திக்கற்றோர்மேல் அக்கறை
மரணம் ஜெயமாக விழுங்கப்படும் வரையிலும் அக்கறை காட்ட அவசியமுள்ள திக்கற்றோர் இருப்பார்கள்; திருச்சபையின் அங்கத்தினர்கள் அவர்கள்மேல் கனிவான அன்பும் பரிவும் காட்டாதபட்சத்தில் பல வழிகளில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். ‘துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்’ என்று ஆண்டவர் நமக்குக் கட்டளையிடுகிறார். இவர்களைப்போல திக்கற்ற நிலையில் இருப்போருக்கு தாய்மாரையும் தகப்பன்மாரையும் திருச்சபை வழங்கவேண்டும். ஜெபங்களாலும் கிரியைகளாலும் விதவைகள் திக்கற்றோர்மேல் மனதுருக்கத்தைக் காட்டும்போது, தேவன் அதை நினைவுகூர்ந்து, இறுதியாகப் பெலனளிப்பார். TamChS 282.2
தரித்திரரை நீங்கள் தாங்கும்போது, உபத்திரவப்படுவோர் மேல் பரிவுகாட்டும்போது, திக்கற்றோருக்கு சிநேகிதராகும்போது, இயேசுவோடு நெருக்கமான உறவுக்குள் வருகிறீர்கள். TamChS 282.3
தாய்தகப்பன் இல்லாததால் பராமரிக்கப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அந்தப் பணியைச் செய்ய அநேகர் முன்வருவதில்லை; காரணம்? தாங்கள் நினைப்பதைவிட அதிக வேலைசெய்ய வேண்டியதிருக்கும்; தங்களைப் பிரியப்படுத்த அதிக நேரம் செலவிட முடியாது. ஆனால், வேலை செய்கிறவர்களுக்கும், கிறிஸ்துவின் நிமித்தம் தங்களை மறுத்தவர்களுக்கும் தான் பரலோகம் சொந்தமானது. எந்த வேலையும் செய்யாத நபர்கள் ராஜாவின் விசாரணையில் அதை அறிந்துகொள்வார்கள். தங்களைக் கவனிப்பதிலேயே கவனம் செலுத்தி, தங்களைப்பற்றியே யோசிப்பவர்களுக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. தம் இடதுபக்கத்தில் நின்றவர்களுக்கு பயங்கரமான தண்டனையை ராஜா கூறினார்; அவர்கள் மிகப்பெரிய குற்றங்களைச் செய்ததாகச் சொல்லவில்லை. இன்னென்ன செய்தார்கள் என்பதற்காக அல்ல, இன்னென்ன செய்யவில்லை என்பதற்காகத்தான் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார்கள். பரலோகம் அவர்களுக்கு நியமித்திருந் தவற்றைச் செய்யவில்லை. அவர்கள் தங்களையே பிரியப்படுத்தினார்கள்; அதனால் சுயத்தைப் பிரியப்படுத்துகிறவர்களுக்கான பங்கைத்தான் அடைய முடியும். TamChS 282.4
திக்கற்ற பிள்ளைகளை தேவன் ஒப்படைத்த சொத்துக்களாக ஏற்றுக்கொள்ளும்படி இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார்; அவர்களைக் கண்டுகொள்ளாமல் பக்கமாக விலகிச்செல்கிறோம். அவர்கள் கந்தைகோலமாக, அருவருப்பாக, கொஞ்சமும் மனதிற்கு பிடிக்காதவர்களாகத் தெரியலாம். ஆனால், அவர்கள் தேவனுடைய சொத்துக்கள்; விலைகொடுத்து அவர்களை வாங்கியிருக்கிறார்; அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்; அவர்கள் தேவனுடைய மாபெரும் குடும்பத்தின் அங்கத்தினர்கள். தேவனுடைய உக்கிராணக்காரர்களான கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு பொறுப்பாளிகள். அவர்களுடைய ஆத்துமாக்களை உன் கையிலே கேட்பேன்’ என்று இயேசு சொல்கிறார். TamChS 283.1
திக்கற்றவர்களான இவர்களுக்கு தங்கள் கடமையைச் செய்ய திருச்சபையின் ஒவ்வோர் அங்கத்தினரையும் ஆண்டவர் அழைக்கிறார். ஆனாலும் கடமைக்காகமட்டும் அவர்களுக்காக ஊழியம் செய்யாதீர்கள்; அவர்கள்மேலுள்ள அன்பால், அவர்களை இரட்சிக்க கிறிஸ்து மரித்தார் என்பதால் ஊழியம் செய்யுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய அந்த ஆத்துமாக்களை கிறிஸ்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்; நீங்கள் பாவங்களில் வாழ்ந்து, வழி தப்பித் திரிந்தபோது அவர் உங்களை நேசித்ததுபோல, அவர்களை நீங்கள் நேசிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார். TamChS 283.2
தங்கள் மத்தியிலுள்ள திக்கற்றோர், தகப்பனில்லாதோர், நடவாதோர், பார்க்காதோர், வியாதியஸ்தர்களைப் புறக்கணிக்கிற தம் மக்களுடைய ஜெபத்திற்கு அவர் செவிகொடுப்பதில்லை. TamChS 283.3
யாருமற்ற இந்தப் பிள்ளைகளையும் வாலிபர்களையும் பராமரிக்கிற ஊழியத்தைச் செய்கிற அனைவருக்கும் முன்பாக பரந்த களம் உள்ளது; அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி சரி யான குணத்தை உருவாக்குகிற ஒரு சாதகமான சூழல் அவர்களுக்கு முன்வைக்கப்படுகிறது. நாம் கனிவோடு நாடிச்செல்ல வேண்டிய, இக்கட்டான நிலையிலுள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள்; மற்றப்படி அறியாமையிலேயே வளர்ந்து, கொடுங்குற்றங்களுக்கும் தீயப் பழக்கங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடிய அவர்களில் பலர், கிறிஸ்துவைப் போன்று கனிவோடு கண்காணிக்கிறவர்களின்கீழ் சாதகமான சூழல்களைப் பெற்று, கிறிஸ்துவுக்காக இரட்சிக்கப்பட முடியும். மற்றவர்களுக்காக இத்தகைய ஊழியத்தைச் செய்வதற்கு முயற்சியும் சுயமறுப்பும் தியாகமும் அவசியம். ஆனால், தேவனுடைய மிகப்பெரிய ஈவான அவருடைய ஒரே பேறான குமாரனோடு ஒப்பிடும்போது, நாம் செய்யும் மிகச்சிறிய தியாகம் ஒரு பொருட்டாகுமா? நாம் தேவனுடைய உடன் வேலையாட்களாகிற சிலாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். TamChS 283.4