நற்செய்தி ஊழியத்தில் காணப்படுகிற ஆபத்து
பணிகள் அதிகரிக்கும்போது, செய்யவேண்டிய வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும்போது, மனித திட்டங்களையும் பணிகளையும் நம்புகிற ஆபத்து இருக்கிறது. குறைவாக ஜெபிக்கவும், குறைவாக விசுவாசிக்கவும் மனது சாய்ந்துவிடுகிற ஆபத்து இருக்கிறது. தேவன் மட்டுமே நம் வேலையை வெற்றிகரமாக்க முடியும்; அந்நிலையில் தேவனைச் சார்ந்திருக்கவேண்டும் என்கிற உணர்வை இழந்துவிடுகிற ஆபத்து இருக்கிறது. மனிதரின் நிலை இவ்வாறு இருந்தாலும், குறைவாகச் செயல்பட்டால் போதுமென மனித கருவிகள் நினைத்துவிடக்கூடாது. அவன் குறைவாகச் செய்யாமல், பரலோக ஈவாகிய பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக் கொண்டு, அதிகம் செய்யவேண்டும். TamChS 133.1
தேவவல்லமை திருச்சபையைத் தூண்டி, ஊழியம் ஊக்கமாக நடைபெறப்போகிற காலங்கள் வருகின்றன. திருச்சபை அங்கத்தினர்கள் புறப்பட்டுச்சென்று, கிறிஸ்துவிடம் ஆத்துமாக்களைக் கொண்டுவர ஜீவனைக் கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களை ஊக்குவிக்கும். இவ்வாறு நடக்கும்போது, உள்ளார்வத்துடன் பணிசெய்கிறவர்கள் ஊக்கமாக ஜெபித்து தேவனைச் சார்ந்திருப்பதால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும். தங்கள் பணியால் அகந்தை வராமல் இருக்கவும், தங்கள் வேலை தங்களை இரட்சிக்கிறது என்கிற எண்ணம் ஏற்படாமல் இருக்கவும், கிறிஸ்துவின் கிருபைக்காக ஊக்கத்தோடு வேண்டிக்கொள்ள வேண்டும். அவர் வல்லமையே அனைத்தையும் செய்வதை உணர்ந்து, சகல மகிமையையும் தேவனுக்குச் செலுத்தும்படி எப்போதும் இயேசுவையே நோக்கவேண்டும். தேவபணியை விரிவுப்படுத்துவதற்கு உறுதியான தீர்மானங்களைச் செய்ய நாம் அழைக்கப்படுவோம். பரலோகப் பிதாவிடம் ஜெபிப்பது மிகவும் அவசியமாக இருக்கும். தனியறையிலும் குடும்பத்திலும் திருச்சபையிலும் ஜெபிப்பது அவசியமாகும். TamChS 133.2
எப்போதும் சலசலப்புடன் செயல்படுவதையே பக்தி மார்க்கமென ரபிமார்கள் நினைத்தார்கள். தாங்கள் மேலான பக்தியுடைய வர்க ள் என்று காண்பிப்பதற்கு பார்வைக்கு ஏதாவது செய்வதையே சார்ந்திருந்தார்கள். அவ்வாறு தங்கள் ஆத்துமாக்களை தேவனிடமிருந்து பிரித்து, சுயநிறைவுடனே வளர்ந்துவந்தார்கள். அதேவிதமான ஆபத்துகள் இன்றும் காணப்படுகின்றன. செயல்பாடு அதிகரித்து, தேவனுக்காக ஏதாவது செய்வதில் வெற்றிபெறும்போது, மனித திட்டங்களையும் வழிமுறைகளையும் நம்பி விடுகிற ஆபத்து இருக்கிறது. குறைவாக ஜெபிக்கவும், குறைவாக விசுவாசம் வைக்கவும் மனது சாயலாம். சீடர்களைப்போல தேவனைச் சார்ந்திருப்பதை மறந்து, நம் பணியே நம்மை இரட்சிக்குமென நினைக்கிற ஆபத்து உள்ளது. இயேசுவின் வல்லமைதான் நம் பணியைச் செய்கிறதென உணர்ந்து, எப்போதும் இயேசுவையே நோக்கிப் பார்க்கவேண்டும். தொலைந்துபோனோரின் இரட்சிப்புக்காக ஊக்கத்தோடு செயல்படவேண்டிய அதேவேளையில், தியானத்திற்கும் ஜெபத்திற்கும் வேதவசனத்தை வாசிப்பதற்கும் நேரமெடுக்க வேண்டும். அதிக ஜெபத்தோடு செய்யப்படுகிற, கிறிஸ்துவின் புண்ணியத்தால் பரிசுத்தமாக்கப்படுகிற பணிதான் இறுதியில் மிகுந்த நன்மையாக விளங்கும். TamChS 133.3