவர்கள் ஒரு வல்லமையான சேனையைப்போல கடற்கரை மணலத்தனையாக எழுந்து வருகிறார்கள். முதலாவது உயிர்த்தெழுதலில் உயிர்த்து வந்தவர்களுக்கும் இவர்களுக்கும்தான் எத்தனை வித்தியாசம்! முதலாவது உயிர்த்தவர்கள் உயிர்த்தெழுந்த பொழுது, நித்திய இளமையும் அழகும் அவர்களைப் போர்த்தியிருந்தது. ஆனால் இந்த அக்கிரமக்காரர்களோ பிணி மரணம் ஆகியவற்றின் தடயங்களை அப்படியே தரித்தவர்களாக உயிர்த்தெழுந்திருக்கிறார்கள். (1)GCTam 789.1

    அந்தப் பெருந் திரள் கூட்டத்திலிருக்கும் அனைவருடைய கண்களும் வானிலிருந்து இறங்கிவரும் தேவகுமாரனுடைய மகிமையைக் காணும்படி அவர் பக்கம் திரும்புகின்றன. வியப்பின் மிகுதியால் தெய்வீக நாமத்தோடு வந்திருக்கும் இவர் எத்துணை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அவர்கள் எல்லோரும் ஒரே குரலாகக் கூறுகிறார்கள். இயேசுவின்மீது வைத்த அன்பினாலே கூறப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை. விருப்பமில்லாத உதடுகள் சத்தியத்தின் வல்லமையால் அசைக்கப்பட்டதால் உதிர்க்கும் வார்த்தைகளே இவை. கிறிஸ்துவை பகைக்கும் இருதயத்தோடும் அவருக்கு எதிராகக் கலகஞ்செய்யும் ஆவியோடும் அவர்கள் தங்களது கல்லறைகளுக்குள் இறங்கினார்கள். அதே பகைக்கும் இருதயத்தோடும் கலக ஆவியோடும் கல்லறையிலிருந்து இப்பொழுது வெளிவந்திருக்கிறார்கள். தங்களுடைய கடந்தகால வாழ்க்கையின் குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ளும்படியாக இன்னொரு தருணம் அவர்களுக்கு கொடுத்தாலும் அதனால் நன்மை ஏதும் விளையப்போவது இல்லை. தங்களது வாழ்க்கையில் இடைவிடாது அவர்கள் செய்து குவித்த பாவங்கள் அவர்களது இருதயத்தை தேவனுக்கு எதிராக நிரந்தரமாகக் கடினப்படுத்திவிட்டன. ஆகவே இன்னொரு தருணம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அதிலும் அவர்கள் தேவப்பிரமாணத்தைத் மீறிநடக்கவும் அதேபோல் நடக்க மற்றவர்களைத் தூண்டிவிடவும் செய்வார்களேயன்றி மற்றபடி மனந்திரும்பமாட்டார்கள். (2)GCTam 789.2

    கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்னர் நாற்பதாம் நாளிலே தமது சீடர்களிடம் கடைசியாக ஒலிவ மலையிலே சந்தித்துப் பேசினார். பிறகு அந்த மலையிலிருந்து மேகங்களாலே வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். சென்ற விதமாகவே அவர் திரும்பவும் வருவார் என்று தேவதூதர்கள் அவரது வருகையின் வாக்குத்தத்தத்தை எடுத்துரைத்தனர். அதே ஒலிவமலையிலே கிறிஸ்து இப்பொழுது மறுபடி வந்திறங்குவார். இதைப்பற்றி: “என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.... அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” (சகரியா 14:5,4,9) என்கிறது. புதிய எருசலேம் பரலோகத்தைவிட்டு வரும்பொழுது கண்ணைப் பறிக்கும் அழகுடன் வருகிறது. அதற்கென பரிசுத்தமாக்கி ஆயத்தப்படுத்தப்பட்ட ஸ்தலத்தின்மேல் அமர்கிறது. கிறிஸ்து அவரது ஜனங்களோடும் தேவதூதர்களோடும் பரிசுத்த நகரத்திற்குள்ளே பிரவேசிக்கிறார். (3)GCTam 790.1

    இப்பொழுது சாத்தான் தானே பெரியவன் என்பதைக் காட்டும்படி ஒரு கடைசிப் பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாகிறான். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தனது வல்லமை பறிக்கப்பட்டவனாக யாரையும் ஏமாற்றமுடியாதவனாக இருந்ததினால் சலிப்படைந்து வெறுத்துப்போன நிலையில் இனி தனக்குத் தோல்வியே என்று இருந்தான். ஆனால் மரித்துப்போயிருந்த பெருந்திரளான அக்கிரமக்காரர்கள் உயிர்த்தெழுந்து தனக்கு ஊழியம் செய்யத் தயாராக நிற்பதைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது. தான் தொடங்கிய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தியே தீருவது என்று முடிவு செய்கிறான். இரட்சிப்பை இழந்துவிட்ட அனைவரையும் ஒரு பெரும்படையாகத் தனது பக்கம் திரட்டி, அவர்களைக்கொண்டு தனது யுத்தத்தை நடத்தத் திட்டம் தீட்டுகிறான். உயிர்த்தெழுந்திருக்கும் அக்கிரமக்காரர்கள் எல்லா வகையிலும் சாத்தானுடையவர்களே. அவர்கள் என்றைக்கு கிறிஸ்துவைத் தங்கள் ராஜாவாக இருக்கக்கூடாது என்று தள்ளிவைத்தார்களோ அன்றே அவர்கள் கலகத் தலைவனாகிய சாத்தானை தங்களது ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவர்கள் அவனுடைய ஆலோசனைகளைக் கேட்கவும் அவன் கட்டளைப்படி நடக்கவும் தயாராகவே இருக்கிறார்கள். சாத்தான் எப்பொழுதும் செய்யும் கள்ளத்தனம் அதாவது தேவனின் எதிரியாகக் காட்டிக்கொள்வதில்லை. அதன்படி இப்பொழுதுங்கூடத் தன்னை ஒரு நீதிமானாகவே காட்டிக்கொள்ளுகிறான். இந்தப் பூமியின் நியாயமான அதிபதி தான்தான் என்றும், தன்னுடைய இந்தச் சுதந்திரமானது சட்டத்திற்குப் புறம்பான வகையில் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்றும் அறிவிக்கிறான். ஏமாறுவதற்குத் தயாராகத் தன்முன் நின்றுகொண்டிருப்போரைப் பார்த்து: “நானே உங்கள் மீட்பர். உங்களை உங்களது கல்லறைகளிலிருந்து நான்தான் எனது வல்லமையால் உயிரோடு எழுப்பினேன் என்பதை நிச்சயமாக அறியுங்கள். இப்பொழுது இந்த உலகத்தின்மேல் சாத்தானின் கொடுங்கோல் ஆட்சி நடக்கவிருக்கிறது. இதிலிருந்து உங்களை நான் காப்பாற்றுவேன். நீங்கள் என்மீது நம்பிக்கைகொண்டு திடனாயிருங்கள்” என்றுகூறி, அவர்களை ஊக்கப்படுத்துகிறான். கிறிஸ்து இப்பொழுது தன்னை அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலக்கிக்கொண்டிருக்கிறார். ஆகவே சாத்தான் அவர்களை தனது விருப்பத்திற்கேற்றபடி ஏமாற்றமுடியும். பல அற்பதங்களை அவர்கள்முன் செய்துகாட்டி, தான் சொன்ன யாவற்றையும் அவர்கள் நம்பும்படிச் செய்கிறான். தனது ஆவியை அவர்கள்மேல் ஊற்றி, அவர்களுக்கு வல்லமை கொடுத்து, பலவீனர்களையும் பலவான்கள்போல் ஆக்குகிறான். அதன் பின்னர், தனது தலைமையில் தேவ பட்டணத்திற்குள் இருக்கும் பரிசுத்தவான்களுக்கு எதிராகப் படையெடுத்து, அந்தப் பட்டணத்தைப் பிடிக்கவேண்டும் என்கிற தனது திட்டத்தைக் கூறுகிறான். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நபர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையுள்ளவர்களாகத் தன்முன் நிற்பதைப் பிசாசுக்கே உரிய பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறான். சுட்டிக்காட்டி அவர்களது தலைவன் என்கிற முறையில், தன்னால் அந்தப் பட்ணத்தைக் கைப்பற்றவும் தனது சிங்காசனத்தையும் இராஜ்யத்தையும் திரும்ப அடையவும் முடியும் என்று உறுதி கூறுகிறான். (4)GCTam 790.2

    மிகப்பெருந்திரளான அந்த மனிதக் கூட்டத்தில் ஜலப்பிரளயத்திற்கு முன்னர் நீண்ட காலம் வாழ்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். நல்ல உயரமான உருவமும் சிறந்த அறிவு நுட்பமும் உடையவர்கள் அவர்கள். பிசாசுகளின் தூண்டுதலுக்கு இடம் கொடுத்ததினால் தங்களது வல்லமை, தங்களது அறிவு ஆகிய அனைத்தையும் சுயப் பெருமைக்காகப் பயன்படுத்தியவர்கள் அவர்கள். உலகமே வியந்து போற்றும்படியான அரிய கலைத் திறமை படைத்தவர்கள் அவர்கள். அதே சமயத்தில், கொடுமை செய்வதில் சாதுர்யமும் தீமைசெய்வதில் புத்திசாலித்தனமும் காட்டி, அதனால் பூமியைத் தீட்டுப்படுத்தி, தங்களிலே இருந்த தேவனின் சாயலைக் கலைத்துப்போட்டவர்கள் அவர்கள். அதனால் தேவனாலே இப்பூமியிலிராதபடி துடைத்துப் போடப்பட்டவர்கள். இவர்களைத் தவிர, அந்தப் பெருங்கூட்டத்தில் பெரிய ராஜாக்களும் பெரும் தளபதிகளும் இருந்தார்கள். இவர்கள் ராஜ்யங்கள் பலவற்றை வென்றவர்கள். தோல்வியையே சந்தித்திராத பெரும் யுத்தவீரர்கள். தன்னம்பிக்கையும் வெற்றியில் நோக்கமும் உடைய இவ்வீரர்களைக் கண்டு, ராஜ்யங்கள் நடுநடுங்கின. மரித்து உயிர்த்தெழுந்திருக்கிற இவர்கள் தங்களது சிந்தனைகளிலும் செயல்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி, இறந்தபொழுது இருந்தவண்ணமே இப்பொழுதும் இருக்கிறார்கள். யுத்தம் செய்யவேண்டும் அதில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடனே மரித்த இவர்கள் கல்லறையை விட்டு வெளியே வரும்பொழுதும் அதே வெறியுடனே வந்திருக்கிறார்கள்.(5)GCTam 791.1

    சாத்தான் முதலில் தனது தூதர்களைக் கலந்தாலோசிக்கிறான். யுத்த வல்லுநர்களையும் கலந்தாலோசிக்கிறான். அவர்கள் தங்களது பலத்தையும் எண்ணிக்கையையும் பார்க்கிறார்கள். பிறகு தேவபட்டணத்திற்கு உள்ளே இருப்பவர்களது எண்ணிக்கை தங்களது எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாக இருப்பதால் அதைப் பிடிப்பது எளிதுதான் என்று முடிவுசெய்கிறார்கள். புதிய எருசலேமின் செல்வங்களையும் மகிமையையும் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ளத் திட்டம் தீட்டுகிறார்கள். உடனடியாக எல்லோரும் யுத்தத்திற்கு ஆயத்தப்படத் தொடங்குகிறார்கள். தொழில் நுட்பம் தெரிந்த அவர்கள் யுத்த சாதனங்களைத் தயாரிக்கிறார்கள். வெற்றிக்குப் பேர்பெற்ற இராணுவத் தலைவர்கள், போர்த்திறம் நிறைந்த மனிதர்களைக் கொண்டு யுத்த வியூகங்களை வகுக்கிறார்கள். (6)GCTam 792.1

    ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன. தாக்கும்படியாக முன்னேறிச்செல்ல உத்தரவு கொடுக்கப்படுகிறது. சமுத்திரம்போன்ற சேனை நகர ஆரம்பிக்கிறது. இப்பூமியில் முதலாவது யுத்தம் எப்பொழுது நடந்ததோ அப்பொழுது முதல் இப்பொழுது வரை எத்தனையோ சேனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அத்தனை சேனைகளின் மொத்தத் தொகுப்புதான் இப்போதைய சேனை. இதுவரை எந்தத் தளபதியும் நடத்தியிராத மகாப் பெரிய சேனையாகிய இந்த சேனைக்கு நிகரான சேனை வேறொன்றும் எப்பொழுதும் இருந்ததில்லை. மிகப்பெரிய யுத்தவீரனாகிய சாத்தான் தானே இந்தப் படையை முன்னின்று நடத்துகிறான். தேவனோடு செய்யும் கடைசி யுத்தமாகிய இதில் சாத்தானுக்குத் துணையாக அவனுடைய தூதர்கள் இணைந்து நிற்கிறார்கள். அவனுடைய அணிவகுப்பிலே ராஜாக்களும் பராக்கிரமசாலிகளும் இருக்கிறார்கள். திரளான சேனை பெரும் பெரும் அணிகளாக அவரவர்க்கு நியமிக்கப்பட்ட தலைவர்களைத் தொடர்ந்து செல்லுகிறது. பூமியின் பரப்பு முழுவதும் உடைந்துபோய் மேடுபள்ளமாக இருந்தபோதிலும், இராணுவத்திற்கே உரிய திட்டமான வகைகளில் இந்தச் சேனை நெருங்கிச் சேர்ந்து தேவபட்டணத்தை நோக்கி முன்னேறுகிறது. புதிய எருசலேமின் வாசல்களை மூடிவிடும்படி இயேசு உத்திரவிடுகிறார். சாத்தானுடைய சேனைகள் பட்டணத்தைச்சுற்றி வளைத்து நின்று தாக்குவதற்குத் ஆயத்தமாக இருக்கிறார்கள். (7)GCTam 792.2

    அப்பொழுது இயேசு மீண்டும் ஒரு முறை தனது எதிரிகள் அனைவருக்கும் முன்பாகத் தோன்றுகிறார். நகரத்திற்கு நேர்மேலாக மிகுந்த உயரத்தில் தங்கத் தளத்தின்மேல் ஓங்கி உயர்ந்ததாக ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது அந்தச் சிங்காசனத்தில்மேல் தேவகுமாரன் அமர்ந்திருக்கிறார். அதிகாரமும் கம்பீரமும் மிகுந்த கிறிஸ்துவின் தோற்றத்தை வருணிக்க வல்லவரும் இல்லை. வார்த்தைகளும் இல்லை. நித்திய பிதாவினுடைய மகிமை அவரது குமாரனைச் சூழ்ந்திருக்கிறது. அவரது பிரசன்னத்தின் பிரகாசம் தேவபட்டணத்தை நிறைத்தது மட்டுமன்றி, அதன் வாசல்களையும் தாண்டி வெளியேறி, பூமி முழுவதையும் ஒளியால் நிறைக்கிறது. (8)GCTam 793.1

    ஒரு காலத்தில் சாத்தானுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதையே தங்களின் இலட்சியமாகக்கொண்டிருந்து, பிறகு எரிகிற நெருப்பில் இருந்து பிடுங்கப்பட்ட உத்திரம் போல அதிலிருந்து தப்பி வந்து, தங்களது இரட்சகரை ஆழமான உறுதியான விசுவாசத்தோடு பின்பற்றின மனிதர்கள் மற்ற எல்லோரையும்விட சிங்காசனத்திற்கு மிக அருகில் இருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பொய்யான சத்தியங்களும் அவிசுவாசமும் சூழ்ந்திருந்த நிலையிலுங்கூட தங்களைக் கிறிஸ்தவ குணலட்சணங்களால் நிறைத்துக்கொண்டவர்கள், யுகயுகமாகத் தங்களது விசுவாசத்தினிமித்தம் இரத்தசாட்சியாய் மரித்த இலட்சக்கணக்கான மனிதர்கள் இடம்பெற்றிருந்தனர். இதற்கும் அப்பால் ... “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து” (வெளி. 7:9) நின்றார்கள். அவர்கள் அனைவரும் யுத்தத்தை முடித்தவர்கள். வெற்றியை அடைந்தவர்கள். அவர்கள் பந்தய ஓட்டத்தை முடித்துப் பரிசைப்பெற்றுக்கொண்டவர்கள். அவர்கள் தங்களது கையில் பிடித்திருந்த குருத்தோலைகள் அவர்கள் பாவத்தின்மீது கொண்ட வெற்றியின் சின்னமாகும். அவர்கள் தரித்திருந்த வெள்ளை அங்கிகள் அப்பழுக்கற்ற கிறிஸ்துவின் மாசற்ற நீதியைத் தரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாகும். (9)GCTam 793.2

    மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்துவைப் புகழ்ந்து ஒரு பாட்டைப் பாடுகிறார்கள். “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” (வெளி. 7:10) என்று அந்தப் பாட்டு ஒலிக்கிறது. அது பரலோகம் முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அப்பொழுது தேவதூதர்களும் சேராபீன்களும் இணைந்து குரல்கொடுத்து, புகழ்ந்து பாடுகின்றனர். இப்பொழுது மீட்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சாத்தானது வல்லமையையும் கொடிய குணத்தையும் அனுபவ ரீதியாகப் பார்த்தவர்கள். கிறிஸ்துவின் வல்லமை அல்லாத வேறெந்த வல்லமையும் சாத்தானிடமிருந்து தங்களுக்கு வெற்றியைத் தந்திருக்க முடியாது என்பதை இவர்கள் முன்னெப்போதையும்விட இப்பொழுது மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். பிரகாசிக்கிற ஒளியை உடைய அந்தக் கூட்டத்தாரில் தங்களுடைய சொந்த வல்லமையாலும் நற்குணங்களாலும் சாத்தானைத் தோற்கடித்தோம் என்று யாருமே தங்களைத் தாங்களே புகழ்ந்து கூறமாட்டார்கள். அவர்கள் பாடும் அந்தப் பாடல்களில் அவர்கள் செய்த பராக்கிரமங்கள் பற்றியோ அடைந்த இன்னல்கள் பற்றியோ எதுவுமே இராது. அதற்குப்பதிலாக இரட்சிப்பின் மகிமை எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது என்பதே ஒவ்வொரு பாட்டினுடைய கருத்தாகவும் காவியமாகவும் இருக்கும். (10)GCTam 794.1

    பரலோகத்தில் குடியிருப்போர் பூலோகத்தில் குடியிருப்போர் அனைவருக்கும் முன்பாகத் தேவகுமாரனது முடிசூட்டு விழா நடந்தேறுகிறது. இப்பொழுது முடிசூட்டப்பட்ட இந்த ராஜாதி ராஜா தனக்கு உள்ள ஒப்பில்லா வல்லமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தித் தனது இராஜ்யத்திற்கு எதிராகக் கலகம் செய்த அனைவருக்கும் தீர்ப்பு வழங்குகிறார். தன்னுடைய பிரமாணங்களை மீறிநடந்து, தன்னுடைய மக்களைக் கொடுமைப்படுத்தியவர்கள்மேல் நீதியை அமுல்படுத்துகிறார். தீர்க்கதரிசி: “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” (வெளி. 20:11-12) என்கிறார்.()GCTam 794.2

    பாவங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கும் புத்தகங்கள் திறக்கப்பட்டபொழுது, இயேசுவின் கண்கள் பூமியில் நிற்கும் அக்கிரமக்காரர்களை நோக்கிப் பார்க்கின்றன. அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்தையும் நினைவுகூருகின்றனர். தங்களது வாழ்க்கைப் பாதையில் தங்களது கால்கள் புனிதத்தன்மை பரிசுத்தத்தன்மை ஆகியவற்றைவிட்டு வழிவிலக ஆரம்பித்தது எங்கே என்பதைத் தெளிவாகப் பார்க்கின்றனர். தேவனுக்கு எதிராகத் தாங்கள் கொண்ட கர்வமும் செய்த கலகமும் தேவப்பிரமாணத்தை எந்த அளவிற்கு மீறும்படித் தங்களை நடத்தியிருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள். பாவத்திலே மூழ்கி மூழ்கிப் பாவத்தின் வேட்கையைத் தங்களிடம் வளர்த்துக்கொண்டது, தேவனளித்த ஆசீர்வாதங்களை அற்பக் காரியமாக எண்ணியது, தேவ செய்தியைக் கொண்டுவந்தவர்களை ஏளனம் செய்தது, கொடுக்கப்பட்ட எச்சரிப்புகளையெல்லாம் புறக்கணித்தது, தங்களை நோக்கிவந்த இரக்கத்தின் அலைகளை ஏற்றுக்கொள்ளாத பாறைபோல தங்கள் இருதயத்தை வைத்துக்கொண்டது ஆகிய அனைத்து உண்மைகளும் நெருப்பாலான எழுத்துக்களால் எழுதப்பட்டதுபோன்று மிகத்தெளிவாக அவர்களுக்குத் தெரிகின்றது. (12)GCTam 795.1

    சிங்காசனத்திற்கு மேலாகச் சிலுவைக்காட்சி தோன்றுகிறது. அதில் ஆதாம் வஞ்சிக்கப்பட்டுப் பாவம்செய்தது முதலாக இரட்சிப்பின் திட்டத்தில் பல்வேறு படிகள்கொண்ட ஒரு நீண்ட காட்சித் தொடரை அவர்கள் காணுகிறார்கள். இரட்சகரின் இளமை வாழ்க்கை, யோர்தானில் அவர் எடுத்துக்கொண்ட ஞானமுழுக்கு, அவரது வனாந்திர உபவாசம், சோதனை, அனைவருக்கும் தெரியும்படி அவர்செய்த மூன்றரை ஆண்டுகால ஊழியம், அப்பொழுது ஒப்பற்ற பரலோக பாக்கியங்களைக் குறித்து அவர் செய்த போதனைகள், மக்களிடம் அன்பும் இரக்கமும் பாராட்டி அவர் செய்த அற்புதங்கள், மலையில் தனிமையிலே அவர் விழுந்து இரவு முழுவதும் ஏறெடுத்துக்கொண்டிருந்த ஜெபங்கள், அவர்செய்த நன்மைகளுக்குப் பதில்செய்யும்படியாக மனிதர்கள் அவர்மேல் பொறாமை கொண்டு அவரை வெறுத்து கொலைசெய்யத் திட்டம் தீட்டியது, கெத்செமனே தோட்டத்தில் அவர் உலகின் பாவச் சுமைகளால் அழுத்தப்பட்டு, பயங்கரமும் கொடூரமுமாக வேதனைகளை அனுபவித்தது, கொலை வெறிகொண்ட கூட்டத்தாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டது, இயேசுவைக் கைவிட்டு சீடர்கள் ஓடிவிடுவது, எதிர்ப்புத் தெரிவிக்காத கைதியாக இயேசு நடந்துகொள்வது, இரவோடு இரவாக செருக்குமிகுந்த காவலாளிகளால் நடத்தப்பட்டு பிரதான ஆசாரியனது மாளிகையில் அன்னா முன்பாக நிறுத்தப்படுவது, பிலாத்துவின் விசாரணை மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது, கோழையும் கொடியவனுமான ஏரோது முன்பு நிறுத்தப்படுவது, பின்பு கேலிசெய்யப்பட்டு ஏளனம்செய்யப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டு கொலைக்கு ஒப்புக்கொடுக்கப்படுவது ஆகிய எல்லாக் காட்சிகளையும் அங்கே அவர்கள் தெளிவாகக் காணுகிறார்கள். (13)GCTam 795.2

    இவையெல்லாவற்றையும் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் மனிதர்களுக்கு முன்பாக சிலுவையின் கடைசிக் காட்சிகள் தொடர்ந்து காட்டப்படுகின்றன. அத்தனை துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு வாய்பேசாதவராக இயேசு கல்வாரியை நோக்கிச்செல்வது, பரலோகத்தின் பிரபுவாகிய அவர் சிலுவையில் தொங்குவது, திமிர்பிடித்த ஆசாரியர்களும் ஏளனம் செய்யும் குருமார்களும் அவரது மரண வேதனையைக் குறித்துக் கேலிபேசுவது, அதிசயமான இருள் சிலுவையை மூடிநிற்பது, இரட்சகர் மரித்த வேளையில் நிலம் பிளந்து கற்கள் வெடித்துக் கல்லறைகள் திறப்பது ஆகிய காட்சிகளையும் அவர்கள் காண்கிறார்கள். (14)GCTam 796.1

    பெருங்கிலேசத்தை உண்டுபண்ணும் இக்காட்சிகள் அன்று நடந்த அதேவிதமாக அப்படியே காட்டப்படுகின்றன. சாத்தானும் அவனது தூதர்களும் அவனது பிரஜைகளும் தாங்கள் நடத்துவித்த இக்காட்சிகளை கண்கொட்டாமல் பார்க்கின்றனர். இக்காட்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொருவனும் தான்செய்த பங்கை அப்படியே நினைவு கூருகிறான். இஸ்ரவேலின் ராஜாவைக் கொலைசெய்யத் திட்டமிட்டு பாவமறியாத பெத்லகேமின் குழந்தைகளைக் கொன்று குவித்த ஏரோது ராஜா, யோவானின் இரத்தத்தைச் சிந்திய பாவத்திற்குக் காரணமாக இருந்த கீழ்மகளாகிய ஏரோதியாள், முதுகெலும்பு இல்லாமல் கொலை வெறியர் கூச்சலுக்கு வளைந்து கொடுத்த பிலாத்து, பரிசகாசம் செய்த ரோமவீரர்கள், அவனது இரத்தம் எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று கத்திய ஆசாரியர்கள், அதிகாரிகள் மற்றும் மதம் பிடித்துப்போயிருந்த மனிதர்கள் ஆகிய அனைவரும் தாங்கள் செய்த செயல்களின் கொடூரமான பாவத்தன்மையை உணருகிறார்கள். அவர்கள் வெறுத்த அந்த நபர், இதோ, தெய்வீகத் தோற்றமாக அமர்ந்திருக்கிறார். அவரது முகம் சூரியனைவிடவும் அதிக மகிமையோடு பிரகாசிக்கிறது. அந்த முகத்தைப் பார்க்காமல் ஒளிந்துகொள்ள அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் மீட்கப்பட்டவர்களோ தங்களது கிரீடங்களை அவரது பாதபடியில் வைத்து, இவர் எங்களுக்காக மரித்தாரே என்று ஆனந்தமகிழ்ச்சியுடன் வியப்படைகிறார்கள். (15)GCTam 796.2

    கிரயம் கொடுத்து மீட்கப்பட்டவர்கள் மத்தியிலே கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். தீவிரம் மிகுந்த பவுல், பேச்சு சாதுர்யம் மிகுந்த பேதுரு, அதிகமாக அன்புசெய்யப்பட்டவனும் அன்பு செய்தவனுமாகிய யோவான் மற்றும் சத்தியம் நிறைந்த இருதயங்கொண்ட அவனது சகோதரர்கள், அவர்களோடு சேர்ந்து இரத்தசாட்சியாக மரித்த பெருந்தொகையான பாக்கியவான்கள் இவர்கள் அனைவரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்களை உபத்திரவப்படுத்தியவர்கள், சிறையில் தள்ளியவர்கள், கொலை செய்தவர்கள், மற்றும் அனைத்துவிதமான கொடுமையும் தூஷண குணமும் கொண்டவர்கள் எல்லோரும் பட்டணத்திற்கு வெளியே இருக்கிறார்கள். கொடூரமும் தீமையுமே உருவான மிருகம் போன்ற நீரோ இதோ அங்கே இருக்கிறான். அவன் பரிசுத்தவான்களைச் சித்திரவதை செய்தவன். அவர்களை வேதனையின் எல்லைவரை கொண்டுசென்று கொடூர மகிழ்ச்சி கொண்டவன். அவனது தாய் அங்கே இருக்கிறாள். இவளும் தான் விதைத்த விதைகளின் பலனைக் காண்கிறாள். தன்னிடமிருந்து தன் மகனிடத்திற்குச் சென்ற தீய குணங்களும் தன்னால் உருவாக்கி வளர்த்துவிடப்பட்ட வெறிக் குணங்களும்சேர்ந்து பலன்கொடுத்திருப்பதையும் உலகையே திடுக்கிட வைத்த கொடுமைகளை அவன் செய்திருப்பதையும் பார்க்கிறாள். (16)GCTam 797.1

    இதோ, போப்புமார்க்கத்தின் போதகர்களும் தலைவர்களும் அங்கே பட்டணத்திற்கு வெளியே இருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டவர்கள். ஆனால் சித்திரவதை, சிறை, நெருப்புக்கம்பங்கள் ஆகியவற்றிற்குத் தேவ ஜனங்களை உட்படுத்தி, அவர்களது மனச்சாட்சியை அவித்துப்போட முயன்றவர்கள். அங்கே போப்புகள் இருக்கிறார்கள். தேவனுக்கும் மேலாகத் தங்களை உயர்த்தி, உன்னதமானவரின் பிரமாணங்களையும் மாற்றியமைக்கத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கூறிப் பெருமையடித்துக்கொண்டவர்கள். சபையின் பிதாக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட இவர்கள் தாங்கள் செய்த அக்கிரமங்களுக்கெல்லாம் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்கத்தான் வேண்டும். எல்லாம் அறிந்த தேவன் தனது பிரமாணங்கள் குறித்துக் கண்டிப்புடையவராக இருக்கிறார் என்பதையும் அதை மீறுகிறவர்களை அவர் தண்டியாமல் விடார் என்பதையும் இப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் இது காலங்கடந்து வந்த அறpt. தன் நிமித்தம் பாடுகளை ஏற்றுக்கொண்ட ஜனங்களோடு கிறிஸ்து தன்னை ஒன்றாகப் பிணைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் இப்பொழுது காண்கிறார்கள். “இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத்தேயு 25:40) என்று இயேசு கூறியதன் முழுமையான பொருளை இன்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். (17)GCTam 797.2

    அக்கிரம உலகம் இப்பொழுது முழுமையாக தேவனுடைய நியாயஸ்தலத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. பரலோக ராஜ்யத்திற்கு எதிரான பெரும் துரோகக் குற்றம் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்காகப் பரிந்துபேசுகிறவர்கள் யாருமே இல்லை. அவர்கள் செய்த துரோகத்தை மன்னிப்பதற்கு வழியே இல்லை. நித்திய மரணம் என்கிற தீர்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. (18)GCTam 798.1

    பாவத்திலே திளைத்தவர்கள் எல்லோருமே தங்களது சுதந்திரமான இயல்பைக்குறித்துப் பெருமைப்பட்டுக்கொண்டவர்கள். அதுவே திவ்ய வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டவர்கள். ஆனால் அது அப்படியல்ல் பாவம் என்பது அடிமைத்தனத்திற்கும் அழிவிற்கும் மரணத்திற்கும் வழிநடத்துவது என்பது இப்பொழுது தான் அவர்களுக்குப் புரிகிறது. தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தே வாழ்ந்ததின் மூலம் எவ்வளவு பெரிய இழப்பை அடைந்திருக்கிறோம் என்பதை அவர்கள் இப்பொழுது உணருகிறார்கள். கற்பனைக்கு எட்டாத மாபெரும் நித்திய மகிமை அவர்களுக்கு வழங்கப்பட்டபொழுது அவர்கள் அதை அருவருத்தார்கள். அந்த மகிமையை விட்டுவிட்டதற்காக இப்பொழுது எவ்வளவாக ஏங்குகிறார்கள். அழிந்துபோக இருக்கிற அந்த ஆத்துமாக்கள் ஒவ்வொன்றும் இது எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கமுடியுமே ஆனால் நானே இதை என்னைவிட்டுத் தள்ளிவிட்டேனே, எவ்வளவு பெரிய மதியீனன் நான். சமாதானம் மகிழ்ச்சி மேன்மை இவற்றை விட்டுவிட்டு, பரிதவிப்பு கேவலம் தத்தளிப்பு ஆகியவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறேனே என்று இப்பொழுது கதறுகிறார்கள். தங்களுக்கு இந்தப் பெரும் பாக்கியம் கிடைக்காமல் போனது நியாயமானதே என்பதை அக்கிரமக்காரர்கள் தெளிவாகக் காணுகிறார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின்மூலமாக அவர்கள் இந்த இயேசு எங்களை ஆளக்கூடாது என்றுதானே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். (19)GCTam 798.2

    தேவகுமாரன் முடிசூட்டிக்கொள்ளுவதை அக்கிரமக்காரர்கள் அனைவரும் மயக்கத்திலிருப்பவர்களைப் போலக் கண்கொட்டாமல் பார்க்கிறார்கள். தாங்கள் வெறுக்கவும் ஒதுக்கவும் செய்த நியாயப்பிரமாணங்கள் எழுதப்பட்ட கற்பலகைகள் அவரது கரத்தில் இருப்பதை அக்கிரமக்காரர்கள் காண்கிறார்கள். அதுமட்டுமல்ல, இரட்சிக்கப்பட்ட கூட்டத்தாரிடையே நிலவும் எல்லையற்ற மகிழ்ச்சியின் ஆரவாரம் அவர்கள் தங்களை இரட்சித்தவர்கள் மேல்கொண்டிருக்கும் பெருமதிப்பு ஆகியவற்றையும் காண்கிறார்கள். அவர்கள் பாடுகின்ற பாடலோசை தேவபட்டணத்திற்கு வெளியே இருக்கும் திரளான கூட்டத்தின் நடுவே ஊடுருவி ஒலிக்கும்போது, அவர்கள் உண்மையை உணர்ந்தவர்களாக வியப்புமேலிட: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” (வெளி. 15:3) என்று ஒரே குரலில் அறிக்கையிடுகிறார்கள். அறிக்கையிட்டு அவருக்குமுன் நெருஞ்சாண்கிடையாக விழுந்து ஜீவாதிபதியாகிய அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். (20)GCTam 798.3

    கிறிஸ்துவினுடைய மகிமையையும் உன்னதத்தையும் கண்டு சாத்தான் உணர்விழந்தவன்போல ஆகிறான். தேவ சன்னதியில் நிற்கும் கேரூபீனாக ஒரு காலத்தில் இருந்த அவன் தான் எப்படிப்பட்ட உயர்ந்த நிலையிலிருந்து விழுந்துவிட்டோம் என்பதை உணருகிறான். பிரகாசமான சேராபீனாக விடிவெள்ளியின் மகனாக இருந்தவன் எப்படி மாறிவிட்டான்! எவ்வளவாகக் கெட்டுப்போனான்! பரலோகத்தின் ஆலோசனைக் கூட்டங்களிலே அவன் கனம்பொருந்தியவனாக இருந்தானே, இப்பொழுது என்றென்றைக்குமாக ஒன்றுமில்லாதவனாகப் போனானே. இதோ, தனது மகிமையை மறைத்து பிதாவே அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் லூசிபர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் வேறொருவன் அல்லவா இருக்கிறான். நெடிய உருவமும் கம்பீரமான தோற்றமுமுள்ள தேவதூதன் ஒருவன் வந்து கிரீடத்தை எடுத்து கிறிஸ்துவின் தலையில் வைப்பதை சாத்தான் பார்க்கிறான். அவனுடைய அந்த உன்னத ஸ்தானம் தன்னுடையதாக இருந்திருக்கமுடியும் என்பதையும் அவன் எண்ணிப்பார்க்கிறான். (21)GCTam 799.1

    ஆதியிலே பாவமில்லாத பரிசுத்தவானாகத்தான் சாத்தானாகிய லூசிபர் இருந்தான். ஆதிமுதல் அவன் தேவனுக்கு எதிராக முறுமுறுக்கவும் கிறிஸ்துவிற்கு எதிராகப் பொறாமைப்படவும் தொடங்கின நாள் வரை தன்னில் சமாதானமும் திருப்தியுமே இருந்துவந்ததை சாத்தான் எண்ணிப்பார்க்கிறான். தேவனுக்கு எதிராக தான் குற்றச்சாட்டுகளை அடுக்கியது, அவருக்கு எதிராகக் கலகம் செய்தது, தேவதூதர்களின் அனுசரணையையும் ஆதரவையும் பெறுவதற்காக பல வஞ்சகங்கள் செய்தது ஆகியவையெல்லாம் அவனுக்கு மன்னிப்பை அளித்திருக்கமுடியும் என்கிற காலக்கட்டத்தில் தான் அந்த மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காமல் பிடிவாதமாக மறுத்துவிட்டது மிகத் தெளிவாக அவனுக்குத் தெரிகிறது. தான் மனிதர்களிடத்திலே செய்த கிரியைகளையும் அவற்றின் விளைவுகளையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கிறான். மனிதர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த பகைகள், அதனால் ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச்சேதங்கள், இராஜ்யங்கள் தோன்றி மறைதல், சிங்காசனங்கள் கவிழ்க்கப்படுதல் மனித சரித்திரத்தின் தொடர் நெடுகிலும் எப்போதும் குழப்பங்களும் கலகங்களும் புரட்சிகளுமாகவே இருந்தது ஆகிய இவையெல்லாமே தன்னுடைய கைங்காரியங்கள் தான் என்பதை எண்ணிப் பார்க்கிறான். கிறிஸ்துவின் இரட்சிப்பின் வேலையை எதிர்த்து நின்று மனிதனைக் கீழாகவும் இன்னும் பாவக்குழியில் அமிழ்த்துவதற்கும் விடாமுயற்சியோடு செயல்பட்டுவந்திருப்பதைத் திரும்பத் திரும்ப எண்ணிப்பார்க்கிறான். ஆயினும் தங்களது நம்பிக்கையைக் கிறிஸ்துவின்மேல் வைத்துவிட்ட மனிதர்கள் யாரோ அவர்களைப் பொறுத்தவரை அழிவிற்கு உட்படுத்தும்படி தான் தீட்டிய அந்தகார சதித்திட்டங்கள் ஏதும் பலனளிக்கவில்லை என்பதை உணருகிறான். இப்பூமியில் தான் ஸ்தாபித்திருந்த இராஜ்யம் என்னவாயிற்று என்பதைச் சாத்தான் யோசித்துப்பார்த்தபோது, தான் உழைத்த உழைப்பின் பலன் என்ன என்பதைக் கவனித்துப் பார்த்தபோது தோல்வியையும் அழிவையுமே கண்டான். தேவப்பட்டணத்தைக் கைப்பற்றுவது எளிதான காரியம் என்று தன்னுடைய ஆட்களை நம்பவைத்திருந்தான். ஆனால் அது ஏமாற்றும் வேலை என்பது அவனுக்குத் தெரியும். இதுகாறும் நடந்துவந்திருக்கிற ஆன்மீகப் போராட்டத்தில் மீண்டும் மீண்டும் தான் தோற்கடிக்கப்பட்டிருப்பதையும் அந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்திருப்பதையும் அவன் அறிவான். நித்தியமான தெய்வத்தின் வல்லமையும் சக்தியும் எப்படிப்பட்டது என்பதையும் அவன் நன்றாகவே அறிந்துகொண்டிருக்கிறான். (22)GCTam 799.2

    ஆதிமுதல் கலகக்காரனாக இருக்கும் சாத்தானின் நோக்கமெல்லாம் தான்செய்தகலகங்களுக்குக்காரணம் பரலோக அரசியல் அமைப்பில் இருக்கிற குறைகள் தான் என்பதை நிரூபித்து அதன் மூலம் தன்னை நியாயப்படுத்துவதே ஆகும். இந்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கே அவன் தனது பெரும் ஞானத்தையெல்லாம் பயன்படுத்தி வந்திருக்கிறான். மிகவும் நிதானமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயல்பட்டு, யுகயுகமாக நடந்துவரும் இந்த ஆன்மீகப் போராட்டத்தில் நியாயம் தன் பக்கமிருக்கிறது என்பதை இப்போது ஒரு பெருந்திரளான கூட்டம் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்துவிட்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த வெற்றியை அடைந்திருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன், அவனது கிரியைகள் எப்படிப்பட்டவைகள் என்பதை எல்லாம் எல்லோருக்கும் வெளியரங்கமாக்குவதற்கான வேளை வந்துவிட்டது. கிறிஸ்துவிடமிருந்து சிங்காசனத்தைப் பறிப்பதற்கும் அவரது ஜனங்களை அழிப்பதற்கும் தேவப்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கும் இந்தப் பெரும்வஞ்சகன் எடுக்கும் இந்தக் கடைசி முயற்சிகளில் அவனது வஞ்சக நோக்கமெல்லாம் அம்பலமாகிறது. அவனது இராஜ்ஜியம் முற்றுமாகத் தோல்வியடைந்துவிட்டது என்பதை அவனோடு சேர்ந்த அனைவருமே உணருகிறார்கள். தேவராஜ்யத்திற்கு எதிராகச் சாத்தான் செய்துவந்த வஞ்சக வேலைகளின் முழுத்தன்மையையும் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களும் அவருக்கு விசுவாசமாயிருந்த தேவதூதர்களும் மிக நன்றாக இப்போது அறிந்துகொள்ளுகிறார்கள். பிரபஞ்சத்தில் உள்ள அனைவருக்குமே சாத்தான் எவ்வளவு அருவருக்கத்தக்கவன் என்பது புரிகிறது. (23)GCTam 800.1

    தன் மனம்போன போக்கிலேயே சென்று, தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ததன் நிமித்தம் பரலோகத்திற்குத் தகுதியில்லாதவனாக தான் ஆகிவிட்டோம் என்பது சாத்தானுக்குத் தெரிகிறது. தன்னிடம் உள்ள எல்லாத் திறமைகளையும் பயன்படுத்தி, தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதற்காகவே பயிற்சிகொடுத்துக்கொண்டவன். ஆகவே இப்படிப்பட்ட கலக ஆவியை உடைய அவனுக்குப் பரலோகத்தில் நிலவும் பரிசுத்தம், சமாதானம், அன்னியோன்னியம் ஆகியவை பெரும் சித்திரவதையாக இருக்கும். இரக்கமற்றவர் நீதியில்லாதவர் என்று தேவனைக்குறித்துக் குற்றம்சாட்டிக்கொண்டே இருப்பதை இப்பொழுது விட்டுவிடுகிறான். ஏனெனில் அவன் எவ்வளவு கொடிய நயவஞ்சகன் என்பதை அனைவருமே அறிந்துகொண்டார்கள். தேவனைக்குறித்துத் தான் சொல்லிய தூஷணங்கள் அனைத்தும் தன்மேலேயே வந்துவிடிந்திருப்பதை சாத்தான் காண்கிறான். ஆகவே இப்பொழுது அவன் தலைகுனிந்து வணங்கி, தனக்குக் கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு நீதியானதே என்பதை அறிக்கையிடுகிறான். (24)GCTam 801.1

    “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின” (வெளி. 15:4) என்கிற வசனம் இப்பொழுது நிறைவேறுகிறது. நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இந்த மாபெரும் ஆன்மீகப் போராட்டத்தில் சத்தியம் எது, அசத்தியம் எது என்பது எல்லோருக்கும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. தேவனுடைய அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிற சாத்தானுடைய சட்டங்களின் வேலைகள் அண்ட சராசரத்தின் முன் வைக்கப்பட்டது. சாத்தானது கிரியைகளே அவனை இப்பொழுது குற்றஞ்சாட்டுகின்றன. தேவன் நல்லவர், நீதியானவர், ஞானமுள்ளவர் என்பதும் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆன்மீகப் போராட்டத்தில் தேவன் நடந்துகொண்ட முறைகள், அவர் சுயநலமான வெற்றியை நாடுகிறவர் அல்ல, தான் படைத்த அனைத்து உலகங்கள் அவற்றிலுள்ள தன்னுடைய ஜனங்கள் ஆகியோருடைய நித்திய நன்மையையே நாடுகிறவர் என்பதும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. ஆகவே: “கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்” (சங். 145:10) என்று தாவீது பாடி இருக்கிறான். பிரபஞ்சத்தில் புகுந்துவிட்ட பாவத்தின் சரித்திரம் எழுதி வைக்கப்பட்டிருக்கும். தேவன் படைத்த அனைத்து நபர்களின் நன்மையும் மகிழ்ச்சியும் அவருடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலேதான் இருக்கிறது என்கிற உண்மைக்கு இந்த சரித்திரம் சாட்சியாக இருக்கும். இந்த ஆன்மீகப் போராட்டத்தைக் குறித்த அனைத்து உண்மைகளையும் அனைவருமே அறிவர். இந்த அறிவின் அடிப்படையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நபர்களும் அதாவது தேவனுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் ஆகிய இரு சாராருமே ஒரே தொனியில் பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் என்று கூறி அறிக்கையிடுவார்கள்.(25)GCTam 801.2

    மனிதனைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக பிதாவும் குமாரனும் செய்த ஈடற்ற தியாகத்தைப் பிரபஞ்சத்திலுள்ள அனைவரும் மிகத்திட்டமாக அறிந்துகொள்ளுகிறார்கள். இந்த அறிவின் அடிப்படையில் அனைவருக்கும் முன்பாகக் கிறிஸ்து அவருக்கு உரிய உன்னதமான ஸ்தானத்திலிருந்து மேலும் உயர்த்தப்பட்டு, எல்லா மகத்துவங்களுக்கும் எல்லா அதிகாரங்களுக்கும் எல்லா நாமங்களுக்கும் மேலாக மகிமைப்படுத்தப்படுகிறார். ஆனால் இதினாலெல்லாம் அவர் சந்தோஷப்படுகிறவர் அல்ல. அவருக்கு முன்னால் இருக்கும் பெரிய சந்தோஷம் தம்முடைய பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவர முடிந்ததே என்பதுதான். அவர் சிலுவையின் கொடிய மரணத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அதின் நிந்தையைப் பொருட்படுத்தாமலிருந்ததற்கும் காரணமாயிருந்தது அவர் முன்பாக வைக்கப்பட்டிருந்த இந்த சந்தோஷமே. அவர் அனுபவித்த துக்கமும் அவமானமும் கற்பனைக்கே எட்டாதவைகள்தான். ஆனால் அவருடைய பிள்ளைகள் அடையும் மகிமையும் அதனால் அவர் அடையும் மகிழ்ச்சியும் அதையும்விட மிகவும் அதிகமாக இருக்கும். தன்னால் மீட்கப்பட்டவர்களை அவர் பார்க்கிறார். அவர்கள் அவரது சாயலில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது இருதயமும் முழுமையான தெய்வீகத் தன்மை பெற்றதாக விளங்குகிறது. அவர்கள் ஒவ்வொருவரது முகமும் அவர்களது ராஜாவின் முகத்தைப்போலவே பொலிவுள்ளதாக இருக்கிறது. அவர் அவர்களைக் காணும்பொழுது தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு திருப்தியடைகிறார். பிறகு திரள்கூட்டமாக இருக்கும் நீதிமான்கள் அக்கிரமக்காரர்கள் இருவருக்குமே கேட்கும்படியான குரலில்: என் இரத்தத்தின் விலைக்கிரயமானவர்கள் இவர்களே. இவர்களுக்காகவே நான் பாடுபட்டேன். இவர்களுக்காகவே நான் மரித்தேன். நித்திய நித்திய காலமாக என்னுடனேயே இவர்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அப்பொழுது வெள்ளை அங்கிகள் தரித்து சிங்காசனத்தைச் சுற்றி நிற்கும் நீதிமான்களிடமிருந்து: “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார்” (வெளி. 5:12) என்ற இனிமையான பாடல் ஒலிக்கிறது. (26)GCTam 802.1

    தேவன் நீதியுள்ளவரே என்பதை ஒப்புக்கொண்டு கிறிஸ்துவின் மகத்துவத்திற்கு முன்பாக சாத்தான் பணிந்துகொண்டான் என்றாலும் அவனுடைய குணம் மாறிவிடவில்லை. ஆகவே கலகம் செய்யும் ஆவி ஒரு பெரும் வெள்ளம்போல மீண்டும் அவனில் பொங்குகிறது. தனது தோல்வியைக் கண்டு அவன் வெறிபிடித்தவனாகிறான். தான் ஆரம்பித்த ஆன்மீகத்திற்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்குவதில்லை என்று முடிவுசெய்கிறான். நம்பிக்கையற்ற இந்த நிலையிலும், பரலோகத்தின் ராஜாவிற்கு எதிரான போரில் கடைசிப் போராட்டம் ஒன்றை நடத்திப்பார்த்துவிடுவது என்று முடிவுசெய்கிறான். தனக்கு இதுவரையிலும் ஊழியம் செய்து போருக்கு ஆயத்தமடைந்து சுற்றிலும் நின்றுகொண்டிருக்கிறவர்களிடம் ஓடுகிறான். அவர்கள் மேல் தனது வெறியின் ஆவியை ஊற்றி, உடனடியாகப் போரில் இறங்கும்படி அவர்களைத் தூண்டிவிடுகிறான். ஆனால் அவர்கள் இப்பொழுது சாத்தானைக் குறித்து நன்கு அறிந்துகொண்டார்கள். அவர்கள்மேல் அவன் செலுத்திவந்த ஆதிக்கம் முடிந்துவிட்டது. சாத்தானை நம்பி தேவனுக்கெதிராகக் கலகத்தில் இறங்கின கோடான கோடிமக்கள் அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் இப்பொழுது அவனைப் பொருட்படுத்துகிறவர்கள் ஒருவரும் இல்லை. சாத்தான் எப்படி தேவனை வெறுக்கிறானோ அப்படியே இந்தக் கலகக்காரர்களும் தேவனை வெறுக்கிறார்கள். ஆயினும் தங்களுடைய நிலைமை நம்பிக்கையற்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே பரிசுத்தவான்களைத் தாக்குவதற்குப்பதில் இப்படிப்பட்ட நிலைக்குக் காரணனான சாத்தான்மீதும் அவனது ஏவலர்களாக இருந்த தங்களை வஞ்சகத்தில் இழுத்துப்போட்டவர்கள்மேலும் கடுஞ்சினம்கொண்டு வெறிபிடித்த பிசாசுகளைப்போலப் பாய்ந்து தாக்குகின்றனர். (27)GCTam 803.1

    சாத்தானின் இந்த நிலையை: “உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன். ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்” (எசே. 28:16— 19) என்கிறது வேதாகமம். (28)GCTam 804.1

    சாத்தானுடைய படைகள் இப்படி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதுபற்றி “அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்” (ஏசா. 9:5) என்கிறார். “சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்”-ஏசா. 34:2. “துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு”-சங். 11:6. சாத்தானுடைய படைகள் சாத்தானையும் ஒருவரையொருவரும் தாக்கிச் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்பொழுது தேவன் ஆகாயத்தில் இருந்து அக்கினியைப் பொழிகிறார். பூமியின் தரைகள் வெடிக்கின்றன. அவற்றின் வழியாகப் பூமியின் வயிற்றிலிருந்த அக்கினிப் பிழம்புகள் சீறிப்பாய்கின்றன. பூமி சூளை எரிவதுபோல எரிகிற நாள் இதுதான். ஆனால் இது விசேஷமான அக்கினி. கற்பாறைகளுங்கூட இந்த அக்கினியில் எரிகின்றன. பூமியின் மூலகங்கள் அனைத்தும் எரிந்து கடுஞ்சூட்டினால் உருகுகின்றன. பூமியுங்கூட உருகுகிறது. அதில் இருந்த பாவத்தீட்டுகள் எல்லாம் எரிந்தழிகின்றன. மல்கியா 4:1 மற்றும் பேதுரு 3:10 வசனங்கள் நிறைவேறுகின்றன. பூமியின் பரப்பு ஒரு பெரும் நெருப்புக் குழம்பாகவும் கொதிக்கிற நெருப்புக் கடலாகவும் ஆகிறது. தேவபயம் இல்லாத மனிதர்கள்மேல் நியாயத்தீர்ப்பும் பேரழிவும் வரக்கூடிய நாள் இதுவே. “அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்” (ஏசா. 34:8) என்று கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. (29)GCTam 804.2

    அக்கிரமக்காரர்கள் தங்களுக்குரிய பலனை பூமியிலே அடைந்தாயிற்று. “அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 4:1) என்று கூறப்பட்டிருக்கிற நாள் இதுவே. அவர்களில் சிலர் சில நொடிகளிலே அழிந்துபோகிறார்கள். மற்றவர்கள் நாள்கணக்கில் எரிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் அவரவருடைய கிரியைகளுக்குத் தக்கபடி தண்டிக்கப்படுகிறார்கள். பரிசுத்தவான்களைப் பாவம் செய்ய வைத்தவன் சாத்தானே. தான் கலகம் செய்த பாவத்தை தன்மேல் சுமத்திக்கொண்டதுமன்றி, மற்றவர்களையும் கலகம்செய்ய வைத்து அதினால் மேலும் அதிகமான பாவத்தைத் தன்மேல் சுமத்திக் கொண்டவன் சாத்தான். ஆகவே சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட யாவரையும்விட, சாத்தான் அடையும் தண்டனை மிகவும் அதிகமாக இருக்கும். அவனுடைய வஞ்சகத்தால் மற்ற அனைவரும் எரிந்து அழிந்துபோனபின் சாத்தான் மேலும் உயிரோடு இருந்து வேதனைப்பட்டுக்கொண்டிருப்பான். அனைவரும் எரிந்து சாம்பலான பின்னர் சாத்தானும் எரிந்தழிந்து சாம்பலாவான். பரிசுத்தப்படுத்தும் இந்த நெருப்பில் பாவிகள் அனைவரும் என்றென்றைக்கும் அழித்தொழிக்கப்படுகிறார்கள். பாவம் என்கிற மரம் வேரும் கொப்பும் இல்லாதபடி முற்றுமாக அழிக்கப்படுகிறது. சாத்தான் வேர், அவனால் விழுந்தவர்களே கொப்புகள். நியாயப்பிரமாணம் விதிக்கும் தண்டனை முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுகிறது. அதைப்பார்த்து மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள அனைவரும் யேகோவா நீதியானவர் என்பதை அறிக்கை செய்கிறார்கள். (30)GCTam 805.1

    சாத்தானுடைய அழிவு வேலைகள் இத்தோடு முடிந்து இனி என்றென்றும் இல்லாமல்போகின்றன. ஆறாயிரம் ஆண்டுகளாகச் சாத்தான் தனக்குச் சித்தமானவைகளைச்செய்து, இந்தப் பூமியைக் கொடுமையால் நிரப்பி, பிரபஞ்சம் முழுவதற்கும் வேதனையை உண்டாக்கிக்கொண்டிருந்தான். ஆகவே சர்வ சிருஷ்டியும் ஏகமாய் தவித்துப் பெரும் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போது தேவனால் படைக்கப்பட்ட யாவரும் அவன் தரும் தொந்தரவுகளில் இருந்தும் அவன் உண்டாக்கும் சோதனைகளிலிருந்தும் என்றென்றும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். ஏசாயா 14:7-60 சொன்னபடி: “பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.” தேவன்மேல் விசுவாசத்தைக் காத்துக்கொண்ட அனைவரும் வெற்றிப் பெருமிதமும் தேவனுக்குப் புகழ்ச்சியும் நிறைந்த சத்தங்களை எழுப்புகிறார்கள். அது பெருந்திரளான கூட்டத்தினர் செய்யும் ஆரவாரம் போலவும் பெருங்கடலின் ஓசையைப்போலவும் பலத்த இடிமுழக்கங்களைப் போலவும் இருந்து, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார் என்று கூறுகிறது. (வெளி. 19:6). (31)GCTam 805.2

    பூமியைச் சுற்றிலும் நெருப்பு வளைத்திருக்கும்போது நீதிமான்கள் மட்டும் பரிசுத்த நகரத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானு மாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;”- வெளி. 20:6. “தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்;”-சங். 84:11. (32)GCTam 806.1

    “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று”-வெளி. 21:1. அக்கிரமக்காரர்களைப் பட்சித்த நெருப்பு அவர்களைப் பட்சித்ததோடு நில்லாமல் பூமியின்மேலிருந்த எல்லாப் பாவத்தீட்டுகளையும் எரித்து அழித்துவிட்டது. இவ்வாறாகப் பூமி பரிசுத்தப் படுத்தப்பட்டுவிட்டது. தன் வேலையை முடித்தபின், அந்த நெருப்பும் அவிந்துவிட்டது. பாவத்தின் பயங்கர விளைவுகளை மீட்கப்பட்டவர்களுக்கு உணர்த்தும்படி, நரகத்தின் தீ எப்பொழுதும் எரிந்துகொண்டிருப்பதில்லை. (33)GCTam 806.2

    பாவத்தின் பயங்கர விளைவுகளை உணர்த்தும்படி ஒரேயொரு சின்னம் மட்டுமே இருக்கும் சிலுவையின் தழும்புகள். நமது மீட்பரின் சரீரத்தில் அவை எப்பொழுதும் இருக்கும். அவரது தலை, விலா, கைகள், கால்கள் இவற்றில் இருக்கும் தழும்புகளைத்தவிர பாவத்தின் மற்றெல்லாச் சின்னங்களும் துடைக்கப்பட்டுவிட்டன. கிறிஸ்துவை அவரது மகிமையில் பார்த்த தீர்க்கதரிசி: “அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது” (ஆபகூக் 3:4) என்கிறார். ஆம். அவருடைய பராக்கிரமம் மறைந்திருப்பதும் அதிலேதான். மீட்பின் பலியைச் செலுத்தியதன்மூலம் பாவிகளுக்கு இரக்கங்காட்டி அவர்களை இரட்சிக்க வல்லவராக இருந்தபடியால், தாம் காட்டிய இரக்கத்தை அலட்சியம் செய்தவர்களைத் தண்டிக்கவும் அதிகாரம் பெற்றவராக கிறிஸ்து இருந்தார். அவரது சரீரத்திலே இருக்கும் அவமானச் சின்னங்களே அவரை மகா கனம் பொருந்தியவராகவும் ஆக்குகின்றன. அவரது அன்பின் வல்லமை எப்படிப்பட்டது, அவர் எவ்வளவாகப் புகழத்தக்கவர் என்பதை யுகயுகமாக நித்திய நித்தியமாக அந்த கல்வாரியின் காயங்கள் அறிவித்துக்கொண்டேயிருக்கும். (34)GCTam 806.3

    “மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்”-மீகா 4:8. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்குள் நுழைய முடியாதபடி சுடரொளிப் பட்டயம் தாங்கிய தூதனால் தடுக்கப்பட்டிருந்தார்கள். அன்று முதலாக இழந்துபோன அந்த சுதந்திரத்தை என்றைக்கு மீட்டுக்கொள்ளுவோமோ என்கிற ஏக்கத்தோடு பரிசுத்தவான்கள் காத்திருக்கிறார்கள். அந்த ஏக்கம் தீரும்நாள் வந்துவிட்டது. ஆதியிலே இந்தப் பூவுலகம் மனிதனுக்கு அவனுடைய ராஜ்யஸ்தலமாக இருக்கும்படிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நழுவிப்போய் சாத்தானுடைய கரங்களுக்குள் விழுந்துவிட்டது. இத்தனை நாட்களாக அந்த எதிரியிடம் அல்லல்பட்டபின் இப்பொழுது மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தின் மூலம் மீண்டும் மனிதன் கைக்கு வந்திருக்கிறது. பாவத்தினால் மனிதன் இழந்துபோன அனைத்துமே இப்பொழுது திரும்பக் கிடைத்துவிட்டன. “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து” என்று ஏசா. 45:18 உரைக்கிறது. மீட்கப்பட்ட மக்களின் நித்திய வாசஸ்தலமாக இந்த பூமி மாற்றப்படும்போது, தேவன் இந்தப் பூமியை ஆதியில் என்ன நோக்கத்திற்காகப் படைத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுகிறது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்”-சங். 37:29, (35)GCTam 807.1

    எதிர்கால சுதந்திரத்தை பொருட்செல்வமாக பார்த்துவிடுவோமோ என்கிற பயம், அதை நம்முடைய வீடாக பார்க்க நடத்துகிற சத்தியத்தை ஆவிக்குரியதாக அர்த்தப்படுத்தும்படி அநேகரை நடத்தியிருக்கிறது. கிறிஸ்து தமது சீடர்களிடம் தாம் அவர்களுக்கு வாசஸ்தலங்களை ஆயத்தப்படுத்துவதற்காக போயிருப்பதாக நிச்சயப்படுத்தினார். தேவனுடைய வார்த்தை போதிப்பதை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள், பரலோக உறைவிடத்தைக் குறித்து அறியாமல் இருக்கமாட்டார்கள். என்றாலும், “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரி. 2:9). நீதிமான்களுக்கு தேவன் ஆயத்தம் செய்துவைத்திருக்கும் காரியங்களை சரியாக விவரிக்க மனித மொழிகளால் முடியாது. அதை நேரடியாகப் பார்க்கும்பொழுதுமட்டுமே அதைப் புரிந்துகொள்ளமுடியும். இனிமேல் தோன்ற இரக்கும் உலகத்தின் மகிமையை மனித மனம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. (36)GCTam 807.2

    வேதாகமத்தில் இரட்சிக்கபட்டவர்களின் ஸ்தலம் பரமதேசம் எனப்படுகிறது. (எபி. 11:14—16). அங்கே பரம மேய்ப்பர் தமது ஆடுகளை ஜீவதண்ணீருள்ள ஊற்றுகளுக்கு நடத்துகிறார். ஜீவ விருட்சம் தனது கனிகளை ஒவ்வொரு மாதமும் தருகின்றது. அந்த மரத்தின் இலைகள் தொடர்ந்து ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள். ஆகவே அங்கே என்றென்றும் வற்றாத அருவிகள் இருக்கும். அந்தத் தண்ணீர் பளிங்குபோலத் தெளிவாக இருக்கும். அந்த அருவிகளின் கரைகளில் அமைதியாக ஆடி அசையும் மரங்கள் இருக்கும். அதையொட்டி கிரயம் கொடுத்து மீட்கப்பட்டவர்கள் உலாவிவரப் பாதைகள் இருக்கும். அந்தப் பாதைகளின்மேல் மரங்களின் நிழல் விழுந்துகொண்டிருக்கும். அங்கே நீண்டு பரந்த சமவெளிகள் இருக்கும். ஆங்காங்கே அழகிய மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் தேவன் உண்டாக்கி வைத்திருப்பார். இதுகாறும் பயணிகளாயும் நிலையின்றி அலைந்து திரிகிறவர்களாயும் இருந்த தேவ மக்கள் அந்த அமைதியான சமவெளிகளிலே இந்த ஜீவ அருவிகளின் பக்கத்திலே வீடுகளில் தங்கி வாழ்வார்கள்.(37)GCTam 808.1

    தேவ ஜனங்கள் அனுபவிக்கும் சமாதானம்பற்றி வேதாகமம் “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்'‘ (ஏசா. 32:18), “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்” (ஏசா. 65:21,22) என்கிறது. (38)GCTam 808.2

    “என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப் பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.” “முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.” “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பால சிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்”ஏசாயா 35:1 55:13 11:6,9. (39)GCTam 808.3

    பரலோகச் சூழ்நிலையில் வேதனை இருக்கமுடியாது. அங்கே கண்ணீர் சிந்துதல் கிடையாது. துக்கத்தின் சின்னங்கள் எதுவும் இருக்கமாட்டாது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.’ “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில்வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” -வெளி. 21:4 ஏசா. 33:24. (40)GCTam 809.1

    அங்கே புதிய எருசலேம் நகரம் இருக்கும். மகிமைப்பட்ட புதிய பூமியின் தலைநகராக அது இருக்கும். அந்தப் புதிய எருசலேமைப்பற்றி “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்” (ஏசா. 62:3) என்கிறார். “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.” “இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்”-வெளி. 21:11,24. “நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை”-ஏசா. 65:19. “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்”-வெளி. 21:3. (41)GCTam 809.2

    தேவபட்டணத்தில் இரவு என்பதே இராது. தூங்குவது ஓய்வெடுப்பது என்பது யாருக்குமே விருப்பமாகவோ தேவையாகவோ இராது. தேவனின் சித்தத்தைச் செய்வதிலும் அவரது நாமத்தைத் துதித்துப் பாடுவதிலும் களைப்பு என்பதே ஏற்படாது. விடியற்காலையின் உற்சாகம் எப்பொழுதும் இருக்கும். ஒருபோதும் ஒரு சிறிதும் குறைந்துவிடாது... “அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” (வெளி. 22:5). தேவனிட மிருந்தும் ஆட்டுக்குட்டியானவரிடமிருந்தும் வருகின்ற மகிமையின் ஒளி பரிசுத்த நகரத்தை எப்பொழுதும் நிறைத்திருக்கும். அந்த ஒளி நடுப்பகலில் உள்ள சூரிய ஒளியைவிடப் பலமடங்கு பிரகாசமாக இருக்கும். ஆனால் அது கண்களை வேதனைப்படுத்தாது. மீட்கப்பட்டவர்கள் சூரியன் இல்லாத நித்தியமான மகிமையின் பகல் வெளிச்சத்திலே என்றென்றும் இருப்பார்கள். (42)GCTam 809.3

    புதிய எருசலேமின் இன்னொரு சிறப்பு: “அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்”-வெளி. 21:22. அதாவது தேவஜனங்கள் பிதாவையும் குமாரனையும் நேரடியாகவே கண்டு தொழுதுகொள்ளுகின்ற பாக்கியம் பெற்றிருப்பார்கள். இப்பொழுது நாம் இயற்கையிலும் மனிதர்களிடத்திலும் தேவன் செயல்படக்கூடிய செயல்படுகள் மூலமாகவே தேவனுடைய சாயலைப் பார்க்கிறோம். (1 கொரி. 13:12). அது கண்ணாடியில் பிரதிபலிக்கப்படும் உருவத்தைக் காண்பதுபோலத் தெளிவின்றி இருக்கிறது. ஆனால் தேவப்பட்டணத்திலோ நாம் அவரை முகமுகமாகக் காண்போம். அவரது மகிமை கலைக்கப்படாமல் ஆதியில் இருந்த மகிமையுடன் அவரைக் காண்போம். நாம் அவருக்கு முன்பாக நின்று அவரது முகத்தின் மகிமையை தெளிவாகக் காண்போம். (43)GCTam 810.1

    தேவப்பட்டணத்தில் இருப்பவர்கள் தாங்கள் அறியப்பட்டு இருப்பதைப்போலவே தாங்களும் அறிந்திருப்பார்கள். அதாவது மனித ஆத்துமாவிலே தேவன் உருவாக்கிவைத்திருக்கும் அன்பும் இரக்கமுமாகிய மேன்மையான உணர்வுகள் ஒவ்வொருவரிடத்திலும் ஒருவருக்கொருவரிடத்திலும் முழுமையாகவும் மிக ஆழமாகவும் செயல்படும். அங்கே பரிசுத்தமான நபர்களின் உறவும் நட்பும் நமக்குக் கிடைக்கும். அன்றுமுதல் இன்றுவரை, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தங்கள் ஆடைகளை வெளுத்து வெண்மையாக்கிக் கொண்ட அனைத்து மனிதர்களும் ஆசீர்வதிக்கப்பட்ட தேவதூதர்களுமாகிய அனைவரும் ஒருவருக்கொருவர் இடையில் காட்டும் அன்னியோன்யமும் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் உள்ள தெய்வீக உறவுகளும் அங்கே இருக்கும். “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும்” (எபே. 3:14) என்றபடி இவையெல்லாம் சேர்ந்து மீட்கப்பட்ட மனிதர்களின் மகிழ்ச்சியை முழுமையாக்கும். (44)GCTam 810.2

    அங்கே மனிதர்களின் மனமும் அறிவும் மிகவும் விசாலமடைந்தவையாக இருக்கும். அவற்றைக்கொண்டு அவர்கள் தேவனுடைய படைப்பின் வல்லமையான அதிசயங்களையும் பாவிகளுக்காக மரித்தது என்கிற அந்த புதிரான அன்பின் ஆழங்களையும் என்றென்றும் ஆராய்ந்துகொண்டிருப்பார்கள். அதிலே அவர்கள் தெவிட்டாத இன்பங்காணுவார்கள். மக்கள் மீண்டுமாக ஆண்டவரை ஒருபொழுதும் மறந்துபோகமாட்டார்கள். அப்படி மறந்துபோகச் செய்யும்படி கொடுமையும் வஞ்சகமும் நிறைந்த எதிரி எவனும் அங்கே இருக்கமாட்டான். மனிதர்களின் அறிவு நுட்பம் மேலும் மேலும் அதிகரிக்கும். திறமைகள் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கும். அறிவைத் தேடுகின்ற முயற்சிகள் மனதைக் களைப்படையச் செய்யவோ சோர்ந்துபோகச் செய்யவோ மாட்டாது. மிகச் சிறந்த திட்டங்களை நடத்தலாம். மிக உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். மிகப் பெரிய ஆசைகளை நிறைவேற்றலாம். அதற்குப்பின்னும் தொடரவேண்டிய புதுப்புது எல்லைகளும் மலரவேண்டிய புதுப்புது அற்புதங்களும் புரிந்து கொள்ளவேண்டிய புதுப்புது புதிர்களும் உடல்வலிமைக்கும் மனோ பலத்திற்குமான புதுப்புது சவால்களும் என்றென்றும் இருந்துகொண்டே இருக்கும். (45)GCTam 810.3

    மீட்கப்பட்டவர்களின் பார்வைக்கும் பயனுக்கும் படிப்பிற்கும் பரலோகத்தின் கருவூலங்கள் அனைத்துமே திறந்திருக்கும். இப்பிரபஞ்சத்தில் பூமியைப்போன்ற கணக்கற்ற உலகங்களும் அவற்றில் பாவத்தையே அறியாத தேவ குடும்பத்தின் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே மனிதர்கள் பாவம்செய்து துன்பப்பட்டபோது, தாங்களும் துயருற்றவர்கள். பிறகு மீட்படைந்து சந்தோஷமாகப் பாடியபொழுது தாங்களும் மகிழ்ந்து பாடியவர்கள். மீட்படைந்த மனிதர்கள் அந்த உலகங்கள் ஒவ்வொன்றையும் பறந்து சென்று பார்த்து மகிழுவர். அங்கே இருக்கும் பாவமே அறியாத பரிசுத்த மக்களோடு கலந்துரையாடி, அவர்களுடைய ஞானத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளுவார்கள். அவர்கள் தேவனுடைய படைப்பின் நுட்பங்களைக் குறித்து யுகயுகமாக ஆராய்ந்து அறிந்துவைத்திருக்கும் அறிவையும் நுட்பங்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டு மகிழ்வார்கள். சூரியனும் நட்சத்திரங்களும் இன்னும் பலவும் தத்தமக்கு நியமிக்கப்பட்ட பாதைகளிலே சென்று சிங்காசனத்தைச் சுற்றிவருகிற படைப்பின் மகத்துவத்தைத் தமது அயராத கண்களால் கண்டு மகிழ்வர். மிகச் சிறியதானாலும் மிகப் பெரியதானாலும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் படைத்தவரின் நாமம் எழுதப்பட்டிருப்பதையும் அவரது உன்னதமான படைப்பின் வல்லமை வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் காண்கின்றனர். (46)GCTam 811.1

    நித்தியத்தின் ஆண்டுகள் உருண்டோடுகையில் தேவனையும் கிறிஸ்துவையும்பற்றிமேலும்மேலும் சிறப்பானமகிமையானவெளிப்படுத்தல்கள் அவரது பிள்ளைகளுக்குக் கிடைக்கும். இப்படியாக தேவனைப்பற்றிய அறிவு விருத்தியாகும்போது, ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு, மதிப்பு என்பதான மகிழ்ச்சி அனைத்துமே அதிகரித்துக்கொண்டே இருக்கும். தேவனைப்பற்றி மனிதர்கள் எந்த அளவிற்கு அறிவடைகிறார்களோ, அந்த அளவிற்கு அவரது குணாதிசயம் எவ்வளவு அழகானது என்பதைக் கண்டுகொள்ளுவார்கள். மீட்பரின் மூலம் மனிதர்கள் அடைந்திருக்கும் ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டது என்பதையும், சாத்தானோடு நடந்த ஆன்மீகப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஒப்பற்ற சாதனைகள் என்ன என்பதையும் கிறிஸ்துவானவர் எடுத்து விளக்குவார். அப்போது மீட்கப்பட்டவர்களின் இருதயம் ஆச்சரியமான மகிழ்ச்சியால் துள்ளும். தேவன்மேல் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் மேலும் ஆழமானதாகத் திகழும். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் தங்களது பொன் சுரமண்டலங்களை எடுத்து வாசிப்பார்கள். ஆயிரம் ஆயிரமும் பதினாயிரம் பதினாயிரமுமான குரல்கள் ஒன்றாயிணைந்து உரத்த தொனியில் புகழாரங்கள் பாடுவர். (47)GCTam 811.2

    “வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்”—வெளி. 5:13. (48)GCTam 812.1

    மாபெரும் ஆன்மீகப்போராட்டம் முடிந்தது. இனி பாவமும் இல்லை, பாவிகளும் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் பரிசுத்தமாயிருக்கிறது. நன்மையும் மகிழ்ச்சியும் இணைந்தொலிக்கும் இசை நன்றாகப் பிரபஞ்சமெங்கும் கேட்கிறது. அனைத்தையும் படைத்த ஆண்டவரிடமிருந்து வரம்பெற்ற வெளியெங்கும் உயிரோட்டமும் ஒளியும் உவகையும் பெருகி வழிந்தோடுகின்றன. அணுமுதல் அண்டம்வரை, உயிருள்ளவை உயிரற்றவை அனைத்துமே மருவற்ற அழகும் குறைவற்ற உவப்பும் கொண்டு விளங்குவதைக் காணும்போது ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. அவைகளெல்லாம் ஆண்டவர் அன்பாகவே இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. (49)GCTam 812.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents