ஆவிக்குரிய இருள்
உலகத்திலுள்ள சபைகளில் ஆவிக்குரிய இருள் காணப்படுகிற காலம் இது. தெய்வீகமானவை பற்றிய அறியாமையானது தேவனையும் சத்தியத்தையும் கண்களுக்கு மறைக்கிறது. தீமையின் ஆற்றல்கள் பெலன் கொள்கின்றன. உலகத்தைச் சிறைப்படுத்துகிற ஒரு வேலையை தான் செய்யப்போவதாக சாத்தான் தன் பங்காளிகளை வஞ்சகமாக நம்பச்செய்கிறான். செயலற்ற நிலை சபைக்குள் புகுந்துவிட்ட நிலையில், சாத்தானும் அவன் சேனைகளும் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கிறிஸ்தவ சபைகளெனச் சொல்லிக் கொள்வோர், உலகத்தை மாற்றுவதில்லை. ஏனென்றால், அவர்கள் தாமே சுயநலத்தாலும் பெருமையாலும் சீர்கெட்டிருக்கிறார்கள். மற்றவர்களை தூய்மையான அல்லது மேலான தரத்திற்குள் வழி நடத்துவதற்குமுன் அவர்கள் தாமே தேவனுடைய மனமாற்றவல்ல ஆற்றலை தங்கள்மத்தியில் உணரவேண்டியுள்ளது. TamChS 78.1
முந்தைய நாட்களைப்போல் நம் நாட்களிலும் தேவவார்த்தையின் முக்கிய சத்தியங்களை மனித வாதங்களும் யூகங்களும் புறம்பே தள்ளிவருகின்றன. சுவிசேஷ ஊழியர்களெனச் சொல்லிக் கொள்ளும் பலர்,வேதாகமம் முழுவதுமே தேவ ஆவியானவரால் அருளப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு ஞானி ஒரு பகுதியை வேண்டாமென்கிறார்; மற்றவர் வேறொன்றில் கேள்வி எழுப்புகிறார். தேவவார்த்தையைவிட தங்கள் பகுத்தறிவை உயர்த்துகிறார்கள். வேதாகமத்திலிருந்து தாங்கள் போதிக்கும் பகுதிக்கு அவர்களே விளக்கம் கொடுப்பார்கள். அதன் தெய்வீக மெய்தன்மையை அழித்துவிடுவார்கள். இவ்விதமாக விதைக்கப்படும் அவநம்பிக்கையின் விதைகள் பரவுகின்றன; மக்கள் எதை நம்புவதென்று தெரியாமல் குழப்பமடைகின்றனர். சிந்திப்பதற்குத் தேவையில்லாத விசுவாசக் கொள்கைகள் பல இருக்கின்றன.” TamChS 78.2
இதுவரையிலும் சென்றிராத உயரத்திற்கு துன்மார்க்கம் சென்று விட்டது, ஆனாலும், சுவிசேஷ ஊழியர்கள் பலர், ‘சமாதானம், பாதுகாப்பு ‘ என்று கூக்குரலிடுகிறார்கள். ஆனாலும் தேவனுடைய உண்மை ஊழியர்கள் தங்களுடைய பணியில் தடுமாறாமல் முன்னேறிச் செல்லவேண்டும். பரலோக கவசத்தை அணிந்தவர்களாக பயமில்லாமலும் வெற்றியோடும் முன்னேறிச் செல்லவேண்டும். தங்களுக்கு எட்டும் தூரத்தில் அருகிலுள்ள ஆத்துமாக்கள் நிகழ்காலத்திற்கான சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்; அது நடக்கிற வரையிலும் தங்களுடைய முயற்சியை அவர்கள் நிறுத்தக் கூடாது. TamChS 78.3
இன்றைய பக்திமார்க்கத்தின் நிலைகுறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. தேவனுடைய கிருபை அற்பமாக எண்ணப்படுகிறது. திரளானவர்கள்: ‘மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து’ யெகோவாவின் கற்பனையைச் செல்லாததாக மாற்றிவருகிறார்கள். நம் தேசத்தின் அநேக சபைகளில் அவபக்தி நிறைந்துள்ளது. அது வேதாகமத்தை வெளிப்படையாக மறுதலிக்கிற அவபக்தி அல்ல; கிறிஸ்தவம் என்னும் போர்வையில் மறைந்துகொண்டு, தேவனுடைய வெளிப்பாடுதான் வேதாகமம் என்பதை விசுவாசிக்காத அவபக்தி. தீவிர அர்ப்பணிப்பும் தேவபக்தியும் காணப்படவேண்டிய இடத்தில்,அவற்றுக்குப் பதிலாக பயனற்ற சம்பிரதாயம் காணப்படுகிறது. அதன் விளைவாக விசுவாசத் துரோகமும் சிற்றின்பமும் நிறைந்துள்ளன. ‘லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்’ என்று கிறிஸ்து சொன்னார். அவருடைய வார்த்தைகள் உண்மை என்பதற்கு ஒவ்வொரு நாளும் உலகில் நிகழ்கிற சம்பவங்கள் சாட்சி சொல்லுகின்றன. அழிவைநோக்கி இந்த உலகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. சீக்கிரமே தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் இதில் ஊற்றப்படும்; பாவமும் பாவிகளும் அந்த ஆக்கினையில் அக்கினிக்கு இரையாகவேண்டியுள்ளது. TamChS 79.1