பிடுங்கப்பட்ட தாலந்து
சோம்பேறி ஊழியக்காரன் குறித்து, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்து தாலந்துள்ளவனிடத்தில் கொடுங்கள்” என்று தீர்ப்புச் சொல்லப்பட்டது. உண்மையுள்ள ஊழியனுக்கு அதற்கேற்ற பிரதிபலன் வழங்கப்பட்டது. எனவே, இறுதி நியாயத்தீர்ப்பில் நன்மையான பிரதிபலன் மட்டுமல்ல, இந்த வாழ்க்கையில் செய்த பாவத்திற்கேற்ற தண்டனையும் வழங்கப் படுமென்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இயற்கை உலகில் இருப்பது போலவே ஆவிக்குரிய உலகிலும் இருக்கும். பயன் படுத்தப்படாத ஒவ்வொரு திறனும் பெலவீனப்பட்டு, ஒன்றுமில்லாமல் போகும். சுறுசுறுப்பாகச் செயல்படுவதே வாழ்க்கை சட்டம் ; சோம்பேறித்தனம் மரணம். “ஆவியினுடைய அனுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.” 1 கொரி 12:7. வரங்களை பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் போது அவை விருத்தியடையும். சுயநன்மைக்காக மட்டும் பயன்படுத்தும்போது அவை குறைவு பட்டு, இறுதியில் அகற்றப்படும். தான் பெற்றதை பிறருடன் பகிர விரும்பாதவன், கொடுப்பதற்கு இறுதியில் தன்னிடம் எதுவும் இல்லாததைக் கண்டுகொள்வான். நிச்சயமாகதன்வளர்ச்சியைக் குன்றச் செய்கின்ற, ஆத்தும் திறன்களை இறுதியில் அழிக்கிற ஒரு செயல் முறைக்கு தன்னை விற்கிறான்.COLTam 369.3
சுயநலமாக வாழ்ந்து, சுயநலன்களை எல்லாம் திருப்தி செய்த பிறகு, கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கலாமென எவரும் நினைக்கவேண்டாம். சுயநலமற்ற அன்பின் சந்தோஷத்தில் அவர்கள் பங்கெடுக்கவே முடியாது . பரலோகம் நிரம்பியிருக் கும் அந்த அன்பின் சூழலை அவர்கள் புரிந்து கொள்ளவே முடியாது . தேவதூதர்களின் இன்குரலும் அவர்களது சுரமண்ட லங்களின் இசையும் இவர்களைத் திருப்திப்படுத்தாது. பரலோக அறிவியலானது இவர்களுடைய சிந்தைகளுக்கு புரியாத புதிராகவே இருக்கும்.COLTam 370.1
கிறிஸ்துவிற்காக ஊழியம் செய்யாதவர்களையும்ம், எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், தங்களைப்பற்றியே சிந்தித்து தங்களை மட்டுமே திருப்திப்படுத்தி, அவரைவிட்டு வழிவிலகிச் செ ன்றவர்களையும் பூமியனைத்திற்கும் நியாயாதிபதியானவர் மகா நியாயத்தீர்ப்பின் நாளில் பாவிகளோடு சேர்த்து நிறுத்துவார். பாவிகளுக்கான ஆக்கினையை இவர்களும் அடைவார்கள்.COLTam 370.2
தங்களை கிறிஸ்தவர்களெனச்சொல்லும் கிறில் தவர்கள் பலர், தேவனுடைய கோரிக்கைகளை அசட்டை செய்கிறார்கள். ஆனாலும், அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. தேவனைத் தூஷிப்பவர்களும், கொலைகாரரும், விபசாரக்காரரும் தண்டனைக்கு தகுதியானவர்களென அறிவார்கள். ஆனால் அவர்களோ மார்க்க சம்பந்தமான சேவைகளைச் சந்தோஷமாகச் செய்கிறார்கள். சந்தோஷமாக பிரசங்கத்தைக் கேட்பதால், தங்களை கிறிஸ்தவர்களென கருதுகிறார்கள். தங்கள் மேல் அக்கறை செலுத்துவதிலேயே காலங்கடத்தி யிருப்பதால், உண்மையற்ற ஊழியனைக் குறித்து தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள் என்று தீர்ப்புச் சொல்லப்பட்டது போல தங்களைப் பற்றியும் தீர்ப்புச் சொல்லப்படும் நாளில் திகைத்துப்போவார்கள். யூதர்களைப் போல, தங்களுடைய ஆசீர்வாதங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென அறியாமல், தாங்களே அனுபவிக்கிறார்கள்.COLTam 370.3
கிறிஸ்தவர்களாக எந்த முயற்சியும் எடுக்காதவர்கள், வேலை செய்ய தங்களுக்கு திறமையில்லையெனச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு திறமையற்றவர்களாகவா தேவன் அவர்களைப் படைத்தார் ? ஒருபோதும் இல்லை! ஒரு வேலையும் செய்யாமல் அவர்கள் தங்களை திறனற்றவர்களாக்கி, துணிகரமான தங்கள் தீர்மானத்தால் அந்த நிலையை நிரந்தரமாக்கிவிட் டார்கள். தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப்போடுங்கள். என்கிற தீர்ப்பை ஏற்கனவே தங்களுடைய தன்மை மாற்றத்தில் அவர்கள் உணர ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் தங்கள் தாலந்துகளை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரே வெளிச்சமாகிய பரிசுத்த ஆவியானவரை இறுதியில் அணைத்து விடுகிறார்கள். இது நித்தியத்திற்கான தீர்மானம்; அவர்கள் தாமே செய்த இந்தத் தீர்மானத்தால் பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்” என்கிற தீர்ப்பு, பரலோக முத்திரையுடன் பிறக்கிறது.COLTam 371.1