அதைரியத்தை எதிர்கொள்ளுவது எவ்வாறு
ஆண்டவருடைய ஊழியர்கள் எல்லாவிதமான அதைரியங்களையும் எதிர்பார்க்கலாம். எதிரிகளின் கொடுஞ்செயலாலும் கோபத்தாலும் ஏளனத்தாலும் மட்டுமல்ல; நண்பர்களும் உதவி செய்பவர்களும் தங்கள் சோம்பேறித்தனத்தாலும் முரண்பாடுகளாலும் வேண்டாவெறுப்பாலும் துரோகத்தாலும் ஊழியரைச் சோதிப்பார்கள். தேவ பணி வெற்றிபெற வேண்டுமென விரும்புகிற சிலர் கூட தேவ ஊழியர்களுடைய எதிரிகளின் அவதூறுகளையும் இறு மாப்புகளையும் அச்சுறுத்தல்களையும் கேட்டு, அவற்றை நம்பி, வெளியே சொல்லி, ஊழியர்களின் கரங்களைத் திடனற்றுப்போகச் செய்வார்கள். மிகுந்த ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் நெகேமியா தேவனை தன் நம்பிக்கையாகக் கொண்டான்; இதுதான் நம் பாதுகாப்பும்கூட. ஆண்டவர் நமக்காகச் செய்திருப்பதை நினைவில் வைத்திருப்பது ஒவ்வோர் ஆபத்தின்போதும் நமக்கு ஆறுதலாக இருக்கும். ‘தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?’ ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?’ சாத்தானும் அவனுடைய ஏதுகரங்களும் எவ்வளவு தந்திரமாக சதித்திட்டங்களைத் தீட்டினாலும், தேவன் அவற்றைக் கண்டுபிடித்துவிடுவார்; அவர்களுடைய ஆலோசனைகளை எல்லாம் அபத்தமாக்குவார். TamChS 313.1
போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்கள் ஒரு விசேஷித்த பணியைச் செய்யும்படி ஆவியானவர் அவர்களைத் தூண்டுகிறார். அந்தத் தூண்டுதல் குறையும்போது சோர்ந்துபோகிறார்கள். அதிதீர விசுவாசத்தையும் மனச்சோர்வு அசைத்துவிடுகிறது; உறுதியான தைரியத்தையும் பெலவீனப்படுத்தி விடுகிறது. ஆனால், தேவன் அதைப் புரிந்துகொள்கிறார்; இந்நிலையிலும் அவர் அன்பும் இரக்கமும் காட்டுகிறார். இருதயத்தின் சிந்தைகளையும் நோக்கங்களை யும் அவர் வாசிக்கிறார். சகலமும் இருளாய்த் தோன்றும்போது தேவனை நம்பி, பொறுமையோடு காத்திருப்பதே தேவபணியிலுள்ள தலைவர்கள் கற்கவேண்டிய பாடம். அவர்களுடைய இக்கட்டான நாளில் பரலோகம் அவர்களைக் கைவிடாது. ஓர் ஆத்துமா தன் வெறுமையை உணர்ந்து தேவனை முற்றிலும் சார்ந்து நிற்கும்போது, அந்த ஆத்துமாவை எவரும் வெல்ல இயலாது. பெலனற்ற ஆத்துமா பெலன்பெற்று வெல்லும். TamChS 313.2
சோர்வும் அதைரியமும் ஒதுக்குகிற வீரர்களை ஆண்டவர் அழைக்கிறார். உடன்படாத அம்சங்கள் இருந்தாலும் வேலைசெய்கிற வீரர்களை அழைக்கிறார். நாம் எல்லாரும் கிறிஸ்துவை நம் முன்மாதிரியாக வைத்திருப்பதை அவர் விரும்புகிறார். TamChS 314.1
பவுலும் சக ஊழியர்களும் ஊழியம் செய்த இடங்களில் பிரச்சனைகளை அனுபவித்தார்கள். அதுபோல, இன்றும் மக்கள் விரும்பாத சத்தியங்களைப் போதிக்கிற நமக்கு கிறிஸ்தவர்களிடமிருந்து கூட சிலசமயங்ளில் சாதகமான வரவேற்பு கிடைக்காது. அதினிமித்தம், சோர்ந்துபோகத் தேவையில்லை. சிலுவையின் தூதுவர்கள் விழிப்பையும் ஜெபத்தையும் ஆயுதமாகத் தரித்திருக்கவேண்டும். விசுவாசத்தோடும் தைரியத்தோடும் முன்னேறவேண்டும். எப்போதும் இயேசுவின் நாமத்தால் ஊழியம்செய்யவேண்டும். TamChS 314.2