உவமையின் அர்த்தம்
தேவபிரமாணத்தின் மிகப்பெரிய இரண்டு நியதிகள் எவை தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக தேவன்மேல் அன்புகூரு வதும், நம் அயலார்மேல் சுயநலமற்ற அன்புகாட்டு வதும்தான். இந்த இரண்டு நியதிகளைச் சார்ந்துதான் முதல் நான்கு கற்பனைகளும், கடைசி ஆறு கற்பனைகளும் இருக்கின்றன. எரிகோவிலிருந்து எருசலேமுக்குப் பயணம் செய்த மனிதனுடைய சம்பவத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லி, பிறன் யார் என்பது பற்றி அந்த நியாயாதிபதிக்கு கிறிஸ்து விளக்கினார். அந்த மனிதன் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவனை அடித்து, கொள்ளையிட்டு, குற்றுயிராக விட்டுச் சென்றார்கள். அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனை ஆசாரியனும் லேவியனும் பார்த்தார்கள்; ஆனால் அவனுக்கு உதவி செய்ய அவர்களுடைய இருதயம் இணங்கவில்லை. அவனைக் கண்டுகொள்ளாமல் மறுபக்கமாக விலகிச் சென்றுவிட்டார்கள். சமாரியன் அந்தப் பக்கமாக வந்தான். உதவி தேவைப்படுகிற நிலையில் கிடந்த அந்த அந்நியனைக் கண்டான்; அவன் உறவினனா, தன் நாட்டவனா, தன் சமயத்தவனா என்று அவன் கேள்வி கேட்கவில்லை. மாறாக, அடிபட்டுக் கிடந்தவனுக்குச் செய்யவேண்டிய உதவியைச் செய்ய ஆயத்தமானான். தன்னால் முடிந்த அளவுக்கு அவனுக்குச் சிசிக்சையளித்து, அவனை தன் கழுதையின்மேல் போட்டு, ஒரு சத்திரத்துக்குக் கொண்டு சென்று, அவனுக்குத் தேவையானவற்றைச் செய்யும்படி தன்னுடைய பணத்தைக் கொடுத்தான்.TamChS 252.2
கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு அந்தச் சமாரியன்தான் பிறன் என்று கிறிஸ்து சொன்னார். தாங்கள் பரிவும் ஆதரவும் காட்ட வேண்டியவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிற திருச்சபையின் அங்கத்தினர்களை அந்த லேவியனும் ஆசாரியனும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த வகையான மக்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், கற்பனையை மீறுகிறவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவோடு மெய்யான ஆதரவுபணியில் ஈடுபடுகிற, நன்மை செய்வதில் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிற கூட்டத்தாரை அந்தச் சமாரியன் சுட்டிக்காட்டுகிறான்.TamChS 253.1
வறியவர், பார்வையற்றோர், நடக்கமுடியாதோர், உபத்திரவப்படுவோர், விதவைகள், திக்கற்றோர், எளியவர் ஆகியோர் மேல் பரிவு காட்டுபவர்களே கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்கள் என்றும், நித்திய ஜீவனைப் பெறுபவர்கள் என்றும் கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். வறியவர், பார்வையற்றோர், நடக்கமுடியாதோர், உபத்திரவப்படுவோர், விதவைகள், திக்கற்றோர், எளியவர் மேல் காட்டுகிற இரக்கமும் தயாளமுமான சகல கிரியைகளையும், அக்கறையையும் தமக்கே காட்டியதாக கிறிஸ்து கருதுகிறார். இந்தக்கிரியைகள் பரலோகப் பதிவுகளில் பதியப்பட்டுள்ளன; அவற்றிற்கேற்ற பிரதிபலன் வழங்கப்படும். மாறாக, வறியவர்மேல் அந்த ஆசாரியனையும் லேவியனையும்போல அக்கறை காட்டாதவர்களுக்கு எதிராகவும், பிறருடைய வறுமையைச் சாதகமாக்கி, தங்களுக்கு நன்மையுண்டாக அவர்களுடைய வறுமை நிலையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு எதிராகவும் அந்தப்புத்தகத்தில் பதிவு செய்யப்படும். அநீதியான ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும், நம் மத்தியில் வேதனையில் இருப்போரைக் கண்டுகொள்ளாமல் அக்கறையின்மையோடு இருப்பதைக் காட்டுகிற ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் தேவன் நிச்சயமாகவே பதிலளிப்பார். ஒவ்வொருவனும் தன்னுடைய கிரியைகளுக்கேற்ற பலனை இறுதியில் பெறுவான். TamChS 253.2