12 - கொடுப்பதற்காகக் கேட்டல்
கிறிஸ்துவானவர் நமக்குச் சொல்லவேண்டியதை அறியும் படிக்கு பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொண்டே யிருந்தார். “நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடைய தாயிருக்கிறது” என்று சொன்னார். யோவான் 14:24. “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய வந்தார் ” மத் 20:28. அவர் வாழ்ந்ததும், சிந்தித்ததும், ஜெபித்ததும் தமக்காக அல்ல, மற்றவர்களுக்காகத்தான். பரலோக வெளிச்சத்தை மனி தர்களுக்குக் காட்டும் படிக்கு, தினமும் காலை வேளைகளில் பலமணி நேரங்கள் பிதாவோடு நேரம் செலவிட்டார். ஒவ்வொரு நாளும் புதிதாக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றார். தினமும் அதிகாலை வேளைகளில் தேவன் அவரை நித்திரை யினின்று எழுப்பினார்; அவர் மற்றவர்களுக்கு கிருபை அருளும் படிக்கு, அவருடைய ஆத்துமாவையும் வாயையும் கிருபையால் நிறைத்தார்.களைத்தோருக்கும், சிறுமைப்பட்டோருக் கும் சமயத்திற்கேற்ற வார்த்தைகளை அவர் பேசும்படிக்கு, பரலோக மன்றங்களிலிருந்து அவ்வப் போது அவருக்கு வார்த்தைகள் அருளப்பட்டன. “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும் படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்வி மானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள் ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.” ஏசா 50:4.COLTam 134.1
கிறிஸ்துவின் ஜெபங்களும் பிதாவோடு பேசுவதை அவர் வழக்கமாக வைத்திருந்ததும், அவருடைய சீடர்களில் அதிக தாக்கத்தை உண்டாக்கியது. ஒருநாள் தங்கள் ஆண்டவர் சிறிது நேரம் தங்கள் மத்தியில் இல்லாததைக் கவனித்த சீடர்கள், வேண்டுதல் செய்வதில் அவர் மூழ்கியிருக்கக்கண்டார்கள். அவர்கள் அருகில் நின்றதை அறியாதவர்போல உரத்த குரலில் ஜெபித்துக்கொண்டிருந்தார். சீடர்களுடைய இதயங்கள் ஆழமாக அசைக்கப்பட்டன. அவர் ஜெபித்து முடித்தபின், ‘ஆண்டவரே, எங்களுக்கு ஜெபம் பண்ணப் போதியும் என்று ஆவலோடு கேட்டார்கள்.COLTam 135.1
அதற்கு பதிலாக, மலைப்பிரசங்கத்தின் போது தாம் சொல்லிய கர்த்தருடைய ஜெபத்தை, கிறிஸ்து மீண்டுமாகச் சொன்னார். பிறகு தாம் அவர்களுக்கு போதிக்க விரும்பின பாடத்தை ஓர் உவமை யின் மூலம் எடுத்துக்கூறினார்.COLTam 135.2
“உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிற வனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன் முன்வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று சொன்னார். லூக் 11:5-7COLTam 135.3
தான் திரும்பக் கொடுக்கும்படிக்கு அவன் அப்பம் கேட்டதாக கிறிஸ்து சொல்கிறார். அப்பம் கிடைத்தாலொழிய, நேரம் பிந்தி,களைத்துப்போய்வந்த வழிப்பிரயாணியின் தேவைகளை அவன் சந்திக்க முடியாது. தன்னுடைய அண்டை வீட்டுக்காரன் தொந்தரவை விரும்பாவிட்டாலும், அவனிடம் போய் வேண்டுவதை நிறுத்தவில்லை; தன் நண்பனின் துன்பத்தைத் தீர்க்கவேண்டும். அவன் விடாமல் வேண்டிய தற்குப் பலன் கிடைத்தது. அவனது தேவைகள் சந்திக்கப்பட்டன.COLTam 135.4
அதுபோலவே சீடர்களும் தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களை நாடவேண்டியிருந்தது. திராளனபேரை கிறிஸ்து போஷித்தார்; பரலோக அப்பம் குறித்து அவர்களுக்குப் பிரசங்கித்தார்; அதன் மூலம் தம் பிரதிநிதிகளாக அவர்கள் செய்யவேண்டிய பணியை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஜீவ அப்பம்பற்றி அவர்கள் மக்களுக்குப் போதிக்கவேண்டியிருந்தது. அவர்களுக்கு இந்தப் பணியை நியமித்தவர், அவர்களது விசுவாசம் பலமுறை சே பாதிக்கப்படும் என்பதையும் கண்டார். எதிர்பாராத சூழ்நிலைகளுக்குள் அவர்கள் தள்ளப்பட்டு, மனிதர்களா தங்களுடைய இயலாமையை உணரவிருந்தார்கள். ஜீவ அப்பத்தின் மேல் பசியோடிருந்த ஆத்துமாக்கள் அவரிடம் வரவிருந்தார்கள்; அவர்களுக்குக் கொடுப்பதற்கு தாங்கள் திரானியற்றவர்கள், உதவியற்றவர்கள் என்பதை உணரவிருந்தார்கள். ஆவிக்குரிய உணவை அவர்கள் பெற்றாக வேண்டும்; இல்லையேல் பிறருக்கு வழங்க எதுவுமே இருக்காது. ஆனால், ஒரு ஆத்துமா வைக்கூட போஷிக்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. வற்றாத ஆதாரமானவரிடம் கிறிஸ்து அவர்களை வழி நடத்துகிறார். வழக்கத்திற்கு மாறாக பாதி இராத்திரியிலே தன் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த தன் சிநேகிதன் அவன் திருப்பி அனுப்ப வில்லை, அவனுக்குக் கொடுப்பதற்கு அவனிடம் ஒன்று மில்லை; ஆனாலும் உணவு வைத்திருந்த தன் அண்டைவீட்டுக் காரனிடம் சென்று வருந்திக் கேட்டு, தன் நண்பனின் தேவையைப் பூர்த்தி செய்தான். பசியோடிருப்பவர்களைப் போஷிக்கும் படி தம் ஊழியர்களை அனுப்பியிருந்த தேவன், தமது வேலைக்காகச் செல்லும் அவர்களுடைய தேவையைச் சந்திக்காமல் இருந்திருப்பாரா?COLTam 136.1
ஆனால் உவமையில் கூறப்பட்டுள்ள சுயநல வாசியான அண்டை வீட்டுக்காரன் தேவனுடைய குணத்தை எடுத்துக் காட்டவில்லை. இங்கு ஒப்பிட்டுப் பார்த்தல்ல, எதிரெதிரான குணங்களைக் பாடம் வலியுறுத்தப்படுகிறது. சுயநலக்காரன் தான் ஓய்வெடுக்கும் போது தொந்தரவு செய்யும் ஒருவனை அங்கிருந்து அனுப்புவதற்காக, அவன் கேட்பதை அவசரமாகச் செய்துவிடுவான். ஆனால் தேவன், கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார். அவர் மனதுருக்கம் நிறைந்தவர். விசுவாசத்தோடு தம்மிடம் வருபவர்களின் வேண்டுதல்களைச் சந்திக்க ஆவலோ டிருக்கிறார். நாம் பிறருக்குக் கொடுக்கும்படியாக, அதன்மூலம், அவரைப்போல மாறும்படியாக அவர் விரும்புகிறார்.COLTam 136.2
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டு கிறவனுக்குத் திறக்கப்படும்” என்று கிறிஸ்து கூறுகிறார். லூக்கா 11:9-10.COLTam 137.1
மேலும் இரட்சகர், “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிற வர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று கூறுகிறார். லூக்கா 11:11-13.COLTam 137.2
தேவனில் நம்முடைய நம்பிக்கையைப் பெலப்படுத் தும்படியாக, ஒரு புதிய பெயரால் அவரை நாம் அழைக்க வேண்டு மென்கிறிஸ்து சொல்கிறார்; உறவுகளிலேயே மனிதனுடைய இருத யத்திற்கு நெருக்கமான பெயர் அது. நித்திய தேவனை நம்முடைய பிதா என்று அழைக்கிற சிலாக்கியத்தை நமக்குத் தருகிறார். அவரைப் பார்த்து, அவரைக் குறித்து நாம் சொல்கிற அந்தப் பெயரானது, அவர்மேல் நாம் வைத்திருக்கிற அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஓர் அடையாளமாக இருக்கிறது; நம்மேல் அவர் வைத்திருக்கிற அக்கறைக்கும் உறவுக்கும் ஓர் உறுதிமொழியாக இருக்கிறது. அந்தப் பெயரைச் சொல்லி அவருடைய ஆசீர் வாதத்தை அல்லது தயவை நாம் கேட்கும் போது, அது அவரது செவிகளில் கீதம் போன்று தொனிக்கிறது. அவரை அப்பெயரால் அழைப்பது மரியாதையற்ற செயலென நாம் நினைக்காதபடி, அவ்வாறு நாம் அழைக்க அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அந்தப் பெயர் நமக்கு பரிச்சயமாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.COLTam 137.3
தேவன் நம்மை தமது பிள்ளைகளாகக் கருதுகிறார். அக்கறையற்ற இந்த உலகத்திலிருந்து நம்மை மீட்டு, இராஜ குடும்பத்தின் அங்கத்தினர்களாகவும், பரலோக ராஜாவின் குமார்ராக, குமாரத்திகளாக நம்மை மாற்றவும் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவ்வுலகில் ஒரு பிள்ளை தன் தகப்பனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட ஆழமாகவும், உறுதி யாகவும் அவரை நம்பும்படி நம்மை அழைக்கிறார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள்; ஆனால், மனிதர் களின் அன்பைவிட தேவனுடைய அன்பு ஆழமானது, அகலமா னது, அளவில் பெரியது. அது அளவிடமுடியாதது. எனவே, இவ் வுலகத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம் பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?COLTam 138.1
ஜெபம் குறித்கு கிறிஸ்து சொன்ன பாடங்களை நாம் கவனமாகத்தியானிக்க வேண்டும். ஜெபத்தில் தெய்வீக அறிவியல் அடங்கியிருக்கிறது. அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய நியதிகளை எடுத்துக்காட்டு மூலம் அவர் தெரிவிக் கிறார். ஜெபத்தின் மெய்யான அர்த்தம் என்னவென்று காட்டுகிறார். நாம் விடாமுயற்சியுடன் தேவனிடத்தில் வேண்டிக்கொள்ள வேண்டுமென்றும், நமது ஜெபத்தைக் கேட்டு, பதிலளிப்பதற்கு அவர் ஆயத்தமாக இருக்கிறாரென்றும் அவர் காட்டுகிறார்.COLTam 138.2
சுயநலத்தோடு, நம்முடைய சொந்த நன்மைக்காக மட்டும் கேட்டு நாம் ஜெபிக்கக்கூடாது. நாம் பிறருக்குக் கொடுப்பதற்காகக் கேட்கவேண்டும். கிறிஸ்து தம் வாழ்வில் கடைபிடித்த நியதியை நாமும் கைக்கொள்ள வேண்டும். தமது சீடர்க ளைக் குறித்து, “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர் களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்த மாக்குகிறேன்” என்று இயேசு சொன்னார் யோவான் 17:19. கிறிஸ்துவில் காணப்பட்ட அதே அர்ப்பணிப்பும், சுயதியாகமும், தேவ்வார்த்தையின் கோரிக்கைகள் பேரிலான கீழ்ப்படிதலும் அவருடைய தாசர்களிடமும் காணப்படவேண்டும். இவ்வுலகத்தில் நம்முடைய ஊழியப்பணி நமக்கு நாமே சேவை செய்வதோ நம்மை நாமே பிரியப்படுத்துவதோ அல்ல; பாவிகளை இரட்சிக்கும்படி தேவ னோடு ஒத்துழைத்து, அவரை மகிமைப்படுத்தவேண்டும். பிறருக்குக் கொடுக்கும் படியாக, நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைக் கேட்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பதால் மட்டுமே பெற்றுக்கொள்வதற்கான திறன் பாதுகாக்கப் படுகிறது. நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களுக்குக் கொடுக்காமல், நாம் பரலோகப்பொக்கிஷத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியாது.COLTam 138.3
அந்த உவமையில், அப்பம் கேட்டவனுக்கு அவன் அயலான் மீண்டும் மீண்டும் மறுப்பு கூறுகிறான்; ஆனால் அவன் கேட்பதை விடவே இல்லை. அதுபோல, நம்முடைய ஜெபங்களுக்கும் உடனடியாகப் பதில் கிடைக்காதது போலத் தெரியலாம்; ஆனாலும், நாம் விடாமல் ஜெபிக்க வேண்டுமென்று கிறிஸ்து போதிக்கிறார். ஜெபம் என்பது தேவனை மாற்றுகிற ஒன்றல்ல; அது நம்மை அவரோடு இசையச் செய்வதாகும். நாம் அவரிடத்தில் வேண்டிக் கொள்ளும் போது, நாம் நமது இதயங்களை ஆராய்ந்து, நம் முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்புவது அவசியமென தேவன் கருதுகிறார். ஆகவே, நம் மூலமாக பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை நாம் காணும் படிக்கு அவர் நம்மை சோதனை மற்றும் உபத்திரவத்தின் ஊடாக நடத்துகிறார், நிந்தையின் வழியே கொண்டு வருகிறார்.COLTam 139.1
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன ; எனவே கடமையைச் செய்யாமல் ஜெபித்தால் மட்டும் போதுமென நினைக்கவே கூடாது . “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயி ருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்று கிறிஸ்து சொல்கிறார். யோவான் 14:15,21. நிபந்தனைகளுக்கு ஒத்துப்போகாமல், தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, அவரிடம் வேண்டிக்கொள்பவர்கள் யெகோவாவை அவமதிக்கிறார்கள். வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்படியாக, கிறிஸ்துவின் நாமத்தை அதிகாரத்துடன் பயன்படுத்துகிறார்கள்; ஆனால், கிறிஸ்துவிலே விசுவாசத் தையும் அவர்மேலான அன்பையும் காட்டத்தக்க செயல்களை அவர்கள் செய்வதில்லை. COLTam 139.2
பிதாவானவர் ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைக்கு அநேகர் ஒத்துப்போவதில்லை. தேவனிடம் செல்லும் போது, நாம் கொண்டு செல்கிற நம்பிக்கை பத்திரத்தை கவனமாக ஆராய வேண்டும். நாம் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், காசோலையை தேவனிடம் கொண்டு சென்றும், நிபந்தனைகளுக்கு ஒத்துப்போகாத தால் பணம் பெறமுடியாத நிலையை உருவாக்குகிறவர்களாக இருக் கிறோம். ஆனாலும் நாம் தேவனுக்கு முன்பாக அவரது வாக்குத்தத் தங்களை வைத்து அவைகளை நிறை வேற்றவேண்டுமென்றும் கேட்கிறோம். அவரும் அதற்கு இசைந்து செய்வாரானால், அவரே தமது சொந்த நாமத்தைக் கனவீனப்படுத்துவதாக இருக்கும்.COLTam 139.3
“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்தி ருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்பதே வாக்குத்தத்தம். யோவான் 15:7. “அவருடைய கற்பனைகளை நாம்கைக் கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோ மென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறே னென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்திய மில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளு கிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோ மென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்” என்று யோவான் சொல்கிறார். 1யோவான் 2:3-5.COLTam 140.1
கிறிஸ்து கடைசியாக தமது சீடர்களுக்குக் கொடுத்த கற்பனையில் ஒன்று, “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீ ங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்பது . யோவான் 13:34. நாம் இந்தக் கற்பனைக்குக் கீழ்ப்படிகிறோமா அல்லது கிறிஸ்துவுக்கு விரோதமான, முற்றிலும் மாறான குணங்களில் திளைக்கின்றோமா? ஆனால் எவ்விதத்திலாவது நாம் பிறரைப் புண்படுத்தியிருந்தால் அல்லது துக்கப்படுத்தியிருந்தால், நம் குற்றத்தை அறிக்கையிட்டு, ஒப்புரவாகவேண்டியது நம் கடமை. தேவனிடத்தில் ஆசீர்வாதத்தை வேண்டி, விசுவாசத்தோடு அவ ரிடம் செல்வது மிகவும் இன்றியமையாத ஆயத்தமாகும்.COLTam 140.2
ஜெபத்தில் ஆண்டவரை நாடிச் செல்கிற பலர், அலட்சியத் துடன் இருக்கும் இன்னொரு விஷயமும் உள்ளது. நீங்கள் தேவனுக்கு முன் நேர்மையானவர்களாக நடக்கிறீர்களா?’ ‘நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளை விட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே என்று மல்கியா தீர்க்கதரிசியின் மூலம் கர்த்த ர் கூறுகிறார். மல் 3:7,8.COLTam 140.3
எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்தவர் தேவன்; நாம் பெற்றுள்ளவற்றில் ஒரு பகுதியை அவர் திரும்பக் கேட்கிறார். சுவிசே ஷப் பிரசங்ப்பணியைத் தாங்குவதற்கு அவர் செய்துள்ள ஏற்பாடு இது. இவ்வாறு நாம் அவருக்கு திருப்பிச் செலுத்தி, அவர் கொடுத்த ஈவுகளாக்காக நம் நன்றியைக் காட்டவேண்டும். ஆனால் அவருக்குச் சேரவேண்டியதைக் கொடுக்காமல் நாமே வைத்துக் கொண்டால், எப்படி உரிமை யோடு அவரிடம் ஆசீர்வாதத்தைக் கேட்க முடியும்? உலகக் காரியங்களில் நாம் உண்மையற்ற உக்கிராணக்காரர்களாக இருந்தால், பரலோகத்திற்குரியவைகளை அவர் நம்மை நம்பி ஒப்படைப்பாரென எவ்வாறு எதிர்பார்க்கலாம்? நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காமல் போவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.COLTam 141.1
ஆனால் தேவன் தமது மிகுந்த இரக்கத்தினால் மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார்; ‘என் ஆலயத்தில் ஆகாரம் உண்டா யிருக்கும்படித் தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர் வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சே பாதித்துப் பாருங்கள் ..... பூமியின் கனியைப் பட்சித்துப்போடு கிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக் கொடி பழமில்லாமற் போவதுமில்லை ..... அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” மல்கியா 3:10-12.COLTam 141.2
தேவனுடைய ஒவ்வொரு நிபந்தனைகளுக்கும் இதே நியதி பொருந்தும். அவருடைய ஈவுகள் எல்லாமே கீழ்ப்படிதலை நிபந்தனையாகக் கொண்டு வாக்களிக்கப்பட்டுள்ளன. தம்மோடு ஒத்துழைப்பவர்களுக்கு பரலோகம் நிறைய ஆசீர்வாதங்களை தேவன் வைத்திருக்கிறார். அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவரும் அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்படி உரிமையுடன் கேட்கலாம்.COLTam 141.3
ஆனால், தேவன்மேல் உறுதியான, தடுமாற்றமற்ற விசுவாசத்தை நாம் வெளிப்படுத்தவேண்டும். நம் விசுவாசத்தைச் சே பாதிக்கும்படி அல்லது நம் வாஞ்சை மெய்யா னதுதானா என்பதை அறியும்படி, பெரும்பாலும் நம் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்க தாமதிப்பதுண்டு. அவருடைய வார்த்தையின்படி கேட்ட பிறகு, அவருடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்க வேண்டும்; நம் கோரிக்கை நிராகரிக்கப்படாது என்கிற உறுதியுடன் விடாமல் வேண்டிக்கொள்ள வேண்டும்.COLTam 142.1
ஒருமுறை கேட்டாலே பெறலாமென்று தேவன் சொல்வதில்லை. நாம் கேட்கும்படி கட்டளையிடுகிறார். சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும். விடாமுயற்சியுடன் கேட்கும் போது, மனநிலையில் அதன்மேல் ஓர் ஆவர்த்தை உண்டாக்குகிறது; கேட்கிறதைப் பெற்றுக்கொள்வதற்கான ஆசையை கேட்பவரில் அதிகரிக்கிறது. லாசருவின் கல்லறை யண்டையில், மார்த்தாளிடம் கிறிஸ்து, “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்றார். யோவான் 11:40.COLTam 142.2
அநேகரிடத்தில் மெய்யான விசுவாசம் இல்லை. அதனால் தான் தேவ வல்லமையை காண்பதில்லை. அவர்களுடைய அவநம்பிக் கையே அவர்களுடைய பெலவீனம். தங்களுக்காக தேவன் செயல்படுவதைவிட, தங்கள் சொந்த செயல்பாட்டை நம்புகிறார்கள். தங்களைப் பாதுகாக்க தங்களையே சார்ந்திருக்கிறார்கள். திட்டங்களை வகுத்துச் செயல்படுவார்கள், ஆனால் அதிக ஜெபம் இருக்காது, தேவன் மேல் அதிக விசுவாசம் இருக்காது. தங்களுக்கு விசுவாசம் இருப்பதாக நினைக் கிறார்கள்; ஆனால், அது ஒரு கணநேர உந்துதல் மாத்திரமே. தங்கள் தேவை என்னவென்பதை உணராத்தால் அல்லது தேவன் கொடுக்கச் சித்தமாயிருப்பதை உணராததால், தேவனுக்கு முன்பாக வேண்டுதல்களை வைக்கும் போது அதில் விடாமுயற்சியுடன் இருப்பதில்லை.COLTam 142.3
உதவி தேவைப்பட்ட நிலையில், நள்ளிரவில் அப்பம் கேட்டு வந்த அந்த நண்பனைப் போல, ஊக்கமாகவும் விடாமுயற்சி யோடும் நாம் ஜெபிக்க வேண்டும். எவ்வளவு ஊக்கமாகவும் உறுதியாகவும் நாம் கேட்கிறோமோ, அவ்வளவு நெருக்கமாக கிறிஸ்துவோடு நம் ஆவிக்குரிய இருக்கும். அதிகளவு விசுவாசம் இருப்பதால், அதிக அளவிலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.COLTam 142.4
ஜெபிப்பதும் விசுவாசிப்பதுமே நம் பங்காகும். விழித்திருந்து ஜெபியுங்கள். விழித்திருந்து, ஜெபத்தைக் கேட்கும் தேவனோடு ஒத்துழையுங்கள். (நாம்) தேவனுக்கு உடன் வேலையாட்களா யிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். 1கொரிந்தியர் 3:9. உங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக உங்களுடைய பேச்சும் செயலும் இருக்கட்டும். சோதனையின் சமயத்தில் உங்கள் விசுவாசம் மெய்யானதென வெளிப்படுமா அல்லது உங்கள் ஜெபம் வெறும் சடங்கென வெளிப்படுமா என்பதை அது முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிவிடும்.COLTam 143.1
குழப்பங்கள் எழுந்து, இக்கட்டுகள் உங்களை நெருக்கும் போது, மனிதர்களிடம் உதவியை எதிர்பார்க்கக் கூடாது. முற்றிலுமாக தேவனை நம்பவேண்டும். நம்முடைய கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்கிற வழக்கமானது நம்மைப் பெலவீனப்படுத்தும், கேட்பவர்களுக்கும் அது பிரயோஜனமாக இருக்காது. நம் ஆவிக்குரிய குறைபாடுகளை அவர்களால் நிவிர்த்தி செய்ய முடியாதென்பதால், அது அவர்களுக்கு பார மாகிவிடும். தவறு செய்யாத, நித்திய தேவனுடைய பெலனை நாம் பெற்றுக்கொள்கிற வாய்ப்பு இருக்கும் போது, தவறுசெய் கிற, முடிவுள்ள மனிதனுடைய பெலத்தை நாடிச் செல்கிறோம்.COLTam 143.2
ஞானத்தைத் தேடி உலகின் கடையாந்திரம் வரை செல்லத் தேவையில்லை ; ஏனெனில், தேவன் அருகிலேயே இருக்கிறார். இப்போது நீங்கள் பெற்றுள்ள அல்லது இனி பெறப்போகின்ற திறன்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரமுடியாது. தேவன் மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தரமுடியும். விசுவாசமுள்ள ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் மனிதன் செய்ய முடிவதைவிட தேவனால் அதிகளவில் செய்யமுடியும். எனவே மனிதனை அதிகமாக நம்பாமல், தேவனில் அதிகப்பட்ச நம்பிக்கை வைக்கவேண்டும். விசுவாசத்தோடு நீங்கள் அவரைத் தேடிச்செல்ல அவர் விரும்புகிறார். மகத்தானவற்றை அவரிடமிருந்து நீ ங்கள் எதிர்பார்க்க அவர் விரும்புகிறார். இவ்வுலகிற்கடுத்த காரியங்களிலும், ஆவிக்குரிய விஷயங்களிலும் உங்களுக்கு அறிவைத் தருவதற்கு அவர் வாஞ்சிக்கிறார். அறிவுத்திறனை அவர் கூர்மையாக்குவார். திறமையையும் சாமர்த்தியத்தையும் கொடுப்பார். தேவபணியில் உங்கள் தாலந்துகளைச் செல விட்டு, அவரிடம் ஞானத்தைக் கேளுங்கள்; அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.COLTam 143.3
கிறிஸ்துவின் வார்த்தையை உங்களுடைய நிச்சயமாக்கிக் கொள்ளுங்கள். தம்மிடத்தில் வருமாறு அவர் உங்களை அழைக்கவில்லையா? நம்பிக்கையற்ற, அதைரியமூட்டுகிற விதங்களில் ஒருபோதும் பேசாதீர்கள். அப்படிப் பேசினால், அதிகமாக இழந்து போவீர்கள். பிரச்சனைகளும் அழுத்தங்களும் உண்டாகும் போது, சூழ்நிலைகளைக் கண்டு, குறை பேசினால், உங்கள் விசுவாசம் நலிந்து போய், பெலவீனமடைந்துள்ளதெனக் காட்டுகிறீர்கள். அசைக்க முடியாத விசுவாசத்தைப் பெற்றிருப்பவர் போலப் பேசவேண்டும், செயல்பட வேண்டும். நமது ஆண்டவர் அளவில்லா வளங்கள் நிறைந்தவர்; இந்த உலகமே அவருக்குச் சொந்தமானது . விசுவாசத்துடன் பரலோகத்தை நோக்கிப்பாருங்கள். வெளிச்சமும் வல்லமையும் ஆற்றலும் நிறைந்தவரை நோக்கிப் பாருங்கள்.COLTam 144.1
காலத்தாலோ கடின உழைப்பாலோ பெலவீனப்படுத்த முடியாத உறுதியான நோக்கம்மும், நிலைதடுமாறாத நியதியும் மீள்தன்மையும் மெய்யான விசுவாசத்தில் காணப்படும். இளைஞர் இளைப் படைந்து சோர்ந்து போவார்கள், வாலிபரும் இடறிவிழு வார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பொலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:30,31.COLTam 144.2
பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்கிற ஏக்கம் அநேகரிடம் காணப்படுகிறது; ஆனால், கொடுப்பதற்கான ஆவிக்குரிய பெல னும் அல்லது வெளிச்சமும் தங்களிடம் இல்லையென அவர்கள் நினைக்கிறார்கள். கிருபாசனத்தண்டையில் சென்று அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கட்டும். பரிசுத்த ஆவியான வருக்காக மன்றாடட்டும். தாம் கொடுத்திருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் தேவனே முதுகெலும்பாயிருக்கிறார். வேதாகமத்தை கரங்களில் எடுத்துக்கொண்டு, தேவனே, நீர் சொல்லியபடி நான் செய்துவிட்டேன் : “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடை வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று நீர் வாக்குரைத்திருப்பதை நம்பிநிற்கிறேன் என்று சொல்லுங்கள்.COLTam 144.3
கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி மட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலோடும் கூட நாம் ஜெபிக்க வேண்டும். “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியான வர்தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் ” என்று சொல்லப்படுகிற பிரகாரம் அப்போதுதான் நிறைவேறும். ரோமர் 8:26. இத்தகைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் தேவன் பிரியப்படுகிறார். கிறிஸ்துவின் நாமத்தில் ஊக்கத்தோடும், தீவிரத்தோடும் நாம் ஜெபிக்கும் அதே தீவிரத்தோடுதானே தேவன் நம் ஜெபத்திற்குப் பதிலளிப்பதாக வாக்குரைத்திருக்கிறார்; அதாவது, ” நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும், மிகவும் அதிகமாய் ” நமக்குச் செய்வார்.’” எபேசியர் 3:20.COLTam 145.1
‘ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும் போது, எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.” நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப் படும்படியாக அதைச் செய்வேன்” என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார். மாற்கு 11:24; யோவான் 14:13. அன்புள்ள சீடனாகிய யோவான் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, மிகுந்த தெளிவோடும், நிச்சயத்தோடும் பின்வருமாறு சொல்கிறார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோ மானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.” யோவான் 5:14,15. ஆகையால், இயேசுவின் நாமத்தினால் பிதாவிடம் உங்கள் விண்ணப்பத்தை ஏறெடுங்கள். தேவன் அந்த நாமத்தைக் கனப்படுத்துவார்.COLTam 145.2
தேவன் உண்மையுள்ளவர், அவரிடத்தில் யாதொரு மாறுதலும், யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்பதற்கு அவருடைய சிங்காசனத்தைச் சுற்றிலுமுள்ள வானவில் நிச்சயமாக இருக்கிறது. நாம் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, அவருடைய தயவுக்குத் தகுதியற்றவர்களானோம்; ஆனாலும், ‘உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும் என்கிற அற்புதமான வேண்டுதலை அவரே நம் வாயில் தருகிறார். எரேமியா 14:21. நாம் பாவிகள், அபாத்திரர்கள் என்று அவரிடம் சென்று அறிக்கையிட்டால், நம்முடைய கூக்குரலுக்குச் செவிகொடுப்பதாக அவர் வாக்குரைத்திருக்கிறார். நமக்கு தாம் வாக்குரைத்திருப்பவற்றை நிறைவேறுவதற்கு, தம்முடைய சிங்காசனத்தின் கனத்தையே அவர் பந்தயம் வைத்துள்ளார்.COLTam 146.1
கிறிஸ்துவிற்கு அடையாளமாயிருந்த ஆரோனைப்போல, நம்முடைய இரட்சகர் தம் சகல ஜனங்களின் பெயர்களையும் பரிசுத்த ஸ்தலத்திலே தமது இதயத்தில் பதித்துள்ளார். நாம் நம்பிக்கை வைக்கும்படி என்னென்ன வார்த்தைகளால் நம்மை ஊக்கப்படுத்தினாரோ, அவற்றை நம் பிரதான ஆசாரியர் நினைவில் வைத்திருக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை அவர் எப்போதும் நினைவுகூருகிறார்.COLTam 146.2
அவரைத் தேடுகிற அனைவரும் அவரைக்கண்டடைவார்கள். கதவைத் தட்டுகிறவர்களுக்கு அது திறக்கப்படும். என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவைப் பூட்டியாயிற்று, கதவைத் திறக்க விரும்பவில்லை’ என்று அவர் சாக்குப்போக்குச் சொல்ல மாட்டார். என்னால் உனக்கு உதவ முடியாது என்று ஒருவரிடம் கூட சொல்ல மாட்டார். பசியோடிருக்கும் ஆத்து மாக்களைப் போஷிப்பதற்காக நடுராத்திரியில் அப்பம் வேண்டி செல்பவர்களுக்கு அப்பம் கொடுப்பார்.COLTam 146.3
உவமையில், முன்பின் தெரியாதவனுக்காக அப்பம் கேட்டுச் சென்றவன், “தேவையானதைப் பெற்றுக் கொண்டான்.” நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, தேவன் நமக்கு எந்த அளவு கொடுப்பார்?COLTam 146.4
“கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக” அவர் நமக்குக் கொடுக்கிறார். எபேசியர் 4:7. ஒருவன் தன் சக மனிதர்களை எவ்வாறு நடத்துகிறான் என்று மிகுந்த ஆவலுடன் தேவதூதர்கள் பார்க்கிறார்கள். தவறு செய்கிறவர்கள் மேல் கிறிஸ்துவைப் போன்ற பரிவைக்காட்டுகிற ஒருவனைக் கண்டதும், உடனே அவன் பக்கத்திற்கு விரைகிறார்கள்; ஆந்த ஆத்துமாவுக்கு ஜீவ அப்பம் போன்று விளங்கக்கூடிய வார்த்தைகளைப் பேசு வதற்காக இவனுக்கு அவற்றை நினைவூட்டுகிறார்கள். இவ்வித மாக, ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” பிலிப்பியர் 4:19. தூய்மையும் உண்மையுமான உங்கள் சாட்சியை, இனி வரும் வாழ்வின் வல்லமையினால் பெலமுள்ளதாக்குவார். கர்த்தருடைய வார்த்தைகள் உங்களுடைய வாயில் சத்தியத்தின் வார்த்தைகளாக, நீதியின் வார்த்தைகளாக விளங்கும்.COLTam 146.5
பிறருக்காக தனிப்பட்ட விதத்தில் பிரயாசத்தை மேற்கொள் வதற்கு முன் தனிமையில் அதிகமாக ஜெபிக்க வேண்டும்; ஏனெனில், ஆத்தும் இரட்சிப்பின் அறிவியலை அறிந்துகொள் வதற்கு அதிக ஞானம் அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு முன்பாகப் பேசுவதற்கு முன் கிறிஸ்துவோடு பேசுங்கள். மக்களுக்காக ஊழியம் செய்வதற்கு பரலோக கிருபாசனத் தண்டையிலே ஆயத்தப்படுங்கள்.COLTam 147.1
தேவனை நினைத்து, ஜீவ தேவனை நினைத்து ஏங்கி, உங்கள் இருதயம் நொறுங்கவேண்டும். தெய்வீக சுபாவத்தில் பங்கு பெறுவதால் மனிதர்கள் என்ன செய்யமுடியும் என்பதை கிறிஸ்துவின அ வாழ்க்கை வெளிப்படுத்தியுள்ளது. தேவனிட மிருந்து கிறிஸ்து பெற்றுக்கொண்ட அனைத்தையும் நாமும் பெறமுடியும். அப்படியானால் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு வாக்களித்திருப்பவற்றை யாக்கோ பின் தளராத விசுவாசத்தோடும், எலியாவின் விட்டுக்கொடுக்காத உறுதியோடும், சொந்தங்கொண்டாடுங்கள்.COLTam 147.2
தேவனைக் குறித்த மகிமையான கருத்துக்கள் உங்கள் சிந்தையை நிரப்படும். உங்களுடைய வாழ்க்கையானது தனிப்பட்ட உறவின்மூலம் கிறிஸ்துவின் வாழ்க்கையோடு இணைந்திருக்கட்டும். இருளிலிருந்து வெளிச்சம் உண்டாகும் படி கட்டளையிட்டவர், உங்களுடைய இருதயத்தில் பிரகாசிக்கவும், இயேசு கிறிஸ்துவின் முகத்தில் காணப்பட்ட தேவ மகிமையாகிய அறிவின் ஒளியைக் கொடுக்கவும் சித்தமுள்ள வராக இருக்கிறார். தேவனுக்கடுத்த விஷயங்களை பரிசுத்த ஆவியானவர் எடுத்து, உங்களுக்குக் காட்டுவார், கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்குள் ஜீவ வல்லமையாக அவற்றைச் செலுத்துவார். நித்தியமானவருடைய சமூகத்திற்கு கிறிஸ்து உங்களை வழி நடத்துவார். திரைக்கு அப்பாலுள்ள தேவ மகிமையை நீங்கள் காணலாம்; நமக்காகப் பரிந்து பேசுவதற்கு எப்போதும் உயிரோடிருக்கிறவர் நமக்குப் போதுமானவரென மனிதர்களுக்கு வெளிப்படுத்தலாம்.COLTam 147.3